நிதர்சனங்கள் நிர்வாணமானால்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 7, 2016
பார்வையிட்டோர்: 12,169 
 
 

தாயைப் பிரிந்து செல்லும் குழந்தை போல், தயங்கி தயங்கி மேல்திசை நோக்கி சென்று கொண்டிருந்தான் சூரியன். அவனது தயக்கத்திற்கு எந்தவித பலனும் இல்லையென்பதை உணர்த்துவது போல், திடீரென்று சூழ்ந்த கருமேகங்கள், அவனை முழுவதும் மறைத்தன. செய்வதறியாது திகைத்தாலும், சில நாட்களாக இப்படித் தானே நடக்கிறது, என்ற உணர்வில் கடமையை செய்யும் கண்ணியத்தோடு ஆதவனும் மறைந்து கொண்டான். சில வினாடிகளில் கருமேகங்கள் தாங்கள் சுமந்து கொண்டிருந்த நீரை மழையாகப் பிரசவித்தன.

மழையின் தூரலைக் கண்டதுமே, பின்பக்கம் சென்ற யமுனா, கொடியில் கிடந்த துணிகளை உருவிக் கொண்டிருந்தாள். தூரல்கள் அதிகரித்து மழையும் வலுக்க ஆரம்பித்த, அந்த நொடியில் கடைசி துணியையும் எடுத்து முடித்தவள், உள்ளே நுழைவதற்குள், சற்றே நனைந்து விட்டாள்.

உள்ளே வந்தவள் உலர்ந்தவை, உலராதவை என்ற தரத்தில் துணிகளைப் பிரித்து போட்டு விட்டு, சமையலறைக்குள் நுழைந்தவள், தேநீருக்காக அடுப்பில் பாலை வைத்தாள். அது கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து விட்டு கணவனைத் தேடி வெளியே வர, சாரல் அடித்து ஈரமாக இருந்த தரை சற்றே வழுக்கியதால் ஜன்னல் கம்பிகளை பற்றிக் கொண்டு விழாமல் சுதாரித்து நின்று, திறந்திருந்த ஜன்னலை, மழை நீர் உள்ளே வராமல் இழுத்து சாத்தினாள். ஈரத்தின் மேல் மேட்டை(mat) எடுத்துப் போட்டவள், குளியலறையில் நீர்விழும் சத்தத்தை கேட்டவள், தனக்கு மட்டுமான தேநீருடன் தன்னறைக்கு சென்றாள்.

ஜன்னலருகில் எப்போதும் வீற்றிருக்கும் நாற்காலியில் ஆசுவாசமாக அமர்ந்து தேநீரைப் பருகலானாள். அவளின் வரவிற்காக காத்திருந்ததைப் போல, நிதானமாக பெய்து கொண்டிருந்த மழை, சாரலாக மாறி அவளை செல்லம் கொஞ்சியது. தேகத்தில் சிலிர்ப்பும், முகத்தில் புன்னகையும் முகிழ்க்க, மனமும் குளிர்ந்தது.

சுற்றுப்புறத்தில் மழையின் குளுமை, அகமும் புறமும் ஒன்றிணைந்த நிர்ச்சலனமான தனிமை. கைகளில் ஆவி பறக்கும் சூடான தேநீர் நிறைந்த கோப்பை. அற்புதமான தருணமாக இருந்திருக்க வேண்டிய பொழுது, இப்பொழுதும் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் மழையால், சராசரியாகிப் போனது. கையெட்டும் தூரத்தில் இருக்கும் பொருள், மனதுக்கு மட்டும் தூரமாகிப் போவது போல.

சாரல் நின்று, மழையின் நீர்த்தாரைகள் நிதானத்திற்கு வந்தன. அவளின் பார்வை அதில் இலயித்திருக்க, மனமோ மழையின் வரலாற்றைப் புரட்டிக் கொண்டிருந்தது. எத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்படிப்பட்ட மழை. பத்து நாட்களுக்கும் மேலே கொட்டிக் கொண்டிருந்தாலும், இன்னும் தீர்ந்த பாடில்லை. இன்னும் இன்னும் என்று மழை நாட்கள் நீண்டு கொண்டே செல்கிறதே என்ற நினைத்த மாத்திரத்தில், சலனமற்றிருந்த முகத்தில் விசனமும் படிந்தது.

“எப்போ தான், நிம்மதியா வெளியே போறதோ” என்று நினைத்தவள் கூடவே, “நல்ல வேளை, கார்த்திக் இதுவரை எங்கேயும் கூப்பிடலை. அதுவே ரொம்ப நிம்மதி..” என்று மெல்ல முணுமுணுத்துக் கொண்டாள்.

குளித்து முடித்து, அப்போது தான் அறைக்குள் நுழைந்திருந்த கார்த்திக்கின் காதிலும், அவளின் முணுமுணுப்பு விழ, புன்முறுவலுடன் அவளைப் பார்த்தான். அவன் வந்ததை அறியாதவள், மழையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளிடம் ஒரு கண்ணை வைத்துக் கொண்டே, வெளியே செல்வதற்கான ஆயத்தங்களில் , சத்தமில்லாமல் ஈடுபட்டான்.

மழையின் அசுத்தங்களே, அவளது விசனத்தின் காரணம். மழைக்காலத்தில் இது தான் இயல்பு என்றாலும், அவளால் என்றுமே ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை. சிறு வயதிலிருந்தே அவள் அப்படியே வளர்ந்து விட்டாள். கால ஓட்டம் எந்த மனிதனையும் சிறிதளவாவது மாற்றி விடும் சுபாவம் கொண்டது. ஆனால், அந்த காலமும், திருமணத்திற்கு பின்னும் கூட அவளிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

அவளுக்கு மிகவும் பிடித்த மழையேயென்றாலும் அதில் நனைவது பிடிக்காது. சில விஷயங்கள் ரசனைக்கு மட்டுமே, அனுபவிக்க ஏற்புடையதல்ல என்ற வகையில் தான் யமுனாவிற்கு மழையின் மேல் உள்ள விருப்பம். ஆனால், சாரலை இரசித்து அனுபவிப்பாள்.

மழையின் தீவிரம் சிறிது குறைந்திருக்க, எழுந்து நின்றவள், ஜன்னல் கம்பிகளின் இடைவெளிகள் வழியே தன் இரு கைகளையும் வெளியே நீட்டினாள். மழையின் நீர், ஏந்தியக் கைகளில் விழுந்து, நர்த்தனம் ஆடிய விரல்கள் வழி கீழிறங்கின. சில நிமிடங்கள், அதில் விளையாடிக் கொண்டிருந்தவளின் மீது, மீண்டும் சாரல் அடிக்க அதில் மேலும் குதூகலமானவள், முன்புறமாக சிறிது நகர்ந்து வந்து, ஜன்னல் கம்பிகளில் முகத்தைப் பதித்து, கண்கள் மூடி சிலிர்த்து நடுங்கினாள்.

இவ்வளவு நேரமும், யமுனாவையே ஒரு ஆனந்தமான ஆச்சரிய பாவத்துடன் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக், தயாராகி விட்டதால் அவளருகே வந்தான். முகம் முழுவதும் சாரல் படர்ந்திருந்த நிலையில், நின்றிருந்தவளை தன்னிடம் இழுத்து நிறுத்தினான்.

ஜன்னலில் சாய்ந்தவாறு நின்றிருந்தவள், இழுத்த வேகத்தில் பிடிமானம் இல்லாததால் இலேசாக தடுமாறி உடனேயே சுதாரித்து நிமிர்ந்தவளின் விழிகள் கணவனைக் கண்டு, “அவன் முன் இப்படி சிறுபிள்ளை போல் நடந்து கொண்டோமே” என்ற வெட்க உணர்வில் தாழ்ந்தன.

அதை மறைக்கும் விதமாக, “குளிச்சிட்டு வந்துட்டீங்களா கார்த்திக்.. இருங்க வரேன்” என்று நகர்ந்தவளைக் கைப்பிடித்து நிறுத்தியவன்,

“நான் குளிச்சிட்டு வந்து அரைமணி நேரமாச்சு.. அது கூட தெரியலை”. கூறியவாறே தன் கையிலிருந்த துண்டினால் அவளது முகத்தை அழுந்த துடைத்து விட்டான்.

அதன் பிறகே, அவனை நன்றாகப் பார்த்தவள், “எங்க கிளம்பிட்டாங்க..?” என்ற கேள்வியை மனதுக்குள்ளே மறைத்து, வெளியில்

“சாரி, கார்த்திக். நான் கவனிக்கலை..” என்று கூறிவிட்டு, மீண்டும் நகர யத்தனித்தாள்.

அவளின் பார்வையிலேயே, அதை உணர்ந்தாலும் கண்டு கொள்ளாமல் “எங்க போற, கொஞ்ச நேரம் இரேன்”.என்று நிறுத்தினான்.

“டீ எடுத்துட்டு வந்துடுறேன் கார்த்திக்”..

“இல்லை யமுனா, டீ வேண்டாம். கொஞ்சம் வெளியே போகணும்.” என்றவுடன், அமைதியாக நின்றாள்.

“எங்கே போறேன்னு நீ கேட்கலைன்னா, நான் ஏன் சொல்லணும்..?” என்றவாறே, கண்ணாடியின் புறமாக நகர்ந்து தலையை மீண்டும் வாரினான்.

சில நொடிகள் மட்டுமே மௌனமாக இருந்தவன், “இன்னைக்கு ஒரு ஃப்ரெண்டோட ரிசப்ஷன். அதுக்கு தான் கிளம்பிக்கிட்டு இருக்கேன்..” என்று தானாகவே கூற, அவள் மெல்ல சிரித்தாள்.

“எதுக்கெடுத்தாலும் ஒரு சிரிப்பு. இவன் ஒரு கேனையன். கேட்டாலும், கேட்கலைன்னாலும் சொல்லத்தானே போறான். அப்படிங்குற நினைப்பு இல்லை..” என்றவனின் குரலில் சிரித்த முகம் உடனே, சுருங்கியது.

“சரி, சரி, உடனே சுருக்கிக்காத. சும்மா விளையாட்டுக்கு தானே சொன்னேன். இப்படி உம்மணாமூஞ்சியா இருந்தா, எனக்கு எப்படி வெளியே போக மனசு வரும்.. சொல்லு.” என்று அவளது முகவாயைப் பிடித்துக் கொஞ்சினான்.

அதில் வெட்கமுற்றவள், “சரிங்க. பத்திரமா போய்ட்டு, சீக்கிரமா வாங்க.” என்றவாறே அவனது கைகளை எடுத்து விட்டு புன்னகைத்தாள்.

“ஆக்சுவலா, ரெண்டு பேரும் போகலாம்னு தான் நினைச்சேன். ஆனா, மழை வந்து கெடுத்துடுச்சு”. என்றவன் அலைபேசியை தேடினான்.

“ஏன்..???” வினவியவளின் மனதில் குழப்பம் மூள, மௌனமாக அவனை ஏறிட்டாள்.

“ஏன்னா, நீதான் மழை வந்தா, வீட்டை விட்டு நகர மாட்டியே.. அதான்.” என்றவன், தேடிய அலைபேசியை எடுத்துக் கொண்டு, “வரட்டுமா..?” என்று விடைபெறும் நோக்கில் யமுனாவைப் பார்த்தான்.

“கார்த்திக், நா.. நான்.. இப்படின்னு உங்களுக்கு எப்படி..? நான் எப்பவுமே சொன்னதில்லையே..” என்றவளின் வார்த்தைகள் தயங்கி தடுமாறினாலும், விழிகளின் வியப்பு ஆனந்தமாக விரிந்தன.

அவளின் சிந்தனையில் இரு வருடங்களின் மணவாழ்க்கை மின்னலாக ஓடி மறைந்து, அவன் மழைக்காலங்களில் வெளியே கூட்டி சென்றதில்லை என்ற உண்மையும் புரிந்தது. மிகுந்த ஆச்சரியம் என்றாலும், சொல்லாமலேயே புரிந்து கொண்ட கணவன் என்ற பெருமையும் பூரிப்புமே, அதில் பரிபூரணமாக நிறைந்திருந்தது.

ஒரு புன்னகையுடன் அவளருகே வந்தவன், “யமுனா, கணவன், மனைவிக்குள்ள இருக்குற பந்தம் சொல்லிக்கிறது இல்லை, புரிஞ்சுக்குறது.. ஆனா..” என்று நிறுத்தினான்.

“ம்ம்.. ஆனா..???” அவளின் வினாவில் வியந்தவன்,

“யமுனா, என்னைக் கொஞ்சம் கிள்ளேன்.” என்று தன் கைகளை அவளிடம் நீட்டினான்.

அவனது செய்கையின் காரணம் புரியாமல் குழப்பத்துடன் பார்த்தாலும், நீட்டிய கைகளில் மெல்ல கிள்ளினாள்.

“இல்லை, நீதானான்னு சந்தேகம் வந்துடுச்சு..” என்று இழுத்தவனை, சிரிப்புடன் முறைத்தாள்.

“ஓகே, முறைக்காத, நானே சொல்றேன். என்னோட விருப்பு, வெறுப்பு எதுவா இருந்தாலும், உன் கிட்ட தான் சொல்றேன். ஏன்னா, நம்ம விருப்பத்துக்கும் மனசுக்கும் நாமே மதிப்பு கொடுக்கலைன்னா வேற யாரு கொடுப்பாங்க. அதுல எல்லாம் எனக்கு நோ காம்ப்ரமைஸ். ஆனா, நீ மட்டும் எப்பவும், எதுவுமே சொல்றது இல்லை.” என்று குறைபட்டான்.

“நான் சொல்லலைன்னா, என்ன கார்த்திக். நீங்க தான், என்னை இவ்வளவு அழகா புரிஞ்சு வச்சிருக்கீங்களே..” என்றவள், அவனின் கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டாள் மகிழ்வுடன். அவனின் புரிதல் கொடுத்த அதீத மகிழ்ச்சியில், அவளின் உணர்வுகள் வார்த்தைகளின் வடிவம் கண்டது.

அவளது கைகளை தன் கழுத்துக்கு மாலையாக்கியபடியே. “எல்லா நேரமும் அப்படியே நடந்துக்குவேன்னு சொல்ல முடியுமா, யமுனா. உன்னோட தேவைகள், விருப்பங்கள், அசௌகரியங்கள், சங்கடங்கள் இதெல்லாம் சொன்னாத்தானே எனக்குப் புரியும்.” என்றான்..

“மழை வந்தா, வெளில போக பிடிக்காதது எனக்கு மட்டுமில்லை, எல்லாருக்கும் உள்ளது தான். எல்லாரும் சகிச்சுக்குறாங்க. ஆனா, அந்த சகிப்புத்தன்மை எனக்கு இல்லைன்னு புரியணும்னா, ரொம்ப நுட்பமா கவனிச்சா தவிர தெரியாது. அந்த அளவுக்கு என்னைப் புரிஞ்சு நடந்துக்குறதே போதும்.” என்றவள், மாலையாகி விட்டிருந்த கைகளால் அவன் தலையை இழுத்து முட்டினாள்.

“யமுனா, இன்னைக்கு ரொம்ப ரொமாண்ட்டிக்கா இருக்க போலருக்கே.. “ என்று சிரித்தவன், தன்னுடைய புரிதல் தான், அவளது தன்னை மீறிய செயல்களுக்குக் காரணம் என்பதையும் உணர்ந்து கொண்டான்.

அவனது சிரிப்பில் வெட்கம் கொண்டவள், அவனின் பார்வையை தவிர்ப்பதற்காக விலகி நின்றாள்.

“இதுக்கு மேல இங்க நின்னா, ரிசப்ஷனுக்கு போன மாதிரி தான்..” என்று முணுமுணுத்தவன், சத்தமாக “ஓகே, யமுனா. டைமாச்சு. போய் தலையைக் காட்டிட்டு வந்துடுறேன். பத்திரமா இருந்துக்கோ..” என்று கூறிவிட்டு வாசலை நோக்கி நடந்தான்.

“கார்த்திக் ஒரு நிமிஷம்..” என்று அவசரமாக அழைத்தவள்,

அவன் நின்றதும் தயங்கிய குரலில், “கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, நானும் கிளம்பி வரேன்..” என்று கூறினாள். அவளது குரலில் குற்ற குறுகுறுப்பை உணர்ந்தவன், அவளது அருகில் வந்தான்.

அவளது தோள்களில் கையை வைத்து, தனக்கு நேர் எதிராக நிறுத்தியவன், “இங்க பாரு யமுனா, எனக்காக ஒரு விஷயத்தை நீ செய்றது எனக்கு ரொம்ப சந்தோஷம் தான். ஆனா, அது உனக்கு சங்கடமா இருக்கக் கூடாது. அது ரொம்ப முக்கியம். அதை முதல்ல புரிஞ்சுக்கோ” என்றான்.

அவளின் அமைதியைக் கண்டு, மேலும் தொடர்ந்தான். “நானும் நமக்கு கல்யாணம் ஆன இந்த ரெண்டு வருஷமா, இதையே தான் நேரடியாகவும் சொல்லிப் பார்த்துட்டேன். மறைமுகமாகவும் சொல்லிப் பார்த்துட்டேன். சில விஷயங்கள் அடுத்தவங்களுக்காக செய்யலாம். ஆனா, எல்லா விஷயமும் அப்படி செய்ய முடியாதுன்னு. பட், நோ யூஸ். இப்போ தான் உன் மனக்கூட்டில் சின்ன விரிசல் விட்டுருக்கு. கூடிய சீக்கிரம் உடையும் அல்லது உடைக்கிறேன்.” என்றவன், அவள் எதுவோ சொல்ல வருவதை கண்டு, அவளது இதழ்களில் விரல் வைத்து, “ஷ், போதும். எதுவும் சொல்லாத. இப்ப நான் கிளம்புறேன். மீதியை நைட் வந்து கண்ட்டினியூ பண்ணிக்கலாம்” என்று தடுத்து விட்டு கிளம்பினான்.

கார்த்திக், ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறான். அம்மா லட்சுமி கிராமத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கிறார். வேலையின் காரணமாக, நகரத்தில் தனியாக இருக்கும் மகனுக்கு திருமணம் செய்ய ஆலோசித்த அதே நேரம், தூரத்து உறவினரின் ஒரே மகளான யமுனாவின் ஜாதகமும் கிடைக்க, அனைத்தும் சுமூகமாக நடைபெற்று திருமணமும் இனிதே முடிந்தது.

யமுனா படித்திருந்தாலும் வேலைக்கு செல்லும் விருப்பமோ, தேவையோ அவளுக்கு இல்லை. ஆகவே, இனிய இல்லறம், நல்லறமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

**************************

அந்த கல்யாண மண்டபம் அலங்கார மின் விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது. அரங்கில் கணிசமான கூட்டம் நிறைந்திருந்தது. மழையின் காரணமாகவோ, அல்லது அவனின் தாமதத்தாலோ என்னவோ, அவன் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை. அதனால், கார்த்திக் உள்ளே நுழைந்தவுடனேயே பரிசுப் பொருளைக் கொடுத்து வாழ்த்திவிட்டுக் கீழே இறங்கினான்.

கீழே இறங்கியவனை, சில நண்பர்கள் அழைக்கவும் அவர்களிடம் சென்று அமர்ந்து கொண்டான்.

சில சாதாரண உரையாடல்களுக்குப்பிறகு, பேச்சு மாப்பிள்ளையாக நின்றுகொண்டிருக்கும்நண்பனைப்பற்றித்திரும்பியது.

“ப்ச்..பாவம்டா.. உருகி உருகிலவ்பண்ணிட்டுஇப்போவேறஒருபொண்ணைக்கல்யாணம்பண்ணிக்குறமாதிரிஆயிடுச்சு.”என்றான்ஒருநண்பன்.

“இதெல்லாம் இந்த காலத்துல ஒரு பெரிய விஷயமே இல்லைடா..”என்றான்மற்றொருவன்.

இதையெல்லாம்கேட்டுக்கொண்டிருந்தகார்த்திக், மேடையின்பக்கம்பார்வையைசெலுத்திவிட்டு, மீண்டும்நண்பர்களிடம்திரும்பி,

“அவனைப் பார்த்தா லவ்ஃபெய்லியர் மாதிரி தெரியலையேடா. நல்லாத்தானேஇருக்கான். ”என்றான்.

“அதுக்காக, கல்யாணமேடையிலதேவதாஸ்மாதிரி நிக்க சொல்லுவபோலருக்கே..”என்றான்ஒருவன்.

“அப்புறம்ஏண்டா, லவ்பண்ணபொண்ணைவிட்டுட்டுவேறபொண்ணைக்கல்யாணம்பண்ணிக்கணும்..?”என்று சிறிது சத்தமாகக் கேட்க, அங்கிருந்த சிலரது பார்வை இவர்கள் பக்கம் திரும்பியது.

“டேய், ஏண்டாகத்துற.. நீவேறஏழரையைக்கூட்டிடாத. மெதுவாபேசு..”என்றான்மாப்பிள்ளையின்நெருங்கியநண்பன்பாபு.

“ஏண்டா இப்படி பயப்படுறீங்க. மனசுலஒன்னு, வெளிலஒன்னுன்னுஇருக்குறவங்கஎல்லாம்இப்படித்தான்வாழ்நாள்முழுக்கபதட்டத்துலயேஇருக்கணும்.”என்றான்சாதாரணமாக.

“எல்லாருக்கும் ஏதோ ஒரு நேரத்துலயாவது இப்படிப்பட்ட சூழ்நிலைவரும். அந்த நேரத்துல இப்படி இருக்குறது சகஜம்தான். இதுக்கெல்லாம் ஒன்னும் பண்ணமுடியாது.”என்ற பாபுவிடம்,

“அதுக்காக, வாழ்க்கைஆரம்பிக்குறஇடத்துலயே, பொய்யாநடிக்கணுமா..?” என்றான்.

“அவனோடமனநிலைஎன்னன்னு, நீயும்நானும்சொல்லமுடியாது. இவனுங்க சும்மாசொன்னதையெல்லாம் இவ்வளவுசீரியஸாஏண்டாஎடுத்துக்குற..? எல்லாநேரத்திலும், எல்லாமும்பேசிடக்கூடாது. காலேஜ்லஎப்படிபேசிக்கிட்டுஇருந்தியோ, அப்படியேதான்இப்பவும்இருக்க. கொஞ்சமாவதுபக்குவத்தோடநடந்துக்கோடா.. “என்றதும், கார்த்திக்குஇலேசானகோபம்துளிர்த்தது.

நண்பர்களைதீர்க்கமாகபார்த்தவன்விருட்டென்றுஅவ்விடம்விட்டுஅகன்றுவெளியேவந்தான்.

“ஏண்டா, இவனுக்குபோய்பத்திரிக்கைவச்சான்..”என்றஒருநண்பனின்கேள்வியில்,

“அதைத்தாண்டா, நாங்களும்நினைச்சுக்கிட்டுஇருக்கோம்..” என்றனர்மற்றவர்கள், நொந்துபோனகுரலில்.

“இவனுக்குரொம்பஅகம்பாவம்.. என்னமோஅரிச்சந்திரன்வீட்டுவாரிசுன்னு நினைப்பு. நேர்மையாம்நேர்மை. அவன்வீட்டுக்குள்ளபோய்பார்த்தால்தெரியும்அவனோடநேர்மை..”என்றுபொரிந்துதள்ளினர்.

மண்டபத்தைவிட்டுவெளியேவந்தகார்த்திக், வண்டியைஎடுத்துக்கொண்டுகிளம்பினான்.சிறிது தூரம் சென்ற பிறகு பசி வயிற்றைக் கிள்ள, அதன் பிறகே, சாப்பிடாமல் வந்து விட்டதை உணர்ந்தான். பின், ஒரு உணவகத்தில் பார்சல் வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி விரைந்தான்..

********************

“என்னங்க இது, ரிசப்ஷனுக்கு போய்ட்டு பார்சலோட வந்திருக்கீங்க..” என்ற யமுனா, அவனுக்கு தட்டு எடுத்து வைத்தாள்.

“அது ஒரு சின்ன கதை, நீயும் உட்காரு. முதல்ல சாப்பிடுவோம். அப்புறம் கதை பேசுவோம். நீ இன்னும் சாப்பிடலை தானே?” என்றவன், அவளையும் அமர வைத்தான்.

“இல்லை. மதியம் வச்சதே இருக்கு. நான் மட்டும் தானேன்னு, ஒன்னும் செய்யலை..” என்றளின் கடைசி வார்த்தைகள் அவனின் முறைப்பில் தேய்ந்தன.

“சரி, சரி முதல்ல சாப்பிடு. நம்ம கதைக்கு அப்புறம் வருவோம்” என, இருவரும் உண்டு முடித்தனர்.

கார்த்திக் தொலைக்காட்சியில் மூழ்கியிருக்க, எஞ்சியிருந்த வேலைகளை முடித்துக் கொண்டு வந்த யமுனாவும் அவனுடன் இணைந்தாள். சிறிது நேரம் சென்ற பிறகே, நினைவு வந்தவனாக,

“எப்படியும் நீயா கேட்கப் போறதில்லை. அந்த பார்சல் கதையை நானே சொல்லிடுறேன்..” என்று ஆரம்பித்தவன், தொலைக்காட்சியை நிறுத்தி விட்டு, அவளின் புறமாக திரும்பி நடந்த அனைத்தையும் கூறி முடித்தான்.

“இது தான் என்னுடைய பார்சலுக்கான காரணக்கதை. விளக்கம் போதுமா..? அல்லது இன்னும் தேவையா தேவியாரே. தங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் நான் விளக்க கடமைப்பட்டுள்ளேன்..” என்று கிண்டலில் இறங்கினான்.

அவள் எதுவும் கூறாமல், “சரி, தூங்கப் போகலாமா..?” என்றவாறே எழுந்து நின்றாள்.

“ஆஹா, அப்படியெல்லாம் விட்டுவிட முடியாது.. சற்று அமருங்கள் “ என்று அவளது கைகளைப் பிடித்து இழுத்தான்.

இழுத்த வேகத்தில், அவனருகிலேயே சோஃபாவில் சரிந்தவள், அவனது தோள்களில் தலையை முட்டிக் கொண்டாள். உடற்பயிற்சியால் திண்ணென்றிருந்த தோள்கள் என்பதால் சிறிது வலியை ஏற்படுத்தி விட, “ ஷ்..ஆ “ என்ற முனகல் ஒலித்தது.

“நீ என்ன நினைச்சேங்கிற உண்மையை சொல்லாமப் போனா, இப்படித் தான் தண்டனைக் கிடைக்கும்.” என்றவன், அவளின் தலையை நிமிர்த்தி நெற்றியை தேய்த்து விட்டான். பின், அவளது முகத்தை இரு கைகளாலும் பற்றி கண்களை நேராக பார்க்க வைத்தான். அவனது கைகள் கடத்திய அன்பை, கண்களின் வழியாகவும் பாய்ச்சியதினால் அதன் நிறைவில் அவளது கண்களும் அன்பை பிரவகித்தன.

“நான் சொன்னதைப் பத்தி, நீ எதுவுமே சொல்லலையே யமுனா..” என்ற கார்த்திக்கின் கேள்வியில் யமுனாவின் கண்கள் அவனை விட்டு விலகின.

வலுக்கட்டாயமாக, அவளைத் திருப்பியவன், “இன்னைக்கு நீ சொல்லத்தான் வேணும். இனிமே உன்னை விடுறதா இல்லை” என்று பிடிவாதம் பிடித்தவன் அவளின் மௌனம் தொடர்ந்ததைப் பார்த்து, “நீ சொல்றது எனக்கு எதிர்மறையா இருந்தாலும் பரவாயில்லை. நீ சொல்லியே ஆகணும்..” என்று பிடிவாதத்திற்கு மேலும் வலு சேர்த்தான்.

“சொல்றேன்.. விடுங்க கார்த்திக்..” என்றதும் தான் அவளை தன் கைச்சிறையிலிருந்து விடுவித்தான்.

“நீங்க செஞ்சது சரியா, தப்பான்னு தெரியாது. அந்த இடத்துல, அப்படி ஒரு நேரத்துல அந்த மாதிரி பேச்சு வார்த்தை அவசியம் இல்லைன்னு தான் நினைக்கிறேன்..” மெல்லிய குரலில் என்றாலும், அதில் உறுதியும் இருந்தது.

“இறுதியாக தேவியார், தங்கள் மனக்கூட்டில் சேகரித்து வைத்த வார்த்தை முத்துக்களை சிதறடிக்காமல் மாலையாகவே தந்து விட்டீர்கள். நன்றி தேவியாரே..” என்றவனின் கிண்டலில், அவளுக்கு இலேசாக வெட்கம் வந்தது.

“என்ன கார்த்திக் இது.. இன்னைக்கு என்னாச்சு உங்களுக்கு..? இவ்வளவு நாளா இருந்த மாதிரி இருந்துட்டுப் போறேனே. ப்ளீஸ்..” என்று தயங்கினாள்.

“அதே தான் நானும் சொல்றேன். இவ்வளவு நாளா விட்டுட்டேன். இனிமே நோ சான்ஸ்.. மேடம்.”

அப்போதும் அவள் மௌனமாகவே இருக்கவே, “எங்கிட்ட சொல்றதுக்கு உனக்கு என்ன தயக்கம் யமுனா. அப்போ, நான் உனக்கு அந்த அளவுக்கு நெருக்கம் இல்லையா..?” என்றான் வருத்தமாக. தன்னுடைய வருத்தம் அவளைப் பாதிக்கும் என்று தெரிந்தே.

“ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க கார்த்திக்” என்று பரிதவித்தாள்.

“அப்போ, சொல்லு..” என்று அவளது முகத்தை ஆவலுடன் பார்த்தான்.

“சொல்லு சொல்லுன்னா, என்னத்தை சொல்றது..?” என்று சலித்தவள், “சின்ன வயசுல இருந்தே ஒரு சில விஷயங்களைத் தவிர, இது பிடிக்கும், அது பிடிக்காதுன்னு சொல்லி வளரலை. பிடிச்சதா இருந்தா சந்தோஷம். அப்படி இல்லைன்னா வருத்தம் இல்லை. அப்படிங்குற மனப்போக்குல வளர்ந்துட்டேன். இப்பத் திடீர்னு மாற சொன்னா நான் என்னப் பண்றது..? ஐந்துல வளையாதது ஐம்பதுல எப்படி வளையும்..? ம்..” என்று கேள்வி எழுப்பினாள்.

“வளையாம இருக்குறதுக்கு நீ ஒன்னும் மூங்கிலும் இல்லை, உன்னோட வயசு ஐம்பதும் இல்லை. மனுஷனோட மனசுக்கு வயசும் கிடையாது, ஒரு வரையறையும் கிடையாது. எப்ப, எப்படி நடந்துக்கும்னே சொல்ல முடியாது. பத்து வயசுள்ளவன், ஐம்பது வயசு பக்குவத்தோட நடந்துக்குவான். ஐம்பது வயசுள்ளவன், பத்து வயசுள்ளவன் மாதிரி சின்னத்தனமா நடந்துக்குவான்….” சொல்லிக் கொண்டிருந்தவன், சட்டென்று நிறுத்தி விட்டு, “ப்ச், எங்க ஆரம்பிச்சு எங்க போய்ட்டேன். முதல்ல நம்ம விஷயத்துக்கு வருவோம்.. நீ சொல்லு.” என்றான்.

“எதைப் பத்தி..? என்ன சொல்லணும்..?”

“என்ன வேணும்னாலும் சொல்லு. அந்த ரிசப்ஷன்ல நான், நடந்துக்கிட்டது சரியில்லைன்னு கூட சொல்லு.” என்று எடுத்துக் கொடுத்தான்.

“இங்க பாருங்க கார்த்திக், ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம். எல்லாருமே ஒரே மாதிரி இருக்க முடியாது. அதே மாதிரி, நாம சொல்றதையெல்லாம் நல்லவிதமா தான் எடுத்துக்குவாங்கன்னு சொல்ல முடியாது. பெரும்பாலான நேரங்களில் பூசி மெழுகத்தான் வேண்டியிருக்கு. அப்படி பூசி மெழுகலைன்னா, அந்த உறவு நிலையில் விரிசல் விழும். சில நேரம் இல்லாம கூட போகும். ஆக, எல்லாரும் ஓரளவு நடிக்கத்தான் வேண்டியிருக்கு.. அப்படிப்பட்ட காலத்துல வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்..” ஆரம்ப தயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலக, பேசிக் கொண்டிருந்தாள். அவனின் புரிதல் கொடுத்த நம்பிக்கை, அவளின் மன எண்ணங்களை, அவனிடம் தயங்கினாலும் பகிர்ந்து கொள்ள வைத்தது. அதை ஆச்சரியத்துடன் கவனித்தாலும், அவளுடன் விவாதித்தான்.

“அப்படி நடிக்குறதுனால கிடைக்குற உறவு நிலைக்குமா..? அப்படி அந்த உறவை நடிச்சாவது காப்பாத்திக்கணும்னு என்ன அவசியம்..?”

“எதுக்காகவும் இருக்கலாம். அன்பு, பணம், அதிகாரம், உரிமை, நேர்மை இப்படி ஏதோ ஒன்னை நிலை நிறுத்துறதுக்காக ஒருத்தருக்கொருத்தர் முகமூடி போட்டுக்கிட்டு தான் வாழ்றோம். இல்லைன்னு சொல்ல முடியாது”.

“ஆனா, நான் அப்படி இல்லையே. இப்போ எனக்கு என்ன கெட்டுப் போச்சு..”

“இதை நான் நம்ப மாட்டேன். பிடிக்காத விஷயத்தை பிடிச்ச மாதிரி, பிடிச்ச விஷயத்தை பிடிக்காத மாதிரி. இப்படி ஒரு தடவை கூட நீங்க செஞ்சது இல்லையா..?”

“எனக்கு தெரிஞ்ச வரைக்கும், அப்படி இருந்தது இல்லை.. அப்படியெல்லாம் நடிச்சா, அந்த வாழ்க்கையே வெறுத்துப் போயிடும். மனசுல பட்டதை சொல்லித்தான் எனக்குப் பழக்கம்”.

“சில தியாகங்கள் தான் அன்பை பரிபூரணமா வெளிப்படுத்தும்னு சொல்றாங்களே”.

“அதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. உனக்கு பிடிச்ச சாப்பாட்டை எனக்குப் பிடிக்கும்னு சொல்லி சாப்பிடுறது ஏமாத்துறதுக்கு சமம். இதே, உனக்குப் பிடிச்சது, எனக்கு பிடிக்கலைன்னாலும், நான் சாப்பிடுவேன். இது தான் அன்பு. என்னைப் பொறுத்த வரைக்கும், இந்த மாதிரியான அன்பு தான் உண்மை. அன்பை வெளிப்படுத்துற விஷயத்துலயே பொய் இருந்துச்சுன்னா, அது எப்படி உண்மையா இருக்கும்..?”

“இப்படி முகத்துல அடிக்குற மாதிரி சொன்னா, அது நல்லா இருக்குமா..?”

“எப்படி சொன்னா என்ன, உண்மையா இருக்கணும். பொய்கள் கற்பனை உலகத்துக்கு தான் நல்லது. யதார்த்த வாழ்க்கைக்கு இல்லை. எப்பவும் கற்பனைல பறந்தபடி இருக்க முடியாது. நிஜ உலகத்துக்கு இறங்கி தான் ஆகணும், யமுனா.”

“ஆனா, எல்லாராலும் அப்படி இருக்க முடியாதுன்னு புரிஞ்சுக்கணும்.. இதுல இன்னொன்னும் இருக்கு. மனசுல பட்டதை ஒளிவு மறைவு இல்லாம சொன்னீங்கன்னா, மத்தவங்க உங்கக்கிட்ட இன்னும் அதிகமா தான் நடிப்பாங்க. அதுக்கு இதுவே பரவாயில்லைன்னு தோணும்..”

“அப்போ, நீ எங்கிட்ட நடிக்கிறியா என்ன..?” அவளை சீண்டினான்.

“நான் பொதுவா சொன்னேன். என் மனசுலயே புகுந்து பார்க்குறீங்க.. நான் எப்படி நடிக்குறது..?” கேலியாக பாரட்டினாள்.

சரி, மத்ததை விடு. நம்ம வரைக்கும் நமக்குள்ளாவது, “முகமூடியைக் கழட்டி வச்சிக்கலாமே. என்ன சொல்ற யமுனா..?” என்று அவளது முகத்தை எதிர்பார்ப்புடன் நோக்கினான்.

“கார்த்திக், நான் மாற முயற்சிக்கிறேன். ஆனா, முழுசா மாற முடியாது. எதாவது பேசணும்னா, அவங்க என்ன சொல்வாங்களோ, இவங்க என்ன நினைச்சுக்குவாங்களோன்னு யோசிச்சு முடிவுல பேசாம இருந்துடுவேன். அதனால தான், நடிக்குறதை விட, மௌனமா இருக்குறதே நல்லதுன்னு சொல்றேன். ஆனா, நீங்க என்னை ரொம்ப பேச வைக்குறீங்க.. அது உங்களுக்கே சங்கடத்தைக் கொண்டு வந்து தரப் போகுது பாருங்க..”

“நான் எப்படிப்பட்ட ஆளுன்னு உனக்கு இன்னும் புரியலை. நீயெல்லாம் ஒரு மனுஷனாடா..? அப்படின்னு முகத்துக்கு நேரா கேட்டாக் கூட, எனக்கு அப்படித்தான் தோணுதுன்னு சொல்லிட்டு போறவன்.” என்றான்.

“நான் கேட்டாலும் கூடவா..?”

“யார் கேட்டாலும் தான்.. ஆனா, நீ அப்படி கேட்பியா என்ன..?” என்று உல்லாசமாகக் கேட்டான்.

“கேட்டாலும் கேட்கலாம். நீங்க தான் எதுவா இருந்தாலும் பட்டுன்னு சொல்லுன்னு சொல்றீங்களே,” என்று சிரித்தாள்.

“அப்போ, நான் மனசுக்குள்ளயே மறைச்சுக்குறேன்.. நீதான், எல்லாத்தையும் ஓபனா பேசாதீங்கன்னு சொல்றியே..” என்றவன், அவளைப் பார்த்துக் கண்ணடித்தான்.

“உங்களை.” என்று சோஃபாவின் குஷனை அவன் மீது தூக்கி எறிந்தாள்.

“ஹேய்.. யமுனா இரு. ஒரு ஐடியா. நமக்குள்ள ஒரு பந்தயம். நாளைக்கு ஒரு நாள் முழுக்க, நான் உன்னை மாதிரியும், நீ என்ன மாதிரியும் நடந்துக்கணும். விளைவை பார்த்துட்டு, மாற்றத்தை முடிவு பண்ணலாம். எப்படி ஐடியா..?”

“பரவாயில்லை. ஆனா, பந்தயத்துனால மாறிடுறதா மனசு..? எனக்கு நம்பிக்கையில்லை..”

“மாறுதோ, இல்லையோ செஞ்சுப் பார்க்கலாமே. மாறுறது எவ்வளவு கஷ்டம்னு உணர்ந்தா அடுத்தவங்களைக் கட்டாயப்படுத்த மாட்டோம் தானே.“

“நான் உங்களை எதுக்கும் கட்டாயப்படுத்துலயே..”

“நான் தான் கட்டாயப்படுத்துறேன் போதுமா.. எனக்காக ஒத்துக்கோ யமுனா. ஒரே ஒரு சான்ஸ்.. ப்ளீஸ்..” என்று இறைஞ்சினான்.

“ஓகே. நாளைக்கு ஒரு நாள் நீங்க நானாகவும், நான் நீங்களாகவும் மாறிப் பார்க்கலாம்.” பேசியபடியே உறங்க சென்றனர்.

*************************

முந்தைய தினம், வெகு சீக்கிரம் தன்னை மறைத்த, இரவின் அனைத்து அடையாளங்களையும் துடைத்தபடி ஆங்காரமாக சிவந்த வானம் பளீரென்று வெளிறியது. நேற்றின் நாளை, இன்று விடிந்தது.

“கார்த்திக், மணியாச்சு எழுந்திரிங்க..” பத்தாவது முறையாக எழுப்பிக் கொண்டிருந்தாள் யமுனா.

ம்ம்.. என்று புரண்டு கொண்டிருந்தானே தவிர எழுவதாகத் தெரியவில்லை. பொறுத்து பொறுத்துப் பார்த்த யமுனா, ஒரு குவளை நீரால் சீராட்ட, பதறி எழுந்தான்.

“ப்ச், என்ன யமுனா இது..?” என்று சலித்தவனாக உட்கார்ந்தபடியே சாமியாடினான்.

“முதல்ல கண்ணைத் திறந்து மணியைப் பாருங்க.” என்றதும், சிரமத்துடன் விழிகளைத் திறந்து பார்த்தவன்,

“அடிப்பாவி, இவ்வளவு லேட்டா எழுப்புறியே, உன்னை..” என்றவாறு எழுந்து துண்டைத் தேடினான்.

இவ்வளவு நேரம் மணியை சொல்லித்தானே எழுப்பினேன். எழுப்ப எழுப்ப தூங்கிட்டு, இப்ப என்னைக் குறை சொல்றீங்களா..? என்று முறைத்தாள்.

“அது.. நீ எப்போதும் ஒரு பதினைஞ்சு நிமிஷம் அதிகமா தானே சொல்வ, அதான் தூங்கினேன்..”

”இன்னைக்கு நான் தான் உங்களை மாதிரி இருக்கணுமே.. அதான் கறாரா எழுப்பி விட்டேன்..” என்று சிரித்தாள்.

“ஆஹா, காலையிலேயே செல்ஃப் ஆப்பு.. சூப்பர். இன்னைக்கு என்னென்ன ஆப்பு காத்திருக்குதோ..” என்று புலம்பியவனை,

“நீங்களும் வெளிப்படையா சொல்லாம மனசுக்குள்ளயே வச்சிக்கணும்.. என்னை மாதிரி.. புரிஞ்சுதா..” என்று செல்லமாக கண்டித்தாள்.

ஏதோ, முணுமுணுப்புடன் குளியலறைக்குள் சென்றவனை, நமட்டு சிரிப்புடன் பார்த்து விட்டு சமையலறைக்கு சென்றாள்.

கார்த்திக், தயாராகி அமைதியாக உணவு மேசையின் முன் அமர்ந்திருந்தான். எப்போதும் பரபரப்பாக அமர்ந்திருப்பவன், இன்று அமைதியாக இருப்பதைப் பார்த்த யமுனா, “கண்கொள்ளாக் காட்சி, கார்த்திக்கின் அமைதி. அதைப் பார்க்க அத்தை இப்ப இல்லையே..” என்று, அவனுக்கு பரிமாறியவாறே பரிகாசம் பண்ணினாள்.

அப்போதும் ஒரு புன்னகையை மட்டுமே, பதிலாக தந்தவன் உண்ணலானான். “கார்த்திக், இப்படிக்கூட உங்களால அமைதியா இருக்க முடியுமா..?” என்று யமுனா ஆச்சரியப்பட்ட நேரம், அழைப்பு மணி ஒலிக்க, எழுந்து சென்று கதவை திறந்தாள்.

“அத்தை..!! வாங்க வாங்க..” என்று வரவேற்றவளின் குரலில், உணவை முடித்திருந்தவன், எழுந்து வந்தான்.

“வாம்மா. எப்படியிருக்க..? என்ன இது சொல்லாம கொள்ளாம வந்துருக்க..” என்று அவனும் வரவேற்பில் இணைந்து கொள்ள, உள்ளே வந்தார் லட்சுமி.

“ஏண்டா, தம்பி. நல்லாத்தானே இருக்கீங்க ரெண்டு பேரும்..” என்று வினவியவாறு அமர்ந்தவர், மகனையும் அருகில் இருத்திக் கொண்டார்.

நல்லா இருக்கோம் அத்தை.. கொஞ்சம் இருங்க காபி கொண்டு வரேன் என்றவாறு உள்ளே சென்றாள் யமுனா.

“ஒரு கெட்ட கனவு. இருப்பு கொள்ளலை. அதான் வெள்ளனவே கிளம்பி வந்துட்டேன்.” என்றவரிடம் காபியை நீட்டினாள் யமுனா.

”ஏன் அத்தை தனியா வந்தீங்க..? சொல்லியிருந்தா இவர் வந்து கூட்டிட்டு வந்திருப்பாரே..” என்று மருமகளிடமிருந்து வந்த வார்த்தைகளில், அவரது முகம் அதிர்ச்சியை அப்பட்டமாக காட்டியது. எனினும் சுதாரித்தவராக, “துணைக்கு ஆளைத் தேடிட்டு நின்னா, வாழ்நாள் முழுக்க தேடிட்டு நிக்க வேண்டியது தான். யாருக்கு யாருடியம்மா துணை. அதுவும் பொம்பளைங்க துணையைத் தேடுனா, அது தொந்தரவுல தான் முடியும்.. அங்க இருந்து இங்க வரதுக்கு எனக்கு வழி தெரியாதாக்கும்.. இதுக்கு என்னத்துக்கு துணை.” என்று படபடத்தவர், கையிலிருந்த காபியை ஆற்றிக் குடித்தார்.

வெடுக்கென்று பேசும் சுபாவம் கொண்டவர் லட்சுமி. ஆனா, எதையும் சரியாகவே பேசுவார். அதனால் அவர் பேசுவதை அக்கறையாகவே அவரை அறிந்தவர்கள் எடுத்துக் கொள்வர். அப்படி இல்லையென்றாலும், அதைப் பற்றிப் பெரிதாக கவலைப்படும் ஆளில்லை அவர். அந்த சுபாவம் தான் அவரது மகனுக்கும். இருவரையும் நன்றாகவே உணர்ந்து அப்படியே ஏற்றுக் கொண்டிருப்பவள் யமுனா. இவளின் சுபாவம் பார்த்தே மகனுக்கு இவள் தான் பொருத்தம் என்று தேர்ந்தெடுத்தவர் லட்சுமி.

பத்து வார்த்தைக்கு, அரை வார்த்தையில் பதில் சொல்லும் மருமகள், இன்று ஒரு வார்த்தைக்கு ஒன்பது வார்த்தை பேசுகிறாளே என்று திகைத்தார். ஆனாலும், இப்போதாவது மனதிலுள்ளதை பேசுகிறாளே என்று ஆனந்தம் தான். ஆகவே, அதைக் காட்டிக் கொள்ளாமல் குசலம் விசாரித்துக் கொண்டிருந்தார்.

“என்ன தம்பி வேலை இல்லையா..?” என்ற தாயிடம், “இதோ, கிளம்பிட்டேன் மா. நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்துக்கோ. சாயந்திரமா பேசலாம்.” என்று கிளம்பியவனுடன் வாயிலுக்கு சென்றாள் யமுனா.

”கார்த்திக், அத்தை வந்துருக்காங்க. அவங்க போன பிறகு, நாம இதை வச்சுக்கலாமே. வந்ததுல இருந்து ஒரே குழப்பமாவே பார்க்குறாங்க..” என்றவளுக்கு,

“ம்கூம். எப்படியோ சமாளி. ஆனா, ரூல்ஸை மீறக் கூடாது..” என்று கூறி விட்டுக் கிளம்பினான்.

****************************

அன்று மாலை… வேலை முடிவதற்கு அரை மணி நேரம் இருக்கையில், கேஷியர் மூர்த்தி கார்த்திக்கைத் தேடி வந்தார்.

“சார்“

“சொல்லுங்க மூர்த்தி.. இன்னைக்கு கணக்கு எல்லாம் செக் பண்ணிட்டீங்களா..?”

“செக் பண்ணிட்டேன் சார்..”

“ஓகே. இன்னைக்கு நீங்க, பேங்க்ல பணம் கட்ட வேண்டாம். சார்க்கு அவசரமா பணம் தேவைப்படுதாம், இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவார். அதுக்குள்ள நானும் செக் பண்ணிட்டேன்னா, சார்க்கிட்ட கொடுக்க வசதியா இருக்கும். சீக்கிரம், வவுச்சரையும், கேஷையும் எடுத்துட்டு வாங்க.” என்றான்.

சிறிது தயங்கியவராக நின்ற மூர்த்தி, கேட்ட அனைத்தையும் எடுத்து வந்தார். ஒவ்வொன்றாக சரி பார்த்துக் கொண்டிருக்க, அவர் முகத்தில் கலவர ரேகைகள் அதிகரித்துக் கொண்டிருந்தன. மேலும், சிறிது நேரம் கழிந்த பின்னர்,

“நீங்க, உங்க வேலையைப் பாருங்க மூர்த்தி. நான் இதை முடிச்சுட்டு சொல்றேன்..” என்ற கார்த்திக் வேலையைத் தொடர்ந்தான்.

அவர் தடுமாறியபடியே அந்த அறையை விட்டு வெளியேறினார். அவரின் தடுமாற்றத்தின் காரணத்தை சில நொடிகளில் அறிந்து கொண்டவனின் முகத்தில் சினம் ஏறியது. உடனேயே அவரை அழைத்து, விசாரிக்க வேண்டுமென நினைத்தவனின் மனதில், “நீ கார்த்திக் இல்லை, முனாவா இருந்தா என்ன பண்ணுவாளோ, அப்படி பண்ணனும்” என்ற சிந்தனைகள் தோன்றி அலைக்கழித்தன. சிறிது நேரம் கழித்து மூர்த்தியை அழைத்தான்.

“சார்க்கு கொஞ்சம் அவசரமா, பணம் தேவைப்படுது. அதனால, மீதிக் கணக்கை நாளைக்கு வந்து பார்த்துக்கலாம். பணத்தை மட்டும் எடுத்துட்டு போறேன். நீங்க கிளம்புங்க..” என்றவாறு எழுந்தான்.

கார்த்திக்கின் தயவு தாட்சண்யம் இல்லாத கண்டிப்பு தெரிந்தவராதலால், மிகவும் பயந்து கொண்டிருந்தார். ஆனால், அவனின் இந்த உத்தரவில் சிறிது நிம்மதி அடைந்தாலும், அதை அழுத்திக் கொண்டு, நம்பிக்கை துரோகம் செய்கிறோமே என்ற குற்ற உணர்வே மேலோங்கி இருந்தது. அதனால், “சார், ஒரு விஷயம்.. இல்லை.. ஒரு த..” என்று தடுமாறியபடி ஆரம்பித்தார்.

“என்ன மூர்த்தி, கணக்கு சரியா இல்லையா..? பரவாயில்லை, நாளைக்கு பார்த்துக்கலாம். கிளம்புங்க, நான் இப்ப அவசரமா போகணும்” என்று கூறினாலும், “உங்களை எனக்கு தெரியாதா..?“ என்னும் அர்த்தத்துடன் கூடிய பார்வையை மின்னலாக, அவர் மீது வீசி விட்டே சென்றான்.

அந்தப் பார்வை, மூர்த்தியின் உள் மனம் வரை சென்று குத்தியது. அதில், பேச்சிழந்து அப்படியே நின்று விட்டார்.

வெளியே வந்தவன், “உஃப்.” என்று மூச்சை இழுத்து விட்டான். “எப்படித்தான், எல்லாரும் மனசுல ஒன்னு, வெளில ஒன்னுன்னு நடந்துக்குறாங்களோ. இந்தக் கொஞ்ச நேரத்துக்குள்ளயே, நாக்கு தள்ளிடுச்சு” என்று சலித்துக் கொண்டவாறு வண்டியைக் கிளப்பினான்.

அவன் சென்ற சிறிது நேரத்திற்கு எல்லாம், அலைபேசி ஒலித்தது. வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு, அதைக் காதுக்குக் கொடுத்தான்.

“சொல்லுங்க மூர்த்தி..”

“சார், ஒரு ஐயாயிரம் ரூபாய் என் மேஜையிலேயே விட்டுட்டேன். அதான் சொல்லலாம்னு..” என்று இழுத்தார்.

“ஓ, அப்படியா, சரி நீங்களே வச்சிருங்க. நான் வந்த பிறகு வாங்கிக்குறேன்” என்றவன் அழைப்பை துண்டித்து விட்டு புறப்பட்டான்.

வில்லிலிருந்து புறப்படும் எல்லா அம்புகளும், எப்போதும் சரியான இலக்கை அடையும் என்ற உத்தரவாதம் கிடையாது. ஆனால், வில்லில் இருக்கும் போதே, அம்பின் பாதையை தேர்வு செய்து விட்டால், இலக்கையும் நேர்த்தியாக அடைந்து விடும். அதற்கு சில நொடிகள் தாமதம் அல்லது நிதானம் அவசியமாகிறது. அத்தகைய என்னுடைய நிதானமே, மூர்த்தியின் மனம் திரும்பலுக்கு ஒரு காரணமோ, என்ற சிந்தனையில், அவன் முகத்தில் புன்னகையும் அரும்பியது.

**********************

முதல் நாள் பெய்திருந்த மழை காரணமாக, தோட்டத்தில் பாத்தி கட்டி வைத்திருந்ததெல்லாம் பாழாகி விட்டதால் அன்று தோட்டக்காரருக்கு வேலை அதிகமாக இருந்தது. அவரின் வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். அவருக்கு காபி கொடுத்த யமுனா,

“உங்க மனைவி உடம்புக்கு முடியாம இருந்தாங்களே, இப்போ பரவாயில்லையா..?” என்றவாறு அங்கிருந்த கல்மேடையில் அமர்ந்தாள்.

எப்போதும் வேலையைத் தவிர, எதுவுமே பேசாதவள், இன்று நலம் விசாரித்ததும் அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அதையும் மீறிய மகிழ்ச்சியும் அவரது கண்களில் தெரிந்தது.

“நல்லாருக்கு தாயி.. அய்யா தான் வைத்தியத்துக்கு பணம் கொடுத்தாரு..”

“உங்களுக்குப் பிள்ளைங்க இல்லையா?.. “

“இல்லைம்மா..” என்றவர், “இந்த காலத்துல புள்ளைங்க இருந்தாலும் ஒன்னு தான்.. இல்லைன்னாலும் ஒன்னு தான். இருந்து நம்மளைப் பார்த்துக்கலையேன்னு புலம்புறதை விட, இல்லைன்னு மனசை தேத்திக்குறதே மேல்..” என்றார்.

அவர் சொல்வதும் ஒரு வகையில் உண்மை தானே. அதற்கு சாட்சியாக முதியோர் இல்லங்களும் பெருகிக் கொண்டிருக்கின்றனவே. இயந்திர உலகம், மனங்களையும் இயந்திரமாக்கிக் கொண்டிருக்கிறது.

“யமுனா..” என்ற லட்சுமியின் குரலில்,

“அத்தை கூப்பிடுறாங்க. இதோ வந்திடுறேன்..” என்று எழுந்தவள், அவரது குரலில் நின்றாள்.

”நீ ஒன்னும் பேசாததுனால உன்னை கர்வம் புடிச்ச பொண்ணுன்னு நினைச்சிட்டேம்மா. புள்ளைக்குட்டி பெத்து, வளர்த்திருந்தா தானே தெரியும். ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்னு. என்னை மன்னிச்சிடு தாயி” என்றார் இறங்கிய குரலில்.

“ஐயய்யோ, நீங்க பெரியவங்க. மன்னிப்பு எல்லாம் வேண்டாம். நீங்க வேலையை பாருங்க..” என்றவள் வீட்டிற்குள் நுழைந்தாள்.

சமையலறைக்குள் இருந்த லட்சுமியைப் பார்த்தவள், அவசரமாக அங்கே சென்றவள் “என்ன வேணும் அத்தை. எங்கிட்ட சொன்னா நான் கொண்டு வந்திருக்க மாட்டேனா..?” என்று உரிமையுடன் கோபித்துக் கொண்டாள்.

“தண்ணி கூட குடிக்கக் கூடாதா..?” என்ற லட்சுமியின் குரலில் சிறிது தயங்கியவள், உடனே,

“தண்ணி கூட நான் உங்களுக்கு எடுத்துக் கொடுக்கக் கூடாதா..?” என்று மீண்டும் உரிமையாகக் கேட்டதும், லட்சுமியின் கண்களில் அன்பின் மிகுதியால் நீர் துளிர்த்தது. ஆசையுடன் அவளது மோவாயைப் பிடித்துக் கொஞ்சினார்.

“நீ, இப்படியெல்லாம் பேச மாட்டியா..? உரிமையா சண்டை போட மாட்டியான்னு..? நான் எவ்வளவு நாளா ஏங்கியிருக்கேன் தெரியுமாம்மா.” என்ற அந்தக் கிழவியின் ஏக்கத்தில் அவளுமே தவித்து தான் போனாள்.

“அத்தை..” அழைத்தவளின் குரலில் அடக்கப்பட்ட கேவல் ஒளிந்திருந்தது.

“மன்னிச்சுடுங்க அத்தை.. இனிமே உங்க மனசுக்குப் பிடிச்ச மாதிரி நடந்துக்குறேன்..” என்றவளை, ஆதூரத்துடன் அணைத்துக் கொண்டார் லட்சுமி.

இதுல மன்னிப்பு கேட்க என்ன இருக்கு. அது உன்னோட சுபாவம். ஆனா, அதை மீறி வந்து இப்படி என் அணைப்புக்குள்ள நிக்கிறியே, அதுவே எம்மனசு நிறைஞ்சு போச்சு.. கல்யாணம் ஆன நாள்ல இருந்து ரொம்ப மரியாதை கொடுத்து, என்னைத் தள்ளி வைச்சே பழகிட்டியா.. வயசாயிடுச்சு வேற, அது தான், நீ இப்படி பேசுனதும், என்னென்னமோ சொல்லிட்டேன். அதுக்காக நீ வருத்தப்படக் கூடாதும்மா.. அவளது கன்னத்தை வாஞ்சையாக தடவிக் கொடுத்தார்.

தயங்கிக் கொண்டிருந்த மருமகளும், அதை உணர்ந்திருந்த மாமியாரும் தடை விலகிய நிம்மதியில் மனதார கலந்துரையாடினர்.

“கார்த்திக், உன்னை நல்லா வச்சிருக்கானாம்மா. ஏன் கேட்குறேன்னா, அவனுக்கு வெடுக்குன்னு பேசுற சுபாவம், என்னை மாதிரி. மனசுல எதையும் வச்சிக்க தெரியாது. ஆனா, நல்லவன் தான். இவ்வளவு நாளா, உனக்கே தெரிஞ்சிருக்கும். நமக்கு என்ன வேணுமோ, அதைக் கேட்டு தெரிஞ்சிக்க மாட்டானே தவிர, புரிஞ்சு நடந்துக்குவான். அதே மாதிரி, வாயைத் திறந்து சொல்லணும்னும் எதிர்பார்ப்பான். அதுல கொஞ்சம் பிடிவாதம் தான்.”

மகனைப் பற்றிப் பேசும் தாய் முகத்தின் பெருமிதம் லட்சுமி முகத்தில் தாண்டவமாடியது. அதைப் புரிந்து கொண்ட யமுனா,

“உங்க புள்ளைய பத்தி மட்டும் தான் உங்களுக்கு தெரியுது. என்னைப் பத்தி எதுவுமே, தெரியலை.. “ என்று பொய்யாகக் குறைப்பட்டாள்.

“ஏன் தெரியாது, எனக்கு பசிக்குதுன்னு கூட சொல்ல விரும்பாத குட்டிப் பாப்பா என்னோட மருமகள்னு எனக்கு நல்லாவே தெரியும். உன்னை ரொம்ப பொத்தி பொத்தி வச்சிருக்காங்க. இயல்பான ஆசையை சொல்றதே குத்தமாகிடுமோன்னு, நீயே நினைக்குற மாதிரி வளர்த்துருக்காங்கன்னு, உங்கப்பா, அம்மா சொன்னதை வச்சி புரிஞ்சுக்கிட்டேன் கண்ணு. அதனால தான், உங்கிட்ட கெடுபிடியை கொஞ்சம் கூட தளர்த்தல. ஆனா, இந்த முறை என்னையவே, நீ தளர்த்திப்புட்ட.” என்று சிரித்தார்.

“அத்தை..”

சிணுங்கிய மருமகளை, அணைத்துக் கொண்டார் மாமியார் “ஒரு வீட்டுக்கு கதவு எவ்வளவு அவசியமோ, அதே அளவு மனசுக்கும் கதவு அவசியம். ஆனா, அந்தக் கதவு என்ன பண்ணனும்னு வீடு முடிவு பண்ணாது. அதுல இருக்குற மனுஷங்க தான் முடிவு பண்ணுவாங்க. அதே மாதிரி தான் மனசும். என்ன பண்ணனும்னு நாம தான் முடிவு பண்ணனும். தேவையான போது, கதவை திறந்து தான் ஆகணும். இல்லைன்னா புழுக்கம் தாங்க முடியாது. ஒரு வீட்டுக்கே அப்படின்னா, மனசுக்கு எப்படின்னு பார்த்துக்கோ.. அதுக்காக எங்க வீட்டுக்குள்ள இதெல்லாம் இருக்கு பார்த்துக்கோங்கன்னு பரக்க திறந்து போடக் கூடாது. வீட்டுக்குள்ள மனசை திறந்து வச்சா தான், வெளில எப்படி மூடி வைக்கணும்னு தெரியும்..” என்று சொல்லிக் கொண்டே யமுனாவைப் பார்த்தார்.

அவளது விழிகளில் சிரிப்பின் சாயை படிவதைக் கண்டு, “என்னமோ, எம்புள்ளைய பத்தி நினைக்குற. அதானே சிரிப்பை அடக்கப் பார்க்குற..” என்று ஒரு விரல் நீட்டினார்.

“அது.. கதவை உங்க பிள்ளை தான் எப்பப் பார்த்தாலும் பரக்க திறந்து போடுறார்னு நினைச்சேன்..” என்று சிரித்தாள்.

“அடிக் கழுதை..” என்று செல்லமாக திட்டியவர்,

“எம்பழக்கம் அவனுக்கு வந்திடுச்சுன்னு நினைக்கிறேன். அவனுக்கு சின்ன வயசுலயே அப்பா போய்ட்டார். ஒத்த ஆளா நின்னு அவனை வளர்க்கணும். அதுவும் பொம்பளை. பாந்தமா, நாசூக்கா இல்லாம, நறுக்குன்னு நடந்துக்கிட்டேன். கிட்ட வந்தவங்க நாலடி தள்ளி நின்னாங்க. எப்போதும் வெடுக்குன்னு பேசுனேன். வெறுத்து விலகிப் போனாங்க. அதை பத்தி நான் கவலைப்படலை. அதைப் பார்த்து வளர்ந்தவன், அப்படியே வளர்ந்துட்டான். ஆனா, எதையும் மறைச்சு பேச மாட்டான்.”

“போதும் அத்தை உங்க புள்ளை புராணம். அவரு, நல்லவரு வல்லவரு, நாலும் தெரிஞ்சவரு..” என்ற கிண்டலில்,

“ஆத்தி, இவ்வளவு வாய் பேசுவாளா, எம்மருமவ..” என்று மோவாயில் கைவைத்தார் லட்சுமி. இருவரும் மனம் நிறைந்து வழிந்ததில் சிரிப்பும் ஆர்ப்பரித்தது.

***********************

வீடு நோக்கி வண்டியில் வந்து கொண்டிருந்த கார்த்திக், ஒரு பேக்கரி கண்ணில் பட, அம்மாவுக்கு எதாவது வாங்கி செல்லலாமே என்ற எண்ணத்தில், வண்டியை நிறுத்தினான். சிறிது கூட்டமாக இருந்ததால், வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

அப்போது பாபு, அங்கு நின்றிருந்த காரிலிருந்து இறங்கினான். அவனைப் பார்த்த கார்த்திக், கொஞ்சம் நடிச்சுப் பார்க்கலாமே என்ற எண்ணத்தில்,

“ஹேய்.. பாபு”

கார்த்திக்கை பார்த்த பாபுவின் முகம் வெளிறியது. “இவன் ஏன், இப்படி முழிக்கிறான்” என்று நினைத்தவாறே அவனருகில் சென்றான். அதன் பிறகே, அங்கு நின்றிருந்த புதுமணத் தம்பதிகளைக் கவனித்தான். உடனே, “என்னடா, புது மாப்பிள்ளை எப்படி இருக்க..?” என்று அவன் முதுகில் தட்டினான்.

“ம், நல்லாருக்கேன்..” என்று புது மாப்பிள்ளை மென்று விழுங்கியதில் பாபு என்னவோ சொல்லியிருக்கான், என்று புரிந்து கொண்டான்.

“சிஸ்டர் எப்படி இருக்கீங்க. நீங்க ரொம்ப லக்கி. எங்க ஃப்ரெண்ட் ரொம்ப நல்லவன்.” என்று கார்த்திக் அள்ளித் தெளித்த புகழுரைகளால் பாபுவின் முகம் மலர்ந்தது.

“டேய், நீ நேத்து சாப்பிடாம போயிட்டியாமே” வருத்தம் போல் காட்டிக் கொண்டான்.

ஒரு அவசர வேலை. அதான் கிளம்பிட்டேன்.. என்றவன் மனதிற்குள், “அடப்பாவி, சாப்பிடாம பேசியே துரத்தி அடிச்சுட்டு, இப்படி பல்டி அடிக்கிறானே” என்று நினைத்துக் கொண்டான்.

“ஓகே.. பூஜை வேளைக் கரடியாக இருக்க நான் விரும்பலை. நான் கிளம்புறேன்” விடைபெற்றவனுக்கு, குழப்பத்துடனே விடைகொடுத்தான் பாபு.

“என்னுடைய நடிப்பு ரொம்ப நல்லாருக்கு போல. நேற்று வெறுத்த நட்பு, இன்று சிரிக்குதே.” நினைத்தவனின் மனதில் கசப்பு தட்டியது.

**************************

“என்னம்மா, இந்தப் பையனை, இன்னும் காணோம்..” என்ற லட்சுமியிடம்,

“இப்ப வந்திடுவார் அத்தை.. நீங்க காபி குடிங்க..“ என்று கொடுத்த யமுனா, உள்ளே சென்றாள்.

மேலும், இரு வினாடிகளின் முடிவில், வீட்டிற்குள் நுழைந்த கார்த்திக், வழக்கம் போல், “யமுனா..” என்று அழைக்கவில்லை. மாறாக, அமைதியாகவே வந்து சோஃபாவில் அமர்ந்தான். தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த லட்சுமி,

“என்னடா இது, இப்படி பூனை மாதிரி பொசுக்குன்னு வர. தனியா இருக்குற பொண்ணு பயந்துக்காது.” என்று கடிந்து கொண்டார்.

“எல்லாம் என் நேரம்..” என்று மனதிற்குள் நொந்து கொண்டவனின் முன்னால் காபியை நீட்டினாள் யமுனா சிரிப்புடன்.

மகனின் அமைதியைப் பார்த்த லட்சுமி, “ஏன் தம்பி, ஒரு கேள்வி கேட்குறதுக்குள்ள ஒம்போது பதில் சொல்லுவ. இப்போ என்ன, யாரையோ சொல்ற மாதிரி உட்கார்ந்திருக்க.” என்று வினவினார்.

”வேலை அதிகமா இருந்திருக்கும் அத்தை. களைப்பா இருக்கும்“ என்று பதில் கூறிய யமுனாவைப் பார்த்து விட்டு, ”அதுவும் சரி தான்“ நினைத்தவராக அமைதியானார்.

சிறிது நேரம் தாயும் மகனும் ஊர்க்கதைகளை பேசிக் கொண்டிருந்தனர். யமுனா, இரவு உணவு தயார் செய்து விட்டு வந்து, அவர்களுடன் இணைந்தாள்.

“சரி தம்பி, நான் காலையில ஊருக்கு கிளம்புறேன்.” என்ற லட்சுமியிடம்,

“ஏன் அத்தை, என்ன அவசரம்..? இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போங்களேன்..” என்று ஆசையாகக் கேட்டாள். அவளை ஆச்சரியத்துடன் பார்த்த அதே நேரம், மிகுந்த ஆனந்தமாகவும் உணர்ந்தான் கார்த்திக். உணர்வு பெருக்கில் அமர்ந்திருந்தவனை உலுக்கிய யமுனா,

“நீங்க சொல்லுங்களேன் அத்தைக்கிட்ட..” என்று புகார் படித்தாள். என்ன தான் அவளைப் புரிந்து கொண்டிருந்தாலும், இந்த யமுனா புதிதாகத் தெரிந்தாள். இன்னும் மனதிற்குள் நெருங்கியவளானாள்.

‘இவன் என்னம்மா சொல்றது. நீ சொன்னா நான் இருக்க மாட்டேனா..? ஆனா, ஆடு மாடெல்லாம் கெடக்குல்ல. ஒரு நாளைக்கு அடுத்தவங்களை பார்த்துக்க சொல்லலாம். அதுக்கு மேல சொன்னா நல்லா இருக்குமா..? ஏதோ, புள்ளைங்களை கண்ணுலயே நிக்குதேன்னு போட்டது போட்டபடி, ஓடியாந்தேன். இந்த தடவை உன்னை விட்டுப் போறதுக்கு மனசே இல்லை.’ என்றவாறு அவளது கன்னம் தடவியவர்,

“ம்ம்.. நினைச்ச மாதிரியெல்லாம் நடந்துக்க முடியுதா. பொம்பளைக்கு எப்பவுமே ரெட்டை மனசுக்கு இடையில கெடந்து அல்லாடணும்னு விதிச்சிருக்கு. கல்யாணம் முடிஞ்சதும் அப்பனா, புருஷனான்னு அல்லாடணும். அப்புறம் புருஷனா, புள்ளைங்களான்னு, வயசான காலத்துல பழகுன இடமா, இல்லை புது இடமான்னு அல்லாடணும். என்ன பொழைப்போ போ…” என்று பெருமூச்செறிந்தார்.

“அம்மாவா, இப்படி..” என்று மலைத்து போய் உட்கார்ந்திருந்தான் கார்த்திக்.

சில வினாடிகளில் சுதாரித்த லட்சுமி, “சரிம்மா, பசிக்குது சாப்பாடு எடுத்து வை..” என்று சூழலின் கணத்தைக் குறைத்தார்.

அமைதியாக என்றாலும், இலகுவாகவே உணவு வேளை முடிய, “காலையில வெள்ளென கிளம்பணும். நான் போய் தூங்குறேன்.” என்றபடி சென்றார் லட்சுமி.

*************************

தங்களது அறையில், மிகுந்த ஆவலோடு யமுனாவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த கார்த்திக்கை கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழிந்த பிறகே உள்ளே வந்த யமுனா பார்த்தாள்,

“என்ன யமுனா, இவ்வளவு நேரம்..” என்று சிடுசிடுத்தான்.

“அத்தைக்கு வேணும்கிறதைப் பார்த்துட்டு, கொஞ்சம் வேலை இருந்தது, அதை முடிச்சுட்டு வரேன். உங்களுக்கு இப்ப என்ன வேணும். “ என்றவாறே, அவனருகில் அமர்ந்தாள்.

“நீயும் அம்மாவும் இவ்வளவு அன்னியோன்யமா பேசிக்குறது.. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா..?” என்றவாறு அவளை அணைத்து விடுவித்தவன், அவளது கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் விழவும் பதறிப் போனான்.

“ஏய், யமுனா என்னாச்சும்மா, ஏன் அழற..?” வினவியவனுக்கு பதிலளிக்காமல், அவனது மார்பிலேயே சாய்ந்து அழுதவளை, புரியாத போதும் ஆசுவாசப்படுத்தினான்.

அழுது முடித்தவள் நிமிர்ந்து, “ கார்த்திக், அத்தை எவ்வளவு பாசம் வச்சிருக்காங்கன்னு தெரியுமா.?” ஆரம்பித்து அன்று நடந்ததையெல்லாம் தழுதழுப்புடன் கூறினாள்.

“எங்கம்மா பாசத்தை பார்த்து, பயந்துட்டியா, பாப்பா. அம்மாக்கிட்ட சொல்லி பாசம் காட்டாம பார்த்துக்குறேன். இனிமே அழக்கூடாது சரியா..” என கிண்டலடித்தவனின் மனதும் பெரிதும் இளகியது.

“உங்கம்மா இல்லை. எங்க அத்தை..” என்று சிரித்தாள்.

“ஏதேது, என்னைக் கூட யாருன்னு கேட்பீங்க போல ரெண்டு பேரும்.” என்றவனை,

”சே, சே அப்படி எல்லாம் கேட்க மாட்டோம். நீங்க இல்லைன்னா, எங்க ரெண்டு பேருக்குள்ள எப்படி உறவு வரும்.” கிண்டலாகக் கூறினாலும், ஆத்மார்த்தமாகவே கூறுகிறாள் என்பதை உணர்ந்தான்.

“நாம பந்தயம் போட்டு ஒருநாள் தானே ஆச்சு. யமுனா, ஒரு நாளுக்குள்ளயே இவ்வளவு மாற்றமா, நம்ப முடியவில்லை.. இல்லை.. இல்லை..” என்று பாடியவன், அவளது கிள்ளலில் அலறினான்.

“ஐயயோ, ஏன் இப்படிக் கத்துறீங்க. வாயை மூடுங்க“ என்று மேலும் கிள்ளியவளை விட்டு நகர்ந்து அமர்ந்தவன்,

“யமுனா, நீ யமுனா தானா.. இந்தக் கிள்ளு கிள்ளுற..” என்று முகத்தை சுளித்தான்.

“நான் தான் சொன்னேனே. நீங்களே உங்களுக்கு சங்கடத்தை இழுத்துக்குறீங்கன்னு..” என்றவளிடம் நகர்ந்து அமர்ந்தவன்,

இது எனக்கு சங்கடம் இல்லை. ரொம்ப சந்தோஷம். நம்ம பந்தயம் ரெண்டு பேருக்கும் ஏதோ ஒரு விதத்துல கண் திறப்பு இல்லையா..? என்றான்.

“ஆமாம் கார்த்திக், என்னோட கோணத்துல இருந்து மட்டுமே நான் எல்லாத்தையும் பார்த்திருக்கேன். நான் யார்க்கிட்டயும் எதுவும் எதிர்பார்க்கலை. ஆனா, மத்தவங்க நம்மக்கிட்ட இருந்து எதிர்பார்ப்பாங்கன்னு நான் புரிஞ்சுக்கலை. அந்த எதிர்பார்ப்பு வெறும் அன்பு தான்னு நினைக்குறப்ப, அதைக் கூட வெளிப்படுத்த முடியாத என்னை, நான் ரொம்ப தாழ்வா உணர்ந்தேன். சின்ன சின்ன பரிமாறல்கள் தான், ஆழமான உறவுக்கு வழி வகுக்கும்னு புரிஞ்சுக்கிட்டேன். கார்த்திக், இது மாதிரி உங்களுக்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருந்திருக்கும், என்னை மன்னிச்சிடுங்க. இனிமே, அப்படி நடந்துக்க மாட்டேன்.”

“உன்னை எனக்கு புரியாதா யமுனா. ஆனா, உன்னை நீயே தெரிஞ்சிக்கணும்னு தான் விரும்பினேன். அது மட்டுமில்லாம, நானே பேசி, நானே கேட்டு, நானே பதில் சொல்லி, நானே புரிஞ்சு.. ஷப்பா செம போர். ஆரம்பத்துல லேசா, எரிச்சல் கூட வந்துச்சு. தெரியுமா..?”

சாரி, கார்த்திக். இனிமே அப்படி இருக்க மாட்டேன்னு நம்புறேன். இன்னைக்கு நான் உங்களை மாதிரி நடந்துக்கணும்னு, ஒரு முறை கூட நினைக்கலை. ரொம்ப சரளமா, இயல்பா அப்படி நடந்துடுச்சு. இது மாதிரி தான் இருக்கணும்னு நான் நினைச்சிருப்பேன் போல. அது தான், நீங்க சொன்னதும் ரொம்ப சாதாரணமா நடந்துடுச்சு. அது மனசுக்கு ரொம்ப சந்தோஷமாவும் இருந்துச்சு. தேங்க்ஸ் என்று உருகினாள்.

“ஆனா, யமுனா. எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஒவ்வொரு முறையும் உன்னை நினைச்சுக்கிட்டு, கஷ்டப்பட்டு தான் செஞ்சேன். நீ சொன்னது உண்மை தான்னு புரிஞ்சுக்கிட்டேன். மனசுல நினைக்குறதையெல்லாம் அப்படியே வார்த்தையா வடிக்கக் கூடாதுன்னு ரொம்ப நல்லா புரிஞ்சது. வெளி உலகில் சில போலி வேஷங்கள் அவசியம், தவிர்க்கவும் முடியாது. ஆனா, உண்மை உறவுகளில் அது அனாவசியம். அப்படி அவசியப்பட்டால், அந்த உறவுக்கு எந்த அர்த்தமுமில்லை. ”

ஆமா, அத்தை சொன்ன மாதிரி, இதுவரைக்கும் ‘நான் மூடியிருந்த கதவு. நீங்க திறந்திருந்த கதவு. ஆனால் திறக்குறதும், மூடுறதும் ஒரே கதவு தான் செய்யணும். அப்ப தான், வீடு கோயிலா இல்லைன்னாலும் வீடாகவாவது இருக்கும். நாம, அப்படி இருக்க முயற்சி செய்யலாம்.’

“உத்தரவு தேவியாரே..” என்றவனின் இதழ் மலர்ந்த புன்னகையில், அவளின் உள்ளம் நிறைந்தது.

பரந்திருந்த வானம் மழையைப் பொழிய.. விரிந்திருந்த மண் நிறைந்து ஓடியது…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *