இந்திர மோகன் என்னும் அரசன் ஒரு நகரத்தை ஆட்சி செய்தான்.
தனக்குப் புகழ் உண்டாக வேண்டும் என்பதற்காக, அந்த நகரத்தின் எல்லையில், நதிக்கு அருகில், ஒரு கோயிலைக் கட்டிவைத்தான்.
கோயில் உண்டானதும், அந்த நதி பெருமை பெற்றது. அந்த நதியில் குளித்துவிட்டு, கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தால், மிகவும் புண்ணியம் கிடைக்கும் என்று மக்கள் நம்பத் தொடங்கினார்கள்.
நாள்தோறும் நகர மக்களும், பயணிகளும் அந்த நதிக்கு வந்து குளிப்பதும், கோயிலில் வழிபடுவதும் அதிகரித்தன.
அரசனும் அந்த நதியில் குளிப்பதற்குத் தினமும் வந்தான்.
ஒரு நாள் அந்த நகரத்துப் பெண் ஒருத்தி நதிக்கு வந்தாள்.
அவள் மிக அழகானவள். அவளுடைய அழகை எவராலும் வர்ணித்துக் கூற இயலாது.
வழக்கம் போல் நதிக்கு வந்த அரசன், அந்த அழகியைக் கண்டு உள்ளத்தைப் பறி கொடுத்தான். தன் நிலையை மறந்தான்.
அந்த அழகியின் வீட்டை அறிந்து, இரவு வேளையில் அந்தப் பெண்ணரசி வீட்டை அடைந்தான் அரசன். அவளிடம் மோகம் கொண்டு காமப் பார்வை பார்த்தான்.
அரசனுடைய கெட்ட எண்ணத்தை அவள் புரிந்து கொண்டாள்.
அரசன் இப்படி தன்னை நாடி வருவான் என்று அவள் நினைக்கவே இல்லை.
அரசன் அவளை நெருங்கி வருமுன், “அரசே! என் கணவர் வியாபாரம் செய்ய அடுத்த ஊருக்குச் சென்றுள்ளார். யாரும் இல்லாத அநாதையாக இப்போது நான் இருக்கிறேன். குடிமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய தாங்கள் தகாத முறையில் நடந்து கொள்ளும் எண்ணத்தைக் கை விடுங்கள்.” என்று கெஞ்சி, அவனைக் கையெடுத்து வணங்கினாள்.
அவளுடைய வேண்டுதல் எதுவும், அரசன் காதில் ஏறவில்லை. அவன் தன் எண்ணத்தைக் கைவிடவில்லை என்பதை அறிந்தாள்.
“வேறு ஒருவன் மனைவியை தாங்கள் இச்சிப்பது பெரும் அநீதி, நீங்கள் பலாத்காரமாக என்னைக் கெடுக்க முயன்றீர்கள் ஆனால், அந்தப் பாவம் உங்களை விடாது. நான் அவமானப்பட்டு உயிர் வாழ விரும்பாமல், என் உயிரை மாய்த்துக் கொள்வேன்” என்று படபடப்போடு எச்சரித்தாள்.
அவள் என்ன சொல்லியும் அரசனுடைய எண்ணம் மாறாமல், அவளைப் பலாத்காரம் செய்ய முற்பட்டான்.
அப்போது, அருகில் கிடந்த உருளைக் கட்டையை எடுத்து தன் நெஞ்சில் பலமுறை குத்திக் கொண்டு, அதிர்ச்சியால் மனம் உடைந்து இறந்து போனாள்.
அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அரசன், வெட்கமும் பீதியும் அடைந்து விரைவாக அரண்மனையை நோக்கிச் சென்றான்.
அந்த அழகிக்கு தன்னால் ஏற்பட்ட மரணத்தை நினைத்தான்; மனச்சாட்சி அவனை உறுத்தியது. அன்று இரவே அரசனின் உயிர் போய்விட்டது.
மனச்சாட்சி மிகவும் உறுத்தும் என்பது இக்கதையின் கருத்து.
– மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் – முதற்பதிப்பு: ஜூன் 1998 – முல்லை பதிப்பகம்