உங்கள் சிறுகதை எப்படி உருவாகிறது? ஒற்றை வார்த்தையிலா, படிமத்திலா, கருத்திலா, நிகழ்வு நோக்கிலா? சிறுகதைகளின் ஆதாரத்தூண்டல் எப்படி நிகழ்ந்திருக்கிறது?
உண்மையில் அநேகமாக ஒரு வார்த்தையில் அல்லது ஒரு வசனத்தில் ஏற்பட்ட அகத் தூண்டுதலில்தான் என் படைப்புகள் ஆரம்பமாயிருக்கின்றன. அபூர்வமாக சில சம்பவங்களும் ஆரம்பத்துக்கு காரணமாக இருந்திருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் வார்த்தைகள்தான். ஒரு வார்த்தை சிலவேளை என்னை எங்கேயோ தூக்கிப் போய்விடும்.
சிறு வயதில் நாங்கள் ‘கொழுத்தாடு பிடிப்பேன்’ என்று ஒரு விளையாட்டு விளையாடுவோம். அதையே ஒருவர் சொன்னபோது அது நல்ல தலைப்பாகப் பட்டது. அதை வைத்து சிறுகதை படைக்கும்போது சம்பவங்களும் அனுபவங்களும் தானாகவே வந்து சேர்ந்துகொள்ளும். ஒருமுறை ரயிலில் பயணம் செய்தபோது இளம் தம்பதிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அவள் சொன்னாள் ‘அடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை’. அதை திருப்பி சொல்லிப் பார்த்தேன். நல்லாக இருந்தது. அவள் என்ன சொல்லியிருப்பாள். அப்படி பிறந்ததுதான் அந்த கதை. உங்களுக்கு வரும் வெளிநாட்டு தொலைபேசியை எடுத்துக்கொள்ளுங்கள். அநேகமாக முதல் வசனம் ‘அங்கே இப்ப என்ன நேரம்?’ என்றுதான் இருக்கும். இதுவே ஒரு நல்ல கதைக்கு ஆரம்பம்.
கனடா எழுத்தாளர் பெஸ்மொஸ்கிஸ் ஒருமுறை பழைய சாமான்கள் விற்கும் இடத்துக்கு போயிருக்கிறார். அங்கே ovulation thermometer ஒன்று விற்பனைக்கு இருந்தது. (இந்த வெப்பமானி பெண்ணின் வெப்ப நிலையை தினமும் அளப்பதற்கு உதவும். வெப்பநிலை உச்சம் அடையும் சமயம் கருமுட்டை வெளிப்படும். அந்த நேரம் உடலுறவு வைத்தால் பிள்ளை பிறக்கும் சாத்தியக்கூறு அதிகம்). இவர் அதைத் திறந்து பார்த்தபோது உள்ளே தேதிகளும், வெப்ப அளவுகளும், உடலுறவு கொண்ட குறிப்புகளும் கவனமாக எழுதி வைக்கப்பட்டிருந்தன. விற்பனையாளர் அதை அகற்ற மறந்துவிட்டார்.
எழுத்தாளர் தான் அதை ஒரு கதையாக எழுதப் போவதாகச் சொன்னார். இந்த வருட முடிவிற்கிடையில் அவர் எழுதாவிட்டால் அதை திருடி நான் எழுதுவதாக இருக்கிறேன்.
ஆங்கில சிறுகதைகளோடு ஒப்பிடும்போது தமிழ் சிறுகதையின் தரம் எப்படி இருக்கிறது? சர்வதேச தரத்தை தமிழ் சிறுகதைகள் எட்டுவதற்கு என்ன தடைகள்? அப்படி உலகத் தரம் என்று ஒன்று உண்டா? அதை யார் தீர்மானிக்கிறார்கள்?
சிறுகதை என்பது ஒரு நீண்ட கயிற்றின் நடுவில் ஒரு சிறு துண்டை வெட்டி தருவது போன்றதுதான். அதற்கு முன்னும் கிடையாது பின்னும் கிடையாது. தாகூர் ஒரு காலத்தில் எழுதி பிரபலமான சிறுகதைகள் சிலவற்றை இன்று சிறுகதை என்று ஒப்புக்கொள்ளவே முடியாது. தமிழ் நாட்டில் புதுமைப்பித்தன் சிறுகதையின் ஆதார முடிச்சைக் கண்டுபிடித்து உறுதியான ஒரு வடிவம் கொடுத்தார். இன்று வரை அவருடைய சிறுகதைகளில் பல உலகத் தரத்துடன்தான் இருக்கின்றன. காலத்தால் மாறாமல் இருக்க வேண்டுமெனில் சிறுகதைக்கு சில ஆதார அம்சங்கள் இருப்பது அவசியம். வாசிப்பு தன்மை, புதியதைச் சொல்லல். ஏதோவிதத்தில் மனத்தில் இடம் பிடித்துவிடும் தன்மை, கடைசி வசனம் முடிந்த பிறகும் கதை முடியாமல் மனதில் ஓடிக் கொண்டிருப்பது. இப்படியான குணங்கள் என்று சொல்லலாம்.
ஆனால் இதிலே எங்களைப் பிரமிக்க வைக்கும் ஒரு விசயம் இருக்கிறது. 19ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் எட்கார் அலன்போ இங்கிலாந்தில் சிறுகதைகளை எழுதித்தள்ள அதைத் தொடர்ந்து பிரான்ஸ்சில் மாப்பாசன் சிறுகதைக்கு புதிய மெருகு கொடுக்கத் தொடங்கிவிட்டார். தமிழ் நாட்டில் வ.வே.சு ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்திலேயே வெளிவந்துவிட்டது. இன்னும்
இருபது வருடங்களில் புதுமைபித்தனும் எழுதத் தொடங்கிவிட்டார். பார்க்கப்போனால் ஒரு 70 – 80 வருட வித்தியாசம்தான். மேல்நாட்டில் அவர்கள் தீட்டிக் கூர்பார்க்கும்போதே இங்கே உலகத்தரமான கதைகளை புதுமைப்பித்தன், கு.ப.ரா, இலங்கையர்கோன் போன்றவர்கள் படைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
உலகத் தரம் என்பது மாறிக்கொண்டே இருக்கும் ஒன்று. ஒரு காலத்தில் சிறுகதை மன்னன் என்று அறியப்பட்ட ஓ ஹென்றி போல இப்பொழுது ஒருவரும் எழுதுவதில்லை. உலகத்து நல்ல சிறுகதைகள் எல்லாம் அவ்வப்போது ஆங்கிலத்தில் வெளிவருகின்றன. ஆகவே அவற்றை தொடர்ந்து படிப்பதால் நாம் தரமான சிறுகதைகளைப் பற்றி ஓரளவுக்கு தெரிந்து கொள்ள முடியும். நாம் கன தூரம் போகத்தேவை யில்லை. கனடாவில் ஓர் எழுத்தாளர் இருக்கிறார். பெயர் Alice Munro. இவருடைய speciality சிறுகதைதான். கடந்த ஐம்பது வருடங்களாக எழுதி வருகிறார். ஆளுநர் பரிசு மூன்று முறையும் கில்லர் பரிசு இரண்டு தடவையும் பெற்றவர். 2004ம் ஆண்டு கில்லர் பரிசு அவருக்கே கிடைத்தது. உலகத்து தற்போதைய சிறுகதை எழுத்தாளர்களை வரிசைப் படுத்தினால் இவர் முதல் பத்துக்குள் வருவார் என்று நினைக்கிறேன். இவர் சொல்கிறார் தான் ஒரு 70 பக்க கதையை ஒரு மாத காலமாக எழுதினாராம். ஆனால் முடிவில் திருப்பி படித்தபோது அதனுடைய tone நல்லாக இல்லையாம். ஆகவே அதை அப்படியே தூக்கி எறிந்துவிட்டார்.
இப்படி நுட்பமாக தங்கள் எழுத்துக்களை யார் பார்க்கிறார்கள்? மேல்நாடுகளில் சிறுகதை எழுதும் முறையை கல்லூரிகளில் சொல்லித் தருகிறார்கள். கவிதைக்கு அடுத்தபடி கஸ்டமானது சிறுகதை. நாங்கள் அதைப் படைக்கும்போது அதற்கு வேண்டிய மரியாதை தருவதில்லை. அவர்கள் ஒரு சிறுகதையை எழுதி முடிக்க சராசரி 4 – 6 வாரங்கள் எடுப்பார்கள். எங்களில் மூன்று மணி நேரத்தில்
எழுதிக் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள்.
தொடர்ந்து படைக்கும் படைப்பாளி திரும்பத் திரும்ப ஒன்றையே எழுதுகிறார் என்று குறிப்பிடுகிறீர்கள். அனுபவம், கற்பனை வளம் குறைந்தவர்களுக்கு மட்டுமே அமைந்த குணாம்சம் அல்லவா அது?
அமெரிக்காவின் வாசகர் வட்டத்தில் ஒன்று பேசிக்கொள்வார்கள், ‘இரண்டாவது நாவலை தாண்டவேண்டும்’ என்று. முதல் நாவல் சுலபமானது, இரண்டாவதுதான் கஸ்டம். அதைத் தாண்டிய பிறகுதான் ஒருவர் உண்மையான எழுத்தாளராக அங்கீகரிக்கப்படுகிறார்.
சிலருடைய ஆரம்பகாலப் படைப்புகள் அமோகமாக இருக்கும். கால ஓட்டத்தில் வரும் மீதிப் படைப்புகள் தேய்ந்து தெரியாமல் போய்விடும். ஜும்பா லாஹரியின் முதல் படைப்பு வெளிவந்தபோது உலகம் நிமிர்ந்து பார்த்தது. அவருடைய புத்தகத்துக்கு புலிட்ஸர் பரிசு கிடைத்தது. எல்லோரும் இரண்டாவது படைப்புக்கு காத்திருந்தார்கள். வந்தது. மிகச் சாதாரணம், தோல்வி என்றே சொல்லலாம். ஆரம்ப வேகம் இல்லை. பதிப்பாளர்களுக்கும் இது தெரியும். ஆகவே அவர்கள் இரண்டாவது பதிப்பில் கவனமாக இருப்பார்கள்.
எழுத்தாளருடைய முதல் பதிப்பு அநேகமாக சுயசரிதைத் தன்மையுடன் இருக்கும். தன் சொந்த அனுபத்தில் இருந்து படைப்பதால் அதற்கு ஒரு பலம் இருக்கும். நம்பிக்கைத் தன்மை இருக்கும். இரண்டாவது படைப்பில் எழுத்தாளன் தன் மூளையை பாவிக்க ஆரம்பித்து விடுகிறான். உலகத்து திறமான இலக்கியங்கள் எல்லாம் ஆரம்ப வேகத்தில் படைக்கப்பட்டவை தான். பின் வந்த படைப்புகள் ஆரம்ப காலத்து படைப்புகளுக்கு ஈடாக இருப்பதில்லை.
ஹார்ப்பர்லீ என்பவர் ஒரே ஒரு புத்தகம் எழுதி உலகப் புகழ் பெற்றார். அவர் இரண்டாவது புத்தகம் எழுதவே இல்லை. ஐஸாக் டெனீசனின் முதல் நாவல் ழுரவ ழக யுகசiஉய உன்னதமானது. அவர் அடுத்து எழுதியவை எல்லாம் அந்த உச்சத்தை எட்டவில்லை.
இவை எல்லாம் பொதுவான விதிகள்தான், விதிவிலக்குகள் உண்டு. எழுத்தாளர் தன்னை புதுப்பித்துக் கொள்ளவேண்டும். புதிய வாசிப்பு, புதிய அனுபவங்கள், பயணங்கள் போல எழுத்தை விசாலிக்கச் செய்ய வேறு ஒன்றுமே இல்லை. புது உலகம், புதிய மனிதர்கள் புதிய அனுபவங்கள் புதிய சிந்தனைகள். தான் சேர்த்து வைத்த அனுபவங்கள் போதும் என்று ஒரு எழுத்தாளன் தன்னைப் பூட்டி வைத்துக்கொண்டு படைக்கும் போது எழுதியதை திரும்ப எழுத நேரிடும்.
இலக்கியத்தின் சமூகச் செயல்பாடு என்ன?
எழுத்தாளன் என்பவன் சமூகத்தில் வாழ்கிறான். எனவே அவன் எழுத்து சமூகத்தில் ஏதோ ஒரு விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் எழுத்தாளன் காலையில் எழும்பி இன்று நான் சமூகத்தில் நடக்கும் இந்த அநீதியை உடைக்க ஒரு கதை எழுதவேண்டும் என்று தீர்மானித்து எழுதினால் அது கலைப்படைப்பாக உருவாக முடியாது. எழுத்து இயற்கையாக அமைய வேண்டும். சமுதாயப் பார்வை என்ற கல்லை அதில் கட்டி தொங்கவிட்டால் அது படைப்பை இழுத்து நிறுத்திவிடும் அபாயம் உண்டு.
அம்பையினுடைய ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்ற கதையை எடுங்கள். அதில் எங்கேயாவது சமுதாயத்தை சீர் திருத்தவேண்டும் என்ற தொனி இருக்கிறதா? இல்லை. ஆனால் அந்தக் கதையை படித்து முடித்த வாசகரை அது சிந்திக்க வைக்கிறது. பெண்களுடைய அடிமை நிலை பற்றிய பிரச்சாரம் கிடையாது. அதுதான் வெற்றி.
‘பெரும் சத்தத்துடன் கதவு மூடியது’ என்ற கடைசி வரியுடன் இப்சனின் நாடகம் முடிவுக்கு வந்தபோது பெண்களை சிறைப்படுத்திய பெருங்கதவு ஒன்று திறந்துகொண்டது.
நீங்கள் ஒரு படைப்பாளியாகவும், வாசகனாகவும் இருக்கிறீர்கள். பல படைப்பாளிகள் அப்படி இல்லையே? கட்டாயம் வாசிக்க வேண்டுமா? உண்மையான அனுபவ அடிப்படையில் எழுதும் படைப்பாளிக்கு அது அவசியமா?
படைப்பாளியாக இருப்பதிலும் பார்க்க ஒரு நல்ல வாசகராக இருப்பது மிகவும் கஸ்டமானது. ஏனென்றால் தொடர்ந்து வாசிப்பது மிகவும் கடினமானது. அதுவும் நல்ல புத்தகங்களை தேடிப்பிடிப்பது இன்னும் சிரமமான காரியம். வாசிப்பின் தரம் உயர உயர இந்த வேலை இன்னும் கடுமை அடையும். என்னுடைய கேள்வி இதுதான். வாசிப்பு இல்லாமல் ஒரு படைப்பாளி தோன்றியிருக்க முடியுமா? இல்லை. அப்படியானால் அந்த படைப்பாளி எப்பொழுது தன் வாசிப்பை நிறுத்துகிறார். தான் எல்லாவற்றையும் கற்று தேர்ந்தாகிவிட்டது. இனி கற்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலைமை ஏற்பட்டபோதா? கற்பதற்கு எல்லையே இல்லை. வாசிப்பு படைப்பாளியாவதற்கு எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் படைப்பாளி என்ற ஸ்தானத்தை தக்க வைப்பதற்கும். உலகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்கள் எல்லாம் கணிசமான நேரத்தை வாசிப்பதில்தான் இன்னமும் செலவழிக்கிறார்கள். ஒரு மனிதனின் உடம்பில் உள்ள செல்களில் 98 வீதம் ஒருவருட காலத்தில் தன்னைத்தானே புதுப்பித்து கொள்கிறது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அதுபோல எழுத்தாளனும் நித்தம் தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். உங்கள் காரின் ரோட்டு லைசென்ஸை வருடா வருடம் புதுப்பிப்பது போல.
நன்றி – காலம் – ஏப்ரல் 2005