கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: May 27, 2014
பார்வையிட்டோர்: 10,480 
 

அரைத்தூக்கத்திலிருந்து விழித்து கதிரையிற் சாய்ந்திருந்த தலையை நிமிர்த்தி அவர்களைப் பார்த்தான். அவர்கள் இப்போது சற்று நெருக்கமாக அமர்ந்திருந்தார்கள். அந்த இளைஞர்கள் இருவரும் பேசத்தொடங்கியிருந்தார்கள். பேசுவது கேட்கக்கூடியதும் ஆனால் பேசுவது இன்னதென்று புரியாததுமான தூரத்திற்தான் அவன் அமர்ந்திருந்தான். எனினும் அவர்களது பேச்சில் அவனுக்கு எவ்வித ஆர்வமுமில்லை.

கராச்சி விமானநிலையம் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தது. கொழும்பிலிருந்து வந்த விமானம் கராச்சியில் தரை இறங்கியபோது இருள் விடியாத அதிகாலைப்பொழுதாயிருந்தது. விமான நிலைய அலுவலர்கள்கூட தூங்கி வழிந்துகொண்டிருந்தனர். இந்த விமானம் இந்த நேரத்தில் ஏன் இங்கு வந்து எங்கள் தூக்கத்தைக் கெடுத்தது என்பது போன்ற கோபத்தைப் பயணிகளிடம் காட்டினர். பயணிகள் அவர்களிடம் ஏதாவது விபரம் கேட்டால் சினப்பட்டனர்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மூன்று மணித்தியாலங்கள் தாமதமாகத்தான் கொழும்பிலிருந்து விமானம் கிளம்பியது. அதனால் கராச்சியிலிருந்து கிரீசுக்கு பயணிக்கவேண்டிய அடுத்த விமானத்தைத் தவறவிட்டுவிடுவோமா என்ற பதற்றத்துடன்தான் வந்தான். கராச்சியில் இறங்கியதும் அவசரமாக வந்து அதுபற்றி விசாரித்தான். அலுவலர் (வேண்டா)வெறுப்புடன் அவனைப் பார்த்து, கொஞ்சம் பொறும் என்றார். அவன் பொறுமையைக் கடைப்பிடித்து நின்றான். விமானப்பயண விபரங்களைக் காட்டும் இலத்திரன் திரையை கண்கள் தேடின. திரையும் கண்களை மூடிக்கொண்டிருந்தது. இந்த நேரத்தில் அதுகூட உறங்கிவிட்டதோ?

கிரீஸ் விமானத்தில் பயணிக்கவேண்டிய ஏனையோரையும் அவனுடன் நிறுத்தினார் அலுவலர். வந்தவர்கள் இன்னும் மூன்று பேர்.. ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தபடி நின்றனர். அடுத்த விமானத்தைப்பற்றிய கவலைதான் அவர்களுக்கும். கோட், டை சகிதம் இரு இளைஞர்கள் தோற்றமளித்தனர். அரச மட்டத்தில் ஏதாவது மாநாட்டுக்காக ஐரோப்பிய நாடுகளுக்குப் போகிறவர்களாக இருக்கலாம் என நினைத்துக்கொண்டான். மற்றவள் ஒரு பெண்.. சற்று விலகியே நின்றாள்.

இப்படியே எவ்வளவு நேரம் நிற்கவேண்டிவருமோ என்ற கவலை அவனுக்குள் முளைவிட்டது. ஒரு மணித்தியாலமளவிற் காத்திருந்த பின்னர் அலுவலர் ஒருவன் வந்தான். ‘என்னோடு வாருங்கள்” எனக் கூறியவாறு முன்னே நடந்தான். அப்படிக் கூட்டிவந்தவன் இங்கே அமர்த்தினான். ‘நீங்கள் கிரிசுக்கு பயணிக்கவேண்டிய விமானம் குறிப்பிட்ட நேரத்துக்கே போய்விட்டது. அடுத்த பயண ஒழுங்கு செய்யும்வரை காத்திருங்கள்..’ என்ற துப்பையும் துலக்கிவிட்டுச் சென்றான்.

நீண்ட நேரம் கதிரையிற் சாய்ந்திருந்ததில் முதுகு உளைந்தது. நிமிர்ந்து எழுந்தான். எதேச்சையாக கண்கள் அவர்கள் பக்கம் திரும்பியது. புதிதாக அறிமுகமான நண்பர்களைப்போல அவர்கள் மிக ஆர்வமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவன் தங்களைப் பார்ப்பதைக் கண்டதும், அவனோடு அறிமுகமாவதற்கு அவர்கள் விரும்புவதுபாலப் பட்டது. ஆனால் யாருடனும் நட்புக் கொள்ளும் மனோநிலையில் அவன் இல்லை. அவனது நினைவுகளும் இங்கு இல்லை.

யாழ்ப்பாணத்தில் விட்டு வந்த மனைவியையும் பிள்ளைகளையும் எண்ணி ஒருவித சோக நிலைக்குட்பட்டிருந்தது மனம். இந்த நடு இரவில் அவர்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருப்பார்களா அல்லது தூரத்தில் கேட்டுக்கொண்டிருக்கும் குண்டுச் சத்தங்களில் உறக்கம் கலைந்து கலங்கிக்கொண்டிருப்பார்களா எனக் கவலையாயிருந்தது. இன்று, தான் பயணித்த செய்திகூட மனைவியைச் சென்றடைந்திருக்குமோ தெரியாது என்ற கவலையில் மனம் தவித்தான். சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர்தான் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வந்தான். முன்னர் வேலை செய்த வெளிநாட்டு நிறுவனத்தில் மீண்டும் வேலைக்கு முயற்சிக்கலாம் என்ற எண்ணத்துடன்தான் வந்திருந்தான். யுத்த நிலைமைகளால் ஏற்பட்ட கஷ்ட்ட நிலைமை அவனை அங்கிருந்து உந்தித் தள்ளியது.

வீட்டிலிருந்து புறப்பட்டு வந்தபோது மனைவியின் ஆற்றாமை வெளிப்பட்டது. ‘போறத்துக்கு முதல் வந்திட்டுப் போங்கோ..!”

‘வேலையை ஒழுங்கு செய்திட்டு திரும்பி வந்திட்டுதான் போவன். பிள்ளையைக் கவனமாய்ப் பார்த்துக்கொள்ளுங்கோ..!” மனைவியைத் தேற்றுவதற்காகத்தான் அப்படிக் கூறினான். திரும்ப வந்துபோகும் விருப்பம் அவனுக்கும் இருந்தது. ஆனால் அது சாத்தியப்படுமா என்பது அவனுக்குத் தெரியாது.

கொழும்புக்கு வந்த ஒரு கிழமைக்குள்ளேயே வேலைக்குரிய சகல ஒழுங்குகளும் செய்தாகிவிட்ட நிலையில், பயணப்படும் நாளைத் தள்ளிப்போட்டுக் கொண்டிருந்தான். அந்த இடைவெளியில் ஒருமுறை வீட்டுக்குப் போய்வரலாம் என்ற ஆசைதான் காரணம். ஆனால் ஓர் அற்புதம் நடந்தாலொழிய யாழ்ப்பாணத்துக்குப் போய்வருவது சரிப்பட்டுவராது போலிருந்தது. இனியும் காலம் தாமதிக்க முடியாது எனக் கம்பனி நெருக்குதல் கொடுத்ததும்.. பயணமாகிவிட்டான்.

கடிதத்தில் செய்தியை எழுதி மனைவிக்கு போஸ்ட் பண்ணியிருந்தான். இன்னும் அக்கடிதம் யாழ்ப்பாணத்தில் அவளுக்குக் கிடைக்காதிருந்தால், வருவார்.. அவர் வருவார் எனும் எதிர்பார்ப்புடனேயே அவளுக்கு ஒவ்வொரு பொழுதும் கழியும்.

ஆனால் அவன், இப்போது அவளுக்குப் பக்கத்தில் வரும் தூரத்தில் இல்லை. கடல் கடந்து வந்தாயிற்று. கொழும்பில் நின்ற நாட்களில் நடந்து திரியும்போதெல்லாம் மனைவியின் நினைவுகளை மனம் அசை போட்டுக்கொண்டிருக்கும். நிலத்தூடு உள்ள தொடர்பு தன்னைத் தன் மனைவியுடன் இணைத்து வைத்திருக்கிறது எனும் பிரமை ஏற்பட்டவன் போல, சில சமயங்களில் செருப்புக்களைக் கழற்றிவிட்டு நிலத்தில் கால் பதித்து நிற்பான். இப்போது பிரிவு நேர்ந்துவிட்டது. கடிதம் அவளது கையிற் கிடைத்ததும் துடித்துப்போவாள். பிள்ளைகளுக்கு முன்னால் அவளால் குமுறிக் குமுறி அழமுடியாது. அவனுடனான நீண்ட பிரிவுக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள அவளுக்குப் பல நாட்களாகும். அல்லது அவன் திரும்ப வரும்வரை அந்தப் பிரிவு அவளுக்கு ஆற்றாததாகவே இருக்கும். இராணுவ நகர்வு, குண்டுவீச்சு என யுத்தம் உக்கிரமடையும் போதெல்லாம் அவள் தனியாகவே பிள்ளைகளைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு ஓடவேண்டிவரும். நிமிடத்துக்கு நாற்பது ஐம்பது குண்டுகளை ஏவும் கொல் கருவிகளெல்லாம் வந்துவிட்டதாம்! ஏவப்படும் குண்டுகள் விழுந்து வெடிக்கும் கணத்திலேயே அந்த சுற்று வட்டாரத்திலுள்ள வீடு வாசல்களையெல்லாம் துவம்சம் செய்கின்றனவாம். அதற்குள்ளே தப்பி ஓட முடியாது கொல்லப்படும் உயிர்கள் எத்தனை?

அதற்குமேல் அவனால் சிந்திக்க முடியவில்லை. கைகளால் கண்களைப் பொத்தி அழுகையை மறைத்தான். வெளிச்சம் உறக்கத்தைத் தடை செய்வதுபோலவும் அதனால் கண்களை மறைத்துக்கொண்டிருப்பது போலவும் மற்றவர்கள் கருதும்படி பாசாங்கு செய்தான். அந்த நேரத்தில் பிள்ளைகளின் நினைவும் வந்தது. புறப்பட்டு வந்தபோது, கண்கள் கலங்கி பேச்சற்று… பயத்துடனும் ஏக்கத்துடனும் நின்ற பிள்ளைகளின் முகங்கள் கண் திரையில் மீண்டு வந்தன. அழுகை விம்மலாக வெடித்துவிடும் அபாயத்தை உணர்ந்து சட்டென எழுந்து பக்கத்திலிருந்தவர்கள் பக்கம் திரும்பிப் பார்க்காமலே ரொய்லெட் பக்கம் போனான்.

மனைவியும் இப்போது அழுதுகொண்டிருக்கலாம். பிள்ளைகள் உறங்கிய பின் யாருமற்ற தனிமைதான் அவளுக்கு அழுவதற்கு உகந்த நேரமாயிருக்கும். பகல் முழுவதும் அடக்கி வைத்திருந்த அழுகை இப்போது உடைந்து வந்து தலையணையை நனைக்கும்.

தண்ணீராற் கண்ணீரைக் கழுவித் துடைத்துக்கொண்டு வந்தான். அவன் வருவதை அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். அவன் ஏதாவது தங்களுடன் பேசுவானா என அவர்கள் எதிர்பார்ப்பது போலிருந்தது. ஒரு முகஸ்துதிக்காகவேனும் அவர்களுக்குப் புன்னகைக்காது இருக்கையில் அமர்ந்தான்.

சற்றுநேரத்தில் அந்தப் பெண் எழுந்து அவனக்கு அண்மையில் வந்தாள். இள வயதுச் செழிப்பு அவள் முகத்திற் தெரிந்தது. ரைட் ஸ்கேர்ட், கை நீளமற்ற சட்டை… இந்த அதிகாலைக் குளிரைக்கூட மிக அநாயசமாகத் தாங்கிக்கொண்டிருந்தாள்.

‘ஒயாத் லங்காவெத…” (நீங்களும் இலங்கையா?)

இதென்ன கேள்வி என்று அவனுக்குத் தோன்றியது. இலங்கையிலிருந்தான் வருகிறோம். முகங்களில் வேறு அச்சடிக்கப்பட்டிருக்கிறது. அதற்குள் எதற்காக இப்படி ஒரு கேள்வி? ஒரு சம்பிரதாயத்துக்கு அறிமுகமாகும் கேள்வியாயிருக்கலாம்.

‘ஒவ்” (ஓம்)

‘யன்னே… கொஹேத? (எங்கே போறீங்கள்?)”

கிரீஸ் நாட்டுக்குப் போவதாகப் பதிலளித்தான். மேலும் அவள் அவனை விசாரித்தாள். ஒரு கப்பற் கம்பனியில் பணிபுரிவதாகக் கூறினான். அவன் கேட்காமலே அவள் தன்னை அறிமுகம் செய்தாள். “சுவர்ணா“ எனத் தன் பெயரைக் குறிப்பிட்டாள். கிரிஸில் ‘ஹெளஸ் மெயிட்டாக’ வேலை பார்ப்பதாகக் கூறினாள். மற்ற இரு இளைஞர்களும் எழுந்து அண்மையாக வந்தனர். ‘இவன் சுசந்த… அவன்… ஜானக..” என அவர்களை அறிமுகம் செய்தாள் சுவர்ணா. ‘இவர்களும் கிரீசுக்குத்தான் போகிறார்கள்..” எனக் கூறினாள். ஏதாவது கேட்கவேண்டுமென்பதற்காக ‘அரச அலுவல்களாகப் போகிறீர்களா?” எனக் கேட்டான்.

‘ஒவ்… ஒவ்” அரைகுறையாகத் தலையசைத்தார்கள்.

பேச்சுக்கள் வளர்ந்தன. சுவர்ணா கேட்டாள் – ‘இலங்கையில் நீங்கள் எந்த இடம்?”

‘யாப்பனய… (யாழ்ப்பணம்)”

அதைக் கேட்டதும் அவர்களுக்குள் ஒரு பின்வாங்கல் ஏற்பட்டதுபோல உணர்ந்தான். தொடர்ந்து பேசுவதற்கு அவர்கள் தயங்குவது தெரிந்தது. மீண்டும் பேசினார்கள்.

‘உங்கள் குடும்பம் யாழ்ப்பாணத்திலா?” “அங்கே சீவிப்பது பயமில்லையா?.. யுத்த நிலைமைகள் எப்படி?“ போன்ற கேள்விகளைக் கேட்டார்கள். இராணுவ நகர்வுகள் குண்டு வீச்சுக்களின்போது பட்ட அவஸ்தைகளை விபரித்தான்.

“அப்பே…. மஹத்தயாத்… எஹேத் தமயி… வட கறன்னெ (எனது கணவரும் அங்குதான் வேலை செய்கிறார்)“ குறுக்கிட்டுக் கூறினாள் சுவர்ணா.

அவன் பார்வை கேள்விக்குறியானது.

‘ஹமுதாவென்…. (இராணுவத்தில்)” – அவள் அதைச் சற்றும் தாமதிக்காமல் தெரிவிக்க விரும்பியதுபோலிருந்தது.

அவன் சிலவேளை இராணுவ நடவடிக்கைகளை இன்னும் தாக்கி விமர்சிக்கக்கூடும். அப்படி ஒரு தர்மசங்கட நிலைக்கு முகம் கொடுக்க அவள் விரும்பவில்லையோ அல்லது தனது கணவனும் யாழ்ப்பாணத்தில் பணிபுரிவதாகத் தெரிவிப்பதன் மூலம் தனக்கும் ஒரு நெருக்கம் இருக்கிறது என நட்புணர்வைக் காட்ட விரும்புகிறாளோ?

‘யுத்த முனையில் இருக்கிறார். இனி நாங்கள் மீண்டும் சந்திப்போமா என்னவோ?”- ஒரு பெருமூச்சுடன் கூறினாள். அவனுக்கு அது வெறும் மாயமோ என்று தோன்றியது. கணவனைப் பிரிந்து வருகின்ற எந்தச் சோகமுமின்றி கலகலத்துப் பேசினாளே? யாழ்ப்பாண நிலைமைகளை விடுத்து விடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தாள். ஒருவேளை கணவன் அங்கிருப்பதால் உண்மை நிலைவரத்தை அறிய விரும்புகிறாளோ?

‘நீங்கள்… அங்கே இருக்காமல் குடும்பத்தை இந்தப் பக்கம் கூட்டி வந்து விடலாம்தானே…? பயமில்லாமல் சீவிக்கலாம்… இப்ப அநேகம் பேர் இடம்பெயர்ந்து வந்துவிட்டார்கள்தானே?”

சுவர்ணா ‘இந்தப் பக்கம்’ எனக் குறிப்பிட்டது வடக்கு, கிழக்கு தவிர்ந்த இலங்கையின் ஏனைய பகுதிகளைத்தான் என்பது புரிந்தது.

விரக்தியின் ஒருவித வெளிப்பாடாக பதிலை அவன் கேள்வியாகவே கேட்டான், ‘எல்லாரும் அங்கிருந்து வெளியேறுவதை விட… அந்தப் பக்கங்களில் யுத்தத்தை நிறுத்தி, ராணுவத்தை வெளியேற்றி அமைதி நிலவச் செய்வது சுலபம்தானே…?”

0

விடிந்து எட்டுமணிபோல் ஓர் அலுவலர் வந்து அழைத்தார். ‘நாளைக்கு மாலைதான் உங்களுக்கு அடுத்த பிளைட்.. அதுவரை நீங்கள் தங்குவதற்கு ஹோட்டல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.. வாருங்கள்..!”

ஹோட்டலில் அறை ஒழுங்கு செய்யப்படும்வரை முன் மண்டபத்தில் காத்திருந்தபோது சுசந்தவும், ஜானகவும் அவனுக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்தனர்.

‘சேர், நாங்கள் உங்களுக்கு முதலில் ஒரு பொய் சொல்லிவிட்டோம். உண்மையில் நாங்கள் அரசாங்க அதிகாரிகளல்ல. வடக்கில் பணிபுரிந்த இராணுவத்தினர். வீட்டுக்கு லீவில் வந்தபின்னர் திரும்ப முகாமுக்குப் போக விரும்பவில்லை. இப்போது கிரீசுக்குப் போகிறோம்..” சற்று ஆச்சரியத்துடன் அவர்களைப் பார்த்தான். இராணுவத்திலிருந்து பலர் தப்பிப் போவது பற்றி ஏற்கனவே பத்திரிகைகளில் வாசித்திருக்கிறான். அப்படி விட்டு விலகும் காரணமென்ன என இவர்களிடம் கேட்கலாமோ என்று தோன்றியது. எனினும் ஓர் உள்ளுணர்வு தடுத்தது. ஏதும் பேசாமல் அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தான்.

‘ஒரு ஏஜன்ட்டுக்கு நிறையக் காசு கட்டியிருக்கிறோம். அவர்களுடைய பிரதிநிதி கிரீஸ் விமானநிலையத்தில் வந்து கூட்டிச் செல்வாராம். அது சரிவருமோ அல்லது மாட்டுப்பட்டு விடுவோமோ என்று பயமாயுமிருக்கிறது… கடவுளேயென்று பிரச்சினை ஏதுமின்றிப் போய்விட்டால் அங்கேயே ஏதாவது தொழில் செய்து கொண்டிருக்கலாம்.”

ஹோட்டலில் சுசந்தவும் ஜானகவும் ஓர் அறையை கேட்டுப் பெற்றுக்கொண்டனர். அவனுக்கு ஒரு தனி அறையும் சுவர்ணாவுக்கு இன்னொரு அறையும் ஒதுக்கப்பட்டது.

பூட்டிய அறைக்குள் வந்ததும் மீண்டும் வீட்டு நினைவுகள் தலைதூக்கியது அவனுக்கு. நேரத்தைப் பார்த்தான். இப்போது பிள்ளைகள் ஸ்கூலுக்குப் போயிருப்பார்கள். வீட்டில் நின்றபோது, பிள்ளைகளை ஸ்கூலுக்குக் கூட்டிப்போவான். பிள்ளைகள் தனியே போகப் பயப்படுவார்கள். வீதிகளில் சாதாரண மக்களை விட துவக்குக்களுடன் ரோந்து வருபவர்கள்தான் அநேகம். சோதனைத் தடைநிலையங்கள்… விசாரிப்புகள்! இப்போது யார் துணையுடன் போகிறார்களோ தெரியாது. பள்ளி மாணவிகள்… பச்சைப் பாலகர்கள்கூட கோரக்கொலை செய்யப்பட்டு புதைகுழிகளுக்குள் போடப்பட்ட செய்திகள் சம்பந்தமில்லாமல் இந்த நேரத்தில் நினைவில் வந்து கலக்கத்தை ஏற்படுத்தின. கொழும்புக்கு வந்தபோது யோகா மாமாவை பிள்ளைகளைக் கூட்டிப் போவதற்கு ஒழுங்கு செய்திருந்தான். இப்போது அவரும் வருவதில்லை என (கொழும்பில் அவன் நின்றபோது) மனைவி குறிப்பிட்டு எழுதியிருந்தாள். என்ன செய்கிறார்களோ?

கட்டிலிற் சாய்ந்தான். அறைக்கு வரும்போது குளிக்க வேண்டும்போல அசதியாயிருந்தது. குளிப்புத்தான் அன்றைய நாள் விடிந்ததன் புத்துணர்ச்சியைத் தரும். ஆனால் இப்போது அப்படியொரு புத்துணர்ச்சி வேண்டாம் போலுமிருந்தது. அசதியும் சோகமும் அடித்துப் போட்டதுபோல உறங்கிப் போனான்.

0

…கதவு தட்டப்படும் சத்தம் உறக்கத்தில் கேட்டது. அது கனவில் ஒலிப்பதுபோலுமிருந்தது. எழுந்துவிட முயன்றான். முடியவில்லை. தலையை யாரோ அழுத்திப்பிடிப்பது போலிருந்தது. முயன்று முயன்று தலையை மிகவும் சிரமப்பட்டு நிமிர்த்தினான். தான் எங்கிருக்கிறேன் என அனுமானிக்க முயன்றான். வீட்டிலா, கொழும்பிலா அல்லது பிளேனுக்குள்ளா…? தலை சுற்றியது. சுய இயல்புநிலைக்கு வர நேரம் பிடித்தது. எழுந்து கதவைத் திறந்தான்.

சுசந்தவும் ஜானகவும் வாசலில் நின்றார்கள். ஒரு திடுக்குறல் ஏற்பட்டது. இராணுவத்திலிருந்து தப்பி வந்தவர்கள் அவர்கள். இராணுவ நடடிவக்கைகளைப்பற்றி அவர்களுக்கு ஏற்கனவே குறை கூறியிருக்கின்றான். இப்போது ஏன் அறையைத் தேடி வந்திருக்கிறார்கள்?

கதவைப் பூட்டும் எச்சரிக்கையுணர்வுடன் கேட்டான், ‘மொனவத…? (என்ன?)”

‘சேர் காவெ நெத்த…? என்ட யமு கண்ட… (சாப்பிடவில்லையா…? வாங்க சாப்பிடப் போவோம்…)”

‘ஒகொல்லொங்… யன்ட… மம பஸ்ஸ கன்னங்… (நீங்க போங்க… நான் பிறகு சாப்பிடுகிறேன்)”

அவர்கள் போகவில்லை. அவனை வெளிக்கிட்டு வருமாறு வற்புறுத்தினார்கள்.

‘என்னைக் தொந்தரவு படுத்தாமல் போங்க. நான் இன்னும் குளிக்கவுமில்லை”

கதவைப் படாரென அவர்களது முகத்திற் சாத்தினான். உள்வந்து படுக்கையில் விழுந்தான். எரிச்சலில் தனக்குள்ளே முணுமுணுத்தான்.

சற்று நேரத்தில் மீண்டும் கதவு தட்டப்பட்டது. எழுந்து திறக்காமல் படுத்திருந்தான். விடாமல் விட்டுவிட்டுத் தட்டப்பட்டது. ‘இவங்களுக்கு உதைக்கவேணும்’ – சீற்றத்துடன் எழுந்து கதவைத் திறந்தான்.

சுவர்ணா வாசலில் நின்றாள். கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்து கட்டிலில் அமர்ந்தாள்.

‘என்ன குளிக்கவில்லையா…? முகம் அப்படி வீங்கியிருக்கே… அழுதீங்களா…?”

‘இந்த அறையில் முடங்கிக் கிடப்பதற்கு… குளிப்பு முக்கியந்தானா…?”

‘அப்படிச் சொல்லவேண்டாம் சேர்… உற்சாகமாயிருந்தால் எல்லாம் நல்லபடி நடக்கும்… கவலைப்படாமல் குளிச்சிட்டு வாங்க சாப்பிடப் போகலாம்”

‘இப்படிச் சொல்வது உங்களுக்கு இலகுவாயிருக்கும் சுவர்ணா… யுத்தப் பிரதேசத்தில் மனைiவியையும் பிள்ளைகளையும் விட்டு வந்தவனின் மனநிலை உங்களுக்குப் புரியாது.”

சுவர்ணாவின் முகம் மாறியது. அதுவரையிருந்த உற்சாகம் இழந்தவள்போல் தணிந்த குரலிற் சொன்னாள்.

‘நீங்கள் நினைக்கிறமாதிரி இல்லை சேர்… எனக்கும் கவலைகள் இருக்கு. என் கணவர் யுத்தமுனையில் இருக்கிறார். இப்போது நான் லீவில் சென்று வீட்டில் நின்றபோதுகூட அவருக்கு வந்து என்னைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனக்குப் பெரிய ஏமாற்றம். நாங்கள் இனி எப்போதாவது சந்திப்போமா என்றுகூட சந்தேகம் தோன்றுவதுண்டு. அவர் யுத்தமுனையில் செத்தும் போகலாம்.. எனது இரண்டு குழந்தைகளையும் என் தாயாருடன் விட்டுவிட்டு நான் வெளிநாட்டுக்குப் போய் உழைக்கிறேன்…”

அவன் ஏதும் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தான்.

‘உங்களுடன் காலையில் பேசியபின்… எனது உள்ளுணர்வுகள் தூண்டப்பட்ட மாதிரி… ஏதோ ஒரு கவலை! கணவனை நினத்தா… யாழ்ப்பாணத்தில் இருக்கிற ஆட்களை நினைத்தா… அல்லது உங்கட சோகமான மனநிலையை நினத்தா… என்று தெரியவில்லை. ஐயோ கடவுளே… எங்கட பிள்ளையளின்ர… காலமாவது நல்ல மாதிரி வரவேணும்…”

அவளது தொண்டை அடைத்துக்கொண்டது. சற்று நேரம் மௌனமாயிருந்து.. பின்னர் பேசினாள்.

‘நீங்கள் குளிச்சிட்டு வாங்க சேர்… சாப்பிடப் போகலாம். நீங்கள் வராவிட்டால் நான் இங்கிருந்து போகமாட்டேன்…”

அவன் ஆச்சரியம் மேலிட சுவர்ணா என்ற அந்தப் பெண்ணை உற்று நோக்கினான். பின்னர் எழுந்து குளியலறைக்குள் சென்றான்.

குளித்து ரெடியாகி அங்கிருந்து வெளியேறியபோது ‘சுசந்தவும், ஜானகவும் முன்மண்டபத்தில் காத்திருப்பார்கள்..’ எனக் கூறினாள் சுவர்ணா.

0

சாப்பாட்டு மண்டபத்துள் நுழைந்ததும் மெஸ் மனேஜர் அவர்களது ரோக்கினைப் பெற்றுக்கொண்டு சொன்னான். ‘செல்ஃப் சேவிஸ்தான்.. உள்ளே போய் விரும்பியதைப் பகிர்ந்து சாப்பிடுங்கள்..”

பல நாடுகளையும் சேர்ந்த பயணிகள் அங்கு உணவருந்திக்கொண்டிருந்தனர். அவன் எவ்வித லயிப்புமின்றி நிற்க, சுவர்ணா அவனது கோப்பைக்கும் உணவைப் பரிமாறினாள். சாப்பாட்டுக் கோப்பைகளுடன் தனிப்பட்ட ஒரு மேசைக்குப்போய் அவர்கள் அமர்ந்தனர். உணவருந்திக் கொண்டிருந்தபோது சுசந்த சொன்னான்.

‘பார்த்தீங்களா… நாங்களெல்லாம் எவ்வளவு ஒற்றுமையாக சேர்ந்திருக்கிறம்… இதுபோல இலங்கையிலும் நாங்கள் சேர்ந்திருக்கலாம்தானே…?”

அவர்கள் மூவரும் சொல்லிவைத்ததுபோல நிமிர்ந்து பதிலுக்காக அவனது முகத்தைப் பார்த்தனர்.

‘இருக்கலாம்தான். அது உங்களுடைய கையிற்தான் இருக்கு. இலங்கையிலிருக்கும்போது நீங்கள் இப்பிடியெல்லாம் சிந்திப்பீங்களோ தெரியாது. அங்கென்றால் நிலமை வேறமாதிரியிருக்கு…! ஒரு உதாரணத்துக்குச் சொல்லுறன். இந்த மண்டபத்தையே பாருங்கோ… பயணிகளாய் வந்த பல நாட்டு மக்கள் இருக்கினம். ஆனால் வெள்ளைக்காரர்கள் ஒரு பக்கமாயும், அரபியர்கள் இன்னொரு பக்கமாயும் நாங்கள் இந்த மேசையிலும் அவரவர் நாடு அல்லது இனம் என்ற அடிப்படையில் சேர்ந்திருக்கிறம். புதிதாக ஆராவது வந்தாலும் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு தங்கட ஆட்கள் இருக்கிற பக்கமாய்த்தான் போய் இருக்கிறான். அது இயல்பான பாதுகாப்புணர்வு. அதிலை பிழையில்லை. அதற்காக இவர்களெல்லாம் எதிரிகளோ விரோதிகளோ என்று அர்த்தமில்லை. ஆனால் அதுக்குள்ளை அதிகமானோராய் இருக்கிற வெள்ளைக்காரர்… இதுவும் ஒரு உதாரணத்துக்குத்தான் சொல்லுறன்… எங்களைப் பார்த்து… ‘நீங்கள் என்ன, கறுப்புத் தோல்காரர்…. எப்படி எங்களுக்குச் சமனாய் இருந்து சாப்பிடமுடியும்?’ என்று கேட்டால் அதுதான் பிரச்சினை… சிறுபான்மையானவர்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளிக்காததால் ஏற்பட்ட விளைவுகளைத்தான் இப்ப எங்கட நாட்டில் எதிர்கொள்ளுறம்…”

அவனுக்குள் படபடப்பு ஏற்பட்டிருந்தது. சுவாச இயக்கம் மூசி மூசி வெளிப்பட்டது.

‘சாதாரண மக்களுக்குள் ஒரு துவேசமுமில்லை. அரசியல்வாதிகள்தான் தங்கட லாபத்துக்காக மக்களையும் தூண்டிவிடுகினம். எல்லாத்தையும் போட்டுக் குழப்புகினம்…” – சுவர்ணா அவனது கோபாவேசத்தை தணிவிக்க முயல்வது போலிருந்தது..

‘அவையள் மட்டும் காரணமில்ல. மக்களின்ர செயல்பாட்டில்தான் மாற்றம் தங்கியிருக்குது… சும்மா பார்த்துக்கொண்டிருக்கிறதை விட்டு, யுத்தம் வேண்டாம் என்று நீங்கள் உரத்துக் குரல் கொடுக்கயில்லைத்தானே…?” – அவன் அவர்களை முகத்துக்கு முகம் நோக்கவும் விரும்பாமலிருந்தான்.

‘சரி… சரி… அந்தப் பேச்சுக்களை விட்டுச் சாப்பிடுவோம்.. நல்ல அருமையான சாப்பாடு…” சுவர்ணா கதையை திசைமாற்றினாள்.

அவன் தலையைக் குனிந்து சாப்பிடத் தொடங்கினான். ஒரு வேகத்தில் கை அள்ளி அள்ளிக் கொடுக்க வாய் சாப்பிடும் அலுவலைச் செய்துகொண்டிருந்தது. வயிறு நிறைந்தது. மனம் உடைந்துவிட்டது. அவனுக்கு அவ்விடத்தில் இருக்க முடியவில்லை. எழுந்து தன் அறைக்குச் சென்றான்.

கட்டிலில் விழுந்தான். புரண்டு புரண்டு படுத்தான். நாட்டு நிலைமைகள்.. அதனால் ஏற்பட்டுப்போன சீரழிவுகள் எல்லாம் மனத்திரையில் ஓடின. பிள்ளைகளின் காலங்களிலாவது, அதுகள் நிம்மதியாக வாழக்கூடியதாக இருக்குமா என மனம் குழம்பிக் கொண்டிருந்தது. மகன் நினைவில் வந்தான். ஐந்து வயதுப் பாலகன். துடினமான பிள்ளை. ஓரிடத்தில் இருக்கமாட்டான். ஓடி விளையாடுவான். ஏதாவது குறும்புகள் செய்வான்.

யுத்தம் உக்கிரமடைந்திருந்த ஒருநாளில் கோர இரைச்சலுடன் வந்த விமானங்கள் வீசிய குண்டுகள்.. வீட்டுக்கு மிக அண்மையில் முழங்கி விழுந்தன. பதுங்கு குழிக்குள் இறங்கிய பின்னர் வெளியே வர மறுத்துவிட்டான். வற்புறுத்திக் கூட்டிவர, எல்லோரையும் மிரட்சியுடன் பார்த்தான். சிறு சத்தம் கேட்டாலே பயந்தான். ஏதாவது கேட்டாலும், பேசாது யோசனையில் ஆழ்ந்திருந்தான். ஏனைய பிள்ளைகளுடன் விளையாடவும் போகாமல் ஒதுங்கி ஒதுங்கியிருந்தான். எப்போதும் பதுங்கு குழிக்குள் போயிருக்க வேண்டுமென அடம்பிடித்தான். பொழுதுபடுகையில், “கதவைப் பூட்டுங்கோ… ஜன்னலைப் பூட்டுங்கோ…“ என அழத் தொடங்கிவிடுவான்.

பிள்ளையோடு தானும் ஒரு பிள்ளையாகப் பழகி ஒரு தோழனைப்போல அவனது கைகளைப் பிடித்து மெல்ல மெல்ல விளையாட்டுக்காட்டி பிள்ளையின் மனநிலையை மீட்டெடுக்கும் தவிப்புடன் கழித்த நாட்கள் நினைவில் வந்தன. இனி, பிள்ளைகளை விட்டு எங்கும் போவதில்லை என அப்போது எண்ணியிருந்தான். ஆனால் இப்போது…

கண்கள் கலங்கின.

0

கதவு தட்டப்பட்ட பின்னர் தள்ளித் திறக்கப்பட்டது. உள்ளே வந்தது சுவர்ணாதான். கட்டில் விளிம்பில் அமர்ந்தாள். அவன் கால்களை ஒதுக்கி எழுந்தான்.

‘என்ன சேர் அழுதீங்களா..?”

‘இல்லை… இல்லை…” சமாளித்தான்.

‘உங்களுக்கு மத்தியானம் என்மேல சரி கோபம்தானே…? சுசந்தவும் ஜானகவும் வருத்தப்பட்டார்கள்… எங்களில கோபப்படுகிறீர்களா…?”

‘இல்லை… இல்லை…”

‘நீங்கள் இந்த அறைக்குள்ளேயே அடைந்து கிடக்காமல் வெளியில வாங்க… எனக்கு உங்களைப் பார்க்கக் கவலையாயிருக்கு”

அவன் மௌனமாயிருந்தான்.

‘வாங்க சேர்… வெளியே போய்வரலாம்”

‘எங்கையும் நான் வரல்ல. வற்புறுத்தாமல் தயவு செய்து இங்கயிருந்து போங்க..!”

‘ஏன்… நான் இங்க.. அறையில இருக்கிறது உங்களுக்குப் பிடிக்கயில்லையா..?”

‘நான் அந்த அர்த்தத்தில சொல்லயில்ல… ப்ளிஸ்.. எனக்குத் தலையிடியாயிருக்கு.. கொஞ்சம் தனிய இருக்கவிடுங்க…”

சுவர்ணா அறையிலிருந்து வெளியேறினாள்.

இரவு சாப்பாட்டுவேளையிலும் அவர்கள் அறைக்கு வந்து அவனை அழைத்தனர்.

‘நான் வருவேன்தானே… எனக்குப் பசித்தால் சாப்பிடுவேன்தானே.. ஏன்… இப்படி தொல்லைப்படுத்திறீங்க?”

‘எங்களுக்குத் தெரியாதா… நாங்கள் வராவிட்டால் நீங்கள் இங்கையே படுத்துக்கிடப்பீங்கள்.. சாப்பிடவும் மாட்டீங்க..! ”

இதற்குப் பிறகு அவன் ஏதும் பேசாமல் எழுந்து அவர்களுடன் சென்றான்.

0

அடுத்த நாள் இரவு எட்டு மணிக்கு அவர்களுக்கு ஃபிளைட் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. துபாயில் இடைத் தங்கல் – ஆறு மணித்தியாலங்களின் பின்னர்தான் அவர்கள் கிரீசுக்குப் போகவேண்டிய விமானம் புறப்படும்.

கராச்சியிலிருந்து வந்த விமானத்தில் வேறுவேறு இருக்கைகளிற்தான் இடம்கொடுத்தார்கள். துபாயில் இறங்கியபோது அவன், அவர்களுக்காகப் பார்த்திராமல் இடைத்தங்கல் பயணிகளின் பகுதிக்கு வந்தான். இந்த நேரத்திலும் விமான நிலையம் கலகலத்துக்கொண்டிருந்தது. பயணிகள் பளிச்சிடும் வெளிச்சத்தில் “டியூட்டி ஃபிறீ“ கடைகளை மொய்த்துக் கொண்டிருந்தார்கள். அவன் சோர்வுடன் கதிரையிற் சாய்ந்தான். மனச்சோர்வு அந்த அளவுக்கு அவனை வாட்டிக்கொண்டிருந்தது.

அவர்கள் தேடிக்கொண்டு வந்து முன் இருக்கையில் அமர்வது தெரிந்தது. அவன் கண்டும் காணாதவன்போல் கண்களை மூடியபடியிருந்தான்.

கலகலச் சத்தங்களும் ஆரவாரங்களும் அவனை ஈர்க்கவில்லை. பிள்ளைகளின் பாதுகாப்பற்ற தனிமையும், பிரிவுத் துயரும், அசதியும் அவனை ஒருவித மயக்க நிலைக்குட்படுத்தியிருந்தது. அதனால் எந்த இடத்தில் அமர்ந்தாலும் தூக்கத்திலாழ்ந்தான்.

யாரோ அவனைத் தட்டி தூக்கத்தைக் கலைத்தார்கள். கண் விழித்தபோது முன்னே சுசந்த நின்றான்.

‘சேர் எழும்புங்க. பிளைட்டுக்கு நேரமாச்சு… வாங்க போய் கன்டீனில் ரீ குடிச்சிட்டு வரலாம்.”

தூக்கத்தைக் குழப்பிய சீற்றத்தில் வெடித்தான்.

‘யனவா.. யன்ட.. மட்ட ஓணநே.. (போங்க, போங்க. எனக்கு வேண்டாம்)”

கண்கூச்சம் தரும் வெளிச்சத்தை மறைப்பதுபோல கையினாற் கண்களை மறைத்து அவர்களைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி இருக்கையிற் சாய்ந்தான். சற்று நேரத்தில் விரலிடுக்கினூடாகப் பார்த்தபோது அவர்கள் தூரத்திற் போவது தெரிந்தது. அப்படியே மெல்ல மெல்ல மீண்டும் கண் அயர்ந்தான். நேரம் கடந்திருக்க வேண்டும். அவனது முதுகை யாரோ தொட்டார்கள்.. கொஞ்சம் அசைத்தார்கள்.

‘சேர்… சேர்..”

விழித்தான். முன்னே அவர்கள் மூவரும் நின்றனர். சுசந்த கையில் ஒரு தட்டிற் தேநீர்க் கோப்பையுடன். ஜானக அவனைப் பார்த்து ஆறுதல் சொன்னான்.

‘கணகாட்டு வென்ட எப்பா சேர்.. தெய்யோ இன்னவா… சேரும பலாகண்ணவா.. (கவலைப்பட வேண்டாம் சேர்… கடவுள் இருக்கிறார்… எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்..)”

ஜானகவை உற்று நோக்கினான்.

அவனுக்கு கோபம் ஏறிவிடுமோ என்ற தயக்கத்தில், சுவர்ணா வேறு எதையாவது பேச விரும்புவது போலிருந்தது.

‘சேர் உங்களுக்கு ஒரு முசுப்பாத்தி தெரியுமா? கன்டீனில் உள்ளவனுக்கு சிங்களப் பாஷை தெரியாது.. “எங்கள் நண்பனுக்கு ஒரு தேநீர் கொண்டுபோய் கொடுத்துவிட்டு இந்தக் கோப்பையைத் திரும்பக் கொண்டுவந்து தருவோம்… அனுமதிப்பீர்களா?“ என்ற நீண்ட வாக்கியத்தைச் சொல்கிற அளவுக்கு எங்களுக்கு இங்கிலீஷ் தெரியாது. அதைப் புரிய வைப்பதற்குள் பெரிய பாடு பட்டுவிட்டோம். கடைசியில் கைப்பாஷைதான் கைகொடுத்தது. மிகுதிப் பணத்தை நிலுவையில் வைத்துக்கொண்டு தந்திருக்கிறான். நீங்கள் குடித்ததும் சுசந்த இந்தக் கோப்பையைக் கொண்டு போய்க் கொடுப்பான்.”

இதைக் கூறிவிட்டு பெரிய ஜோக் சொன்னது போல சுவர்ணா தானே சிரித்தாள்.

அபபோதுதான் அதைப் புரிந்து கொண்டவர்கள்போல சுசந்தவும் ஜானகவும் அவளுடன் சேர்ந்து சிரிக்கத் தொடங்கினர்.

‘யேஸ்… போல்.. லாங்க்விச்… பிக் புறொப்ளம்…” – சுசந்த தனது ஆங்கிலப் புலமையை நகைச்சுவையாக வெளிப்படுத்தினான்.

சுசந்த அபிநயித்துக் காட்டிய விதம் சிரிப்பை மூட்டியது. ஒரு மத்தாப்பு வெடிப்பது போல அவனிடத்திலும் சிரிப்பு மலர்ந்தது.

(மல்லிகையிற் பிரசுரமானது – 2001)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *