கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: September 10, 2019
பார்வையிட்டோர்: 36,630 
 
 

சோமநாதன், வயது 68, எக்ஸ்பிரஸ் அவென்யூவில் இருந்த பாரில் அமர்ந்து அவருக்குப் பிடித்தமான ‘லாங்க் ஐலண்ட் ஐஸ் டீ’ என்ற காக்டெய்லை நிதானமாகக் குடித்துக் கொண்டிருந்தார். ‘ஜின்’, ‘டெகிலா’, ‘வோட்கா’, ‘ரம்’ எல்லாம் கலந்த அந்தப் பானம் அவர் மிகவும் ரசித்து அருந்தும் ஒன்று; ஆனால், இன்று அதுகூட அவருக்கு அலுப்பாக இருந்தது. பாரில் அதிகக் கூட்டமில்லை; பொதுவாகவே அவருக்குக் கூட்டமும், இரைச்சலும் அதிகம் இருந்தால் ரசிக்காது. எதிரே டி.வி. திரையில் ஜாக்விலின் ஃபெர்னாண்டஸ், ‘சிட்டியான் கலாயியான் வே’ என்று ஏதோவொரு வெளிநாட்டுத் தெருவில் ஆடிக் கொண்டிருந்தாள்.

இன்று இதுதான் இந்தியக் கலாச்சாரத்தைப் பரப்பும் விதமோ? முன்னால் நீள நீளமாக பாங்காக நறுக்கி வைத்திருந்த வெள்ளரிக்காய் ஒன்றை எடுத்துக் கடித்தார். பொடி இட்லிக்கு ‘ஆர்டர்’ பண்ணி இருந்தார். இனிமேல்தான் வரும்.மணியைப் பார்த்தார். இரவு எட்டுதான். இரவு ஆங்கிலத்தில் சொல்லப் போனால் இன்னும் இளமையாகத்தான் இருந்தது.

அவர் வயதொத்தவர்கள் செய்யும் காரியமா என்று நினைத்துப் பார்த்துக் கொண்டார்.

சென்ற வாரம் அவருடன் பள்ளியிலும், பின் கல்லூரியிலும் படித்த இரு நண்பர்களைச் சந்தித்து வெகுநேரம் அளவளாவியது நினைவுக்கு வந்தது. படிப்பில் ஏறத்தாழ மூவருமே ஒரே மாதிரிதான் என்றாலும் வாழ்க்கை அவரவர்களுக்கென்று வெவ்வேறு விதமாக அல்லவா அமைகிறது?
அவர்களில் ஒருவனுக்கு சென்னையிலும், பங்களூரிலும் மற்றொருவனுக்கு பங்களூரிலும், மும்பையிலும் வீடுகள் இருக்கின்றது. எல்லாமே பெரிய பெரிய வீடுகள்தான். அதைத்தவிர பங்குச் சந்தையில் வரும் லாபங்கள்; இரண்டு பேருக்குமே அழகான ஒரு பெண், ஒரு பிள்ளை. எல்லோருமே அமெரிக்க, ஐரோப்பிய, ஆஸ்திரேலியக் குடிமகன்கள், மகள்கள். வருஷத்தில் அதனால் ஆறு மாதங்கள்தான் இந்தியாவில். அதில் ராமகிருஷ்ணனும், அவன் மனைவியும் அமெரிக்கப் பிரஜைகள் கூட ஆகிவிட்டனர்.

பள்ளித் தோழர்கள், ஆசிரியர்கள், காணாமல் போன சில நண்பர்கள் என்று பேச்சு சுற்றிச் சுழன்றது.ஆனால், அவர்கள் இருவருமே சோமநாதனை அதிகம் தொடாமல் பார்த்துக் கொண்டனர். அதற்குக் காரணம் இருந்தது.

சோமநாதன் இன்று ஒரு தனி மரம்.

அவர் திருமணமானவர்தான். ஆனால், மனைவி உடன் இல்லை. ஒரே ஒரு மகன். அவனும் அவருடன் இல்லை. இருவருமே அமெரிக்காவில் இருந்தனர். ஆனால், சுத்தமாகத் தொடர்பு இல்லை.

நினைத்துப் பார்த்தால் சோமநாதனுக்கு இத்தனை நாட்கள், கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து வருஷங்களை எப்படி நகர்த்தினோம் என்று வியப்பாக இருந்தது. ஆனால், அவருக்கு வேலை இருந்தது. அரசாங்க வேலை. நல்ல சம்பளம்தான். சென்னையில் அவருக்கென்று இருப்பது ஆயிரம் சதுர அடிகளில் ஒரு பிளாட், அவ்வளவுதான். அவரிடம் உள்ள ஒரே குணம் நிறையப் புத்தகங்கள் வாங்கிப் படிப்பதுதான்.

அவர் மனைவி அகிலா, ரஞ்சன் ஐந்து வயதுக் குழந்தையாக இருந்த போதே சொல்லி விட்டாள்: “இனிமேல் என்னால் உங்களுடன் இருந்து குடும்பம் நடத்த முடியாது,” என்று. அவருக்கு அப்போதில் இருந்தே குடிக்கும் பழக்கம் அவ்வப்போது உண்டு. அதனால்தானோ என்று மனதில் நினைத்துக் கொண்டவராய், “ஏன்? நான் குடிப்பது உனக்குப் பிடிக்கவில்லையா?” என்றார், சிகரெட்டைப் புகைத்தபடி.

அகிலா புன்னகை செய்தாள். “உங்களுக்கே நீங்கள் கூறும் காரணம் அபத்தமாகப் படவில்லை?” என்று கேட்டாள்.

சோமநாதன் பதில் பேசவில்லை; அகிலா சராசரிக்கு மேலான புத்திசாலித்தனமுள்ள பெண். அப்போதே அவள் எம்.ஃபில் முடித்திருந்தாள். அவளுக்கு மேலே படித்து உயரப் பறக்க வேண்டுமென்ற ஆசை அதிகமாகவே இருந்தது. அதிலும், ஷிகாகோவில் இருந்த அவள் சகோதரன் வீட்டிற்கு மூன்று மாதங்கள் போய் இருந்துவிட்டு வந்தபின் அவளுக்கு இந்தியாவின் மீது சிறிதும் நாட்டமின்றிப் போனது.

சோமநாதனை மணக்க அகிலா சம்மதித்தற்கு ஒரே ஒரு காரணம்தான் இருந்திருக்க வேண்டும். அவர் படிப்பு. பொறியியல் துறை, ஒரு அரசாங்க ஆராய்ச்சி நிறுவனத்தில் நல்ல பதவி – பெயர். தாய் மட்டும்தான் இருந்தாள். அகிலாவும், அவள் சகோதரன் மற்றும் பெற்றோரும் அவரை வளைத்து அமெரிக்க மண்ணுக்குக் கொண்டு சென்று விடலாம் என்று நினைத்திருக்க வேண்டும். நேரிடையாகக் கேட்டு விளக்கம் பெறவில்லை. ஆனால், அதில்தான் அவர்கள் தவறு செய்து விட்டனர். சோமநாதன், பிறந்த நாட்டையும், பெற்ற தாயையும் விட்டுக் கிளம்பத் தயாராக இல்லை.

சோமநாதன் பதில் பேசவில்லை.

“உன் இஷ்டம். ஆனால், நீ எப்போது போகப் போகிறாய் என்று குறைந்தது ஒரு மாசம் முன்பே சொல்லி விடு,” என்றார் எதுவுமே நடக்காதது போல்.

அகிலா பதில் சொல்லவில்லை. ஒரு மாதத்தில் செயலில் காட்டி விட்டாள். சோமநாதனின் அம்மா மட்டும அவள் பிள்ளையையும் தன்னுடன் அழைத்துப் போகிறாள் என்பதற்கு மட்டும் சற்று எதிர்ப்புத் தெரிவித்தாள். “குழந்தைக்கு அப்பாவை விட அம்மா முக்கியம் அம்மா. தயவு செய்து நீ இதில் தலையிடாதே. எங்களுக்குத் திருமணம் நடந்ததே எதேச்சை. இந்தக் குழந்தை ஒரு ஆச்சரியம். அவ்வளவுதான். விட்டுவிடு,” என்று முடித்து விட்டார் சோமநாதன்.

இன்று அகிலாவும் ஓய்வு பெற்ற ஓர் ஆங்கிலப் பேராசிரியை. நியூ ஆர்லியன்ஸில் இருக்கிறாள். மகன் கலிஃபோர்னியாவில். எப்போதாவது ஃபோன் வரும். பேச்சு ஏதோ ஒரு கடமை என்பது போல். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் பார்கின்ஸன் நோயினால் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் துன்பப்பட்டு விட்டு சோமநாதனின் தாய் இறந்து போனாள். அவர் அதை அகிலாவுக்கோ, அவர் மகன் ரஞ்சனுக்கோ தெரிவிக்கக்கூட இல்லை. ஆறு, ஏழு மாதத்திற்கு ஒருமுறை போனில் பேசியபோது, “உங்கள் அம்மா இப்போது எப்படி இருக்கிறார்?” என்று கேட்டாள்.
“போயாகி விட்டது,” என்றார் சோமநாதன்.

“ஓ ஸாரி…” என்றாள்.

ரஞ்சன் அவருடன் பேசியது கூடக் கிடையாது.

“உனக்கு உன் மகனைப் பார்த்துப் பேச வேண்டுமென்று கூடத் தோன்றவில்லையா?” என்று கேட்டார் ராமகிருஷ்ணன் அன்று பேசும்போது.

உதட்டைப் பிதுக்கினார் சோமநாதன். “எனக்கு அவன் முகமும், அகிலாவின் முகமும் கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டது,” என்றார் சிரித்தபடி.
“இதை எப்படி உன்னால் சிரித்தபடி சொல்ல முடிகிறது?” என்றார் குமார்.

“உடன் இருக்கும் வரைதான் உறவுகள்… விலகிப் போய்விட்டால்…?” என்றார் சோமநாதன்.

“நீயாவது யு.எஸ். போயிருக்கலாமே? அவர்களைப் பார்க்க என்று இல்லாவிட்டாலும், வேறொரு நாட்டைப் பார்க்கவோ இல்லை அங்குள்ள நண்பர்களைச் சந்திக்கவென்று?” என்றார் ராமகிருஷ்ணன். தொடர்ந்து, “எனக்கு அவள் மீது எந்த வருத்தமும் இல்லை. அவள் தன் வழியில் போனாள். நான் என் வழியில் இருக்கிறேன். பகைமை பாராட்ட என்ன இருக்கிறது?” என்றார் சோமநாதன்.

“அப்போது உனக்குப் பின்னால் உன் வீடு, பணம், காசு இவற்றை எல்லாம் யாருக்குக் கொடுக்கப் போகிறாய்?” என்றார் குமார் வெடுக்கென்று.

“நீங்கள் நினைக்கும் அளவுக்கு நான் பணக்காரனில்லை. ஆனால், நிச்சயமாக உங்களுக்கு இல்லை,” என்றார் சிரித்தபடி.

இருவர் முகத்திலும் அசடு வழிந்தது.

பின்னர் பேச்சு திசை திரும்பியது. மூவரும் அருகிலிருந்த ஒரு பிரபலமான ஓட்டலில் சென்று மதிய உணவு சாப்பிட்டனர். எளிமையான சாப்பாடுதான். ஆனால், சுவையாக இருந்தது.

பின் மூவரும் ராமகிருஷ்ணனின் காரில் வீடு திரும்புகையில் குமார் சோமநாதனைக் கேட்டார். “என்ன சோமு? அடுத்து என்ன பிளான்? உன் வீட்டில் உன்னை ‘டிராப்’ பண்ணி விடலாமா?” என்றார். பின் ஸீட்டில் அமர்ந்திருந்த சோமநாதனிடமிருந்து பதில் வரவில்லை.

“ஏய்… உன்னைத்தான்… என்ன சாப்பிட்ட மயக்கமா?” என்று கேட்டபடி சிரித்துக்கொண்டே திரும்பிய குமார் திடுக்கிட்டார்.

சோமநாதன் ஸீட்டில் சற்று சரிந்தவாகில் இருந்தார். கண்கள் திறந்திருந்தன. ஆனால் முகம்? ஒருவிதமான பாவமுமில்லை.

“லுக்… ராம்கி… காரை நிறுத்து… ஐ திங்க் சோமு ஈஸ் நாட் ஆல்ரைட்…” என்றார் பதட்டமாக. ராமகிருஷ்ணன் காரை ரோட்டில் ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு பரபரப்பாக இருவரும் பின் ஸீட்டின் கதவைத் திறந்து பார்த்தனர். சோமநாதன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. திறந்த கண்கள், உயிரற்ற முகம். குமார் விரைந்து சென்று அவரைத் தட்டினார். ஒரு பதிலும் இல்லை. ராமகிருஷ்ணன் முகத்தருகே சென்று “சோமு… சோமு,” என்று அழைத்தார்.

ம்ஹும்… பதிலில்லை. எதிர்வினையாக ஏதும் வரவில்லை. இருவரையும் பீதி கவ்வியது.

“ஏய்… அருகில் ஏதாவது ஹாஸ்பிடல் இருக்கிறதா பார்… மயக்கமா, இல்லை வேறேதாவது…” என்று வாக்கியத்தை முடிக்காமல் நிறுத்தினார் குமார்.

ராமகிருஷ்ணன், “இங்கே பக்கத்தில் ஒரு நர்ஸிங்ஹோம் இருக்கிறது. 24 மணி நேரம். அங்கு டாக்டர் யாராவது இருப்பார்கள். போகலாம்,” என்று விரைந்து சென்று காரைக் கிளப்பினார்.

அதேசமயம் குமாரிடம், “குமார், எதற்கும் அவன் பையில் பர்ஸில் ஏதாவது எமர்ஜன்ஸி கான்டாக்ட் எண்கள் இருக்கிறதா பார். அதேபோல் மொபைலிலும் ஏதாவது ஸ்பீட் டயல் எண்கள் இருக்கிறதா பார்,” என்றார்.

குமார் சோமநாதனின் அருகில் சென்று அவர் சட்டைப் பையில் இருந்து மொபைலை எடுத்தார். அவரை மெதுவாகத் திருப்பி அவர் பான்டின் பையில் இருந்த பர்ஸையும் எடுத்தார். அதன் ஒரு அறையில் ‘எமர்ஜன்ஸி’ என்று போட்டு அதற்குக் கீழ் கிருபா என்ற பெயரில் ஒரு எண் இருந்தது. அடுத்ததாக யாமினி என்ற பெயரில் இன்னொரு எண் இருந்தது.

யாரோ இவர்கள்?

கிருபா என்ற பெயரை அழுத்திவிட்டுக் காதில் வைத்துக் கொண்டார். மூன்று ஒலிகளுக்குப் பின் “சொல்லுங்க சார்,” என்றது ஓர் ஆண் குரல்; சற்று இளமையாகத்தான் ஒலித்தது.

“கிருபா…?” என்றார் குமார்.

“யெஸ்… ஸார் இல்லை… நீங்கள்?” சற்று தயக்கத்துடன் கேள்வி வந்தது.

“நான் சோமநாதனின் நண்பர் குமார் பேசுகிறேன். அவருக்குத் திடீரென்று மயக்கம் வந்திருக்கிறது போல் தோன்றுகிறது. நானும், இன்னொரு நண்பரும் அவரை எங்கள் காரில் அடையாறு காந்தி நகரில் உள்ள ஒரு கிளினிக்கிற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறோம். ராம்கி வந்துவிட்டதா? பெயர் என்ன?” என்றார் அவசரமாக.

அதற்குள் கார் அந்த கிளினிக்கின் வாசலுக்கு வந்துவிட்டது. அதன் பெயரை போனில் சொன்ன குமார், “கிருபா, நீங்கள் உடனே இங்கு வர முடியுமா? எமர்ஜன்சி என்பதில் உங்கள் பெயரும் எண்ணும்தான் இருந்தது. அதனால்தான் அழைத்தேன்,” என்றார்.

“வருகிறேன் ஸார்,” என்று இணைப்பைத் துண்டித்தான் கிருபா.

டாக்டர் வெளியே வரக் காத்திருந்த ராமகிருஷ்ணனுக்கும், குமாருக்கும் முகத்தில் பதட்டமும், கவலையும் தெளிவாகத் தெரிந்தது. டாக்டரும் நடுவயதினராக இருந்தார். இவர்களிடம் வந்து, “நீங்கள் இருவரும் அவருக்கு என்ன உறவு?” என்று கேட்டார்.

“நண்பர்கள், ஏன்?” என்றார் குமார்.

“அவர் இறந்து விட்டிருக்கிறார். அரை மணிக்குள்தான் இருக்கும். மாஸிவ் ஹார்ட் அட்டாக்,” என்றார் எந்தவித உணர்ச்சியுமின்றி.

“அவருடைய மனைவி, பிள்ளைகளுக்குச் சொல்லி விடுங்கள்,” என்றார் தொடர்ந்து.

குமாரும், ராமகிருஷ்ணனும் இந்த முடிவை ஓரளவு ஊகித்திருந்த போதிலும், டாக்டர் வாயில் இருந்து அது தெளிவாக வந்தபோது இடி விழுந்தது போல் இருந்தது. சற்று முன் பேசிக் கொண்டிருந்தவன்… அரை மணியில் பிணமாக. இதுதான் வாழ்க்கையா?

மனைவி, பிள்ளை? யாருக்குத் தெரியும்?

குமாரும், ராம்கியும் என்ன செய்வது என்று குழம்பிப் போய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கையில் உள்ளே ஒரு இளைஞன் அவர்களை நோக்கி வேகமாக வந்தான். மாநிறமாகத் தலையில் அடர்த்தியான முடியும், களையான முகத்துடன் உயரமாக இருந்த அவன் முகத்தில் பதற்றம் தெளிவாகத் தெரிந்தது.

“சோமநாதனின் நண்பர்கள்தானே?” என்றான் ஆங்கிலத்தில்.

“யெஸ்… கிருபா…?” என்றார் ராம்கி.

“ஆமாம்… எப்படி இருக்கிறார்? என்ன ஆயிற்று?” என்றான் கிருபா.

ராம்கியும், குமாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“என்ன?” என்றான் கிருபா மீண்டும்.

“ஸாரி… மிஸ்டர் கிருபா. ஹீ ஈஸ் நோ மோர்,” என்றார் குமார் வருத்தத்துடன். அதைச் சொல்கையில் அவர் கண்களில் இருந்து அவர் அறியாமலே கண்ணீர் எட்டிப் பார்த்தது.

ராம்கி கிருபாவின் முகம் மாறியதைக் கண்டு, “ப்ளீஸ்… ஸாரி,” என்றவர், “நீங்கள் சோமுவுக்கு என்ன வேண்டும்?” என்றார்.

“நானா? நண்பன்… அவ்வளவுதான்… ஆனால், அவருக்கு எல்லாமே நான்தான்…” என்றவன் “அவர் எங்கே?” என்றான்.

அதற்குள் அங்கு வந்த அந்த டாக்டர், “ஓ… அவருடைய மகனா? போய்ப் பாருங்கள்… பாடியைத் தர சில ஃபார்மாலிடிக்ஸ் உள்ளன…” என்றார்.

உள்ளே சென்று அவர் உயிரற்ற உடலைப் பார்த்த கிருபா சற்றும் எதிர்பாராமல் விசித்து விசித்து அழத் தொடங்கினான். ஆனால், கிருபா ஒருசில நிமிஷங்களில் தெளிந்து விட்டான். குமாருக்கும், ராம்கிக்கும் ஒன்றுமே புரியவில்லை. ஒருவரையொருவர் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டனர்.

“எனக்குத் தெரிவித்ததற்கு மிக்க நன்றி ஸார்… உங்களை சந்திக்கப் போவதாக நேற்று என்னிடம் சொன்னார்… இன்று காலையில்கூட கிளம்புவதற்கு முன்னால் ஃபோன் பண்ணிச் சொன்னார். அவரை முதலில் வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்… ஏனெனில், அவரைக் கடைசியாகப் பார்க்க அவரது சில நண்பர்களும், மாணவர்களும் வருவார்கள்… வரலாம்… இனிமேல் நான் கவனித்துக் கொள்கிறேன்…,” என்றான் தெளிவான குரலில்.

குமாரால் ஆர்வத்தை அடக்கமுடியவில்லை. “கேட்கிறேன் என்று தப்பாக நினைத்துக் கொள்ளாதே? உனக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டார்.

“‘பார்வை’ என்று ஒரு நிறுவனம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டான் கிருபா.

ராம்கி தலையசைத்தார். “யெஸ்… பார்வையற்றவர்களுக்கான இல்லம். அவர்களுக்கு அங்கு படிப்பு, இருக்க இடம் மற்றும் வேலை என்று பல உதவிகள் செய்து வருவதாகக் கேள்விப்பட்டு இருக்கிறேன்… சென்னையிலிருந்து சற்று தூரத்தில் உள்ளது. அதுதானே?” என்றார்.

“அதேதான் ஸார்… நான் அங்குதான் வேலை செய்தேன் முதலில். இப்போது நான் வெளியில் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். நான் அங்கு வேலை செய்த காலத்தில் இருந்தே இவரைத் தெரியும். இவர் அந்த நிறுவனத்திற்குப் பல உதவிகள் செய்ததுடன் அங்கு வந்து பார்வையற்றவர்களுக்கு வாரம் ஒருநாள் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி இவைகளில் புத்தகங்களைப் படித்துக் காட்டுவார். ஸ்க்ரைபாக (எழுதுபவர்) இருப்பார். எனக்கும், என்னை மேலே படிக்க உதவி செய்திருக்கிறார். நான் இன்று நல்ல நிலையில் இருப்பது அவரால்தான்…,” என்றான், சோகமான குரலில்.

கட்டிய மனைவியையும், சொந்த மகனையும் உதறிவிட்டு இப்படி இவருக்கு என்ன ஒரு பந்தம்? என்ற கேள்வி குமார், ராம்கி இருவர் மனதிலும் எழுந்தது.

“இவருடைய மனைவி, மகன்… இவர்கள் விலாசம்?” என்று தொடங்கினார் குமார்.

கிருபா அவரை நேராகப் பார்த்து பதில் சொன்னான். “தெரியும் ஸார்… ஆனால், அவர்களுக்கு இவருடன் எந்த உறவும், தொடர்பும் கிடையாது. அதனால் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. அதை அவரே என்னிடம் சொல்லி இருக்கிறார்.”

ராம்கிக்கு இது விநோதமாகத் தோன்றியது.

“அப்படியானால் நீங்கள்தான் இவரது வாரிசா?” என்றார் சற்றுக் கடுமையான குரலில்.

கிருபா அவர் குரலில் இருந்த கடுமையை உணர்ந்து அவரை உற்றுப் பார்த்தான்.

“அவருக்குக் கடைசியாக, அவர் விருப்பப்படி காரியங்களைச் செய்ய வேண்டியதுதான் வாரிசின் வேலை என்றால், அந்த உரிமையை அவர்தான் எனக்குத் தந்திருக்கிறார். அவரது வீடு என்றோ விற்கப்பட்டு அந்தப் பணம் ‘பார்வை’க்குப் போய்விட்டது. மற்ற எல்லா விஷயங்களையும் நான்தான் கவனித்துக் கொள்கிறேன். ஓர் வாழும் உயிருக்குக் கண்களும், பார்வையும் மிகவும் அவசியம் என்பது அவரது கொள்கை. மற்ற ஊனங்களைவிட பார்வை இன்றி இருப்பதுதான் மிகவும் கொடுமை என்பது அவர் கருத்து. ஏனெனில் மிருகங்கள், பட்சிகள், சிறு சிறு பிராணிகளுக்குக் கூட பார்வை என்பது உண்டு என்பது அவர் உணர்ந்திருந்தார்.”

“இப்போது எங்கே அவரைக் கொண்டு செல்வது? காரியங்களை யார் செய்வார்கள்?” என்றார் குமார்.

“அவர் வீட்டுக்குத்தான். அதில் அவர் வாடகை கொடுத்துக் கொண்டு இருக்கிறார். காரியங்கள்? அதில் அவருக்கு நம்பிக்கை கிடையாது. அவரைப் பார்ப்பவர்கள் அங்கு வந்து அஞ்சலி செலுத்தியதும் அவர் உடலை அவர் போரூரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரிக்கு, கண்களை எடுத்தபின் தானம் செய்யும்படி எழுதி வைத்து இருக்கிறார்,” என்றான் கிருபா.

ராம்கியும், குமாரும் அயர்ந்து போய் பேச்சிழந்து நின்றனர். அப்போது ‘டக் டக்’ என்ற ஒரு கைத்தடி ஒலிக்க சிவப்பாக, ஒல்லியாக ஒரு பெண் வேறொரு பெண்ணுடன் அங்கு அவர்களை நெருங்கி வந்தாள்.

“கிருபா… ஆஸ்பத்திரி நுழையும் போதே உன் குரல் கேட்டது. என்ன…?” என்றாள் அந்தப் பெண். குரல் இனிமையாக இருந்தது. கிருபா திடீரென்று அவள் கைகளைப் பற்றிக்கொண்டு அழத் தொடங்கினான்.

“சோமு ஸார் நம்மைவிட்டுப் போய்விட்டார் யாமினி,” என்றான் அழுகைக்கு நடுவில்.

யாமினியின் உதடுகள் துடித்தன. லேசான விம்மலுடன் அவள் பார்வையற்ற கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

பின் ராம்கி, குமார் பக்கம் திரும்பி, “ஸார்… இதுதான் யாமினி. சோமு ஸார் மிகவும் பிரியம் வைத்திருக்கும் பெண். பார்வையற்றவள். பார்வை நிறுவனத்தில் வேலை செய்கிறாள். நான் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண். ஆனால் தாய் தந்தை கிடையாது. ஓர் விபத்தில் இவள் பெற்றோர் இறந்துபோக இவள் பார்வை இழந்து பார்வை நிறுவனத்திற்கு வந்தவள்… யாமினி… ஸார் இவர்களுடன்தான் இருந்திருக்கிறார். அவரின் சிறு வயது நண்பர்களுடன்… ராமகிருஷ்ணன், குமார் நம்மிடம் கூட இவர்களைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்… நினைவிருக்கிறதா?” என்றான் கிருபா.

யாமினி பதில் தராமல் அவர்கள் இருந்த திசை நோக்கிக் கை கூப்பினாள். ஏனென்று சொல்ல முடியாமல் ராம்கி, குமார் இருவர் கண்களிலிருந்தும் கண்ணீர் பெருகியது. உண்மையான சோமநாதன் யார்? அவர்களுக்குத் தெரிந்த சோமு யார்?

தெரியவில்லை.

“உங்களுக்குப் பணம் ஏதாவது…?” என்று ராம்கி தொடங்கியதும் கிருபா இடைமறித்தான்.

“எதுவும் தேவை இல்லை ஸார்… அவர் எல்லாவற்றிற்கும் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்…,” என்றான் தெளிவாக.

“வேறு சடங்குகள் எதுவும் இல்லாததால், நீங்கள் உங்கள் வேலைகளைப் பார்க்கச் செல்லலாம். மிக்க நன்றி,” என்றான் கிருபா.

குமாருக்கும், ராம்கிக்கும் பேச வார்த்தைகள் இல்லை.

திரும்பிக் காரில் வீடு செல்லும்போது ராம்கி முதலில் பேசினார்.

“சே! என்ன இவன்? சொந்த மனைவியையும், பிள்ளையையும் விட்டுவிட்டு எவளையோ நண்பன் என்று சொந்தம் கொண்டாட விட்டு, ஏதோ குருட்டுக் கூட்டத்திற்கு பணத்தைத் தானம் பண்ணிவிட்டு என்ன வாழ்க்கை வாழ்ந்திருக்கிறான்?”

“வாஸ்தவந்தான்… எனக்குத் தெரிந்து அவனிடம் இருந்த ஒரே ஒரு பழக்கம், ஹை கிளாஸ் டிரிங் குடிப்பது அவ்வப்போது; அதுதான்… வேறு பெண்கூட அவன் வாழ்க்கையில் வரவில்லை போலிருக்கிறது,” என்றார் குமார். ராம்கி பதில் சொல்லவில்லை. வீட்டை நெருங்குகையில் மீண்டும் பேசினார்.

“சரி… பேட் டைம்… நான் அடுத்த வாரம் ஸிட்னி போகிறேன். என் மகன் அங்கே வீடு வாங்கி இருக்கிறான்…,” என்றார்.

“நான் டல்லஸ் போகிறேன்… அதற்கு அடுத்த வாரம். ஆனால் அதற்கு முன் பெங்களூரில் நான் வாங்கி இருக்கும் இன்னொரு வீட்டுக்கு கிரகப்பிரவேசம் பண்ண வேண்டும்,” என்றார் குமார்.

“என்னவோ! சோமு வாழ்க்கையைப் பார்த்த பார்வை சரியில்லை… என்ன பார்வையோ?” என்றார் ராம்கி.

“என்ன செய்ய? பார்வைகள் பலவிதம்,” என்றார் குமார் சமாதானமாக.

“எக்ஸ்பிரஸ் அவென்யூ”வில் இருந்த பாரில் இரவு பதினொன்றரை வாகில் அனைவரும் சென்று விட்டனர். எல்லா மேசைகளையும் பார்வையிட்டுக் கொண்டே வந்த அந்த பாரில் வேலை செய்யும் இளைஞன், பில் போடும் ஆளிடம் வந்து அந்தக் கடைசியில் ஒருவர் அமர்ந்திருந்தாரே… அவர் போய்விட்டாரா? அவருக்குப் பில் போட்டாயா?” என்று கேட்டான்.

பில் போடுபவன் கேள்விக்குறியுடன் இவனைப் பார்த்தான்.

“எந்தக் கடைசி டேபிள்?”

“அதோ…” என்று மூலையில் இருந்த மேசையைக் காட்டினான்.

“அங்கே யாருமே இல்லையே?” என்றான் பில் போடுபவன்.

“பின் நான் யாருக்கு லாங் ஐலண்ட் ஐஸ் டீ மூன்று ரவுண்ட் கொடுத்தேன்?” என்றான் வேலை செய்பவன். “எனக்கென்ன தெரியும்? காசே கொடுக்காமல் எழுந்து போய்விட்டாரா?”

“இல்லை… அவர் கொஞ்சம் வழக்கமாக வருபவர்தான்… பக்கா ஜென்டில்மேன்…”

உதட்டைப் பிதுக்கினான் பில் போடுபவன்.

அந்த இளைஞன் அந்த மேசையின் அருகே சென்று பார்த்தான். அங்கு மேசை மேல் இருந்த ஃபோல்டரின் உள்ளே ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. அத்துடன் விசித்திரமாக ‘தாங்க்யு’ என்ற ஒரு கார்டும் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *