கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2023
பார்வையிட்டோர்: 3,116 
 

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்புக்குரிய சுஜாதா,

வாடகை வீடு மிகவும் அசௌகர்யமாக இருப்பதால் சோத்த வீடு அவசியம் தேவையாக இருக்கிறதென்று நீ எழுதியிருக்கிறாய்.

எல்லோருக்குமே சொந்த வீடு அமைத்துக் கொள்வது சாத்தியமா? நூற்றுக்குப் பத்துப் பேருக்குக் கூட வீடு சொந்தமாக இருக்க முடியாது. ‘முட்டாள் வீட்டைக் கட்டுகிறான், புத்திசாலி குடித்தனம் இருக்கிறான்’ என்று சொல்வதுண்டு, வீட்டுக்குக் கொடுத்த வாடகை யெல்லாம் சேர்த்தால் ஒரு வீடு வாங்கலாமென்று கணக்கு போடுவதுண்டு. நாம் கொடுக்கும் வாடகை அவர்கள் போட்டிருக்கும் முதலீட்டிற்கு வட்டி, வரி, கொஞ்ச லாபம் இவைகள் தானென்பதையும் மறந்து விடக் கூடாது.

சொந்தமாக எவ்வளவு பார்த்து வீடு கட்டினாலுமே ஏதாவது வசதிக் குறைவு இருக்கும். வாடகை வீட்டில் எல்லா வசதியும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமே வில்லை.

என் சிநேகிதி அடிக்கடி வீட்டை மாற்றிக் கொண்டிருப்பாள். அதற்கு அவள் சொல்லும் காரணம் மிகவும் வேடிக்கையாக இருக்கும். பக்கத்து வீட்டில் நாள் முழுவதும் ரேடியோ வைத்தார்களென்றும், சமையல் அறையில் ஆணி அடிக்க முடியவில்லை என்றும் எதிர் வீட்டில் இருமல் நோயாளி என்றும் பல காரணங்களைச் சொல்லுவாள். இவைகளுக்கெல்லாம் கூட வீட்டை மாற்றியும் விடுவாள், புது வீட்டுக்குப் போய் ஒரு மாதம் வரையில் அதைப் பற்றிப் புகழ்ந்து கொண்டும் அதற்கு முன் இருந்த வீட்டை இகழ்ந்து கொண்டும் இருப்பாள். இரண்டாந்தடவை மாறும்போது குற்றம் சொல்லுவது மட்டுமல்ல. பழைய வீடே நன்றாக இருந்த தென்றும் சொல்ல ஆரம்பித்து விடுவாள். பாவம், அவள் கணவருக்கு ஆயுளில் பாதிநாள் வீடுதேடுவதிலேயே கழிந்து விடும்! இப்படி அடிக்கடி வீடு மாற்றுவதில் ஏற்படும் சிரமம், அவகாசம், பொருள் செலவு எல்லாவற்றையுமே தவிர்த்து விடலாமல்லவா?

தம் வீட்டுக்கு நாலு பேர்கள் வந்தால் ஆளுக்கு ஒன்று சொல்லி மனத்தைக் கலைப்பார்கள், ‘வாடகை அதிகம், வெளிச்சம் போதாது. காற்றே இல்லை.’ இப்படிச் சொல்பவர்களும் உண்டு. சிலர் நீங்கள் கொடுக்கும் வாடகைக்கு நன்றாகவே இருக்கிற தென்றும் சொல்வார்கள். பிறருடைய அபிப்பிராயத்துக் கெல்லாம் நம் மனத்தை குழப்பிக் கொள்வது மிகவும் தவறு. வாழ்க்கையில் நமக்குத் தேவையை யோசித்து நாமே சரியான முடிவுக்கு வருவது. அல்லது பெரியவர்களின் தகுதியான பழக்கத்தை அநுசரிப்பது இவைகள்தான் சரியான பாதை.

மேல் நாட்டாரிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டு. ஒரு மாதம் ஒரு வீட்டில் இருந்தால் கூட அதை அழகாக வைத்துக் கொள்வார்கள்.

இந்த வீட்டுச் சொந்தக்காரர்கள் மாதம் பிறந்தால் சுளை சுளையாய் வாடகையை வாங்கிக்கொண்டு போவதிலேயே கண்ணாயிருக்கிறார்கள், ஆனால் வீட்டில் கூடத்தில் கவரிலிருந்து காரை பெயர்ந்து விழுகிறது. ஆயிரம் தடவைகள் கால் கடுக்கப் போய்ச் சொல்லியும் கவனிக்கவில்லை என்று குடியிருப்பவர்கள் முணுமுணுப்பார்கள். ஆனால் வீட்டுச் சொந்தக்காரர்களோ, ‘இந்த வீட்டில் குடியிருப்பவர்கள் வீட்டைத் துவம்சம் செய்து விடுகிறார்கள். கண்ட கண்ட இடங்களி லெல்லாம் ஆணி யடித்தால் சுவர் நாசமாகாமல் என்ன செய்யும்?” என்று குறைப்பட்டுக் கொள்வார்கள்.

அநேகமாக வீட்டுச் சொந்தக்காரர்களுக்கும் வாடகைக்கு இருப்பவர்களுக்கும் சுமுகமான உறவு இருப்பதில்லை. நகரங்களில் சிவர் வீட்டை வாடகைக்கு விடுபவர்கள் ‘பகடி’ வாங்குவது போன்ற பழக்கங்கள் வைத்துக் கொண்டிருப்பதால் வீட்டுச் சொந்தக்காரர்களிடம் ஒரு கசப்பு ஏற்படுகிறது. நாளடைவில் இந்த வழக்கம் மாறினால் மக்கள் அந்தத் துறையிலும் பண்பட்டு வருகிறார்களென்று மகிழ்ச்சி அடையலாம்.

எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் வீட்டின் சொந்தக்கார அம்மாள், வாடகைக்கு இருக்கும் அம்மாள் இருவருக்கும் சண்டை வந்து விட்டது. இருவரும் எனக்குத் தெரிந்தவர்கள், தனித் தனியாகப் பார்த்தால் இருவருமே நல்லவர்கள் தான், வாடகைக்கு இருக்கும் அம்மாள் தூங்கும்போது குறட்டை விடுவது தவறு என்று வீட்டுக்கார அம்மாளுடைய கட்சி, வீட்டுக்கார அம்மாள் தன்னையே நாள் முழுவதும் கவனிப்பதாக வாடகைக்கார அம்மாளின் குற்றச்சாட்டு. சண்டை வரவும், கோபம் வரவும் தகுந்த காரணமே அவசியமில்லை. ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுப்பதில் நிலைமையை எவ்வளவோ அழகாக மாற்றி விடலாமல்லவா!

பெரும்பாலும் வீட்டில் பெண்கள் இருப்பதால் வசதிகளைப் பற்றிக் குற்றம், குறைகளை அவர்கள் தான் சொல்லுவார்கள். இக்கரைக்கு அக்கரை பச்சையென்று சஞ்சலப் படாமல் பெண்கள் வாடகை வீட்டிலும் சந்தோஷமாக இருப்பதற்கு முயற்சி செய்யலாமல்லவா?

இப்படிக்கு,
பூமாதேவி

– தேவியின் கடிதம், கல்கியில் 1956-இல் தொடங்கிய தொடர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *