பசுமரத்தாணி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 14, 2023
பார்வையிட்டோர்: 830 
 

அந்த வங்கியின் அருகாமையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டுத் தலைக் கவசத்தைப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டிய பின் மோட்டார் சைக்கிளின் சாவியைப் பத்திரமாய்த் தனது சட்டைப் பாக்கெட்டில் போட்டபோது அங்கிருந்து சிறிது தொலைவில் தனது மஞ்சள் நிற “மெஜடிஸ் பென்ஸ்” காரை நிறுத்திவிட்டு நடந்து வரும் தன் வயதொத்த அந்த நபரையே உற்றுப் பார்க்கிறார் கார்மேகம்.

என்றோ, எப்போதோ பார்த்த முகம் போல் மனதில் படவே கொஞ்சம் பார்வையை ஆழமாக்கிய போது அவர் அருகில் வந்து விட்டார்.

அழகாய்ப் படிய வாரிய கேசம் அலை அலையாய்ப் படிந்திருந்தது. விலை உயர்ந்த கண்ணாடி அணிந்திருந்தார்.

கம்பீரமான கோட்டும் சூட்டும் அவரது வசதியையும் பதவியையும் எடுத்துக் கூறிக் கொண்டிருந்தன. கார்மேகத்தின் மனதுக்குள் பலவித சிந்தனைகளின் அணிவகுப்பு தொடர்கிறது. அதே நேரத்தில் எதிர்ப்புறமிருந்த வங்கி அலுவலக வாசலில் இருந்து இறங்கிய இருவர் அந்த நபரை அணுகி வணக்கம் சொல்கின்றனர்.

“குட் மார்னிங் மிஸ்டர் சிவா. கொஞ்சம் லேட்டாயிடுச்சு. பயணமெல்லாம் நல்லாயிருந்துச்சா?”

அவர்களின் வரவேற்புக் குரல் நன்றாகவே கார்மேகத்தின் காதில் விழுகிறது. அவர்கள் மூவரும் இவரைக் கடந்து சுவாரஸ்யமாய்ப் பேசிக் கொண்டே உள்ளே நுழைகின்றனர்.

கார்மேகமும் உள்ளே நுழைகிறார். முன்னால் சென்ற நபருக்கு உள்ளே ஆரவாரமான வரவேற்பு நல்கப்படுகிறது.

ஒவ்வொருவராய் “ஹலோ” சொல்லிக் கை குலுக்கி அவர் தனக்கான இடத்தில் அமரும்போது கார்மேகத்திற்கு ஓர் உண்மை தெளிவாகிறது.

சிவா, நாடு முழுவதிலும் வெளிநாடுகளிலும் அமோக ஆதரவைப் பெற்றுச் சேவை செய்து வரும் பிரபல வங்கியின் கிளை நிறுவனமான இந்த வங்கிக்கு மேனேஜராகப் பொறுப்பேற்க வந்திருப்பவர்.

சிவாவின் முகம் மட்டுமின்றி நடையும் முன்பு அறிமுகமான ஓர் உணர்வையே மனதில் எழ வைக்கின்றது.

யோசிக்கின்றார். “யார்..? யார்… இந்தச் சிவா…? இவருக்கும் எனக்கும் உள்ள உறவு தான் என்ன? எதனால் எனக்கு இவரிடமே மனம் செல்ல வேண்டும்?

பளிச்சென்று மின்னல் வெட்டாய் ஒரு நினைவு… சிவகுமார் ! அந்தச் சிவகுமாராக இருக்குமோ? கார்மேகத்தின் கால்கள் விடுவிடுவென்று ரிஷப்சனில் போய் நிற்கின்றது.

“நான் புதிய மேனேஜரைப் பார்க்க வேண்டும். அவரிடம் எனது பொது விஷயமாய்ப் பேச வேண்டும். கொஞ்சம் அனுமதி கிடைக்குமா?”

பணிவுடன் கேட்கும் அவரிடம் பெறவேண்டிய விவரங்களைப் பெற்றுக் கொண்டு அவருக்கு அனுமதி தரப்படுகின்றது. ஏதோ புதையலைத் தேடிப் போவதுபோல் போனார்.

“வணக்கம், வாங்க… இப்படி உட்காருங்க”

சிவா கனிவுடன் கூறுகிறார். கார்மேகம் வியப்புடன் அவரைப் பார்க்கிறார்.

ஒரு மேலதிகாரியிடம் இவ்வளவு அடக்கமா? சாதாரண தமிழர்கூட ஒருவரை ஒருவர் பார்க்கும் போதும் சந்தித்துப் பேசும் போதும் தாங்கள் ஏதோ வெளிநாட்டில் பிறந்ததுபோல் ஆங்கிலத்தில் உரையாடுவதை அவர் பார்த்து வேதனைப் பட்டிருக்கிறார்.

ஆனால் இங்கே மிகப்பெரிய வங்கி ஒன்றின் மேலதிகாரி தாய்மொழியில் தன் இனத்தவரிடம் பேசித் தன் மொழிக்கும் இனத்துக்கும் மரியாதை கொடுக்கிறாரே… மனம் நெகிழ்கிறது. கரம் குவிக்கிறார்.

“வணக்கம் ஐயா. என் பேரு கார்மேகம், தாம்சன் சாலையில் ஒரு பேரங்காடியில் காவலராக வேலை பார்க்கிறேன்” சொல்லிக்கொண்டே இருக்கையில் அமர்கிறார்.

புன்முறுவலுடன் தலை அசைத்த சிவா, “உங்களுக்கு நான் என்ன உதவி செய்யணும்னு சொன்னீங்கன்னா நான் செய்யக் காத்திருக்கேன் மிஸ்டர் கார்மேகம், நீங்க எதுவா இருந்தாலும் தயங்காமல் கேளுங்க… என்ன விஷயமா வந்திருக்கீங்க?”

கார்மேகத்தின் அகம் மலர்வது அவரது முகத்தில் தெரிகிறது.

“நான் எந்த உதவியும் தேடி வரலீங்க ஐயா… எனக்கு வேண்டிய ஒருத்தரைப் பத்தின விவரத்தை உங்கக்கிட்டேயிருந்து தெரிஞ்சுக்க வந்திருக்கேன். உங்க நேரத்தை வீணாக்கறதா நெனைச்சிடாதீங்க…”

சிவா, அவரை அதிசயமாய்ப் பார்க்கிறார். கூடப் கூடப் போனால் தன்னைவிட நாலைந்து வயதுதான் கூட்டிக் காட்டும் தோற்றம். குடும்பத்திற்காக உழைத்ததில் சோர்வு கண்ட முகம். இருந்தாலும் சுறுசுறுப்புடன் இயங்கும் தன்னை…

“சொல்லுங்களேன்… நீங்க யாரைப் பத்தி விவரம் தெரிஞ்சுக்கணும். எனக்குத் தெரிஞ்சா நான் நிச்சயமா விவரம் சொல்றேன்!”

கார்மேகம் தன் மனதில் உள்ள கேள்வியை வெளியிடக் கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டுவிட விரும்பவில்லை.

“ஐயாவுக்கு இந்த ஊர் தானுங்களா. இல்லே வெளியூரா?” இலேசாகச் சிவா சிரித்துக் கொள்கிறார்.

“ஏன் கேட்கிறீங்க? என்னைப் பார்த்தா இறக்குமதி மாதிரி தெரியுதா உங்களுக்கு…! நான் இங்கேயே பொறந்து வளர்ந்து படிச்சவன்தான்…!

குயின்ஸ் டவுனில்தான் எங்க குடும்பம் இருக்கு. அப்பா இப்பதான் தவறிப் போனாங்க.செம்பவாங்கில் நாங்க இருந்த பழைய வீட்டை வித்துட்டு இப்ப மத்திய வட்டாரத்துல வீடு வாங்கிட்டோம். அம்மாவுக்கு அந்த இடம் பிடிக்க மாட்டேங்குது.”

“எந்தப் பள்ளிக் கூடத்துல படிச்சீங்க. தாய் மொழியில் இவ்வளவு அழகாகப் பேசறீங்களே?”

கார்மேகம் ஆச்சரியமாய்க் கேட்கிறார்.

“இதுல என்ன அதிசயம் இருக்குதுங்க. நான் என்னோட ஆரம்பக் கல்வியைச் செம்பவாங்ல தமிழ்ப் பள்ளியிலதானே படிச்சேன். உயர்நிலைப் பள்ளிக்குப் போற வரையில் வகுப்பில் நான் தமிழ் மொழியில் சுமாராத்தான் இருந்தேன். என்னோட சினேகிதன் ஒருத்தன் எப்பவும் என்னைக் கேலி செய்துகிட்டே இருப்பான். ஏன்னா அவன்தான் தமிழில் ரொம்பக் கெட்டி.

எல்லாப் பாடத்திலேயும் முதல்ல வருவான். பேருக்கேத்த மாதிரி கவிதை பாடிக்கிட்டே இருப்பான். எனக்கே பொறாமையா இருக்கும்.

நாங்கள்லாம் அவனைக் கவி காளமேகம்னு கிண்டல் செய்வோம்.”

கார்மேகத்திற்கு ஒரு சிறு பாதை கிடைத்து விட்டது போன்ற துடிப்பு.

“என்ன பேரு சொன்னீங்க காளமேகமா?” ஆர்வமுடன் கேட்கிறார்.

“இல்லே மிஸ்டர் கார்மேகம், அவனோட உண்மையான பேரு கார்மேகம் தான்”

சிரித்துக் கொண்டே கூறுகிறார் சிவா. கார்மேகம் இருக்கையை விட்டு எழும்பி நிற்கிறார்.

“அப்படின்னா உங்க பேரு சிவகுமார் தானே. உங்க அப்பா அலெக்சாண்டிரா மருத்துவமனையில் வேலை பார்த்த ஆறுமுகம்தானே?

சிவாவுக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. தன் பெயரையும் தன் தந்தையின் பெயரையும் வேலையையும் விவரமாய்க் கூறும் இவர் யாராக இருக்கும் என்று தனக்குள் கேள்விகளைக் கேட்டு யோசிக்கிறார்.

“மிஸ்டர் கார்மேகம், என்னோட பேரு எங்க அப்பாவோட பேரெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்… நீங்க யாரு?”

கார்மேகம் தன்னைப் பற்றிய விவரத்தைச் சொல்லக் கொஞ்சம் தயங்குகிறார். இருந்தாலும் மனம் திறக்கிறார்.

“சிவா… என்னை உனக்குத் தெரியலையா… நான் தான் அந்தக் கார்மேகம். வங்குசாக் கடை வைத்திலிங்கம் பிள்ளையோட மகன். உன் கூடப் படிச்ச கார்மேகம்”

நெஞ்சை நிமிர்த்தித் தன் பால்ய நண்பனிடம் மனம் விட்டுப் பேசினாலும் தலைமட்டும் தரை பார்த்து நின்றது.சிவா தன் இருகைகளை நீட்டி அவரது கைகளைப் பிடித்துக் கொள்கிறார்.

“டேய் கார்மேகம்…நீயா… நீ ஏண்டா இப்படி? இப்ப நீ என்ன செய்துக்கிட்டிருக்கே. என்னடா படிச்சே… அப்பா அம்மாவெல்லாம் எப்படி இருக்காங்க-”

கார்மேகத்துக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துப் போகிறது. தன் நண்பன் தன்னை மறக்கவில்லை என்பதை நினைத்துக் கண்கள் தளும்புகின்றன. நீண்ட பெருமூச்சுடன் பேசுகிறார்.

“அவுங்களுக்கென்ன சிவா… வயசாயிடுச்சுன்னு சொல்லிட்டுக் கடைய என்கிட்டே விட்டுட்டு ஊருக்குப் போய் சேர்ந்துட்டாங்க. எனக்கு ஏட்டுப்படிப்பு கைக்கு உதவாமப் போச்சுடா… கடையில இருந்த ஆளுங்க என்னை ஏமாத்திட்டு எல்லாத்தையும் சுருட்டிக்கிட்டுப் போய்ட்டாங்க… எனக்கு வேற எந்த வேலையும் தெரியாதுடா… இந்த வேலைதான் ஒத்து வந்துச்சு… பேர் போட்டுக் கிட்டிருக்கேன்.”

சிவா நண்பனை ஆறுதலாய்த் தட்டிக் கொடுக்கிறார். கார்மேகம் மறுபடியும் பேசுகிறார்.

“எனக்கு அப்பவே தெரியும் சிவா. நீ சின்னவனா இருக்கிறப்பவே உங்க அம்மா உன்னை இந்த வங்கிக்குக் கூட்டிக்கிட்டு வந்து உனக்குன்னு கணக்கெல்லாம் திறந்து கொடுத்தாங்க. நம்ம ஸ்கூல்லேயே நீதான் முதல்ல வங்கிக் கணக்கு வெச்சிருந்தே…

நாங்கள்லாம் சினிமாவுக்குப் போவோம்… நீ மட்டும் லைப்ரரிக்குப் போவே. நாங்க செலவு பண்ணினாக்கூட உனக்குப் பிடிக்காது. எங்களுக்கு அறிவுரை சொல்லுவே. புகைபிடிப்பதைக் கூட கண்டிச்சிருக்க. இப்போ புரிஞ்சிக்கிட்டேன்டா சிவா. விளையும் பயிர் முளையில் தெரியும்கிற மாதிரி உன்னோட எதிர்காலம் அப்பவே தெரிஞ்சிருக்கு… அதை உன்னோட அம்மாவும் அப்பாவும் உறுதி பண்ணிட்டாங்க… உனக்கு நல்ல வழியை அப்பவே காட்டி உன்னோட எதிர்கால வாழ்க்கைக்கு அவுங்க திட்டமிட்டு அடித்தளம் போட்டு வெச்சிட்டாங்க…

நீயும் உறுதியா இந்த வங்கிக் கட்டடம் மாதிரி உயர்ந்து நிற்கறே. ஆனா என் அப்பா அம்மா! அவுங்ககிட்டே நெறைய பணமிருந்துச்சு, ஆனா மனந்தான் இல்லே…”

மடை உடைபட்டது போல மனம் உடைந்து வார்த்தைகள் ஓடி வந்தன.சிவா அவரை அணைத்துக் கொள்கிறார்.

“இப்பவும் ஒன்றும் குறைஞ்சு போயிடலே கார்மேகம். உன்னோட பிள்ளைகளுக்கு நீ அதைச் செய்தா அவுங்க நிச்சயமா உன்னைத் தூக்கி நிறுத்துவாங்க. ஆலமரம் விழுந்துட்டாலும் அதோட விழுதுகள் அதைத் தாங்கி நிறுத்துற மாதிரி.”

கார்மேகம் பெருமையுடன் நண்பனைக் கட்டி அணைத்துக் கொள்கிறார்.

“ரொம்ப நன்றி சிவா… உன்னை என் நண்பன்னு சொல்லிக்கிறதில் நான் ரொம்பப் பெருமைப் படறேன். நீ நிச்சயமா என் வீட்டுக்கு ஒரு நாளைக்கு வரணும் உன் குடும்பத்தோட.”

உரிமையுடன் அழைப்பு விடுக்கிறார் கார்மேகம். உவகையால் அகமும் முகமும் மலர.

“அதென்ன ஒரு நாளைக்கு… இந்த வாரக் கடைசிலேயே வந்தாப் போச்சு.”

சிவாவின் பதில் கேட்டுக் கார்மேகம் சிரிக்க அந்தக் குளிர்சாதன அறையில் நண்பர்களின் சிரிப்பு அடங்கச் சில மணித்துளிகளாயின.

– ஆர்க்கிட் மலர்கள் (சிறுகதைத் தொகுப்பு) , முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2002. சிங்கை தமிழ்ச்செல்வம் வெளியீடு, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *