பனங்காடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 7, 2017
பார்வையிட்டோர்: 6,618 
 

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி செல்லும் நெடுஞ்சாலையில் முப்பது கல் தொலைவில் இருக்கிறது இயக்கச்சி. முறைப்படி சொல்ல வேண்டுமானால், கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில் 169 கல் தொலைவில் இருக்கிறது ஊர். கிலோ மீற்றரில் சொல்வதென்றால், 270ஆவது கல்லில் இருக்கிறது அது. இப்போது இரண்டு கற்களும் அங்கே உண்டு. எந்தக் கல்லை வைத்தும் அடையாளம் கண்டுவிடமுடியும்.

யாழ்ப்பாண ராஜ்ஜியத்திலிருந்து கண்டி ராஜ்ஜியத்துக்குப் போகும் வழியே இந்த நெடுஞ்சாலை என்று சொல்வார் மாமா. ஐரோப்பியர்கள் முதலில் இலங்கையில் நெடுஞ்சாலைகளை அப்படித்தான் அமைத்திருக்கிறார்கள் என்பது அவருடைய வாதம். கண்டி ராஜ்ஜியத்திலிருந்து கொழும்பு கோட்டை ராஜ்ஜியத்துக்கும் கோட்டை ராஜ்ஜியத்திலிருந்து காலி – றுகுணு ராஜ்ஜியத்துக்கும் என்று இந்தப் பெருஞ்சாலைகளைப் போட்டிருக்கிறார்கள்.

இயக்கச்சி கொஞ்சம் பெரிய ஊர். பூர்வீகக் கிராமமல்லவா? அதனால் அது பரந்து விரிந்திருந்தது ஐந்தாறு சிற்றூர்களாக. அத்தனை சிற்றூர்களிலும் குளங்கள் உண்டு. குளங்களோடு சேர்ந்து வயல்களும். கூடவே ஒற்றையடிப்பாதைகள் அல்லது வண்டிப்பாதைகள். சிறிய, ஆனால் பழைய கோயில்கள். கோயில்களைச் சூழவும் மரங்கள். மருது, வில்வை, பூவரசு, கொன்றை, நாவல், வேம்பு, கொக்கட்டி, இலுப்பை என. மொத்த ஊர்களிலும் சேர்த்தால், அதிகப்படியாக அங்கே 1000 குடும்பங்களுக்குள்தான் உண்டு. இன்னும் நவீன வசதிகள் அதிகம் பரவவில்லை. அந்த ஊரிலிருந்து பூமியின் திசைகளெங்கும் ஆட்கள் புலம்பெயர்ந்து செல்வந்தர்களாகி விட்டார்கள். ஆனால் ஊர் இன்னும் அப்படியேதானிருக்கிறது. அவர்கள் அதை தங்களுடைய நினைவுச் சின்னமாக வைத்திருக்க விரும்பினார்களோ என்னவோ? அது பெரிய மாற்றங்களுக்குட்படவில்லை. அந்த ஊரின் வேரிலிருந்து முளைத்த தனவந்தர்கள், தாங்கள் வாழும் பிற இடங்கில் எப்படித்தான் வசதியாக இருந்தாலும் நூதனசாலையில் வைத்திருப்பதைப் போல தங்கள் ஊரை வைத்திருக்கிறார்கள்.

ஆனால், இயக்கச்சியில் ஏகப்பட்ட ரகசியங்கள் இருப்பதாக அறிந்தேன். ஊர் தற்போது அதிகம் புகழடைந்ததாக இல்லாமலிருந்த போதும் சரித்திரக் குறிப்புகளில் அதைப் பற்றிய பதிவுகள் ஏராளம் உண்டு. மிக நீண்டகாலத்திலிருந்து இப்போது வரையில் அதைப்பற்றி எழுதப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இப்படிச் சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கிற ஒரு ஊர் இன்னும் பெரிய வளர்ச்சியெல்லாம் கண்டிராதது ஏன்?

ஹொலண்டில் அகதியாகப் போய் அங்கே குடிமகனாகி விட்ட என்னுடைய மாணவர் ஒருவர் அங்கே தான் கண்ட சில சரித்திரக் குறிப்புகளை அனுப்பியிருந்தார். எல்லாம் இலங்கை பற்றியவை. தான் அகதியானதற்கான காரணங்களை அவர் தேடியபோது அவை கிடைத்தன என்று எழுதியிருந்தார். அப்படிக் கிடைத்த பல குறிப்புகள் மற்றும் சான்றுகளில் தன்னை அதிகம் கவர்ந்த சிலவற்றைத் தேர்;ந்து மேலதிக தகவல் அறியும் பொருட்டு எனக்கு அனுப்பியிருந்தார். அதில் இயக்கச்சி பற்றி இருந்த குறிப்புகள் அந்த ஊரைப்பற்றி அறியும் ஆர்வத்தை எனக்கு ஏற்படுத்தின.

ஒல்லாந்தர்கள் இலங்கையை ஆண்டபோது இயக்கச்சி அவர்களுக்கு முக்கியமான ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. யாழ்ப்பாணத்தை அவர்கள் ஆட்சி செய்தபோது, அதற்குப் பாதுகாப்பாக யாழ்ப்பாணத்தைச் சுற்றிப் பல கோட்டைகளைக் கட்டினார்கள். அப்பொழுது கிழக்கே இயக்கச்சியை மையமாக வைத்து மூன்று கோட்டைகளைக் கட்டினார்கள். ஒன்று இயக்கச்சியில் கட்டப்பட்டது. மற்ற இரண்டும் அதற்கு அருகிலுள்ள ஆனையிறவிலும் வெற்றிலைக்கேணிக் கடற்கரையிலும். எல்லாமே பத்து கிலோ மீற்றர் சுற்று வட்டாரத்தில். வெற்றிலைக்கேணிக் கோட்டைக்குப் பக்கத்தில் ஒரு வெளிச்சவீட்டையும் கட்டினார்கள்.

வன்னி மீதிருந்து படையெடுப்புகள் வருவதைத் தடுப்பதே இதற்குப் பிரதான நோக்கம். அப்பொழுது வன்னி ராஜ்ஜியங்கள் ஒல்லாந்தருக் கெதிராக கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தன. வன்னிப் படைகள் யாழ்ப்பாணத்துக்கு வரும் ஒரே பிரதான வழி இயக்கச்சி மையத்தில்தான் இருந்தது. எனவே, இந்தக் கோட்டைகளைக் கட்டி காவலிருந்தன ஒல்லாந்தப் படைகள்.

நான் அந்தச் சரித்திரக் குறிப்புகளை வைத்துக் கொண்டு இயக்கச்சிக்குப் போனேன். அது பனங்கள்ளுக் காலம். சித்திரை மாதம். அனலடித்தது வெயில். கொதித்தது நிலம். தெருவில் நிறைந்திருந்தது கள்ளு வாடை. ஆனால், சனநடமாட்டம் குறைவு. குடிசை வீடுகளே அதிகம். ஒன்றிரண்டு கல்வீடுகள். பனை மட்டையைப் பயன்படுத்தி அல்லது தென்னங் கிடுகைப் பயன்படுத்தி அடைக்கப்பட்ட வேலிகள். ஒழுங்காக அடைக்கப்படாத வேலிகளில் இன்னும் கிழுவை மரங்கள் முற்றிச் சடைத்து நின்றன. தற்போது அவை கைவிடப்பட்டிருந்தன. வண்டி, வாகனங்களின் புழக்கம் உள்ளுரில் குறைவு. ஊரின் முகப்பு பிரதான நெடுஞ்சாலை என்பதால், அதில் எந்த நேரமும் பறந்தோடும் வண்டிகள். பனை மரங்களும் தென்னந் தோப்புகளும் சாலையில் இரண்டு பக்கமும் நீண்டு பரந்திருந்தன. காய்த்துக் குலுங்கும் பனைகள். பனைகளுக்குப் போட்டியாகத் தென்னைகள். அல்லது தென்னைகளுக்குப் போட்டியாகப் பனைகள்தான் காய்க்கின்றனவோ. அங்கங்கே பெரிய பூவரச மரங்கள். பழைய வேலிகளாக இருக்கலாம். முத்தி முறுகி நூற்றாண்டுக்;கும் அப்பால் தாம் நின்றுகொண்டிருப்பதாகக் காட்டின. ஒரு சிறிய பள்ளி. பாசி படர்ந்த செங்கற் கட்டிடம். அதுவும் நூறாண்டுகள் கடந்தது. அதன் கட்டிட அமைப்பு அப்படியாக இருந்தது. பழைய கட்டிடத்தை அடுத்து இன்னும் சில கட்டிடங்கள். அவை பின்னர் கட்டப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பள்ளி எப்படி வளர்ந்திருக்கிறது என்பதை அந்தக் கட்டிடங்களை வைத்து மதிப்பிடலாம்.

ஊரின் முகவாயிலில் ஒரு கோவில். பெரிய சுவர்கள். முருகைக் கல்லினால் கட்டப்பட்டவை. அருகே கிணறு. அதுவும் முருகைக் கல்லினால் கட்டப்பட்டதே. அதைப்போல ஊரின் தென்கோடியில் காட்டுப்பக்கமாக உள்ள குளக்கரையில் இன்னொரு கோவில். அதுவும் முருகைக்கல்லினால் கட்டப்பட்டது. அங்குள்ள கிணறும் அப்படித்தான். பழமையை தன்முகத்தில் எழுதி வைத்திருந்தன அவையெல்லாம். இதெல்லாம் நீண்டகாலமாக இருப்பது வேறு. கிழடு தட்டுவது வேறு. பழமை நிரம்பியிருந்தபோதும் அது முதுமையடைந்ததாக இல்லை. இது அதிசயந்தான். மணலும் தென்னைகளும் முந்திரித் தோப்புகளும் வயலும் தரவை வெளியும் சிறு குளங்களும் கொண்ட ஊரில் பழமை அப்படியே உறைந்திருந்தது. மனிதர்கள் தொடர்ந்து வாழும் எந்த இடத்திலும் மாற்றங்கள் எப்படியோ நிகழ்ந்து விடுவதுண்டு. பல நகரங்களை இணைத்துச் செல்லும் பிரதான நெடுஞ்சாலையைத் தன்னுடைய மடியில் வைத்திருக்கும் ஒரு ஊர் பெருமாற்றங்களைக்குட்படாமல் தப்பிப்பிழைத்திருப்பது எங்ஙனம் என்று விளங்கவில்லை.

நான் போனபோது காலை வெயிலேறிக் கொண்டிருந்து. வெக்கையில் உடல் நனைந்தது. அந்த வெயிலில் மிதந்து வந்த கள்ளு வாடை தாகத்தைக் கிளர்த்தியது. கள்ளுப் பருகிய அனுபவம் இல்லை எனக்கு. என்றாலும், கள்ளைப் பற்றிய சரித்திரக்குறிப்புகள் தாகத்தைக் கிளர்த்தின. ஆமாம், கள்ளே அந்தச் சரித்திரக் குறிப்புகளை மீண்டும் நினைவுபடுத்தியது.

ஒல்லாந்தர்கள் இருந்தபோது இந்தக் கள்ளுத்தான் அவர்களைப் பெரிதும் கிறங்கடித்திருக்கிறது. அது எத்தனையோ விதமான நிகழ்ச்சிகளுக்கும் உணர்ச்சிச் சுழிப்புகளுக்கும் காரணமாக இருந்திருக்கிறது. போதையூட்டும் எந்தப் பானத்துக்கும் அப்படியொரு சக்தியுண்டு. என்றாலும் கள்ளு அவர்களுக்கு ஊட்டிய கிளர்ச்சிகள் மிகச் சுவாரசியமானவை.

இயக்கச்சியில் அவர்களால் கட்டப்பட்டிருந்த பைல் (pலட) கோட்டையிலிருந்து ஒரு சுரங்கப் பாதை (பதுங்ககழி) ஆனையிறவிலிருந்த பஸ்குலா (டீயளஉரடடய) என்ற கோட்டைக்கு உண்டு. சிப்பாய்கள் இந்தப் பதுங்ககழி நீட்டுக்கும் காவல் இருந்தார்கள். வன்னிப் படையெடுப்புகளை முறியடிப்பதற்காக அப்படிக் கடுங்காவல். அங்கேதான் அதிகாரிகளும் இருந்தார்கள். அதிலும் ஆனையிறவுக் கோட்டை சற்றுப் பலமானதாகவும் பெரியதாகவும் இருந்தது. முன்னே விரிந்து பரந்த பரவைக் கடலைப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்தக் கோட்டையில் எப்போதும் பரபரப்பும் கொண்டாட்டமும்தான். யாழ்ப்பாணக் கோட்டையிலிருந்து வரும் கொமாண்டர் ஆனையிறவுக் கோட்டையில் இரண்டு நாட்கள் தங்குவது வழமை. காற்றும் வெளியும் கலந்த இரவில், போதையின் கிறக்கத்தில், அவர்கள் ஒல்லாந்தின் நாடோடிப் பாடல்களையும் புதிய சங்கீதங்களையும் பாடுவார்கள். தங்கள் நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட மதுவை இரவிலும் பகலில் பனங்கள்ளையும் அருந்துவார்கள். பாடலும் ஆட்டமுமாகப் கழிந்த இரவு, மறுநாள் போதை நீங்கி விடியும். ஆனாலும் முதல்நாள் தூக்கக் கலக்கம் மிஞ்சியிருக்கும். அதைப்போக்க மறுபடியும் பகலில் பனங்கள்ளு.

ஆனையிறவுக் கோட்டைக்கு இயக்கச்சியிலிருந்தே கள்ளை எடுத்துச் சென்றார்கள். ‘பைல்’ கோட்டையிலிருக்கும் சிப்பாய்கள் கள்ளைச் சேகரித்து ‘பஸ்குலா’வுக்கு கொண்டு போனார்கள். அவர்களுடைய பாதுகாவற் பணியோடு அந்தப் பணியும் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் அதை அவர்கள் அறிக்கையிட முடியாது.

ஆனையிறவுப் பரவைக் கடலில் உப்புகாற்று வீசும். கோடை வெயிலை அள்ளிவரும் உப்புக் காற்று முகத்தை எரிக்கிறமாதிரி அடிக்கும். வெக்கையில் உடல் அனலாகக் கொதிக்கும். அந்தக் கொதிப்பு உண்டாக்கும் பெருந்தாகத்துக்கே இந்தப் பானம். இது சோமபானமா தேவபானமா என்று அவர்களுக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் விரும்பிக் குடித்த பானம் அது. இயக்கச்சிக் கள்ளு அதிகாரிகளை மயக்கிக் கிறங்கடித்தது. தலைமை அதிகாரிகள் சிலபோது அதை யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்தும் குடித்திருக்கிறார்கள்.

யாழ்ப்பாணக் கோட்டையே எல்லாக் கோட்டைகளுக்கும் பெரிய தலைமைக் கோட்டையாக இருந்தது. அங்கிருந்துதான் வடக்கு இலங்கையின் நிர்வாக பரிபாலனத்தைச் செய்தார்கள் ஒல்லாந்தர்கள். கப்டன் றொபேட் பனாஸ் அங்கேதான் இருந்தான்.

அந்த நாட்களில் டன்ஸ்ரன் ஹெய்ல்; என்ற இரண்டாம் நிலைத் தளபதி இயக்கச்சிப் பனங்கள்ளைப் பற்றி தன்னுடைய நாட்குறிப்பில் எழுதியதை இங்கே தருகிறேன்.

1756 ஏப்ரல் 16

‘இன்று காலை நானும் பஸ்குலா அதிகாரி மக்ஸ்வெலும் பஸூற்றாத் தளபதி எட்ரினும் பஸ்குலாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்குத் திரும்பினோம். எங்களோடு ஆறு சிப்பாய்களும் துணைக்கும் பாதுகாப்புக்குமாக வந்திருந்தார்கள். சனங்கள், கலவரம் நிரம்பிய முகத்தோடுதான் இன்னும் இருக்கிறார்கள். நாங்கள் எவ்வளவுதான் சொன்னாலும் எதையும் ஏற்றுக் கொள்கிறார்களில்லை. நாங்கள் உங்களுக்கு உதவத்தான் வந்திருக்கிறோம் என்று சொன்னாலும் அதை நம்ப மறுக்கிறார்கள். எங்களை எப்போதும் எச்சரிக்கையோடும் நம்பிக்கையில்லாமலும்தான் பார்க்கிறார்கள். அவர்களுக்கு எதுவுமே புரிய மாட்டேன் என்றே படுகிறது. அல்லது எங்களுக்குத்தான் அவர்களைப் பற்றி எதுவும் தெரியவில்லையா? அவர்களிடமிருக்கும் எங்களைப் பற்றிய அந்நியத்தனத்தை எப்படி நீக்குவதென்று புரியவில்லை. கள்ளருந்தும் போது சிலர் சொல்வதைப் பார்த்தால் இந்த இடைவெளி எப்போதும் இருக்கும் போலவே படுகிறது. ஆனால் வேறு சிலர், ‘எல்லாம் சரிவந்து விடும்’ என்றல்லவா சொல்கிறார்கள். எதை நம்புவதென்றுதான் புரியவில்லை.

காலை நேரம் என்பதால், குதிரைகள் அதிகம் களைக்கவில்லை. எங்களுக்கும் களைப்பு அதிகம் இல்லை. இரவு அதிக நேரம் தூங்காதிருந்ததால் சற்றுச் சோர்வாக இருந்தது. மற்றப்படி எதுவும் இல்லை. என்றாலும் தாகமெடுத்தது. காலையிலேயே வெயில் வெக்கை அதிகம். மிருசுவில் என்ற கிராமத்தில் உள்ள தென்னந்தோப்புக்கு அருகில் இளைப்பாறினோம். இனி அங்கிருந்து வேறு குதிரைகளில் பயணம் தொடங்கும். அங்கே இந்த இடை மாறுதலுக்காக ஒரு கொட்டாய் இருக்கிறது. சாவடியும் உண்டு. சிப்பாய்களும் உண்டு. இங்கிருக்கும் சிப்பாய்கள் வரணிக் கள்ளே சிறந்ததென்று சொல்கிறார்கள். நான் இரண்டையும் பருகியிருக்கிறேன். ஆனால் இயக்கச்சிக் கள்ளுக்கு ஒரு தனிப் போதையும் ருஸியும் உண்டு. இல்லையென்றால் கப்டன் என்னிடம் அந்தக் கள்ளைக் கொண்டு வரும்படி கேட்பாரா?

இளைப்பாறும்போது தாகத்துக்கு கள்ளுப் பருகலாம் என்றார் எட்ரின். வரணிக் கள்ளை காலையிலேயே சேகரித்து வைத்திருந்தார்கள் சாவடிச் சிப்பாய்கள். ஆனால் ‘இயக்கச்சிக் கள்ளுத்தான் வேண்டும்’ என்றார் மக்ஸ்வெல். அவர் ஒரு சுவைப்பிரியர். யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் சென்ற கள்ளில் கை வைத்தார் அவர். கை வைத்தவர் அப்படியே வாயையும் நனைத்து விட்டார். பிறகென்ன? எடுத்து வந்த கள்ளில் பாதி தீர்ந்து விட்டது. பதிலாக வரணிக்கள்ளை சாடிகளில் நிரப்பிவைத்தோம். கப்டனுக்கு முதலில் கைவசமிருக்கும் இயக்கச்சிக் கள்ளைக் கொடுப்பதென்றும் பிறகு வரணிக் கள்ளை வார்ப்பதென்றும் மக்ஸ்வெல் சொன்னார். ஆரம்பிக்கும்போதே சுவையின் வேறுபாடுகள் தெரியும். போதை ஏறத்தொடங்கினால் வேறுபாடுகள் தெரியாது என்பது மக்ஸ்வெல்லின் அனுபவம்.

என்னவோ தெரியவில்லை, கள்ளைக் கண்டவுடன் கோபம், பகை எல்லாம் மறந்து போய்விடுகிறது. இல்லையென்றால், இரவு நடந்த வாக்குவாதமும் சண்டையும் இப்படி சாதாரணமாகவே முடிந்திருக்குமா? இதில் வேடிக்கை என்னவென்றால் அந்தச் சண்டையும் வாக்குவாதமும்கூட கள்ளினால் வந்ததுதான்.

இரவு, மூன்று கோட்டைத் கப்ரன்களும் ஒன்றாகக் கூடினோம். அது வாராந்தச் சந்திப்பு. மாத ஒன்று கூடலுக்காகவும் பிரதம தளபதியைச் சந்திப்பதற்காகவும் காலையில் யாழ்ப்பாணம் செல்ல வேண்டும் என்பதால் நிலவரங்களை மதிப்பிடவும் அதற்கான அறிக்கைகளை தயார்ப்படுத்துவதற்காகவும் இந்தச் சந்திப்பு நடந்தது.

எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு இரவுணவுக்கு முன்னர் மது அருந்தினோம். நிலவு மெல்ல எழுந்து கொண்டிருந்தது. கடற்பறவைகள் வானத்தில் சத்தமிட்டவாறு பறந்து கொண்டிருந்தன. கடற்பறவைகளின் சத்தத்தைக் கேட்ட காவலர்கள் எச்சரிக்கையானார்கள். அந்தவொலி அவர்களுக்கு நன்றாகப் பரிச்சயமாக இருந்தாலும் படை நெறியின்படி அவர்கள் எந்த அந்நியச் சத்தத்துக்கும் எச்சரிக்கையாகவே இருந்தனர். அதைவிடவும் வேறு இப்போது மூன்று கோட்டைகளின் அதிகாரிகளும் இருக்கிறார்களல்லவா. எனவே கண்காணிப்பை அதிகரித்திருந்தார்கள். அது அங்கே இருந்த அமைதியைச் சிறிது நேரம் பாதித்தாலும் பிறகு நிலைமை சாதாரணமாகி விட்டது.

முதல் சுற்றில் எங்கள் நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட மதுவை அருந்தினோம். அப்போது உலகில் ‘எந்த நாட்டு மது தரமானது?’ என்ற வாதம் பிறந்தது. ஆனால் மக்ஸ்வெல் இரவுக்கும் கள்ளையே அருந்தினார்;. பகலில் அவர் சற்று மிதமான போதையில் இருந்தார். அது இன்னும் தீரவில்லை. ‘மதுவிலும் பெண்களிலும் அப்படி வேறு படுத்திப் பார்க்க முடியாது’ என்று சொன்னான் எட்ரின். எட்ரின் எங்கள் இருவருக்கும் இடை வயதுடையவன். நான் அவனை விடவும் மூன்று வயது அதிகமானவன். எட்ரினின் பேச்சுக்கு பதிலேதும் சொல்ல விரும்பாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் இலங்கைக்கு வருவதற்கு முதல் இரண்டாண்டுகள் இந்தியாவில் பணி செய்தவன். ஒல்லாந்திலிருந்து இலங்கைக்கிடையில் ஆறு நாடுகளில் பயணம் செய்திருக்கிறான். இன்னும் சொன்னால் என்னையும் மக்ஸ்வெலையும் விட எட்ரின் அழகானவன்.

எட்ரின் தொடர்ந்து சொன்னான். ‘எந்த மதுவிலும் சுவையும் போதையும் உண்டு. அதைப்போல எந்தப் பெண்ணிலும் இனிமையும் கனவும் இருக்கிறது’ என்று. அவனுடைய கண்களில் போதை நிரம்பித்தத்தளித்தது. அவன் அந்த இரவில் இறக்கைகள் முளைத்த பறவையானான். நான் அவனையே வியப்போடு கவனித்துக் கொண்டிருந்தேன். அது எனக்கு வேடிக்கையாகவும் பட்டது.

‘பெண்ணுடல் ஒரு இனிய பண்டம். அது வியப்பூட்டும் அதிசய நிலப்பரப்பு. நெகிழ்ச்சி நிரம்பிய நீர்மை அது. கனிவும் அன்பும் உள்ளுறைந்த அவ்வுடல் எல்லையற்று விரிந்த வானம். நெருப்பு. விநோதமே அதன் இயல்பு…’ அவன் சொல்லிக் கொண்டேயிருந்தான்.

மக்ஸ்வெல் நிமிர்;ந்து உட்கார்ந்திருந்தார். அவருள்ளிருந்த ஒரு போதை இறங்க, இன்னொரு போதை ஏறியது. எட்ரினின் இந்த வியாக்கியானங்கள் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கின. நான் எட்ரினையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் பல திசைகளில் பயணித்திருக்கிறான். பல வழிகளில் பயணித்திருக்கிறான்? அதெல்லாம் அவனுக்கு அனுபவப் பரப்பை விரித்திருக்கின்றன. அனுபவத்துக்கு வயது முக்கியமல்ல. மக்ஸ்வெல் எங்கள் இருவரையும் விட இளையவர். ஆனால் படிப்பிலும் உலக விவகாரங்களிலும் அவர், அதிகம் தெரிந்தவராக இருந்தார். எதிலும் பதற்றமடையாத இயல்புடையவர். எந்த விசயத்தையும் ஆழ்ந்து நோக்குவார். அதனால் எங்களிடத்தில் அவருக்கு தனியான மதிப்பிருந்தது. ஆனால், இப்போது எட்ரின் சொல்லும் விசயம் வேறு. இது எல்லோருக்கும் பொதுவல்லாத அனுபவம்.

எதையும் சுவைப்பதில், அதன் ருஸியை அறிவதில் மிக நுட்பமான ரசனையுடையவர் மக்ஸ்வெல். என்றபோதும் எட்ரின் சொல்லுவதை அவரால் அப்படி உணரமுடியவில்லை. அவர் ஒவ்வொன்றிலும் வௌ;வேறு சுவைகளை அறிந்தவர். அதற்காகவே அவர் இப்போது கள்ளைக் குடித்திருக்கிறார். கோடைகால இரவில் கள் அருந்தினால் எப்படியிருக்கும் என்று பார்க்க விரும்பினார். இதுதான் மக்ஸ்வெல். மனம் எதை விரும்புகிறதோ அதற்கு முழு ஒப்புதலை அளித்து விடுவார். கடிவாளம் இல்லாத மனம் அவருடையது. எண்ணற்ற குதிரைகள் அதனுள்ளிருந்தன. அவற்றுக்குச் சிறகுகளும் இருந்தன.

எல்லோரும் இரவு விருந்தில் ஒல்லாந்தின் மதுவைக் குடிக்கும்போது அவர்; மட்டும் கள்ளைக் குடித்தார். இதையிட்டு அவர் எந்தத் தயக்கமும் கொள்ளவில்லை. மக்ஸ்வெல்லை நாங்களும் அறிந்திருந்ததால், அவர் விருப்பத்துக்கே விட்டு விட்டோம்.

கள்ளின் போதை உப்புக் காற்றில் அதிகமாகும்போது, அந்த நிலவொளியில் மெல்ல மக்ஸ்வெல் பாடினார். அதுவோரு காதற்பாட்டு. அது மெல்ல பிரிவுத் துயரைச் சொல்லும் நீண்ட பாடல். நான் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். எட்ரின் அவரை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு தலையை மேலே உயர்த்தி, வானத்தைப் பார்த்தான். மக்ஸ்வெலின் குரல் சோகத்தில் இழைந்தது. அவர் அப்படிப் பாடுவார் என்று நான் எண்ணியிருக்கவேயில்லை. அமைதியான மெல்லிய குரல். ஒழுங்கும் தாளமும் கலையாத மனதின் பயணம் அது. என் மனம் தளரத் தொடங்கியது. பார்வைகள் மங்கின. எதிரே விரிந்த அந்தச் சிறு விடுதி மண்டபம் மெல்ல மேலே உயர்ந்து பறப்பது போல உணர்ந்தேன். எங்கே போகிறேன்? எங்கே? எங்கே…?

மக்ஸ்வெல்லின் குரல் எங்கோ தொலைவில் கேட்பது போலவும் மிக அண்மையில் கேட்பது போலவுமிருக்கிறது. அதுவொரு மாயநிலை. நான் ஒரு கணம், தடுமாறிய பின் சுதாகரித்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன். எட்ரினின் கண்களில் தாகமும் சோகமும் ஒன்றிணைந்து சுடர்விட்டெரிந்தது. மெல்லிய சுடரொளியில், நிலவின் பின்னணியில் அவனுடைய முகம் தகதகத்துக் கொண்டிருந்தது. அவனுடைய மனதின் தத்தளிப்பை அதில் கண்டேன். என்னுடல் மெல்ல நடுங்குவதை உணர்ந்தேன். அது மனதின் பதற்றமா? அல்லது உடல் கொள்ளும் தாகமா?

மக்ஸ்வெல் பாடலை முடித்தபோது எட்ரின் எழுந்து விடுதியின் கிழக்குப் பக்கச் சுவரருகில் நின்று நிலாவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். நான் மக்ஸ்வெல்லின் தோள்களை அணைத்து கைகளைக் குலுக்கினேன். என்னுடைய கண்கள் கலங்கியிருந்ததை அந்த நிலவொளியில் அவர் கண்டிருக்க வேண்டும். என் கைகளை இறுகப் பற்றினார். அவற்றில் என்னுடைய மனதின் பதற்றத்தை உணர்ந்திருப்பார் போலும்.

‘மதுவும் பெண்ணும் மட்டும் ஒரே சுவையோடு இருப்பதில்லை. நமது துயரமும் மகிழ்ச்சியும் பிரிவும் கூட ஒரே விதமானவைதான். இல்லையென்றால், நாம் இப்போது இப்படி ஒன்றாக இந்தத் துயரை உணர்ந்திருப்போமா? நீங்கள் நினைத்தீர்களா இப்படி ஒரு சோகம் எதிர்பாராமலே எங்களின் மீது கவியும் என்று. இது எங்களுக்குள்ளே இருந்த துயர். இன்னும் இருக்கின்ற துயர். நான் எதிர்பார்த்தேனா இந்தத் துயரை மீட்டுவேன் என்று. ஆனால் அது எதிர்பாராமல் விழித்துக் கொண்டது.’

மக்ஸ்வெல் சொல்வது முற்றிலும் உண்மை. அவர் குடித்;த கள்ளும் நாங்கள் குடித்த ஒல்லாந்து மதுவும் ஒரே உணர்வையே கிளர்த்தியிருக்கின்றன. எட்ரின் சொன்னதைப்போல எல்லா மதுவும் அடிப்படையில் ஒன்றுதானா? சரி, அதை விடுவோம். எங்கள் நிலை எப்படியிருக்கிறது? வீட்டைப் பிரிந்து, குடும்பத்தைப் பிரிந்து இன்னொரு தேசத்தில் இப்படிக் கிடந்து துக்கப்பட வேண்டியிருக்கிறதே. நான் எதுவும் பேசமுடியாமல் அமைதியாக இருந்தேன். மனம் ஒல்லாந்தில் சுழன்றது. என் குழந்தைகள் என்ன செய்வார்கள்? அவர்களைப் பார்த்து இப்போது நான்கு ஆண்டுகளாகிவிட்டன. இந்த இலையுதிர்காலத்தில் வீட்டுக்குப் போகலாம் என்று விண்ணப்பித்திருக்கிறேன். ஆனால், விடுமுறைக்கு அனுமதிப்பார்களோ தெரியவில்லை. நான் வீட்டிலிருந்து வெளியேறும்போது இரண்டாவது குழந்தைக்கு மூன்று வயதாகியிருந்தது. இப்போது அவள் பள்ளிக்குப் போவாள். மனைவி எப்படியிருப்பாள்? மெலிந்திருப்பாளா? அல்லது குண்டாகியிருப்பாளா? இறுதியாக வந்த கடிதத்தில் அவள் தன்னைப்பற்றி எதனையும் எழுதவில்லை. என் மனதைக் குழப்பக்கூடாது என்று நினைத்திருப்பாள். அவள் எப்போதும் அப்படித்தான். ஆழமாகவும் நிதானமாகவும் சிந்திப்பாள். இந்த மாதிரி தூரத்திலிருக்கும்போது மனம் குலையக் கூடாது என்று அவளுக்குத் தெரியும். ஆனால் இப்போது அதெல்லாவற்றையும் கடந் மனம் குலைந்து விட்டதே. மக்ஸ்வெல்லின் பாடல் அதைக் கரைத்து விட்டதே. அந்தப் பாட்டோடு கலந்த மது அதை இன்னும் பெருக்கிக் கொண்டிருக்கிறது. என்னால் இந்தத் துக்கத்தைத் தாங்க முடியவில்லை. ஓ… ஆண்டவரே, எனக்கு வழிகாட்டும். என்னுடைய பாதைக்கு ஒளியூட்டும். இந்தச் சிறையிலிருந்து என்னை விடுவியும்.

ஓ… அப்படியென்றால், நான் இப்பொழுது சிறையிலிருக்கிறேனா? நிச்சயமாகச் சிறைப்பட்டே இருக்கிறேன். இல்லையென்றால், இந்த மாதிரி குடும்பத்தைப் பிரிந்து, நாட்டைப் பிரந்து தவிக்க வேண்டியிருக்காதே. நினைத்தவுடன் அவர்களிடம் செல்ல முடியாத அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறேன். இந்த நிலையை எளிதிற் கடக்க முடியாது. இப்படி இருக்கும் போது சிறைப்பட்டிருத்தல் அன்றி வேறென்ன? ஆனால், நாங்கள் அல்லவா இங்குள்ள சுதேசிகளைச் சிறைப்படுத்தி வைத்திருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்களே. அப்படியிருக்கும்போது நான் எப்படி சிறையிருப்பதாக எப்படி அர்த்தமாகும்? அவரவர் நிலைமைகள்தான் இப்படியெல்லாம் எண்ண வைக்கின்றனவா! ஒரே குழப்பமாக இருந்தது.

நான் வீட்டில் விடைபெற்றபோது, அந்த அதிகாலையில், மழை கொட்டிக் கொண்டிருந்தது. குழந்தைகள் தூக்கக் கலக்கத்திலிருந்தன. அவளுடைய கண்களில் பிரிவுத்துயர் அலையடிக்கும் கடலாகப் பளபளத்தது. இன்னும் அந்தக் கண்களை மறக்க முடியவில்லை. அது துக்கக் கடலாக அச்சுறுத்தின. அவற்றைப் பார்க்க அஞ்சியது இன்னும் நினைவிருக்கிறது. எவ்வளவோ ஆறுதல் சொன்னபோதும் அந்தக் கண்களில் எந்த மாறுதலையும் காணமுடியவில்லை. இப்போதும் அது அலையடித்தவாறு அப்படியேதானிருக்குமா?

கவனத்தைத் திருப்பி, எட்ரினைப் பார்த்தேன். அவன் வெளியே பரவைக் கடலைப் பார்த்துக்கொண்டேயிருந்தான். மனம் அலைமோதிக் கொந்தளித்துக் கொண்டிருப்பதை அவனுடைய கண்கள் காட்டின. மக்ஸ்வெல் எழுந்துபோய் அவனுடைய தோள்களை ஆதரவாகத் தடவினார். அவன் திரும்பவேயில்லை. ‘எட்ரின் யாருக்குத்தான் கவலையும் ஏக்கமும் இல்லை. என் மனதில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் உணர்ச்சிகளைப் பார்த்தாயா? இன்று மட்டும் இப்படி நான் பாடவில்லை. தினமும் இப்படி மனதுக்குள்ளே பாடிக்கொண்டும் ஏங்கிக் கொண்டுமிருக்கிறேன். கடவுள் என் பக்கத்துக்கு வரவோ என்னுடைய கேள்விகளையும் கோரிக்கைகளையும் செவிமடுக்கவோ விரும்பவில்லை. ஆனாலும் என்ன செய்ய முடியும்? ஆழமாகச் சிந்தித்தால் நாம் வீணாகவே இப்படித் துயரப்படுவது புரியும். நாம் மட்டுமா, எங்கள் குடும்பங்களும் இப்படித்தான் துக்கப்படுகின்றன. பிள்ளைகளைத் தேவையில்லாமல் பிரிந்திருக்கிறோம். நாட்டையே விட்டு இப்படி இவ்வளவு தொலைவுக்கு வரவேண்டிய காரணம்தான் என்ன? எல்லாமே தேவையற்ற, பைத்தியக்காரத் தனமாகவே இருக்கிறது…’

அவர் சொல்லிக் கொண்டேயிருந்தார். அவர் சொல்வதில் நிறைய உண்மையுண்டு. நானே இதைப்பற்றிச் சிந்தித்திருக்கிறேன். எதற்காக இவ்வளவு தொலைவுக்குப் பயணித்து, அபாயங்களை எல்லாம் கடந்து இங்கே இன்னொரு நாட்டுக்கு வந்தோம். இதனால் நமக்கென்ன லாபமுண்டு? யாருக்காக வந்தோம்? சரி, இங்கே வந்துதான் இந்த மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடிந்ததா? இவர்கள் எங்களை எப்பொழுதும் அந்நியராகவே, எதிரிகளாகவே, நம்பமுடியாதவர்களாகவே பார்க்கிறார்கள்.

‘நாங்கள் மீள முடியாத பெரும் சுழியினுள் சிக்கியிருக்கிறோம், நண்பர்களே. பாருங்கள், யாருக்கோ வெற்றி. அவர்களுக்கே மகிழ்ச்சி. அவர்களுக்கே பெருமை. ஆனால், அதற்காகவெல்லாம் நாங்கள் சிலுவை சுமந்துகொண்டிருக்கிறோம். நானில்லாமல் என் குழந்தைகள் எப்படித் தவிப்பார்கள்? என்னால் அதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஒல்லாந்தின் தெருக்களைப் பற்றிய ஞாபகம் வந்தாலே நான் அதை மறக்க முயல்கிறேன். இந்தக் கடலோசை இருக்கிறதே, அது எப்போதும் ஒல்லாந்தின் நினைவுகளை மீட்டுவதற்காகவே இருக்கிறதைப்போல படுகிறது. அல்லது என்னை என் தேசத்துக்குப் போகும்படி அது சொல்கிறதா? அல்லது என் கடற்கரையை அது மறந்து விடாமல் நினைவூட்டுகிறதா? பூமியின் எல்லாக் கடல்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் இப்படி அந்த உணர்வைக் கிளர்த்துகின்றதா?’ மக்ஸ்வெல் தன் மனதைத் திறந்தார். என்ன ஆச்சரியம். நான் நினைப்பதைப்போலவே அவரும் பேசுகிறாரே. துயரத்தின் மொழி ஒரே மாதிரித்தான் இருக்குமா?

‘நிறுத்துங்கள் தயவுசெய்து’ என்று மெதுவான குரலில் எட்ரின் சொன்னான். அதற்குமேல் அவனால் ஒரு சொல்லையும் தாங்க முடியாது என்பதாக அந்தக் குரல் ஒலித்தது. அவன் கண்கள் கெஞ்சித் தவிப்பதை அந்த நிலவொளியில் கவனித்தேன். ‘பிதாவே, இதென்ன கொடுமை? ஒவ்வொருவருக்குள்ளும் எவ்வளவு வேதனைகள். எதற்காக இதெல்லாம். நாங்கள் செய்யும் காரியங்களுக்கான தண்டனையாய் இதெல்லாம் கிடைக்கின்றனபோலும்”.

மக்ஸ்வெல் எதுவும் பேசாமல் அப்படியே நின்றார். நான் நிலைகொள்ள முடியாமல் தவித்தேன். அது துயரூற்றும் பொழுதாக இருந்தது. கடவுள், எங்களைக் குறித்துச் சிந்திக்கும் தருணமொன்றை இப்படி அருள்கின்றாரா என்று எண்ணினேன். ‘இறைவனே, எம்மை மன்னித்தருளும். எம்மை நீர்தான் மீட்டு ரட்சிக்க வேணும்’ என மன்றாடினேன்.

கனத்த அமைதி. பளீரென ஒளிர்ந்து கொண்டிருந்தது நிலவு. அந்த ஒளியில் பளபளத்தது கடல். நான் ஒல்லாந்துக்கும் ஆனையிறவுக்குமிடையில் கிடந்து தவித்தேன். என்னுடைய பாலம் தகர்ந்து போயிருந்தது.

‘என்ன பேசுகிறீர்கள்? பைத்தியம் பிடித்து விட்டதா உங்களுக்கெல்லாம்? போதை ஏறினால் எல்லாமே தலை கீழாகிவிடுமா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், நாங்கள் எதற்காக இங்கே வந்தோம். யாருக்காக வந்திருக்கிறோம்? எங்கள் தாய் நாட்டுக்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். தாய் நாடு எங்களை நம்பியே இருக்கிறது. ஆமாம் எங்களை நம்பி. அதை நாம் மறந்து இப்படிப் பைத்தியக்காரத்தனமாகப் பேசிக் கொண்டிருக்கலாமா?’ இப்படி எட்ரின் பேசுவான் என்று நான் சிறிது கூட எண்ணவேயில்லை. அது இப்படியான பேச்சை எதிர்கொள்ளக்கூடிய சூழலுமாக இருக்கவில்லை. மக்ஸ்வெல் அதிர்ந்தே விட்டார். அவருடைய கண்கள் கோபத்தில் நிறம்மாறிக் கொப்பளித்தன. மேலும் கீழுமாக அழுத்தமாகத் தலையை ஆட்டினார். நிலைமை விபரீதமாகப்போகிறது என்பதை அவதானித்தேன். ஆனாலும் மக்ஸ்வெல் அமைதியாக, எதுவும் பேசாதிருந்தது அந்தக் கணத்தைச் சூடாக்கவில்லை.

‘நமக்கு துக்கம் இருக்கிறது என்பதற்காக நாம் அதற்குள் அமிழ்ந்து போகலாமா? எங்களுடைய துக்கங்களும் பிரிவும் பெரிதா, எங்களுக்கான கடமைகள் பெரிதா? என்னுடைய கடமைக்காகவே ஒல்லாந்திலிருந்து இந்த மது அனுப்பப்பட்டிருக்கிறது. ஒல்லாந்திலிருந்து வரும் அதிகாரம்தான் இங்கேயும் எங்களை அதிகாரிகளாக வைத்திருக்கிறது. இதையெல்லாம் நாங்கள் மறந்து விடமுடியுமா?’ எட்ரின் என்ன சொல்கிறான்? எங்களுக்கு எதுவுமே புரியாது என்று நினைத்து விட்டானா? அல்லது நாங்கள் சமநிலை குலைந்திருக்கிறோம் என்று கருதியுள்ளானா? இல்லை தனக்குத்தான் எல்லாமே தெரியும் என்று சொல்கிறானா? கோபம் என் நெஞ்சில் நிரம்பியபோதும் அமைதி காத்தேன். ஆனால், மக்ஸ்வெல் கட்டுடைந்து விட்டார்.

‘நிறுத்து, எட்ரின். உனக்கு மட்டும்தான் தாய்நாட்டின் மீது பாசம் இருக்கென்று காட்டாதே. எங்களுக்கும் இருக்கிறது. அதற்காக உனக்குள்ளிருக்கும் உண்மையான உணர்ச்சிகளை மறைக்காதே. உனக்குள்ளே இருக்கின்ற பிரிவுத்துயரை உன்னால் மறைக்க முடியாதபோதுதான் இப்படி அதற்கு ஒரு திரையைப் போட முயற்சிக்கிறாய். யாருக்கு இந்த வேஷமெல்லாம் வேணும்? தாய் நாட்டுக்காகப் போராடுவது வேறு. இன்னொரு நாட்டில் அதிகாரம் பண்ணுவது வேறு. இப்போது நாம் பார்க்கிறது என்ன காரியம்?’

‘ஒல்லாந்தைப் பாதுகாக்க வேணுமென்றால் இப்படி இந்தியா இலங்கையை எல்லாம் நாங்கள் பிடிக்கத்தான் வேணும். ஐரோப்பாவில் நாங்கள் சிறிய நாடு. அங்கே மற்ற நாடுகளிடமிருந்து எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்றால் இப்படி இந்த நாடுகளைப் பிடித்து எங்களைப் பலமாக்கத்;தான் வேணும்’

‘உன்னுடைய போதைக்காக என்னவெல்லாம் செய்வாயா?’ என்றார் மக்ஸ்வெல். அவர் இப்போது என்னெதிரில் நின்றார். முகம் சிவந்திருந்தது. ஒரு சிங்கத்தைப் போலத் தோற்றம் காட்டினார்.

‘இது போதையல்ல. தேவை. நீங்கள் யாருக்காகப் பரிந்துரைக்கிறீர்கள்? உங்களின் பிரிவுத்துயருக்காகவா, அல்லது இந்த நாட்டு மக்களுக்காகவா? எதற்காக உங்களின் கருணை? யாருக்காக உங்களின் நியாயம்?’ எட்ரின் நேரிடையாகவே ஈட்டியை இறக்கினான்.

விவாதம் எல்லைகடந்து விரிந்து கொண்டு போனது. ‘இந்தா பார்;, எட்ரின். நாங்கள் மட்டும் நீ சொல்வதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் அப்படிப் பேசவில்லை. உன்னைப் போலவே நாங்களும் தாய் நாட்டுக்காக எங்கள் குடும்பங்களைப் பிரிந்துதான் வந்திருக்கிறோம். உன்னைப் போலவே பணி செய்கிறோம். ஆனால் நமக்குள் துடித்துக் கொண்டிருக்கும் உண்மையை, அதன் ஆன்மாவை ஒரு கணம் நாம் கண்டு பேசுவது தவறா? எங்களை நாங்களே எதற்காக ஏமாற்றிக் கொள்ள வேணும்?’ நான் பக்குவமாகச் சொன்னேன். அவனுடைய கோபத்தைக் கட்டுப்படுத்தி அவனை உண்மையை நோக்கி அழைத்து வர வேணும் என்று விரும்பினேன்.

அவன் சில கணம் அமைதியாக இருந்தான். மக்ஸ்வெல் என்னைப் பார்த்தார். அமைதியாக இருக்கும் படி அவருக்குச் சமிக்ஞை செய்தேன். ‘நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் மக்ஸ்வெல்லைப் பாருங்கள். அவன் என்ன சொல்கிறான் பார்த்தீர்களா? நம்மைத் தளரச் செய்யும் உபதேசம். இது எங்கே வந்து தனியே தவிக்கும் எங்களை இன்னும் என்ன நிலைமைக்கு ஆக்கும் தெரியுமா?’ அவனுடைய மனதுக்குள் கொதிக்கும் எரிமலையைக் கண்டேன்.

‘வாயைப் பொத்து. என்ன, உனக்கு மட்டும்தானா தாய்நாட்டின் மீது விசுவாசம் உண்டு? எங்களுக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கிறது என்று நினைக்கிறாயா? நீ என்ன நடிக்கிறாயா? வார்த்தையை அளந்து பேசு’ என்று மக்ஸ்வெல் சண்டைக்கே போய்விட்;டார்.

‘உன்னால்தான்; பிரச்சினையே வந்தது. நீ குடித்துக் கும்மாளமடிக்கவே விரும்புகிறாய். உலகைச் சுற்ற விரும்பினாய். அதற்காக வந்தாய். இப்போது வீட்டு நினைவு வந்து விட்டது. அதற்காக குடிக்கிறாய். உன்னைப் போல என்னால் இருக்க முடியாது. அது பெருந்தப்பு. நீ தான் துக்கத்தைப் பெருக்கி எங்களைச் சிதைக்கப் பார்க்கிறாய். இன்று போதையில் நீ பாடிய பாட்டுத்தான் இவ்வளவுக்கும் காரணம்’ எட்ரின் குற்றஞ்சாட்டியதை மக்ஸ்வெல்லால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. திரும்பி எட்ரினை நெருங்கினார். ஏதும் விபரீதம் நிகழ்ந்து விடக்கூடாது என்று நான் இடையில் குறுக்கிட்டேன். ‘சரி, சரி, எல்லாhவற்றையும் விட்டு விடுங்கள். இவ்வளவு தூரம் வந்து தனியாக நிற்கிறோம். இதற்குள் எதற்காக வீணான சண்டைகள்? என்று அமைதிப்படுத்தினேன்.

‘இல்லை. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். என் துக்கத்தை இவர் கிளறி வேடிக்கை பார்க்கிறார். என்னால் அதைத்தாங்க முடியவில்லை. கடவுளே, எதற்காக இவர் இப்படிச் சோதிக்கிறார்..?’ எட்ரின் விம்மினான் இதை மக்ஸ்வெலும் எதிர்பார்க்கவில்லை. நானும் எதிர்பார்க்கவில்லை. ஒன்றும் புரியாமல் தடுமாறினேன்.

‘நண்பர்களே, நான் வீட்டை நினைக்க விரும்புவதில்லை. அப்பாவைப் போர்க்களத்தில் சிறு வயதிலேயே இழந்தவன் நான். அம்மா என்னை வளர்க்கப் பெருங் கஸ்ரங்களைச் சந்தித்தார். பிறகு நான் வளர்ந்து இப்படி படையில் இணைந்து விட்;டேன். பரதேசியாக நாடுகடந்து போகும்போது அம்மா அதை விரும்பவில்லை. இப்போது அம்மாவும் இல்லை. நான் அருகில் இல்லாத துக்கத்தில் அவர் இறந்துவிட்டார். இப்போது மனைவியும் என்னை விட்டு வேறு ஒருவனுடன் சேர்ந்து விட்டதாக அறிந்தேன். அவள் எத்தனை நல்லவளாக இருந்தாள்? எவ்வளவு அழகானவள்? எல்லாவற்றையும் இழந்து விட்டேன்?” எட்ரின் குலுங்கிக் குலுங்கி அழுதான்;. முற்றிலும் எதிர்பாராத திசையில் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. நான் எட்ரினை ஆறுதற் படுத்தினேன். மக்ஸ்வெல் அவனை அணைத்துத் தேற்றினார். ஆனால் எட்ரின் அவர்மீது சீறிப் பாய்ந்தான். அவனுள்ளிருந்த அந்த துக்க ஊற்றை அவர் சீண்டி விட்டார் என்ற கோபம் அவனுக்கு. இறுதியில் நான் இருவரையும் தேற்றி ஆறுதற் படுத்த வேண்டியதாயிற்று. இதனால் நீண்ட நேரத்தின் பின்னே தூங்கப் போனோம்.

எல்லாத்துக்கும் காரணம் இந்தப் பனங்கள்ளு என்றுதான் தோன்றுகிறது. இப்போது அதுவே எட்ரினையும் மக்ஸ்வெல்லையும் சமாதானமாக்கியிருக்கிறது. இந்தக் கள்ளையே யாழ்ப்பாணக் கோட்டை அதிகாரிகளுக்கும் பிடித்திருக்கிறது. அங்கேயும் இதுபோல ஏதாவது விவகாரங்கள் வருமோ. இதுபோல பல சுவையான குறிப்புகள் இன்னும் என்னுடைய அந்த மாணவர் அனுப்பிய சரித்திரத் தகவல்களில் உண்டு.

இந்த மூன்று கோட்டைகளையும் கட்டும்போது தாங்கள் பட்ட சிரமங்கள், வன்னியிலிருந்து எடுக்கப்பட்ட படையெடுப்பு, தண்ணீரை எடுப்பதற்காக மக்கள் பயன்படுத்திய கிணறுகள், ஆனையிறவுக் கடல் ஏரி பெருக்கெடுத்தபோது அதில் அடித்துச் செல்லப்பட்ட ஒல்லாந்துச் சிப்பாய்கள் என்று பல. முக்கியமாக கோட்டையைக் கட்டுவதற்கான கற்கள் இந்தப் பகுதியில் கிடையாது. எல்லாவற்றையும் யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் இருந்தே கொண்டு வரவேண்டியிருந்தது என்ற விவரங்கள் என்பவையும்.

00

என்னுடைய அந்தப் பயணத்தில் இயக்கச்சியில் ஒரு முதியவரைச் சந்தித்தேன். அவரிடம் விவரம் கேட்டபோது, ‘ஒல்லாந்தருக்குப் பிறகு பிரித்;தானியர்கள், அவர்களுக்குப்பிறகு, சிங்கள இராணுவம், அதற்குப் பிறகு இந்தியப் படைகள், இப்போது மீண்டும் சிங்கள இராணுவம் என்று படை மணம் மாறாதபடியே இன்னும் இருக்கிறது இயக்கச்சி’ என்றார் அவர்.

ஆனால் பைல் கோட்டை சிதைந்து விட்டது. கட்டுமானங்கள் சிதைந்து, பற்றைகள் அடர்ந்து அது பாழடைந்து விட்டது. அந்தக் கோட்டையில் முப்பது வருசத்துக்கு முன் சிங்களப் படைகள் இருந்திருக்கின்றன. எட்டோ பத்தோ படையினரைக் கொண்ட ஒரு சிறு முகாமில். அதேவேளை இயக்கச்சியின் மேற்குப் பகுதியில் இன்னொரு படை முகாமைச் சிங்களப் படைகள் வைத்திருந்திருக்கின்றன. அதுவும் இல்லாமற் போய், பிறகு வேறு பகுதிகளில் படையினர் நிலை கொண்டிருக்கிறார்கள். பதிலாக ஆனையிறவின் பஸூற்றாவோ எல்லாவற்றையும் விடப் பெரிய தளமாக மாறியது.

ஆனால், அதை விடுதலைப்புலிகள் தகர்த்து அழித்து விட்;டார்கள். அங்கிருந்த பஸ்குலா கோட்டையும் அழிந்தது. அந்தக் கோட்டைக்குள்ளிருந்த சிறிய, அழகான விருந்தினர் விடுதி கூட எஞ்சவில்லை.

பைல் கோட்டையைப் பார்க்கவேணும் என்று விசாரித்துப் பார்த்தபோது, அங்கிருந்த முதியவர் என்னை அழைத்துச் சென்று ஒல்லந்துக்காரர் என ஒருவரை அறிமுகப்படுத்தினார். அவர் இயக்கச்சியில் இரண்டு மூன்று தலைமுறையாக இருக்கிறார். அவருக்கு இது பற்றிய விவரங்கள் அதிகமாகத் தெரியக் கூடும் என்று அவர் சொன்னார்.

என்ன ஆச்சரியம்! நான் சந்தித்த அந்த மனிதர் ஒல்லாந்தரின் கதைகளை அப்படியே சொன்னார். கிளையாகவும் நீண்டதாகவும் பல கதைகள். அதிலும் அவர்கள் அங்கிருந்த கதைகளை.

செம்பட்டைத் தலைமுடி. நீலக்கண்கள். பழுப்பு நிறம். அவருடைய பெயர் மக்ஸ்வெல் ஓப்பிராயன் கனியூற் பொனிபஸ். ஒல்லாந்தரின் பரம்பரை. இருபத்தியேழாவது தலைமுறை தான் என்றார்.

– Oct 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *