முன்னொரு காலத்தில் உலூபி என்றொரு வித்தை காட்டுபவன் வாழ்ந்து வந்தான். அவன் ஊரா ஊராகச் சென்று வித்தை காட்டி பிழைப்பு நடத்தி வந்தான். பல்வேறு வித்தைகளைச் செய்து காட்டி மக்களை மகிழ்விப்பதில் அவன் கெட்டிக்காரனாக இருந்தான்.
கயிற்றின் மீது நடப்பான்! தன் தோள் மீது இருவரை அமர வைத்துக் கொண்டு ஒற்றைக் காலில் பல மணி நேரம் நிற்பான். எப்படிப்பட்ட பூட்டையும் திறப்பான். கண்களைக் கட்டிக் கொண்டு தனக்கு எதிரில் நிற்பவரின் தலையில் வைக்கப்பட்டிருக்கும் பழத்தை இரு துண்டுகளாகக் கத்தியால் பிளப்பான்.
இதைக் கண்டுகளிக்கும் மக்கள், தங்களிடம் உள்ள நாணயங்களையோ தானியங்களையோ காய்கறிகளையோ பழங்களையோ கொடுத்துவிட்டுச் செல்வர். வருமானம் மிகக் குறைவாக இருப்பினும், உலூபி தனது மனைவியுடன் மன நிறைவோடு வாழ்ந்து வந்தான்.
இப்படி இருக்கையில், ஒருநாள் கிராமத் திருவிழாவில் உலூபி தனக்குத் தெரிந்த பல்வேறு வித்தைகளைச் செய்து காட்டிக் கொண்டிருந்தான்.
கடைசி நிகழ்ச்சியாக, ஓர் இரும்பு வளையத்தை எடுத்து, அதனுள் தனது உடலை நுழைத்து வெளிவந்தான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தினர் கரவொலி எழுப்பினர்.
பிறகு, அதைவிட அளவில் சிறிய இரும்பு வளையத்தை எடுத்து, அதனுள்ளும் நுழைந்து வெளி வந்தான்.
இப்பொழுது கூட்டம் மிகுந்த கரகோஷம் எழுப்பி ஆர்ப்பரித்தது. அதன் பிறகு இன்னும் மிகச் சிறிய வளையம் ஒன்றை எடுத்தான். அதை மக்கள் முன்பு காட்டி, “”உங்களில் யாராவது இந்த வளையத்துக்குள் நுழைந்து வெளிவர முடியுமா?” என்று கேட்டான்.
கூட்டத்தினர் எவரும் முன் வராத நிலையில், அந்தச் சிறிய வளையத்துக்குள் தனது உடலை நுழைத்து வெற்றிகரமாக வெளிவந்தான்.
கூட்டத்தினரின் பலத்த கைதட்டல்களோடு நிகழ்ச்சி முடிவடைந்தது. கூட்டத்தினர் அனைவரும் கலைந்து சென்ற பிறகும், நன்கு உடையணிந்த ஒரு மனிதன் மட்டும் உலூபியை உற்றுப் பார்த்தபடியே நின்றுகொண்டிருந்தான்.
வழக்கம் போல உலூபியும் அவனது மனைவியும் தரையில் சிதறிக்கிடந்த நாணயங்களைச் சேகரித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த மனிதன் உலூபியின் அருகே வந்தான். உலூபியிடம்,
“”இவ்வளவு வித்தைகளை உடலை வருத்திச் செய்கிறாய். ஆனால் உனக்குக் கிடைப்பது என்ன? மிகச் சொற்பமான வருமானம். இதற்காக நீ எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது? ஒரே ஒரு இரவு மட்டும், என்னோடு வந்து ஒரு உதவி செய்தால் உனக்கு ஆயிரம் பொற்காசுகள் தருகிறேன்! சம்மதமா?” என்று கேட்டான்.
இவர்கள் இருவரும் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்த உலூபியின் மனைவி, “”இந்த மனிதர் யார் என்பதே நமக்குத் தெரியாது. நமக்குத் தெரிந்த தொழிலைச் செய்து, கிடைப்பதைக் கொண்டு வாழ்வதே நல்லது. முன்பின் அறிமுகம் இல்லாத நபரை நம்பிச் சென்று இருப்பதையும் இழந்து விடக்கூடாது. இது ஆபத்தாகக் கூட முடியலாம். அதனால் போக வேண்டாம்…” என்று கூறினாள்.
அவள் கூறியதை காதிலேயே வாங்கிக் கொள்ளாத உலூபி, அந்த மனிதனிடம், “”எங்கு வர வேண்டும்? என்ன உதவி செய்ய வேண்டும்?”
என்று கேட்டான்.
உலூபியுடன் பேசிய அந்த மனிதன், ஒரு பொற்கொல்லன். அவனிடம் அந்நாட்டு மன்னர், சில தங்கக் கட்டிகளைக் கொடுத்து, ஆபரணங்கள் செய்து தருமாறு கட்டளையிட்டிருந்தார்.
ஆனால் அந்தத் தங்கக் கட்டிகளை, அந்தப் பொற்கொல்லன் சூதாட்டத்தில் தோற்றுப் போய் இழந்துவிட்டான். சொன்னபடி, அரசருக்கு ஆபரணங்கள் செய்து தர வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருந்தான் அவன். இன்னும் ஒரு வாரத்துக்குள் ஆபரணங்களைச் செய்து தரவில்லை என்றால் மன்னர், அவனது தலையைச் சீவி விடுவார் என்பது அவனுக்குத் தெரியும். எனவே பிரச்னையைத் தீர்க்க ஒரு குறுக்கு வழியை யோசித்து வைத்திருந்தான். அந்த யோசனையைச் செயலாற்றத்தான் உலூபி அவனுக்குத் தேவைப்பட்டான்.
அரண்மனையில் தங்கம் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் இடம் அவனுக்குத் தெரியும். அந்த இடத்திலிருந்து சில தங்கக் கட்டிகளைத் திருடி எடுத்து வந்துவிட்டால், ஒரு வாரத்துக்குள் ஆபரணங்களைச் செய்து மன்னரிடம் ஒப்படைத்துவிடலாம் என்று நினைத்திருந்தான் அந்த மனிதன்.
பகல் நேரத்தில் அந்த அறைக்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். ஆனால், இரவு நேரங்களில் ஒரே ஒரு காவலாளி மட்டும் இருப்பான். அவனும் பல சமயங்களில் தூங்கிக் கொண்டுதான் இருப்பான். எனவே தங்கக் கட்டிகளை யாருக்கும் தெரியாமல் திருடுவதில் எந்த சிரமமும் இருக்காது என்று அவன் நினைத்திருந்தான்.
தன்னுடன் வந்த உலூபியை அழைத்துக் கொண்டு அன்றிரவே, காவலாளிகள் யார் கண்ணிலும் படமால் பொக்கிஷம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு வந்தான்.
வழக்கம்போல காவலாளி நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். தனது திறமையால் ஜன்னல் மேல் ஏறிய உலூபி, ஜன்னல் கம்பிகளுக்கு இடையே தனது தலையை நுழைக்கத் தொடங்கினான்.
சுவரின் ஓரமாகப் பொற்கொல்லன் படபடக்கும் இதயத்தோடு நின்று கவனித்துக் கொண்டிருந்தான்.
உலூபி ஒருவாறு தனது தலையை கம்பிகளுக்கிடையே நுழைத்துவிட்டான். இப்போது சிறிது சிறிதாக உடலை உள்ளே நுழைத்துவிட்டால் போதும்! சத்தமில்லாமல் உள்ளே குதித்து, பூட்டைத் திறந்து தங்கக் கட்டிகளை எடுத்து வந்து விடலாம். பொற்கொல்லன் பரபரத்துக் கொண்டிருந்தான்.
ஆனால் உலூபியால் அவனது உடலை உள்ளே நுழைக்க முடியவில்லை!
இதைக் கண்ட பொற்கொல்லன் நிலைகொள்ளாமல் தவித்தான். “”என்ன ஆயிற்று?” என்று சைகையாலேயே உலூபியிடம் கேட்டான்.
உலூபி மெல்லிய குரலில், “”ஐயா, மக்கள் கரவொலி கேட்டுக் கொண்டே எத்தகைய கடினமான வித்தையையும் எளிதாகச் செய்து விடுவேன். இங்கோ கரவொலி எழுப்ப யாருமே இல்லையே… ஒரே ஒரு ஆளாவது கைதட்டினால் போதும்… உள்ளே உடலை நுழைத்து விடுவேன்….” என்றான்.
தங்கக்கட்டிகளை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே பொற்கொல்லனின் மனதில் ஓடிக் கொண்டிருந்ததால் படபடப்பில்… தனது மதியிழந்து தனது கைகளைத் தட்ட ஆரம்பித்தான்….
கரவொலி கேட்ட காவலர்கள் ஓடி வந்து இரண்டு பேரையும் கையும் களவுமாகப் பிடித்தனர்.
தனது மனைவி கூறியது எவ்வளவு உண்மை என்பதை உணர்ந்த உலூபி அழத் தொடங்கினான்….
– ந.லெட்சுமி (அக்டோபர் 2013)