பக்குவம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 23, 2022
பார்வையிட்டோர்: 8,271 
 

(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘கந்தர் மடம் செல்லம்மா’

‘அஞ்சு’

‘கொட்டடி ஆச்சிப்பிள்ளை’

‘அஞ்சு’

‘கொக்குவில் வேலாயுதபிள்ளை’

‘பத்து’

‘சீட்டுக்கார நல்லாம்பிப் பகுதி’

‘இருபது’

‘சங்கக்கடை ரத்தினம் பெண் சாதி’

ஒவ்வொருவரும் வந்து காசைப் போடப்போட, சின்னத்துரை கொப்பியில் எழுதிக் கொண்டே வந்தார். துரையப்பாதான் பெயர்களை உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தார்.

குனிந்த தலை நிமிராமல், வெற்றிலைச் கருளைக் கையிலே ஏந்தியபடி நின்று கொண்டிருந்தாள் அவள். அந்தச் சின்னஞ்சிறு உடலை எட்டு முழச் சேலை ஒன்று ஈவு இரக்கமின்றிச் சுற்றிக் கொண்டு கிடந்தது.

சாமர்த்தியப்பட்ட பெண்ணுக்கு இயல்பாகவே ஏற்படும் புது நாணம் முகத்தைப்பூச, கவிதை நிழலாடும் கண்களால் சிரமத்துடன் அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

பாவமாக இருந்தது.

சிறிய சிறிய கனவுகளுக்கெல்லாம் உயிர்கொடுக்க முனைந்து நிற்கும் அவள் முகத்தில் வியர்வை முத்து முத்தாகக் கோத்து நின்றது.

“சரி..சரி…சின்னத்தங்கச்சியை உள்ளே கூட்டிக் கொண்டு போங்கோ” – வெள்ளித் தட்டத்தில் கிடந்த காசை எண்ணி அடுக்கியபடியே குரல் கொடுத்தார் சின்னத் துரை.

நின்று கொண்டிருந்த அந்தப் பெண் குழந்தையின் சிறிய மார்பு மகிழ்ச்சியால் ஏறி இறங்கியது.

ராசாத்தி இன்னமும் அங்கே தான் நின்றாள். அந்தக் குசினிக்கதவின் பக்கத்தில், ஆடாமல் அசையாமல், வைத்த கண் வைத்தபடி, இவ்வளவு நேரமாக அவள் நின்று கொண்டிருந்தாள்.

மனத்தின் வேதனைக் குழம்பில் அழுந்தி அழுந்தி, ஆற்றாமையுடன் வெளி வந்தது, ஒரு சூடான பெருமுச்சு.

குனிந்து, பொலிவிழந்து கிடக்கும் தன் அங்கங்களை ஒரு முறை பார்த்துக் கொண்டாள். மறுபடியும் புதுச்சேலை சரசரக்க அசைந்து செல்லும் தன் தங்கையைப் பார்த்தாள்.

எங்கோ, தூரத்தில், முன்பு எப்போதோ கேட்ட சோகநாதம், விரிந்து விரிந்து, கற்பனைக் கெட்டாத தூரம் வியாபித்து, தன்னை விழுங்குவது போலவும், அதனுள்ளே தான் ஒடுங்கி ஒடுங்கித் துரும்பளவாகி அமிழ்ந்து விடுவது போலவும், அவளுக்குப் பட்டது.

அந்த நினைவு அவள் மனத்தை என்னவோ செய்தது…

எப்பிடி இது நடக்கும்?

அந்தச் சின்னஞ் சிறு உள்ளத்தை இந்தக் கேள்வி தான் நிறைந்து நின்று இம்சைப் படுத்தியது.

எப்பிடி நடக்கக் கூடும்?

நான் தானே….அவளுடைய அக்கா..நான்….நான் தானே வயதுக்கு மூத்தவள்…அப்பா…நான் இன்னமும் ஏன் இப்படி….இருக்கிறான்…எனக்கு…ஒரு வேளை…ஒரு வேளை..ஏன்…அறிவுக்கும், சிந்தனைக்கும் அப்பாற்பட்ட, கற்பனையின் பிடிக்குள் வளையாத, அகப்படாத ஒரு பொருளுக்குக் காரணம் கண்டு பிடிக்க முயன்றது அந்தப் பிஞ்சு உள்ளம்.

மெலிந்திருந்த தன் கைகளை முகத்தின் முன்னே நீட்டி ஒரு முறை பார்த்துக் கொண்டாள் ராசாத்தி. ஒட்டியிருக்கும் தன் மார்புச் சட்டை மீது நுல்போல ஊர்ந்து கிடக்கும் பின்னலைப் பார்த்தாள். மெல்லிய உரோமம் படர்ந்து வெளிறிக் கிடக்கும் கால்களை நோக்கினாள்.

அவளுக்குத் தன் மீதே அளவற்ற வெறுப்புப் பீறிட்டது.

குத்துவிளக்கில், எண்ணெய் வற்றித் திரி மாத்திரம் எரியும் மணம் அடங்கலும் பரவியது.

அப்படியே தலையை மயக்கிக் கொண்டு வந்தது. சுவரிலே ஆத்திரம் தீரத் தலையை முட்டி, இரத்தம் கக்கிச் செத்து விடலாமோ என்று கூட அவள் மனம் எண்ணியது .

எவ்வளவுதான் முயன்றும், கண்களில் பொங்கும் நீரை மாத்திரம் அவளால் அடக்க முடியவில்லை.

***

கனகம்மா, ஆலாத்தித் தட்டத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் விரைந்தாள்; போகும் போது நின்று, ராசாத்தியைப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டே உள்ளே போனாள்.

‘என்னத்துக்கு என்னை எல்லாரும் இப்பிடிப் பார்க்கினம்; ஏன் என்னைப் பார்த்துவிட்டு நாறிக் கிடக்கிற பிணத்தைப் பார்க்கிறது போல முகத்தைத் திருப்பினம்?

அம்மாதான் இப்படி என்றால் அப்பு…ம்

என்னைப் பெற்ற அம்மாவுக்கே என்னை விளங்கவில்லை என்றால் அவர்….அவருக்கு என் வேதனை என்ன தெரியப் போகுது’

“எங்கை உன்ரை முத்தவள்?”-குஞ்சியாச்சிதான் விசாரித்தாள்.

“உங்கினைதான் நிண்டுது” – விரக்தியில் தோய்ந்து புறப்பட்டது அந்தப் பதில்.

ராசாத்தியின் கைகள் கதவை இறுக்கிப் பிடித்தன.

***

சின்னத் தங்கச்சி இராமநாதன் கல்லூரியில் சேர்ந்து விட்டாள். அவள் இனிமேல் பையன்கள் படிக்கும் பள்ளியில் படிக்கக் கூடாதாம். ஆனால், ராசாத்தியின் பள்ளியை மாற்றத் தேவையில்லை. அவளுடைய படிப்பைத்தான் எப்போதோ நிறுத்தியாகி விட்டதே.

சின்னத் தங்கச்சி சனி ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டுக்கு வரும் போதெல்லாம் அம்மா பம்பரம் போல் சுழல்வாள்; ராசாத்தி தான் ஓடி ஆடி, முழு வேலையையும் பார்ப்பாள் – சந்தோஷமாகத்தான்.

எப்போதாவது, சின்னத் தங்கச்சி , குளித்து விட்டு ஈரச் சேலை தடக்க குனிந்து வரும் போது மாத்திரம், ராசாத்தி தன்னையறியாமலே தன்னுடைய மேனியையும் ஒரு முறை பார்த்துக் கொள்வாள்.

அப்போதெல்லாம் ஆழ்ந்த ஒரு பெருமூச்சு அவள் மனக்கிடங்கின் மறைவில் இருந்து வெளி வரும்.

***

ஞாயிற்றுக் கிழமை பின்னேரமே சின்னதங்கச்சி விடுதிக்குத் திரும்பிவிட வேண்டும். வழக்கமாக அவளுடைய தாயார்தான் கொண்டு போய் அவளை பஸ்ஸிலே பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி விட்டு வருவாள். ஆனால், அன்று தாயாருக்கு கையிலே வேலை கிடந்தது. துணைக்கு ராசாத்தியை அனுப்பி வைத்தாள்.

மக்கியும் புழுதியும் நிறைந்த ஒழுங்கையில் இரு வரும் பக்கத்திற்குப் பக்கமாக நடந்து கொண்டிருந் தார்கள். ராசாத்தியின் கையில் மட்டும் சின்னத்தங் கச்சியின் ‘சூட் கேஸ்’ கனத்துக் கொண்டிருந்தது.

சனசமூக நிலையத்தை ஒட்டியிருந்த கைப்பந்தாட்ட மைதானத்தைக் கடந்த போது ஆயிரம் இளம் கண்கள் தங்களையே உற்றுப் பார்ப்பதை ராசாத்தி உணர்ந்தாள்.

அவளுக்குத் திகைப்பாக இருந்தது.

இப்படியான ஓர் அனுபவம் அவளுக்கு அதற்கு முன் ஏற்பட்டது கிடையாது; திரும்பித் தன் தங்கையைப் பார்த்தாள். ஒன்றுக்குமே பணியாத மிடுக்குடனும், அலட்சிய பாவத்துடனும், நிலத்தின் மேல் கண்களைப் பதித்தபடியே, அவள் நடந்து கொண்டிருந்தாள்.

மறுபடியும் நிமிர்ந்து பார்த்தாள். அத்தனை கண்களும் – அவ்வளவும் – அவளைத்தான், சின்னத்தங்கச்சியைத்தான், பார்த்துக் கொண்டிருந்தன.

மறுபடியும் தனியே அவள் திரும்பி வந்தபோது, எவருமே பார்த்ததாக, தற்செயலாகக் கண்ணிலே பட்டதாகக் காட்டிக்கொள்ளக் கூட, முன் வரவில்லை.

அவளுக்குத் திடீரென்று எல்லாமே விளங்கியது.

சங்கக் கடையில் கூப்பன் எடுப்பதற்கு அம்மா ராசாத்தியைத்தான் அனுப்புவாள்; சின்னதங்கச்சியைத் தட்டித் தவறி ஒரு முறையாவது அனுப்பிய ஞாபகம் அவளுக்கு இல்லை.

கூப்பன் கடகத்தைத் தலையிலே வைத்துக் கொண்டு, வாயிலே இரண்டு அரிசியை மென்று கொண்டு, பேர் பெற்ற கொக்குவில் புழுதியைக் கால்களினால் அளந்தபடி அவள் போய் வந்த இத்தனை நாட்களிலும் ஒருமுறையாவது அவளுக்கு இந்தமாதிரி நூதனமான அனுபவம் ஏற்பட்டது கிடையாது.

எண்ணெய் படிந்த அந்தத் தலையணையில் முகத்தைப் புதைத்தபடி விம்மி விம்மி அழுதாள். எதற்காகவோ அழுதாள். எதை நினைத்தோ அழுதாள்.

என்னைப் பார்க்கிறதற்கு அவ்வளவு அருவருப்பாயிருக்கா? பார்த்தவுடனேயே திரும்புற அளவக்கு நான் வடிவில்லையா?

சின்னக்கா சொன்னவதானே என்ரை முகவெட்டும், சின்னத் தங்கச்சியின்ரை முகவெட்டும் ஒரே மாதிரி எண்டு, சின்னத் தங்கச்சி அப்பிடி என்ன திறம்?

பெண்மை அவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே இருந்தது.

***

அன்று கனகு வந்திருந்தான்! எப்பொழுதுமே அவன் அப்படித்தான்; வந்தவுடனேயே போக வேண்டுமென்று துடிப்பான்.

ராசாத்திக்கு அவனிலெ எப்போதுமே கொஞ்சம் விருப்பம்.

அவசர அவசரமாய் அடுப்பை மூட்டி, கோப்பி போட்டுக்கொண்டு வந்தாள். அவன் மௌனமாக அதை வாங்கிக் குடித்தான்!

ஆனால், கண்கள் மாத்திரம் அடிக்கடி, உள்ளே சாய்மனையில் சாய்ந்து ஏதோ படித்துக்கொண்டிருந்த சின்னத் தங்கச்சியின் பக்கமே திரும்பின.

கோப்பி குடித்து முடித்ததுதான் தாமதம், அவன் எழும்பி நின்று போகவேண்டும் என்றான்.

“சின்னத் தங்கச்சி” – அம்மாதான் கூப்பிட்டாள்.

“வர்றன் அம்மா”

“சின்னத் தங்கச்சி”

அவள் வரவேயில்லை!

“ராசாத்தி! சின்னத் தங்கச்சி ஏதோ படிக்கிறாள் போலை கிடக்கு. கோடியிலே இரண்டு மாதாளம்பழம் உன்றை மச்சானுக்கு ஆஞ்சிகுடு பாப்பம்.”

துள்ளிக்கொண்டு ஓடினாள் ராசாத்தி; நாலே நிமிடத்தில் பருத்துச் சிவந்திருந்த இரண்டு பழத்தை ஆய்ந்து கொண்டு வந்து, மச்சானிடம் தானே நேரிலே நீட்டினாள்.

ஓடிய களைப்பில் அவளுக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது .

சைக்கிளிலே ஏறியிருந்த கனகு “மாமி போட்டு வாறன்” என்றான்; அப்படியே உள்ளே எட்டிப் பார்த்து மற்றுமொருமுறை “வாறன்” என்று கையை ஆட்டினான்.

சின்னத் தங்கச்சியும் சாய்மனையில் இருந்தவாறே சிரித்தபடி கையை அசைத்தாள்.

கரடும் முரடுமான பூவரசங்கப்புடன் ஒட்டிக் கொண்டு நின்ற ராசாத்தியின் கண்களுக்குக் கனகுவின் உருவம் மங்கலாக – வெறும் மங்கலாகத்தான் – தெரிந்தது.

***

நடுமத்தியான வெயில். ராசாத்தியின் நடையில் வேகத்திலும் பார்க்க அவளுடைய நெஞ்சந்தான் “பக்பக் கென அடித்துக்கொண்டது. பயமும் மகிழ்ச்சி யும் போட்டி போட்டு அவள் நடுக்கத்தை அதிகரித் தன . கால் வேகும் சுடு மணலில் அவள் ஓட்டமும் நடையுமாக வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருந்த போது திருப்பித் திருப்பி ஒரே ஒரு முகம் தான் அவள் மனக்கண் முன்னே சுழன்றுகொண்டிருந்தது.

என்னத்துக்கு தேகம் இப்பிடி இரைக்குது; ஏன் என்ரை கை இப்பிடி நடுங்குது?

சற்று நின்று, தன்னை ஆறுதல் படுத்தி, திரும்பிப் பார்த்தாள். தூரத்தே , ஒழுங்கைத் திருப்பத்தில், சங்கக் கடையின் ஒரு பகுதி மாத்திரம் தெரிந்தது.

சற்று முன்பு, கூப்பன் கடகத்தைத் தலையில் வைத்துக்கொண்டு முடிந்துவிட்ட மார்புச் சட்டையுட னும், ஊத்தைப் பாவாடையுடனும், அவள் புறப்பட்ட போது, இப்படி ஒன்று நடக்கும் என்று, அவள் கனவிலும் நினைக்கவில்லை.

அதை நினைக்கவே அவளுக்கு என்னவோ செய்தது. – நம்பவே முடியவில்லை; ஒருவேளை இதுவெல்லாமே ஒரு கனவாக இருக்குமோ?

– கனவா ?

அவள் கைகள் அவளையறியாமலே போய்க் கன்னத்தைத் தொட்டன. கையிலே இன்னமும் எச்சில் பட்டதுபோல் குளிர்ந்தது.

அவளுக்கே கூச்சமாக இருந்தது.

ச்சீ…என்ன மாதிரி இருந்தது…வெக்கமில்லை….”ராசாத்தி, நீ என்னவடிவாய்!” இருக்கிறாய் – அவளுடைய வாழ்க்கையிலேயே இப்படியான ஒன்றை அவள் கேட்டதில்லை; அப்படிப்பட்ட ஒரு புகழ்ச்சியைக் கேட்டது அதுதான் முதற்தடவை.

நான் கூட வடிவாக இருப்பேனா?

அவளால் நம்பவே முடியவில்லை.

அரிசி அளந்து அளந்து தவிடு படிந்த அந்தக் கையினால் அவளுடைய தலையைத் தடவியபடியே அவன் சொன்னான். “ராசு…நீ…ஏன் உன்ரை தலையை இழுத்து ரட்டைப் பின்னல் போடக் கூடாது….உனக்கு எவ்வளவு வடிவாய் இருக்கும்….தெரியுமே!’

அவளுக்கு வெட்கம் கவிந்தது.

குனிந்த அவள் கண்களில் மார்புச் சட்டை மீது குத்தியிருக்கும் புது ஊசி இரண்டும் தான் தட்டுப் பட்டன.

இரத்தினண்ணைதான் அதைக் குத்திவிட்டார்.

“ராசு…உனக்கு சட்டையை முடிஞ்சுவிட வெட்கமில்லையா?”

அவளுக்கு எவ்வளவு கூச்சமாக இருந்தது.

‘ரத்தினண்ணை’

அதில் தான் என்ன இனிமை!

ஆட்கள் இல்லாத இடமாகப் பார்த்து, தனிமையில் அந்தப் பெயரை இன்னொரு முறை, உரக்க, ஆசை தீரச் சொல்லிப்பார்க்க வேண்டும் போலத் தோன்றியது.

– வீட்டிலே இன்றைக்கு மண்ணெண்ணை முடிந்திருக்குமா? முடிந்தால் இன்னொரு முறை கடைக்குப் போகலாம்!

“ராசு; பேணியைக் கொண்டுவா…இந்த அரிசியை அளந்து பாப்பம்.”

பேணியைத் தேடிப் பார்த்துவிட்டு அம்மா….ரத்தினண்ணையை காணேல்லை என்றாள் ராசாத்தி.

ஐமிச்சத்தோடு தாயார் அவளைத் திரும்பிப் பார்த்த போது, அவள், வெகு அக்கறையாக, கண்ணாடியின் முன்பு நின்று தலைக்கு இரட்டைப் பின்னல் போட்டுக் கொண்டிருந்தாள்.

***

இரவு.

சுவர் ஓரமாகப் போட்டிருந்த ஓலைப்பாயில் புரண்டு கொண்டிருந்தாள் ராசாத்தி.

ஒரு கனம் கனவு போலப்பட்டது; மறுகணம் யுகயுகாந்திரத்து நனவாகவும் தோன்றியது.

…அகன்ற மார்பு – அதை மறைத்து அடர்த்தியான உரோமம் – பச்சை குத்திய கைகள் – வெற்றிலைச் சிவப்பு உதட்டில் கூடிய சிரிப்பு – சுருள் சுருளான கேசம்…

‘ரத்தினண்ணை’

அடிவயிற்றில் இருந்து உணர்ச்சிக் குழம்பு ஏறி மார்பை நிறைத்தது – என்னவென்று தெரியாத ஏதோ ஓர் உணர்ச்சி தேகம் அடங்கலும் கிளுகிளுப்பை உண்டு பண்ணியது.

இரத்தினண்ணையின் மார்பில் அவள் படுத்துக் கிடக்கிறாள். அதில் தான் எத்தனை சுகம்.

“ராசு…எங்கை என்னைப்பார்…நீ என்ன வடிவாய் இருக்கிறாய்.”

மறுகணம் இனம் தெரியாத பீதி இதயத்தைக் கௌவியது.

உணர்ச்சிக் கொப்புளங்கள் எல்லாம் ஒன்றை யொன்று விழுங்கி அவளை மேலே தள்ளின்.

தேகமெல்லாம் மெல்லச் சிலிர்த்தது; குளிர்ந்தது.

அவள் மேலே மேலே போய்க்கொண்டிருந்தாள்.

***

தாயின் முகத்தில் தான் எத்தனை மகிழ்ச்சி. எவ்வளவு பெருமை. எங்கிருந்து தான் ராசாத்தியின் முகத்தால் இந்தத் திடீர்க் கவர்ச்சி பிறந்ததோ.

வெற்றிலைச் சுருளை ஏந்தியவாறு குனிந்தபடி அவள் நின்று கொண்டிருந்தாள்.

“நாச்சிமாகோவில் அன்னப்பிள்ளை”

“பத்து”

“ஆனைப்பந்தியடி சுப்பிர மணியம் பகுதி”

“அஞ்சு”

“நொத்தாரிஸ் சபாபதிப் பிள்ளையும், மகளும்”

“பதினைஞ்சு”

“சங்கக்கடை ரத்தினம் பெண் சாதி”

“….”

உள்ளம் ஒரு கணம் பொங்கி அவிழ்ந்தது.

தூரத்தில், நிலைப்படிக்கு அருகில் சிரித்தபடியே கதைத்துக் கொண்டு அவன் நிற்கிறான் என்றது உள்ளுணர்ச்சி.

“பார்க்க வேண்டும் – ஒரு முறை ஆசை தீரப் பார்க்க வேண்டும்” என்று உந்தித் தள்ளியது மனம்.

மிக்க சிரமத்துடன் கனத்துப்போன இமைகளைத் தூக்கி வைத்து நிறுத்த, அவள் எவ்வளவோ முயன்று பார்த்தாள்.

இருந்தும் முடியவில்லை!

– 1959-61

– அக்கா (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: டிசம்பர் 1964, பாரி நிலையம், சென்னை.

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

– முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள், முதற் பதிப்பு: மாசி 2010, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *