கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 23, 2013
பார்வையிட்டோர்: 9,496 
 
 

Tower of Silence: பார்ஸி இனத்தவர்கள் இறந்தவர்களைப் பிரியும் இடம்.

வெள்ளை சிறகுகளை சுருட்டி மடித்துக்கொண்டு லாவகமாக மொட்டை சுவற்றில் வந்து உட்கார்ந்த கழுகு, தரையிலிருந்து பார்க்க சின்ன குருவிபோல இருந்தது. தன் கூட்டத்துடன் உட்கார்ந்ததில் ராஜாக்களின் கம்பீரம் தோற்றது. சார்வர் இதே மொட்டை சுவற்றை கடந்த ஒரு வருடமாக பார்த்து வருகிறார்.கழுகுகள் முன்னிருந்தது போல் இப்போதெல்லாம் வருவதில்லை. பலாஷிடம் கேட்டுப் பார்த்தார். ’நானும் கொஞ்ச காலமாய் பார்த்துவருகிறேன், குறைவாகத் தான் இருக்கின்றன’ . பலாஷ் சார்வரின் டாக்டர்.

‘உங்களுக்கென்ன வயதாகவில்லையே’ – சம்பந்தமேயில்லாமல் ஜோக்கடித்தார்.

டாக்டரைத் தொடர்ந்து தன் வீட்டருகே இருந்த டெய்லர், பாபுபாய், அவுனிகா, ஏன் தன் கடைசி பேரன் மோட்டுவிடம் கூட கேட்டுப்பார்த்தார். யாருக்குமே தெரியவில்லை. ஆனால், யாருக்கு என்ன அக்கறை. எல்லோரும் சின்ன வயதுக்காரர்கள். தன் வயதை ஒத்தவர்களிடம் சரியான பதில் கிடைக்கலாமென, மோட்டுவின் ஸ்கூல் அருகே இருந்த பூங்காவுக்குள் நுழைந்தார்.

தன் பிறப்பின் அர்த்தமே இந்த கேள்வியில் இருப்பதாய் அவருக்கு எண்ணம். ஆனால் கேள்வியோ இறப்பை பற்றி இருக்கின்ற நகைமுரண் உரைக்காமலில்லை. ஆனாலும் தன் கேள்வியை விடாது,கிட்டத்தட்ட தன் வயதை இருக்கும் அந்த பூங்காவின் காவலாளியிடம் கேட்டார்.

‘இப்போதெல்லாம் தீ கோவிலில் ஏன் கழுகு அவ்வளவாக இருப்பதில்லை. ஏதாவது கெமிக்கல் பிரச்சனையாக இருக்குமோ?’- இயல்பாக இருக்க முயன்ற கேள்வி, அவரையும் மீறி பதட்டம் அவசரத்தை மேலும் கூட்டியது.

‘அப்படியில்ல தாத்தா, புது ஏர்போர்ட் வருதுல்ல, கழுகு பறக்கிற உயரத்தில, பிளேன் ஓட்ட முடியலியாம். அதான் அதையெல்லாம் ஓட்டறாங்க..’ – தாத்தா எனக் கூப்பிட்ட பிறகு, கழுகுகளை தடுப்பது யார் எனக் கேட்கத் தோன்றவில்லை. ரொம்பவே பைத்தியக்காரத்தனமாக இருந்தது. தன் வயது குறித்து யாராவது ஏமாந்தாலும், தனக்கு ஏதேனும் லாபம் உள்ளதா. தான் ரிடயர்ட் ஆன இந்த பதினைந்து வருடங்களில் சாவுக்கு தயாரான நாட்கள், வாழ்ந்த நாட்களை விட அதிகமாக இருக்கும். ஒவ்வொரு நாளும் அரிப்பு அதிகமானாலும், அதை பங்கிட உறவுகளுக்கு நேரமில்லை. அவர்களுக்கு இருக்கும் அவகாசத்தில் தன் பிரச்சனையின் முதல் வரியைக் கூட சொல்ல முடியாது.

சார்வர் கடந்த பதினைந்து வருமாகத்தான் மும்பாயின் இந்த புறநகர்ப் பகுதிக்கு குடிபெயர்ந்தார். எவ்வளவு தள்ளி வந்தாலும் கூட்டத்திற்கும், ஏழ்மையிலிருந்தும் ரொம்பத் தள்ளிப் போக முடியவில்லை. போரிவெல்லியைத் தாண்டிய ஒண்டுக்குடியிருப்பு, எல்லோரும் வேலைக்காக மேற்கு நோக்கி படையெடுக்க, இவருக்கு தெற்கிலேயே வேலை கிடைத்தது.இதனாலேயே இந்த பகுதியை தவிர்த்து வந்திருந்தாலும், காலை அகட்டிப் படுத்தால் அடுத்த குடியிருப்பில் தொடாத இருப்பிடம், குறைந்த வாடகை இங்கு தள்ளியது. தீகோவில் பதினைந்து கிலோமீட்டர் தொலைவு. ரத்தன் டாடா புண்ணியம். எப்படியும் வாரத்திற்கு மூன்று முறையேனும் சென்றுவிடுவார். எப்படியும் கடைசியில் அங்குதான் செல்லவேண்டுமென்ற விருப்பம்; தன் அப்பா இறந்த பிறகு அங்குதான் விட்டு வந்திருந்தர்.

‘சே, இதென்ன கடைசில போகவேண்டிய இடத்தின் சவுகரியத்தைப் பார்க்க ஒவ்வொரு தடவையும் போகவேண்டியதா இருக்கு’ – எப்போதும் அலுத்துக்கொள்ளும் விஷயம் தான். எப்படிப் போனால் என்ன என்று நினைப்பு பல இரவுகளில் வந்தாலும், தன் மதத்தின் நம்பிக்கையை புறக்கணிக்கும் எண்ணம் என்றுமே வந்ததில்லை.’மூன்று நாட்களில் காணாமலேயே போய்விடுவேன்; காற்றிலே கரைந்து விடுவேன். பூமி, நெருப்பு எதையும் அசுத்தம் செய்யாமல் போனார் அந்த பார்சின்னு எல்லோரும் சொல்ல வேண்டும்’ என அடிக்கடி மலங்க மலங்க விழிக்கும் தன் பேரன் மோட்டுவிடம் சொல்லிக்கொண்டிருப்பார். அவனுக்கு இன்னும் வயதானால் ஓடிவிடுவான்.

இரவுகளில் அடுத்த நாள் செல்லவேண்டிய மெளன கோபுரத்தைப் பற்றி யோசிப்பார். கழுகுகள் வட்டம் அடித்து, தங்கள் சிறகுகளைவிரித்து பறந்து வரும் காட்சி கிளர்ச்சியை ஏற்படுத்தும். ஏன் மரணத்தையும், அதன் பின் நடக்கும் நாடகத்தையும் இவ்வளவு யோசிக்க வேண்டும். தனக்கும் வேலையில்லாததால் இதைப் பற்றியெல்லாம் யோசனை செய்யவேண்டியதாய் இருக்கிறது என்றும் தோன்றும். வயதானாலே நிம்மதியை தேடுவதில் முக்கால்வாசி நாட்கள் போய்விடுகின்றன. மீதமுள்ள நேரத்தில் இருப்பவர்களிடம் பயப்பட வேண்டியிருக்கிறது. அதைவிட சாவைப் பற்றி யோசிக்கலாம் என்ற எண்ணம் சார்வருக்கு உண்டு. பார்சி பழக்கங்களின் நம்பிக்கையில், மீதமுள்ள இரவை மந்திரங்கள் ஜெபித்தபடி கரையும்.

தன் அப்பாவை வழியனுப்பவே கடைசியாக அந்த மெளன கோபுரத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. தேவையில்லாத சடங்குகள் வேண்டாமென்று தன் காலம் முழுக்க சொல்லிக்கொண்டிருந்தாலும், சார்வரின் அப்பா கடைசி நாட்களில் பார்சி முறைபடி கடைசி காரியங்கள் செய்வது மிகச் சுகாதாரணமானது என அவர் நண்பர்கள் வற்புறுத்தலால் இயைந்தார். உயிர் போனபின் கழுகுக்கு இரையானால் என்ன, நெருப்பு, மண் என்ற எல்லாமே ஒன்றுதானே. ஆனால், அவர் கடைசி வரை தன் பார்சி மதத்தின் மேல் நம்பிக்கை வைக்காதது சார்வருக்கு வருத்தமே. ’சும்மாவா 3000 வருடமா செய்யறாங்க’ என தன் சகோதரர்களிடம் கட்சி ஓட்டு சேகரித்தார். எது எப்படி நடந்தென்ன சார்வரின் அப்பா மெளன கோபுரத்திற்கு சென்று அமைதியானார்; மூன்று நாட்களில் கிடைத்த எலும்பை புதைத்த பின்னே சார்வருக்கு நிம்மதியானது.

அப்போதெல்லாம் கழுகுகள் நிறைய இருந்தன. அதனாலேயே எலும்புகள் கிடைக்குமா, அல்லது இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டுமா என்ற கேள்விக்கே இடமில்லை. தன் மகனிடம் இப்போதெல்லாம் அந்த கதையைச் சொல்லி அங்கலாய்க்கிறார் சார்வர். அவனோ காலம் மாறிவிட்டது, வெளிநாட்டில் பார்சிக்கள் புதைக்கப்படுகிறார்கள் என சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தான். அவனுக்கு என்ன தெரியும்; அவரவர் செய்தால் சுமூகமாக முடிந்தது என்ற எண்ணம் சார்வருக்கு அதிகமாகிக்கொண்டேயிருந்தது.

நாளாக நாளாக வருவோம் போவோரிடமெல்லாம் இதைப்பற்றியே புலம்பத் தொடங்கினார். இதனாலேயே தன் மகன், மோட்டு உட்பட எல்லாருமே அவரை ஒதுக்கத் தொடங்கினர். அவரவர் தங்கள் வேலைகளில் மூழ்கியிருப்பதை , ஏதோ தனக்கெதிரான சதியென்றே அவர் எண்ணத் தொடங்கினார். நாட்கள் இமைப்பொழுதில் மாறிவருவதைப் பற்றிய பிரஞை அவருக்கு கொஞ்சம்கூடயில்லை.

காலையில் கிளம்பி கோயிலுக்குச் சென்று, அங்கிருக்கும் வசதியான இடத்திலிருந்து மெளன கோபுரத்தைப் பார்க்கத் தொடங்குவார். கழுகு வரும்போதெல்லாம் அவர் கண்கள் விரிந்து அடங்கும். மெளன கோபுரமும் யாருக்கும் தெரியாமல் விழிக்கும் கட்டிடம் தான். அதன் செங்குத்தான வடிவம், பல ஜன்னல்களை உடைய மாய உலகம். அந்த உலகத்தினுள் செல்ல உடைந்த படிகெட்டுகள் உண்டு. மொட்டையாக இருக்கும் அந்த கல்கோபுரத்தில், அதற்குமேல் ஒன்றுமே தெரியாது. அங்கு செல்லும் உடல்களைப் போல் அந்த கட்டிடமும் உறைய வைத்தது போல இருக்கும். ஆனால், சார்வருக்கோ அவருடன் பேசும் ஒரே கட்டிடமாக அந்த கோபுரம் தெரியும். அங்கு வரும் கழுகுகளாய் அந்த உடல்கள் உருமாறுகின்றன என அவர் நினைத்துக்கொள்வார். தானும் கழுகாய் மாறி அவைகளின் உலகில் சஞ்சாரிக்க போகும் நாட்கள் உண்டென அவருக்குத் தெரியும்.

ஆனால், உண்மையில் அங்கு வருபவை வயதால சில கழுகுகளே.கோவிலில் இருப்போரிடம் கழுகுகளைப் பற்றிக் கேட்பார். அங்கு நடந்த கடைசி சேர்க்கை பற்றியும், வந்த உடலிலிருந்து எத்தனை நாட்களுக்குப் பிறகு எலும்புகள் சேகரிக்கப்பட்டன என்றும் தவறாமல் கேட்டு தன் கறுப்பு புத்தகத்தில் குறித்துக்கொள்வார். அந்த கோவிலில் இருப்பவர்களுக்கு இது வாடிக்கையாகப் போய்விட்டது.ரொம்பத் தொந்தரவான நாட்களில், சார்வரிடம் தவறாக ஏதாவது சொல்லி தங்கள் கேளிக்கைக்கு வழிவகுத்துக்கொண்டனர்.

சார்வர் தன் பகுதியில் இருந்த பார்சி அமைப்பிடம் இதற்கான முறையீட்டை எடுத்துச் சென்றுள்ளார்.ஆனால், அரசின் உத்தரவுபடி மாறும் ஏர்போர்ட்டை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டனர். உயரப் பறக்கும் கழுகு விமானத்திற்கு கேடுவிளைப்பதாகவும், இதனால் மெளன கோபுரத்தையும் அதைச் சார்ந்துள்ள கோவிலையும் வேறு இடத்துக்கு மாற்றப்போவதாகவும் தெரிவித்தனர். ஒரு ஹிந்து,முஸ்லிம் புனித இடத்தை இப்படி செய்ய இயலுமா என்பது அந்த அமைப்பிலுள்ளவர்கள் அனைவரும் கேட்க விரும்பும் கேள்வி. பார்சி என்ற வகுப்பினரின் வளர்ச்சி, குஜராத்திகளின் வளர்ச்சியைப் போல மும்பாயின் சரித்திரம். இவற்றில் எதையுமே பிரிக்க முடியாது என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்று. அந்த அமைப்பின் சார்பில் கோரிக்கையை ஆளும் கட்சி மந்திரியிடம் கொடுத்திருப்பதாக சார்வரிடம் சொல்லப்பட்டது.பொதுநலத்தில் சுயநலம், சுயநலத்தில் பொதுநலம் போன்ற குழப்பங்கள் இல்லாத மனிதர்கள்.

அரசுக்குத் தொந்தரவென்றால் மனிதனைக்கூட ஒதுக்கும் இயந்திர அமைப்பு. அது அதிகாரம், ஆதாயம், சுயநலம், விலை என்ற அமைப்புகளில் இயங்குகிறது – போன்ற பிரச்சார வாக்கியங்கள் சார்வருக்கு உவப்பானதாக இல்லை. இப்படியாக ஆரம்பிக்கும் பிரச்சனை, எப்படி எந்த நேரத்தில் முடியுமென்பது அவருக்குத் தெரியாமலில்லை. இப்படிப்பட்ட பிரச்சனைகளை சதா பார்த்துவரும் மும்பாயில், பல வருடங்களாக வாழ்ந்துவருபவர்தான். அதிகப்படியாக பறவை பாதுகாப்பு மையத்தில் அவர் முறையாக புகார் கொடுக்க முடியும் என்றும் சொன்னார்கள்.

அதையும் செய்து பார்க்கலாமென சார்வர் முடிவெடுத்துள்ளதாக நெருப்புக் கோவிலில் கூறினர். அதுவரை அந்த கழுகுகள் பாரம்பரியம் வேட்டையாடப்படுவதைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான் என சார்வர் நினைத்துக்கொண்டார்.

– ஜனவரி 2009 (நன்றி: திண்ணை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *