கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: April 23, 2013
பார்வையிட்டோர்: 12,638 
 
 

நாளைய பொழுதாவது நல்லதாய் விடியும் என்ற ஊக்கத்துடன் உறங்கும் கோடிக்கணக்கான இந்தியப் பிரஜைகளுள் நானும் ஒருவன். பெயர் சரவணன். பொறியியல் பட்டதாரி. சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் பர்ச்சேஸிங் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறேன். எல்லோரையும் போலவே இப்போதுள்ள வேலையில் திருப்தி இல்லாமல் வேறு ஒரு நல்ல வேலை தேடி அலைபவன்.

மாதம் ஒரு முறையாவது வீட்டுக்குச் சென்று எனது குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பவன் நான். சிதம்பரத்துக்கு அருகே உள்ள புத்தூர் எனது ஊர். நாகரீகத்தின் நஞ்சு இன்னும் தீண்டாத அரிதான இந்தியக் கிராமம்.

சென்ற வாரமும் ஊருக்குப் போகலாம் என்று முடிவெடுத்தேன். அறைக்கு வெளியே வந்தேன். மீட்டருக்கு மேல் பணம் கேட்டார் ஆட்டோக்காரர். விதியே என்று தலையசைத்துவிட்டு ஆட்டோவில் ஏறி அமர்ந்தேன். ஆட்டோவை மறித்து மிரட்டி லஞ்சம் கேட்ட காவல்துறை அதிகாரியையும் சமாளித்து அவர் கையில் 100 ரூபாயைத் திணித்தார் ஆட்டோக்காரர்.

“இன்னாமோ நான் மீட்டருக்கு மேல காசு கேட்டதுக்கு அம்மாம் நியாயம் பேசுனியே! கண்டுகினியா சார்! ஒரு நாளிக்கு ஒரு தபாவாவது இப்புடி காசு குடுத்தாதான் பொயப்பே ஓடுது” என்று தன் பக்க நியாயத்தைச் சென்னை செந்தமிழில் பேசியபடி வந்தார் ஆட்டோக்காரர். தனியார் பேருந்து நிலையத்துக்கு ஆட்டோவில் வந்து இறங்கினேன். அது எப்படி எல்லா மாநகரப் பேருந்துகளும் எல்லா நேரத்திலும் கூட்டமாக இருக்குமோ? “சென்னையில் இப்போ எல்லாம் சென்னைக்காரங்களையே பார்க்குறது கஷ்டம்டா. எல்லாம் வேலைக்காக இங்க வந்திருக்குற வெளியூர்க்காரங்கதான்” – நண்பன் சொன்னது நினைவுக்கு வந்தது. இருக்கிற பேருந்துகளுக்குள் ஓரளவு கூட்டமில்லாத பேருந்தில் ஏறினேன். கூட்ட நெரிசலில் டிக்கெட் எடுப்பதற்குள்ளாகவே பெரும்பாடு பட்டுவிட்டேன். இதில் பாக்கி சில்லறையை எப்படி வாங்குவது என்று தவித்துக் கொண்டிருந்தேன். இறங்க வேண்டிய இடம் வந்ததும் நடத்துனரைத் தேடினேன். கூட்டத்தில் அவர் இருந்த இடமே தெரியவில்லை. இரண்டு ரூபாய் நஷ்டத்தோடு இறங்கினேன்.
மத்திய பேருந்து நிலையத்தில் இலவச சிறுநீர் கழிப்பிடத்துக்குள் சிறுநீர் கழித்துவிட்டு வெளியே வந்தேன். “இரண்டு ரூபாய்” என்றான் ஒருவன். சிவந்த கண்கள், மீசை, கைலி…

“இலவசம்தானே எதற்கு இரண்டு ரூபாய்” என்று கேட்பவர்களிடம் குரல் ஓங்கி சண்டை பிடிக்கத் தயாராக ஒரு தோற்றம். இரண்டு ரூபாயைக் கொடுத்துவிட்டு வந்தேன். எப்படியெல்லாம் போகிறது பணம்?!

பேருந்தில் ஏறி அமர்ந்தேன். எனக்குப் பிடித்த கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகச் செல்லும் பேருந்து. பயணத்தில் நான் காணப்போகும் இயற்கை அழகு இப்போதே எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. ஜன்னலோர இருக்கையில் ஜன்னலின் கம்பியில் தலைசாய்த்து லயித்திருந்தேன்.

பேருந்து கிளம்பியது. கடற்கரையின் நீலம் என்னை அழைத்தது. உப்புக்காற்று நாசியைத் தாக்கியது. கடலுடன் காதல்கவி பாடிய தென்றல் கடலையும் தன்னோடு சுமந்து வந்தது. தொடுவானம் தாண்டினால் என்ன இருக்கும் என்றெல்லாம் எண்ணியபடி இயற்கையோடு பயணித்துக் கொண்டிருந்தேன்.

என் அருகே இருந்த மாமனிதருக்குப் புகையிலை போடும் பழக்கம் இருந்தது. என்னைத் தாண்டி ஜன்னல் வழியே புகையிலை எச்சிலைத் துப்பியபடி இருந்தார். பேருந்தின் கூட்டத்தில் வேறு மாற்று இருக்கைக்கும் வழி இல்லாததால் அவரை முறைத்தபடியே அவர் அருகே அமர்ந்திருந்தேன். வேறு வழியின்றி அந்த ஜன்னலோர இருக்கையை அவரிடமே அளித்துவிட்டு அவர் அருகே அமர்ந்தேன்.

என் முன் இருக்கையில் இருந்தவர் சத்தமாக அலைபேசியில் தனது சொத்து விவகாரங்களையெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். பின்னாலிருந்தவர் தனது அலைபேசியில் சத்தமாக பாட்டு போட்டு அனைவருக்கும் இலவச இசைச்சேவை செய்துகொண்டிருந்தார். இத்தனை நேரம் ஜன்னலோர இருக்கையின் காற்றில் எனக்கு இதெல்லாம் கேட்கவில்லை போலும். இப்போது எல்லா சத்தங்களும் காதுக்குள் ரீங்காரமிட்டன. கூட்ட நெரிசல், குறைந்த காற்று, குழந்தைகளின் அலறல்,பெரியவர்களின் வாக்கு வாதம் என மிகவும் இனிமையான பயணம்

சில்லறைக்காக அலைக்கழித்த நடத்துனர், அடிக்கடி அலைபேசியில் அதிமுக்கியமான அழைப்புகளில் பேசிக்கொண்டே பேருந்து ஓட்டிய ஓட்டுநர் என்று அந்தப் பயணம் இன்னும் அழகானது.

மனதில் தோன்றிய சலிப்பைப் போக்குவதற்காக பேருந்தில் என்னைச் சுற்றி இருப்பவர்களின் முகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொருவருக்கும் பயணம் செய்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. கவலை, எதிர்பார்ப்பு, மகிழ்ச்சி, சோர்வு என்று ஒவ்வொரு முகத்தின் உணர்வுக்குப் பின்னாலும் ஆயிரம் பயணக் கதைகள் ஒளிந்திருந்தன.

சுமார் ஒன்றரை மணிநேரப் பயணத்துக்குப் பிறகு பேருந்து ஒரிடத்தில் நிறுத்தப்பட்டது. இந்தப் பக்கமும் அந்தப்பக்கமும் மாற்று உணவகங்களும் சிறுநீர் கழிப்பிடங்களும் இல்லாத இடம். பேருந்தில் வரும் பயணிகள் கட்டாயமாக இந்த இடத்தில் தான் உணவு அருந்தவோ, தின்பண்டங்கள் வாங்கவோ முடியும். ஆண்கள் மறைவான இடம் தேடி சிறுநீர் கழிக்க, பெண்கள் இலவசக் கழிப்பிடங்களிலும் கட்டணம் கட்ட வேண்டியிருக்கும். தேநீரும் குடிதண்ணீருமே கொள்ளை விலை இருந்தாலும் வாங்கியாகவேண்டிய கட்டாயம்.

நானும் இறங்கி சுற்றிவிட்டு அநியாய விலையில் ஒரு மசால்வடை வாங்கிக் கொண்டு பேருந்துக்குள் ஏறினேன். என் இருக்கையில் வயதான் பெரியவர் ஒருவர். “நிற்க முடியவில்லை தம்பி. கொஞ்ச நேரத்தில் இறங்கி விடுவேன். அது வரைக்கும்” என்றார். நான் மறுப்பேதும் சொல்லாமல் நின்று கொண்டிருந்தேன். அவர் என்னைப் பார்த்து வாஞ்சையுடன் புன்னகைத்துவிட்டு உறங்க ஆரம்பித்தார்.

பேருந்து சாலைகளைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தது. பேருந்தின் விரைவில் பின்னோக்கிப் பறந்துகொண்டிருந்தன ஜன்னலோரத்தில் பார்த்த வீடுகளும் மரங்களும். புதுவை வந்திருந்தது. அவரை எழுப்ப எத்தனித்து வேண்டாமென்று விட்டுவிட்டேன். கடலூர் வந்தபின் அசட்டுச் சிரிப்புடன் இறங்கினார் அவர். இதுதான் கொஞ்ச தூரமா என்று எனக்குள்ளேயே கேட்டுக் கொண்டேன்.

மறுபடி என் இருக்கையில் அமர்ந்தேன். பார்வையை மீண்டும் பேருந்துக்குள் ஓடவிட்டேன். எனக்குப் பக்கவாட்டில் இருந்த இருக்கையில் ஓடிய என் பார்வை அங்கேயே நின்றுவிட்டது. நீலப் பூக்கள் நிறைந்த வெள்ளைச் சுடிதாரில் ஒருத்தி. அந்தப் பேருந்தின் இரைச்சலுக்கும் கூட்டத்துக்கும் சற்றே பொருந்தாத தேவதைச் சாயலில் அவள். காற்றின் வேகத்தில் அவள் காதோரம் கவிபாடிய அவளது தலைமுடி என்னை ஆயிரம் முறை தூக்கிலிட்டது. இத்தனை நேரம் இந்தப் பேருந்துக்குள்தான் இருந்தாயா நீ…. ஏன் என் கண்கள் இப்போதுதான் பார்க்கின்றன உன்னை? என்றல்லாம் மூளைக்குள் மொய்த்தன ஆயிரம் கேள்விகள்.

“புத்தூர் வந்தாச்சு” என்று பேரிடியை இறக்கினார் நடத்துனர். ‘ஏன் நாம் அவள் போகுமிடம் வரை செல்லக் கூடாது’ என்று என்னை நமைத்துக் கொண்டிருந்த மனத்தை அடக்கினேன். எனக்காக சாப்பிடாமல் வீட்டில் காத்துக் கொண்டிருக்கும் அம்மாவையும் தங்கையையும் நினைத்துக் கொண்டே இறங்கினேன். என் ஒரு பாதி பேருந்துக்குள் தொலைந்திருந்தது.

உள்ளத்தைத் தொலைத்த உடல் மட்டுமே வீட்டுக்குள் வந்தபோது இரவு மணி ஒன்பது இருக்கும். தன் குடியைக் கூடக் காப்பாற்ற முடியாமல் குடியால் இறந்த என் தந்தைக்கு உணவு படைத்துவிட்டு அம்மா,தங்கை, நான் மூவரும் உணவருந்தினோம். என் மாதச் சம்பளம் பத்தாயிரத்தில் வீட்டுச் செலவுக்காக அம்மாவிடம் ஏழாயிரத்தைக் கொடுத்துவிட்டு, மீதி தங்கையின் கல்யாணத்துக்கு என்று நினைத்துக் கொண்டே உறங்கப் போனேன்.

என் பயணத்தின் தேவதையைப் பற்றி நினைத்துக் கொண்டே படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். இந்தப் பயணத்தின் பிழைகளுக்கு நடுவே ஒரே ஆறுதல் அவளைக் கண்டதுதான்.

தினம் தினம் எத்தனை பயணங்கள் எத்தனை பிழைகள். நாளையும் எல்லா கஷ்டங்களுக்கு மத்தியிலும் ஒரு ஆறுதல் எனக்கு வரும் என்று நம்பியபடி தூங்கினேன். நாளை மற்றுமொரு நாளே……

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *