அவள் – நான் – அவர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 12,920 
 
 

சற்று தூரத்தில் துர்க்காபாய் மூச்சிரைக்க நடந்து வருவது தெரிந்தது. ஏழாம் நம்பர் குழந்தைகளுக்கான வார்டின் ஆயம்மா அவள். வெள்ளை சேலையில் கைகளில் கேஸ் கட்டுகளுடன் கனத்த உடலில் ஊளைசதையும், தளர்ந்த மார்பகங்களும் குலுங்க கையைத் தூக்கி ஆட்டியவண்ணம் என்னை நோக்கித்தான் வந்துக் கொண்டிருக்கிறாள்.

‘ஐயா ஒங்கள பார்க்கத்தான் லொங்கு லொங்குனு வர்றேன்’ நெற்றியில் விபூதி கீற்று, சின்னதாக மஞ்சள் பொட்டு, வியர்வை துளிகள்.

‘ஏம்மா?’ என்றேன்.

‘நம்ம வார்டுக்கு ஒரு கேஸ் வந்திருக்கு, அந்த சிடுமூஞ்சி செரினா, பாவம் அந்த பச்ச புள்ளய வார்டுல சேத்துக்க மாட்டேங்கிறா.. நீங்க வ்ந்து சொல்லுங்க… புள்ளய பார்க்க கன்றாவியா இருக்கு’ குமுறலுடன் பேசினாள்.

‘ஏன் மாட்டெங்கிறா’?

‘அது நம்ம புள்ளங்க ஐயா…. தமிள புள்ள பாருங்க..’

‘ச்சே, அதனால இருக்காது.. என்ன கேசு அது, அதச் சொல்லுங்க முதல்ல’

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஏதோ இரகசியம் சொல்வதுபோல் என் காதருகனில் வந்து தாழ்ந்த குரலில், ‘இங்க வச்சு சொல்லக் கூடாது… வார்டுக்கு வாங்க சொல்றேன்’ ஏதோவொரு பாக்கு வாசனையுடன் வந்தன வார்த்தைகள். கே.எல். பொதுமருத்துவமனை நான்காவது மாடி வராந்தா இரகசியம் பேசுகிற இடமில்லையே.

‘சரி நீங்க போங்க, நியூரோவில் ஒரு கேசு இருக்கு, பார்த்துட்டு வரேன்’ அனுப்பிவிட்டு நடந்தேன்.

துர்க்காபாய் இந்திய பெற்றோர்களால் எடுத்து வளர்க்கப்பட்ட சீனப் பெண். இல்லை தவறுதலாய் சீனர்களுக்குப் பிறந்துவிட்ட தமிழ்ப் பெண். பேச்சுக்கு பேச்சு ‘நாம தமிளவுங்க பாருங்க’ என்பாள். அந்தக் காலங்களில் ‘சிங்காரவேலனே தேவா’வை சுருதி சேராமல் பாடி பரிசு பெற்றிருக்கிறாள். சமீப காலங்களில் தொலைக்காட்சிப் பாட்டு போட்டிகளுக்கு நீதிபதியாகவும் இருந்திருக்கின்றாள். அன்பான மனுஷி. வாழ்வில் பல கஷ்டங்களைக் கடந்து வந்தவள்தான். இருந்தாலும் எதிலும் ஒரு உற்சாகத்தோடும் உண்மையோடும் இருப்பாள்.

டாக்டர் செரினா லிம் என்னைப் பார்த்தவுடனேயே முகத்தை இறுக்கிக் கொண்டாள். எதிர் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்துக் கொண்டேன்.

‘நீங்க எதற்காக வந்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும் டாக்டர் சிவா.. தயவு செய்து என்னை வற்புறுத்தாதீர்கள்’ தலையை நிமிர்த்தாமல் எழுதிக் கொண்டேப் பேசினாள்.

‘ரெண்டு ஹவுஸ்மேன் எமர்ஜென்சி லீவு, காலையிலிருந்து வயிற்றுபோக்கு, டிங்கி காய்ச்சல், நிமோனியா என்று வந்த வண்ணம் இருக்கு. வேண்டுமானால் அந்தப் பெண்ணை உங்க வார்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்’ கடுகடுத்தாள். ‘இதோ இதுதான் அந்தக் கேஸ்’ என்று மேஜையில் படபடத்துக் கொண்டிருந்த தாட்களை என் முன் போட்டாள்.

டாக்டர் செரினா குழந்தை நோய்களுக்கான நிபுணர். லண்டனில் படித்து பயிற்சிப் பெற்று, வெள்ளைக்கார காதலன் கைவிட்டதால் விரக்தியின் விளிம்பில் நிற்பவள். கடுமையான உழைப்பாளி. இரவு பகலாக உழைப்பாள். அதனால்தானோ என்னவோ அவளுக்கு ஈடாக வேலை செய்யாத தாதிகள், இளம் பயிற்சி மருத்துவர்கள், உதவி மருத்துவர்கள் என‌ சதா எரிந்து விழுந்து கடித்துக் கொண்டிருப்பார்.

‘மக்குத்தனமா சிந்தித்து மந்தமா வேலை செய்ற இந்த நாட்டுகார ஜனங்களோடு எத்தனைக் காலத்திற்கு குப்பைக் கொட்டுவது. பிளட் பிரசர் வந்து சாக வேண்டியதுதான். நான் யூ.கேவுக்கே திரும்ப போயிறேன்’ என்று சலித்துக் கொள்வாள். ‘அப்படியெல்லாம் சொல்லாத செரினா.. இந்த நாடு இதன் மக்களும், இதோ பார் இந்த அப்பாவி குழந்தைகளும் உன்னை நம்பித்தான் உயிர் வாழ்றாங்க’ இப்படி சொல்லும்போது என் அதரத்தில் கிண்டலான சிரிப்பு இருந்திருக்க வேண்டும்.

‘கிண்டல் வேணாம் டாக்டர் சிவா.. எனக்கு ஒன்ன மாதிரி ஒரு இளிச்சவாயனைப் பாரு இங்கேயே இருக்கிறேன்’ என்று கூறியவாறே கேஸ் ஸீட்டைப் பிரித்து படித்தாள்.

பெயர் : தினேஸ்வரி முனியாண்டி
வயது : பன்னிரண்டு

‘இன்று காலையில்தான் சமூக நல அதிகாரி இந்த வார்டில் அவளை அனுமதிக்க வேண்டுமென்று என் அனுமதி பெறாமல் விட்டு விட்டு சென்றுவிட்டானாம். எங்கேயோ துங்கு அப்துல் ரஹ்மான் சாலையில் குளோப் சில்க் ஸ்டோர் அருகில் அழுதுக் கொண்டிருந்தாளாம். போலிஸ் வெல்ஃபேருக்கு கொண்டுப் போய், அவுங்க இங்க கொண்டு வந்து விட்டுருக்காங்க….. பொய்யா சொல்றேன் போய் பாருங்க, வார்டு நிறைஞ்சு வழியுது. காலையிலிருந்து நிமோனியா, டையரியா, டிங்கி காய்ச்சல்னு …. கீழே அட்மிஷன் ரூமில எவனோ கிறுக்கன், கோட்டாவில காசு கொடுத்து மெடிக்கல் சீட் வாங்கி படிச்சவன் போலிருக்கு, வர்ற கேசையெல்லாம் மேலே இங்கே அனுப்பிக்கிட்டே இருக்கான்’ கடுகடுப்பாகத் திட்டிக் கொண்டே கேஸ் நோட்டைப் பார்த்தவள் எதையோ பார்த்து திடுக்கிட்டாள்.

‘மை காட், சிவா லுக் திஸ் இந்த சின்னப் பொண்ணு கர்ப்பமா இருக்காளாம், ஹௌ தெ ஹெல்’ என்று வீரிட்டாள். பொறுமை இழந்து போய் அவள் படித்துக் கொண்டிருந்த தாட்களை என் பக்கமாக திருப்பிப் படித்தேன். அவசரப் பிரிவு மருத்துவரின் கிறுக்கலான எழுத்தில் வயிற்று வலியில் அழுதுக் கொண்டிருந்த தினேஸ்வரியின் வயிற்று பகுதியில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்ததில் பதினான்கு வார சிசு கருப்பையில், குழந்தைப் பிரிவு வார்டில் சேர்க்கவும் என்று எழுதப்பட்டிருந்தது.

ஒரு கணம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். அடர்த்தியான நிசப்தம் கவிழ்ந்தது. மேஜையின் விரிப்பும் தாட்களும் ஜன்னலோர காற்றில் படபடத்தன. நெஞ்சில் ஏதோ கனமாக இறங்கியது. ‘அடக் கடவுளே, எப்படி இது நடந்திருக்கும்?’ நம்ப மனம் மறுத்தது.

‘இந்த பெண்ணை நாம்தான் கவனிக்கனும் சிவா, என்ன கொடுமையிது’ டாக்டர் செரினாவின் மனம் இளகி உருகி ஓடிக்கொண்டிருந்தது.

0 0 0

குழந்தைகளுக்கான வார்டின் மூலையறையில் விளையாட்டு சாமான்கள் சிதறிக் கிடந்தன. அங்கே மலாய்க்கார பெண்ணொருத்தி தன் குழந்தைக்கு விளையாட்டு சாமான்கள் கொடுத்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். தலைமுடிகளை இழந்து அந்த குழந்தை நோஞ்சானாக இருந்தது. வலதுக் கையில் கட்டுப் போட்டிருந்தது. நடுவில் இண்டுவைலிங் கெத்திட்டர் எனப்படும் ரத்த நாளத்தில் மருந்து ஏத்துவதற்காக செருகப்பட்டிருந்த பிளாஸ்டிக் குழாயின் மறுமுனை நீட்டிக் கொண்டிருந்தது. வெளிறி போயிருந்த முகத்தில் கொஞ்சம் சிரிப்பு ஒட்டிக் கொண்டிருந்தது.

அங்கேதான் தினேஸ்வரியும் தனியாக விளையாட்டு சாமான்களை வெறித்துப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தாள். என்னை அங்கு அழைத்துச் செல்லும் துர்க்காபாய்க்கு கன்னமும் கண்களும் சிவந்திருந்தது. ‘என்ன அநியாயம் இது… பச்ச புள்ளய இப்டி பண்ணின பாவிய சும்மா விட கூடாது டாக்டர், அவளுக்கு யார் பண்ணினதுனு கூட சொல்லத் தெரியல டாக்டர்’ குமுறினாள்.

தினேஸ்வரியை என்னருகில் அழைத்து நாற்காலியில் உட்காரச் செய்தாள்.

‘தினா அம்மா, இவரு நம்ம டொக்டரு, இவருகிட்ட தகிரியம்மா எல்லாத்தையும் சொல்லும்மா’ அந்த ‘நம்ம’ என்பதற்கு அழுத்தம் கொடுத்தாள்.

துக்கமும் பயமும் கலந்த முகத்தோடு நின்றிருந்தாள் தினா. இமைகள் வீங்கியிருந்தன. அவளைப் பார்க்க மழையில் நனைந்த பூ மாதிரி இருந்தது. பூத்துவிட்டிருந்தாள் என்பதற்கான அடையாளமின்றி குழந்தை முகத்தோடு இருந்தாள். ‘தினேஸ்வரி எப்படிம்மா இருக்கே’ என்றேன். என் குரலின் தொனியில் அவளுக்கு போதிய நம்பிக்கை ஏற்படுத்த‌க் கூடிய குழைவையும் நெகிழ்வையும் வரவழைத்துக் கொண்டேன். தலையை மட்டும் மெல்ல அசைத்து நாற்காலியை கொஞ்சம் முன்னகர்த்தி கொண்டாள். லேசாக புன்னகைத்தாள். விரல்களைக் கோர்த்துக் கொண்டு இரு தொடைகளுக்கும் நடுவில் வைத்துக் கொண்டாள்.

‘சொல்லும்மா தினா, என்ன நடந்திச்சினு சொல்லு, உனக்கு எல்லா உதவியும் டொக்டர் செய்வாரு, தகிரியமா சொல்லு’ துர்க்காபாய் தினாவின் தலையைக் கோதிவிட்டாள். தினா அழவில்லை. அவள் உடல் மட்டும் விசும்பிக் கொண்டிருந்தது. அறை முழுதும் அவளது சோகம் புகைப் போல வியாபித்திருந்தது.

மெந்தாகப் பக்கத்தில் ஒரு சிற்றூர், பள்ளிக்கூடம் போனதில்லை.

‘ஏன் பள்ளிக்கூடம் போகலம்மா?’

‘பள்ளிக்கூடத்தில பதிவு செய்ய மாட்டேனுட்டாங்க’

‘ஏன்’

‘பொறந்த சூரா இல்ல’

‘ஏனில்ல?’

‘அப்ப அப்பா இல்லையாம், அதனால அம்மாவால எடுக்க முடியல’

‘ஏன் அப்பா எங்கே போனாரு?’

பதில் ஏதுமில்லை. தலையை கவிழ்த்துக் கொண்டாள்.

‘இப்ப அப்பா இருக்காரு, ஆனா வேற அப்பா’ மெல்ல பதில் வந்தது.

‘பள்ளிக்கூடம் போகாம என்ன செஞ்சிகிட்டிருந்த ?’

‘தம்பிய பாத்துக்குவேன், சாப்பாட்டு கடையில மேச தொடப்பேன், மங்கு கழுவுவேன், வேலையெல்லாம் செய்வேன், சாப்பாடு கொடுப்பாங்க, வீட்டுக்கு கொண்டு வந்து அம்மாகிட்ட குடுப்பேன், அப்பா எப்பனாச்சும் வரும், அம்மாவ என்னையும் அடிக்கும், காசு கேக்கும்,’ மேலே பேச முடியாமல் திணறினாள், விசும்பினாள்.

‘கோலாலும்பூருக்கு எப்படி வந்தே?’

‘சாப்பாடுக் கடையில் ஒரு அண்ண இருக்காரு, அவங்கதான் சம்பளம் குடுக்கிறவுங்க, என்ன அம்மா கூட்டிட்டு வர சொல்லிச்சுனு சொல்லி பஸ்ல கூட்டிட்டு வந்தாங்க, ஒரு வீட்ல தங்க வச்சாங்க, ரெண்டு நாளாச்சு அம்மாவ காணோம், வயித்த வலிச்சிச்சு, கிளினிக் போகணும்னு அவுங்க இல்லாத நேரம்பாத்து வெளியே வந்தேன், திரும்ப போகத் தெரியல, அழுதுகிட்டு நின்னேன், போலிஸ் கூட்டிட்டு வந்துட்டாங்க’

‘சரி தினா, அழாம சொல்லு , உன்ன கெடுத்தது யாரு?’

அவள் பதில் சொல்லவில்லை. தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். உடல் குலுங்கியது.

அவள் தாடையைத் தொட்டுத் தூக்கி ‘அழாதம்மா, சும்மா சொல்லு’ துர்க்காபாய் மீண்டும் கேட்டாள். அழுகை அதிகமாகியது.

‘வேணாம் துர்க்காபாய், இதுக்குமேல வேண்டாம்’ என்று தடுத்து நிறுத்தினேன்.

0 0 0

‘நாந்தாங்க தினேஸ்வரியோட அம்மா’

எலும்பும்தோலுமான பெண். இடுப்பில் ஒரு குழந்தை. தீனமான குரலில் மலாய் மொழியில் பேசினாள். அவளிடமிருந்து கேள்விகளைக் கேட்டு பதிலைப் பதிவு செய்துக் கொண்டிருந்தாள் திருமதி ரோசி சியா. சமூக நல இலாகாவிலிருந்து இந்த வழக்கை விசாரிக்க வந்தவர்.

‘எனக்கு டி.பி வியாதிங்க, தினேஸ்வரியோட அப்பா ஜெயிலிலு இருக்காரு, ஆயுள் தண்டனை கைதி. இந்தப் பையன் இப்ப இருப்பருக்கு பொறந்தது. இவரும் ஃபிட் அடிக்கிறவரு. போதை மருந்து விக்கிறாரு. இவரு பாஸு இவர வெளியூருக்கு அனுப்புவாரு. எவ்ளோ சொன்னாலும் கேட்க மாட்டாரு. தினாவைப் பிடிக்காது. வந்தா அடிப்பாரு. சிகரெட்ல சுடுவாரு. அதனாலேயே இத ரெஸ்டோரன்ல வேலைக்கு அனுப்புச்சேன். இது பெரிய மனிஷியானது கூட எனக்கு சத்தியமா தெரியாது. அந்த பாவிங்க இப்படி பண்ணுவாங்கனு எனக்கு தெரியாம போச்சே’ கண்ணீர் விட்டாள்.

எப்படியாவது வாழ்ந்தாக வேண்டும் என்ற நிர்பந்தம் பற்றி, இப்படியெல்லாம் ஜீவிக்க நேர்ந்த அவலம் பற்றி, நோயுற்று அவதியுறும் தனது வாழ்வைப் பற்றியெல்லாம் பேசினாள். பாதுகாப்பு கருதியே இந்த மனிதனைச் சேர்த்துக் கொண்டதாகவும் அதன் காரணமாகவே அவன் இழைக்கிற கொடுமைகளையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தைப் பற்றி சொன்னாள். முகத்தைத் திருப்பி எல்லோரையும் பார்த்துக் கோரிக்கை வைப்பது போல் ‘தயவு செய்து தினாவை இங்கேயே வச்சிகிருங்க, அங்கே அனுப்பினா அந்த பாவி அவளையும் என்னையும் சேர்த்து கொன்னு போடுவான்’ என்றாள். விழிகளில் பீதி படர்ந்திருந்தது.

‘குழந்தை பிறக்கும் வரை தினா இங்கேதான் இருப்பாள்’ என்று ரோசி சியா சொன்னது அவளுக்கு ஆறுதலாக இருந்தது. ‘பிள்ள பொறந்த பிறகு’ கேட்டுவிட்டு எல்லோரையும் பார்த்தாள். நாங்கள் எல்லோரும் எங்கெங்கோ பார்த்துக் கொண்டிருந்தோம். ரோசி சியா மட்டும் எழுந்து தனது ஆடையைச் சரி செய்துக் கொண்டு ‘அதைப் பற்றி பிறகு பார்ப்போம்’ என்று சொல்லி வைத்தாள். எல்லோருடைய மனதிலும் ஒரு முடிச்சி விழுந்திருந்தது.

போகும் முன்பாக என்னிடம் வந்து ‘இந்த மாதிரியான கேசுகள் நிறையவே தினந்தோறும் பார்க்கிறேன் டாக்டர். கிட்டதட்ட எல்லோரும் ‘இன்டியன்ஸ்’தான். சீரியஸா… நீ இதைக் குறித்து ஏதாவது செய்தாகணும்’ என்றாள் ரோசி சியா.

0 0 0

அடுத்த சில தினங்களில் தமிழ் நாளிதழ்களில் பன்னிரண்டு வயது இந்திய பெண் குழந்தை பாலியல் வண்புணர்ச்சியால் கற்பமுற்று மருத்துவமனையில் இருப்பது குறித்த செய்திகள் வந்த வண்ணமிருந்தன. அரசியல் பிரமுகர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகளிர் பிரிவு, இளைஞர் பிரிவு தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலரும் தினேஸ்வரியை வந்து பார்த்து தங்கள் சமூக அக்கறையை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர்.

டாக்டர் செரினா லிம் ‘இது என்ன மியூசியம்மா, அந்த அப்பாவி குழந்தை என்ன காட்சி பொருளா? என்ன கூத்தடிகிறாங்க இவங்க, அந்தக் குழந்தையின் மனம் பாதிக்கப்படாதா?’ என்று ஆத்திரம் தீர நல்ல வேளையாக சீன மொழியில் திட்டி தீர்த்தாள்.

அரசியல் பிரிவின் மகளிர் பிரிவு தலைவி தன் தோழிகள் சூழ மிகையான ஒப்பனைகளுடன் வந்திருந்தார். தினாவை அருகிலழைத்து தலையை வாஞ்சையோடு தடவிக் கொடுத்தார். கொண்டு வந்திருந்த பழக்கூடையை அவளுக்குத் தருவதுபோல் கொடுக்க கூடவே அழைத்து வந்திருந்த புகைப்படக்காரர் மளமளவென்று புகைப்படங்கள் எடுத்துத் தள்ளினார். நிருபர்கள் சூழ பேச ஆரம்பித்தார். தனித்து வாழும் தாய்மார்கள் இந்த மாதிரியான அபலைக் குழந்தைகளுக்கு மகளிர் விழிப்புணர்வு கருத்தரங்கு, மணப்பெண் அலங்காரப் பயிற்சி பட்டறைகள் நாடு தழுவிய நிலையில் நடத்தி வருவதையும், இந்த ஆண்டுக்கான தீபாவளி சேலை ராணி போட்டியைச் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாகக் கூறினாள்.

அங்கு நின்றிருந்த பயிற்சித் தாதிகளில் தமிழ்ப் பெண்ணொருத்தி ‘மேடம் நீங்க கட்டியிருக்கும் இந்த பட்டு சேலையும் ரொம்ப நல்லாயிருக்கு’ என்று வியக்க ‘இந்த டிசைன் தலைவரா பார்த்து தேர்வு செய்தது’ என்றாள். இதற்காகவே தானும் தலைவரும் சென்னை சென்று பிரபல சேலைக் கடையில் மகளிர் அணியினருக்காக ஆர்டர் கொடுத்தது தொட‌ங்கி சேலை பார்டரில் கலையழகோடு அமைந்துவிட்ட கட்சி சின்னம் பற்றியெல்லாம் பெருமையாக கூறினாள்.

தினாவிற்கு குழந்தை பிறந்தவுடன் அவளை எங்கே அனுப்ப போவதாக ஆங்கில பத்திரிக்கை நிருபர் கேட்டதற்கு தலைவி, இதோ நமது சமூக வியூக அறவாரிய தலைவர், தத்துவ பேராசிரியரைக் கேளுங்கள் என்று சொல்லிவிட்டு தோளில் கிடந்த‌ முந்தானையைச் சரி செய்துக் கொண்டாள்.

வெண்தாடியை நீவிவிட்டு கொண்டே தலைவர் ‘இந்த மாதிரியான சமூக சிக்கல்கள் குறித்து நான் நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதியுள்ளேன். கட்சியின் தலைமைத்துவம் இது குறித்து அமைச்சரைவையில் பேசி முடிவெடுக்கும்’ என்று கூறி கோர்ட் பையில் இருக்கும் நாட்குறிப்பு புத்தகத்தில் பதிந்து கொண்டார்.

பத்திரிக்கைகளில் பல சமுக தலைவர்கள் தங்கள் புகைப்படங்களோடு கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர். ஒரு சமயக் குழுவினர் பிறக்கப்போகும் தினாவின் குழந்தைக்கு இந்துப் பெயராக இருக்கும்படியாக உறுதி செய்துக் கொள்ள வேண்டும் என எச்சரித்தது.

ஞாயிறு பதிப்பில் தினாவைப் பற்றி பொருத்தமற்ற வார்த்தைகளுடன் கூடிய இலக்கண சுத்தமாக மரபுக்கவிதைகளும், உணர்ச்சி பொங்க ஒற்றுப் பிழைகளுடன் புதுக் கவிதைகளும் எழுதிக் குவிக்கப்பட்டன.

ஊடங்களில் இந்தப் பரபரப்பு அடங்க சில நாட்களாயிற்று. தமிழ் நாளிதழ்களில் வரும் தினா பற்றிய செய்திகளை மொழிப்பெயர்த்து துர்க்காபாய் மற்ற ஊழியர்களுக்கு வாசித்துக் காட்டுவாள். பிறகு எழுந்து சென்று வெற்றிலை எச்சிலை சப்தமாகவும் கோபத்துடனும் காரி உமிழ்வாள்.

நாளடைவில் தினாவிற்கு இந்த‌ ஆஸ்பத்திரி வாழ்க்கை மிகவும் பிடித்துப் போய்விட்டது. அவள் எல்லோருடைய பிரியத்துகுரியவ‌ளானாள். ஊசிக்குப் பயந்து அழும் குழந்தைகளுக்கு ஆறுதல் சொல்வாள். கழிவறைக்குக் செல்லும் தாய்க்குப் பதிலாக குளுகோஸ் ஏற்றப்படும் குழந்தைகளின் கைகள் அசையாவண்ணம் பிடித்துக் கொண்டு கட்டிலருகில் காத்திருப்பாள். செரினா லிம் மேஜையில் ஒவ்வொரு காலையிலும் அந்தக் குடுவையில் பூக்களைப் பறித்து வந்து சொருகி வைப்பாள். துர்க்காபாய் சுமந்து செல்லும் எக்ஸ்ரே கட்டுகளைப் பகிர்ந்து கொண்டுத் தூக்கிச் செல்வாள். தாதியர்களுடன் மருந்து ட்ராலியை உடன் தள்ளிச் செல்வாள். ஆஸ்பத்திரியின் ஒரு அங்கமானாள்.

முதல் சில மாதங்கள் அவளை வந்துப் பார்த்துச் சென்ற தாய், அதற்கு பின் வரவேயில்லை. அவளைத் தொடர்புக் கொள்ள முடியவில்லை என்றும், அவள் அந்த ஊரில் இல்லை என கூறப்பட்டபோது, தினாவின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளையும் பார்க்க முடியவில்லை.

‘ரொம்ப நெஞ்சழுத்தக்காரி’ அவள் உடைந்து அழாததால் துர்க்காபாய் இப்படிக் கூறினாள். தினாவின் வயிறு தெரிய ஆரம்பித்திருந்தது. கன்னங்கள் சிவந்து பழுத்திருந்தது. ஒரு சிறுப்பிள்ளையின் உடலில் தாய்மையின் சாயல்களைப் பார்க்க விநோதமாக இருந்தது. இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு ஆயாசமாக அவள் நிற்பது பரிதாபமாக இருந்தது. தாதியர்களும் அங்குள்ள நோயாளிகளின் பெற்றோர்களும் அவளைக் குறித்து பேசுவ‌தும் சிரிப்பதும் அவளுக்கு மட்டுமல்ல துர்க்காபாய்க்கும் எனக்கும் கூட சங்கடமாக இருந்தது. அவளைப் பிரசவ வார்டுக்கு மாற்றினோம்.

அவளை அங்கு பார்க்கும்போதெல்லாம் அவளது கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் திணறினேன். ‘என்ன எங்க அனுப்புவாங்க, ஜெயிலுக்கா?’.

‘ச்சே, ச்சே, நீ எந்தத் தப்பும் பண்ணலையே, ஒன்ன ஒரு ஹோமுக்குதான் அனுப்புவாங்க, நான் ஏற்பாடு பண்றேன்’ ஆறுதலுக்காக மட்டும் சொல்லவில்லை, பல இடங்களை விசாரித்தும் பார்த்தேன். கூடவே கைக்குழந்தை இருப்பதால் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். எனக்கு கூலிமிற்கு மாற்றல் வந்தது. தினாவின் முகத்தைப் பார்க்கத் திராணியற்று துர்க்காபாயிடம் கொஞ்சம் பணம் கொடுத்துப் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டுக் கூலிம் சென்றேன். அவ்வப்போது துர்க்காபாயிடம் தொலைப்பேசியில் தினாவை நலம் விசாரித்துக் கொள்வேன்.

‘நல்லா இருக்கா, ரத்தம் கொறவா இருக்குதுனு, ரெண்டு போத்தல் ஏத்திருக்காங்க, நீங்க கேட்டதா சொல்றேன்’.

‘புள்ள பொறந்திருச்சி டாக்டர், உங்க ஃபிரண்ட் அவருதான், பேரு மறந்திருச்சி, ஆங்.. டாக்டர் தணிகாசலந்தான் பார்த்தாரு, நல்லா இருக்கா, பொம்பள பிள்ளதான், தினா நல்லா இருக்கா, புள்ள எடக்குறவு, இன்குபேட்டர்ல இருக்கு, நா பாத்துகிறேன் டாக்டர், கவலப்படாதிங்க, நம்ம புள்ள இல்லையா’

ஒரு நாள் இரவு துர்க்காபாயிடமிருந்து தொலைபேசி வந்தது. பதட்டமான குரலில் பேசினாள். ‘ராவுல கூப்படறதுக்காக கோபிக்காதீங்க. தினாவை அரசாங்கம் நடத்துற ஹோம்ல சேர்த்துட்டாங்க. ரொம்ப தொலவுங்க. உலு லங்காட்ல இருக்கு. அவ மைனருகிறதால அவளையும் குழந்தையையும் பிரிச்சி வச்சிட்டாங்க. பார்க்க கன்றாவியா இருக்குங்க. அவ யாரை நினைச்சி அழுவா, அவள பெத்த தாய நெனச்சா. அவ பெத்த பிள்ளய நெனச்சா. அழுது அழுது உருகி போயிட்டா புள்ள. இதுல போலிஸ்கரனுங்க வந்து துருவி துருவி விசாரிக்கிறான்களாம்.’

‘துர்க்காபாய், அடுத்த வாரம் நான் அங்கு வரேன் , அவள போய் பார்ப்போம்’. தினாவிற்கு எதாவது செய்ய வேண்டுமென்று தோன்றுகிறதேயொழிய என்ன செய்வதென்றுதான் தெரியவில்லை. அரசாங்க ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து அவளை வெளியே கொண்டு வருவதே கஷ்டமான ஒன்று. அப்படியே வெளியே கொண்டு வந்தாலும் அவளை எங்கே வைத்திருப்பது என்பதும் கஷ்டமான ஒன்றுதான். மனசாட்சியை நீவிவிடவாவது அவளை ஒருமுறைப் பார்த்து வருவது என முடிவு செய்தேன்.

துர்க்காபாயை அழைத்துக் கொண்டு தினாவைப் பார்க்கச் சென்றேன். வழியெல்லாம் அவள் புலம்பிக் கொண்டுதான் வந்தாள். ‘இனிமே ‘நம்ம தமிளவுங்கனு’ சொல்ல மாட்டேங்க, துப்புக் கெட்ட சனங்க, சூடு சொரன இல்லாதவங்க, இந்த மாதிரி சமயத்தில்தான் மனுசங்கள புரிஞ்சுக்க முடியுது. ஒரு நாதி வந்து என்ன ஏதுன்னு கேட்டுச்சா. பேச சொல்லுங்க வாய்க் கிழியப் பேசுவானுங்க… த்தூ’

‘மேடம் துர்க்காபாய், துப்புறது துப்புறீங்க வெளியில துப்புங்க, காருக்குள்ள துப்பாதிங்க, இங்க நான் ஒருத்தந்தான் இருக்கேன்.’

‘ஐயோ டாக்டர் மன்னிச்சிக்குங்க, அப்படி வருது மனசுக்கு, அடி வயிறு பத்திக்கிட்டு எரியுது, அங்கேயும் ஒரு செக்யூரிட்டிகாரன் அவளை வந்துத் தொந்தரவு பண்ணியிருக்கானாம்.’

‘இத ஏன் முன்னமே என் கிட்ட சொல்லல.’

‘சொல்லிதான் நீங்க என்ன செஞ்சிடபோறீங்க, நீங்க கூலிமில இருக்கீங்க’.

எனது இயலாமை குறித்து எனக்கே வெட்கமாக இருந்தது.

ஆதரவற்றோர்க்கான தாய் சேய் காப்பகம் என்றழைக்கப்படும் கட்டடம் பழைய கம்பத்து வீடு போன்றிருந்தது. தரையில் கால் பதியாது தூக்கி நிறுத்தப்பட்டிருந்த அந்த மர வீட்டின் நிழல்பகுதியில் மலாய் குழந்தைகள் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தன. மழைப் பெய்து ஓய்ந்திருந்ததால் சேறும் சகதியுமாக இருந்தது. மலையடிவாரத்து கம்பம் அது.

‘இங்கதான் அவ இருக்கா, ஆனா நாம அவள இங்கப் பார்க்க முடியாது. அதோ அந்தாண்ட ஆபிஸ் இருக்கு, வார்டன்கிட்ட சொல்லனும், அவங்க கூட்டிட்டு வருவாங்க’ என்று அடுத்திருந்த அலுவலகத்திற்கு கூட்டிச் சென்றாள் துர்க்காபாய். நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருந்த வரவேற்பு அறைக்குள் காலணிகளைக் கழற்றி வைத்துவிட்டு நுழைந்தோம்.

நடுத்தர வயதுடைய மாது எங்களை வரவேற்று சோபாவில் அமரச் செய்தாள். பரஸ்பர அறிமுகத்திற்குப் பின் பணிவோடு பேசினாள். மேடம் துர்க்காபாய் அன்று நீங்கள் வந்து தினேஸ்வரியைப் பார்த்துவிட்டு சென்றபின் அவள் இரவு முழுக்க எதுவும் சாப்பிடாமல் அழுதுக் கொண்டே இருந்தாள். நான் அவளுக்கு எவ்வளவோ ஆறுதல் சொன்னேன். அந்த இந்தோனேசியா செக்யூரிட்டிகாரனை வேலையை விட்டு நிறுத்திவிட்டேன். ஆனால் துரதிஷ்டவசமாக அன்று மாலை முதல் அவளைக் காணவில்லை. எங்கெங்கோ தேடிப் பார்த்து விட்டோம், காணவில்லை.’

என் பீதியையும் பதட்டத்தையும் என் முகம் காட்டிக் கொடுத்திருக்க வேண்டும். ‘டாக்டர் சிவா பதறாதீர்கள், அவளை எப்படியும் கண்டுப்பிடித்துவிடுவோம். போலிசில் புகார் செய்துள்ளோம். என்னுடைய கவலை எல்லாம் அவளுடையக் குழந்தையை எங்கே தூக்கிக் கொண்டு சென்றிருப்பாள் என்றுதான். நாங்கள் அவளை இங்கே நன்றாகவே கவனித்துக் கொண்டோம். தினேஸ்வரி ஏங்கிவிடக் கூடாதென்று குழந்தையைக் கூட அவளிடமே தங்க வைத்திருந்தோம். துர்க்காபாயிடம் கேளுங்கள்.’ மன்னிப்பு கோரும் குரலில் பேசினாள்.

‘இது ரொம்ப சீரியஸான விஷயம் புவான் ரொஷிடா. என்னுடைய அதிருப்தியை உங்களிடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை. உங்களின் பாதுகாப்பில் இருக்கும் அவளை யாராவது கடத்திச் சென்றுதான் இருக்க வேண்டும். ஒரு குழந்தைக்கு ஏற்படக்கூடாத விபரீதங்கள் எல்லாம் அவளுக்கு ஏற்பட்டிருக்கு. நீங்க கோபித்துக் கொள்ளக் கூடாது. நான் போலிஸ் கமிஷனர் டத்தோ ஜமால் கானைப் பார்க்க போறேன். அவர் எனது நண்பர். அவளது உயிருக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது பாருங்க’ ரொஷிடா நீண்ட நேரம் வருத்தம் தோய்ந்த குரலில் என்னைச் சமாதானப்படுத்தினாள்.

குழப்பமாகவும் கோபமாகவும் வெளியேறினேன். ‘எங்கே போயிருப்பாள், எப்படி போயிருப்பாள்’ என்ற கேள்விதான் என்னைக் குடைந்து கொண்டிருந்தது. காரில் திரும்பும் போது கூட துர்க்காபாயிடம் என்னால் எதுவும் பேசமுடியவில்லை. சென்ற வாரமே புறப்பட்டு வந்திருந்தால் இதனைத் தடுத்திருக்கலாமே எனத் தோன்றியது. எனது கையாலாகத்தனத்தைப் பற்றி மனசுக்குள் நொந்து கொண்டேன்.

‘துர்க்காபாய் ஒருவேளை அவளுடைய அம்மா வந்து யாருக்கும் தெரியாமல் அவளைக் கூட்டிட்டு போயிருப்பாளோ’ என்றேன். துர்க்காபாய் ஒன்றுமே பேசவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டாளோ என எண்ணி அவளைப் பார்த்தேன். வெளியே வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள். ‘பாவம் எங்க இருக்காளோ, எப்படி கஷ்டபடறாளோ’ என அரற்றினேன்.

‘எங்கேயும் போகல டாக்டர், எங்கிட்டதான் இருக்கா, என் வீட்லதான் வச்சிருக்கேன்.’ அமைதியாக, குனிந்த தலையோடு அமைதியாகச் சொன்னாள். ஒரு கணம் அதிர்ந்து போனேன். அவள் சொன்னதை நம்ப முடியவில்லை. உண்மைதான் சொல்கிறாளா?

‘அப்ப ஏன் என் கூட இவ்ள தூரம் வந்து, இந்த நாடகம் துர்க்காபாய்?’

‘அப்பதானே ரொஷிடாவிற்கு என்மேல சந்தேகம் வராது. மன்னிச்சிக்குங்க டாக்டர், உங்ககிட்டேயும் சொல்லாம இருந்திடத்தான் நினைச்சேன், போலிஸ் கனிஷனர் கிட்ட போய் சொல்லி விஷயத்தை பெரிசா ஆக்கிடுவீங்களோனுதான் பயந்து போய் உங்ககிட்ட உண்மைய சொல்றேன். எனக்குப் புள்ளக்குட்டி இல்ல, நா தனிக்கட்ட. புருஷன் செத்துப் போய் இருபது வருஷமாச்சு, கடவுள்தான் தினாவை என்கிட்ட வந்து சேர்த்தாருனு நெனக்கிறேன். அவரு எனக்கு தந்த வரம்னு நெனக்கிறேன். நான்தான் அன்னிக்கி யாருக்கும் தெரியாம அவளையும் குழந்தையையும் வீட்டுக்கு கூட்டிடு வந்துட்டேன். சட்டபடி அவுங்க ரெண்டு பேரையும் எப்படி சுவிகாரம் எடுக்கிறதுனு தெரியல. என்ன கட்டிபிடிச்சு கதறி அழுதா புள்ள. மனசு கேட்கல, கூட்டியாந்துட்டேன். என்ன தயவு செய்து மன்னிச்சிருங்க’ கைகள் கூப்பி கெஞ்சினாள்.

‘ச்சே.. ச்சே.. யார பார்த்து யார் கும்பிடறது, நான்ல உங்கள’ வலது கை ஸ்டேரிங்கில் இருந்ததால் இடதுக் கையால் அவளது கூப்பிய கரங்களைப் பற்றிக் கொண்டேன்.

– டிசம்பர் 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *