கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 9, 2014
பார்வையிட்டோர்: 10,298 
 
 

ஒரு பெரிய காம்பவுண்டுக்குள் இருந்தது அந்த சிறிய வீடு. வாசலைச் சுற்றி உயரமான சுவர் எழுப்பப்பட்டு இருந்தது. மூடப்பட்ட கேட்டில் பெரிய பூட்டு. ஏதோ சிறை போன்றிருந்தது.

அலுவலகத்தினுள் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு மாது. எதிரே, ரேணு — குனிந்த தலையுடன். நகத்தைக் கடிக்க வேண்டுமென்ற துடிப்பை அடக்கிக்கொள்ள பெரும் பிரயத்தனப் பட்டுக்கொண்டு.

“பெரிய படிப்பு படிச்சவங்க நீங்க! இந்த இடத்துக்கு வரலாமா?” அங்கலாய்ப்புடன் கேட்டாள் லீலா.

`என்றுமே என் உலகம் தனிதான்!` என்ற அயர்ச்சி எழ, ரேணுவின் முகத்தசைகள் இறுகின.

அவ்வீட்டில் பெண்களும், குழந்தைகளும் மட்டும்தான். பன்னிரண்டு வயதுக்குமேல் ஆன எந்த ஆணுக்குமே அதற்குள் நுழைய அனுமதி கிடையாது. அவளைப் போன்றே கணவனிடம் வதைபட்டு, காவல் துறை அனுப்பியதாலோ, அல்லது தன்னிச்சையாகவோ வந்திருந்த, மலாய், சீனர் உள்பட, மற்றும் இருபது பெண்கள் அந்த ஆதரவு மையத்தில் இருந்தாலும், அவர்களைப்போல் தன் மணவாழ்க்கையின் அவலத்தை உரக்கப் பகிர்ந்துகொள்ளவோ, அல்லது தினசரி யார் என்ன வேலை செய்வது என்று வாய்ச்சண்டையில் பொழுதைப் போக்கவோ அவளால் முடியவில்லை.

இல்லத் தலைவியான லீலாவின் பரிதாபத்தை எதிர்கொள்ள முடியாது முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

ஏழெட்டு ஆண்டுகளாக பெரும்பாடுபட்டு மறைத்து வைத்திருந்த அவலம் இப்படி பகிரங்கமாகி விட்டதே என்ற அவமானம்.

காலையில் படுக்கையில் படுத்தபடியே கண்களைத் திறந்தபோது, தான் எங்கே இருக்கிறோம் என்றுகூட புரியாது திகைத்துப்போய், சொல்லவொண்ணாத பயம் மேலெழ, மீண்டும் கண்களை இறுக மூடிக் கொண்டது நினைவுக்கு வந்தது.

பயம்…பயம்…

கிட்டத்தட்ட பத்து வருடங்களாக. அதாவது, திருமணமாகி ஓரிரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே, வேறு எந்தவித உணர்ச்சியுமே மனிதப் பிறவிக்குக் கிடையாது என்பதுபோல் அல்லவா பயம் அவளை அலைக்கழிந்திருந்தது!

`அது என்ன சில வருடங்கள்?` உள்மனம் கடுமையாக ஆட்சேபித்தது.
லீலா ஏதோ சொல்வதுகேட்டது. “சீனச்சி, `எதுக்கும் இருக்கட்டும்`னு புருஷனுக்குத் தெரியாம, அப்பப்போ கொஞ்சம் பணத்தைப் பதுக்கி வைச்சுக்குவா. பிள்ளைங்களுக்கு விவரம் தெரியற வயசு வந்ததும், அவங்ககிட்ட சொல்லிட்டு, தனியா போயிடுவா. ஆயுசு பூராவும் அடி வாங்கிச் சாக மாட்டா. மலாய், தமிழ்ப் பொண்ணுங்கதான் இப்படி — கட்டினவன் என்ன செஞ்சாலும், பொறுத்துப்போறது!” உணர்ச்சியற்ற குரலில் சொன்னதைக் கேட்டால், பலபோரிடம் இதையே திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கலாம் என்று ஊகிக்கும்படி இருந்தது.

“ஒங்களுக்குத்தான் சுய சம்பாத்தியம் இருக்கே! தனியா போயிருக்கலாமே!”

ரேணு மௌனம் சாதித்தாள்.`அவர் மாறுவாரென்று நம்பிக்கிட்டு இருந்தேன்,` என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனம் என்று அவளுக்கே புரிந்தது.

“ஒங்க வீட்டுக்காரருக்கோ வேலை இல்லை. என்னமோ தில்லுமுல்லு பண்ணினதில, வக்கீல் தொழில் செய்யற லைசன்சைப் பிடுங்கிக்கிட்டாங்க. நீங்க அப்படியா! சாரி.. எப்படிப் பாத்தாலும், ஒங்க கைதானே ஓங்கியிருக்கணும்? ஆனா, நெசமாவே அவரோட கை ஓங்கி இருந்திருக்கு. அதுக்கு ஒங்க ஒடம்பு முழுவதும் அத்தாட்சி!” நம்ப முடியாதவளாக தலையை ஆட்டிக்கொண்டாள் லீலா. “எத்தனை எலும்பு முறிஞ்சிருக்கு! பொறுமைக்கும் ஒரு அளவு கிடையாதா, என்ன ரேணு? இங்க வந்து சேர்ந்திருக்காட்டி, ஒங்க உசிரே போயிருந்தாக்கூட ஆச்சரியமில்லை”. வதைபட்ட பெண்களுக்கு நல்வாழ்வு காட்டுவதிலேயே தன் காலத்தைச் செலவழித்திருந்தவள் லீலா. “இப்படி சுவரையே வெறிச்சுப பாத்துக்கிட்டிருக்காம, ஏதாவது பேசுங்க. நீங்க எல்லாத்தையும் மனம்விட்டுச் சொன்னாதான் நாங்க ஒங்களுக்கு உதவ முடியும். நீங்களும் ஒரு தீர்வு காண முடியும்”.

“தீர்வா?”

“அதான், திரும்ப ஒங்க கணவர்கிட்ட போகப்போறீங்களா, இல்ல விவாகரத்துக்கு மனு போடப்போறீங்களான்னு..”

“விவாகரத்து வேணாம்..” அவசரமாகச் சொன்னாள் ரேணு. கல்லூரி நாட்களில், அறிவார்த்தமாகத் தன்னுடன் பேசிப் பழகி, மரியாதையாக நடத்திய கிரியை இனி காண்போமா என்ற ஏக்கம் எழுந்தது.

“நீங்க எந்த முடிவு எடுத்தாலும் எங்க பக்கபலம் உண்டு. ஆனா, திரும்பத் திரும்ப ரத்தக்கலறி இங்கே திரும்பி வரமுடியாது. எங்க விதிப்படி, ஒருத்தர் மூணு தடவைதான் வரலாம்”.

உடல் உயரமாக இருந்தாலும், குறுகியபடி எதிரே அமர்ந்திருந்தவளின் மன இறுக்கத்தைக் குறைக்க ஒரே வழி தான் நிறைய பேசுவதுதான் என்று அனுபவத்தில் உணர்ந்திருந்த லீலா, “எனக்கு ஒண்ணுதான் புரியல. ஒங்களைப்பத்தி நீங்க பெருமையா நினைச்சு நடந்திருக்கணும். அது எப்படி ஒங்களை இவ்வளவு மட்டமா ஒருவர்.., அது ஒங்க கணவரே ஆனாலும், நடத்த விட்டீங்க? ப்ளீஸ் ரேணு! என்னை ஒரு தோழியா நினைச்சுச் சொல்லுங்க!”

தோழி!

இதுநாள்வரை தனக்கு நெருக்கமான ஒரு தோழிகூட கிடையாது என்ற உண்மை கசப்பாக அடிநாக்கில் படிந்தது. ரேணு விம்மினாள். அவளை அழவிட்டுக் காத்திருந்தாள் மற்றவள்.

எல்லாப் பெண்களையும்போல் தான் எந்த ஆடவனையும் சார்ந்து வாழ முடியாது என்றுதான் ரேணு நினைத்திருந்தாள், கிரியைச் சந்திக்கும்வரை. அந்த நினைப்பின் வித்து பக்கத்து வீட்டுக் கிழவர் அவளது ஆடைகளைக் களைந்து, ஏதேதோ செய்தபோது அவளது உள்மனத்தில் ஆழமாக விழுந்திருந்தது.

தான் ஏதோ தப்பு செய்கிறோம் என்றவரை அந்தக் குழந்தைமனதுக்குப் புரிந்தது. ஆனால், பாவாடை அழுக்கானால்கூட திட்டும் தாயிடம் தாழிட்ட அறைக்குள் அடிக்கடி நடந்ததை எப்படிப் பகிர்ந்துகொள்வது?
அவளால் முடிந்ததெல்லாம் தன் உடலை ஆக்கிரமிக்கும் தாத்தாவைக் கண்டு பயப்படுவது ஒன்றுதான். அந்த பயமே அவருக்குச் சாதகமானது புரியும் வயதாகவில்லை அப்போது.

அடுத்த வருடமே ரேணுவின் பெற்றோர் வேறு வீட்டிற்கு மாறிப் போய்விட்டாலும், அந்த நாட்களின் பாதிப்பு வாழ்நாட்கள் பூராவும் தன்னை உறுத்தும் என்று அப்போது ரேணு எதிர்பார்த்திருக்கவில்லையே!

தான் மிகவும் கேவலமானவள், இல்லாவிட்டால் தன்னை ஒருவர் இப்படியெல்லாம் நடத்தி இருக்கமாட்டார் என்ற குற்ற உணர்ச்சி அவளோடு தானும் வளர்ந்தது. மற்ற பெண்களைவிட எப்போதும், எல்லாவற்றிலும் தான் ஒரு படி மேலே நிற்க வேண்டும் என்ற வீம்பு உண்டாயிற்று.

பதினாறு வயதில் சக மாணவிகள் ஆண்களைப்பற்றி கூடிக் கூடிப் பேசி, காரணமில்லாமல் சிரித்தபோது, அந்த மாதிரி பேச்சுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்பதுபோல் விட்டேற்றியாக நடந்துகொண்டாள்.

“இப்படி இந்த வயசிலேயே சாமியாரா இருந்தா, யாராலதான் கிளாசில எப்பவும் முதலாக வரமுடியாது?” என்றெல்லாம் வயிற்றொரிச்சலுடன் அவர்கள் பேசியது அவள் காதிலும் விழாமல் இல்லை. தன்னைப் பார்த்துப் பிறர் பொறாமைப்படும் அளவுக்கு உயர்ந்திருப்பதை எண்ணி பெருமைப்பட முடியவில்லை. இப்படி எல்லாரிடமிருந்தும் மாறுபட்டுப் போனோமே என்ற வருத்தம்தான் எழுந்தது அவளுக்கு.

அப்போதெல்லாம், தன்னை இப்படி ஒரு கேலிப்பொருளாக, அரைப் பைத்தியமாக ஆக்கி விட்டிருந்த அந்தக் கிழவரின்மேல் ஆத்திரம் மூளும். அவர் என்றோ இறந்து போயிருக்கக்கூடும். ஆனால் அவர் செயலின் பாதிப்பு நிரந்தரமாகத் தங்கிவிட்டது அவளிடம்.

இனி என்னதான் யோசித்தாலும், நடந்ததை மாற்றவா முடியும் என்ற உண்மை உறைக்கையில், இரண்டு மூன்று நாட்கள் ஏதோ அடியற்ற பாதாளத்தில் விழுந்துவிட்டதைப்போல் இருக்கும். மிகுந்த பிரயாசை செய்து, மேல் எழுவாள். அத்தகைய சமயங்களில் கொழுகொம்பாக அமைந்தது படிப்பு. மேலும் மேலும் புத்தகங்களுக்குள்ளேயே மூழ்கி, தனித்துப் போனாள்.

`இப்படியே இருந்துவிட்டால் போதும்,` என்று சிறிது நிம்மதி எழுந்தபோதுதான் கிரி அவள் வாழ்க்கையில் புகுந்தான்.

ரேணுவின் போக்கே புதுமையாக, ஒரு சுவாரசியத்தை உண்டுபண்ணுவதாக இருந்தது அவனுக்கு. அவன் நெருங்க நெருங்க, அவள் ஒதுங்கிப் போனது சவாலாக இருந்தது.

`மற்ற பெண்களைவிட நீங்கள்தான் எத்தனை வித்தியாசமாக இருக்கிறீர்கள்!`

`எவ்வளவு விஷயம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்! பூர்வ ஜன்ம வாசனையாகத்தான் இருக்க முடியும்`.

கடல் அலையால் ஓயாது அலைக்கழைக்கப்படும் பாறாங்கல்லே நாளடைவில் தன் கூர்மையை இழந்து, உருண்டையாக ஆகிவிடுகிறது. இவள் கேவலம், உயரமும், ஒல்லியுமான பெண். சற்றுக் கூனல் வேறு என்று கணக்குப் போட்டான். மாற்ற முடியாதா, என்ன!

`இன்னும் என்னென்ன செய்தால் இவளை வழிக்குக் கொண்டு வரலாம்?` என்று யோசித்து யோசித்து திட்டம் போடுவதே பேரின்பமாக இருந்தது. ஓடும் விலங்கை துரத்தித் துரத்திப் பிடிப்பதில்தானே வேடுவனுக்கு உற்சாகம்!

நாலடி தள்ளியே நின்று, அறிவுபூர்வமாக எதையாவது விவாதிக்கும்போது அவள் முகத்தின் இறுக்கம் குறைகிறது என்று புரிந்துகொண்டான். வழக்கமான தனது மன்மத ஆட்டங்களைக் குறைத்துக்கொண்டு, பல்வேறு பொருட்களில் அமைந்த புத்தகங்களைத் தேடிப் படித்தான். மறுநாள் வாசகசாலையிலோ, உணவு விடுதியிலோ ரேணுவைத் `தற்செயலாகச்` சந்தித்து, தன் அறிவுத்திறமையை வெளிப்படுத்திக் கொண்டான்.

`என்னை மாதிரியே இவரும் ஒரு தனிமை விரும்பி. ஓயாது படிக்கிறாரே! என்ன துயரமோ, பாவம்!` என்று ஆரம்பத்தில் பரிவு காட்டியவள், தனிமையிலேயே வாடும் இருவர் ஒருவரை ஒருவர் சார்ந்தால், வாழ்க்கை எத்துணை இனிமையாக இருக்கும் என்று எண்ண ஆரம்பித்தாள்.

பழம் கனிந்துவிட்டதை உணர்ந்தான் கிரி. இவளை அனுபவித்துவிட்டு ஓடிவிட ஒத்துக்கொள்ளமாட்டாள், கல்யாணம் ஒன்றுதான் வழி என்பதைப் புரிந்துகொண்டிருந்ததால், தன் கோரிக்கையை மெள்ள வெளியிட்டான்.

உடனே அவள் சம்மதித்தபோது, தன் ஆற்றலில் மிகுந்த கர்வம் உண்டாயிற்று கிரிக்கு.

முதல் வருடம், அவன் என்ன பேசினாலும் மெய்மறந்து, அவனுடைய முகத்தையே பார்த்த மனைவியால் கிரியின் ஆண்மை பெருமிதம் கொண்டது.

போகப் போக, ஒரு இளம்பெண்ணுக்குரிய துடிப்பு சற்றுமின்றி, கண்ணிலும் ஒளியின்றி அவள் மந்தமாக இருந்தது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.

அவனுடைய உடலின் நெருக்கத்தை அவள் வேண்டாவெறுப்பாகப் பொறுத்துப் போவதுபோல்தான் பட்டது. `இவளுக்கு மரத்தால் செய்த உடம்பா என்ன,` என்ற ஆத்திரம் வந்தது அவனுக்கு.

அவனுக்குப் புரியவில்லை, என்றோ மனதில் படிந்த பயம், அத்தருணங்களில் தன் உடலின்மேலேயே அவளுக்கு உண்டான அருவருப்பு, `இதெல்லாம் தவறு` என்ற உறுதியான எண்ணம் முதலியவைதான் அவள் போக்கிற்குக் காரணமென்று.

புதுமோகம் எழுந்த வேகத்திலேயே மறைய, பிற பெண்களை நாடினான். மனைவியிடம் சிடுசிடுக்க ஆரம்பித்தவனுடைய போக்கை எந்தவித எதிர்ப்பும் காட்டாது அவள் ஏற்றது அவனுடைய ஆத்திரத்தை மேலும் அதிகப்படுத்தியது.

`போயும் போயும் இப்படி ஒரு உம்மணாமூஞ்சியை மயக்கவா அவ்வளவு பாடுபட்டேன்!` நனவுலகத்தின் கசப்பை மாற்ற குடித்தான். குடித்ததால், இன்னும் கேவலமாக ஆனான்.

ஒரு நாள் ரேணுவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் கிரி — ரசத்தில் உப்பு போட மறந்துவிட்ட குற்றத்துக்காக. உடனே, சம்பளத்தை அப்படியே தன் கையில் கொடுத்துவிடும் சாதுவான மனைவியைப் பகைத்துக் கொள்வதா சரிதானா என்ற நினைப்பு எழுந்தது. ஆனால், ரேணுவின் கண்களில் அவனைவிட அதிக பயம் தென்பட்டபோது, அவனுக்குள் ஒரு பூரிப்பு. ஒரு போதை. தான் எப்படி வதைத்தாலும் இவள் எதிர்ப்பு காட்டமாட்டாள் என்று சந்தேகமற புரிந்தபோது, அவனுடைய கொடுமையும் அதிகரித்தது.

`நான் ஒரு ஈனமான பிறவி. ஆண்கள் ஏதோ விதத்தில் என்னைப் பந்தாடுவதற்காகவே பிறந்து தொலைத்திருக்கிறேன் போலிருக்கிறது!` என்று, எது நடந்தாலும் அதைத் தன் குற்றமாக ரேணு ஏற்றது அவனுடைய போதையை அதிகரிக்கச் செய்தது.

இரண்டு நாட்களுக்கு முன்னர், தேத்தண்ணீரில் சீனி குறைவாக இருந்ததென்று, எண்ணை போத்தலால் நெற்றிப் பொட்டில் அடிக்கப்பட்டு, ரத்தம் பீறிட மயங்கிக் கிடந்தவளை பக்கத்து வீட்டினர் மருத்துவமனையில் சேர்த்திராவிட்டால், அந்தச் சமூக சேவகி சொல்லியதுபோல், இந்நேரம் அவள் கதை முடிந்திருக்கும்.

ரேணுவின் நினைவோட்டம் நிகழ் காலத்தை வந்தடைந்துவிட்டதை முகத்தின்வழி உணர்ந்துகொண்ட லீலா தொடர்ந்து பேசினாள்: “மாஸ்டர்ஸ் பட்டமில்ல வாங்கி இருக்கீங்க! எவ்வளவு அறிவு! எவ்வளவு உழைப்பு! தனியார் பள்ளியில தலைமை அதிகாரியா இருக்கீங்க!”

“உதவி தலைமை அதிகாரிதான்!” ரேணு முணுமுணுத்தாள்.

“சரி. மத்தவங்க ஒங்களை இந்த அளவுக்கு தாழ்த்த எப்படி விட்டீங்க, ரேணு?”

ரேணுவின் ஆள்காட்டி விரல் தன்னிச்சையாக வாய்க்குள் போய், மேல்பற்களுக்கும் கீழ்பற்களுக்குமிடையே மாட்டிக்கொண்டது.

“அட, படிப்பை விடுங்க. படிச்சிருக்கீங்களோ இல்லியோ, நீங்களும் ஓர் ஆத்மா. ஓர் உயிர். நம்ப எல்லாருக்கும் சுதந்திரமா, பயமில்லாம வாழற உரிமை இருக்கு”. அழுத்தந்திருந்தமாக லீலா கூறியது மனதைத் தைத்தது.

`இனியும் என்மேல் ஒருவர் ஆதிக்கம் செலுத்தி, கண்டபடி ஆட்டிவைக்க விடக் கூடாது`. உறுதி செய்துகொள்ள முயலும்போதே அது அவ்வளவு எளிதல்ல என்பதும் புரிந்தது.

பிறருக்கு அடங்கியே பழகிவிட்ட நான் மாற முடியுமா?

ஆனால், தான் இப்படியே இருந்தால், தன்மீது இன்னும் இன்னும் மதிப்பு குன்றி, வெறுப்பே தோன்றிவிடும் என்ற பயம் எழுந்தது.

பயம்.

இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் உணர்வுகள் முழுமையாக வளராத குழந்தையாக, எல்லா சந்தர்ப்பங்களிலும் பயந்து நடுங்கியே காலத்தைக் கழிப்பது!

எந்த மனிதப் பிறவியும் தனிமரமில்லை. `பிறருக்கு நன்மை செய்வதே வாழ்வெடுத்ததன் பயன்` என்று நினைக்கும் லீலா போன்ற நல்லவர்களும் இந்த உலகில் இல்லாமல் போகவில்லை.

அந்த நிதர்சனமே துணிச்சலைத் தர, ரேணுவின் முகத்தில் சிறு நகை பூத்தது.

லீலாவும் அதில் பங்கு கொண்டாள். “என்ன முடிவு எடுத்திருக்கீங்க? ரொம்ப அவசரப்படுத்தறேனோ?”

“இல்ல.. மொதல்ல, ஒங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்,” ரேணு ஆரம்பித்தாள். “அப்போ எனக்கு ஏழு, இல்ல எட்டு வயசு இருக்கும்”. விம்மல் எழுந்தது, காலதாமதமாக.

“எங்கம்மா என்னை பக்கத்து வீட்டில விட்டுட்டு, வேலைக்குப் போவாங்க..” பாம்புச் சுருளாய் இறுகிப் போயிருந்த நினைவுகள் சிறிது சிறிதாக நீள, குறுகியிருந்த ரேணுவின் நெடிய உருவமும் நிமிர ஆரம்பித்தது.

நிர்மலா ராகவன் (பிறப்பு: அக்டோபர் 17 1942) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ஓய்வு பெற்ற இடைநிலைப் பள்ளி ஆசிரியையான இவர் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சரளமாக எழுதக்கூடியவர். மின் அஞ்சல் முகவரி: nirurag@ashleydamico78 எழுத்துத் துறை ஈடுபாடு 1967 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதை, கட்டுரை, தொடர்கதை, வானொலி நாடகம், விமர்சனங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியாவின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *