கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: March 17, 2013
பார்வையிட்டோர்: 19,242 
 

இலைகளைத் துறந்து நிர்வாணத்திற்கு வெட்கப்பட்டு பனியைப்போர்வையாக போர்த்திக் கொண்டிருந்த மரங்களையும் செடிகளையும் ரசித்தபடியே புது வருடக் கொண்டாட்டங்களுக்கு தயராகிக் கொண்டிருக்கும் சுவீடனின் தென்பகுதி நகரான கார்ல்ஸ்ஹாம்ன் நகர சாலை ஒன்றில் மோகனுடன் நடந்து கொண்டிருந்த பொழுது

“கார்த்தி, இன்னக்கி நைட் நியுஇயர் கல்லறையில கொண்டாடுவோமா!!”

நான் எதுவும் பதில் பேசவில்லை. எங்கள் வீட்டில் இருந்து சில நூறு மீட்டர்கள் தூரம் இருக்கும் கல்லறைத்தோட்டத்தை நாங்கள் கடந்து கொண்டிருக்கும்பொழுதுதான் அந்தக் கேள்வியை கேட்டபொழுது குறிப்பிட்டக் கல்லறைத்தோட்டம் கடக்கும்பொழுது மட்டும் மனதில் வழக்கமாக பரவும் காரணமே இன்றி சிலிர்ப்பு மீண்டும் எட்டிப்பார்த்தது.

போன வருடம் நடன கேளிக்கை விடுதிக்குச் சென்று ஏகத்துக்கும் ஆட்டம் ஆடியது போல இந்த 2011 யையும் கொண்டாடலாம் என்பதுதான் எனது எண்ணமாக இருந்தது.

“ஏதாவது பப்க்கு போகலாமே”

” வித்தியாசமா டிரை பண்ணுவோம், உருளைக்கிழங்கு மாதிரி இருக்கிற இவளுகளைத் தடவி தடவி போரடிச்சுடுச்சு”

போனவருடம் அம்முவிடம் நடன விடுதிக்குப் போக அனுமதி வேண்டி கெஞ்சிய கெஞ்சல்கள் கொஞ்சல்கள் நினைவுக்கு வந்து தொலைந்தது. யாரையும் தொடாமல் ஆடுவேன் என சத்தியம் செய்த பிறகே அலைபேசியில் முத்தத்துடன் அனுமதியும் வந்தது. வாழ்க்கையில் சிலபகுதியை மீண்டும் வாழவேண்டும் என ஆசிர்வதிக்கப்பட்டால் 2010 ஜனவரி 1 இல் இருந்து மீண்டும் அம்முவுடன் ஏற்பட்ட கடைசி சண்டைக்கு முதல் நாள் வரை மீள் அனுபவம் செய்யவேண்டும். அம்மு பிரிந்து போன இந்த ஆறு மாதங்களில் குடியைக் கற்றுக்கொண்டதைத் தவிர வேறு எதையும் இன்னும் பழகவில்லை. இந்தப் புதுவருடத்தில் இருந்து தடவலுடன் காமத்தையும் பழகவேண்டும் யோசித்திருந்தேன்.

“பயம்னு எதுவும் இல்லை, எதுக்கு அநாவசிய ரிஸ்க், சின்ன தடுமாற்றம் கூட பெரிய டேஞ்சர்ல கொண்டு வந்துவிட்டுடும், எனக்கு இந்த ஐடியா தோதுப்படல”

“கம் ஆன் கார்த்தி, இத்தனை வருஷம் மனுஷாளுங்களோட கொண்டாடுனோம், ஒரு வேளை பேய் பிசாசு இருந்தா அவங்களோடயும் சேர்த்துக் கொண்டாடுவோம்”

பக்கத்து அறை நண்பர்களில் சிலரும் மோகனின் கல்லறைத் தோட்டக் கொண்டாட்டத் திட்டத்தை அங்கீகரிக்க எனக்கும் வேறுவழியில்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்தது. கோழிக்கறி வருவல்கள், மீன் குழம்பு, இரண்டு வோட்கா போத்தல்கள், பெரிய கேன் வைன், இருபது முப்பது பீர் டின்கள், வீடியோ கேமிரா என ஆறு பேர் குளிருக்கு ஏற்புடைய ஆடைகளுடன் கல்லறைத் தோட்டத்திற்கு ஏற்கனவே இருந்த அரை போதையுடன் கிளம்பினோம்.

எனக்கு மட்டும் மனதில் ஏதோ தவறு நடக்கப்போகின்றது உறுத்திக் கொண்டே இருந்தது. போகும் வழியில் ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடித்த 2010 யின் குறிப்பிட்ட நாட்களைப் பற்றி பகிர்ந்து கொண்டார்கள்.

மோகனுக்கு டெண்டுல்கர் 200 அடித்த நாள் பிடித்த நாள் என்றும் அந்த ஆட்டத்தை நேரிடையாகப் பார்த்திருக்கவேண்டும் என விருப்பப்படுவதாக சொன்னார். பேசிக்கொண்டே கல்லறைத் தோட்டத்திற்குள் எந்த அசம்பாவிதங்களும் இன்றி வந்து சேர்ந்தோம். மையமாக ஓரிடத்தில் பனிப்படலத்தைத் துப்புரப்படுத்திவிட்டு மதுபானக் கொண்டாட்டங்கள் ஆரம்பிக்க, எனக்கு பேய் பயத்தை விடவும் மரித்தோர் துயில் உறங்கும் இடங்களை அவமதிப்பதாக எங்களைப் போலிஸ்பிடித்துபோய் விடுவார்களோ என்ற பயம்தான் மனதைக் கவ்வ ஆரம்பித்தது.

குடிபோதையில் நண்பர்கள் ஒவ்வொருவராக ஒரு கல்லறையின் மேல் படுத்துக் கொண்டு வீடியோவும் புகைப்படமும் எடுத்துக் கொள்ளும்பொழுதெல்லாம் அவமரியாதை செய்கின்றோமே என்ற குற்ற உணர்ச்சியை ஆல்ஹகால் சமன் செய்தது.

தேவாவின் கானாப்பாடல்களுக்கும் இளையராஜவின் குத்துப்பாடல்களுக்கும் ஒழுங்கற்ற ஆட்டம் பாட்டம் அரங்கேறிக்கொண்டிருந்தபொழுதுதான் மோகன் ஆடிக்கொண்டிருந்த கல்லறையின் பின்னாள் இருந்த மரத்தில் இருந்து ஒரு சுவிடீஷ் ஆள் வர, எனக்கு தூக்கி வாரிப்போட்டது. இரண்டு நண்பர்கள் மயங்கியே விழுந்தனர்.

“ரிலாக்ஸ் கய்ஸ், ஐயம் ராபர்ட் நீல்ஸ்ஸான்” என அந்த உருவம் அறிமுகப்படுத்திக்கொண்டது. வழக்கமான பேய்களுக்கான அடையாளங்கள் எதுவும் இல்லை. கால்கள் இருந்தன. கண்களில் அன்பான பொலிவு இருந்தது.

“பயப்படாதீர்கள், நான் பேயோ பிசாசோ இல்லை” என்ற ராபர்ட் நாங்கள் வைத்திருந்த விஸ்கி பாட்டிலை எடுத்து ஒரு மடக்கு குடித்து விட்டு எங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் கூறினான். சரியாக நள்ளிரவு 12.00 ஆகி இருந்தது.

மயங்கி விழுந்த நண்பர்களை தெளிய வைத்து எழுப்பி ராபர்ட்டையும் எங்களுடன் கொண்டாட்டத்தில் இணைத்துக்கொண்டோம்.

“இவன் மஃப்டியில் வந்த போலிஸா இருக்குமோ” என மோகனின் காதில் கிசுகிசுத்தேன்.

“நீங்க எப்படி இந்த நேரத்தில” என ராபர்ட்டிடம் கேட்டதற்கு, தான் ஒரு விஞ்ஞானி எனவும் கல்லறையின் அமைதி அவனுக்குப்பிடித்து இருப்பதாகவும் , வாய்ப்பு கிடைத்தால் இங்கேயே ஒரு வீடு கட்டி இருக்க விரும்புவதாகவும் சொன்னான். காலத்தைக் கட்டி நிறுத்துவது மரணம் மட்டுமே மரணத்தையும் காலத்தையும் ஆராய்ச்சி செய்பவன் ஆதலால் அடிக்கடி இங்கு வருவதாக சொன்னான்.

“நீங்க பார்க்கிறதுக்கு விக்கிலீக்ஸ் அசாஞ்சே மாதிரி இருக்கீங்க”

“யாரு அசாஞ்சே?”

ஸ்விடிஷ் ஆட்களுக்கு அசாஞ்சேன்னா கொஞ்சம் கிலிதான் , காட்டிக்க மாட்டானுங்க என்று மோகன் தமிழில் சொல்லியபடியே ராபர்ட்டின் பக்கம் திரும்பி

“உங்களுக்கு கேர்ள்பிரண்ட்ஸ் இருந்தா அவங்களையும் கூட்டிட்டு வந்து இருக்கலாமே” ஆங்கிலத்தில்

அடுத்த வருடம் அவர்களையும் இங்கே எதிர்பார்க்கின்றேன் என்று சொல்லியபொழுது எனக்குத் தோன்றிய அமானுஷ்ய உணர்வு அவன் தனது காரில் எங்களை வீட்டில் விடுவதாக சொல்லியபொழுது விலகியது.

இடையில் நான் ராபர்ட்டுடன் எடுத்தப் புகைப்படங்களைச் சரிப்பார்த்துக்கொண்டேன், அனைத்திலும் அவன் உருவம் பதிவாகி இருந்தது. பிரச்சினை யில்ல. இவன் பேயாக இருக்க முடியாது. வேண்டுமானால் போலிஸாகாவோ அல்லது எங்களைப்போல வெற்று சுவாரசியத்திற்காக இங்கு வந்திருப்பவனாக இருக்கக்கூடும் என முடிவு செய்தேன்.

அனைவரும் அவன் காரில் ஏறிக்கொண்டோம். சில நிமிடங்களில் வீடு வந்து சேர்ந்திடும் பயணம் எனோ அதிக நேரம் பிடிப்பதைப்போல எனக்குத் தோன்றியது. ஒரு வேளை ராபர்ட் சுற்றுப்பாதையில் போய் கொண்டிருக்கலாம் அல்லது அதிக குடிபோதை நேரத்தை மெதுவாகசெலுத்திக் கொண்டிருக்கலாம். கண்கள் மெல்ல செருக தொடர்பற்ற கடந்த வருட நிகழ்வுகள் ஒன்றின் பின் ஒன்றாக பின்னோக்கி கனவுகளாக வந்து கொண்டிருந்தது. போன வருடம் இதே அதிகாலைப்பொழுதில் தான் அம்முவுக்கு சத்தியம் செய்தபடியே நாகரிகமாக ஆடி நண்பர்கள் எல்லோரும் போதையில் இருக்க , அவர்களுடன் நான் தெளிவாக வந்து சேர்ந்தேன்.

எல்லோரும் இறங்கிக்கொண்டு அவனுக்குப் புத்தாண்டு வாழ்த்து சொல்ல அவனும் “ஹேப்பி நியு இயர் 2010” என சொல்லிவிட்டுப்போனான்.

“மச்சி , நம்மளை விட அவனுக்கு போதை ஜாஸ்தியாயிடுச்சு, ஸ்டுப்பிட் சுவிடிஷ் பெல்லோ, ஸ்டில் இன்னும் 2010”

கனவுகளின்றி நன்றாகத் தூங்கிப்போக அலைபேசி அடிக்க எடுத்துப் பேசினால்

“டேய் கார்த்தி” அம்முவோட குரல்…

“என்னடா சத்தத்தைக் காணோம், எவ்வளையாவது தொட்டு ஆடினியா… ஹேப்பி நியு இயர்டா ”

“ஹேப்பி நியு இயர் அம்மு , ஹேப்பி நியு இயர் 2011”

“லூஸாப்பா நீ, அடுத்த வருஷம் 2010, குடிச்சியா”

“இல்லைடா புஜ்ஜிம்மா, ஜஸ்ட் டயர்ட்”

“சரி சரி நீ தூங்கு , இரண்டு மணி நேரம் கழிச்சு கூப்பிடுறேன்”

தலை சுத்தியது. மின்னஞ்சல்களைப் பார்த்தேன். அனைவரும் 2010 க்கான வாழ்த்துகளைச் சொல்லி இருந்தார்கள். செய்தி இணையதளங்களைப் பார்த்தேன் , 2009 வருடத்தின் முக்கிய சம்பவங்களைப் பட்டியலிட்டு இருந்தார்கள். உள்ளூர் செய்தித் தளத்தை வாசித்தேன்.

பிரபல இயற்பியல் இளம் விஞ்ஞானி ராபர்ட் நீல்ஸ்ஸான் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு திரும்புகையில் கார் விபத்து ஒன்றில் பலியானார் எனவும் அவர் கடைசியாக காலப்பரிமாணத்தில் முன்பின் நகர்தல் பற்றிய ஆராய்ச்சிகளை செய்து கொண்டிருந்தார் எனக்குறிப்பிடப்பட்டிருந்தது. இணைய தளத்தின் முகப்பைப் பார்த்தேன், ஜனவரி 1, 2010 எனப்போட்டிருந்தது.

இந்த வருடமாவது ஒரு நாள் போட்டிகளில் இரட்டைச்சதம் அடிக்கப்படுமா , 2010 கான எதிர்பார்ப்பு செய்திகள் பக்கம் மடிக்கணினியில் திறந்து இருக்க அம்மு மீண்டும் அழைத்தாள்.

– ஜனவரி 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *