பௌருஷம்

 

ஸ்டேசன் விளக்குகள் மின்ன ஆரம்பித்த மாலை நேரக் கருக்கலில், பிளாட்போமில் கசகசவென நின்ற ஜனச் சிதறலை உசார்ப்படுதியவாறு வந்து நின்ற அளுத்கம ரயிலிலிருந்து அவதியோடு இறங்கிய கும்பலின் பின்னால் ஓரிரு பொறுமைசாலிகளோடு இவனும் ஒருவனாக இறங்கினான்.

வாசலில் சிரத்தையில்லாமல் நின்றுகொண்டிருந்த காக்கிச் சட்டைக்காரனின் கையில் வலியச் சென்று தன் டிக்கட்டைத் திணித்துவிட்டு வெறுங்கைகளை வீசியபடி எதிர்ப்புற ரயில்வே லயினோடு ஒட்டிய பிளாட்போமுக்கு வந்தான்.

அது ஒரு சின்ன ஸ்டேசன். எதிரும் புதிருமாக ஐந்து நிமிடத்துக்கொருமுறை ஓடும் ‘டீசல்’களுக்காக நீண்டுகிடந்த தண்டவாளங்களுக்கிடையே அந்த ஸ்டேசன் இறுகப் பொருத்தப்பட்டதுபோல் கிடந்தது. அதன் முன்புற வாசலோடு சங்கமிக்கிற ஸ்டேசன் றோட்டால் வந்து அந்தலையிலுள்ள ஒரு மரப் பாலத்தில் ஏறி இந்தப்பக்கம் இறங்கிவிட்டால் ஸ்டேசனுக்குள் நுழைந்துவிடலாம். இது டிக்கட் எடுத்து பிரயாணம் செய்பவர்களுக்குரிய வழி. மற்றவகையான பேர்வழிகளின் வசதிக்கேற்ப ஸ்டேசனின் எல்லாப் பக்கங்களிலும் வாசல்கள் இருந்தன.

எப்பொழுதும் சளசளவென்று கொட்டிக்கொண்டிருக்கும் அல்லது ஒருபோதுமே கொட்டாத தண்ணீர்க் குழாய், நாற்றமெடுக்கும் கக்கூஸ்கள், குதிரை றேஸ் பத்திரிகைகளிலேயே முழு நேர அக்கறை கொண்ட உத்தியோகத்தர்கள், வாங்குகளில் மூட்டைப் பூச்சிகளின் ஆக்கிரமிப்பு என்னும் பொதுவான லட்சணங்களுக்கு முரணாகாமல் அந்த ஸ்டேஷன் இருந்தது. ஸ்டேசனுக்கு மேற்கே அமைதியான கடற்பரப்பு. கரையோரமெங்கும் தாழைப் புதர்கள் – உள்ளே கொலை விழுந்தாலும் வெளியிலிருந்து தெரிந்துகொள்ளமுடியாத அளவுக்கு அல்லது உள்ளிருந்தபடி வெளியே பார்த்து எந்தக் காரியத்திற்கும் தயங்கத் தேவையில்லாத அளவுக்கு – மண்டிபோய்க் கிடந்தன. தண்டவாளத்தின் ஓரமாக நிலத்தை மண்ணரிப்பிலிருந்து பாதுகாக்கவென்று இங்கிலீசுக்காரன் காலத்தில் போட்ட கருங்கற் பாறைகள் மண்ணிலே அரைகுறையாய்ப் புதையுண்டு கிடந்தன.

காற்று ஒழுங்கு பிசகாமல் வீசிக்கொண்டிருந்தது.

இவனுக்கு இவையெல்லாம் தற்செயலான புதிய காட்சிகள்போல் தோன்றின. எனவே இவன் அங்கேயே நின்றுகொண்டிருந்தான்.

இவன் அந்த ரயிலில் ஏறி இங்கே வந்து இறங்கியதே ஒரு தற்செயலான சம்பவம். இவனே ஒரு தற்செயலான பிறவி. இதைத்தவிர இவனை அப்படி விசேடமாக எந்தச் சொல்லாலும் அடையாளம் காட்டிவிட முடியாது. தற்செயல்களுக்கு வியாக்கியானம் ஏது?

இவன், தான் இனிப் போய்ச் சேரவேண்டிய இடம் அவ்வளவு முக்கியமான இடமில்லைப் போலவும் அந்தச் சூழ்நிலையில் கொஞ்ச நேரம் நின்றுவிட்டுப் போவதால் அப்படி ஒன்றும் குடிமுழுகப் போவதில்லையெனப்போலவும் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். சிறிது நேரம் அப்படியே நின்றுவிட்டுத் தலையைத் தூக்கித் தண்டவாளத்தில் மேலாகவுள்ள மரப் பாலத்தையும் அதனுள் கவியும் இருட்கூடலில் கதைபேசும் ஜோடியையும் வெறித்து நோக்கிவிட்டுப் பிளாட்போமில் பார்வையை ஓடவிட்டான். அப்போது அவர்களைக் கண்டான்.

அவர்கள் தினசரி ‘யாருக்காகவோ” காத்து நின்று பழக்கப்பட்டவர்கள் போல் நின்றுகொண்டிருந்தார்கள்.

இவனும் அப்படியே நின்றான்.

அவர்கள் தோற்றத்தில் தாயும் மகளும் போலவும் நெருக்கத்தில் மாமியாரும் மருமகளும் போலவும், வேண்டியபோது சொற்களையும் சைகைகளையும் கலந்து பேசிக்கொண்டிருந்தார்கள். இப்படிப் பேசிக்கோள்ளாத சந்தர்ப்பங்களில் மகள்போல் தோன்றியவள் ஸ்டேசன் கூரையில் மின்னிக்கொண்டிருந்த விளக்குகளை எண்ணுவதுபோல் வாயை அசைத்தும் விளம்பரப் பலகைகளில் உதிர்ந்துபோன எழுத்துக்களை வாசிக்க முனைந்தும் பிடரியில் தொங்கிய பின்னலை முன்னால் விட்டு ஒருமுறை ஒழுங்கு செய்தும் தனக்குப் பொழுது போகவில்லை என்ற சங்கடத்தை வெளிப்படையாகவே சமாளித்துக்கொண்டிருந்தாள்.

மற்றவள், அதிமுக்கியமான காரியத்தை எதிர்நோக்கிப் பிரயாணம்செய்ய வேண்டியவள் போல் ரயில் வரவேண்டிய திக்கில் நோக்குவதும், உதட்டைப் பிதுக்குவதும், உடைந்துபோன நெருப்புக் குச்சியால் பல்லிடுக்கில் இறுகிப்போன பாக்குத் துகள்களை வேளியேற்றி மறுபடியும் அவற்றைப் பற்களால் அரைப்பதும் இடையில் இந்தப் புதியவனைக் கவனிப்பதுமாக நின்றாள்.

ஒரு கணிசமான நேரம் கடந்தது. ஆயினும் ரயில் எதுவும் வந்தபாடில்லை.

இவன் மரப்பாலத்தின் மேலே கதைபேசும் ஜோடியைத் திரும்பவும் பார்வையால் வெறித்துவிட்டு அவர்கள் பக்கமாக வந்தான். அவர்களை விட்டால் அந்தப் பிளாட்போமில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர்தான். ஆகவே சம்பிரதாயமாக விசாரிப்பதற்கு வேறு எவரும் அருகில் இல்லை என்ற நியாயமான காரணத்தைத் தனக்குச் சாதகமாக உருவாக்கிக்கொண்டு தாய்போல் தோன்றியவளின் அருகே வந்தான்.

“இங்கே உங்களைத்தான், ஒரு விஷயம்….” அவள் அப்போதுதான் அவனைக் கண்டவள்போல் இவன் பக்கம் திரும்பினாள்.

“பாமன்கடைக்கு இங்கேயிருந்து எப்படிப் போகணுமென்று சொன்னால் நல்லம்.”

“ஓ, பாமன்கடையோ!” அவள் விழிகளும் வாயும் அகல விரிந்தன. “மிச்சம் கிட்டத்தானே! குறுக்கே போனால் நடந்துகூடப் போகலாம். பஸ்தான் இருக்கே, டூ மினிட்டிலே போயிடலாம்.”

இவன் அவளுடைய சொல் ஒழுங்கிலும் அபிநய பாவங்களிலும் சிங்களக் கிராமப்புற நடனத்தின் கவர்ச்சியைக் கண்டவன்போல் தோன்றினான்.

“இங்கே இருக்கே லில்லி அவெனியூ, இதிலே இறங்கி, டூ மினிட் நேரா நடந்தால் காலி றோட்டில ஏறலாம். அப்புறம் அதைக் கடந்து மெனிங் பிளேஸிலே திரும்பிவிட்டால் பேவ்மென்ட் பக்கத்திலே ரெண்டு மூணு பஸ் நிற்கும். முன்னாலே நிக்கிற பஸ்ஸிலே ஓடிப்போய் ஏறவேண்டியதுதான். அது மெனிங் பிளேஸ் கடந்து ஹம்டன் லேனில் பூந்து புறப்பட்டுப் பிறகு ஹை ஸ்டிரீட்டில் அள்ளிக்கொண்டுபோய்ச் சபையர் தியேட்டர் எல்லாம் தாண்டி பாமன்கடை ஜங்ஷனிலே வலப்பக்கமாகத் திருப்புவான். அதற்கு முன்னாலே பாமன்கடை பிளாட்டிலே நிறுத்துவான் பாருங்க, அங்கே இறங்கிவிட்டால் விரும்பிய இடத்துக்குக் கேட்டுக்கொண்டே போகலாம். இது என்ன பெரிய தூரம். இப்போ பஸ்ஸெல்லாம் என்னமாய்ப் பறக்குது தெரியுமோ?”

“ஓ, மிச்சம் நல்லம்.” என்று கூறிவிட்டு, இனித் திரும்ப வேண்டியதுதான் என இவன் நினைத்து முடிக்கவும், அவள் –

“நீங்க இந்தப் பக்கம் முன்னே வரேல்லையா?”

“வரேல்லை, கோச்சியிலே பலதரம் காலி, களுத்துறையைப் பார்த்துப் போயிருக்கேன். இந்த ஸ்டேசனுக்கு வந்தது சரியாக நினைவில்லை. ஏனென்னா இந்த லையினில எல்லா ஸ்டேசனும் ஒரே மாதிரியாகத்தன் இருக்கு.”

“நாங்களும் பாமன்கடைப் பக்கம் இருந்துதான் வாறோம். இந்தக் கோச்சிக்காகக் காத்துக்கொண்டு நிண்டு பாதி உயிரே போயிட்டுது.”

“இனிக் கோச்சியிலையும் ஏறிவிட்டால் மிச்சமாய் இருக்கிற பாதி உயிரும் போயிடும் தெரியுமோ?” என்று கூறிவிட்டு இவன் மெல்லச் சிரித்தான். நகைச்சுவையை விரும்பி ரசிக்கும் ஒருவரிடமிருந்து பிறக்கும் உண்மையான சிரிப்பு அந்தப் பெண்ணிடமிருந்து எழுந்தது. தாயும் வேண்டியதற்கு மேலாகச் சிரித்தாள். பிளாட்போமெங்கும் கலகலப்பு நிறைந்தது. கந்தோருக்குள்ளிருந்து ஒரு காக்கிச் சட்டைக்காரன் புதினம் பார்ப்பதுபோல் இந்தப்பக்கம் எட்டிப் பார்த்தான்.

இவனுக்கு இன்னும் கொஞ்சம் நின்று போகலாம்போல் தோன்றியது.

“நாங்க இங்கை வந்துதான் எவ்வளவு வேளையாய்ப்போச்சு! மணி என்ன ஆகுதென்று சொல்லுங்க பார்ப்பம்!”

இவன் இடக்கையை நெற்றிக்குமேல் உயர்த்தி மணிக்கூட்டைக் கூர்ந்து கவனித்துவிட்டுச் சொன்னான்: “ஏழு பத்து”. இத்தனைக்கிடையில் இவனுடைய அங்க அசைவுகளின் அமைதியான ஒழுங்கை அந்தப் பெண் விழிகளை அகல விரித்து நோக்கினாள். இவன் அவளை இடைக்கிடை கவனித்ததுபோலவும் அவள் தன்மீது வீசும் பார்வைக்கு நன்றிக்கடனாகத் தான் புன்னகை புரிவதுபோலவும் காட்டிக்கொண்டான்.

“அம்மாடி, எம்மளவு வேளையாய்ப் போச்சு! இனி எப்பிடித்தான் வீட்டுக்குப் போவே? இங்கை பாரும், இவள் மார்க்கட் வரைக்கும் எங்கூட வந்திட்டு அப்புறம் இங்கேயும் வந்து என்னைக் கோச்சியிலை அனுப்பிவிட்டுத்தான் தனியே வீட்டுக்குப் போவேனென்னு அடம்பிடிச்சின்டு வந்தாள். இங்கை வந்தால் எம்மளவு வேளையாய்ச்சு! இப்படி வருமென்னு தெரிஞ்சுதான் நான் முன்னமே சொன்னேன், வராதே வீட்டிலேயே நில்லுன்னு. நீங்களே சொல்லுங்க, டவுனாயிருந்தாலும் எங்கேயும் விருப்பப்படி போய்வாரதென்னா நேரம் காலம் வேண்டாமா?” இவனுக்கும் மகளுக்குமிடையே தனது பேச்சினூடே கச்சிதமாக ஒரு பாலத்தை இணைப்பதோடு பக்குவமாய் ‘நிலைமையையும்” விளக்கினாள்.

“உங்க வீடும் பாமன்கடைப் பக்கம் என்றுதானே சொன்னீங்க?” தனக்குக் கொஞ்சம் பிடி கிடைத்ததைக் காட்டிக்கொள்ளாமல், அவர்கள் விரும்பினால் தனது துணை கிட்டுமென எண்ணும்படி வெகு சாதாரணமாகவே கேட்டான். இவனுக்குப் பிடிகொடுக்க வேண்டுமென்றுதான் அவள் அப்படிப் பேசினாள் என்பது இவனுக்குத் தெரியும் சந்தர்ப்பம் உடனேயே கிட்டியது.

நல்லதாய்ப் போச்சு, போற இடம் கிட்டத்தட்ட ஒண்ணாயிருந்தா இவளொடே நீங்களும் போகலாமே, ஆளுக்கு ஆள் துணையாயும் இருக்கும் இல்லியா?”

“இப்போ யார் யாருக்குத் துணையென்றுதான் தெரியாம இருக்கு.” பழையபடி சிரிப்பு. இம்முறை காக்கிச் சட்டைக்காரன் எட்டிப்பார்க்கவில்லை.

“பிள்ளை, போறப்போ இவரையும் கூட்டிண்டு வழியைக் காட்டிட்டு நீ நேரா வீட்டுக்குப் போ. போனதும் மறந்துவிடாதே. வெளியே போட்டிருக்கிற உடுப்பெல்லாம் பத்திரமாய் எடுத்து உள்ளே போட்ரணும். ராவோடு ராவா தொலைந்து போயிட்டால் நாளைக்கு நீதான் கவலைப்படுவே, சொல்லிட்டேன்.”

“சரீம்மா.” அந்த ஒரு சொல்லில் பூரணமான சம்மதம் தொக்கி நின்றது.

இவன் அவளோடு புறப்பட்டான்.

இருவரும் பிளாட்போமின் சரிவில் இறங்கி நடக்கத் தொடங்கினர்.

முன்னே சென்றவனை அப்பெண் முழுமையாக அளந்தாள். இருளிலும் நிதானமாகவும் நேரே கோடு கீறியதுபோன்ற ஒழுங்கிலும் நிமிர்ந்து நடக்கின்ற இவனைப் பின்தொடர்கின்றபோது நாளாந்தம் கடைப்பிடித்து மனப்பாடமாகிவிட்ட சங்கதிகள் ஏதோ பழைய கதைகள்போலவும் தன் மனத்தின் அடித்தளத்தில் நெடுநாளாய்க் குறுகுறுக்கும் ஒரு இனந்தெரியாத கேள்வி தனக்குரிய பரிபூரண விடையைத்தேடி விரைவதுபோலவும் சில புதுமையான சலனங்கள் அவளை ஆட்கொண்டன.

நேற்றுவரை அரங்கேறிய காட்சிகளிலெல்லாம் திடீரெனத் தோன்றி உறவுகொண்டாடும் ஒரு அந்நியனுடன், ஒரு வார்த்தையே இனிமையாகப் பேசத் தெரியாத, அப்படிப் பேசும் அவகாசத்தை விரும்பாத, அப்பொழுதைத் தாழாத தற்குறியுடன், அவன் இழுத்த திசையெல்லாம் கூடவே ஓடி, இருளில் மறைந்தும் மறைவில் நுழைந்தும், இரு என இருந்து, நில்லென நின்று, மிக்க நெருக்கத்தில் அவனின் உடல் வெக்கையில் தகித்து, அவன் மூச்சின் நெருப்பைச் சகிக்கமுடியாமல் திணறி, அவனின் வியர்வை மணத்தை முகர முடியாமல் தவித்து, அவனின் ஒரு நிமிட வெறி அடங்குவதற்குள் ஆறு கடந்து வந்ததுபோன்ற சலிப்பை அடைந்து … ஓ, அந்த வேதனைதான் என்ன..! அப்போதெல்லாம் வெறும் கட்டளையை நிறைவேறுகின்ற பொம்மையைப்போல் இயங்கிய தன் மனம், இப்போது மாத்திரம் ஏனோ தெறித்துகொண்டு திரும்பிவிட முயல்வதும் ஓய்வதும் மீண்டும் போராடுவதுமாக அலைக்கழிவதை உணர்ந்தாள்.

நான் இன்றைக்கென்று இப்படி ஆளாகின்றேனே, இதுவரை எத்தனையோபேரைப் பின்தொடர்ந்திருப்பேன். அப்படி வந்தவர்களில் இவனும் ஒருவன்தானே! என்றாலும் இவன் நடந்துகொள்ளும் முறையில் வழக்கத்துக்கு மாறாக ஏதோ ஒன்று. அந்தக் காரியத்தை அவசரமாகச் செய்ய ஆசைப்படாதவன்போல, என் உணர்ச்சிக்கு மதிப்பளிப்பதைப்போல, தன் விருப்பத்தைச் சொல்லத் தயங்குவதுபோல, செயல்களால் அதன் ஆரம்பத்தைப் புரியவைக்கத் தெரியாததுபோல ஒரு புதுமை தோன்றவில்லையா? இன்றைக்கு இது ஒரு மாற்றந்தான். அனாலும் நோக்கம் எதுவோ அது முடிவில் நிறைவேறியே தீரவேண்டுமென்ற எண்ணம் இருப்பதில் இவனும் பழையவன்தானே! என்றாலும் முடிவுக்காக அவசரப்படாதவன் போலவும் இருக்கிறான். இன்றுவரை எவனுக்குமே விட்டுக்கொடுக்காமல் அவனது அவசரத்தனத்தையும் பயத்தையும் சாதகமாக்கிச் சமாளித்துப் பழக்கப்பட்ட எனக்கு இவன் ஒரு சவாலாக இருந்துவிடுவானோ?

“கொஞ்ச நேரம் இந்தக் கடற்கரையோரம் நின்றுவிட்டுப் போகலாமா?” இவன் நடப்பதை நிறுத்தித் திரும்பித் தலை குனிந்து அவளை நோக்கி அமைதியாகக் கேட்டான்.

“நேரமாயிட்டுதே! கொஞ்சம் நிற்கலாம்தான். எம்மளவு வேளைக்குத் திரும்புறோமோ அம்மளவுக்கு நல்லம்தானே!” என்று இவன் முகத்தைத் தன் விழிகளை மாத்திரம் மேலுயர்த்திப் பார்த்தபடி சொன்னாள்.

நாட்டுப்புறச் சிங்களப் பெண்களுக்கேயுரிய மிகவும் அகன்ற கண்கள் அவளுக்கு. அவற்றை இன்னும் சிறிது உற்று நோக்கினால் விழிகள் பிதுங்குவதுபோலவும் தோன்றும். பரந்த மேடான நெற்றி. தசைப்பிடிப்பான கன்னங்கள். இடையை இறுக்கியபடி சிவப்பும் பச்சையுமான பூக்கள் சிதறிப்போய்க்கிடக்கும் வெண்ணிற பிளவுசுக்குப் பொருத்தமான அரைப்பாவாடை. மற்றும் வழக்கம்போல் ஒரு பதினாறு வயதுப் பெண்ணுக்குரிய லட்சணங்கள். என்றாலும் அந்த ஸ்டேசன் ஒளியிலும் அவள் சாதாரண ஒரு அழகியாகத்தான் தோன்றினாள்.

இருவரும் ரயில்வே தண்டவாளத்தின் ஓரமாகச் சிறிது தூரம் நடந்தபிறகு அதைக் கடந்து கடற்கரையோரமாய் மணற்பரப்பில் இறங்கினார்கள். கடக்கும்போது அவளுடைய கையை மெல்ல இவன் பற்றினான்.

“எனக்கு முன்பெல்லாம் நல்ல பழக்கம். கோச்சி பக்கத்தே வர்றபோதுகூடப் பயமில்லாமல் கடப்பேன்.” என்று அவள் கூறினாளாயினும் துணையை விரும்புவதைத் தெரிவிப்பதுபோல் அவளுடைய பிடியும் சிறிது இறுகியது.

“நீ பயப்படாதவள்தானே, எனக்குத்தான் அரம்பத்திலே ரொம்பப் பயமாய் இருந்தது. அப்புறம் இந்தக் கையைப் பிடிச்சதும் பயம் எல்லாம் தெளிஞ்சிட்டுது. இப்பவும் என்னவோ விட மனம் வரேல்லை. இப்பிடியே இருக்கலாம்போலத் தோணுது. இம்மளவுக்கு நீ மிச்சம் நல்ல பெண்ணாய் இருக்கிறாயே! இனிமே பொல்லாதவளாக ஆகமாட்டாயே?”

பதிலுக்கு அவள் இவன் கையை இன்னும் இறுகப் பற்றினாள். அப்படிச் சொல்லக்கூடிய அளவுக்குத் தான் ‘பொல்லாதவளாக’ ஆகமாட்டாள் எனக்கூறுவதுபோல் இருந்தது அது. இவன் தன் கைகளால் அவளின் இடையை வளைத்துக் கற்பாறைகளினூடே ஓடிய வழியாக அவளை நடத்திவந்தான். இருவரும் கடலலைகளை நோக்கியபடி சிறிது நேரம் நின்றார்கள்.

“இங்கேயே ஒரு கல்லில் இருப்போமா?”

“இருப்போம், நான்தான் சொன்னேனே! வேளைக்குத் திரும்பிவிடவேணும் என்று. அங்கே அம்மா காத்திருப்பாள்.” அவளுடைய மெல்லிய சிரிப்பிலே இவனும் கலந்துகொண்டான்.

இருவரும் ஒரு கல்லின் தட்டையான மேற்பரப்பில் அருகருகாய் அமர்ந்தனர். அவளின் இடையில் பதித்திருந்த தன் கையை விட்டுவிட்டால் அவள் கல்லிலிருந்து விழுந்துவிடலாம் என்று எண்ணியவன்போல் தான் நகர்ந்து அவளுக்கு இன்னும் இடமளித்தான். அவளோ, இவனோடு இன்னும் நெருக்கமாய் அமர்ந்து இவன் விழுந்துவிடலாமென்று தான் எண்ணுவதைத் தன் கையின் அணைப்பினால் பிரதிபலித்தாள்.

“எனக்கு நல்லாய்த் தெரியும் உன்னுடைய அம்மா எங்கேயும் போயிடமாட்டாள். நீ போய்ச் சேர்றவரை அவள் காத்திருக்கத்தானே வேண்டும்.”

“இல்லை, அவள் வீடுக்குப் போய்விடுவாள்.”

“அப்படீன்ன, நீ உண்மையிலே தனியாத்தான் வீட்டுக்குப் போகணுமா?”

“இல்லையில்லை, எனக்கு இப்போ ஒரு துணை இருக்கு.”

இவனுக்குப் பதில் தோன்றவில்லை.

“ஒன்று கேட்கட்டுமா?” அவளின் கன்னத்தைத் தொட்டு முகத்தைத் தன்பக்கம் உயர்த்தினான். “நீ வர்றபோது எதையோ மறந்திடவேணாம் என்று உன் அம்மா ஞாபகப்படுத்தினாளே!”

“ஓ, அதுவா? நான் ‘பத்திரமாய்த்’ திரும்பவேணும் என்ற கவலை அவளுக்கு. அதைத்தான் எதையேனும் சொல்லி ஞாபகப்படுத்துவாள்.”

“நீ தொலைந்து போகக்கூடியவள்போல் தெரியல்லையே!”

“இல்லை, இல்லை, நான் என்னைத் தொலைத்துவிடுவேன் போலேயிருக்கு… அப்படித் தொலைந்துபோனாலும் பாதகமில்லைப்போலேயும் இருக்கு.” அவள் தாபத்தோடு அவனை நோக்கினாள். “உங்களிடம் நான்… எனக்குச் சொல்லவே தெரியலே..” அவள் மூர்க்கத்தோடு அவனை அணைத்தாள். “இப்படி அமைதியா சந்தோசமா ஒரு நிமிஷம் வாழ்ந்ததாக எனக்கு ஞாபகமில்லை. அப்படி வாழ்றதுக்கு எவரும் என்னை விட்டுவைக்கவும் இல்லே. என்னைப் பார்த்தா நீங்களே என்னைத் தப்பாப் புரிஞ்சிடுவீங்கபோலப் பயமாயும் இருக்கு. ஐயோ நீங்க அப்படிப் புரிஞ்சிக்கக்கூடாது. நான் சந்திச்ச ஆண்களெல்லாம் மிருக ஜாதிகள். பெண்ணுடைய உணர்ச்சிகளை மதிக்கத் தெரியாத பிசாசுகள்! நீங்கள் மாத்திரம் அப்படி இல்லையேன்னு நினைக்கிறப்போ எம்மளவு சந்தோசப்படுறேன் தெரியுமா?” அவளின் இதழ்களை மேலும் அசையவிடாமல் இவனின் விரல்கள் தடுத்தன.

அசைவற்று மௌன நிலையில் இருவரும் எதையோ திடீரெனப் புரிந்துகொண்டவர்கள்போல் தோன்றினர்.

சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தாய் தன் காதில் ஓதுகின்ற மந்திரத்தை அப்போது அவள் நினைத்துக்கொண்டாள். “பிள்ளை, இதையெல்லாம் நான் உனக்குத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கூடாது. நீயாகவே விளங்கிக்கொள்ளவேணும்.”

“அதைத்தான் எத்தனையோ முறை சொல்லிட்டியே அம்மா.”

“என்மேலே கோபிக்காதே, பிள்ளை. நான் என்னத்தைச் சொல்வேன். என்றாலும் பெத்த மனம் பொறுத்துக்கொள்ளுறதா? இன்னைக்கில்லாவிட்டாலும் நாளைக்கு அப்படி ஏதேனும் பிசகாக நடந்துவிட்டா வீணான பிரச்சனையல்லவோ வந்திடும். அதுதான் எப்பவும் உன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் தெரியவேணுமென்று திரும்பத் திரும்பச் சொல்றேன்.”

மகள் பேசாமல் இருப்பாள்.

“எங்களை இப்படித் தேடி வர்றவங்க ஒரு சதத்துக்கேனும் பொறுமை இல்லாதவங்க. நீ புத்திசாலித்தனமா நடந்துவந்தா தொந்தரவு இல்லாமே தப்பிக்கொள்ளலாம். நான் சொல்றது விளங்குதுதானே!”

இதற்கும் அவள் மௌனமாக இருப்பாள்.

“பிள்ளை, இப்படி எப்பவும் ‘உம்’மென்னு முகத்தை நீட்டிக்கொண்டு இருக்காதேடி. எப்பவும் முகம் சிரிச்சபடி இருக்கவேணும். மருந்தாலே செய்யமுடியாத மாயத்தைச் சிரிப்பாலே செய்யலாமடி. எம்மளவு காலத்துக்குத்தான் இப்படி நான் உன்னைத் தொந்தரவு படுத்துவேன். எப்போ ஒரு நாளைக்கு எங்களுக்கும் வழி தெரியாமலா போயிடும்?”

“ஏனம்மா இப்போ மாத்திரம் வழி தெரியாமலா இருக்கு? எப்பவும் இந்த இருட்டிலேயே போய்க்கொண்டிருந்தா எப்படித்தான் எங்களுக்கு வழி தெரியப்போறது?”

“ஒரு நாளைக்கு விடியத்தானே வேணும்!”

“எத்தனையோமுறை விடியிறது. உனக்குத்தான் விடியிறதைக் காண ஆசை இல்லியே, அம்மா!”

“என்னமோ, எங்க நிலைவரத்தை நினைச்சு இப்படிச் சொன்னேன்.” தாய் இன்னொரு பக்கம் திரும்பிவிடுவாள். பகல்கள் மௌனத்தில் கரையும்.

தன் தாயோடு பேசுவதை இப்போது நினைத்துக்கொண்டபோது தான் எவ்வளவு பலஜீனமானவள் என்பது தெளிவானபோதிலும் ஒரு பெண் என்ற முறையில் தனக்குரிமையான ஒரு அனுபவத்தை நுகர விடாமல் பலாத்காரமாக இன்னொருவர் பிடுங்குவதை வன்மையாக எதிர்க்கவேண்டுமென்ற உணர்வு அவளுள் மேலோங்கியது. தாய் எதை வேண்டாம், வேண்டாம் என்று பயந்து நாளெல்லாம் மறுதலிப்பாளோ அந்த ஆழ்ந்த இரகசியத்தின் யதார்த்தமானதும் பூரணமானதுமான இனிமையை இதோ உணரவேண்டுமென்ற வெறி தன் உடலை நடுங்கவைத்துக் கிளர்ந்தெழுவதை அவள் படிப்படியாக உணர்ந்தாள்.

அவளின் அணைப்பு மேலும் பன்மடங்காய் இறுகியது. அவள் வெகுநாளாய் எதிர்பார்த்த அந்த இனிமை ஒரு மனிதனிடமிருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உருவானது அது.

அன்றைய இரவு மட்டும் அவள் என்ன அழகாக நடந்து வீட்டுக்கு வந்தாள்.

கையில் பிடித்த போத்தல் விளக்கின் ஒளியில் தன் மகளின் முகத்தைக் கூர்ந்து நோக்கினாள் தாய்.

“ஐயோ! இவள் ஏன் இன்னைக்குச் சிரித்தபடி வர்றாள்?”

- இச்சிறுகதை வெளிவந்த இதழ்: மல்லிகை, 1972 

தொடர்புடைய சிறுகதைகள்
அம்மா வந்து எங்கள் வீட்டு வாசல்கதவைத் தட்டியபோது காலை ஏழு மணியாகி வானம் சிலுசிலுவென வெளுத்துவிட்டது. வாசலில் மின்சாரமணி அடிக்கப் பொத்தான் இருந்தபோதிலும் அம்மா அதில் விரலை வைப்பதில்லை. வீட்டுக்காரரைக் கூப்பிடவேண்டுமென்றால் கதவைத் தட்டிக் கூப்பிடுவதுதான் முறையானது என்ற கோட்பாட்டில் அம்மா ...
மேலும் கதையை படிக்க...
ஆரது கதவடியிலை நிக்கிறது? சாந்தி இல்லம் நிர்வாகி மரகதம் அம்மா என்றவர் நீங்களா? நான் தான் மரகதம், நீங்கள் ஆர், என்ன விஷயமா வந்தியள்? உங்களைக் காணவேண்டுமென்று வந்தேன். பொறுங்கோ, நாங்கள் இப்ப கை முட்ட அலுவலாய் இருக்கிறம். காலமை வெள்ளெனச் சந்திக்க வழக்கத்திலை நாங்கள் ஒருதருக்கும் ...
மேலும் கதையை படிக்க...
“டேய் முத்தவன், பின்னேரம் பள்ளிக்கூடத்தாலை வரக்கை சந்தைக்குப் போய் ரண்டு சாமான் வாங்கிக்கொண்டு வரவேணும்.” இதைக் கேட்டுக்கொண்டிருந்த அப்புவுக்கு வலு சந்தோசம். அம்மா இன்றைக்கும் அண்ணாவை வேலை வாங்கப்போகிறா. “ஏனம்மா, உவன் சொத்தி வாயனுக்கு என்னவாம், பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்திலைதானே சந்தை. பின்னேரம் வீட்டை ...
மேலும் கதையை படிக்க...
செம்பருத்தி
சில நேரங்களில் சில கடவுள்கள்
அம்மாவின் அடுக்குப்பெட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)