இப்போது எல்லாம் அடிக்கடி என் கனவில் வரத் தொடங்கிய சுசீலாக்கா முதன் முதலில் எனக்கு அறிமுகமான வயதினளாய் இருந்தாள். கல்யாணம் முடிந்து எங்கள் ஊருக்கு சுசீலாக்கா வரும்போது எப்படி இருந்தாளோ… அப்படி. அப்போது பிரபலமாக இருந்த யாரோ ஒரு நடிகையின் சாயலில் அவள் உடுத்தி இருந்தாள். அவளது சிகை அலங்காரம் கூட அப்படித்தான் இருந்தது. அடிக்கடி ஜடையை முன் பக்கம் எடுத்துப் போட்டுக் கொள்வாள். அதன் நுனியைப் பிரித்தும் பின்னிக்கொண்டும்தான் பேசுவாள். ‘அவளும் சினிமாக்காரியைப்போல் டோப்பா வைத்து இருக்கிறாளோ’ என்கிற சந்தேகம் எங்க அம்மாவுக்கும்கூட முதலில் இருந்தது. ஆனால், ஒரு நாள் சுசீலாக்கா பம்ப்செட்டில் குளித்துவிட்டு ஈர முடியின் நுனியில் நீர் சொட்ட வருவதைப் பார்த்த பிறகு, அதிசயமாகிப்போனாள். உண்மையில் அவளுக்கு தரை தொட நீண்டு இருந்தது கூந்தல். பனங்கொட்டைக்கு நார் சிலுப்பியதுபோல முடி வைத்திருந்த எங்கள் ஊர் பொண்டுகளுக்கு, அவள் கூந்தல் அற்புதம்போல் தெரிந்ததில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.
அவளது புருசன், மாமியார், குழந்தைகள் எல்லோரையும் விட்டுவிட்டு தன்னந்தனியாகத்தான் என் கனவுக்குள் வருவாள். அந்த மாதிரியான நேரங்களில் அவர்கள் இவளைக் காணவில்லை என்று, கனவுக்கு வெளியே அலைந்து திரிந்து தேடிக்கொண்டு இருப்பார்களோ என்னவோ? ஆனால், அவள் விடியும் மட்டும் என் கனவுக்குள்தான் இருப்பாள். தூக்கம் இல்லாத, வாட்டம் துளியும் இல்லாமல் ஆற்றோரத்துச் செடிபோல அப்படி ஒரு செழிப்பாக அவளால் மட்டும்தான் இருக்க முடியும்.
தனது கல்யாணச் சீதனத்தில் ஒன்றாகக் கொண்டுவந்து இருந்த மர்ஃபி ரேடியோவை அவள் எப்போதும் பிரிகிறவள் இல்லை. ஆனால், நாளாக நாளாக… அது அவளது நினைவில் இருந்து மறைந்துகொண்டு இருந்தது. பாட்டும் இசையும் ரீங்கரித்து வரும் சீர்மையில் அந்த ரேடியோவை டியூன் செய்வதில் சிரத்தை காட்டி வந்த அவள், இப்போது எல்லாம் பிரக்ஞையற்ற ஒரு மூதாட்டியின் அரற்றலைப்போல, அது கரமுரவென்று இரைந்துகொண்டு இருப்பதை பொருட்படுத்துவதே இல்லை. என்றாலும், எனது கனவுக்குள் வரும்போது ஒரு செல்லப் பிராணியைப்போல அந்த ரேடியோவைத் தன் மாரோடு அணைத்துப் பிடித்தபடி எடுத்து வருகிறாள். ராத்திரியில் மரத்தடியில் உட்காரக் கூடாது என்று சாங்கியம் சொல்லி அதட்டுவதற்கு கனவுக்குள் ஒருவரும் இல்லையாதலால், நாங்கள் மா மரத்தடியில் அமர்ந்து ‘இரவின் மடியில்’ பாட்டு கேட்போம். இருவருமே கண்களை மூடிக் கொண்டு பாடல்களில் லயித்து இருக்கும் தருணங்களில், இசைவயப்பட்டு அவள் தன்னுடலை அசைத்துக்கொள்வது… நாட்டியத்தின் சில அடவுகளை நினைவூட்டும் நளினத்துடன் இருக்கும்.
புத்தகங்களோடு அவள் கனவுக்குள் வரும் நாட்களில் நாங்கள் சந்திக்கும் இடம் நூலகமாக இருப்பது பொருத்தம்தானே. நூலகத்தில் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். அந்த நூலகம் அவளுக்கு என்றே தனியாக கட்டப்பட்டதைப்போன்ற அமைதியுடன் காணப்படும். அலமாரியின் வரிசை நேர்த்தி குலையாமல் தன் கையில் இருக்கும் புத்தகத்தை வைத்துவிட்டு, வேறு ஒன்றை எடுத்து அவள் படிக்கத்தொடங்கி விடுவாள். ஒன்று முடிந்து மற்றொன்று. அது முடிந்ததும் இன்னொன்று என… அவளது வாசிப்பு கண்ணி இழைத்துப் போய்க்கொண்டே இருக்கும். புத்தகங்களில் இருக்கிற வெவ்வேறு உலகங்களுக்குள் பாய்ந்து மறைந்துவிடுபவளாக இருந்த அவள் திரும்பி வரும்வரை, நான் சைக்கிளை வைத்துக்கொண்டு காத்திருப்பேன். அவ்வப்போது தன் உடல் என்ற கூட்டுக்குத் திரும்புகிற அவள், இதோ கிளம்பி விடலாம் என்பதுபோல என்னைப் பார்த்து மெலிதாகச் சிரித்துவிட்டு மறுபடியும் மறைந்து விடுவாள். அவளுக்குத் தெரியும், அந்தச் சிரிப்பு என்னை என்றென்றைக்கும் நிறுத்தி வைக்கும் என்று.
திடுமென அவள் நர்ஸ், டாக்டர், வக்கீல் என்று விதவிதமாக மாறிவிடுவாள். (ஒருநாள் கனவில் அவள் இந்திரா காந்தியைப்போல வந்ததைச் சொன்னபோது, உனக்கு கிறுக்குதான் பிடித்திருக்கிறது என்று நையாண்டி செய்தது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.) வேலைக்குப் போறேன்னு சொல்லிட்டு ஊரைச் சுத்திட்டு வர்றியா என்று அவளது புருசனோ, மாமியாரோ, கனவுக்குள் வந்து கேட்க முடியாது என்பதால், நாங்கள் மாலை வேளைகளில் நாடகம் அல்லது சினிமா பார்க்கப் போனோம். அல்லது கம்மாய்க்குப் போய் மீன் பிடித்து சுட்டுத் தின்றோம். தந்திக் கம்பத்தின் அடிப்பாகத்தில் காதுவைத்து ரீங்காரம் கேட்டோம். திரும்பும் பாதையின் மருங்கில் இருக்கும் இலந்தை மரத்தை நான் உலுக்குவேன். உற்சாகத்தோடு ஓடியோடி பழங்களைப் பொறுக்கி தன் மடியில் கட்டிக்கொள்ளும் அக்காவைப் பார்த்தால், ஒரு சிறுமியைப்போல் இருப்பாள்.
ஆனால், கனவுதானே என்று நான் அசட்டையாக இருந்துவிடுகிற நாட்களில், அக்காவின் நிழலுக்குள் மறைந்துகொண்டு கதிர்வேல் வந்துவிடுவான். கதிர்வேல், அக்காளின் புருசன் கனகவேலின் தம்பி. ‘வயித்துக்குள்ளப் பூந்து இருக்கிற கருவை மாத்திவைக்க முடியுமா… விதைக்கிறதுதான் முளைக்கும்… இந்தவாட்டி உம்மவன் வந்ததும் கேளு, என்னாடாப்பா விதைச்சேன்னு. அதை விட்டுட்டு பிள்ளைங்களுக்கு ஏதாச்சும் தீம்பு பண்ணினே… அப்புறம் மூத்தப் பொட்டச்சி நீ மொதல்ல சாகுன்னு வெட்டிருவேன் ஜாக்கிரதை’ என்று தன் தாய் மாரியாயியைப் பார்த்து அவன் போட்ட அதட்டலில்தான் அவள் அடங்கி இருக்கிறாள். தான் பெத்தப் பிள்ளைதான் என்றாலும் கதிர்வேலைக் கண்டால், மாரியாயிக்குக் கொஞ்சம் பயம்தான். சரியான முரடன். நன்றாக படிக்கக்கூடியவனாய் இருந்தும், அவங்க அப்பன் செத்த பிறகு பள்ளிக்கூடம் போவதை நிறுத்திக்கொண்டவன். ஒருத்தன் வெளியேறி வேலைக்குப் போனது போதும், நான் காட்டைப் பாத்துக்கிறேன் என்று பண்ணையத்தை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டவன். பெரும்பாலும் ஊருக்குள் வரவே மாட்டான். காட்டுக் கொட்டாயோடு சரி. ராத்தங்கலும் அங்கேயேதான்.
நிஜத்திலும் அக்காவோடு கதிர்வேல் அதிகம் பேசி நான் பார்த்தது இல்லை. சாப்பாடு எடுத்துவைக்கும் நேரங்களில், ‘போதும் அண்ணி’, ‘இன்னுங் கொஞ்சம்’ என்பது மாதிரி ஒன்றிரண்டு வார்த்தைகள்தான் பேசிக் கேட்டிருக்கிறேன். அப்பவும்கூட தண்ணிக்குள் பாயப்போகிற கொக்காட்டம் தலை குனிஞ்சே இருப்பான். வியாழக்கிழமையானால், வாரச்சந்தைக்குப் போகும்போது ‘எதுவும் வாங்கியாரணுமா அண்ணி’ என்று கேட்பதற்கு வாய் திறப்பான். அக்காவும் கொழம்புச் செலவு, பெரிய பிள்ளைக்கு நொறுவாய், கண் மை, பவுடர் டப்பா, சின்னவளுக்கு கிரேப் வாட்டர் அது இதுன்னு சொல்லி அனுப்புவாள். சந்தையில் இருந்து திரும்பும்போது, ஸ்கூல் வாசலுக்கே வந்து என்னை கேரியரில் உட்காரவைத்து ஊருக்குக் கூட்டி வருவதை வாடிக்கையாகக்கொண்டு இருந்தான். வழி நெடுக நான்தான் லபலபன்னு ஏதாவது கேட்டுக்கொண்டு வருவேனேயழிய, அவனாக எதுவும் பேச மாட்டான்.
அப்பேர்ப்பட்ட இந்த கதிர்வேல், என் கனவுக்குள் அவனாகவே வந்தானா அல்லது அக்காவே கூட்டி வந்தாளா என்ற குழப்பத்தை நான் அவர்களிடம் வெளிப்படுத்திக்கொண்டது இல்லை. எனக்கு அவனைப் பார்க்க ஐயோ என இருந்தாலும், அக்காவுக்கும் எனக்குமேயான கனவில் அவனை ஒரு தொந்தரவாகவே கருதி முகத்தை சிடுசிடுப்பாக வைத்துக்கொள்வேன். அவன் வந்ததை நான் ரசிக்கவில்லை என்பதை அறியாதவள் அல்ல அக்கா. இந்த நேரத்தில் மெல்லிதாக ஒருமுறை சிரித்தால்கூட, நான் சமாதானம் அடைந்துவிடுவேன் என்பது தெரிந்திருந்தும் அவள் சிரிக்க மாட்டாள். தன் சிரிப்பை மலினமாக செலாவணி செய்கிறவள் என்ற தப்பான அபிப்ராயம் எனக்கு வந்துவிடக் கூடாது என்று சிரிக்காமல் தவிர்ப்பதில்தான் சுசீலாக்கா ஜெயிக்கிறாள். எனவே, அவர்கள் இருவரையும் தனித்திருக்க விட்டுவிட்டு, நான் சைக்கிள் ஏறி வேறு பக்கம் கிளம்பிவிடுவேன். இப்போது என் கனவில் நான் இருக்க மாட்டேன். அவர்கள் மட்டுமே இருப்பார்கள். எதுவும் பேசிக்கொள்ளாமலே எதிரெதிராக உட்கார்ந்து பார்த்துக்கொண்டு இருப்பார்கள் வெகு நேரம். விடியப்போகிறது என்று சொல்வதற்காக நான் சைக்கிள் மணியை அடித்து சமிக்ஞை எழுப்பிக்கொண்டே வரும்போது, அவன் என் கனவில் இருந்து வெளியேறிப் போயிருப்பான்.
இப்படித்தான் ஒருநாள் துணி துவைத்துக்கொண்டு வருவதாய் சொல்லிக்கொண்டு பம்ப் செட் கிணற்றடிக்கு நானும் அக்காவும் போகிறோம். எங்களைக் கனவில் யாரும் பின்தொடர்கிறார்களா என்று திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே வந்தாள் அக்கா. மோட்டார் ஓடிக்கொண்டு இருக்கிறது. வயலில் தாங்கொழுத்துப் பாய்ந்துகொண்டு இருக்கிறது தண்ணீர். மடை ஒன்றையும் திருப்பாமல் இலவ மரத்தடியில் படுத்துக்கிடந்த கதிர்வேல் எங்களைக் கண்டதும் எழுந்து வருகிறான். ஏதோ தீவிரமான யோசனையில் மூழ்கி இருந்திருப்பான்போல. அவனது முகம் இயல்பானதாக இல்லை. எப்போதும் சமன் இழக்காத அக்காவும்கூட அவனது தோற்றத்தைப் பார்த்து சற்றே பதற்றம் கொண்டவளாகிவிட்டாள்.
‘அவங்க எதிர்பார்க்கிறது எதுவோ, அது கிடைக்கிற வரைக்கும் உங்கள நிம்மதியா இருக்க விட மாட்டாங்க. அது ஏன் கிடைக்கல அல்லது எப்படி கிடைச்சதுங்கிறது அவங்களுக்கு முக்கியமில்ல…’ என்று கூறிவிட்டு அமைதியாக இருந்தான். அவன் எதைப்பற்றி பேசுகிறான் என்பது ஒருவேளை அக்காவுக்கு விளங்கியதோ என்னவோ, எனக்கு துளியும் புரியவில்லை. இருளைத் திரட்டிவைத்தது போன்ற ஓர் இறுக்கம் அங்கே நிலவியது. யாராவது ஒருவர் பேசிக்கொண்டே இருந்தால் சற்றே தேவலாம் எனத் தோன்றியது எனக்கு.
விடிவதற்கு இன்னும் கொஞ்ச நேரம்தான் இருந்தது. அதற்குள் அவர்கள் என் கனவில் இருந்து வெளியேறித் தத்தமது இடங்களுக்குப் போகாவிட்டால், உள்ளுக்குள்ளேயே மாட்டிக்கொள்ளும் அபாயம் இருப்பதைச் சொல்லி அவர்களை எச்சரிக்கைப்படுத்தினேன். ஆமாம், வெளியேறியாக வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று முணுமுணுத்தவன் திடுமென ஓங்காரமெடுத்து அலறினான். என்னவென்று நாங்கள் விளங்கிக்கொண்டு அவனைத் தடுப்பதற்குள்ளாகவே அவன் சூரிக்கத்தியால் தன் வயிற்றை வகிர்ந்து ‘இதை வைத்தாவது அவர்களை சமாளித்துக்கொள்ளுங்கள்’ என்று ஒரு குழந்தையை எடுத்து, அக்காளிடம் கொடுத்துவிட்டு கனவில் இருந்து வெளியேறிப் போய்விட்டான். ரத்தமும் நிணமும் படிந்த உடலோடு வீறிட்டுக்கொண்டு இருந்த குழந்தையை அக்காவிடம் இருந்து வாங்கி நான் துடைக்கிறேன். ‘அது ஆண் குழந்தைதானே’ எனக் கேட்கிறாள் அக்கா. ‘ஆம்’ என்று நான் உறுதிப்படுத்தியதும், ‘அதைக்கொடு, அவர்களது மூஞ்சியில் விட்டெறிந்துவிட்டு வருகிறேன்…’ என்று என்னைத் தன்னந்தனியாய் விட்டுவிட்டு கனவில் இருந்து வெளியேறினாள் குழந்தையோடு.
எனக்கு ஏன் இப்படிக் குழப்படியான கனவுகளே வருகின்றன என்பது மற்றும் ஒரு குழப்பமாகவே இருக்கிறது. ஆனால், எல்லாமே சுசீலாக்காவால் வந்த வினை. ஆய்ந்தோய்ந்துப் பார்க்காமல், ‘கவர்மென்ட் உத்தியோகம், நிலபுலம், ஊரிலேயே அவங்களுடையது மட்டும்தான் பில்லை வீடு, ரெண்டே ரெண்டு பசங்க மட்டுந்தான், நாத்தனார் நங்கை பிடுங்கல் கிடையாது’ன்னு பெத்தவங்க வற்புறுத்தி இருக்காங்க. பெத்த வங்கன்னா அப்படித்தான் இருப்பாங்க. இந்தக்கா என்ன செய்திருக்கணும்? நிதானமா யோசித்து, ‘டைப்பிஸ்ட் ஆகவோ, டீச்சர் ஆகவோ போகணும்னு எனக்கு ஆசை இருக்கு, ஏன் ஜில்லா கலெக்டர் ஆகிற யோகம்கூட எனக்கு இருக்கு, நான் மேற் கொண்டு படிக்கணும், அதனால் இந்த சதுர வெட்டுக் கிராப்புக்காரனை வேற இடம் பார்க்கச் சொல்லுங்க’ன்னு தைரியமா மறுத்து இருக்கணும். தன்னோட அறிவுக்கும் அழகுக்கும் அந்தப் பட்டாளத்தானை அக்கா கட்டியே இருக்கக்கூடாது. அட, பொண்ணு கேட்டு வந்துட்டான்னா… அதுக்காகக் கட்டிக் கணுமா என்ன?
எடுத்த எடுப்பிலேயே துளிக்கூட ஜோடிப் பொருத்தம் இல்லைங்கிறதை கண் திறவா சிசு வும்கூட கண்டுபிடிச்சிரும். அப்படி இருக்கிறப்ப ‘எனக்கேத்த ஆள் இவன் இல்லே’ன்னு பட்டுன்னு சொல்லி இருக்கணும். சரி… ஆள்தான் அப்ப டின்னா குணமாச்சும் தகுமா? வெத்தலைப் பாக்கு எடுக்கறதுக்கு முந்தியே டைப்பிங் கிளாஸுக்குப் போறதை நிறுத்தச் சொன்னானாமே… அதிலேயே அவன் புத்தி அறிந்து, ‘முடியாது சாமி’களேன்னு அக்கா மறுத்து இருக்கணும். இவனைவிட்டால், வேறு மாப்பிள்ளையே வரா மலாப் போயிருப்பான்? சுசீலாக்காவின் முக லட்சணத்துக்கு திருஷ்டிப் பொட்டு வெச்சாப்ல வந்து சேர்ந்தானே… இந்தக் காதறுந்த கனக வேல் புருசன் என்று (இவனை என் கனவுக்குள் நுழைய விடாததற்கான காரணங்கள் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்). அவன் எப்படியும் கிடந்து தொலையட்டும், அவனால்தான் சுசீலாக்கா எங்கள் ஊருக்கு வந்து சேர்ந்தாள். அந்த மட்டுக்கும் அவனை சகிச்சிக்கலாம்.
எட்டாங் கிளாஸ் படிச்சதுக்கே எங்கள் ஊரிலேயே அதிகம் படித்தவளாகிப்போனாள் சுசீலாக்கா. எங்கள் ஊருக்குள் முன் கொசுவம் வைத்து சீலை கட்டிய முதல் பெண் அவள்தான். முதுகுப் பக்கம் கொக்கிவைத்து ரவிக்கை போட்டவளும் அவள்தான். அது மட்டும் இல்லை, அவள் பயன்படுத்திய குளியல் சோப், புலி மார்க் சீயக்காய்ப் பொடி, வார்வைத்த செருப்பு, ஜடை பில்லைகள்… இவை எல்லாம் எங்கள் ஊர் முன், பின் கண்டிராதவை. பிடித்தவர்களுக்குக் கொடுப்பதற்கு என்று மாராப்பில் பணத்தை மறைத்துவைத்திருக்கும் பழக்கத்தை அக்காவிடம் இருந்துதான் எங்கள் ஊர் பெண் கள் கற்றுக்கொண்டார்கள். ‘ரோசாப்பூ ரவிக்கைக் காரி’ படத்தில் தீபாவை சுற்றி ஊரே வேடிக்கை பார்க்குமே… அப்படி ஆகிவிட்டது. ஆனால், தனக்கும் ஊர்ப் பெண்களுக்குமான இடை வெளியை சுசீலாக்கா குறைக்க விரும்பினாள் போலும். அதற்காக, அவள் வெளியூர் போகும் தருணங்களைத் தவிர்த்து… மற்ற நாட்களில் ஊர்ப் பெண்களைப்போலவே விசேஷ அலங் காரம் எதுவும் செய்துகொள்ளாமல் இருந்தாள். ஆனால், அதுவும்கூட அவளை இன்னும் அழகாகக் காட்டியது என்றால், அது ரசனை இல்லாத அந்த கூமுட்டைக் கனகவேலின் குருட்டு அதிர்ஷ்டம்தான்.
நாங்கள் படிக்க வரும்போது, சுசீலாக்கா அவங்க வீட்டு வாசலுக்கும் பரவிக் காயும் லைட் வெளிச்சத்தில் பாய் விரித்து அமர்ந்து பூ தொடுத்துக்கொண்டோ, இல்லையானால்… ராந்தலின் கண்ணாடியை திருநீறு தேய்த்துத் துடைத்தபடியோ இருப்பாள். அவள் செய்யும் வேலைகளுக்கு மேஸ்திரியாட்டம் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு இருக்கும் கனகவேல் முணுமுணு என்று எதையாவது சொல்லிவிட்டு அவனே சிரித்துக்கொள்வான். அவள் ரசிக்கத்தக்கதாக அவன் பேச்சு இருப்பது இல்லைபோலும். சில நேரங்களில் நாங்கள் படிப்பதை எங்கள் ஹெச்.எம் மாதிரி பின் பக்கமாகக் கைகளைக் கட்டிக்கொண்டு மேற்பார்வை செய்வான். சிகரெட் பற்றவைத்துக்கொள்வதும் உண்டு.
பட்டாளத்தில் இருந்து தூக்கி வருகிற அந்தப் பெரிய இரும்புப் பெட்டியில் பாதிக்கும் மேல் சிகரெட்டும் சீமைச் சாராய பாட்டிலும்தான் இருக்கும்னு சிங்கப்பல்லன் மகன் சொல் வது நிஜம்தானாக்கும். கருமம், இவன் தன்கிட்ட நெருங்கி நெருங்கிப் பேசறப்ப, அந்த நாற்றத்தை அந்தக்கா எப்படித்தான் தாங்கிக்குமோ… த்தூ. காற்று பலமா வீசுறப்ப அக்காகிட்ட இருந்து கிளம்பி வரும் வாசனையில் படிக்கும் கவனம் குலைவதை நான் யார்க்கிட்டயும் சொல்லியதே கிடையாது. சொன்னால், அவ்வளவுதான், ஒம்பதாவது படிக்கறப்பவே உனக்கு இந்த நெனப்பான்னு நான் நினைக்காததை எல்லாம் நினைச்சதாகச் சொல்லி, எங்கப்பா சாட்டைக் குச்சியில் விளாசிடுவார்னு எனக்குத் தெரியும். ஆனால், குடிகுரா பவுடரும், மஞ்சளும், மல்லிகையும் சேர்ந்த வாசமாகத்தான் சுசீலாக்கா எனக்குள் எப்போதும் கமழ்ந்திருக்கப்போகிறாள் என்பதை அந்த வயதில் நான் உணர்ந்து இருக்க வில்லை. அவளை நினைத்துக்கொள்ளும் போது எல்லாம் என்னைச் சுற்றி பரவத் தொடங்கும் அந்த வாசனையை வீண் பிரமை என்று நான் புறந்தள்ளிவிடுவது இல்லை.
படித்தப் பெண் ஒருத்தியின் முன் வாய்விட்டு எதையாவது தப்பாகப் படித்துவிடுவோமானால், மானம் போய்விடும் என்ற எச்சரிக்கை உணர்வு ஆட்டியது எங்களை. அதுவும் இல்லாமல் நன் றாகப் படிக்கிற பிள்ளைகளாக்கும் என்று அவ ளிடம் பேர் வாங்கும் ஆசையும் உள்ளுக்குள் இருந்தது. அதனால், பொங்கலுக்கு சபையே றும் சமூக நாடகத்துக்கு ஒத்திகை பார்ப்பவர்களைப்போல, மனசுக்குள்ளேயே படிப்பது, வெளிச்சம் தெரிகிற தூரம் வரை நடமாடிக்கொண்டே படிப்பது, புத்தகத்தைப் பார்க்காமல் கண்ணை மூடியபடி அதுவரை
படித்ததை சொல்லிப்பார்ப்பது என்று ஆகிவிட்டோம். அவள் எங்களைக் கவனித்தாலும், கவனிக்காவிட்டாலும், நாங்கள் அவளைப் பார்த்துக்கொண்டுதான் படித்தோம். அவள் இன்னாருக்கு என்று இல்லாமல் எங்களைப் பார்த்து எப்போதாவது பொதுவாக சிரித்துவைப்பாள். அந்தச் சிரிப்புக்கு இன்னும் நாலு பாடம் படிப்போம்.
கல்யாணமாகி ஒரு மாதம் கழித்து கனகவேல் தன் முரட்டு கால் ஜோடுகளை மாட்டிக்கொண்டு பட்டாளத்துக்குக் கிளம்பிவிட்டான். சிகரெட் பாக்கெட்டும் சீமைச் சாராய பாட்டிலும் தீர்ந்திடுச்சுபோல. ‘போய் வாங்கி ரொப்பிக்கிட்டு வந்துருவான் அடுத்த வண்டியில்’ என்று நாங்கள் பேசிக்கொண்டோம். ஆனால், அவன் வர ஒரு வருடமாகும் என்று சுசீலாக்கா சொன்னபோது, ஒழியட்டும் சனியன் என்று இருந்தது. வராமலே இருந்தால்கூட நல்லதுதான், அக்கா நிம்மதியாக விரல் நோகாமல் பூ தொடுத்துக்கொண்டு இருந்துவிடுவாள்.
இப்போது எல்லாம் சுசீலாக்கா வீட்டு வாசலுக்கே போய்ப் படிக்கத் தொடங்கிவிட்டோம். ச்சே, அக்கா மாதிரி அழகா, பிரி யமா மனசுக்குப் பிடிச்ச வாசனையோடு சொல்லித் தருகிற ஒரு டீச்சர் இருந்தால், படிக்க எவ்வளவு நன்றாக இருக்கும்? அன்னந்தண்ணி ஆகாரம் இல்லாமல் படித்துக்கொண்டே இருக்கலாம். அந்த டீச்சர் பத்தாம் வகுப்புக்கு வர மாட்டாள் என்றால், எப்படியாவது ஃபெயிலாகி ஒன்பதாவதிலேயே தங்கிவிடலாம். ஆனால், அப்படி ஒருத்தியை டீச்சராக ஏற்கும் பாக்கியம் எங்களுக்குக் கிட்டாமலே போய்விட்டது!
முழுப் பரீட்சை லீவ் விடுவதற்கும், சுசீலாக்கா பிரசவத்துக்குத் தாய் வீடு போவதற்கும் சரியாக இருந்தது. எனக்குத்தான் பித்து பிடிப்பதைப் போலாகிவிட்டது. எங்கே இருந்தோ திடீரென்று வந்து ஜடையை முன் பக்கம் தூக்கிப் போட்டபடி சிரிப்பதுபோல் இருந்தது. வெறும் காற்றில் அவளது உருவங்களைக் கண்டடைந்து பித்தானேன். பிள்ளைகள் இல்லாத பள்ளிக்கூடம்போல் ஊரே வெறும் மைதானமாகத் தெரிந்தது.
சுசீலாக்கா குழந்தையோடு வந்தபோது, பத்தாவது கால் பரீட்சை தொடங்கி இருந்தது. அக்கா இப்போது வேறு மாதிரி தெரிந்தாள். அவளோட முகத்தில் இருந்த சிரிப்பில் கொஞ்சத்தை குழந்தைக்குக் கொடுத்துவிட்டாள்போல. அது எப்போது பார்த்தாலும் தூங்கிய நேரம் போக பொக்கையாகச் சிரித்துக்கொண்டே இருந்தது. வாழ்வரசி என்று பெயர் வைத்திருந்தாள். பாலூட்டவும், குளிப்பாட்டவும், தூங்கவைக்கவும், துணிமணி அலசவுமே அக்காவுக்கு நேரம் சரியாக இருந் தது. அதனால், அக்காவைத் தொல்லை பண்ண வேண்டாம் என்று நாங்கள் மீண்டும் கம்பத்தடிக்கே படிக்க வந்துவிட்டோம். ‘இந்த வருஷம் பப்ளிக் எழுதப்போறீங்க, ஏதாச்சும் சொல்லித்தரலாம்னா, முடிய மாட்டேங்குதே’ என்ற அங்கலாய்ப்பில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லித் தருவாள். ஒருநாள் அதுவும் கெட்டது.
அந்த கனகவேல் அதே இரும்புப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு, ‘இப்பத்தான் லீவ் கிடைச்சது’ என்று சொல்லிக்கொண்டு வந்து சேர்ந்தான். ”விக்ரகமாட்டம் இருக்கு கொழந்தை. அதைக் கொஞ்ச மனசில்லாம, தலைச்சம்பிள்ளையே பொட்டையாப்போச்சேன்னு குதிக்கிறா அந்த மாரியாயி. பத்தாததுக்கு இப்ப மவனும் வந்துட்டான், இன்னும் என்னென்ன ஆட்டங் காட்டப்போறாளோ” என்று அன்றிரவு எங்க அப்பாவிடம் புகார் தெரிவித் தாள் அம்மா.
இந்த முறை அவன் எனக்கு ஒரு பேனா கொடுத்தான். ‘உங்கக்காதான்டா உனக்கு வாங்கியாரச் சொல்லி எழுதி இருந்தா’ என்று சொத்தைப் பல் தெரிய சிரித்தான். அவன் இருந்த காலம் முழுவதும் அக்காவைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது.
கனகவேல் கிளம்பிப் போன கொஞ்ச நாளி லேயே சுசீலாக்கா முன்பு மாதிரியே வாந்திஎடுத்தாள். சுருண்டு சுருண்டு படுத்துக்கொண் டாள். இந்த முறை பிரசவம் இங்கேயே நடந்தது. அப்பன் ஜாடையில் இருக்கிறது குழந்தை என்றார்கள். அதனாலேயே, எனக்கு அதைப் பிடிக்காமல் போய்விட்டது. தகப்பனும் பிள்ளைகளும் பாசமான ஒரு அக்காவை என் னிடம் இருந்து தூரம் கடத்திப்போவதை எப்படித்தான் பொறுத்துக்கொள்ள முடியும்? அதற்காக மாரியாயிபோல, ‘இங்கதான் வந்து பொறக்கணும்னு இந்தச் சனியனை யாரு வேண்டி அழுதா… அதான் ஏற்கெனவே ஒரு பொட்டை இருக்குதே’ என்று சொல்லும் அளவுக்கு எனக்கு கல் நெஞ்சம் இல்லை. அந்த கதிர்வேல் மட்டும் இல்லேன்னா, இந்நேரம் மாரியாயி குழந்தையை எதுவும் பண்ணியிருப்பாள் என்பாள் அம்மா.
சுசீலாக்கா ரொம்பவும் மெலிந்துகொண்டே இருந்தாள். கண்ணில் வற்றாமல் இருக்கும் அந்த வாஞ்சையை வைத்துத்தான் அவளை அடையாளம் காண முடியும்போல் இருந்தது. நஞ்சானும் குஞ்சானுமாக ரெண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு அவள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாதவளாக இருந்தாள். பொழுதுக்கும் அவளுக்கு வேலை சரியாக இருந்தது. அவள் இருக்கும் தாவாரத்தில் எப்போதும் விளக்கு எரிந்துகொண்டே இருந்தது.
பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பும்போது நான் லைப்ரரியில் எடுத்து வந்து தருகிற மூன்று புத்தகங்களையும் ஒரே நாளில் படித்து முடித்த அவள், இப்போதெல்லாம் எடுத்து வந்து ஒரு மாசமாகியும் ஒன்றையும் படிக்க முடியாமல் வெறுமனே ரெனியுவல் மட்டுமே செய்துகொண்டு இருந்தாள். சிலோன் ரேடியோவைத் திருப்பி இரவின் மடியில் கேட்டுக்கொண்டு, கூடவே ஹம் செய்கிற அக்காவை இப்போதெல்லாம் பார்க்கவே முடிவது இல்லை. இப் போது இருக்கிற அக்கா கனகவேலின் பொண்டாட்டி, அவனது ரெண்டு பிள்ளைகளுக்குத் தாய். மாரியாயின் மருமகள்.
இப்போதெல்லாம் கதிர்வேல் அடிக்கடி வீட்டுக்கு வரத் தொடங்கி இருந்தான். ‘பொட்டையப் பெத்தவளே, புருசன் வூட்ட அழிச்சவளே’ என்று எந்நேரமும் மொணமொணத்துக்கொண்டு இருக்கிற அவனது அம்மா மாரியாயி, அவன் இருக்கும் நேரங்களில் வாயடக்கிக்கிடப்பது அக்காவுக்கும் ஆறுதலாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அக்காளின் மூத்தப் பிள்ளையை உட்காரவைத்து ரவுண்ட் அடிப்பதற்காக அவன் தனது சைக்கிளில் புதிதாக பேபி ஸீட் பொருத்தி இருந்தான். அந்தப் பிள்ளையும் முட்டைக் கண்ணை உருட்டிக்கொண்டு அவனிடம் ஒட்டிக்கொள்ளத்தான் செய் தது. ராச்சாப்பாடு முடிந்ததும் கொட்டாய் திரும்புவதற்கு முன்புபோல அவன் அவசரம் காட்டுவது இல்லை. பிள்ளைகளில் ஏதாச்சும் ஒன்றைத் தூக்கிக்கொண்டு வந்து, லைட் வெளிச்சத்தில் படித்துக்கொண்டு இருக்கிற எங்களிடம் விளையாட்டு காட்டிவிட்டு பின் நேரத்தில்தான் கிளம்பிப் போனான். அந்த மாதிரியான நேரங்களில் அக்கா, இன்னொரு பிள்ளையை மடியில் கிடத்திக்கொண்டு வெளித் திண்ணையில் உட்கார்ந்து இருப்பது கோட்டுருவாய்த் தெரியும். கதிர்வேல் கிளம் பிப் போன பிறகும் அக்கா வெகு நேரம் அங் கேயே உட்கார்ந்து இருப்பதை நான் பல நாட்கள் கண்டிருக்கிறேன்.
இந்த முறை கனகவேல் வந்து ஒரே வாரத்தில் திரும்பிப் போக வேண்டியிருந்தது. ரீ-கால் செய்து தந்தி வந்ததை அடுத்து அவன் கிளம்பிப் போன பிறகு, அக்கா பழைய உற்சாகத்துக்குத் திரும்பியிருந்தாள். காணாமல் போயிருந்த அவளது சிரிப்பு மீண்டும் வந்து விட்டிருந்தது. அவளது வாசனையால் காற்று பழையபடி மணந்தது. ‘இந்த வருஷம் பப்ளிக், கவனமாப் படி’ என்று சொல்லும்போது அக்கா எங்களது டீச்சர்களில் ஒருத்தியாக மாறிக்கொண்டு இருக்கிறாளோ என்று நான் கொண்டிருந்த கவலை இப்படியாக நீங்கியது. முன்புபோல வீட்டுப் புழக்கடையில் அல்லாமல், துணிகளைத் துவைத்து வர இப்போது பம்ப்செட் கிணற்றுக்குப் போகத் தொடங்கினாள். அங்கே கதிர்வேல் இருந்தான்!
அக்கா தன் மூன்றாம் பிரசவத்தில் ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். அது என் கனவில் கதிர்வேலு தன் வயிற்றைக் கிழித்து எடுத்துத் தந்த குழந்தைதான் என்று நான் உறுதியாக நம்பினேன். அதே வேளையில் நிஜத்தில் பிறந்த இந்தக் குழந்தையைத்தான் அவன் தன் வயிற்றைக் கிழித்து எடுத்துக் கொடுப்பதுபோல கனவில் கண்டுவிட்டேனோ என்கிற குழப்பமும் எனக்கு இருந்தது. எப்படி யாயினும், தனக்கு என்று பெற்றுக்கொள்ளாத அந்தக் குழந்தையை அக்கா எப்படி வளர்க்கப் போகிறாள் என்று என்னால் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. பசியால் வீறி டும் குழந்தைக்குப் புகட்டாமல், நெறி கட்டிய தன் மார்களைப் பிதுக்கி சுவற்றின் மீது பாலைப் பீச்சியடிப்பவளாக என் கனவில் வந்த அக்காவை… நான் நிஜத்தில் பார்த்துவிடக் கூடாது என்பதே என் கவலையாக இருக்கிறது!
– பெப்ரவரி 2011