நான் அறிந்த நாளிலிருந்தே நடுவிலம்மான் எங்கள் வீட்டிலேயே தங்கியிருந்தாலும் அவரது சொந்தப் பெயர் மண்டலாய் என ஐந்தாம் வகுப்புப் படித்த போதே எனக்குத் தெரிய வந்தது. அதுவும் ஒரு நாள் ஆறுமுகப்பாவின் கடைக்கு கூப்பன் எடுக்க அம்மாவுடன் அவவின் சேலைத் தலைப்பைப் பிடித்தபடி சென்ற போது, “மண்டலாய் இப்போது மாடு மேய்க்க மாவில் பக்கம் வாறதில்லையோ?” என்று கூப்பனை வெட்டியவாறே அவர் கேட்க “நடுவிலம்மான் இப்ப கிளைப்பனையடிப் பக்கமாப் போறார் போலை” என அம்மா சொன்னபோதுதான் அவரது இயற்பெயரை நான் அறிந்துகொண்டேன்.
எங்களது நாச்சார வீட்டின் கடைசி அறையோடு தெற்குப் புறமாக ஒரு ஒத்தாப்பு இறக்கி அக்கொட்டிலிலேயே நடுவிலம்மான் வசித்து வந்தார். டச்சுக் காலத்து வாங்கில் ஒன்றில் முதுகுப்பாட்டிற்கு மாந்தோலும் கால்மாட்டிற்கு சாக்கும் விரித்து அதில்தான் கிடந்தெழும்புவார்.
ஒத்தாப்பு மூலையில் பிய்ந்து போன பழைய கதிரை ஒன்றின் மேல் பென்னாம்பெரிய சூட்கேஸ் ஒன்று வைத்திருப்பார். அதற்குப் பக்கத்தில் முண்டு கொடுத்துக்கொண்டு ஒரு ஸ்ரூல்’ பழி கிடக்கும். அவருக்குரிய ‘தேத்தண்ணி கோப்பியையோ’ அல்லது சோறு போட்ட வட்டிலையோ அதில்தான் வைக்க வேண்டும் என்பது ஐந்தாறு வருஷங்களுக்கு முந்தியே அவர் போட்ட உத்தரவாம். அம்மாதான் ஒருநாள் அவர் ஆறுமுகப்பாவின் கடையடிப் பக்கம் போன பின்பு பரமரகசியம் போல் எனக்குச் சொன்னா.
நடுவிலம்மானுக்கு இடது கால் ஏலாது. இழுத்திழுத்துத்தான் நடப்பார். சின்ன வயதில் சிங்கக் குட்டி மாதிரித் திரிந்தாராம். இடையில் பாரிச வாதத்தால் பாதிக்கப்பட்டு கால் இப்படி சூம்பிப் போயிற்றாம். ஆனாலும், தேகத்தை வளைத்து பம்பரமாகத் தொழில் கள் செய்வார்.
ஒவ்வொரு நாளும் கருக்கலோடு எழுந்து அரிசியைக் கழுவி உரலில் போட்டால் போதும். நொடிப் பொழுதில் மாவாக்கி அம்மாவின் கையில் கொடுத்து விடுவார். அவர் அரிசி இடிக்கும் போது இடுப்பில் கை வைத்து நான் பார்த்துக் கொண்டு நிற்பேன். நெற்றியிலும் நெஞ்சிலும் வியர்வை வழிந்தோட மூசிமூசி இடிப்பார். பார்க்கப் பாவமாக இருக்கும். அம்மா, தான் இடிப்பதாகக் கேட்டாலும் உலக்கையை விட மாட்டார். “புட்டுக்கு உலையை வைச்சு மற்ற அலுவல்களைக் கெதியாப் பார். பொடியளுக்கு பள்டத்துக்கு நேரமாச்சு” என்பார். ஒவ்வொரு நாளும் விடியப்புறம் அவரது வேலை அதுவாகத்தான் இருக்கும்.
பள்ளிக்கூடத்தில் மூத்ததம்பி வாத்தியார், கந்தப்பு வாத்தியார் போலை ஆக்கள் சவடலாகப் பேசி முசுப்பாத்திக் கதைகள் கதைத்து காலத்தைப் போக்காட்ட பெரியதம்பி வாத்தியார் மட்டும் நேரசூசி தவறாது பாடமெடுப்பார். அதுமாதிரி நடுவிலம்மானும் எல்லா அலுவல்களையும் நேரங் கட்டியே செய்வார். காலையில் அரிசி இடித்து முடிய எங்கள் மூண்டு பேருக்கும் குளிக்க வார்ப்பார். “மூத்தவன் வா , பிள்ளை வா, அடுத்தது செல்லத்தம்பி நீ வா!” எனக் கூப்பிட்டு எண்ணி ஆளுக்குப் பத்துப் பட்டை தண்ணி கிணற்றில் தானே அள்ளி வார்ப்பார். குளிக்க வரச் சொல்ல அண்ணன் கொஞ்சம் குழப்படி பண்ணுவான். நடுவிலம்மான் முழுசிப் பார்ப்பார். பெட்டிப் பாம்பாய் அடங்கி அவன் கிணற்றடி தொட்டியடி யில் வந்து குந்திக் கொண்டிருப்பான்.
நடுவிலம்மான் குளிக்க வார்த்து முடிய மூன்று வட்டிலில் அம்மா ஆவி பறக்கும் அரிசிப் புட்டுடனும், மணக்கும் பழைய ஆணத்துடனும் தயாராக இருப்பா. நாங்கள் இழுத்தடிச்சுப் பள்ளிக்கூடம் சென்ற பின்பு தனது மாடுகளை அவிட்டு விட்டு அவற்றினை மேய்ப்பதற்கு நடுவிலம்மான் மாவில் வயல் பக்கமாகவோ அல்லது வேறெங்காவதோ சென்று விடுவார்.
நாங்கள் பள்ளிக்கூடத்தால் வந்து சாப்பிட்டு ஏவற விட்டு நீண்ட நேரத்திற்குப் பிறகே மாடுகளை ‘ச்சாய்’ ‘ச்சாய்’ எனச் ‘சாய்ச்சுக்கொண்டு’ வளவுக்கு வருவார். கரைச்சியான், குடத்தனை யான், கூவிலான் என மூன்று நாலு பசுக்களை அவர் வளர்த்து வந்தார். பசுக்கள் என்றால் பிள்ளையார் கோவில் தெற்குப்புற உள்வீதியில் வைத்திருக்கிற காராம்பசு மாதிரி கொளுகொளுவென அவை இருக்கும். மேய்ச்சலால் வரும்போது படலையடியில் கலன் கணக்கில் சலம் பெய்து பொத்துப்பொத்தென்று சாணம் போட்டுக் கொண்டு வாலைக் கிளப்பியபடி வளவுக்குள் நுளையும். கட்டுக் கொடியில் மாடுகளைக் கட்டி அவை நாக்கைப் பிரட்டி அசை போடத் தொடங்கிய பின்பே நடுவிலம்மான் தனது அன்றாட அலுவல்களைப் பார்க்கத் தொடங்குவார். வளவு முழுக்க மாடுகள் போட்ட சாணத்தை கடகத்தில் நிரப்பி எருக் கும்பியில் கொட்டி, மாட்டுக் கொட்டிலைத் துப்புரவு செய்து அதன் பிறகு குளித்து விட்டு வந்து அவர் சோற்றில் கை வைக்க நான்கு மணி ஆகி விடும். சாப்பிட்ட பின் வாங்கிலில் கொஞ்ச நேரம் சரிந்து கொள்வார். பத்து நிமிடத்தில் சொல்லி வைத்தபடி கூப்பிடு தூரத்தில், நறுவிலியடி பனங்கூடலில் மாணிக்கன் பனையோலை வெட்டும் சத்தம் கேட்டு விழித்துக் கொள்வார். எழுந்து சென்றார் என்றால் பத்துப் பதினைந்து ஓலைகளை பச்சை நாரால் கட்டி தலையில் சுமந்தபடியேதான் திரும்புவார்.
ஓலைகளைச் சிறாய்த்துக் கிழித்துக் கட்டுக்கட்டாக விறாந்தை யில் போடுவார். ஒவ்வொரு கட்டிலும் அடிமட்டம் வைத்து அடுக்கி யதைப் போல ஓலைகள் ஒழுங்கில் இருக்கும். ஓலை கிழித்து முடியும் மட்டிலும் நடுவிலம்மான் எவருடனும் பறையவே மாட்டார். அந்நேரங்களிலும் நொங்குச் சேர்வை சீவும்போதும் வாய் திறந்தால் மாட்டுக்கு ஏதோ நாணமாம். அதனால் ஏன் பிரச்சினை என்று சூட்சும புத்தி கொண்ட அம்மா அநேகமாக அந்நேரம் பார்த்து நல்ல தண்ணி அள்ள மாவிலடிப் பக்கம் போய் விடுவா. நாங்களும் மாங்கொட்டை விளையாடப் போய் விடுவோம்.
பொழுது மைமலாக நாம் படிக்கத் தொடங்கும்போது அரிக்கன் லாம்பைக் கொளுத்திக் கொணர்ந்து அம்மா விறாந்தை வளையில் – தொங்க விடுவா. கந்தப்பு வாத்தியார் சுத்த மோசம். ஒவ்வொரு நாளும் வீட்டு வேலை தருவார். அது செய்யவே ஒரு மணித்தி யாலம் பிடிக்கும். கணக்குப் பாடத்திலையோ தமிழ், சமய பாடங் களிலையோ ஏதாவது தெரியாவிட்டால் நடுவிலம்மான் சொல்லித் தருவார்.
நான் படித்து முடித்து அலுத்துப் போய் கொப்பி புத்தகங்களை அடுக்கத் தொடங்கும்போது நடுவிலம்மான் கிழித்த ஓலைகளை தும்பாக்கத் தொடங்குவார். ஐயா லீவில் வந்து நிற்கிற நேரங் களில் ஐயாவும் அம்மானுக்கு ஒத்தாசை புரிவார். ஆனாலும், நடுவிலம்மான் ஐயாவுடன் நேருக்கு நேர் கதைத்ததை நான் ஒரு போதும் கண்டதில்லை.
தும்பாக்கிய ஓலையை மாடுகளுக்குப் போட்டு விட்டு மாட்டலுவல்கள் எல்லாம் முடித்து வர, அடுத்த வீட்டு ஓடையம்மான் வளவு றேடியோப் பெட்டி இரவுச் செய்தி சொல்லிக் கொண்டி ருக்கும்.
நடுவிலம்மானிடமும் ஒரு றேடியோப் பெட்டி இருந்தது. ரவுணில் அச்சுக் கூடம் ஒன்றில் வேலை செய்தபோது யாரோ அரைவிலைக்குக் கொடுத்ததாக அடிக்கடி சொல்லுவார். திருச்சி லோகநாதன், கண்டசாலா பாடல்களை ‘கறகற வெனப் பாடிக் கொண்டிருந்தது. ஒருநாள் ‘டமார்’ என்ற சத்தத்துடன் அப்படியே நின்று விட்டது. ஆலடிச் சந்தையிலை சயிக்கிள் கடை வைத்தி ருக்கிற சங்கரப்பிள்ளையிடம் கொண்டு போய் காட்டிப் பார்த்தார். ‘பாட்ஸ்’ ஏதோ மாற்ற வேணுமெண்டு சொன்னானாம். ‘அதுக்கெல்லாம் இப்ப கட்டாது’ என்று சொல்லி அப்படியே திருப்பிக் கொண்டு வந்து பற்றியைக் கழற்றி விட்டு சூட்கேசின் அடியில் வைத்து விட்டார்.
அச்சுக் கூடத்தில் வேலை செய்ததால் நடுவிலம்மானை அச்சுக் கூடத்து அம்மான் என்றும் இடைக்கிடை அம்மா அவை சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அச்சுக் கூடத்தில் வேலை செய்த காலத்தில் தான் நடுவிலம்மான் கலியாணம் செய்தாராம். பென்னம் பெரிய சூட்கேசுக்குள் நடுவிலம்மானின் வேட்டி சேட்டுகளை வைத்து வெள்ளைத் துணி ஒன்றால் மூடி ஆத்தை தலையில் சுமந்து செல்ல கூடவே நடுவிலம்மானும் அம்மா அவையும் பொம்பிளை வீட்டுக்குப் போய் ‘சோறு குடுப்பிச்சு’ மிக எளிமையாகத்தான் கலியாண வீடு நடந்ததாம். மூன்று மாதங்கள் கூட ஆகியிருக்காதாம். ஒரு அமாவாசை முன்னிருட்டில் அழுவாரைப்போல அதே சூட்கேசைத் தலையில் சுமந்து கொண்டு அவர் திரும்பி வந்து விட்டாராம். நடுவிலம்மான் பாவம் என்று சொல்லி அம்மாதான் வீட்டில் தங்க இடம் கொடுத்தாவாம். ஆத்தைதான் இந்தக் கதையை ஒருநாள் எமக்கு விஸ்தாரமாகவும் கவலை தோய்ந்த முகத்துடனும் சொன்னா. அப்போது அவவின் கண்களிலிருந்து பொலபொல வென்று கண்ணீர் வழிந்தோடிற்று.
“இதெல்லாம் எனக்கு கொஞ்சம் கொஞ்சம் ஞாபகத்திலை இருக்குது” கதையைக் கேட்டுக் கொண்டிருந்த அண்ணன் பெருமை யாகச் சொன்னான். “எனக்கு ஒண்டும் ஞாபகத்திலை இல்லை” அப்பிராணியாக நான் சொன்னேன். “அப்ப நீ சவலை மோனை” என்றா ஆத்தை.
“அதுக்குப் பிறகு நடுவிலம்மான் அங்கை போகேல்லையோ?” வேகத்துடன் அக்கா கேட்டா. இப்படி வேகமாக கேள்விகள் அவளுக்குத்தான் வரும்.
“இல்லைப் பிள்ளையள்” என்ற ஆத்தை பெருமூச்சுடன் தொடர்ந்தா. “பிள்ளையள் நீங்கள் நடுவிலம்மானை நடுவில் தாத்தா எண்டு சொல்லுங்கோ. அவர் கொம்மாவுக்குத்தான் மோனை அம்மான்.”
“ஓம் ஆத்தை இனி நாங்கள் அப்படியே சொல்லுறம்” என வில்லுப்பாட்டு சின்னமணிக்கு பின்னால் இருக்கும் பக்கவாத்தியக் காரர்கள் மாதிரி மூவரும் ஒத்தூதினோம். ஆனால், மறுநாட் காலையிலேயுைம் நடுவிலம்மான் என்றுதான் நாக்குப் பிரண்டது.
எங்களூர்ப் பிள்ளையார் கோயில் திருவிழா ஆனிப் பறுவத் தோடு வரும். அந்தப் பத்து நாட்களும் அம்மான் ஆளே மாறி விடுவார். பழுப்பு நிற வேட்டி கட்டி கழுத்தில் உருத்திராக்க மாலையுடன் தேகமெங்கும் தீட்சை தரித்து கோவிலே கதியென்று கிடப்பார். கையில் கமண்டலம் இல்லாத குறையொன்றுதான். மறந்தும் வீட்டில் பச்சைத் தண்ணீரும் குடிக்க மாட்டார். கோயிலி லிருந்து கொண்டு வரும் பிரசாதங்களையே ஒரு நேரச் சாப்பாடாகச் சாப்பிடுவார். செல்லத்தம்பி இஞ்சை ஒருக்கா வா’ என்று கூப்பிட்டு மோதகத்தில் ஒன்றைப் பாதியை எனக்கும் தருவார். அதை நாங்கள் மூவரும் பங்கிட்டுக் கொள்வோம். அநேகமாக அண்ணன்தான் மோதகத்தைப் பிரிப்பான். பாகைமானி வைத்தது போல் சரியாக நூற்றியிருபது பாகையில் மூன்று துண்டுகளாகப் பிரித்துத் தருவான்.
திருவிழா இரவு நிகழ்ச்சி இருந்தால், நடுவிலம்மான் எங்களை யும் கூட்டிக்கொண்டு போவார். மேளக் கச்சேரி முடிய கதாப் பிரசங்கம் நடக்கும். அதுக்குப் பிறகுதான் வில்லுப் பாட்டு, பாட்டுக் கச்சேரி, சின்ன மேளம் என நான்கு திக்கிலிருந்தும் திருவிழாவுக்குச் சனம் குவியும். வில்லுப் பாட்டு சின்னமணி குழுவினராக இருந்தால், ‘பொடிச்சி நீயும் வெளிக்கிடு’ என அம்மாவையும் வருமாறு அழைப்பார். நித்திரை கொள்ளாது, கொட்டாவி விடாது சன மெல்லாம் வில்லுப் பாட்டுடன் ஒன்றிப் போகும்.
பாட்டுக் கச்சேரி முடிந்ததுதான் தாமதம் எங்களை வீட்டுக்கு வருமாறு நடுவிலம்மான் கூப்பிடுவார். அரை மனத்துடனும், அரைத் தூக்கத்துடனும் இழுபட்டவாறே நாம் அவர் பின்னால் செல்வோம்.
தேர்த் திருவிழா அன்று வடம் பிடிக்கிற சனங்களுடன் தானும் சேர்ந்து கொள்ளாமல் விட மாட்டார். இயலாத காலை பிறர் மிதித்துத் தள்ளினாலும் நசுங்கிக் கொண்டு நின்று ‘அரோகரா அரோகரா’ என்று சொல்லி அவர் வடம் பிடிக்கும் போது பார்க்கப் பரிதாபமாக இருக்கும்.
நடுவிலம்மானிடம் ஒரு திறமை இருந்தது. ஆத்திசூடி, கொன்றை வேந்தனையோ , திருக்குறளையோ சந்தர்ப்பத்திற்கு உகந்ததாக அவ்வப்போது சொல்லிக் கொள்வார். அதனால் அவரை ‘இலக்கணக் கொத்தர்’ என்று அண்ணன் பழிப்பான். அப்படிப் பழித்ததில் ஒரு நாள் ஐயாவிடம் பிடரியில் வசமாக வாங்கிக் கட்டியும் கொண்டான். ஆக்களுக்குப் பட்டங்கள் வைப்பதில் அண்ணனுக்கு டிகிரி’ கொடுக்கலாம். றேடியோ சிலோன் , தட்டு வாணி , ஈப்பிணி , புளுகர், பல்லுக் கொதி, பச்சைத் தண்ணி என்பன அவன் வைத்த பட்டங்களில் மிகப் பிரசித்தம். தனக்கும் பட்டம் வைத்த சங்கதி கசிந்ததாலோ என்னவோ நடுவிலம்மானுக்கு அண்ணனை அவ்வளவாகப் பிடிப்பதில்லை. செல்லத்தம்பி செல்லத்தம்பி என்று என்னுடனேயே விழுந்து விழுந்து சாவார்.
நடுவிலம்மான் சமையல் செய்தாரென்றால் வெறும் பாணையும் அந்த மணத்திலேயே வைத்துச் சாப்பிட்டுவிடலாம். அவரது சமையல் என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது அவர் காய்ச்சும் ஒடியல் கூழ்தான். நெத்தலி, இறால், பயற்றங்காய், பலாக்கொட்டை எல்லாம் போட்டு ஒடியல் கூழ் வைத்தார் என்றால் நாலு வளவுகள் தள்ளி நறுவிலியடி வரை கமகமக்கும். இப்படித்தான் ஒருதடவை அவர் ஒடியல் கூழ் காய்ச்சும்போது தெருவால் சென்றுகொண்டிருந்த பழைய வளவுப் பின்புறத்து அண்ணாவியார் சிவலை பெண்சாதி படலையைத் திறந்து கொண்டு உள்ளே வந்து அம்மாவைக் கூப்பிட்டு “பார்வதிப்பிள்ளை நாச்சியார் வளவுக்கை இண்டைக் கேதோ விசேஷம் போலை கிடக்கு” என்று கேட்டது எனக்கு இப்போது என்றாற்போல இருக்கின்றது.
அவர் கூழ் காய்ச்சும்போது அதைப் பார்த்துக் கொண்டு பல தடவைகள் பக்கத்தில் அம்மா நின்றிருந்தாலும் அவரைப்போல் கூழ் காய்ச்ச அம்மாவால் இறுதிவரை முடியாமல் போயிற்று. இன்று நான் கேட்டாலும் அம்மா அதைப் பகிரங்கமாகவே ஒத்துக் கொள்வா. “ஒடியல் கூழ் காச்சுறதுக்கும் ஓலை வெட்டிக் கிழிக்கிற துக்கும் நடுவிலம்மானை வெல்லேலாது” என்பா.
ஒடியல் கூழ் என்றதும்தான் எனக்கு இன்னொரு விஷயமும் நினைவுக்கு வருகின்றது. ஒடியல் கூழ் காய்ச்ச மரக்கறி, மீன்கள் வாங்குவதற்கென அம்மா ஒருநாள் ரவுணுக்குப் போக வெளிக் கிட்டா. அழுது அடம் பிடித்து நானும் அவவுடன் சென்றேன். கிளைப் பனையடியால் திரும்பி வடக்குப் பக்கமாய் நடந்து கொண்டிருந்தோம். காந்தித் தாத்தா சிலையைத் தாண்டும்போது அம்மா என் முதுகைச் சுரண்டி இரகசியமாய்ச் சொன்னா. “பங்கார் அதிலை போற மனுசி தான்ரா நடுவிலம்மான் பெண்சாதி.”
நடுவிலம்மான் பெண்சாதி பற்றி மேலும் என்னென்னவோ அம்மா சொல்லிக் கொண்டு வந்தா. ஆனால் எனக்கு இன்னமும் ஞாபகமிருப்பதெல்லாம் பின் கொய்யகம் வைத்து சேலை உடுத்தி எடுப்பாக அவ நடந்து சென்றுகொண்டிருந்த காட்சி மட்டும்தான்.
சில நாட்களின் பின்னர் ஒருநாள் பரபரவென ஓடி வந்த ஆத்தை அம்மாவைக் குசினிக்குள் கூப்பிட்டு வைத்து ஏதோ குசுகுசுத்துக்கொண்டு இருந்தா. போகும்போது “நடுவில் பாவம், யோசிக்கப் போகுது” எண்டு சொல்லிக் கைகளை உதறிக் கொண்டு போனா.
“என்னம்மா? என்ன பிரச்சினை?” என்று கேட்டாள் மாங் கொட்டை விளையாடப் போவதற்கு வெளிக்கிட்டுக் கொண்டிருந்த அக்கா. “அது ஒண்டுமில்லை. நீங்கள் போய் விளையாடுங்கோ” என்றா அம்மா.
அன்றிரவு படிக்கும்போது வகுப்பில் பெரியதம்பி வாத்தியார் படிப்பித்த ஒரு பாட்டுக்குப் பொருள் தெரியாது நான் முழுசிக் கொண்டு இருந்தேன்.
வழமைபோல நடுவிலம்மான் மேசையடிக்கு வந்தார். “இண்டைக்கு படிக்க என்ன இருக்கு?” என்று கேட்டார். “ஔவையாற்றை மூதுரையிலை ஒரு பாட்டு” “என்ன அது?”
“தீயாரைக் காண்பதுவும் தீதே” என நான் தொடங்கு முன்னரே கண்களை மூடிக்கொண்டு நாலடியையும் அவரே பாடி முடித்தார். “தீயாரோடிணங்கியிருப்பதுவும் தீது” என்ற கடைசி வரியை திரும்பத் திரும்ப மூன்று நான்கு தடவைகள் கூறி அதன் பொருளையும் சொன்னார்.
சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார். பின்னர் எதுவுமே சொல்லாது எழுந்து சென்றார். நடையில் வழமையான நிதானம் தெரியவில்லை.
ஐந்தாறு கிழமைகளின் பின்னராக இருக்க வேண்டும்…
ஒரு நாள் பின்னேரம் வழமைபோலை நடுவிலம்மான் சாப்பிட்டு விட்டு சாடையாகக் கண்ணயர்ந்திருந்தார்.
மூத்ததம்பி வாத்தியார் வீட்டு முடக்கில் நிற்கும் இலந்தை மரத்தடியில் பொறுக்கிக்கொண்டு வந்த இலந்தைப் பழங்களை அக்காவும் நானுமாக ஆளுக்குப் பாதியாகப் புறித்துக் கொண்டிருந் தோம். தனது பங்கை கையிலிருந்த தையல் பெட்டியைத் திறந்து அக்கா போட்டு மூடும் போது வாசலில் யாரோ வந்து நிற்பது தெரிந்தது.
நிமிர்ந்து பார்த்தோம். நாவலப்பிட்டி மாமா நின்றிருந்தார்.
“சின்னவன் எப்பவடா வந்தனீ?” குசினிக்குள் இருந்து அம்மா ஓடி வந்தா .
“மத்தியானம் தான் அக்கை” என்றவாறே கையிலிருந்த ‘பாசலை’ மாமா என்னிடம் தந்தார். தேயிலைப் பக்கெட்டும், சொக்லேற், பிஸ்கட்டுகளும் அதற்குள் கிடந்தன.
உரத்துக் கதைத்துக்கொண்டிருந்த மாமாவின் குரல் திடீரெனத் தாழ்ந்தது.
“அக்கை நடுவிலம்மானின்ரை விசயமெல்லாம் கேள்விப்பட்டன். அம்மானோடை ஒற்றுமையாக வாழத்தான் விருப்பமில்லாட்டிலும் ஐஞ்சாறு வருசத்துக்குப் பிறகு அந்த மனுசி இப்பிடி இன்னொருத னோடை ஓடினது எவ்வளவு பெரிய வாழ்மானமாப் போச்சுது. எங்கள் எல்லாருக்கும் தீராத கவலையாகவும் போச்சு. கொஞ்சக் காலம் நடுவிலம்மான் நாவலப்பிட்டிக்கு வந்து என்னோடை இருக்கட்டும். புது இடம் அவற்றை மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாகவும் இருக்கும். நீ என்ன அக்கை நினைக்கிறாய்?”
“ம்…. எனக்கும் அது நல்ல யோசனைபோலத்தான் தெரியுது. நீ கேட்டால் நடுவிலம்மான் மாட்டன் எண்ட மாட்டார்தான். எதுக்கும் ஒருக்கால் கேட்டுப் பாரன்” என்றா.
ஒத்தாப்பினுள் சென்ற நாவலப்பிட்டி மாமா ஒரு மணித்தியாலத் திற்குப் பிறகு சிரித்த முகத்துடன் வெளியே வந்தார்.
“அம்மான் ஓமெண்டுட்டார் அக்கை. வளர்த்த மாடுகளைப் பற்றித்தான் கவலைப்படுகிறார் போலை…..” என இழுத்தார்.
“அதுகளை நான் வளர்க்கிறன். வாற வருசத்தோடை கொத்தானும் ஊரோடை மாற்றலா வாறார்தானே? பிரச்சினை இல்லை” என்றவாறே அம்மா குசினிக்குள் சென்றா.
அநாதையாய் விறாந்தையில் கிடந்த எனது பங்கு இலந்தைப் பழங்களைப் போடுவதற்கு மூடல் எடுப்பதற்காக அம்மாவைத் தொடர்ந்து நானும் குசினிக்குள் நுழைகின்றேன்.
சிலநாட்கள் கழித்து ஒரு சனிக்கிழமை அன்று…
மாடுகளை மேய்ப்பதற்கோ ஆறுமுகப்பா கடையடிப் பக்கமோ செல்லாது நடுவிலம்மான் ஒத்தாப்பிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். வைக்கோல் போரிலிருந்து ஒரு கத்தை வைக்கோலைப் பிடுங்கி இழுத்து வந்து மாடுகளுக்கு அம்மா பரவி விட்டிருந்தா. நீண்ட நேரமாக வெளிப்பாடின்றி இருந்தார். நேரந் தவறாது அவருக்குக் குடுக்கும் ‘தேத்தண்ணி கூட அன்று அம்மா கொடுக்கவில்லை.
பொழுது மைமலானபொழுது நடுவிலம்மான் உரத்த குரலில் என்னைக் கூப்பிட்டார். அருகில் அழைத்து மடியிலிருத்தினார்.
“நீ நல்லா படிச்சு வரோணும். ஐயா அம்மாவின்ரை பெயர் சொல்ல வைக்கோணும்” என்றார். வழமைக்கு மாறாக அவர் வாயிலிருந்து ஏதோ வித்தியாசமான வயித்தைக் குமட்டுமாப்போல் வாடை வீசிற்று.
“செல்லத்தம்பி…. தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீது” என்று சொல்லியவாறே குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார். எனக்கும் அழுகை வருமாற்போல் இருந்தது.
அம்மா ஓடி வந்தா.
“அம்மான் ஆருக்குத்தான் வருத்தம் இல்லை. என்ன செய்யி றது. பேசாமல் இருங்கோ ….. காலமைக்கு வெள்ளன எழும்ப வெல்லோ வேணும்” என்றா.
“செல்லத்தம்பி நீ நல்லாப் படிக்கோணும் என்ன?” என்று உச்சியில் முத்தமிட்டு என்னை அனுப்பி வைத்தார்.
வட்டிலில் சோற்றைக் கொண்டு போய் வைத்துவிட்டு அம்மாவும் எங்களது அறைக்கு வந்தா.
“அம்மா நடுவிலம்மான் எப்ப நாவலப்பிட்டிக்குப் போறார்? “காத்தாலைக்குப் போறார்” “பிறகு எப்ப அம்மா வருவார்?”
“ஒவ்வொரு திருவிழாவுக்கும் வருவார்”
“அம்மா இவ்வளவு நல்ல நடுவிலம்மானை ஏன் அந்த மனுசி வேண்டாம் எண்டது…..”
“அம்மானிலை என்ன குறை எண்டதுதானே மோனை எங்களுக் கும் விளங்கேல்லை …..”
அன்றிரவு நீண்ட நேரமாக அம்மாவை இடித்தபடி பாயில் உழன்று கொண்டிருந்தேன்.
‘ம்மா…. ம்மா…’ என மாடுகள் அழும் சத்தம் இடைவிடாது கேட்டுக் கொண்டு இருந்தது.
பதறியடித்துக்கொண்டு எழுந்தேன். உள்ளங்கையில் இருந்த நாணயமொன்று கைவிட்டு நழுவி உருண்டோடிற்று. குனிந்து அதை எடுத்துக்கொண்டு அறைக்கு வெளியே வந்தேன்.
கழுவிய அரிசியை உரலில் போட்டு அம்மா இடிக்க ஆரம்பித்தா. ஒரு பாட்டம் அழுது முடித்ததில் அவவின் முகம் வீங்கியிருந்தது.
“என்னம்மா இது காசு ஐம்பது சதம். என்ரை கையிலை கிடந்தது?”
“நடுவிலம்மான் தந்த பயணக்….” வார்த்தைகளை முடிக்காது அம்மா விம்மத் தொடங்கினா.
ஓடிச்சென்று ஒத்தாப்பைப் பார்த்தேன்.
வாங்கிலில் கிடந்த சாக்கு சுருட்டிக் கிடந்தது. அந்த மாந்தோல் சுவரில் தூக்குத் தண்டனைக் கைதிபோல் தொங்கிக்கொண்டிருந்தது. பென்னம்பெரிய சூட்கேசை மூடிக் கிடந்த துணிமட்டும் அந்தப் பிய்ந்த கதிரையில் அநாதையாய்க் கிடந்தது.
மேற்குப் புறமாக மாட்டுக் கொட்டிலில் மூன்று மாடுகளும் கட்டுக் கொடியை அறுக்குமாப்போல் காலை உதறி உதறி படலையை நோக்கி ‘ம்மா…. ம்மா…’ எனக் கதறிக் கொண்டு நின்றன.
– ஞாயிறு தினக்குரல் 25 பெப்ரவரி 2007 – கனகசெந்தி கதாவிருது பெற்ற சிறுகதைகள், முதற் பதிப்பு: 21-07-2008, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான், மீரா பதிப்பகம், கொழும்பு.