கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்  
கதைப்பதிவு: May 15, 2017
பார்வையிட்டோர்: 33,467 
 

“ ஹலோ ராமசாமி “

கால் மணி நேரத்தில் மீண்டும் பைனான்ஸ் மினிஸ்டர் லைனில் வந்ததைச் சிபிஐ உயர் அதிகாரி ராமசாமி எதிர்ப்பார்க்கவில்லை.

“ சொல்லுங்க சார் “

“ உங்க மகளைக் கடத்திட்டதா தகவல் வந்தது. இந்த ப்ரொஜெக்ட்க்குள்ள உங்களைச் சேர்க்கும் போதே எதிர்பார்த்தேன் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்ன்னு. அதனால முன்கூட்டியே உங்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் போட நினச்சேன். லேட் ஆயிருச்சு. பரவாயில்ல கதிரேச பாண்டியன்னு ஒரு IPS ஆபிசர்க்கிட்ட சொல்லியாச்சு. அந்த ஆளு மோசமானவன். மோப்ப நாய் தோத்திரும். கவலைப்படாதீங்க உங்க மகா கிடைச்சிருவா “

“ சரி சார் “ என்றார் இறுக்கமான குரலில் ராமசாமி.

“ அப்புறம், என்னோட பிளான் A எதிர்பார்த்த மாதிரியே அமைஞ்சது. இனி பிளான் B பத்தி உங்ககிட்ட பேசணும். என்ன செய்ங்க இன்னும் அரை மணி நேரத்தில் ஏர்போர்ட்ல டெர்மினல் 2 போங்க. உங்களுக்காக ஒரு சார்ட்டட் பிளைட் காத்திருக்கும். அதுல கிளம்பி வாங்க. பார்க்க இங்க ராஜஸ்தான்ல ஒரு அருமையான falcon கழுகு ஹாஸ்பிடல் இருக்கு கூடவே பேச நிறையச் செய்தியும் இருக்கு. அப்புறம் மறக்காம மனைவிகிட்ட மகள் வீட்டுக்கு வந்திருவான்னு ஆறுதல் சொல்லிட்டு வாங்க. ஓகே நாம அந்த ஹாஸ்பிடலில் மீட் பண்ணுவோம் “

போன் துண்டிக்கப்பட்டது. மகள் என்ன ஆனாள் என்ற கவலை கூடவே ஓய்வின்றித் துரத்தும் இரவு பகல் என்றில்லாத வேலை. சிபிஐ உயர் அதிகாரி என்பது புலி வால் புடித்த கதை தான் என்பது ராமசாமி அறிந்து வருடங்கள் ஆகி விட்டன.

வீட்டிற்குச் சென்றால் மனைவி அழுது புலம்புவதைத் தவிர்த்து உடனே கிளம்ப முடியாது.

ஏற்கனவே “ உங்களுக்கு எல்லாம் ஏன் பொண்டாட்டி புள்ளைங்க “ என்று கேள்வி கேட்பவள் இப்பொழுது சொல்லவே வேண்டாம் என்று யோசித்தவண்ணம் உதவியாள் ஜெகதீசிடம் “ ஏர் போர்ட் போ “ என்று சொல்ல கார் ஏர்போர்ட் நோக்கி சீறிப் பாய்ந்தது.

டெர்மினல் 2 சென்று அடையாள அட்டைக் காட்டி சார்ட்டட் பிளைட்டில் பறந்து இருட்டு மணல் காட்டுக்குள் இருந்த அந்த அரசு கழுகு மருத்துவமனைக்குச் சொந்தமான ஹெலிப்பேடில் லேண்ட் ஆக ஒரு மணி நேரம் பிடித்தது.

ராமசாமி அந்த மருத்துவமனையின் கான்பரன்ஸ் ஹால் அடைந்த போது அங்கு ஏற்கனவே நிதி மந்திரியும், உயர் மட்ட ராணுவ அதிகாரியும் மேலும் இரண்டு பறவைகள் ஆராய்ச்சி விஞ்ஞானிகளும், ஒரு விலங்கியல் மருத்துவரும் காத்திருந்தனர் கூடவே நடுவில் இருந்த டேபிளில் பத்து பதினைந்து அடிபட்டு செத்த கழுகுகள் கிடத்தி வைக்கப்பட்டிருந்தன.

“ இவர் தான் சிபிஐ உயர் அதிகாரி ராமசாமி “ எனக் கூடி இருந்த அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்க மீட்டிங் ஆரம்பம் ஆனது.

கூட்டத்தின் நடுவே நிதி மந்திரி எழுந்து பேச ஆரம்பித்தார் “ இப்பொழுதெல்லாம் அந்நிய நாடுகள் சிலீப்பெர் செல்களை எல்லாம் விட்டு விட்டன. புதிதாக நம் நாடு அடைந்திருக்கும் பிரச்சனை. கால்களில் கேமராக்கள் பொருத்தப்பட்ட இந்தக் கழுகுகள். இது வரை பதினெட்டுக் கழுகுகள் பிடிக்கப்பட்டுள்ளன. RAW கூறும் தகவலின் படி நாடு முழுக்க ஆயிரக் கணக்கில் இந்தக் கழுகுகள் பரவி விட்டதாகத் தெரிகிறது. மனிதன் கட்டடத்திற்குக் கட்டிடம் தாவ முடியாது. ஆனால் இந்தக் கழுகுகள் செகரட்ரியேட் எட்டாவது தளத்தின் ஜன்னல் ஓரம் நின்றால் யாரும் சந்தேகப் படப்போவதில்லை. பிரதம மந்திரியின் வீட்டு வாசல் மரத்தின் மேல் நின்று கொண்டிருந்தால் யாருக்கும் சந்தேகம் தோன்றாது. அதைக் கண்டுப்பிடிக்கக் கூட இயலாது. ஆனால் அதன் கால்களில் உள்ள கேமரா நம் நாட்டை ஓட்டு மொத்தமாகப் படம் பிடித்துக் கொண்டிருப்பதை மறந்து விட வேண்டாம். நம்முடைய செயல்களில் இப்பொழுது மறைவு என்பதே இல்லை. யாரோ முழுமையாக நம்மைக் கண்காணிக்கிறார்கள். கூடுதல் செய்தி இந்தக் கழுகுகளை ஒவ்வொரு இடத்திற்கும் செல் என்று சொல்லி ஏவ எனப் பறவைகள் பரிபாஸை அறிந்த நூற்றிக்கும் மேற்ப்பட்டோரும் நாட்டுக்குள் ஊடுருவி உள்ளனர். பெரிய நெட் வொர்க் வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது நம்மைச் சுற்றி. அதை முறியடிக்கப் பெரிய அளவில் பணம் தேவை. இந்தத் தேவையை முன்னிறுத்தியோ அல்லது நாடு இப்படி ஒரு சூழலில் உள்ளது என வெளியே கூறினாலோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் சட்டம் ஒழுங்கு சரியில்லை ஆட்சியைக் கலையுங்கள் என்று அரசியல் ரீதியாகக் கூற பெரும் கூட்டமே வெளியே காத்திருக்கிறது.

எனவே பிளான் A உண்டாக்கப்பட்டு ஆயிரம் கோடியை அரசே பாரதி என்னும் சிபிஐ அதிகாரி மூலம் கடத்தியது. இந்தத் திட்டத்திற்காக அரசு ஆயிரம் கோடியை ஒதுக்கியது என்று வெளியே தெரிந்தால் எதிர்க்கட்சிகள் சம்மதிக்காது என்பதால் அரசே நடத்திய நாடகம் இது.

தைவானில் நடந்த கருத்தரங்கில் பேசிய பேச்சின் மூலம் உலகளவில் விலங்குகளின் பூச்சிகளின் பறவைகளின் பரிபாஷை நன்கு அறிந்ததாகக் கருதப்படும் ப்ரொபசர் நடராஜனை இந்தப் பிளானில் சேர்க்க விரும்பினோம். அதற்கு முன் அது உண்மை தானா என அறிய முயற்சித்தோம். அதன் விளைவாகச் சமவயதினரான அதிகாரி ராமசாமி அவர்கள் மூலம் பொய்யான ஒரு கேஸை உருவாக்கி நடராஜனை விசாரிக்கும் போது வீடியோ காட்சி எடுக்கப்பட்டது.

அந்த வீடியோவில் நடராஜன் தன்னைக் கடித்த கொசுவிடம் சற்று நேரம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டு அவரைப் பிளான் B யில் சேர்க்கும் எண்ணம் அரசு தரப்பில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் வருத்தமான செய்தி எதிரிகள் நம்மை விட முன்னேறி சென்று கொண்டிருக்கின்றனர்.

இந்தக் குழுவில் இருந்த பறவைகள் ஆராய்ச்சி விஞ்ஞானி பினோய் அவரது ஆராய்ச்சி கூடத்தில் இன்று மதியம் கொலை செய்யப்பட்டுள்ளார். உடன் இருந்த உதவியாளர் பெண் லீனா என்ன ஆனார் எனத் தெரியவில்லை.

பறவைகள் பரிபாஷை அறிந்த நடராஜனை விசாரித்து ஏதேனும் கழுகுகள் பற்றிய செய்தி அறிந்திருப்பாரோ எனப் பயந்து ராமசாமியை மிரட்ட வேண்டி அவர் மகள் கடத்தப்பட்டிருக்கிறாள். ஆக எதிரி நம்மை விட வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறான்.

உலகிலே உயரமான சிகரம் எவரஸ்ட்ன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா பலருக்கும் தெரியாத செய்தி. அந்த இடத்தில் அமேரிக்கா தன்னுடைய ராணுவ தளத்தை அமைக்க விரும்புது என்பது தான். அங்கே ராணுவ தளம் அமைத்தால் ஆசிய கண்டத்தை விஞ்ஞானக் கருவிகள் மூலம் சுலபமாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். குறிப்பாகச் சீனாவை. சுமுகமாகக் காட்டிக் கொண்டாலும் அது வளருவது அமெரிக்காவுக்குப் பொறுக்காத ஒன்று. கூடவே பாகிஸ்தானையும் மிரட்டி இந்தியாவுக்கு எதிராகத் தூண்டி குளிர் காய்கிறது. கழுகுகள் நம்மை மட்டும் வட்டமிட வில்லைச் சீனாவை சேர்த்து தான்.

ஆகவே பிளான் B துரிதப் படுத்தும் நேரம் வந்துவிட்டது. இனி நாம் செய்ய வேண்டியது ………..” என ரகசியமான பிளான் B பற்றிக் கூறி கூட்டம் முடிந்து ராமசாமியை நோக்கி வந்த நிதி மந்திரி “ ராமசாமி, கதிரேச பாண்டியனுக்குப் போன் செஞ்சு என்ன ஆச்சுன்னு கேப்போம் “ என்ற வண்ணம் கதிரேச பாண்டியன் IPS க்கு நள்ளிரவில் போன் பறந்தது.

“ என்னய்யா செய்றே “

“ ஆங், மயித்த புடுங்கி கிட்டு இருக்கேன் “

“ யோவ் மினிஸ்டர் பேசுறேன் “

“ சார் ஒரே நம்பர்ல இருந்து கால் பண்ணுங்க சார். ராத்திரி பனிரெண்டு மணிக்கு தெரியாத நம்பர்ல இருந்து கால் வருதேன்னு சொல்லிட்டேன் சாரி “

“ சரி சரி என்னாச்சு. சிபிஐ ஆபிசர் ராமசாமி மகள் மேட்டர் “

“ திருப்பதி போற வழியில ஆளை மடக்கி புடிச்சாச்சு. மொத்தம் மூணு பேரு இருந்தாங்க. பொண்ணு சேப் ன்னு சொல்லிருங்க “

“ குட் வேற ஏதாவது தகவல் “

“ மூணு பேரும் ஒரே மாதிரி டிரெஸ் பண்ணி இருந்தாங்க. ஒரே ஹேர் ஸ்டைல். தப்பிக்கப் பார்த்தாங்க. வேற வழியில்லாம சுட வேண்டியதா போச்சு. மூணு பேரும் காலி “

“ கொன்னுட்டியா, நல்ல ஆளுயா நீ “

“ சார் இன்னொரு தகவல் மூணு பேர் வலது கை உள் பக்கத்திலும் கழுகு படம் பச்சை குத்தி இருந்தது சார் “

“ கதிரேச பாண்டியன் “

“ சொல்லுங்க சார் “

“ அடுத்த அசைன்மென்ட் என்னன்னு மெயில்ல அனுப்புறேன். நாளைக்கு ஸ்டார்ட் பண்ணிருங்க வேலையை “

“ சரி சார் “

மறுநாள் அதிகாலையில் கதிரேச பாண்டியன் மொபைலில், விலாவாரியாக அவருக்குக் கொடுக்கப்பட்ட அடுத்த வேலை பற்றி எழுதி இருந்தது.

செய்தியை முழுமையாக வாசித்து விட்டு ஸ்ரீ ரங்கம் நோக்கி கிளம்பினார் கதிரேச பாண்டியன்.

மெயிலில் தெரிவிக்கப்பட்ட ஆள் ரவியை உள்ளூர் போலிஸ் மூலம் தேடி பிடித்து அவனிடம் வேண்டிய தகவல் சொல்லி முடிக்கும் போது இரவு மணி பத்து.

போலிஸ் ஆட்களின் உடையைக் கண்டாலே சிலருக்கு உதறல் வந்துவிடும். ரவியும் விதிவிலக்கு அல்ல. அதனால் போலிஸ் கேட்ட எல்லாவற்றிக்கும் சரி எனச் சம்மதித்தான்.

மறுநாள் காலை 7 மணி அளவில் ஸ்ரீ ரங்கத்து ரவி வீட்டு மொட்டை மாடியில் கதிரேச பாண்டியனும் சில மப்டி போலிஸ் அதிகாரிகளும் காத்திருந்தனர்.

மாடியில் நின்றவண்ணம் ரவி “ கா கா கா “ எனக் கத்த நிறையக் காகங்கள் அவன் வீட்டு மொட்டை மாடியை நோக்கி படையெடுத்து வந்தன.

கையில் வைத்திருந்த புல், சோளம், பொரி, சோற்றுப் பருக்கை என அள்ளி வீசினான். மீண்டும் சற்று நேரம் கழித்து “ குக்கூ குக்கூ “ என ரவி கத்த எங்கிருந்தோ ஒன்றிரண்டு குயில்கள் அவன் வீட்டு மொட்டை மாடி தேடி வந்து இரை எடுத்து சென்றன.

போலிஸ் ஆட்கள் ரவி செய்வதை வேடிக்கை பார்த்தவண்ணம் வெறுமனே காத்திருந்தார்கள்.

இம்முறை “ க்கங் க்கங் களுக் களுக் களுக் “ என வினோதமாகச் சத்தமிட்டான் ரவி, ஒன்றையும் காணவில்லை. மூன்றாவது முறை அவன் கத்தும் போது ஒரு கழுகு அவன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது.

அவன் வீட்டு மொட்டை மாடியில் கழுகு வந்து அமர்ந்ததும் பைனாகுலர் வழியாகக் கதிரேச பாண்டியன் பார்த்தார். அழகிய முறையில் அதன் காலில் கேமரா பொருத்தப் பட்டிருந்தது.

சிரித்தவண்ணம் அருகில் இருந்த மப்டி போலிசை பார்க்க

“ என்ன சார் டார்கெட் இது தானா “

“ ஆமா. பறந்திராம, எப்படியாவது புடிச்சிருங்க. எனக்கு உசிரோட வேணும் “

: ஒகே சார் “

அரை மணி நேரத்தில் கதிரேச பாண்டியன் கையில் இருந்தது நன்கு கட்டப்பட்ட நிலையில் அந்தக் கழுகு.

சென்னையில் சிபிஐ அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கழுகுடன் வரும் விஷயத்தை ராமசாமியிடம் தெரிவித்தார் கதிரேச பாண்டியன்

“ சார் மெயில்ல சொன்ன மாதிரி செம ஆளு கையில கெடச்சிருக்கான். பேரு ரவி. ஸ்ரீ ரங்கத்துலே ஒரு கழுகு கிடைச்சா சென்னையில எத்தனை சுத்துதோ. ஒரு சேப்டிக்கு கையோட அவனையும் கூட்டிட்டு வாறேன் சார். “

“ சரி வாங்க “

“ ப்ரொபசர் நடராஜன் கிட்ட பேசிட்டீங்களா “

“ ஆமா சொல்லியாச்சு. அரசு உத்தரவு ஒத்துழைக்க மறுத்தா கம்பி எண்ண வேண்டியது வரும்ன்னு சொன்னோம். “ பேசிக் “ க்கா அவர் நல்ல ஆளு முன்னாடி ஏன் இவ்வளவு ஏன் முரண்டு புடிச்சார்ன்னு தெரியல. இப்போ பிளான் B யில அவரும் ஒரு ஆள். ஒரு சின்ன ரிகுஸ்ட் கதிரேசன் “

“ சொல்லுங்க சார் “

“ அவர் குடும்பத்துக்கும் பாதுகாப்பு ஏற்பாடு செய்ங்க. ப்ளீஸ் “

“ ஏற்கனவே உங்க மகா கடத்துன மேட்டருக்கு அப்புறம் ரொம்ப அலாட்டா இருக்கச் சொல்லி மினிஸ்டர் உத்தரவு. அதுல அவர் குடும்பமும் சேர்த்தி சார் “

“ குட் நாளைக்கு நேர்ல மீட் பண்ணுவோம். நான் ப்ரொபசர் நடராஜன் கிட்ட ஒரு கழுகு கிடைச்ச மேட்டரை ஷேர் பண்ணுறேன். “

“ ஒகே சார் “ எனப் போன் தொடர்பு கதிரேச பாண்டியன் துண்டித்த உடன் ப்ரொபசர் நடராஜனுக்குப் போன் செய்தார் ராமசாமி.

“ வணக்கம் நடராஜன் “

“ சொல்லுங்க. திரும்பவும் விசாரணை இல்லையே “ என்றார் சிரித்தவண்ணம்.

“ அதெல்லாம் ஒண்ணுமில்ல. ஒரு கழுகு உயிரோட கிடைச்சிருக்கு. அதோட கதிரேச பாண்டியன் வந்திட்டு இருக்கார். அதைச் சொல்லத்தான் போன் செய்தேன் “

“ அப்படியா ஸ்ரீரங்கம் சென்னைக்கு இடையில ஏதாவது அரசு பறவைகள் சரணாலயம் இருக்கா “

“ செக் பண்ணனும் ஏன் கேக்குறீங்க “

“ கழுகு கால்ல கேமரா இருக்கு மறந்திட்டீங்களா “

“ அதைக் கழட்டியாச்சு “

“ அது இப்போ எங்க “

“ரவி வீட்டுக்குக் கிழக்கு திசையில இருந்து அந்தக் கழுகு பறந்து வந்ததுனால கிழக்குப் பக்கம் ஒரு மாமரத்தில் ஒரு கிளையில் கட்டி வச்சிருக்கார் கதிரேச பாண்டியன். எதிராளிக்குச் சந்தேகம் வராம இருக்க “

“ சரி. நாளைக்குக் கவர்மென்ட் வெட்னரி காலேஜ் உடைய ரிசெர்ச் சென்டர்ல மீட் பண்ணுவோம்,. பை “

மறுநாள் காலையில் ஒரு அறையில் டேபிளின் முனையில் கட்டி நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது கழுகு எதிரே ப்ரொபசர் நடராஜ் கூடவே நட்ராஜின் உதவியாளர் மருத்துவர் ஜான்.

மனித வாடை அதிகம் இருந்தால் கழுகுகள் பேசாது என நடராஜ் கூறியதால் கதிரேச பாண்டியனும் ராமசாமியும் அலுவலக அறையிலேயே அமர வைக்கப் பட்டனர்.

கோழிகளின் கழிவுகள் நிறையக் கொட்டப் பட்டிருந்தும் எதையும் திங்காமல் அமைதியாய் இருந்தது கழுகு. போராளி என்றால் ஐந்தறிவு ஜீவன்களும் முரட்டு அடம்பிடிக்கும் போல என எண்ணி மனம் தளராமல் அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் நடராஜ்.

ஏறக்குறைய இரண்டு மணி நேரம் அதையே உற்று பார்த்தப் பின் கழுகு கொஞ்சம் சகஜ நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்ததைக் கண்டார்.

இது சரிப்படாது எங்களுக்கு வேலை இருக்கிறது எனக் கதிரேச பாண்டியனும் ராமசாமியும் அங்கிருந்து கிளம்பி விட்டனர்.

நடராஜ் அங்கேயே இருந்தார். கழுகு முன் அமர்ந்து வீட்டில் இருந்து கொண்டு வந்த வத்த குழம்பும் வெண்டைக்காய் கூட்டும் கலந்த சோறு சாப்பிட்டார்.

மதியம் 3 மணி அளவில் கழுகு தலையை வினோதமாக ஆட்ட நடராஜனும் பதிலுக்குத் தலையாட்டி தலையாட்டி ஏதோ க கே என அதனிடம் பேச பேச டிட்டா டிடி டிட்டா டிட்டா டிடி டிட்டா என அடிக்கும் தந்தி கருவி போல டைப் செய்யத் துவங்கி கூடவே ஆங்கிலத்தில் மொழி மாற்றமும் செய்து கொண்டிருந்தார் நடராஜ் உதவியாளர் மருத்துவர் ஜான்.

அது “ உன் பேர் என்ன “

“ Z 507 “ எனக் கழுகு பரிபாசையில் கூற நீண்ட நெடிய உரையாடலாகப் போய்க் கொண்டிருந்தது.

ஒரு மணி நேரத்திற்குப் பின் கழுகு சோர்ந்து கீழே கிடந்த கோழி கழிவை திங்க துவங்கியது.

மொழி மாற்றம் செய்யப்பட்ட முழு உரையாடலையும் கையில் வாங்கி வாசித்த நடராஜ் உறைந்து போயிருந்தார்.

ஒரு வாரமாக அந்தக் கழுகு ஸ்ரீரங்கத்து கோயிலை சுற்றி சுற்றிக் கண்காணித்திருக்கிறது. கிரக வாசிகள் மிகப் பெரிய கலவரம் உண்டு பண்ண திட்டம் தீட்டி உள்ளதாகவும் அது மட்டுமே தனக்குத் தெரியும் எனவும் கிரக வாசிகள் என்றால் யார் எனத் தெரியாது எனவும் போய்க் கொண்டிருந்தது அந்த மொழி பெயர்ப்பு.

வாசித்துப் படபடப்புத் தாளாமல் ராமசாமியிடம் தெரிவிக்க அலுவலக அறைக்கு விரைந்தோடினார் நடராஜ்.

கீழ் தளம் வந்து அலுவலக அறைக்குள் நுழைந்து போன் பேச ஆரம்பிப்பதற்குள் தட தட என எதுவோ உடையும் சத்தம்.

“ சார் சார் “ என்ற கூக்குரல் கேட்டு வெளியே வந்த நடராஜன் கண்ணாடியை உடைத்துக் கொண்டு நான்கைந்து கழுகுகள் அவர் இதுவரை விசாரித்துக் கொண்டிருந்த அறையின் உள்ளே செல்வதைக் கண்டு வேக வேகமாக மேலே ஓடினார்.

அவர் கதவை திறந்து உள்ளே செல்லவும் பத்திற்கு மேற்பட்ட கழுகுகள் உடைத்த கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே ஆக்ரோசமாகப் பறக்கவும் சரியாய் இருந்தது.

கீழே இது வரை ஜான் எழுதிய மொழி பெயர்ப்பு தாள் கொத்தி துண்டு துண்டாய் கிழிக்கப்பட்டுக் கிடந்தது.

கூடவே ரத்த வெள்ளத்தில் ஸ்ரீரங்கத்தில் பிடித்த கழுகும் ஜானும் தரை முழுக்கச் சின்னாபின்னாமாகி செத்து கிடந்திருந்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *