எமனும் ஏமாறுவான்!

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 8,536 
 
 

முன்னொரு காலத்தில் ஒரு தேசத்தை நீதியும் நேர்மையும் தவறாத மன்னர் ஒருவர் ஆண்டு கொண்டிருந்தார்.

அவருக்கு அழகான ஒரு மகன்.

அழகான அந்த இளவரசன் அறிவும் வீரமும் விவேகமும் நிறைந்தவன். வில்வித்தை கற்றவன்.

வேட்டையாடுவது அவனுக்குப் பிரியமான பொழுதுபோக்கு. அதுவும் தனியாக வேட்டைக்குப் போவதுதான் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

ஒருநாள் சூரியன் உதிக்கும் வேளையில், அவன் வேட்டைக்குப் புறப்பட்டான். வில், அம்பு எடுத்துக் கொண்டு, மிடுக்கான ஒரு குதிரையின் மீது ஏறி அமர்ந்தான்.

அரண்மனையைவிட்டு வெளியேறிய அவனுடைய குதிரை அகழியைக் கடந்தது.

அதை மறைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு வீரன் இன்னொரு குதிரை மீது தாவியேறி இளவரசனைப் பின்தொடர்ந்தான்.

காட்டு மிருகங்களால் மகனுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, அவனை இளவரசனுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து செல்லும்படி மன்னர் உத்தரவிட்டிருந்தார்.

அதிகாலை வேளையில், இளவரசன் குதிரையில் சென்றபோது, காடு கழனிக்கு வேலைக்குச் சென்ற மக்கள் இருபுறமும் விலகி நின்று மரியாதையுடன் தலைகுனிந்து அவனை வணங்கினர்.

ஊரின் எல்லையைக் கடந்த ராஜகுமாரனின் குதிரை மலையடிவாரத்தில் பரவியிருந்த அடர்ந்த, இருண்ட கானகத்துக்குள் நுழைந்தது.

மரம் செடிகளுக்கிடையே குதிரை சென்றபோது பதுங்கியிருந்த ஒரு வெள்ளை முயல் துள்ளித் துள்ளி ஓட ஆரம்பித்தது. அதைப் பார்த்துவிட்ட இளவரசன், அந்த முயலைத் துரத்திக் கொண்டு நெடுந்தூரம் சென்றான். அது ஒரு பாறையின் பக்கம் ஒதுங்கியபோது, இளவரசன் அம்பை எய்தான். ஆனால், அம்பு அதன்மீது பாய்வதற்குள் அந்த முயல் பாறைகளுக்கு இடையே இருந்த பிளவுக்குள் நுழைந்து காணாமல் போய்விட்டது.

இளவரசன் சிறிது நேரம் அங்கேயே காத்திருந்தான். முயல் வெளியே வரவே இல்லை. ஏமாற்றம் அடைந்தவன், உச்சிப் பொழுதுவரை காட்டுக்குள் சுற்றிக் கொண்டிருந்தான்.

மரக்கிளையில் சுற்றிக் கொண்டிருந்த மலைப்பாம்பும் விளையாடிக் கொண்டிருந்த குரங்குகளும் இளவரசனை வேடிக்கை பார்த்தன.

அவனுக்கு நா வறண்டது. தாகம் எடுத்தது. நீரோடைக்கு குதிரையைச் செலுத்தினான்.

அருவி நீர் சலசலவென்று பளிங்கு போல ஓடிக் கொண்டிருந்தது.

அதன் அருகே சென்று குதிரையைவிட்டு இறங்கப் போனவன் திடுக்கிட்டுப் பின்வாங்கி, குதிரையை வேறு திசையில் படுவேகமாக விரட்டினான். காரணம், அந்த நீரோடையில் ஒரு புலி தன் தாகத்தைத் தீர்த்துக் கொண்டிருந்தது.

ஓடையிலிருந்து வெகுதொலைவு வந்தபிறகு, குதிரையை ஒரு இடத்தில் நிறுத்திக் கீழே குதித்தான். கொடியில் பழுத்துக் குலுங்கிய கனிகளைப் பறித்துச் சாப்பிட ஆரம்பித்தான். அப்போது –

சற்று தூரத்தில் புதருக்கு இடையே, ஒரு பெரிய மரத்தினடியில் மான் ஒன்று அசையாமல் நிற்பதைப் போலத் தெரிந்தது.

இளவரசனுக்கு உற்சாகம்! மான்கறி மன்னருக்கும் அரசியாருக்கும் பிடித்த உணவு. எனவே, தாமதிக்காமல் ஓர் அம்பை எடுத்து வில்லில் பூட்டி, பலம் கொண்ட மட்டும் இழுத்து, அம்பை விடுவித்தான். அது மின்னல் வேகத்தில் சீறிச் சென்று, அவன் குறிவைத்த இடத்தில் இம்மியளவுகூடப் பிசகாமல் சரக்கென்று பாய்ந்தது.

அதே நொடியில், “”தெய்வமே! என்னைக் காப்பாற்று!” என்ற அலறலும் கேட்டது.

இளவரசன் அடித்துப் புரண்டு அந்த இடத்தை நோக்கி ஓடினான்.

பக்கத்தில் போய் குனிந்து பார்த்தான்.

இரத்தம் சொட்டச் சொட்ட இறந்து கிடந்தது மான் அல்ல! இளவரசனுக்குப் பகீரென்றது.

கண்மூடிச் சாய்ந்து கிடந்தது, மான்தோலைப் போர்த்திக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்த ஒரு இளம் முனிவர்.

முனிவரின் மூக்கில் கைவைத்துப் பார்த்தான். சுவாசம் இல்லை!

“”இளவரசே, அநியாயமாக ஒரு முனிவரைக் கொன்றுவிட்டீர்களே!” என்ற குரல் கேட்டுத் திரும்பினான்.

நிழல்போல இளவரசனைப் பின்தொடர்ந்து வந்த மெய்க்காவலன் நின்று கொண்டிருந்தான்.

இளவரசனுக்கு முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது!

“”மாதம் மூன்று முறை மழை பொழிவதும் நாடு செழிப்புடன் இருப்பதும் இவரைப் போன்ற மகான்களின் தவ வலிமையினால்தான் என்பதை ஆசான்கள் உங்களுக்குக் கற்றுத் தரவில்லையா? மனிதரைக் காயப்படுத்தினாலே கடும் தண்டனை வழங்கும் நம் மகாராஜா, நீங்கள் ஒரு புனிதரைக் கொன்றிருப்பதை எப்படிப் பொறுத்துக் கொள்வார்?” என்று ஆதங்கத்துடன் கேட்டான் அந்த மெய்க்காவலன்.

இருவரும் உடனடியாகக் குதிரைகள் மீதேறி அரண்மனையை நோக்கி விரைந்தனர்.

மகாராஜாவிடம் மெய்க்காவலன் காட்டில் நடந்ததை விவரித்ததும் அவர் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்தார். மகனைப் பார்த்தார்.

அவன் நடுங்கியபடியே நின்று கொண்டிருந்தான்.

அப்போது மன்னர், “”முனிவரை, என் மகனே கொன்றுவிட்டதால் இந்த தேசத்துக்குப் பெரிய ஆபத்து வர நேரிடும். உடனே நாம் காட்டுக்குள் முனிவர்கள் வசிக்கும் ஆசிரமத்துக்குச் செல்ல வேண்டும். அவர்களிடம் மன்றாடி, மன்னிப்புக் கோர வேண்டும். அவர்கள் சொல்லும் பரிகாரங்களையும் செய்ய வேண்டும். உடனே புறப்படுங்கள்!” என்று கட்டளையிட்டார்.

உடனே மன்னரும் மற்றவர்களும் காட்டுக்குப் புறப்பட்டனர்.

படைவீரர்கள் முன்னே அணிவகுத்துச் செல்ல, மன்னரும் இளவரசரும் மெய்க்காவலரும் தேரில் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து மந்திரிகள் குதிரைகளில் சென்றனர்.

வெகு விரைவில் ஆசிரமத்தை அடைந்தனர்.

மகாராஜா தமது படைபரிவாரங்களுடன் ஆசிரமம் நோக்கி வருவதைப் பார்த்ததும் முனிவர்கள் பரபரப்படைந்தனர். வருபவர்களை பூஜைக்குரிய பொருட்களுடன் ஆராதிக்க மகிழ்ச்சியுடன் ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தனர்.

தேர் நின்றது. மன்னரும் இளவரசரும் இறங்கியதும், மிகவும் வயதான மகரிஷி ஆசிரமத்தைவிட்டு வெளியே வந்து அவர்களை வரவேற்றார்.

அப்போது மகாராஜா, “”உங்களுடைய பூஜைக்கும் அன்பு வரவேற்புக்கும் தகுதியற்றவர்கள் நாங்கள். உங்களில் ஒருவர் என் மகனால் கொல்லப்பட்டு காட்டுக்குள் கிடக்கிறார்…” என்றார்.

அதற்கு அந்த மகரிஷி, அமைதியாக, “”எங்கே, எப்படிக் கொல்லப்பட்டார் என்ற விவரத்தைச் சொல்லுங்கள்… அவர் இறந்து கிடக்கும் இடத்துக்கு எங்களை அழைத்துச் சென்று காட்டுங்கள்…” என்றார்.

இளவரசனும் மெய்க்காவலனும் அவர்களை இளம் முனிவர் கொல்லப்பட்ட இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

முனிவர் கொல்லப்பட்ட மரத்தடியை அடைந்தபோது, இளவரசனுக்கும் மெய்க்காவலனுக்கும் மன்னருடன் வந்த அனைவருக்கும் ஆச்சரியம்! மன்னரும் புரியாமல் விழித்தார்.

இளவரசன் காட்டிய இடத்தில் முனிவரின் உடல் இல்லை! ரத்தக் கறை கூட இல்லை!

மகரிஷி புன்னகை செய்தார்…

“”நீங்கள் கொன்றது இவனையா?” என்று முனிவர்களுக்கிடையே எந்தவிதக் காயமும் இல்லாமல் நின்ற தனது மகனைக் காண்பித்துக் கேட்டார் அந்த மகரிஷி.

இளவரசனுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை.

“”மான் என்று நான் தவறாக எண்ணி அம்பைப் பாய்ச்சிக் கொன்றது இவரைத்தான்!” என்று இளவரசன் சொன்னபோது, மன்னருடன் வந்தவர்கள் அனைவரும் ஆச்சரியத்தால் விழி பிதுங்க முனிவரின் மகனையே பார்த்தனர்.

அப்போது மகரிஷி சொன்னார் –

“”மகாராஜா! எங்கள் தவ வலிமையினால் நாங்கள் எமனையும் விரட்டியடிப்போம். மிருத்யு (எமன்) எங்களிடம் அதிகாரம் செலுத்த முடியாது. காரணம், நாங்கள் அதிகாலையிலேயே நீராடுகின்றோம். காயத்ரி மகா மந்திர ஜபத்தில் நாங்கள் முக்கிய நோக்குள்ளவர்களாக இருக்கிறோம். வசிக்கும் இடத்தைச் சுத்தமாக வைத்திருக்கிறோம். சுத்தமான இயற்கை உணவுகளையே உட்கொள்கிறோம். வந்த விருந்தினருக்கு முதலில் கொடுத்துவிட்டு, எஞ்சி இருப்பதையே நாங்கள் சாப்பிடுகிறோம். பெற்றோரையும் முதியோரையும் மதித்து, அன்பு செலுத்தி வணங்குகிறோம். இல்லாதவர்களுக்கும் அறவழியில் ஒழுகும் உண்மையான அந்தணருக்கும் எல்லா உதவிகளையும் செய்கிறோம். மற்றவர்களுக்கு நாங்கள் மனதால்கூட தீங்கு நினைப்பதில்லை! ஆசிரமத்தில் அல்லது ஆலயத்தில் நாள் தவறாமல் இறைவனை ஆராதிக்கிறோம். அடுத்தவர்களுக்காக வாழ்பவர்களைப் போற்றுகின்றோம். உண்மையே பேசுகின்றோம். கோபமும் சோம்பலும் பொறாமையும் எங்களிடம் கிடையாது. தெய்வப் பணிகளுக்கு இயன்றதைக் கொடுக்கிறோம். எங்களைப் பின்பற்றினால் நீங்களும் மிருத்யு பயம் இல்லாமல் நீண்ட நாள்கள் வாழலாம்!” என்றார்.

அரசரும் இளவரசரும் மற்றவர்களும் அப்படியே வாழ்வதாக உறுதி செய்துவிட்டு, முனிவர்களை வணங்கி விடைபெற்றனர்.

– ஆகஸ்ட் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *