கலெக்சனை முடித்து ஹோட்டலில் சாப்பிட்டுப் பேருந்து நிலையத்தை அடைந்த போது மதியம் ஒரு மணியாகி விட்டது. மதுரை ரேக்கில் கூட்டம் அதிகமாக இருந்தது. கல்யாண வீட்டில் உணவருந்தி அப்படியே கிளம்பி வந்திருப்பார்கள் போலும். பெண்கள் மத்தியில் கல்யாணச் சாப்பாட்டைப் பற்றிய நிறை குறைகள் அலசப்பட்டன. இன்று முகூர்த்த நாளல்லவா… அது தான் பேருந்துக்கு மக்கள் அலைமோதுகிறார்கள்.
மதுரை செல்லும் பேருந்தில் அமர இடம் இல்லாமல் நிறைய பேர் வெளியே நின்று கொண்டிருந்தார்கள். பேருந்தினுள் அமர்ந்திருக்கும் அனைவரும் மதுரைக்குச் செல்பவர்களாகத் தான் இருப்பார்கள். நான்கு மணி நேரம் நிற்க நம்மால் ஆகாது. அடுத்த பேருந்துக்காக காத்திருக்க வேண்டியது தான்.
அப்போது ஒலிப்பானை அலற விட்டுக் கொண்டே கரூருக்குச் செல்லும் தனியார் பேருந்து வேகமாக வந்து பக்கத்து ரேக்கில் நின்றது. கூட்டம், பேருந்தின் இரு வாயில்களையும் மொய்த்தது. பயணிகளை இறங்க விடாமல் முண்டியடித்து ஏற முயற்சித்தது. நானும் அதில் ஒருவனாக முண்டியடித்து எப்படியோ ஏறி ஜன்னலோர இருக்கையைப் பிடித்துக் கொண்டேன். கரூரில் மதுரைப் பேருந்தைப் பிடித்துக் கொள்ள வேண்டியது தான்.
பேருந்து கிளம்புவதற்கு இன்னும் இருபது நிமிடங்கள் ஆகும் என்றார்கள். தோல் பையை மடியில் வைத்துக் கொண்டேன். கால்களுக்கிடையே வைத்துக் கொள்ளலாம் தான். பணமும் காசோலையும் பாதுகாப்பு வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறதே! மருத்துவ நிறுவனத்தில் ஒப்படைக்கும் வரை நான் தானே பாதுகாவலன்?!
வேலைக்குச் சேர்ந்த புதிதில் இது எனக்கொருப் பெரிய சுமையாக இருந்தது. ஏன்… இப்போது கூட என்னை முறைத்துப் பார்க்கும் சிலரைச் சந்தேகப்பட்டுத் தோல் பையை இன்னும் இறுக்கமாக அழுத்திக் கொள்ளும் மனநிலை இன்றும் நீடிக்கிறது.
ஜன்னல் வழி வெயில் புகுந்து உடலின் ஒரு பக்கத்தைச் சூடேற்றியது. பேருந்தினுள் கணகணவென்று வெப்பம் சூழ்ந்து வியர்வைச் சுரப்பிகளைத் தூண்டி ஆடைகளை ஈரமாக்கியது. கண்ணாடிக் கதவுகளை மூடி வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பி விடலாம் என நினைத்தாலும், அதன் வழி புகும் சிறிதளவு காற்றையும் தடுத்து விட்டால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகி விடும் என்பதால் கதவை மூடவில்லை. பேருந்து பயணங்களில் விதவிதமான மனிதர்களைச் சந்திக்கும் அனுபவங்கள் ஏற்பட்டாலும், இது போன்ற அசவுகரியங்களையும் பொறுத்துத் தானே ஆக வேண்டும்!
அது ஒரு புறம் இருக்கட்டும். இரவு, கணக்கை ஒப்படைக்கும் போது, ’சாந்தினி பார்மா விசயம் என்னவாயிற்று?’ என்று மேனேஜர் கேட்பாரே. அதற்கு என்ன பதில் சொல்வது? சாந்தினியின் உரிமையாளர் இன்றிருக்கும் நிலையில் செட்டில்மெண்ட் செய்து விடுவாரா என்பது சந்தேகமே! ஏகப்பட்ட சிக்கலில் சிக்கி இருக்கிறார். மேனேஜரிடம் இதைக் கூறினால் ஒத்துக் கொள்வாரா? சில சமயங்களில், ’என்ன பொழைப்பு இது’ என்று மனம் வெறுத்துப் போகும் அளவுக்கு இது போன்ற சம்பவங்களும் நடக்கத் தானே செய்கிறது!
சிந்தனைகளைப் பின் தொடர்ந்து கொண்டிருந்த மனம், “ஐயா…” என்ற பலவீனமான குரல் கேட்டுக் கலைந்தது. ஜன்னலுக்கு வெளியே நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவன் கண்கள், இரக்கத்தை வரவழைக்கும் உணர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. கை ஏந்தியிருந்தான். எனக்கு இவனைப் போன்றவர்களை பார்ப்பதற்கே பிடிப்பதில்லை. உடல் பலமுள்ள இவனைப் போன்றவர்களுக்குப் பிச்சையிட்டு நாம் தான் கெடுத்து வைத்திருக்கிறோம். சில நொடிகள் என்னையே பார்த்தபடி நின்றவன், என் மவுனத்தை பார்த்ததும் முணுமுணுத்தபடி அடுத்த ஜன்னலுக்கு நகர்ந்தான்.
அவனைத் தொடர்ந்து வரிசையாக விதவிதமான கோரிக்கைகளுடன் பிச்சைக்காரர்கள் பேருந்துக்குள்ளும் வெளியேயும் கையேந்தி வந்தாலும் என் மனத்தை யாராலும் கரைக்க முடியவில்லை.
இன்னும் எத்தனை பேர் தான் வருவார்கள் என்று பார்க்கலாம். ‘பர்ஸ் தொலைந்து விட்டது. பஸ்சுக்குக் காசில்லை’ என்று கூறிப் பணம் பிடுங்குபவர்களை இன்னும் காணோமே என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, “சார்… சார்… பழநிக்குப் போகணும் சார். பர்ஸைத் தொலச்சுட்டேன். இன்னும் பத்து ரூபா இருந்தா பஸ் டிக்கெட்டுக்குப் போதும் சார்!” என்று ஒரு இளைஞன் வந்து நின்றான். சரியான போதைப்பிரியன் என்று அவன் கண்களே காட்டிக் கொடுத்தது. என் மவுனத்தைப் பார்த்து அவனும் பொறுமையின்றி நகர்ந்தான்.
ஸ்… பேருந்து புறப்பட இன்னும் எத்தனை நிமிடங்கள் இருக்கின்றன? வாட்சைப் பார்த்தேன். இன்னும் பத்து நிமிடங்களைக் கழிக்க வேண்டும். கீழே இறங்கி மாலைப் பத்திரிக்கை வந்திருந்தால் வாங்கிச் செய்திகளை மேயலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, ”ஐயா…!” என்ற மிகப் பலவீனமான போலித்தனமில்லாத நடுங்கும் குரல் மீண்டும் என்னை வெளியே பார்க்க வைத்தது. வழுக்கைத் தலையுடன் காட்டுத்தனமாக வளர்ந்திருந்த தாடியுடன் ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார். நடுங்கும் உடலைத் தாங்கிப் பிடிப்பதற்காக மரக் கம்பை தரையில் ஊன்றியிருந்தார். அவர் வேறு எதுவும் பேசவில்லை. குழி விழுந்த கண்கள் மட்டுமே பேசியது. பசி மயக்கத்திலிருக்கிறார் என்பது புரிந்தது. மனத்தில் இரக்கம் சுரந்தாலும் வழக்கம் போல் பிச்சையிடத் தடை விதிப்பதற்கான காரணத்தைத் தேட ஆரம்பித்தேன். எதுவும் உருப்படியாகச் சிக்கவில்லை. அவர் மவுனமாக அடுத்த ஜன்னலுக்குச் சென்று விட்டார்.
நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். எதற்காக என்று தெரியவில்லை. மற்ற பிச்சைக்காரர்களைப் பார்த்த போது அருவருப்புடன் திரும்பிக் கொண்ட நான், இவரை மட்டும் ஏன் இவ்வளவு நேரம் உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறேன்? அவரிடம் இருந்த ஏதோ ஒன்று என்னை ஈர்க்கிறதா?
அவர் எல்லாப் பிச்சைக்காரர்களையும் போல் அழுக்கடைந்து தான் காணப்பட்டார். அழுக்கான கை வைத்த பனியன் அணிந்திருந்தார். குளித்து எத்தனை நாட்கள் ஆகியிருக்குமோ தெரியவில்லை. அவர் தட்டுத் தடுமாறி நடந்து செல்வதைப் பார்த்தால் குளிப்பதற்கான சக்தி இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்தது. தளர்ந்த நடையில் போலித்தனம் இல்லை. உண்மையிலேயே இயலாமையால் தான் கஷ்டப்படுகிறார். அவருக்குப் பிச்சையிட்டிருக்கலாமோ?
அப்போது தான் கவனித்தேன் . பின்புறத் தலை அமைப்பு, தோள்பட்டை, கழுத்து அமைப்பு எல்லாம் அப்படியே என் தந்தையை நினைவுப்படுத்துகிறது என்பதை! அவர் நடக்கும் தோரணை கூடத் தந்தை சாயலில் இருந்தது. அவரைப் பார்த்ததும் என்னை ஈர்த்த விசயம் இதுவாகத் தான் இருக்கும். உள்மனம் உடனே உணர்ந்து கொண்டாலும், வெளி மனம் அதை ஆராய்ந்து சொல்வதற்குச் சில நிமிடங்கள் ஆகிவிட்டன. மீண்டும் இந்தப் பக்கம் வந்தால் உதவி செய்யலாமா என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது அவர், அடுத்த பேருந்து ஜன்னல்களை பிச்சை – மன்னிக்கவும் – யாசகம் கேட்க ஆரம்பித்திருந்தார். அவர் என் தந்தையைப் போல் இருக்கிறார் என்று உணர்ந்த பிறகு பிச்சை என்ற வார்த்தையை உபயோகிக்க மனம் மறுக்கிறது. பிச்சையும், யாசகமும் ஒரே அர்த்தத்தைக் கொடுத்தாலும் கூட!
இப்போது அவரைச் சற்று தூரத்திலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடைய பக்கவாட்டு உடலமைப்பும் முக அமைப்பும் தெளிவாகத் தெரிந்தன. அவர் முக அமைப்புக் கூட தந்தையின் சாயலை ஒத்திருந்தது. என் தந்தை தான் யாசகம் கேட்டுக் கொண்டிருக்கிறாரோ என்ற எண்ணத்தைத் தோற்றுவித்துப் பதற வைத்தது. அய்யோ… அப்படி ஒரு சூழ்நிலை நான் உயிரோடு இருக்கும் வரை என் தந்தைக்கு வராது. வரவும் விட மாட்டேன். அந்தப் பெரியவரின் உடல்மொழி என் மனத்தில் ஒரு உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்தியது. ஏறத்தாழ தந்தைக்கும் மகனுக்குமான பாசப் பிணைப்பை ஒத்திருந்தது.
இதற்கு மேல் என்னால் பொறுக்க முடியவில்லை. சட்டென்று எழுந்தேன். இருக்கையில் கர்ச்சீப்பைப் போட்டு முன்பதிவு செய்து, அதிலும் திருப்தி அடையாமல் அருகில் அமர்ந்திருந்தவரிடம், “பார்த்துக்குங்க சார். வந்துடறேன்” என்று கூறி விட்டுப் பேருந்திலிருந்து இறங்கினேன். பர்ஸை எடுத்து ஐம்பது ரூபாய் தாளை எடுத்துக் கொண்டே பெரியவரை நெருங்கினேன். அவர் முன்னே போய் நின்றேன். மெதுவாக நடந்து கொண்டிருந்தவர் சட்டென்று நின்று என்னை ஏறிட்டுப் பார்த்தார். அருகில் பார்க்கும் போது என் தந்தையின் சாயலை ஒத்திருந்தாலும்,, சில வித்தியாசங்களைக் காண முடிந்தது.
என்னை குழப்பமான கண்களுடன் பார்த்தார். பசியும் தனிமையும் அவர் உடலைத் தளர வைத்திருக்கும் என்று தோன்றியது. அவர் கண்களில் கடந்தகால இன்பமான வாழ்வைத் தேக்கி வைத்திருப்பது போலவும், இன்றைய துன்ப வாழ்வுச் சூழ்நிலையோடு ஒப்பிட்டுத் தாங்க முடியாத துயரத்தை அனுபவிப்பது போலவும் தோன்றியது. அந்தத் துன்ப நிலைமையின் வீரியத்தை அதற்கு மேல் என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. இன்னும் சில நொடிகள் அவர் முன் நின்றால் அழுது விடுவேனோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. சட்டென்று ஐம்பது ரூபாயை நீட்டினேன். ஆச்சரியமும் திகைப்பும் சந்தோசமும் கலந்த உணர்வை வெளிப்படுத்தியபடி அதை வாங்கிக் கொண்டார். கண்களில் ஒற்றிக் கொண்டே, “மகராசனா இருப்பா!” என்று குரல் நடுங்க வாழ்த்தினார். மனநிறைவுடன் பேருந்தை நோக்கி நடந்தேன். ஏறுவதற்கு முன் திரும்பிப் பார்த்தேன். பெரியவர் உணவு விடுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். மிகத் திருப்தியுடன் இருக்கையில் அமர்ந்தேன். மனம் லேசாகி காற்றில் பறந்தது. இந்த மாதிரி மனநிலையை நான் என்றும் அனுபவித்தது கிடையாது.
இல்லாதவருக்கு ஒரு வேளை உணவிட்டதற்கு இவ்வளவு இதமான உணர்வுகளா?
பேருந்து புறப்பட்டுக் கரூரை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. வெளிப்புறச் சூழ்நிலை இரைச்சலைக் கொடுத்தாலும், உள் மனம் தெளிந்த நீரோடையின் மெல்லோட்டத்தைப் போல் அமைதியாக இருந்தது. இதமான தூக்கத்தைக் கொடுத்தது. நேரம் போனதே தெரியவில்லை. பேருந்து, கரூர் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்து தனக்கான ரேக்கில் நிலை கொள்ளும் போது தான் தூக்கம் கலைந்தது. வேகமாக இறங்கினேன்.
ஈரோட்டிலிருந்து மதுரைக்குச் செல்லும் பேருந்து அப்போது தான் வந்து நின்றிருந்தது. பேருந்தின் இரு வாயில்களிலும் இறங்குபவர்களும் ஏறுபவர்களும் முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள். நானும் தோல் பையை இறுகப் பற்றிக் கொண்டு முண்டியடித்து ஏறிக் காலி இருக்கையை பிடித்து விட்டேன். ’அப்பாடா’ என்று ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். பேருந்து புறப்பட்டது.
“டிக்கெட்… டிக்கெட்!” என்று கேட்டுக் கொண்டே நடத்துனர் வந்தார். மெதுவாக எழுந்து பின்பக்கப் பாகெட்டில் கைவிட்டேன். பர்ஸைக் காணோம். எப்போதும் அங்கே தானே வைப்பேன். சட்டைப் பையில் வைத்திருக்கிறேனா? அதற்குள்ளும் கை விட்டுப் பார்த்தேன். காணோமே! எங்கே போனது? அதற்குள் இருநூறு ரூபாய் தான் இருந்தது. இருந்தாலும் இப்போது டிக்கேட் எடுக்கப் பணம் வேண்டுமே. ஒருவேளை தோல் பையில் வைத்திருக்கிறேனா? ஜிப்பைக் கொஞ்சமாகத் திறந்து சிறிய இடைவெளியில் பார்த்தேன். முழுவதும் திறப்பதற்குப் பயம். அருகில் அமர்ந்திருப்பவர்கள் உள்ளே பணக்கட்டு இருப்பதைப் பார்த்து விட்டால்? அவ்வளவு தான். அதன் பிறகு என் பயணம் நிம்மதியில்லாததாக மாறி விடும்! சூட்கேஸை எடுத்து வராதது எவ்வளவு பெரிய தவறாகிப் போனது!
இப்போது கூடப் பணக்கட்டிலிருந்து ஒரு தாளை உருவி இந்த இக்கட்டிலிருந்து தப்பிக்க முடியும். தோல் பையில் பணம் நிறைய இருப்பதைப் பார்க்கும் எவனாவது ஒருவன் என்னைப் பின் தொடர்ந்து….. எதற்குத் தேவையில்லாத கற்பனை? பர்ஸ் தொலைந்து விட்டது. அடுத்து என்ன செய்யலாம்? நான் தேடுவதைப் பார்த்து அருகில் உள்ள மற்றவர்களுக்கு டிக்கெட் கிழிக்க ஆரம்பித்து விட்டார் நடத்துனர். மீண்டும் திரும்பி வரும் போது என்ன பதில் சொல்வது? பர்ஸ் தொலைந்து விட்டது என்றா? அவ்வளவு தான். பாதி வழியில் இறக்கி விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதுபோக, பேருந்தில் அமர்ந்திருக்கும் அனைவரின் முன்னிலையிலும் அவமானப்பட்டு நிற்க வேண்டியிருக்கும். தனியார் பேருந்தாக இருந்தாலும் பரவாயில்லை. எதையாவது பேசிச் சமாளித்து மதுரை வந்ததும் டிக்கெட்டுக்கானப் பணத்தைக் கொடுத்து விடலாம். இது அரசுப் பேருந்து ஆயிற்றே! சட்டம் பேசுவார். பேசாமல், என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று பணக்கட்டிலிருந்து பணத்தை உருவலாமா?
நான் இப்படி யோசித்தபடித் திணறிக் கொண்டிருப்பதைப் பார்த்து அருகில் அமர்ந்திருந்த பயணி, “பர்ஸைக் காணோமா சார்…?” என்று அக்கறையோடு கேட்டார்.
ஆமாம் என்பதற்கு அடையாளமாகத் தலையாட்டினேன். “கூட்டத்துல முண்டியடிச்சு ஏறும் போது எவனோ அடிச்சுட்டான்னு நினைக்கிறென்” என்றேன்.
“எவ்வளவு சார் வச்சிருந்தீங்க?”
“ஜாஸ்தியில்ல… இருநூறு ரூபாயும் சில்லறையும் தான் இருந்துச்சு”
“போகட்டும் விடுங்க சார்… நான் டிக்கெட் எடுத்துத் தர்றேன்”
நன்றியுடன் தலையசைத்தேன். அவர் பெருந்தன்மையாக மறுத்தாலும் வற்புறுத்தி வங்கிக் கணக்கு எண்ணை வாங்கிக் கொண்டேன் இன்று ஏன் எனக்கு இப்படித் தலைகீழாக நடக்கிறது? நேரம் சரியில்லையா? இல்லை… விழிப்புணர்வு இல்லாமல் மயக்கத்தில் இருக்கிறேனா? பெரியவருக்குப் பண உதவி செய்ததிலிருந்தே ஒரு விதப் போதையில் ஆழ்ந்து விட்டதாகவே தோன்றுகிறது! பிறருக்கு உதவி செய்வதும் ஒரு வகைப் போதை தானே.
பிச்சை எடுப்பவர்களைக் கண்டாலே எனக்குப் பிடிக்காது. இருந்தாலும் வாழ்க்கையில் முதல் முறையாகப் பிச்சையிட்டதற்கானப் பலன் தான் பர்ஸைத் தொலைத்ததா? பிறருக்கு உதவி செய்தால் நன்மை நிகழும் என்பார்கள். இன்று அதற்கு எதிர்பதமாக அல்லவா நடந்திருக்கிறது. அப்படி ஒரேயடியாகவும் குற்றம் சுமத்தி விட முடியாது. நான் சுதாரிப்பில்லாமல் இருந்ததற்கு அந்தப் பெரியவர் என்ன செய்வார் பாவம்! கடைசியில் பர்ஸைத் தொலைத்த பிச்சைக்காரன் நிலைமைக்கு வந்து விட்டேனே! நானும் அந்த அனுபவத்துக்கு உள்ளாக வேண்டும் என்று கடவுள் நினைத்திருப்பார் போலும்!
சேலத்திலிருந்து கரூர் வரை எவ்வளவு அமைதியாகவும், நிம்மதியாகவும் பயணம் செய்தேனோ அதற்கு எதிர்மாறாக இப்போது நிம்மதியில்லாமல் தவித்தேன். பணம் களவு போனது கூட மனத்தைப் பாதிக்கவில்லை. பர்ஸில் அம்மா, அப்பாவின் போட்டோ வைத்திருந்தேன். அது தான் என்னை நிம்மதி இழக்க வைத்தது. அவர்களை எங்கோ வெகு தொலைவில் தொலைத்த உணர்வை ஏற்படுத்தியது. அம்மாவுக்குப் போன் செய்து பேசலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே செல் பாடியது. அட… அம்மாவைப் பற்றி நினைத்ததும் அவர் லைனுக்கு வந்து விட்டாரே என்று ஒரு புறம் ஆச்சர்யப்பட்டாலும் இன்னொரு புறம் கேள்வி எழுந்தது. இவர் ஏன் இந்த நேரத்தில் போன் செய்கிறார்? அப்பாவுக்கு ஏதாவது…
பச்சையை அமுக்கி, “என்னம்மா…” என்றேன், அவசரமாக.
“மகேசு… அப்பாவைக் காணோம்பா…!” என்றார் பதற்றத்துடன் அம்மா.
“என்னம்மா சொல்ற…?!” என்னையும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
”பிரஸ்ஸர் மாத்திரை தீர்ந்துடுச்சுன்னு வாங்கிட்டு வர்றேன்னு கிளம்பிப் போனாரு… ரெண்டு நாளைக்கு முன்னே உங்கிட்ட சொல்லியிருந்தாராமுல்ல? நீ தான் மறந்துட்டியாம்!”
“அதுக்கு… அவர தனியா அனுப்பி வச்சுடுவீங்களாம்மா?”
“இல்லப்பா… அவரு தான் சொல்லச் சொல்லச் கேக்காம புறப்பட்டுப் போயிட்டாரு. நான் அடுப்படியில கொஞ்சம் வேலையா இருந்தேன். கொஞ்சம் பொறுங்க நானும் வர்றேன்னு சொல்லிட்டு வேலைய முடிச்சுட்டு ஹால்ல வந்து பாக்குறேன். அவரைக் காணோம்பா! ஒரு மணி நேரமாச்சு. இன்னும் வரல” அழுகையை அடக்கிக் கொண்டு பேசுகிறார் என்பது நன்றாகத் தெரிந்தது. கோபம் வந்தாலும் கூடவே பரிதாபமும் ஏற்பட்டது.
”அவரத் தேடி நீங்களும் கிளம்பிப் போயிடாதீங்க! வாடிப்பட்டி தாண்டிட்டேன். இன்னும் அரை மணி நேரத்துல வீட்டுக்கு வந்துடுவேன்” என்று அம்மாவைச் சமாதானம் செய்து செல்லை சட்டைப் பைக்குள் வைத்தேன். என்ன ஆகி விட்டது எனக்கு? ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? நேரம் காலம் போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதிருந்தாலும், இப்போது நடக்கும் சம்பவங்கள் அவற்றை நம்பச் சொல்கிறதே!
வீட்டுக்கு முன் அவசரமாக பைக்கை ஸ்டாண்டிட்டு நிறுத்தி உள்ளே வேகமாக நுழைந்தேன். அம்மா கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருக்க, அவரருகில் பக்கத்து வீட்டுப் பெண்கள் இரண்டு பேர் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
”எந்த மெடிக்கலுக்குப் போறேன்னு சொன்னாரும்மா…?”
“நாம வழக்கமா வாங்கற மெடிக்கலுக்குத் தாம்பா” என்ற அம்மாவின் குரலில் கணவரைத் தொலைத்த குற்ற உணர்ச்சி தெரிந்தது. அருகில் அமர்ந்திருந்த பெண், “என் வீட்டுக்காரரும் தேடிப் போயிருக்காருண்ணே.. பதட்டப்படாம போங்க. கிடைச்சுடுவாரு!” என்றாள்.
வழக்கமாக வாங்கும் மெடிக்கல் என்றால் சேகர் கடையாகத் தான் இருக்கும். அவன் செல்லுக்கு டயல் செய்தேன்.
“வரலயேப்பா… வந்தா உக்கார வக்கிறேன்”, என்ற பதில் கிடைத்தது.
அறைக்குள் நுழைந்து பீரோவில் தோல் பையைப் பத்திரப்படுத்தி விட்டுச் சாவியை எடுத்துக் கொண்டேன். வேகமாக வெளியே வந்து பைக்கை ஸ்டார்ட் செய்தேன். “பதட்டப்படாம மெதுவா போயிட்டு வாப்பா!” என்று அந்த சோகத்திலும் அம்மா வழியனுப்பினார்.
எந்த வழியாகச் சென்றிருப்பார் என்று அவதானிக்கச் சில நொடிகள் தேவைப்பட்டன. வீட்டிலிருந்து சேகர் மெடிக்கல்ஸிக்குச் செல்ல மூன்று வழிகள் இருந்தன. ஒன்று – குறுகிய சந்து. சாக்கடைகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடும். அதை அவர் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார். அடுத்து – மெயின் ரோடு. கார்களும் பேருந்துகளும் விரையும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. அதில் சென்றிருக்க வாய்ப்புண்டு. ஏனென்றால் இவ்வளவு நேரம் ஆகியும் எந்தத் தகவலும் கிடைக்காததால்… சந்தேகமாக இருக்கிறது. கார் அல்லது பைக் மோதி அடிபட்டு நினைவிழந்து ஆஸ்பத்திரிக்கு… ஏன் இந்தக் கற்பனை? அப்படியெல்லாம் நடந்திருக்காது என்று சமாதானப்படுத்திக் கொண்டாலும் கற்பனைகள் அதன் போக்கில் விரிய விரியப் பதற்றம் கூடியது.
இன்னொரு வழி இருக்கிறது. அது குடியிருப்புகள் நிறைந்த பகுதி. பகல் நேரத்தில் கூட ஆள் நடமாட்டம் குறைவாகத் தான் இருக்கும். போக்குவரத்து நெரிசலுக்குப் பயந்து அந்த வழியைத் தேர்ந்தெடுத்திருப்பாரா? அதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். முதலில் மெயின் ரோட்டில் விசாரிப்போம்.
“ஒரு பெரியவர் இந்தப் பக்கம் நடந்து போனதைப் பார்த்தீங்களா?” என்று கேட்ட என்னை வினோதமாகப் பார்த்தார்கள். அதையே மாற்றி, “கார் இல்லாட்டி பைக் மோதி எந்தப் பெரியவரையாவது ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனாங்களா? ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி…” வார்த்தைகளை முன் பின்னாகப் போட்டுக் குழப்பிக் கேட்டேன். எப்படிக் கேட்பது என்று மூளை குழம்பியது போல் இருந்தது. நானே ஒரு கற்பனை சம்பவத்தை உருவாக்கிக் கேட்டது, என்னை பாதிக்கத் தான் செய்தது. இருந்தாலும் வேறு வழி? “இல்லை” என்ற பதிலை கேட்கும் போது நிம்மதியாக இருந்தாலும், எங்கே அப்பா?
சேகர் மெடிக்கல்ஸ் வரையில் கேட்டுக் கொண்டே வந்தேன். “அப்பா வந்தாரா?” என்று மீண்டும் மெடிக்கல்ஸில் கேட்டேன். “இல்லயேப்பா…” என்றான் வருத்தத்தோடு சேகர். ஒரு நொடி கூடத் தாமதிக்கவில்லை. குடியிருப்புப் பகுதிக்குப் பைக்கைத் திருப்பினேன். வரிசையாக பெரிய பெரிய வீடுகள் காம்பவுண்டுப் பாதுகாப்புடன் நின்றிருந்தன. ஆள் நடமாட்டமே இல்லை. வெளியே கலவரமே நடந்தாலும் தொலைக்காட்சியில் நேரலையாகச் செய்தி நிலவரத்தைப் பார்த்து, வெளியே சாவகாசமாக எட்டிப் பார்ப்பவர்கள். இவர்களிடம் நான் எப்படிப் போய் விசாரிப்பது?
பெருமூச்சு விட்டபடி முச்சந்தியில் நின்றேன். அப்பாவிடம் முகவரி, போன் நம்பர் எதுவும் இருக்காது. மயக்க நிலைக்குச் சென்றிருந்தால் அவரைக் காப்பாற்றியவர்கள் யாரிடம் தகவல் தெரிவிப்பார்கள். பேசாமல் ஆஸ்பத்திரிகளில் விசாரிக்கலாம் என்று திரும்பிய கணத்தில் – தெரு விளக்கின் கீழ் அது என்ன? மஞ்சள் துண்டு. பகல் தன் இறுதி வெளிச்சத்தையும் இழந்து கொண்டிருந்த அந்த நேரத்திலும் அப்பாவின் மேல் துண்டு அடையாளம் தெரிந்தது.
பைக்கை விட்டு இறங்கித் துண்டை எடுத்தேன். அப்பா உபயோகிக்கும் பொடி நெடி அடித்தது. ‘பொடி போடாதீங்கப்பா… இதயத்துக்கு நல்லதில்ல’ என்று எத்தனை முறை சொல்லியிருப்பேன். அந்தப் பழக்கத்தை மட்டும் மாற்றவே முடியவில்லை. அவருக்கு யார் பொடி வாங்கிக் கொடுப்பது? ஆக, இந்த இடத்தில் தான் மயங்கி விழுந்திருக்கிறார். ஆக்ஸிடெண்ட் ஆவதற்கு வாய்ப்பு இல்லை. எந்தப் புண்ணியவானோ அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பார் என்றே நினைக்கிறேன். வலது புறம் வளைந்து திரும்பிய பாதையை எட்டிப் பார்த்தேன். சற்று தூரத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் தெரிந்தது. பைக்கை ஸ்டார்ட் செய்து ஸ்டாண்ட் அருகில் சென்றேன்.
“சார்… உடம்பு சரியில்லாத பெரியவரை ஆட்டோவில் கூட்டிப் போனது யார் சார்?” என்றேன் தெளிவாக.
“நான் தான் சார்… நீங்க?” ஒரு ஆட்டோ டிரைவர் முன் வந்தார்.
“எந்த ஆஸ்பத்திரிக்கு சார்?”
என் பதற்றத்தைப் பார்த்து வேறு எதுவும் கேட்காமல், “தர்ஷினி கிளினிக்!” என்றவருக்கு “தாங்க்ஸ்” உதிர்த்து விட்டுப் பைக்கை ஸ்டார்ட் செய்தேன்.
தர்ஷினி கிளினிக்!
ரிசப்ஷனில்,
“ஆட்டோவுல அன்கான்சியஸா ஒரு பெரியவரைக் கொண்டு வந்து….”
“ஐ சி யூ!”
ஓட்டமும் நடையுமாக விரைந்தேன்.
ஐ சி யூ அறைக்கு முன் செக்யூரிட்டி நின்றிருந்தான். “சிவானந்தம்ங்கற பேஷண்டைப் பார்க்கணும்!” என்றேன்.
“நீங்க…?”
”அவரோட மகன்!”
செக்யூரிட்டி என்னை உள்ளே அனுப்பலாமா வேண்டாமா என்று யோசித்த நொடியில், இவ்வளவு நேரமும் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த ஒரு ஆணும் பெண்ணும் என்னை நோக்கி வந்தார்கள்.
என் தோளைத் தொட்டு, “சார் நீங்க…?” என்று கேள்வியை முடிக்காமல் இழுத்தார் வந்தவர்.
இவர் எதற்கு இதைக் கேட்கிறார்? ஒரு வேளை இவர் தான் அப்பாவை அட்மிட் செய்திருப்பாரா?
“சிவானந்தத்தோட மகன்”
“ஒரு மணி நேரத்துக்கு முன்னால அன்காசியஸா அட்மிட்டான பெரியவர் தானே?”
“ஆமா. நீங்க?”
“சார் என் பேரு வினோத். நான் தான் உங்கப்பாவ இங்க அட்மிட் செஞ்சேன். இவ்வளவு நேரம் உங்களுக்காகத் தான் சார் காத்திருந்தேன். அட்ரஸ், போன் நம்பர் எதுவும் உங்கப்பா கிட்ட இல்ல! வேற வழியில்லாம நான் தான் அவரோட மகன்னு ஆஸ்பத்திரில கொடுத்திருக்கேன். தப்பில்லையே சார்?” என்று சடசடவென பேசினார்.
நான் அவரை அப்படியே கட்டிக் கொண்டேன். உள்ளுக்குள் உருகிக் கொண்டிருந்தேன். கண்கள் நீரைச் சுரந்தது. எப்பேர்பட்ட மனிதனாயிருக்கிறார். “என்ன சார் நீங்க! அப்பாவோட உயிரையே காப்பாத்தியிருக்கீங்க!” என்று நன்றிப் பெருக்குடன் அவரை விடுவித்து மீண்டும் கைகளைப் பிடித்துக் கொண்டேன். பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்தவர்கள் எங்களை உணர்ச்சிப் பெருக்குடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“சார்…” என்று மீண்டும் நான் பேச அரம்பிப்பதற்குள், “ முதல்ல உள்ள போய் அப்பாவ பார்த்துட்டு வாங்க. அப்புறம் பேசலாம்” என்றார் வினோத். செக்யூரிட்டியும் அனுமதித்தார்.
காலணியை கழற்றி விட்டு கண்ணாடிக் கதவை திறந்ததும் ஏசி சில்லிட்டது. நான்கு படுக்கையும் நிறைந்திருந்தது. அதோ அப்பா… உடல் முழுக்க வயர்கள் இணைத்திருக்க மானிட்டரில் இதயத் துடிப்பு அலைவரிசை ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. மெதுவாக படுக்கையருகில் சென்றேன். மார்பிள்ஸ் தரை ஏசியின் உபயத்தால் ஜிலீரென்று இருந்தது. மயக்கத்தில் இருக்கிறாரா? தூக்கத்தில் இருக்கிறாரா? தெரியவில்லை. வாயையும் மூக்கையும் சேர்த்து ஆக்ஸிஜன் மாஸ்க் மூடியிருந்தது. அவரைத் தொடலாமா? வேண்டாம். தொந்தரவு கொடுக்க வேண்டாம்.
அப்பா… ஏன் இப்படி? ஏற்கனவே இருதய ஆபரேஷன் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதற்குத் தகுந்தாற் போல் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டாமா? கண்களில் கண்ணீர் கசிந்தது. அப்பாவைத் தேடும் வரை செண்டிமெண்டாக உணர்ந்த மனம் அவர் கிடைத்த பிறகு பிராக்டிகலாகச் சிந்திக்க ஆரம்பித்தது.
இதற்கெல்லாம் எவ்வளவு செலவு ஆகியிருக்கும்? வினோத் பணம் கட்டியிருப்பாரா? அப்பாவை அட்மிட் செய்ததே பெரிய விஷயம். இதில் பணம் வேறு கட்ட வேண்டுமா? ஆனால், முன் பணம் கட்டினால் தானே ஐ சி யூ வில் அனுமதிப்பார்கள். சரி… அதைப் பற்றி அப்புறம் கேட்டுக் கொள்ளலாம். இப்போது என்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது? வீட்டில் ஐயாயிரம் இருக்கும் என்றே நினைக்கிறேன். மீதிப் பணத்துக்கு? அம்மாவின் நகையை அடகு வைக்க வேண்டியது தான். இல்லையென்றால் கம்பெனியில் கொஞ்சம் பணம் கேட்கலாம். ஒரு மாதத்துக்கு முன் தான் ஆபரேஷன் செலவு செய்தேன். இப்போது இப்படி! என்ன செய்யப் போகிறேன்? வெளியே வந்தேன். வினோத்தும் அந்தப் பெண்ணும் அருகில் வந்தார்கள்.
“பார்த்துட்டீங்களா சார்? டாக்டர்கிட்ட கேட்டேன். ஒண்ணும் பிரச்சனையில்ல ஹி இஸ் ஆல்ரைட். அபாய கட்டத்தைத் தாண்டிட்டருன்னாரு!” என்றார்.
மீண்டும் அவர் கைகளைப் பிடித்து கண்களில் ஒற்றிக் கொண்டேன். அவர் நெளிந்தார். “ஒரே வார்த்தையில நன்றின்னு சொல்லி இதைக் கொண்டாட முடியாது சார். நீங்க செஞ்சுருக்கறது அவ்வளவு பெரிய விஷயம்.” என் குரல் உணர்ச்சியில் கரைந்திருந்தது.
அவர் கூச்சத்துடன் கைகளை விடுவித்துக் கொண்டே, “எல்லாம் தற்செயலா நடந்துச்சு சார். ஸ்கூட்டர்ல நானும் மனைவியும் போய்கிட்டு இருந்தப்பத் தான் அவர் மயங்கி விழுறத பார்த்தோம். உடனே ஆட்டோ பிடிச்சு கூட்டிட்டு வந்துட்டோம். முன் பணம் கட்டச் சொன்னாங்க. கட்டியிருக்கோம்”
“ரோட்டுல யாரோ ஒருத்தர் மயங்கி விழுந்து கிடக்கறாருன்னு வேடிக்கைப் பார்த்துட்டுப் போற இந்த உலகத்துல… நீங்க ஒரு அபூர்வ பிறவி சார். ஆஸ்பத்திரில பணமும் கட்டியிருக்கீங்க. சான்ஸே இல்ல சார். இந்த மாதிரி சூழ்நிலை எனக்கு நேர்ந்திருந்தா நான் இந்த மாதிரி அட்மிட் செஞ்சிருப்பேனான்னு தெரியல சார்”
“சாதாரணாமாவே இந்த மாதிரிச் சூழ்நிலைல நூத்தியெட்டுக்குப் போன் செய்வேன். இல்ல… கவர்மெண்ட் ஆஸ்பத்திரில ஒப்படைச்சுட்டுப் போயிருப்பேன். ஆனா இவர் விஷயத்துல ரொம்ப மெனக்கெட்டதுக்குக் காரணம் இருக்கு!”
நான் ஒன்றும் புரியாமல் பார்த்தேன்.
“ஸ்கூட்டர்ல வந்துக்கிட்டு இருக்கும் போது உங்கப்பா ஒரு மாதிரி ஸ்தம்பிச்சு நிக்கும் போதே அவரைக் கவனிச்சுட்டேன். அவரோட செயல்பாடு, தோற்றம் எல்லாம் எங்கப்பா மாதிரியே இருந்துச்சு. அப்பா தானோன்னு சந்தேகப்பட்டு வேகமா அவர்கிட்ட வர்றதுக்குள்ள மயங்கி கீழே விழுந்துட்டாரு. பக்கத்துல வந்து பார்த்தப்ப தான் அவர் என்னோட அப்பா இல்லன்னு தெரிஞ்சிச்சு. அப்பாவை தான் தொலைச்சுட்டோம். அப்பா மாதிரி இருக்கற இவரையாவது காப்பாத்தலாமேன்னு தூக்கிட்டு வந்துட்டோம்!”
“தொலைச்சுட்டோம்னா?”
“காணாமப் போயிட்டாரு. அது நடந்து ரெண்டு மாசமாச்சு. என் மனைவி அவர் மனம் நோகும்படி பேசிட்டா. வீட்டை விட்டு வெளியே போயிட்டார். தேடாத இடமில்ல. இன்னும் தேடிக்கிட்டுத் தான் இருக்கோம்”
அருகில் நின்றிருந்த அவர் மனைவி கண்ணீருடன் தலை குனிந்தார்.
“இப்ப இவ உணர்ந்துட்டா. அவரோட அப்பா இறந்ததுக்கப்புறம் அப்பாவோட பிரிவு எப்படிப்பட்டதுன்னு என்னோட நிலைமையில இருந்து யோசிச்சுப் பார்க்கிறா. என்ன பிரயோஜனம்…?”
சேலம் பேருந்து நிலையத்தில் நான் உணர்ந்த மாதிரியே இவர்களும் உணர்ந்திருக்கிறார்கள். வருத்தமாக இருந்தது. எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை.
இரு… இரு! மீண்டும் முதலிலிருந்து யோசி!
சேலம் பேருந்து நிலையத்தில் நான் உணர்ந்த…
“சார்! உங்கப்பா கிடைச்சாச்சு!” என்றேன் உற்சாகமாக!