கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 8, 2014
பார்வையிட்டோர்: 10,859 
 
 

மருதானை பொரளை வீதி வழமை போலவே சப்தமும் சந்தடியுமாய்… வழமை போல என்பதனை விடவும் எப்போதும் காபன் புகையை கக்கிக்கொண்டு எமிசன் டெஸ்டுக்குப் பயந்து தொடர்ந்தேர்ச்சையாக ஒலியினால் சூழலின் வலது செவியை ஏற்கெனவே ஈஎன்டி சேர்ஜனிடம் டயக்னொஸிஸ{க்கு அனுப்பிய நிலையில் அதே எண்ணிக்கையான வாகனங்கள்… சற்றும் குறையாத கார்பன்… செவிப்பறை செறிக்காத அதே ஒலிகளுடன்… இத்தனைக்கும் மத்தியில் சற்றே அண்ணாந்து பார்த்தால்… புஞ்சி பொரளைக்கு சற்றுத் தள்ளி ராஜகிரிய போகும் திசையில் இன்னும் கொஞ்சம் வண்ணம் தாருங்கள் எனக் கெஞ்சியவாறு மங்கிய நிலையில் பெரிய போர்ட். அதில் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை என்று எப்போதோ எழுதப்பட்ட பெயர் இன்னும் புதுப்பிக்கப்படாத நிலையில் மௌனமாக இருந்தது.

நோநா வார்ட் என்பார்களே நம்மவர்கள். அதேதான். அந்த ஆஸ்பத்திரியேதான்… எண்ணற்ற குழந்தைகளினதும் அவர்களின் பெற்றோர்களினதும் துயரங்களையும் கண்ணீரையும் பெற்றுக் கொண்டு ஒன்றுமே நடவாதது போல சோகையாகக் காட்சி தந்தது. அந்த சிறுவர் வைத்தியசாலையின் மௌனம் ஒரு மரணத்தின் மொழியை வாசிக்கின்ற அனுபவத்தை எப்போதும் தந்து கொண்டேயிருக்கிறது.

“”மிஸ்… பத்தாம் வோர்ட்ல ஏழாம் நம்பர் கட்டில்ல அட்மிட் அகியிருக்கிற அந்தச் சிறுமிக்கு நாளைக்கு வயத்துல சேர்ஜரி… ஞாபகமிருக்குல்ல…கவனமாப் பார்த்துங்க… இன்னொரு தரம் பல்ஸ் டயட் பாஸ்டிங் எல்லாத்தையும் தரோவா கம்ப்ளீட்டா செக் பண்ணிடுங்க”

“”அந்த ஹார்ட் பேசண்டுக்கு தடீர்னு மூச்சு வாங்க ஆரம்பிச்சிடுச்சி டொக்டர்”

“”இப்ப அட்மிட் ஆகியிருக்கிற தினேஷிக்கு இம்மீடியட்டா செலைன் ட்ரிப்பை ஏத்திடுங்க… பவித்ராவுக்கு இன்னொரு தடவ நெபுலைசேசன் செஞ்சிடுங்க”

இந்த மாதிரியான வார்த்தைகள் தவிர வேறெந்த வார்த்தைகளும் அந்த வைத்தியசாலையில் கேட்பதற்கு எவருக்கும் எப்போதும் வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை. ஒவ்வொரு வோர்டிலும் ஏராளமான குழந்தைகள்… ஹார்ட் ப்ரோப்ளம் ரீனல் பெயிலியர் வைரஸ் இன்ஃபெசன் டயபடிஸ் ஜுவனைல் ஆர்த்ரைடிஸ் மெனின்ஜைடிஸ் டெங்கு டவுன் ஸின்ட்ரோம் ரூமட்டிக் பீவர் ரூபெல்லா நியுமோனியா என ஆங்கிய நெடுங்கணக்கில் உள்ள அத்தனை எழுத்துக்களைக் கொண்டும் ஆரம்பிக்கின்ற அத்தனை நோய்களுக்குமான ஏகப்பட்ட சிறார்கள்.

சிறகொடிந்த பறவைகளாக ரொம்பச் சிறார்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள் வெள்ளை விரித்த கட்டில்களில். திரும்பும் இடமெல்லாம் செலைன் ட்ரிப்புகள் தொங்கிக் கொண்டிருந்தன. கோமா ஸ்டேஜில் சில குழந்தைகள். உடம்பு முழுக்க ஏகப்பட்ட வயர் கனெக்சனோடுதான் எத்தனை குழந்தைகள்.

எந்தப் பாவமும் அறியாத பூக்களின் மேனியில் பெற்றோல் வாசனை. பனியில் ஒளிரும் ரோஜா இதழ்களில் கருகிய வாசனை.

வாழ்வின் தத்துவங்களை கற்பிப்பதில் முன்னணி இடத்தினை வைத்தியசாலைகள் என்றைக்கும் விட்டுக் கொடுத்ததில்லை.

இன்றைய உலகின் மிக முக்கிய பிரச்சினையாக தமது குழந்தைகளின் நோயாகவே இருப்பது மாதிரியான மனோநிலையில் பெற்றோர்கள் அவ்வப்போது மாத்திரம் சில வார்த்தைகள்… இன்ச் சைசுக்கும் சந்தோஷம் கிடையாது. தத்தம் கடவுள்களை பிரார்த்தித்தவாறு… வேறு என்னதான் செய்யலாம்.

எந்தப்பாவமும் அறியாப் பிஞ்சுகளை புதிசு புதிசாய் எத்தனை நோய்கள் வாட்டி வதைக்கின்றன என்பதனை விலாவரியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது அந்த லேடி ரிட்ஜ்வே சில்ட்ரன் ஹொஸ்பிடல். சில விடயங்களினை விவாதிக்க முடியாது. அப்படி விவாதித்தாலும் விடை காணாமலேயே பல வினாக்கள் நிரந்தரமாக நின்று போய் விடுகின்றன. அப்படித்தான் இந்தக் குழந்தைகளைப் பீடித்து முழி பிதுக்கும் கொடூர நோய்களும். ஏன் எப்படி இந்தப் பிஞ்சுகளுக்கு இந்தக் கொடூரம்….இறiவா இதற்காக நீ என்ன நியாங்களை கற்பிக்கப் பொகின்றாய்…..விடைகள் மைனஸ் டிகிரியில்.

அதி தீவிர சிகிச்சைப்பிரிவு என சிவப்பெழுத்தில் ஐசியு என காட்டமாய் எச்சிரிக்கை பண்ணிக் கொண்டிருக்கும் அந்த அறையின் முன்னால் உள்ள பெஞ்சொன்றில்; அழுதவாறே காலை பத்து மணிக்கு உட்கார்ந்த சோமாவதி இன்னும் அழுது கொண்டிருந்தாள். மணி பகல் இரண்டு… அவளது அழுகை இப்போது பெட்டரி சார்ஜ் இறங்கிய ரேடியோவாய்… அவ்வப்போது வந்து போகும் செல்லிடபேசி கவரேஜ் சிக்னலாய் விசும்பிக் கொண்டிருந்தது. தெளிவற்ற அவளது விசும்பலில் தெரியும் துயரம் ஒரு புல்லாங்குழலையும் புண்ணாக்கி விடும்.

பக்கத்தில் கவலை ரசம் மிதக்கும் கண்களோடு சோமாவதியின் தலைமுடியைக் கோதியவாறு அவளது கணவன் சரத். “”அழாதேம்மா… நிஷாதிக்கு எதுவும் ஆகாது. அந்தக் கடவுள் நம்மள கைவிட மாட்டார்”
மனைவிக்கு ஆறுதல் சொன்னாலும் சோமாவமியை விட கவலைகளையும் நம்பிக்கையீனத்தையும் பெபருக்கல்செய்து கொண்டிருந்தான் அவன். இருவருக்கும் ஒரே வித்தியாசம்… தாய்மை முடியாமல் அழுகின்றது… வெளியே தெரிகின்றது. தந்தைமை அழவில்லை என்பது வெளியில் தெரிந்தாலும் உள்ளுக்குள் குருஷேத்திரம்.

“கடவுளே நிஷாதியைக் காப்பாற்று’ அவன் உள்ளுக்குள் அழுத ஓலத்தின் காரணமாக மனசுக்குள் ஏதோ அடசியது.

கடந்த வருடம்தான் சரத்தும் சோமாவதியும்; திருமணம் புரிந்து கொண்டனர். அரேன்ஜ்ட் மெரேஜ.; கல்யாணத்தின் பின்னர்தான் சரியாக அவரவர் முகத்தை நெருக்கத்தில் பார்த்துக் கொள்ள வாய்ப்பே கிடைத்தது அவர்களுக்கு. அந்தளவுக்கு சீக்கிரமாக பெண்பார்த்து சரத்துக்கு பிடித்துவிட ஒரு கிழமைக்குள் மாங்கல்யம் தந்துனானே.

சோமாவதி ஆண்டவன் அனுக்கிரகத்தால் திருமணமாகி உடனடியாபவே கன்ஸீவ் ஆகிவிட்டாள். ரெண்டு குடும்பத்தாருக்கும் ஏகப்பட்ட சந்தோசம். ஆனாலும் சோமாவதி கர்ப்பம் தரித்த பின்னர் ரொம்பவும் பலவீனப்பட்டுப்போனாள். அடிக்கடி நோய்வாய்ப்படுவதிலும் அவ்வப்போது படுக்கையிலுமாக அவளது கர்ப்ப காலம் கழிந்தது. டெலிவரிகூட கர்ப்பகாலம் முப்பத்தியேழு வாரங்களைத் தாண்டு முன்னரே நிகழ்ந்து நிஷாதி பிறந்தாள்.
பிரிமெச்சுவர் டிலிவரி… என்றுதான் மகப்பேற்று மருத்துவர் சொல்லியிருந்தார்.

கர்ப்பகாலத்தின்போது சோமாவதி பலவீனப்பட்டு நோய் கண்டபோதெல்லாம் சாதாரண எம்பிபிஎஸ் டொக்டர்களிடம் காட்டி மருந்தெடுத்துக் கொண்டாள். அந்த நேரங்களில் அவளது சின்னச்சின்ன உடல் உபாதைகள் தீர்ந்து போய்விடும். கார்ப்பகாலத்தின்போது ஏற்படும் சாதாரண வழமையான உபாதைகள்தானே என்பதே சோமாவதியின் மணக்கணக்கு. ஒரே ஒரு தடவை வீஓஜியிடம் காட்டி விட்டமீன் மாத்திரைகளை அவர் சிபாரிசு பண்ணியதாக ஞாபகம்.

நுஷாதி பேறு காலத்தின் முன்னரே பிறந்தாலும் பிறந்த கொஞ்ச நாள் ஓரளவு ஆரோக்கியமாகத்தான் இருந்தாள். நுஷாதி பிறந்து ஒரு மாதத்தின் பின்னர்தான் சோமவதி உணர்ந்தாள் நிஷாதியின் உடலிலும் அவளது அசைவுகளிலும் ஏற்பட்ட அசாதாரண போக்கை. குழந்தை விழிகளை உருட்டி உருட்டி பார்வைக்கு சிரமப்படுவதையும் அடிக்கடி அழுவதனையும்… இரண்டு மாதங்களின் பின்னர் நிலைமை தீவிரமடைவதனை சோமாவதி சரியாக உணர ஆரம்பித்ததன் பின்னர் நிஷாதிக்கு இருமலுடன் சேர்நதுத காய்ச்சல் அடிக்கடி வர ஆரம்பித்திருந்தது. நான்கைந்து தடவைகள் சாதரண ப்ரைவேட் கிளினிக்கில் கஃப் சிரப் மற்றும் மாத்திரைகள் எடுத்தும் குழந்தைக்கு காய்ச்சல் விடுவதும் மீண்டெழுந்து வருவதுமாக இருந்தது.

முற்றிலும் பலமிழந்து ரொம்பப் பலவீனப்பட்டு இடைவிடா இருமலும் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த காய்ச்சலும் எகிற நிஷாதி ஊர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு குழந்தையின் நிலை மோசமாகிக் கொண்டு வர கிட்டத்தட்ட கோமா என்பார்களே அந்த மாதிரியாக ஆகி விட அதன் காரணமாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே ஹொஸ்பிடலுக்கு மண்டையில் சிவப்புத் தலையோடு மரண பயம் ஏற்படுத்தும் அம்புலன்ஸில் உடனடியாக கொண்டு வரப்பட்டு… இவை யாவும் கடந்து பத்து நாட்களுக்குள் நடைபெற்று நான்கு நாட்களுக்கு முன்னர்தான் லேடி ரிட்ஜ்வே ஹொஸ்பிட்டலுக்கு கொண்டு வரப்பட்டு தற்போது அதன் ஐஸியூப் பிரிவில் முழு மயக்கத்தில் சன்னமாகி சப்தத்தினையும் இழந்த நிலையில் மூக்குத் துவாரங்களுக்கூடாக செயற்கை ஒக்ஸிஜன் குழாய்கள் பொறுத்தப்பட்டு… உடலின் ஆங்காங்கு சில பிரதேசங்களில்; வயர்களோடு நிஷாதி இந்த நிமிடம்வரை குளிர் மழையில் நனைந்த புறாக்குஞ்சாய்… ஏஸி உறுமும் அறையில்…எதுவுமற்றதாகி.

வியர்த்துக் கொட்டியது சோமாவதிக்கும் சரத்துக்கும்… “”என்னங்க நம்ம புள்ளக்கு என்னங்க… எனக்கு என் நிஷாதி வேணும்… எனக்கு வேணும்” ஹிஸ்படீரியாக்காரியாக சோமாவதி சரத்தின் கைகளை பிடித்துக் கொண்டு கதறினாள்.

பெத்த பாசம்.. மார்பில் பாலூறிக் கண்ட வலியில் மனசு பூரா தீக்காயம். செல்லமே உச்சி முகர்ந்து நிலாகாட்டி பாற் சோறூட்டி… உன் ஒற்றைப் புன்னகையில் உலகமே மறந்து…

“”எனக்கு எம்புள்ள வேணும்… எம் பொண்ணுக்கு என்ன நசல்ங்க…” அழுத சோமாவதியின் கண்ணீரில் சரத்தின் கைகளில் உப்பு விளைந்தது.

அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் நிஷாதி அனுமதிக்கப்பட்ட இன்றோடு நான்கு நாட்களாகின்றன. டொக்டரகள்; இதுவரை எதுவுமே சொல்லவில்லை. சோமாவதிக்கும் சரத்துக்கும் இருந்த தவிப்பில் அங்குல சைசேனும் அவர்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. இவர்களுக்கிருக்கும் அதே துயரம் அந்த டொக்டர்ஸ{க்கும் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது நியாயமில்லை என்பதனைவிடவும் அவ்வாறு எதிர்பார்ப்பதே ஒரு முட்டாள்தனம்தான். நுpஷாதியோடு சேர்த்து அவர்களுக்கு ஆயிரத்தோராவது கேஸாக அருக்கும் அவர்களுக்கு. தட்ஸ் ஓல். இதுதவிர அவரக்ளுக்கு வேறொன்றும் கிடையாது. எத்தனை நோய்களை கண்முன்னே நிகழும் மரணங்களை உயிர் பிரியும் கடைசித்தருணங்களை சேர்ஜிக்கள் கத்திகளால் கிழிக்கப்பட்ட உயிருள்ள மற்றும் உயிரற்ற உடல்களை போஸ்ட் மோர்ட்டம் ரிப்போர்ட்டுகளை அவர்களது இதுவரை காலத்தில் தங்களது அனுபவத்தில் பார்த்திருப்பார்கள்.

டொக்டர்கள் இதுவரை எதுவும் சொல்லவில்லை. கேட்டபோதெல்லாம் கொஞ்சம்பொறுங்கள்” என்று கடந்த நான்கு நாட்களாய் நிஷாதியின் இரத்தம் நிறுநீர் மற்றும் உமிழ் நீரின் மாதிரிகளை அடிக்கடி எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

ஒன்று மட்டும் சோமாவதிக்கும் சரத்துக்கும் ஸ்பஷ்டமாகத் தெரிந்தது. நிஷாதி இஸ் இன் டேன்ஜர்… ஜஸ்ட் மூன்று மாதம்கூட ஆகவில்லை நஷாதி பிறந்து அதற்குள்…

பீடியாற்ரிக் ஸ்பெஷலிஸ்ட்… அவரைச் சுற்றி ஒரு நான்கு டொக்டர்ஸ்… அடிக்கடி நிஷாதியை பரீட்சித்துக் கொண்டேயிருந்தார்கள்.
நேற்று அந்த வெள்ளை உடை தரித்த நைட்டிங்கேள் “”நிஷாதியோட பேரன்ட்ஸ் நீங்கதானே! உங்க ப்ளட் சேம்புல இம்மீடியட்டா சீஃப் டொக்டர் எடுக்கச் சொல்லியிருக்கிறார்”

என்ன காரணத்துக்காக எங்க ரத்தத்த டெஸ்டுக்கு கேக்குறாங்க என்ற சந்தேகம் மனசுக்குள் கதகளியாடிக் ஆடிக் கொண்டிருக்கும் போதே அந்த வெள்ளையுடை இவருவரினது ரத்த மாதிரியினையும் சிரிஞ்சில்

“”ஆ… ஆ…”

எடுத்துக் கொபண்டாள். “”சிஸ்டர் இப் ய+ டோன்ட் மைன்ட்….எங்க ரத்தத்தை என்னத்துக்கு எடுக்குறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா…”

“”ஐ டோன்ட் நோ… ஒங்க குழந்தைய ட்ரீட் பண்ணுற பெரிய டொக்டர் உடனடியா உங்க ரத்தத்த எடுத்து லேபுக்கு அனுப்பச் சொல்லியிருக்கிhர். அவ்வளவுதான் தெரியும். பட் வன் திங்… நாளைக்கு நோய் என்னான்று உங்க குழந்தைக்கு புடிச்சிருக்குற நோய் என்னான்று தெரிஞ்சிடும்னு சொன்னாரு. ஆண்டவங்கிட்ட பிரார்த்தனை செஞ்சுக்கோங்க”

அதன் பிறகு அந்த வெள்ளைச் சீருடையை காணக்கிடைக்கவில்லை. இன்று வேறொரு வெள்ளைச் சீருடை சிரிஞ்சுகளுடனும் மாத்திரைகளுடனும் அந்த வோர்டுக்குள் வலம் வந்து கெண்டிருந்தது.

“”கடவுளே என் குழந்தையைக் காப்பாற்று” சரத் வேண்டிக் கொண்டிருக்கையில் சோமாவதி களைத்த நிலையில் மௌனமாய் இருக்கையில் அமர்ந்தவாறே தூங்கிக் கொண்டிருந்தாள். கடந்த சில இரவுகளில் அவளது தூக்கம் களவாடப்பட்டிருநத்து.

பாவமாக இருந்தது அந்தப் பச்சைத் தாயைப் பார்க்க.

அன்று மாலை ஐந்து மணியிருக்கும்… “”மிஸ்டர் சரத் இங்க யாரு” குரல் கேட்டு சரத்தும் சோமாவதியும் ஒருசேரத் திரும்பினர்… நேர்ஸ் நின்று கொண்டிருந்தாள்.

“”ஐஸியுல அட்மிட் ஆகியிருக்கிற நிஷாதிங்குற குழந்தையோட தகப்பன் மிஸ்டர் சரத்துங்கிறது”

“”நான்தான் மேடம்”

“”ஒங்கள டொக்டர் உடனடியா தன்ட அறைக்கு கூப்பிடுறார்… வலப்பக்கமாப் போய் அப்புறம் இடப்பக்கம் திரும்புனீங்கன்னா பீடியாற்றிஸியன் ரூம் நம்பர் பத்துன்னு போர்டு போட்டிருக்கும்… அந்த ரூமுக்குள்ள போங்க…”

“”சோமா நீ இங்கேயே வெயிட் பண்ணு நான் டொக்டரப் போய் பாத்திட்டு வர்ரேன்… டோன்ட் வொரி… நம்ம கொழந்தக்கு ஒன்றுமே ஆகாது… பயப்படாம நம்பிக்கையோட இரு…” என்ற சரத் அதிகம் பயந்தவனாக பதற்றம் உடம்பு பூராகவும் தீப்பற்றிக் கொள்ள அறை இலக்கம் பத்தை நோக்கி நடந்து… இல்லை ஓடியவாறு சென்று கதவடியில் நின்று கொண்டிருந்த இன்னொரு வெள்ளை யினிஃபோர்மிடம் “”மிஸ் நான் சரத்… எங்க குழந்த நிஷாதி இங்க அட்மிட் கியிருக்கா… டொக்டர் என்னைய வரச் சொன்னதா இப்ப தகவல் வந்தது”

“”டொக்டர் உள்ளேதான் இருக்கார். யுகேன் கோ இன் நவ்”
மூச்சிறைத்தது சரத்துக்கு. அறுத்த கோழியாய் மனசு கிடந்து துடித்தது…

“ஆண்டவனே என் குழந்தயக் காப்பாத்து’

“சிட்டவுன் மிஸ்டர் சரத்”

அந்த வழுக்கைத்தலை டொக்டர் அந்த ரிவோல்விங் செயாரில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவரது மேசைமீது அவரது பெயர் தாங்கிய போர்டு அலுமினியத் தகட்டில் மின்னியது. டொக்டர் பெர்ணான்டோ… எம்பீபிஎஸ் எம்டி எஃப்ஆர்ஸிஎஸ் எம்ஆர்ஸிபி பீடியாட்றிஸியன் என நீண்ட பட்டியலில் பின்னதை சரத் வாசிக்கவில்லை. வாசிக்கும் மனோ நிலையும் ஆர்வமும் அவனிடம் அந்த நேரத்தில் இருக்கவில்லை. அவரது கண்களில் மருத்துவ அனுபவம் தீட்சன்யமாகத் தெரிந்தது. பிரதான டொக்டராக இருக்க வேண்டும். அவருக்குப் பக்கத்தில் இன்னும் மூன்று டொக்டர்கள் நின்று கொண்டிருந்தார்கள். எல்லோரது கழுத்திலும் ஸ்டெதஸ்கோப்.

“”மிஸ்டர் சரத் உங்கக்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்… அதுக்காகத்தான் என் ரூமுக்கே ஒங்கள வரச்சொன்னேன். பேர்சனல் என்ட் மொஸ்ட்லி கன்பிடெனஷியல்” கண்களிலிருந்து தனது மூக்குக் கண்ணாடியினை கழற்றிக் கொண்டார்.

“”டொக்டர் எங்குழந்தைக்கு என்னாச்சு” அந்த ஏசியிலும் சரத்துக்கு வியர்த்து ஊற்றியது.

“”அதப்பற்றி பேசத்தான் உங்கள இப்ப கூப்பிட்டிருக்கன்” என்றவர்.. திரும்பி தனது வலப்பக்கத்தில் நின்று கொண்டிருந்த அந்த உயரமாக இருந்த டொக்டரிடம் “”மிஸ்டர் ரவி ப்ளீஸ் டேக் தட் பைல் என்ட் கெட் தி ஓல் ரிப்போர்ட் அவுட்” என்று சொன்னவர் சரத்திடம் “”உங்க டோட்டரோட எல்லா ரிப்போட்சும் வந்தாச்சு… உங்கட உங்க வைஃபுட ப்ளட் ரிப்போட்ஸ{ம் வந்தாச்சு… ஓல்மோஸ்ட் உங்க குழந்தைக்கு வந்திருக்கிற நோயை வெரி கிளியரா டயக்னொஸ் பண்ணிட்டோம..’

“”டொக்டர் எங்குழந்தைக்கு என்ன வியாதி” சரத்தினது வியர்வைச் சுரப்பிகள் ஓவர் சைஸில் இப்போது எக்டிவேசன் ஆகின.

“”சரத் ப்ளீஸ் பீ கால்ம்… டோன்ட் கெட் எக்ஸைட்டட்… எதுன்னாலும் தாங்கித்தானே ஆகனும். உங்க டோட்டர்ர வியாதியப்பத்தி சொல்ல முதல்ல உங்கக்கிட்ட சில விசயங்கள் கேட்டு தெளிவு பெறணும்னு நான் விரும்புறன். நான் கேக்குறத்துக்கு மட்டும் ஆன்ஸர் பண்ணுங்க. பட் வன்திங் உங்க பதில் உண்மையா இருக்கனும்னு எதிர்பார்க்கிறேன். அப்படீன்னா மாத்திரம்தான் எக்குரேட்டா உங்க மகளின்ர வியாதிய இதுதான்னு கன்ஃபர்ம் பண்ண ஏலுமா இருக்கும். ஐ ஹோப் யு வில் பீ சின்சியர்” என்ற டொக்டர் இடையில் நிறுத்திக் கொண்டு சரத்தை உற்று நோக்கினார்.

இந்த வார்த்தைகள் இன்னும் ஒரு படிமேல் சரத்தின் இரைப்பையினுள் அமிலம் சுரக்க ஆரம்பித்தது. ஐஸ்கட்டிகள் முள்ளந்தண்டில் ஊர்ந்தன கம்பளிப்பூச்சிகளாய்.

“”யெஸ் டொக்டர்… நீங்க கேளுங்க…”

“உங்களுக்கு கல்யாணமாகி இப்ப எவ்வளவு காலம் இருக்கும்”

“”சுமார் ஒண்ணரை வருச காலம்”

“”சோ… யுவர் டோட்டர் நிஷாதி ஃபர்ஸ்ட் பேபி… ஏம் ஐ கரெக்ட்”

“”ஆமா டொக்டர்”

“”லவ் மெரேஜா அரேன்ஜட்; மெரேஜா”

“”அரேன்ஜ்டட மெரேஜ் டொக்டர்”

“”ஐ… ஸீ… நான் இப்ப கேக்கப் போறது மிக முக்கியமான கேள்வி…டோன்ட் மிஸ் அன்டர்ஸ்டேன்ட் மீ …….நடந்த விசயங்களை எங்கிட்ட நீங்க எதுவாயிருந்தாலும் மறைக்காம சொல்லலாம். நீங்க திருமணத்துக்குப் பிறகு உங்க மனைவி தவிர வேறெந்தப் பெண்ணோடயாவது செக்ஸ் வெச்சுக்கிட்டீங்களா…?…”

“”நோ… நோ… நெவர் டொக்டர்… திருமணத்துக்குப் பிறகு என்ட வைஃப் தவிர வேறு யாரோடவும் எனக்கு எந்த செக்சுவல் கன்டக்டும் இதுவரைக்கும் இல்லை…”

“”ஓக்கே… ஓக்கே… பதற்றப்படாதீங்க… ஐ நீட் சம் கிளயாரிட்டி… அதுக்காகத்தான் இந்தக் கேள்வியெல்லாம்… நெக்ஸ்ட்… திருமணத்துக்கு முந்தி எப்போதாவது யாரோடயாவது செக்ஸ் வச்சுக்கிட்டீங்களா…”

இப்போது குழப்ப ரேகைகளில் சரத்தின் முகம் குளிர்காய்ந்து கொண்டிருந்தது. மௌனமாக இருந்தான். அந்த மௌனத்தை டொக்டர் மொழி பெயர்த்திருக்க வேண்டும்… அவர் ஒரு குழந்தை நல வைத்தியராக இருந்தாலும் ஹியூமன் சைக்கோலஜியும் ரொம்பப் படித்தவர்.

“”கமான் சரத்… ஏன் அமைதியா இருக்கீங்க. டெல் மீ ட்ருத்…”

“”டொக்டர்… நான் வந்து… வந்து… திருமணம் செய்துக்க முந்தி சுமார் ஆறு மாதத்துக்கு முதல்ல ஒரே ஒரு தடவ…”

“”கமான் நோ சைனஸ்… சொல்லுங்க”

“”ஒரே ஒரு தடவை தொழில் விசயமா ஹிக்கடுவ ஹோட்டல் ஒன்றுல தங்கியிருக்கிற சமயம் அது நடந்தது. ஜஸ்டட வன் என்ட் ஒன்லி. அது மட்டும்தான்… அதுக்கப்புறமும் சரி… அதற்கு முதலும் சரி இந்த மாதிரியான சம்பவங்கள் என் லைஃபுல இல்ல… ஒரு தடவை அந்த தப்புக்கு நான் ஆளாயிட்டேன். அதற்கப்புறம் நான் ரொம்ப கில்ட்டியா ஃபீல் பண்னேன் டொக்டர்… ஆமா இதெல்லாம் எதற்கு கேக்குறீங்கன்னு நான் …”

“”யெஸ் ஓலமொஸ்ட் நான் ஏற்கனவே இத கெஸ் பண்ணிட்டேன். பாஸ்ட் இஸ் பாஸ்ட்…அந்த சம்பவத்துக்கப்புறம் நீங்க ஒங்க ரத்தத்த எப்போதாவது பரிசோதனை செஞ்சு பாத்தீங்களா? ஐ மீன் வீடிஆர்எல் எடஸ்டுன்னு ஏதாவது செஞ்சுக்கிட்டுங்களா”

“”நோ டொக்டர்… அந்த சம்பவத்துக்கப்புறம் அத நான் கிட்டத்தட்ட மறந்தே போயிட்டேன். அதனால எந்த டெஸ்டும் இதுவரைக்கும் எடுத்துக்கல. எடுக்க வேண்டிய தேவையும் வரல்ல… ஏன் டொக்டர் எனிதிங் ரோங வித் மீ;”

ஏற்கனவே பயத்தில் வியர்த்துக் கொண்டிஉருந்த சரத் அச்சத்தின் உச்சியில் இப்போது ஏறி உட்கார்ந்து கொண்டிருந்தான். உச்சந்தலையில் பெயர் தெரியாத ஒரு ஜந்து ஊர்ந்து சென்றது.

“”நத்திங் டு யு…. ஆமா உங்க டோட்டர் பேறு காலத்துக்கு முந்தியே டெலிவரி ஆனா… அப்படித்தானே…”

“”ஆமா டொக்டர்”

“”ஐ… ஸீ… யு ஹேவ் மேட் என் இர்ரிப்பெயாரபிள் என்ட் இர்ரிஏவர்சிபிள் ப்ளன்டர்” என தனக்குள் முனுமுனுத்துக் கொண்டிவர “”ரவி அந்த ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட் எல்லாத்தையும் எங்கிட்ட தாங்க”
கையில் அணைத்து ரிப்போர்ட்ஸையும் வாங்கிக் கொண்டார். அந்த அறையில் அமானுஷ்யமானதோர் அமைதி அங்கு நிலவிய சூழலை ப்ளக்மெயில் பண்ணிக்கொண்டிருந்தது.

“”மிஸ்டர் சரத் அது உங்க டோட்டரோட ப்ளட்டெஸ்ட் ரிப்போர்ட்…”
மெல்ல இருமிக் கொண்டார்.

தன்னை தனது தனிப்பட்ட வாழ்வை இதுவரை விசாரித்துக் கொண்டிருந்த டொக்டர் திடீரென தனது மகளது ரிப்போட்டை எடுத்துக்கொண்டு பீ+டிகை போடுகிறார். ஏன் என்னைப் பற்றி விசாரித்தார். அதற்கும் எனது மகளது வியாதிக்கும் இடையில் என்ன லிங்க்…. அதிகரித்த் குழப்பத்தின் மத்தியில் சரத் இனி செத்து விடுவான் போலிருந்தான். “”ப்ளீஸ் டொக்டர் என் செல்லத்துக்கு என்னாச்சு… சொல்லுங்க.. நான் செத்துடுவேன் போலிருக்கு… என் வைஃப் வேற என்னவோ ஏதோன்னு வெளில அழுதிட்டு இருக்கா… ப்ளீஸ் டொக்டர்”

“”சொல்லத்தான் போறன்… உங்க டோட்டருக்கு எக்கியூட்; நியுமோனியா… வெரி எகஸ்ட்ரீம் லெவல்… டயக்னொஸ் பண்ணியாச்சு… ட்ரீட்மென்ட் நடந்திட்டு இருக்கு… அவ பொழக்கிறதுக்கும் பொழைக்காம இருக்கிறதுக்கும் ஃபிப்டி ஃபிப்டி சான்ஸஸ் இருக்கு… இப்ப இருக்கிற சிச்சுவேசன்ல அவ சீரியஸ் ஸ்டேஜ்லதான் இருக்கா… எங்களுக்கு நம்பிக்கையிருக்கு… வீ டு அவர் பெஸ்ட்”

“”மை காட்…” ஓவென அழுவதற்கான அறிகுறிகள் சரத்தின் கண்களில் தெரிந்தன. ரொம்பவும் அதிர்ந்து போயிருந்தான் என்பது அவனது முகத்தில் ஸ்பஷ்டமாகத் தெரிந்தது.

“”அது மட்டுமல்ல… உங்க ப்ளடையும் உங்க ஃவைப்ஃட ப்ளடையும் டெஸ்ட் பண்ணி பார்த்தப்பதான் அந்த ஷோக் எங்களுக்கு தெரிய வந்தது. யெஸ் உங்க இரண்டு பேருக்கும் கிளமீடியா எங்குற பால்வினை வியாதி இருக்குது… யூ போத் ஆர் இன்ஃபெக்டட் வித் பக்டீரியம் டிரக்கோமெட்டைஸ் கிளமீடியா”

“”டொ…க்…ட…ர்”

சரத் அதிர்ந்ததில் டொர்கடர்கள் அதிரவில்லை. ஆப்படி ஒரு அவசியம் அவர்களுக்கில்லை.

“”அது மட்டுமல்ல… திருமணத்துக்கு முந்தி நீங்க அன்சேஃப் செக்ஸ் வச்சுக்கிட்டதால அந்த நோய் உங்களுக்குத் தொற்றி அதற்குப் பிறகு திருமணம் செஞ்சுக்கிட்டீங்க. உங்க மூலமா உங்க வைஃபுக்கு தொற்று ஏற்பட்டிருக்கு… இதெல்லாம் விட பெரிய ஷொக்… ஐ யாம் சொரி டு சே… வெரி அன்ஃபோர்ச்சுனேட்… ஒரு பாவமும் அறியாத உங்க குழந்தைக்கும் அந்த வியாதி உங்க வைஃப் கர்ப்பமான காலப்பகுதியிலேயோ இல்ல குழந்தை டெலிவரி பண்ணும் போதோ அந்த வியாதி தொற்றியிருக்கு….”

“”டொக்டர் நீங்க சொல்லுறதெல்லாம்…”

“”கன்ஃபர்மட் மிஸ்டர் சரத்… உங்க வைஃபுக்கு ப்ரீமெச்சுவர் டெலிவரி ஏற்பட்டதற்கும் இப்ப உங்க டோட்டர் எக்கியூட் நியுமோனியாவால பாதிக்கப்பட்டிருக்கிறதுக்கும் ஒரே காரணம் நீங்க கொடுத்த க்ளமீடியாதான்…”

“”டொக்டர்…எனக்கு… எதுவுமே தெரியல… ரொம்ப… ஸிம்பிளா எடுத்துக்கிட்டேன். இந்தளவு தூரம்ஆகுமுன்னு… ஓ மை காட்… இதுக்கு ஒண்ணுமே செய்ய முடியாதா டொக்டர்” இப்போது அவன் அழுவது போலிருந்தது. பழைய எழுத்தாளர்கள் எழுதுவார்களே ஆயிரம் சம்மட்டிகள் கொண்டு அவன் தலையில் அடித்தது போல என்று…. அப்படி உணர்ந்தான் சரத்.

தொண்டையில் திடீரென ஒரு வரண்ட காலநிலை.

“”பட் அதிர்ஷடவசமா… இந்த வியாதிய குணப்படுத்துறதுக்கு இப்ப மெடிசின்ஸ் இருக்கு. பயப்பட வேண்டியதில்லை… ஆரம்பத்திலேயே நீங்க இத இனங்கண்டிருந்தா எப்படியும் குணப்படுத்தியிருக்கலாம். இந்தளவு தூரம் ஆகியிருக்காது. நோ ப்ராப்ளம்… இப்பவும் ட்ரீட் பண்ணிடலாம்… ஆனா…?”

“”டொக்டர்… ஆனா…. எனிதிங் சீரியஸ்”

மேசை மீதிருந்த கிளாஸை எடுத்து அதிலிருந்து ஒரு மிடறை தொண்டைக்குள் சரித்துக் கொண்ட டொக்டர் “”விரும்பியோ விரும்பாமலோ நீங்க நான் சொல்லப்போற இந்த விசயத்தை ஏத்துக்கிட்டுத்தான் ஆகனும்… தாங்கியே ஆகனும்… வேறு வழியில்ல… நிலைமை எங்க கைய மீறிப் போயிருச்சி… அதுக்காக எங்களால அத மறைக்கவும் முடியாது. அத நீங்க தெரிஞ்சுதானே ஆகனும் ஏஸ் எ ஃபாதர்”

கைகால்கள் நடுங்குவதாக சரத் உணர்ந்தான். உதடுகள் பேசுவதற்கு துடித்தாலும் அவை ஒன்றறோடொன்று ஒட்டிக் கொண்டு வார்த்தைகளை இம்சை பண்ணியது.

“”யுவர் சைல்ட் இஸ் எஃபெக்டட் வித் ஒஃப்தல்மியா நியோநட்டோரம்… கன்ஜங்டிவிட்டிஸ்…. பேர்மமெனன்ட் லொஸ் ஒஃப் விசன்”

“”வாட் டு யு மீன்… டொக்டர்” பாதி விளங்கியும் பாதி விளங்காமலும்… குறிப்பாக அந்த கடைசி வார்த்தை பேர்மனென்ட் லொஸ் ஒஃப் விசன் அவனது உசிரில் குருதி உறையா நோயைத் தோற்றுவித்தது மாதிரி.

“”யெஸ் மிஸ்டர் சரத்… உங்க டோட்டருக்கு இப்ப வந்திருக்கிற எக்கியூட் நியூமோனியா குணமானாக் கூட…. அவவால இனி வெளி உலகத்த நிரந்தரமாகப் பார்க்கவே முடியாது. உங்களால உங்க வைஃபுக்கு கடத்தப்பட்ட கிளமீடியா உங்க வைஃப் மூலமா உங்க குழந்தைக்கு கன்ட்ராக்ட் பண்ணப்பட்டு அந்த நோயில இருக்குற பக்டீரியாக்களின்ர அதி தீவிர தொற்று குழந்தையின்ர பார்வைப்புலன முழுசாப் பறிச்சிட்டது… தரோவா குழந்தைய செக் பண்ணிட்டோம்”

“”நி..ஷா…தீதீ… டொக்டர் எங்கொழந்தக்கு அப்ப இனிப்பார்வையே வராதா…” இப்போது சரத் அழுதான்.

“”நெவர்…ஏஸ் எ டொக்டரா நான் உங்க குழந்தய கம்ப்ளீட்டா செக் பண்ணீட்டேன். நோ சான்ஸ் டு ரிகவர் விசன். அந்த பார்வை சக்தி முற்றிலுமா போயிட்டு… இங்க இல்ல… நீங்க உலகத்தின்ட எந்த மூலைக்கு கொண்டு போனாலும் இதுதான் பதில். எங்க டொக்டர்ஸ் டீம் உங்க குழந்தை சம்பந்தமா தரோவா எடுத்த முடிவு இது… புவர் பேபி…” அவருக்கும் வருத்தம் ஏற்பட்டிருக்கிறது என்பது அவரது வார்த்கைதளில் சுத்தமாகத் தெரிந்தது. மனுஷனாச்சே.
“”டொக்…ட…ர்” வேறு என்னதான் அவனால் பேசமுடியும். அவனது கழுத்தை சுவாசமே நெரித்தது.

“”நியூமோனியாவிலிருந்து முதல்ல உங்க குழந்தைய காப்பாத்தனும்… அதுக்காகத்தான் இப்ப நாங்க ரொம்பவும் போராடிட்டிருக்கோம். பைதபை… இம்மீடியட்டா உங்களுக்கும் உங்க வைஃபுக்கும் உங்க வியாதிக்குரிய ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சாகனும்… அதவர்வைஸ் உங்க ரெண்டு பேருக்குமே அது ரொம்ப ஆபத்து…”

“”…………”

“”சொரி டு சே… சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதிங்க… இத்தனைக்கும் காரணம் வேறு யாருமில்ல….நீங்கதான்”
அதி தீவிரமாக பயத்துடன் நூறுவீத கவலையுடனும் வெளியே கொரிடோரில் சோமாவதி இன்னும் விசும்பிக் கொண்டிருந்தாள் தனது கணவனை எதிர்பார்த்து.

– ஏப்ரல் 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *