‘அம்மா’ என்று கூப்பிட்டவாறு தயங்கியபடி வந்தான் ராஜா. இரும்பு வாணலியிலிருந்த வடை களைத் திருப்பியவாறே மகனை நோக்கினாள் ஜானகி அம்மாள். சதா அடுப்படியில் வேலை செய்து ஒடுங்கிய அவளின் உருவமும், விதவைக் கோலமும் ராஜாவின் மனத்தை வருத்தின.
”நாளைக்கு எங்க ஸ்கூல்ல கண்காட்சிக்கு அழைத்துக்கொண்டு போறாங்கம்மா! நானும் போகட்டுமா?”
”நமக்கு எதுக்குடா அதெல்லாம்..?”
”காசு கூட வேண்டாம்மா. நடந்துதாம்மா போகப்போறோம்.”
”சரி, சரி… நாளைக்குதானே?” அம்மா அடுப்பைக் கவனிக்க ஆரம்பித்தாள்.
கண்காட்சியில் ஏதாவது தின்பண்டம் வாங்கிக் கொள்வதாக இருந்தால், காசு கொண்டு வரச் சொல்லியிருந்தார் உபாத்தியாயர்.
ராஜாவுக்குத் தெரியும், அம்மா படும் கஷ்டங்கள். தினம் காலை, மாலை இரு நேரமும் இட்லி, வடை செய்து கூடையில் அடுக்கி வைத்துவிடுவாள். ராஜா தான் அவற்றை வாடிக்கைக்காரர்கள் வீட்டில் கொடுத்துக் காசு வாங்கி வருவான். மறுநாளைய வியாபாரத்துக்குச் சாமான்கள் வாங்கியது போக, பாக்கி காசில் இருவ ரும் காலத்தை ஓட்டி வந்தனர். அப்படி இருக்க, அம்மாவிடம் எப்படிக் காசு கேட் பான்? கண்காட்சிக்குச் செல்ல அனுமதி தந் ததே பெரிய காரியம்!
திடீரென்று ராஜா வுக்கு ஞாபகம் வந்தது. வாத்தியார் எல்லோ ரையும் சுத்தமான உடை உடுத்தி வரச் சொல்லியிருக்கிறாரே?
உடம்பிலிருந்த சட்டையைக் கழற்றி எடுத்துக்கொண்டு, தேய்ந்து போன சிறு சோப்புக் கட்டியுடன் குழாயடிக்கு ஓடினான் ராஜா.
இருபத்தைந்து ஒண்டுக் குடித்தனங் களுக்கு ஏக போக மான குழாயடி, பளிச்சென்று தேய்த்து வைத்த குடங்களும், புளி அப்பிய அண்டாக் களும், அழுக்குத் துணி சுமந்த வாளிகளும், அதனதன் உரிமையாளர்களுமாக கோலா கலமாகக் காட்சி அளித்தது. இந்த வைபவத் தில் கலந்துகொள்ள விரும்பாத ராஜா, தெருக் குழாயை நோக்கி ஓடினான்.
”அம்மா, போய் வருகிறேன். திரும்பி வர நேரமாகும். கவலைப்படாதே!”
”சரி, ஜாக்கிரதையாகப் போயிட்டு வா! இந்த நாலணாவை வைச்சுக்கோ. ஏதாவது வாங்கிச் சாப்பிடு.” – அம்மா இடுப்பிலிருந்து காசை எடுத்துக் கொடுத்தாள்.
ராஜாவுக்கு வயது பத்துதான். ஆனாலும், வீட்டுப் பொருளாதார நிலையை நன்கு உணர்வான். ‘நாலணா காசு நாளைய இட்லி வியாபாரத்தை எப்படிப் பாதிக்கும்’ என்பது அவனுக்குத் தெரியும்.
”காசு வேண்டாம்மா! நாலணாவுக்குத் தேங் காயும் பொட்டுக் கடலையும் வாங்கினால், நாளைக்கு இட்லிக்கு வியஞ்சனம் ஆகுமே!”
”போதும்டா, நூத்துக் கிழவன் மாதிரி பேசிக் கொண்டு…” – அம்மா அவன் நிஜார் பையில் காசைப் போட்டாள்.
அலமாரியிலிருந்த உடைசல் கண்ணாடி யில் அழகு பார்த்துக் கொண்டான் ராஜா.
”அம்மா, நான் இப்ப எப்படி இருக்கேன்?”
”ராஜா மாதிரி இருக்கேடா!” – ஜானகி பெருமூச்சு விட்டாள்.
”டேய், நாலு நாலு பேரா சேர்ந்து வரிசையா போங்கடா” – வாத்தியார் உத்தரவு கொடுத்தார்.
கண்காட்சி மைதா னம் வண்ண வண்ண ஒளி விளக்குகளால் திகழ்ந்தது. பையன்களுக் குப் பாட சம்பந்தமுள்ள சில பகுதிகளைக் காட் டியபின், எல்லோரையும் விளையாட்டுப் பகுதிக்கு அழைத்து வந்தார் வாத்தியார்.
”டேய், ரங்கராட்டினம் ஏறி சுத்தறவங்க எல்லோரும் சுத்துங்கடா!” – வாத்தியார் சற்று நிம்மதியாக உட்கார்ந்தார்.
”அணாவுக்கு ஆறு சுத்து சுத்தலாம்! வாங்க தம்பிமாரே, வாங்க!”
ராட்டினக்காரன் பாடிக்கொண்டு இருந் தான். ‘நான் குதிரை ஏறுவேன்’, ‘நான் யானை மேல்…’ என்று கூவியபடி எல்லோரும் ஓடினர். ராஜாவுக்கும் ஏறிச் சுற்ற ஆசைதான். ராட்டினத்தில் சுற்றினால் ஏரோப்ளேனில் பறக்கிற மாதிரி இருக்கும். ஆனால் அதற்கு ஒரு அணா செலவாகி விடுமே?
சேச்சே, அம்மா பாவம்! இந்த நாலு அணாவையும் அம்மாவிடம் அப்படியே கொடுத்துவிட வேண்டும்.
”ராஜா நீ சுற்றலையடா?” – வாத்தியார் கேட்டார்.
”ராட்டினத்திலே ஏறினாலே எனக்குத் தலை சுத்தி, வாந்தி வரும் சார்.”
எவ்வளவு சாமர்த்தியமாகப் பதில் சொல்லிவிட்டோம் என்று தன்னைத் தானே மெச்சிக்கொண் டான் ராஜா.
”டேய்… ஐஸ்கிரீம் டோய்!” – எல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு ஓடினர்.
எப்போதும் ஸ்கூல் வாசலில் நிற்குமே, அதே சிவப்பு வண்டி! ராஜா அந்த வண்டியைப் பார்த் திருக்கிறானே தவிர, ஐஸ்கிரீமைப் பார்த்ததோ, சாப்பிட்டதோ கிடை யாது.
அவன்தான் ஸ்கூல் விட்டதும் ஓடி விடுவானே, வீட்டுக்கு! பள்ளி இடை நேரத்தில், அம்மா தயா ரித்த இட்லி, வடை, மற்றும் சில சிற்றுண்டிகளை வாடிக்கைக் காரர்களுக்குக் கொண்டு போய்க் கொடுக்கவேண்டுமே!
இதோ… குமார் அதை வாங்கி, மேலே சுற்றியுள்ள பேப்பரைப் பிரித்து, வெள்ளை ஐஸ்கிரீமை நாவால் ருசிக்கிறான். அது கரைந்து அவன் வாயெல்லாம் பால் குளமாகிறது.
ராஜா தன் வாயில் ஊறிய எச்சிலை விழுங்கிக்கொண்டான்.
”டேய், எப்படிடா இருக்கு?”
”நீயும் வாங்கி சாப்பிடேண்டா! ஜில்லுனு ஜோரா இருக்கு. ரெண் டணாதான்!”
இரண்டணாவா! ராஜாவுக்கு ‘திக்’கென்றது. குமார் பூராவையும் வழித்துச் சாப்பிட்டுவிட்டு, அந்தக் காகிதத்தையும் அல்லவா மென்று துப்புகிறான்?
”நீ வாங்கலையா ராஜா? உங்க அம்மாதான் காசு கொடுத்திருங் காங்களே?”
தான் பெற்ற சுவையை, தன் நண்பனும் பெறவேண்டும் என்பது குமாரின் ஆசை.
ஆனால் ராஜா சமாளித்துக் கொண்டு விட்டான்.
”வேண்டாம்டா, ஐஸ்கிரீம் சாப்பிட்டால் எனக்குத் தொண்டை கட்டிக்கும்.”
எல்லோரும் விளையாட்டு ரயிலில் ஏறிச் சுற்றினார்கள். ராஜா மட்டும் ஏறவில்லை.
எதற்கும் காசு என்றால், என்னதான் செய்வான்?
”சரி, நேரமாகிவிட்டது! எல்லோரும் கிளம்புங்கள். கடைகளை வேடிக்கை பார்த்தவாறே வீடு திரும்புவோம்” என்றார் வாத்தியார்.
அப்பப்பா! எத்தனை வித மான சாமான்கள், எத்தனை ரக விளையாட்டுக் கருவிகள்! ஒவ்வொன்றையும் திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டே வந்தான் ராஜா.
”இந்த கடிகாரம் நன்னா இருக்குடா. அசல் கடிகாரம் கெட்டது!” – மாதுதான் கத்தினான்.
கடிகாரம் நன்றாகத்தான் இருந்தது. விளையாட்டு கடிகாரம் மாதிரி முட்களும் ஒரே இடத்தில் இருக்காமல் சுற்ற முடிந்தது. விலை நாலணாதான்.
ராஜாவுக்கு அதை வாங்க வேண்டு மென்று ஆசையாக இருந்தது.
மாதுதான் முதலில் கடிகாரம் வாங்கினான். அவனைத் தொடர்ந்து ரவி, குமார், கிட்டு, ராமு எல்லோரும் வாங்கினார்கள்.
”ராஜா நீ வாங்கலையாடா?”
”எங்க அம்மா எனக்கு நிஜ கடிகாரமே வாங்கித் தருவாடா!”
”அவங்க அம்மா இட்லி வியா பாரம் செய்யறாங்க. நிஜ கடிகாரம் எப்படி வாங்கிக் கொடுக்க முடியும்? கதை அளக்கிறான் டோய்!” – இது மாது.
தினம் மாதுவின் வீட்டுக்கு இட்லி, வடை கொண்டு கொடுப்பான் ராஜா. இல்லாவிட்டால் மாதுவுக்கு எப்படித் தெரியும்?
ராஜாவுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது.
”தினம் நான் எப்போ இட்லி வடை கொண்டு வருவேன்னு காத்துக்கொண்டு இருப்பாயே? எங்கம்மா செய்து தராவிட் டால் நீ பட்டினிதானே கிடக்கணும்?”
ராஜாவின் இந்தச் சவாலுக்கு மாது வால் பதில் சொல்ல முடியவில்லை.
எல்லோரும் கண்காட்சி மைதானத்தை விட்டு வெளியே வந்தனர்.
தெருவெல்லாம் ஒரே ஜன நெரிசல். நடைபாதை பூராவும் கடைகள்.
”எது எடுத்தாலும் நான்கணா!” – ஒரு கடைக்காரன் கூவிக்கொண்டிருந்தான். ராஜா அந்தக் கடையின் முன் நின்றுவிட் டான். அவன் கவனத்தைக் கவர்ந்தது ஒரு பொருள். நிஜார் பையிலிருந்த நாலணாவை எடுத்துக் கடைக்காரனிடம் கொடுத்துவிட்டு, அதை வாங்கிக்கொண்டு திரும்பினான் ராஜா. அவன் மனம் சந்தோஷத்தில் துள்ளியது.
‘அம்மோவ்’ என்று கையைப் பின் னால் மறைத்தபடி வந்து நின்றான் ராஜா.
”முகமெல்லாம் ஏன் வாடி இருக்கு? ஒன்றுமே சாப்பிடவில்லையா நீ?”
”அம்மா, உனக்காக ஒரு சாமான் வாங்கி வந்தி ருக்கேன். என்னவென்று சொல், பார்க்கலாம்” என்றான் ராஜா.
”எனக்கா? என்னடா அது?”
”இதோ, இதுதான்” – அரிசட்டுவத்தை எடுத்து அம்மா முன் நீட்டினான் ராஜா.
”இதை எதுக்கு வாங்கி வந்தே, நீ ஒன்றும் வாங்கித் தின்னாமல்?”
”இல்லேம்மா, நீ வடையை எண்ணெயி லேர்ந்து அரித்து எடுக்கிற சட்டுவக்காம்பு உடைஞ்சு போயிட்டது இல்லையா? அந்த உடைசல் கரண்டி யாலே நீ எத்தனை தரம் கையை சுட்டுக்கொண்டு இருக்கே! உன் கையெல்லாம் எப்படிக் கொப்பளித்து போயிடுத்து! அதுக்காகத் தாம்மா வாங்கினேன்.” – தொண்டை கமறச் சொன் னான் ராஜா.
அடடே! அம்மாவின் கண்களில் ஏன் நீர் வழி கிறது? அம்மா தன்னைக் கட்டிக்கொண்டு, இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிடுகிறாளே, ஏன்?
ராஜா குழம்பினான்.
– 26th நவம்பர் 1961
எச்செல்லேன்ட் ரெண்டெரிங் ஒப் எ வெரி பொஇக்னண்ட் ஸ்டோரி…
ஹவே யு சீன அன் அட. ஒப் ஹவேல்ல்ஸ், வ்தேரே தி லிட்டில் சன் பஷிஒன்ச் எ தாங் அவுட் ஒப் எ பீஸ் ஒப் விரே தி ரோஸ்ட் தி ரோடி ? தி ஸ்டோரி போர்டு வ்ரிட்டர் முச்ட் ஹவெ ரேஅது திஸ் ஸ்டோரி!!!
தாயே ..நீ என் தெய்வம்..
மன்னித்து அருள்வயாக..
நான் ராஜா மாதிரி நடந்துகொள்ள வில்லை.
பாசத்துக்கு எடுத்துக்காட்டு . இப்பிடிபட்ட கதைகள் படித்து நாள் அச்சு. தொண்டை அடைத்து கொள்கிறது
ராஜாவின் அம்மா கண்களில் மட்டும் அல்ல…படிப்பவர்கள் கண்ணிலும் நீர் ததும்பு வைக்கும் கதை இது.