கணவனும் மனைவியும் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தனர்.
கணவன் ஒரு கடையில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்தான்.
மனைவியின் பிறந்த வீடு வசதியானது. ஆகையால் அங்கே இருந்து அவ்வப்போது தேவையானவற்றை வாங்கி வந்து குடும்பத்தைச் சமாளித்தாள்.
அதனால் கர்வம் கொண்டு, கணவனைக் கேவலமாகப் பேசி வந்ததுடன் உருப்படாதவரே!’ என்று சொல்வாள், அப்படியே கூப்பிடுவாள்.
மனைவியின் அலட்சியத்தால் அவன் பொறுமை இழந்து, ஒரு நாள் வீட்டைவிட்டு சொல்லாமல் வெளியேறி விட்டான்.
அவர் எங்கே போனார் ‘ என்ன ஆனார், என்பதைப் பற்றி சிறிதும் அவள் கவலைப்படவே இல்லை.
மூன்று மாதங்கள் அலைந்து திரிந்து சரியான வேலை கிடைக்காமல், பட்டினியோடு வீட்டுக்குத் திரும்பி வந்தான்.
ஆனால், தயங்கியபடி வாயிற்படியில் நின்று கொண்டிருந்தான்.
அவனுடைய மூன்றரை வயதுப் பெண் குழந்தை அவனைப் பார்த்ததும் வீட்டுக்குள் ஓடிப் போய், “அம்மா! நீ எப்போதும் உருப்படாதவரே’ என்று சொல்லிக் கொண்டிருப்பாயே ! அந்த உருப்படாதவர் வந்து வாசற்படியல் நிற்கிறார்” என்று கூறியது.
அடுக்களையிலிருந்து மனைவி வந்து பார்த்தாள். கணவன் நின்று கொண்டிருந்தான். அவனை உள்ளே அழைத்தாள்.
தான் கூறுவதைக் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்த குழந்தை, அப்பா’ என்று கூறாமல், உருப்படாதவர்’ என்று குழந்தை கூறியதை நினைத்துக் கண் கலங்கிவிட்டாள். வெட்கப்பட்டாள்.
பிறகு கணவனை அப்படி அலட்சியமாக கூப்பிடாமல், மரியாதையாக நடந்து கொண்டாள்.
கணவனின் வருமானம் குறைவாக இருந்தாலும் அல்லது தான் வேலை பார்த்துச் சம்பாதித்தாலும் சில மனைவியரிடையே அலட்சியப் போக்கு இருக்கவே செய்யும்.
– மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் – முதற்பதிப்பு: ஜூன் 1998 – முல்லை பதிப்பகம்