கதையாசிரியர்:
தின/வார இதழ்: தி இந்து
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 5, 2022
பார்வையிட்டோர்: 15,177 
 
 

இயற்கை எழில் கொஞ்சும் எளிமையான கிராமம் அது. அதன் பெயர் கூடலூர். அங்கு மிகவும் ஏழ்மையான பலர் வாழ்ந்து வந்தனர்.

மிகவும் பசுமையான அவ்வூரில் எங்கு பார்த்தாலும் பச்சை தான். வயல்வெளிகள் பரந்து விரிந்து கிடந்தன. அருகில் ஒரு ஆறும் ஓடிக்கொண்டிருந்தது.

அந்த கிராமமக்கள் அதிக ஆசையில்லாமல் அமைதியாக கிடைத்தை வைத்து வாழ்ந்து கொண்டிருந்தனர்.

அக்கிராமத்தில் வசதி படைத்த ஒருவர் வாழ்ந்து கொண்டிருந்தார். அவருக்கு ராகவன் என்ற எட்டு வயது மகன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் நல்ல சிறுவன்.

ஒரு நாள் அவன் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் சிறிய கிளையில் ஒரு கிளி வந்து அமர்வதை பார்த்தான்.

அவனுக்கு கிளி என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே அந்தக்கிளியை
பிடிக்கச்சென்றான். கிளியும் பறக்காமல் அமைதியாக இருந்தது. சிறுவன் ராகவன் கிளியின் மேல் சிறு காயம் இருப்பதால் அது பறக்கவில்லை என்பதை உணர்ந்துகொண்டான்.

ஆகவே அதனை வீட்டிற்கு எடுத்துசென்று காயம் ஆறும்வரை நல்லபடியாக பார்த்துக்கொண்டான். அவன் சொன்னதெல்லாம் அதற்கு புரிந்து அதன்படி நடந்தது.

அவனே நினைத்த போதும் கிளி அவனை விட்டு பிரிய விரும்பவில்லை. அவ்வாறு அந்தக்கிளி வீட்டில் இருப்பது அவன் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. ஆதலால் அவர்கள் ராகவனை மிரட்டினர்.

ராகவனோ அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஒரு நாள் ராகவனின் தந்தை கிளியை அனுப்பிவிடும்படி கூறி அவனை மிகவும் அடித்துவிட்டார். கிளி வீட்டிற்குள் எங்கேயும் செல்லக்கூடாது என்பதற்காக அதனை கூண்டிற்குள் அடைத்து வைத்து விட்டார்.

ராகவன் சிறிது நேரம் அழுது கொண்டிருந்தான். கிளிக்கு மிகவும் வேதனையாக இருந்தது. வெளியே செல்லலாம் என்றாலும் கூண்டில் வேறு அடைபட்டு இருந்தது.

அன்று இரவு கிளி மிகவும் சோகமாக இருந்தது. அப்பொழுது திடீரென திருடன் ஒருவன் வந்தான். அவனைப்பார்த்தாலே பயங்கரமாக இருந்தது. கிளி கீ கீ என மிகவும் சத்தமாக கத்ததுவங்கியது. ராகவனின் தந்தை எழுந்துவிட்டார். திருடனை பாய்ந்து பிடித்தார். அதற்குள் ராகவனும் எழுந்துவிட்டான்.

ராகவனின் தந்தை நடந்ததை கூறி, “இனி இந்த கிளி நம்முடனே இருக்கட்டும், எங்கும் செல்லவேண்டாம்”, என்றவராய் கிளியின் கூண்டை திறந்து விட்டார்.

கிளி, இனி நாம் இங்கிருந்தால் பின்னொரு நாள் மீண்டும் அடைபடுவோம் என்று உணர்ந்ததாய் வீட்டை விட்டு பறந்து சென்றது.

ராகவன் அழுதுகொண்டே சோகமாக நின்றான்.

– இந்து தமிழ்த்திசையின் “மாயா பஜார்” இதழில் வெளியானது, டிசம்பர் 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *