கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 19, 2015
பார்வையிட்டோர்: 17,443 
 

“பிடிமாடாப் போச்சேடா தவுடா!” – சொல்லிக்கொண்டே ஓடியதில் மூச்சு முட்டியது பாண்டிக்கு. கையில் இருக்கும் பிடிகயிற்றைச் சுற்றிக்கொண்டே சற்று நின்று மூச்சுவாங்கிய பாண்டியை, பரிதாபமாகப் பார்த்தான் தவுடன்.

”விடப்பா, நிண்டு விளையாடுச்சு. நல்லவேள, குத்தித் தூக்கத் தெரிஞ்சிச்சு அந்தப் பாளமேட்டுக்காரனை. எல்லக் கவுறு வந்ததும் தாவிப் பம்மிப் படுத்துட்டான் தாயளி. இல்லேண்டா அவென் கொடலு கொம்புல தொங்கிருக்கும்!”

அதை ஆமோதிப்பது போல பார்த்துக்கொண்டிருந்தான் பாண்டி. கிட்டத்தட்ட ஆறேழு கிலோமீட்டர் ஓடிய களைப்பு, அவர்களின் முகங்களிலும் இடுப்புகளிலும் தெரிந்தன. கையை மாற்றி மாற்றி இடுப்பைப் பிடித்தவாறே அங்கிருந்த குத்துக்கல்லில் அமர்ந்தார்கள்.

pidi1

ஜல்லிக்கட்டு மாடு வாடிவாசலில் இருந்து தாவுவதும், அதை வீரர்கள் பிடிப்பதும், பிடிக்க முயல்வதும் மட்டுமே பார்வையாளர்களுக்கு வெளியில் தெரியும் காட்சிகள். மாடு களத்தைவிட்டு ஓடுவதற்குள் பிடித்துக்கொண்டு போய்விட வேண்டும். மிரளும் மாடுகள் ஓட்டம் எடுத்தால், அதன் பிறகு அதைத் தேடிப் போவது, ஒரு நெடும் பயண அனுபவம்.

பாண்டியும் தவுடனும் மதுரை டவுன்ஹால் ரோடில் இருக்கும் எலெக்ட்ரிகல்ஸ் ஹோல்சேல் கடையில் வேலைக்குச் சேர்ந்ததே, சம்பளப் பணத்தில் மாட்டைப் பராமரிக்கத்தான்.

அதை உணர்ந்த பாண்டியின் அப்பா பெரியசாமி, ”நாங்கதான் மாட்டோட மல்லுக்கட்டுனோம்னா… நீங்களுமாடா?” என்ற சம்பிரதாயக் கேள்வியை முடித்துக்கொண்டு, தம் காலத்தில் நிகழ்ந்த ஜல்லிக்கட்டு சம்பந்தப்பட்ட சாகசங்களை விளக்க ஆரம்பித்துவிடுவார்.

”இப்பல்லாம் என்னத்தடா ஜல்லிக்கட்டு விடுறீங்க? போலீஸுங்குறான், பந்தோபஸ்துங்குறான். ஜல்லிக்கட்டுனாலே பறக்குற அந்தப் புழுதி மண்ணுதான். ஆனா இப்ப, மெத்து மெத்துனு தேங்கா நாரைப் போட்டு வெக்கிறான். மெத்தையில விழறதுக்கு இது என்ன மைனர் விளையாட்டா? மாடுன்னா குத்தாம பூனை மாதிரி காலையா நக்கும்? போங்கடா… போங்கடா பொசகெட்டப் பயலுகளா! அப்பல்லாம் இந்த மாதிரி கம்பிவேலி, மேட சொகுசு எதுவும் இருக்காது. வாடியில இருந்து தவ்வுற காள, எங்குட்டுனாலும் பாயும். காயப்படுற பய பூராப் பேரும் வேடிக்கை பார்க்க வந்தவனாத்தான் இருக்கும்!

வேடிக்கை பார்க்க வந்தேல்ல, மாட்டத்தான பாக்கணும். அங்க ஒசக்க மச்சு மேல இருக்குற பொம்பளப் புள்ளைகளைப் பார்த்து கோட்டிங் குடுத்தா? அப்ப குத்து வாங்கித்தான ஆகணும்?’

பேச்சுவாக்கில் போட்ட வெற்றிலையைக் குதப்பி எச்சில் உமிழ்ந்து நாக்கால் வாய்க்குள் சுத்தப்படுத்திக்கொள்வார். வேலைக்குச் சென்று திரும்பியவர்கள், கடைக்குப் போய் வந்தவர்கள் என அனைவரும் அந்த முக்கில் ஜமா சேர்ந்து பெரியசாமியின் பேச்சைக் கேட்க சுற்றிலும் அமர்ந்துவிடுவார்கள்.

”எதைச் செஞ்சாலும் கண்ணும் கருத்தும் அதுலயே நிலைச்சு நிக்கணும்டா. அப்பிடி செஞ்சுட்டா, அந்தச் செய்கையில நீதான் எட்டூருக்கும் ராஜா!” – சொல்லிக்கொண்டே தன் சட்டையைத் தூக்கி முதுகுப் பக்கமாகக் காட்டுவார். 500-வது தடவையாக அந்தத் தழும்பை மீண்டும் பார்ப்பார்கள். பார்த்து முடித்ததும் அதன் இடஞ்சுட்டிப் பொருள் விளக்கத்தைக் கேட்கத் தயாராவார்கள்.

”அலங்கை ஜல்லிக்கட்டுண்டுதான் நெனப்பு! ‘திருச்சி கொக்கிக் கொம்பு’னு மைக்ல சொல்லிட்டாய்ங்கனா, ஒரு குஞ்சு குளுவான் அங்க நிக்காது. பிடிவீரனெல்லாம் பத்தடி தள்ளி ஓடி, பம்மி உக்காந்துருவானுவ. நானும் எல்லா வருசமும் அப்பிடித்தேன். ஆனா, அந்த வருசம் கூட்டத்துல மொத மொதோ இவளைப் பாத்ததும் ஜிவ்வுண்டு ஒரு இது. நான் கொக்கிக் கொம்பு பேரக் கேட்டதும் கூட்டத்துக்குள்ள பாஞ்சதைப் பார்த்து, ‘ஹுக்கும்’னு தாவாங்கட்டையைத் தோள்ள அடிச்சுத் திரும்பிக்கிட்டா. ‘இம்புட்டு நேரம் தொடையைத் தட்டி இத்துப்போன ஈத்தர மாடுகளைப் பிடிச்ச பயதானா நீயும்’ன்ற மாதிரி இருந்துச்சு. ஆனது ஆகட்டும்டானு களத்துல குதிச்சுப்புட்டேன்!”

பாண்டிக்கு தன் தந்தையின் பராக்கிரமும், அதன்பேரில் தன் தாய்க்கும் தந்தைக்கும் இடையில் முகிழ்ந்த காதலையும் கேட்பதில் ஓர் அலாதி சுகம். அவர் அடுத்து சொல்லப்போவது என்ன என்பதை அவர்கள் ஆயிரம் முறை கேட்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர் சொல்லும் அந்தச் சுவாரஸ்யத்துக்காக அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். பாண்டிக்கு, கூடுதலாகக் கொஞ்சம் பெருமிதம்.

”என்னடா சொல்லிக்கிட்டு இருந்தேன்? ஆங்… குதிச்சேனா இல்லியா? அதுவரைக்கும் இவங்க ஆத்தாளைப் பார்த்துக்கிட்டு இருந்த கண்ணுல இப்ப கொக்கிக் காள மட்டுந்தான்!

ஹும்ம்… கொக்கிக் காள வாடிவாசல விட்டு வர்றதே அம்புட்டுத் தெனாவெட்டா வரும்டா. நின்னு நிதானமா அழகர் தேரு கணக்கா சுத்திமுத்திப் பார்க்கும். ‘எவன்டா இங்க பிடிவீரன்? வாடா!’ங்குற மாதிரி நிக்கும். குனிஞ்சு மூச்சுவிடுமா இல்லியா… அந்தச் சூட்டுல கீழ கெடக்குற தூசு மண்ணு புயல்கணக்கா எந்திருக்கும். அதைப் பாத்தே ஒண்ணுக்கு அடிச்சுருவானுங்க!

அம்பாரமா நிக்கிற மாட்டு முன்னால நான் நடுங்கிட்டே நிக்கிறேன். ஓடுற காளயை அடக்கிப்புடலாம்டா. சிமிழப் புடுச்சி எல்லக் கயிறு வரைக்கும் தொங்கிட்டு அது போர வெரசுலயே ஓடி படக்குனு விட்டு ஒதுங்குனா பிடிமாடு ஆகிரும். ஆனா, நிக்கிற மாட்ட என்ன பண்ணுவ?”

மிச்சம் இருந்த எச்சிலையும் துப்புரவாகத் துப்பிவிட்டு, ”யாருக்காக என்ன பண்ணுனாலும், பண்ணும்போது யாருக்காகப் பண்றோம்ற நெனப்பு கூடாதுடா பாண்டி. காரியத்தைப் பண்ணி முடிச்சதும், ‘இந்தா உனக்காகத்தான் பண்ணேன் பாரு’னு புரியவைக்கணும்!”

கூட்டம், ‘அட..!’ என்பதுபோல், அவர் கருத்தைக் கேட்டுக்கொண்டிருக்க,

”ஹுப்புனு ஒரு சத்தம் விட்டு நொட்டாங்கை பக்கமா அதை ஒரு தட்டு தட்டுனனோ இல்லியோ… கொம்பச் சொழட்டித் திரும்புச்சு. சட்டுனு வலது பக்கம் போய், திமிலப் பிடிச்சு அது மேலயே அட்ட கணக்கா ஒட்டிக்கிட்டேன். உதறுது… உறுமுது… ஆனா நான் பிடிய விடல. படுபாவிங்க… வெளக்கெண்ணெயத் தடவி இருந்தாய்ங்க. ஆனாலும் சதையோட சேர்த்து பிடிச்சுத் தொங்குனேன். அத்தாம் மொக்க உடம்ப உதறிக் குத்த குத்த வருது. உடும்புகூட அப்பிடிப் பிடிக்காதுப்பா. அந்தப் பிடி பிடிச்சு மூணு சுத்து சுத்தி எல்லக் கயிறத் தாண்டினதும், நேக்கா கூட்டத்துக்குள்ள தாவினேன் பாரு..!”

அந்தச் சூழலுக்குள் மீண்டும் நாயகனாகத் தன்னைப் பாவித்துக்கொண்டு புகுந்துவிடுவார்.

”தாவி விழுந்தவன, கூட்டம் அள்ளுது; தூக்குது; ‘வீரென்டா’னு கத்துது. அப்ப பார்த்தேன் பாரு, இவங்க ஆத்தாள ஒரு பார்வை… ஆகிப்போச்சப்பா அது ரெண்டு மாமாங்கம்!”- சொல்லிக்கொண்டே குத்துக்கம்பில் இருந்து தன் சட்டையை எடுத்தவரை, எல்லோரும் கேள்வியாகப் பார்த்தனர்.

அதை உணர்ந்தவராக, தன் தழும்பைத் தடவிப் பார்த்தபடி சட்டையைப் போட்டுக்கொண்டே, ”ஜல்லிக்கட்டுக் காள வளர்க்குறவனுங்களுக்கு உசுரவிட பிடிமாடாப் போகக் கூடாதுங்குற மொரட்டு எண்ணந்தான்டா பெரிசு. கொம்புல தகரத்த செருகுறதும், மாட்டுக்குச் சாராயத்தை ஊத்துறதும் எதுக்குன்ற? எவனும் தொடக் கூடாது, தொட்டான்னா சாகணும்! திருச்சி கொக்கினா எவனும் பக்கத்துலயே போக மாட்டான்ற பேர நான் ஒடச்சனா இல்லியா? மாட்டுக்காரன் மாட்ட வெரட்டி ஓடுற சாக்குல பிடிகயிறக் கொண்டி ஒரு இழுப்பு இழுத்தான்யா எம் மேல. அப்பிடியே நெருப்பை வெச்ச மாதிரி தொலி பிச்சுக்கிட்டு வந்துருச்சு.’

பாவமாக எல்லோரும் அவரைப் பார்க்க, ”ஆனா, அந்த வலிலகூட, மாட்டைப் பிடிச்ச எஞ் சதையவே இந்தப் பிய்யிப் பிச்சுப்புட்டானே, பிடிமாட்ட என்ன பண்ணப்போறானோண்டுதான் நான் நெனச்சேன்!” என முடிப்பார்.

ஓடிய ஓட்டத்தின் களைப்பு தீர்ந்து, பாண்டியும் தவுடனும் மெள்ள எழுந் தார்கள். ”எங்கப்பனுக்கு என்னடா பதில் சொல்லுவேன்?’ – பாண்டியின் குரலில் முதல்முறையாக ஆற்றாமை தொற்றி இருந்தது.

”பசி பொறுக்காதுடா என் சிண்டு. பாவம் எங்க, எவன் வீட்டு வாசல்ல தண்ணிக்கு ஏகாறுதோ?” – தலையில் அடித்துக்கொண்டான்.

அது கருவேலங்காடு. இவர்கள் மேல் முள் கீறல்கள் இருந்தன. சட்டை செய்யாமல் குனிந்து வளைந்து காட்டுக்குள் புகுந்தார்கள். சில மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அதன் நீளமான கயிறுகள் முடியும் இடத்தில் ஒரு சிறுமியும் வயதானவரும் தூக்குச்சட்டியின் முன்னர் அமர்ந்திருந்தார்கள். கஞ்சி வாசம் பசியைக் கிளறிவிட்டது இருவருக்கும்.

pidi2

”பெரிசு… ஜல்லிக்கட்டு காள எதுவும் தெறிச்சு ஓடுச்சா இங்கன?”

”எந்த ஊரப்பா? இங்க ஒண்ணும் தட்டுப்படலயே. சலங்கை கட்டுனீகளா இல்லியா?”

”ஆமாய்யா. சும்மா ஜல்… ஜல்…லுனு மோகினியாட்டம் ஆடும்!”

”அப்ப காத காத்துல வெச்சு வடக்கப் போங்க… பிடிமாடா?”

கோவம் சுரீரென்று வந்தது பாண்டிக்கு ”எதுக்கு?”

”அட கோவிக்காதப்பா… பிடிமாடுண்டா மெரண்டு மருகும். எசமானன லேசுல பார்க்காது. ரோசக்காரக் கழுத!”

பாண்டிக்கு, சிண்டு முதன்முதலில் வீட்டுக்கு வந்த நாளும், அதன் பிறகு ஒவ்வொரு நாள் காலையில் அதன் முகத்தில் விழிப்பதும், படுக்கப் போகும் முன் அதனிடம் பேசிவிட்டுப் படுப்பதும்… என நினைவுகள் அடுக்கடுக்காகப் பிரிந்து வெளிவந்தன.

முதலில் அவன் அப்பாவுக்கு மட்டுமே கட்டுப்பட்ட காளை, கொஞ்சம் கொஞ்சமாக இவன் சொல் கேட்கத் தொடங்கி, அதன் பிறகு இவன் ஒருவனுக்கு மட்டும்தான் அடங்குவதாக வளர்ந்துவிட்டது. தன் தகப்பனுக்கே அடங்காதது குறித்து, இவனுக்கும் பெருமை; அவருக்கும் பெருமை.

நவம்பர் மாதத்தில் இருந்தே ஜனவரி மாத ஜல்லிக்கட்டுக்குத் தயாராகிவிடுவார்கள் அவனும் தவுடனும். இரண்டு, மூன்று முறை குளிப்பாட்டி சூட்டைத் தணிப்பது, செம்மண் மேட்டில் முட்டவிடுவது, ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடமாகக் கட்டிவைப்பது, கொம்பின் மேல் செதிலைச் சுரண்டிச் சுரண்டிக் கூராக்குவது… எனப் பிரத்யேமாக ஆயத்தமாவார்கள்.

அவனுடைய செவலைச் சிண்டை ஒரு முறைகூட யாரும் அணைந்தது இல்லை. நின்று நிதானமாக நடந்து எல்லைக் கயிற்றைத் தாண்டியும் ஒருமுறை வாடியைப் பார்த்துவிட்டு நடக்கும் மாட்டை பெருமிதமும் திமிரும் கலந்து, ‘மாட்டுக்காரருக்குப் பரிசு’ என்ற வார்த்தைகளில் மிதந்துகொண்டே பாண்டியும் தவுடனும் சிண்டைப் பிடித்துக்கொண்டு வருவார்கள். அதுவும் புதுப்பொண்டாட்டி போல் இவனோடு நடந்து வரும். இவனுக்கான பரிசுப் பொருள் பீரோவா, மிக்ஸியா எனப் பார்க்க, தெருவே வெளியில் நிற்கும்.

இந்த முறை ஒருவன் சரியாக அணைந்த தும் மற்றவர்கள் அதன் மீது தொங்கியதும் சற்று மிரண்டு ஓட்டம் எடுத்துவிட்டது. அவர் சொன்னதுபோல் ரோசமும் வெட்கமும்கூடக் காரணமாக இருக்கலாம்.

பாண்டி, செல்போனை மெள்ள எடுத்துப் பார்த்தான். சார்ஜ், விளிம்பில் இருந்தது. நான்கைந்து மிஸ்டுகால்கள் வீட்டில் இருந்து.

தவுடன் தயங்கியவாறே சொன்னான், ”பாண்டி வீட்ல சொல்லுய்யா. இரும்ப தண்ணில போட்டா காணமப்போனது கெடச்சுரும்னு ஆத்தா சொல்லும். சாவிக்கொத்த போடச் சொல்லு.”

‘வேண்டாம்’ என்பதுபோல் தலையாட்டிய பாண்டி, தொடர்ந்து ஓடத் தொடங்கினான். மூச்சுவாங்கப் பின்தொடர்ந்தான் தவுடன். எங்கெங்கோ ஓடி தொட்டியபட்டியைத் தாண்டி ஏதோ ஓர் ஊர் எல்லையில் சோர்ந்து அமர்ந்தார்கள் இருவரும். கண்கள் செருகத் தொடங்கின.

”பாவம்டா மாடு. பசி தாங்காதுடா தவுடா. மாடு கெடச்சா இனி ஜல்லிக்கட்டுக்கே விட மாட்டேன்டா. அழகருக்கு முடி எறக்குறேன்டா” எனச் சொல்லிக்கொண்டே குத்திட்டு அமர்ந்தவன் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினான்.

”யாருப்பா அது… இளந்தாரி இப்பிடியா அழுகுறது?” – குரல் கேட்டதும் பாண்டியும் தவுடனும் மெள்ள எழுந்தார்கள். தோளில் கிடந்த கைலியை எடுத்து முகத்தை அழுந்த துடைத்துவிட்டு டவுசரின் மேலாகக் கைலியைக் கட்டிக்கொண்டே குரல் வந்த திசை நோக்கிப் பார்த்தான் பாண்டி.

பேரிளம் பெண் ஒருத்தி, தன் முழங்கை வரை தவிட்டுத் திட்டுடன் அவர்களை நோக்கி வந்தாள். அப்போதுதான் மாட்டுக்குத் தவிட்டுத் தண்ணீரைக் கலக்கி வைத்திருக்கிறாள் என்பது அவள் அருகில் வந்ததும் உணர்ந்தார்கள்.

”புதுசா இருக்கீங்ளே… யாருய்யா? மாடு கீடு வாங்க வந்தீங்களா? கையில பிடி கவுறு? மாட்ட வித்தாலும் பிடி கயித்த குடுக்குறது இல்ல எவனும். கேட்டா அதுக்கு ஆயிரம் காரணம் சொல்லுவானுக. ஆனா, பெத்த பொட்டப்புள்ளய எந்தப் பிடியும் இல்லாம கண்ணாலம் கட்டி ஓட்டிவிட்ருவானுக.’

”இல்லத்தா, மஞ்சுருட்டு மாடு மெரண்டு ஓடி வந்துருச்சு. நேத்துலருந்து தேடிக்கிட்டு கெடக்கோம்!”

”ஒரு வருசம் கழிச்செல்லாம் மாடு திரும்பி வந்த கதை இருக்கு. வீட்டுக்குப் போயிப் பாருப்பா. தான் நின்ன கொட்டய எந்த மாடும் மறக்காது; மறக்குறதுக்கு அது என்ன மனுசப்பயலா?”

பலவீனமாக ஆமோதித்தபடி, தளர்ந்து நடக்கத் தொடங்கியவர்களை நிறுத்தினாள்.

”வவுத்துக்கு ஏதாச்சும் சாப்ட்டீங்களா?”

சில நேரங்களில் ஆதூரமாகக் கேட்கப்படும் சில கேள்விகளின் முன், நாம் திக்பிரமை பிடித்தவர்போல் நிற்போம். அப்போது அப்படி நின்றார்கள் பாண்டியும் தவுடனும். அவர்களின் கண்களில் இருந்து நிலையை உணர்ந்து கொண்டவளாக வீட்டுக்கு அழைத்துப் போனாள்.

”பார்த்து வாங்கப்பா. காக்கா முள்ளுக கெடக்கும். கூட்டச் சொன்னா இவ டி.வி. பெட்டி முன்னாடி ஒக்காந்துருவா!”

சாணியைக்கொண்டு மெழுகி மொசைக் தரை போல பளபளவென ஆக்கப்பட்ட தளத்தில் அமர்ந்தார்கள் இருவரும். தண்ணென்று இதமாக இருந்தது. அதுவரை ஓடிய களைப்பு உட்கார்ந்ததும் அப்படிப் பன்மடங்கு பெரிதாகி இடுப்பில் விண்விண் எனத் தெறித்ததுபோல் இருந்திருக்க வேண்டும். முகத்தைச் சுழித்துக்கொண்டு அமர்ந்திருந்தார்கள் இருவரும்.

தவுடன் சைகையால் பாண்டியை கிழக்குத் திசை நோக்கிப் பார்க்கச் சொன்னான். பார்த்தான். நெருஞ்சிப் பூக்களின் மீது அஸ்தமன வெயில் படரும் பொன் நிற வசீகரத்துடன் டி.வி. முன் அமர்ந்திருந்தாள் அந்தப் பெண். நேர்த்தியான பருத்தியின் வெண்மையில் சுடிதார். அந்த வெண்மையும் அவளின் மாநிறக் கருமையும் கலந்து அந்தத் திசையிலேயே அவன் கண்களைக் குடிகொள்ளச் செய்தது.

உள்ளே இருந்து கலயத்தை எடுத்துவந்து வைத்த அந்த அம்மாள், ”வெஞ்சனம் எடுத்துட்டு வாத்தா!” என்று டி.வி. முன் இருந்த பெண்ணை ஏவினாள். வெஞ்சனம் வருவதற்குள் தவுடன் கஞ்சியைக் குடித்திருந்தான். பாண்டி, கஞ்சி கலயத்தைக் கையில் வாங்கிப் பார்த்துக்கொண்டே இருந்தான். அவனுக்கு மாட்டின் ஒட்டிப்போன வயிறு நினைவுக்கு வந்தது. சட்டெனக் கீழே வைத்துவிட்டான்.

”நல்லாத்தானடா இருக்கு?” என்றவாறே அதையும் எடுத்துக் குடித்தான் தவுடன். அந்தப் பெண் இவர்கள் அருகில் மெள்ள நடந்து வந்து வெஞ்சனத் தட்டை வைத்தாள்.

‘தண்ணி மட்டும் குடுங்க’ என்றவனை நோக்கி ஒரு வெற்றுப்பார்வை பார்த்து, சைகையால் தண்ணீர் அங்கே இருப்பதைக் காட்டிவிட்டு விறுவிறுவென நடந்து டி.வி-க்கு அருகில் சென்றாள்.

பசி அடங்கிய திருப்தியில், ”ரொம்ப நன்றித்தா” என்ற தவுடனை நோக்கியவள், ‘இப்பிடித்தான் மாடு, ஜல்லிக்கட்டுனு திரிஞ்சு திரிஞ்சே அழிஞ்சு போனாரு எங்க வூட்டுக்காரரு. வாயில்லா சீவன வதச்சு வதச்சு, இந்தா இந்தப் புள்ளக்கி பொறக்கும்போதே வாயைப் புடுங்கி, ஊமையாப் படைச்சுப்புட்டான் ஆண்டவன்!’

பாண்டி சட்டென்று நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

”கொக்கிக் கொம்பு மாடுண்டா சுத்துப்பத்துல அம்புட்டு பேமஸு. ஆனா, எவனாச்சும் அந்த மாட்ட அணஞ்சுப்புட்டா சண்டைக்குப் போயி மல்லுக்கட்டுனா விடுவாகளாப்பா? தண்ணி வாங்கிக் குடுத்து அசந்த நேரத்துல ஆள சாய்ச்சுப்புட்டானுங்க’ – துக்கமும் விரக்தியும் கலந்து வார்த்தைகள் வெறுமையாக வெளிவந்துகொண்டிருந்தன.

‘கொக்கிக் கொம்பா?’ என்று தவுடன் வாயைப் பிளக்கவும், அவனைச் சைகையால் அமர்த்தினான் பாண்டி.

‘போதும்டா சாமினு தாலி அத்து, பொறந்த சீமைக்கே வந்துட்டேன். நான் நல்லா இருக்கையிலேயே இந்த வாயில்லாப்பூச்சியை யார் கையிலயாவது கட்டிக் குடுத்துப்புடணும்யா.’

தவுடன் நடக்கத் தொடங்கி இருந்தான். பாண்டி அப்படியே நின்றுகொண்டிருந்தான். அவனுடைய மொபைல் ஒலித்தது. நடுங்கிய கரங்களோடு எடுத்தான்.

”ஏலேய் பாண்டி… எங்கடா இருக்க? சிண்டு வீட்டுக்கு வந்து நிக்கிது. ஒடம்பெல்லாம் காயம்டா பாண்டி. இருப்புக்கொள்ளாம ஒன்னத் தேடி கத்துதுடா!”

அம்மா சொல்லச் சொல்ல பாண்டியின் கண்களில் நீர் உகுத்தன. குரல் கம்மச் சொன்னான், ‘விடுத்தா அடுத்த வருசத்துக்குள்ள ஆறிப்போகும்.’

சொல்லிவிட்டு, கண்ணீரைத் துடைத்துக்கொண்டே, ”மாடு கெடச்சுருச்சாம்தா” என்றான் அந்தப் பேரிளம் தாயிடம்.

”நாஞ் சொல்லல… போ ராசா… வாயில்லா சீவன் மேல இம்புட்டுப் பாசம் வெச்சிருக்கியே… நீ நல்லா இருப்ப!”

அப்போது மிடறு விழுங்கி, தயங்கித் தயங்கி அவளிடம் கேட்டான் பாண்டி.

”நான் எலெக்ட்ரிக்ஸ்ல வேல பார்க்குறேன். எங்க ஆத்தா-அப்பனக் கூட்டிட்டு நாளைக்கி வர்றேன். ஒம் பொண்ண எனக்குக் கட்டிக் குடுக்குறியா? என் உசுரா வைச்சுப் பார்த்துக்குறேன்!”

– ஜூன் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *