கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 2,030 
 

ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் கலைமகள் விழாவிற்கு வரும் புலவர்களுக்குக்கெல்லாம். இராமநாதபுரம் மன்னர் பரிசளித்து அனுப்புவது வழக்கம். சிறப்பான முறையில் விருந்தும், இருபத்தைந்து ரூபாய் பணமுடிப்பும் உண்டு.

ஒன்பதாம் நாள் இரவு, பெருமாள் மாடு வேடம் பூண்ட இருவர் அரசனைச் சந்தித்து ஆடிப்பாடி மகிழ்வித்தனர். அப்போது அரசன் தன் கைப்பிரம்பால் மாறு வேடம் பூண்டவனை ஒரு தட்டுத் தட்டினார். உடனே முகமலர்ந்து மகிழ்ச்சியோடு, அவனுக்கு ஐம்பது ரூபாய்ப் பணமுடிப்பைப் பரிசாகக் கொடுத்தார்.

இது கண்ட அரசவைப் புலவர், மன்னரிடம், “அரசே! மற்றப் புலவர்களுக்கெல்லாம் 25 ரூபாய்தானே பரிசு கொடுத்தீர்கள். இவனுக்கு மட்டும் தாங்கள் 50 ரூபாய் கொடுத்ததன் காரணத்தை நாங்கள் அறியலாமா?” என்று பணிவோடு வேண்டினார்.

அரசன் சொன்னார், ‘பெருமாள் மாடு வேடம் பூண்டவனுக்கு உண்மையிலேயே கலையுணர்வு இருக்கிறதா? அல்லது பரிசுபெறுவதற்காகமட்டும். வேடம் பூண்டவனா? என்று ஐயம் கொண்டேன். ஆகவே அவனைச் சோதித்துப் பார்த்தேன். மனிதனுக்கு இல்லாத உணர்ச்சி மாட்டுக்கு உண்டு. மாட்டை எந்த இடத்தில் தொட்டாலும் சுளித்துக் காட்டும். அதனால் அவனை ஒரு தட்டு தட்டினேன். அவனும் மாடாகவே மாறி, அந்த இடத்தை மட்டும் சுளித்துக் காட்டினான். என் உள்ளம் மகிழ்ந்தது. அதனால் இரட்டிப்பாகப் பரிசு கொடுத்து அனுப்பினேன்’ என்றார்.

இதிலிருந்து அக்கால மன்னர்கள் புரவலர்களாக இருந்ததுடன், கலையுணர்வு மிக்கவர்களாவும் இருந்தனர் என்பதையும்,

கலைஞர்களும் தாம் மேற்கொண்ட பாத்திரமாகவே மாறி நடித்து வந்தனர் என்பதையும் அறியும்போது நம் உள்ளமும் சேர்ந்து மகிழ்கிறது அல்லவா!

– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *