அடுத்த வீட்டு திருட்டுப் பூனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 10, 2016
பார்வையிட்டோர்: 11,079 
 

முரளி சித்தார்த்திடம் அங்குள்ள புராதானமானதும் நல்ல முறையில் ஒழுக்கத்தையும் கல்வியையும் சேர்த்து போதிக்கும் பெருமை வாய்ந்ததுமான அந்த ராமகிருஷினா பள்ளியில் நகுலைச் சேர்த்து விடுவோம் என்றான்.

‘அந்தப் பள்ளியில் இடம் கிடைப்பது “குதிரைக் கொம்பாயிற்றே”- சித்தார்த்

‘எனக்கு அங்கு நல்ல பிடியுண்டு . ஆனால் LKG யிலேயே சேர்த்துவிட வேண்டும். பின்னால் பெரிய கிளாசுக்குப் போனால் கிடைக்காது.’

‘பர்ஸ்ட் ஸ்டேண்டர்டு பெரிய கிளாஸா?’

‘அந்தப் பள்ளியைப் பொறுத்தவரை அப்படித்தான் ‘

‘என் வீட்டிலிருந்து அந்தப் பள்ளி அதிக தூரம். மட்டுமில்ல. என் கல்லூரியும் பள்ளியும் வெவ்வேறு திசை. வெறும் பேராசிரியராக இருந்த என்ன, கல்லூரி நிர்வாகம் துறைக்கு த் தலைவராக்கி, பொறுப்புகள் கூடிவிட்டதால் தினமும் காலத்தோட போராட வேண்டியிருக்கிறது. நல்ல வேள! என் மனைவி, கீர்த்தி, அவளாவே நகுல் பிறந்ததும் எங்கப்பாவையும் நகுலையும் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று பெரிய ஐடி கம்பெனியில் நல்ல சம்பளத்துடனிருந்த வேலையை விட்டுவிட்டாள். அவளால் ஏதாகிலும் முடியுமா? என்று கேட்கணும். அப்பாவிடமும் கலந்தாலோசிக்கணும்.’

‘அப்பா மனைவியிடமெல்லாம் கலந்து கொண்டு சொல்லேன்!’ என்றான் முரளி

வீட்டிற்கு வந்ததும அப்பாவிடமும் மனைவியிடமும் கலந்தாலோசித்தான். ரொம்ப சின்னக்குழந்தை. தனியே ஆட்டோவிலெல்லாம் அனுப்பக்கூடாது. கொஞ்சம் பெரியவனாகின்ற வரை நீங்களே கொண்டுவிட்டு கூட்டி வர வேண்டும் முடியுமானால் சேருங்கள்என்றார் கணேசன்.

கீர்த்தி பொறுப்பை ஏற்றுக் கொள்ள நகுல் அம்மாவுடன் தனி ஆட்டோவில் பள்ளிக்குப் போய் வந்தான். கிண்டர் கார்டன் என்பதால் காலையில் இரண்டு மணி நேரந்தான். பள்ளியில் காத்திருந்து கூட்டி வருவது சிரமமாக இருக்கவில்லை கீர்த்திக்கு. தாத்தாவும் பேரனும் விளையாடுவதும் நல்ல விஷயங்களை எளிய கதைகளின் மூலம் சுவையாகச் சொல்வதும் அதிலிருந்து பேரன் கேட்கும் கேள்விகளுக்கு தெளிவாகவும் சுவாரசியமாகவும் தாத்தா பதிலளிப்பதிலும் காலங் கழிந்தது.

திடீரென்று ஒரு நாள் நெஞ்சு வலி என்றார் கணேசன். பெரிய தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து அவர்களும் என்னென்னவோ சிகிச்சையெல்லாம் கொடுத்தும் ஒன்றும் நடக்கவில்லை. ஒரு வாரத்திற்குள் எல்லாம் முடிந்து அவர் கண்ணை மூடிவிட்டார். ஆச்சு! எதிர்பாராததெல்லாம் நடந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது ஆனால் அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லைஅவர்களால். நகுல்தான் பாவம்! சாமிகிட்டருந்து தாத்தா எப்பத் திரும்பி வருவர் என்று கேட்டுக் கொண்டே இருந்தான். சித்தார்த்திற்கு ஒரு மாற்றம் தேவைப் பட்டது.

அந்த சமயத்தில் மறுபடியும் உதவிக்கு வந்தான்நண்பன் முரளி. சித்தார்த்திடம் நகுலின் பள்ளிக்குப் பக்கத்தில் ஒரு தனி வீடு காலியாக உள்ளது. வீட்டு சொந்தக்காரர் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கியிருப்பவர். அவருக்கு சென்னையில் ரெண்டு மூனு வீடுகள் உண்டாம். இந்த வீட்டை கொஞ்ச காலமாகப் பூட்டித் தான் போட்டிருந்தாராம். போன மாதம் இங்கு வந்திருந்த் பொழுது வீட்டைத் திறந்து பார்த்ததும் வீடு பாழாகிக் கொண்டிருப்பதை அறிந்து நல்ல வீடு பராமா¢க்கப் பட வேண்டும் என்பதற்காக வாடகைக்கு கொடுக்க சம்மதித்துள்ளாராம். என்னுடைய நண்பன் பாலு இருக்கானே அவனிடம் தான் வீட்டுச் சாவியுள்ளது. பாலுவும் அந்த வீட்டு சொந்தக்காரரும் நெருங்கிய நண்பர்களாம் என்று முழுக் கதையையும் சொல்லி முடித்தான் முரளி.

அடுத்த நாள் சித்தார்த்தும் கீர்த்தியும் முரளியையும் கூட்டிக் கொண்டு வீட்டைப் போய் பார்த்தார்கள். வசதியானவர்கள் வாழ்கின்ற பகுதி.நகுலின் பள்ளி கூப்பிடு தூரத்தில். தனி வீடு. எல்லாம் வசதியாகத்தான் உள்ளது.ரொம்ப நாள் பூட்டிக் கிடந்ததால் சுத்தம் செய்ய வேண்டும். பக்கத்தில் எல்லாமே தனி வீடுகள் தான். இடது பக்கத்து வீடு பழமை மாறாத ஓட்டு வீடு. அந்தக் காலத்தை ஞாபகப் படுத்தி கொண்டிருப்பது.

எல்லாம் பேசி முடித்து சித்தார்த் புது வீட்டிற்கு குடிபெயர்ந்தான். வீட்டைச் சுற்றி நிறைய திறந்த வெளி .கீர்த்தி சித்தார்த்திடம் வாழை, கொய்யா,மாதுளை, பூச்செடிகள் எல்லாம் வைக்க வேண்டுமென்றாள். கீர்த்தி சாஸ்த்ரோத்ரமான வீட்டில் பிறந்து வளர்ந்தவள். அவம்மா குளித்து சமைத்ததை சுவாமிக்கு கண்டருளப் பண்ணிவிட்டு காக்கைக்கும் சாதம் வைத்துவிட்டுத்தான்

குடும்பத்தினரை சாப்பிட வைப்பார்கள். ஆனால்.இதுகாறும் அப்பார்ட்மெண்டில் குடியிருந்ததால் காக்கைக்கு சாதம் வைப்பது மட்டும் இயலாமலிருந்தது கீர்த்திக்கு

தனி வீட்டிற்கு வந்தவுடன் அதையும் செய்ய முடிவெடுத்திருந்தாள். நகுலைப் பள்ளியிலிருந்து திரும்பக் கூட்டி வந்தவுடன் ஒரு சிப்பிலில் கொஞ்சம் சாதம், பருப்பு, கறி எல்லாம் வைத்து நெய்யையும் ஊற்றி கையிலெடுத்துக் கொண்டு புறப்பட,அவளைப் பார்த்துக் கொண்டே இருந்த நகுல் எங்கம்மா போறே? என்றான்.

‘காக்கைக்கு சாதம் வைக்க!’

‘எதற்கு?’

‘காக்கைக்கும் பசிக்குமில்லையா அதற்காகத்தான்.’

‘அந்தாத்தில் இருக்கும் பொழுதெல்லாம் அடுத்த நாள் தான் மிஞ்சினதை நீ போய் ரோட்டில் நாய்களுக்கோ அல்லது மாடுகளுக்கோ போட்டு விட்டு வருவாய் ஆனால் இங்கு நாம் சாப்பிடுவதற்கு முன்னே காக்கைக்குப் போடுகிறாயே ஏன்? ‘

‘உன்னுடைய கணேச தாத்தா இருக்காரில்லையா!’

‘அவர்தான் சாமிக்கிட்ட போயிட்டாரே!’

“ சாமிக்கிட்ட போயிட்டாரில்லையா. போயிட்டாலும் தினந்தினம் காக்கா ரூபத்தில வந்து நம்மளயெல்லாம் பார்த்துட்டு நம்மாத்து சாதத்தை துளியுண்டாவது சாப்பிட்டுத்தான் போவார். சாமிகிட்ட போயிட்ட அவரும் நமக்கு சாமிதானே அதனால்தான் முதலில் அவருக்கு சாதம் போட்டுட்டு அப்புறம் நம்ம சாப்பிடனும் சரியா!’

நானும் வரேம்மா! எனக்கும் தாத்தாவைப் பார்க்கணும் என்று குதித்தொடிக் கீர்த்தி யின் முந்தானைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டு போனான்.

வீட்டின் பின்னாலிருந்த திண்டில் சிப்பிலிலிருந்த சாதத்தைத் தட்டிவிட்டு கா!க்கா!என்று விளித்தாள் கீர்த்தி. அம்மாவையே வினோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் நகுல். மறுபடியும் கொஞ்சம் சத்தமாக் கீர்த்தி விளிக்கவே என்னம்மா! காக்கா! என்று தப்பாக விளிக்கிறாய். தாத்தா! என்றல்லவா விளிக்க வேண்டுமென்றான். கீர்த்தி சுற்று முற்றும் பார்த்துவிட்டு மெதுவாக நகுலிடம் தாத்தா தான் இப்போது காக்காய் ரூபம் எடுத்துக் கொண்டிருக்கின்றாரல்லவா அதனால் கா க்கா! என்றுதான் விளிக்க வேண்டுமென்றாள்.

நகுலும் குஞ்சுக் குரலில் அதே போல் விளித்தான். கீர்த்தி அவனை சத்தமாக விளிக்க ஊக்கப் படுத்தினாள்.

பக்கத்து வீட்டு மதிற் சுவா¢ல் சின்ன சத்தம் கேட்கவே சத்தம் வந்த திசையைப் பார்த்தார்கள் கீர்த்தியும் நகுலும். கருப்புப் பூனை ஒன்று திண்டிலிருந்த சாதத்தையும் இவர்களையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே இந்தப் பக்கம் தாவ ஏதுவாக நின்று கொண்டிருந்தது.கீர்த்திக்கு புரிந்துவிட்டது அதன் நோக்கம். கையை ஆட்டி அதை விரட்டப் பார்த்தாள். அது கொஞ்சங்கூட அசரவில்லை அசையவுமில்லை.கீழே கிடந்த சின்னக் கம்பை கையிலெடுத்தாட்டிக் கொண்டே சூ! சூ! என்று சத்தம் போட்டாள். உர்ரென்று கீர்த்தியை முறைத்துக் கொண்டே பூனை இந்தப் பக்கம் தாவியது நல்ல குண்டுப் பூனை. பார்க்கவே பயமாக இருந்ததால் கீர்த்தி நகுலையும் கூட்டிக் கொண்டு வீட்டிற்குள் வேகமாகப் போய்விட்டாள். திண்டில் வசதியாக உடகார்ந்து கொண்டு வக்கணையாக ஒரு பருக்கை விடாமல் சாப்பிட்டுவிட்டுத்தான் நகர்ந்தது அந்தக் குண்டுப் பூனை.

பக்கத்தில் பழைய ஓட்டு வீட்டில் குடியிருந்த பெண்மணி ஏதெசசையாக வெளியில் வரும்பொழுது கீர்த்தியும் முன் வாசலிலில் வெளியே நின்றிருக்க இருவர் கண்களும் சந்திக்கவே கீர்த்தி நட்புடன் கூடிய புன்னகையைச் சிந்தினாள். அவள் கீர்த்தியை அழைக்க அருகில் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

‘நீங்கள் பூனை வளர்க்கின்றீர்களா?’

‘ஆமாம்.! எங்களுடையது பழைய ஓட்டு வீடல்லவா. எலித் தொந்தரவு அதிகமாக இருந்தது. அதனால்தான் பூனை வளர்க்க ஆரம்பித்தோம். இப்பொழுது எலித் தொந்தரவு இல்லை.’

அடுத்த நாள் சிப்பிலில் சாதம் எடுக்கும் பொழுது கீர்த்தி மணியைப் பார்த்தாள். மதியம் 12 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. தினமும் ஒரே நேரத்தில் சாதம் வைத்து அழைத்தால் தான் காக்கைகளுக்கு அங்கு வரும் பழக்கம் ஏற்படும் அதனால் 12 மணியை ஸ்திரப் படுத்தி க் கொள்ள வேண்டுமென முடிவெடுத்தாள். திண்டில் சாதத்தை வைத்துவிட்டு சத்தம் போட்டு விளித்துக் கொண்டேயிருந்தாள். நகுலும் கூடவே விளித்துக் கொண்டிருந்தான். ஒரு காக்கை வந்து அருகிலிருந்த மரக்கிளையில் அமர்ந்தது. நகுல் அதையே பார்த்துக் கொண்டிருந்தான் அது கா க்கா! என்று கூவி அழைத்துக் கொண்டிருந்தது. இன்னும் ரெண்டு மூன்று காகங்கள் வந்தன. எல்லாம் திண்டில் வந்து அமர்ந்து சாதத்தைக் கொத்த ஆரம்பித்தது.கருப்பு பூனையும் மதில் மேல் ஏறி நின்று கொண்டு உர்ரென்று பார்த்துக் கொண்டிருந்தது. பூனையைப் பார்த்தவுடன் கீர்த்தி நகுலைக் கூட்டிக் கொண்டு வீட்டிற்குள் புக எத்தனித்தாள். பூனையும் தாவிக் குதித்து திண்டை நோக்கி வந்தது. காக்கைகள் பறந்துவிட்டன. பூனை தன் வாயால் திண்டை சுத்தம் செய்துவிட்டு இடத்தைக் காலி செய்தது.

ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த நகுல் கீர்த்தியிடம் ஓடிப் போய் “அம்மா! பூனைஅம்புட்டையும் சாப்டுடுத்து” என்றான். கீர்த்தி கோபத்துடன் “திருட்டுப் பூனை காக்கைகளுக்கு வைத்ததையெல்லாம் பிடுங்கித் தின்றது” என்றாள். நகுல் சடாரென்று ஞாபகம் வந்தவனாக கீர்த்தியிடம் “ஆமாம்! வந்த காக்காய்களில் எதும்மா? கணேசத் தாத்தா” என்று கேட்டான்.கூடவே “முதலில் வந்ததே அதுதானே” என்றான். கீர்த்தி ஆமாம்! என்று சொல்லி சமாளித்தாள். நம்மாத்திலேயே இருக்கலாமே ஏன்? திரும்பப் போயிடுத்து என்றான். கீர்த்தி சிறிது யோசித்து ‘அது கணேச த் தாத்தா ஏற்கனவே சாமிக்கிட்ட போயிட்டாரில்லையா. நம்மளெல்லாரையும் பார்த்துட்டு வந்துடறேன்னு சாமிட்ட சொல்லிட்டு வந்ததுனால நம்மளப் பார்த்துட்டு திரும்ப சாமிட்ட ப் போணும்தானே அதனால்தான் போயிட்டார்.’

‘நாளைக்கு திரும்பியும் வருவரா?’

‘நாளைக்கும் வருவர்!’

‘அப்போ தினந்தினம் சாமிட்ட சொல்லிட்டு வந்து நம்மப் பார்த்துட்டு நம்மாத்து சாதத்த சாப்பிட்டுட்டு திரும்பப் போவரா ?’

‘ஆமாம்! தொண தொணவென்று கேள்விகள் கேட்டுக் கொண்டேயிருக்காதே’ . ‘அதுக்கிலைம்மா! அவர்தான் தினமும் சாமியைப் பார்க்கிறதும் இங்கு வரதும் திரும்ப சாமிட்ட போறதுமாத்தானே இருக்கார். எனக்கும் சாமியைப் பார்க்கணும்னு ஆசையா இருக்கு என்னையும் அவரொட கூட்டிப் போகச் சொல்லு. சாமியப் பார்த்துட்டு அவரோடயே திரும்ப வந்துடறேன். நான்னா! அவருக்கு ரொம்ப இஷ்டம். என்ன பத்ரமா கூட்டிண்டு போயிட்டு பத்ரமா கொண்டு வந்து விட்டுடுவர் ‘

இவனை எப்படி சமாளிக்கிறது என்று யோசித்து ‘அவர்தான் இப்பொழுது காக்கா ரூபத்தில் வரதுனால அவருக்கு ரெக்கை இருக்கு அதுனால பறந்து போயிடுவர் உனக்குத் தான் ரெக்கையிலலையே நீ எப்படி அவரோடு பறந்து போக முடியும்’ என்றாள்

அவன் சிறிது யோசிக்க டீவியில் அவன் பார்த்த கார்ட்டூன் எல்லாம் ஞாபகம் வர ‘ரெககையில்லாட்டா என்ன! தாத்தாக் காக்கா முதுகிலேறிக் கொண்டு போய் பார்த்துட்டு வந்துடறேன்.’

‘பிடித்து கொள்ளவெல்லாம் ஒன்றும் கிடையாது. மேல மேல பறந்து போகும்பொழுது தல சுத்தி தொபுகடீர்னு கீழ விழுந்துடுவ. மண்ட ஒடைஞ்சிடும் தெரியுமா’ என்றாள் கீர்த்தி.

‘அப்போ ஒன்னு செய்வொம். தாத்தா எனக்கு பம்பரம் விட்டுக் காட்டி விளையாட்டுப் பண்ணுவரே. அந்தப் பம்பரக் கயிறு என்னிடம் தானிருக்கிறது. அதை தாத்தாகாக்கா கழுத்தில் கட்டி என் கையில் கொடுத்துட்டா நான் அதப் பிடிச்சுண்டு கீழ விழாம பத்ரமா போயிட்டு வந்துடுவேன்’.
இவனை சமாளிக்க நம்மால் முடியாதென்று நொந்து போனாள் கீர்த்தி.

அடுத்த நாளும் சாப்பிட வந்த காக்கைகளை விரட்டிவிட்டு அந்த க் கருப்புப் பூனை திண்டில் ஏறி சாப்பிட உட்காருவதை ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த நகுலுக்கு ஆத்திரம் வர அவன் ஏற்கனவே தயாராக எடுத்து வைத்திருந்த கொஞ்சம் பெரியதான கம்பை அடிக்கப் போவது போல் பிடித்துக் கொண்டு சத்தம் போட்டுக் கொண்டே பூனையை நோக்கிப் போனான். சாப்பிட்டுக் கொண்டிருந்த பூனை பயந்து ஒடாமல் அவனைப் பார்த்து முறைத்து பாயத் தயாரானவுடன் நகுல் பயந்து போய் கம்பைக் கீழே போட்டுவிட்டு அம்மா! என்றலறிக் கொண்டு வீட்டுக்குள் ஓடினான்.

குழந்தையின் அலறல் கேட்டு பதறிப் போய் வேகமாக வந்த கீர்த்தியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அந்த ப் பூனை என்னைக் கடிக்க வருகிறது என்று சொல்லிக் கொண்டே அழுதான். அவன் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. உள்ளே அழைத்துப் போய் படுக்கவைத்து கொஞ்ச நேரம் தடவிக் கொடுத்தபின் சமாதானமானான்.என்ன நடந்தது? என்று மெதுவாகக் கேட்க விஷயத்தைச் சொன்னான்.

அப்பா வரட்டும். சொல்லி அதன் வாலை ஒட்ட அறுத்துடுவோம் நீ இப்பொழுது சின்னக்குழந்தையிலலையா அதுட்ட வம்புக்குப் போகாதே என்றாள் கீர்த்தி .
சித்தார்த் வந்ததும் பூனையைப் பற்றிய புகார் பட்டியலை வாசித்தான் நகுல். கீர்த்தி தனியாக சித்தார்த்திடம் நகுலோடு நடந்த சம்பாஷணைகள் முழுவதையும் சொன்னாள். சித்தார்த் சிரித்துக் கொண்டான். அவன் கேள்விகளுக்கு பதில் சொல்லி மாளாது, எப்படித்தான் அப்பா சமாளித்தார் என்று நினைத்தால் ஆச்சரியமாக இருக்கு என்றாள்.

அடுத்த இரண்டு நாட்களும் வீட்டிற்குள்ளிருந்தே காக்கைகளையும் பூனையையும் பார்த்துக் கொண்டிருந்தான். பூனையை எப்படியாவது விரட்டனும் என்று கறுவிக் கொண்டே இருந்தான்.இரண்டாவது நாள் ஒரே ஒரு காக்கை தான் வந்தது அதுவும் அண்டங்காக்கை. அதைப் பார்த்த பின் கீர்த்தியிடம் “இன்று தாத்தாக் காக்கை வரலையா?” என்று கேட்டான். “வந்துதே” என்றாள் கீர்த்தி.

“இன்று ஒரு பயங்கர கருப்புக் காக்காய்னா வந்தது. அதுவொன்னும் தாத்தாக் காககாய் இல்லை. நீ என்னமோ தப்பா புரிஞ்சுண்ருக்கேன்னு எனக்குத் தோன்றது. சாமிட்ட போன தாத்தா ஏன் காக்காயா வரப் போறார் ? நீ தான் வீணா தாத்தாகாக்காய்னு சொல்லிண்டு சாதத்தை வச்சிண்ருக்கே ஆனால் அத காக்காயும் சாப்பிடறதில்ல. அந்த குண்டு திருட்டு பூனை வந்து தின்னுட்டுப் போறது” என்று நகுல் சொன்னது புலம்புவது போல் இருந்தது.
கீர்த்திக்கு குற்ற உணர்வு மேலோங்கியது. தனது செய்கையாலும் பேச்சாலும் அந்தப் பிஞ்சு மனதில் நஞ்சு புகுந்ததோவென்று கலங்கினாள். குழந்தை வளர்ப்பில் எவ்வளவு கவனம் தேவை என்பது புரியஆரம்பித்தது.அவள் பதிலொன்றும் சொல்லாது மௌனித்தாள்.

அன்று சனிக் கிழமை. சனி ஞாயிறு இரண்டு நாட்களும் அப்பா பிள்ளை இருவருக்கும் லீவு. காலையில் நகுல் அப்பாவிடம் காக்கைக்கு அனாவசியமாக தினம் அம்மா சாதம் வைத்துக் கொண்டிருக்கின்றாள் என்று புகார் வாசித்தான். சித்தார்த் நகுலிடம் காக்கை, பூனை இவைகளின் செயல்களை நன்கு கவனித்தாயா? என்ன தெரிந்து கொண்டாய்? என்று கேட்டான்.

காக்கை வந்து சாத்தை கொத்திவிட்டுப் போய்விடுகின்றது. பூனை தான் காக்கைக்கு வைத்த சாதத்தைத் திருடித் திங்கிறது. சில நாட்கள் காக்கை வரதே யில்லை. அம்மாதான் தெரியாம தாத்தா காக்காய்னு சொல்லிண்ருக்கா.

சரி! வரும்பொழுது ரெண்டு மூனு காக்காயா சேர்ந்து வரதா? என்று கேட்டான் சித்தார்த்.

ஒரு காக்காய் தனியாக வந்து மரக்கிளையில் அமர்ந்து கா! கா! என்று கத்துகிறது.அதன்பின் ரெண்டு மூனு வருகிறது. எல்லாமா கொத்தித் திங்கிறது.

“வெரி குட்” நீ சரியாக கவனித்திருக்கிறாய். இதிலிருந்து என்ன தெரிகிறது “காக்காய் தனக்கு கிடைத்ததை எல்லோருக்கும் கொடுத்து சாப்பிட நினைக்கிறது இல்லையா? ஆனால் பூனையோ தன்னுடையதில்லாததை திருடித் திங்கிறது அதனால் தான் நம் பெரியவர்கள் காக்கைக்கு சாதம் வைக்கச் சொல்கிறார்கள். காக்கை எல்லோரையும் அழைத்து சேர்ந்துசாப்பிடுவதைப் பார்க்கப் பார்க்க நமக்கும் அந்த நல்ல குணம் வருவதற்கும் வளர்வதற்கும் வாய்ப்பிருக்கிறதுஇல்லையா? இப்படியெல்லாம் செய்யாமலிருந்தால் நாமும் பூனையைப் போல் அடுத்தவர்களுக்கு எதுவும் கொடுக்காமல் பிடுங்கித் தின்று விடுவோமில்லையா” நகுல் அதை நன்கு புரிந்து கொண்டதற்கடையாளமாக அவன் அப்பாவின் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டான்.

மத்தியானம் 12 மணிக்கு கீர்த்தி காக்கைக்கு சாதம் வைக்க ரெடியானவுடனே நகுல் சித்தார்த்தை அப்பா! வாருங்கள்.அந்த த் திருட்டுப் பூனையை மிரட்டி விரட்டுங்க்ள் என்றான். மதில் மேல் வந்தமர்ந்த பூனையைப் பார்த்து சித்தார்த் கையை ஓங்கி சத்தம் போட்டதும் வெடுக்கென்று பூனை அந்தப் பக்கம் குதித்திறங்கி ஓடிவிட்டது. நகுலுக்கு சந்தோஷம். துள்ளிக் குதித்தான். கீர்த்தி நகுலிடம் நீ யும் அப்பாவைப் போல் பெரியவனானப்புறம் அந்தப் பூனை உன்னிடமும் வாலாட்டாது பயந்து ஓடிவிடுமென்றாள்.

நான் சீக்கிரமே பெரியவனாக என்ன செய்ய வேண்டும்? என்று சின்னக் குழந்தைக்கே உரித்தான வெகுளித்தனத்துடன் கீர்த்தியைக் கேட்டான். கீர்த்தி சிரித்தாள். சித்தார்த் நிறையச் சாப்பிடவேண்டும் என்று சொல்ல மறுபடியும் சிரித்தாள் கீர்த்தி.

சாயந்திரம் அருகிலுள்ள பெரிய மைதானத்திற்கு மூவரும் போனார்க்ள். அங்கு நிறையப் பேர் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். தனியாக இல்லை. எல்லாம்

வசதியானவர்கள் அல்லவா முக்காவாசிப் பேர் கைகளில் செயின் அதன் மறுமுனை நாயின் கழுத்திலுள்ள தோல் பட்டையில் இணைக்கப் பட்டிருந்தது. எத்தனைவிதமான நாய்கள். எல்லாம் கொழு கொழுவென்று ரிஷபம் மாதிரியும் சிலதுகள் புலி மாதிரி பார்த்தாலே அச்சமுண்டாவது போல். அவைகளிடம் கூட பணத் திமிர் தெரிந்தது. திரும்பி வரும் பொழுது ரோட்டில் ஒரு பூனையைப் பார்த்து நாய் விரட்ட பூனை மிரண்டு போய் மதில் மேல் தாவி ஏறித் தப்பியது. அதைப் பார்த்து க் குலுங்க குலுங்கச் சிரித்தான் நகுல்.

அடுத்த நாள் நகுல் சித்தார்த்திடம் அப்பா! நாமும் நாய் வளர்ப்போமா! என்றான். சித்தார்த் நகுலிடம் நமக்கெல்லாம் ஒத்து வராதுடா. அது ஆத்துக்குள்ளேயே ஆயெல்லாம் போய்¢டும். வெளியே போய்¢ட்டு வந்து படுக்கையிலெல்லாம் ஏறிடும். . அடுக்களைக்குள்ளெல்லாம் போகும் அதை எப்படி ஒழுக்கமா வளர்க்க வேண்டுமென்று நமக்கெல்லாம் தெரியாது. ஏன்னா! பழக்கமில்லை.வீடு அசிங்கமாய்¢டும். நமக்கு வியாதிகள் கூட வந்துடும் என்றான். இங்குதான் நிறையப் பேர் வளர்க்கிறார்களே அவர்களைக் கேட்டுப் படிப்போமே என்று கூறிக் கெஞ்சினான் நகுல்.
அந்த சமயம் பார்த்து காக்கி உடையில் ஒருவன் வீட்டிற்குள் வந்து சித்தார்த்துக்கு வணக்கம் வைத்துவிட்டு சார்! ‘என் பெயர் முருகன். நான் இங்கு வாட்ச்

மேனாக இருக்கிறேன். நீங்கள் இந்த வீட்டிற்கு புதிதாக குடி வந்திருக்கின்றீர்களா. சின்ன சாமி என்ன சொல்கிறார்?’ என்று நகுலைப் பார்த்துக் கொண்டே கேட்டான் முருகன்.

அவனுக்கென்ன திடிரென்று நாய் வளர்க்க வேண்டுமெங்கிறான். அதெல்லாம் நமக்கு ஒத்து வராது என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

சார்! நாய் நன்றியுள்ள பிராணி! குழந்தை ஆசைப் ப் படுகிறான் . வளர்த்துத் தான் பாருங்களேன். நம்ம தெரு முனையில் மேஜர் சார் வீட்டில் நிறைய நல்ல ஜாதி நாய்களுண்டு. அவருக்கு நாய்கள்னா ரொம்ப இஷ்டம். அவர் வீட்டில் ஒரு நாய், குட்டிகள் போட்டிருக்கு.நீங்கள் என்னுடன் வாருங்கள். அறிமுகப்ப்டுத்தி வைக்கிறேன் தங்கமானவரு. அவா¢டம் ஒரு குட்டியை வாங்கி வளர்ப்போம் குழந்தை ஆசைப் படுதில்ல! என்றான் முருகன்.

சித்தார்த் அவனோடு மேஜர். வீட்டிற்கு ப் போய் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு பேசிவிட்டு நாய்க் குட்டியைப் பற்றி ப் பேச்செடுத்தான்.

நீங்கள் நாய் வளர்க்கப் போகின்றிர்களா? என்று ஆச்சரியத்துடன் கேட்டார் மேஜர். சித்தார்த்துக்கு அவர் தன்னை புரிந்து கொண்டுவிட்டாரென்று தெரிந்தது. எனக்கு பழக்கமில்லை. எனக்கு எதுவும் தெரியவும் செய்யாது. என் பையன் ரொம்ப ஆசைப் படறான் அதான் என்று நிறுத்தினான்.

ஒன்னும் கஷ்டமில்லை. இது பிறந்து ரெண்டு மாசம் கூட ஆகலை.. நீங்கள் கொண்டுபோய் வளருங்கள். நானெல்லாம் சொல்லித் தரேன். வீட்டினுள்ளேயே ஒரு சாக்கு மெத்தையில் படுக்க வையுங்கள். சாக்கு மெத்தையும் நான் தரேன் இப்ப பால் மட்டும் கொடுங்கள். கொஞ்ச நாள் கழித்து ரொட்டி சோறெல்லாம் கொடுக்க ஆரம்பிக்கலாம். நான் அப்பப்ப வந்து பார்த்துக்கறேன். மேஜருக்கு நன்றி சொல்லிவிட்டு புறப்பட முருகன் ஒரு நாய்க்குட்டியையும் சாக்கு மெத்தையையும் தூக்கிக் கொண்டு கூடவே வந்தான். நாய்க்குட்டியைப் பார்த்த நகுலுக்கு பரம சந்தோஷம். அதனோடு விளையாட ஆரம்பித்துவிட்டான். அது ஆத்துக்குள்ளேயே எல்லாம் செய்தது. கீர்த்திக்குத் தான் கோபம் கோபமாக வந்தது. சித்தார்த் அவளுக்கு கூடமாட உதவிகள் செய்ய காலம் கழிந்தது.

நகுலும் நாய்க்குட்டியும் நல்லமுறையில் வளர்ந்தார்கள்.நகுல் சித்தார்த்திடம் அதற்கொரு நல்ல பெயர் வைக்க வேண்டினான். சித்தார்த் எதுவும் யோசிக்காமல் “டைகர்” என்று வைப்போம் என்றான். நகுலுக்கு பெயர் பிடித்துவிட்டது. நாய்க்குட்டியை வெளியே கூட்டிப் போய் பழக்கியதில் அது வீட்டிற்குள் அசிங்கம் செய்வதை நிறுத்தி விட்டது. நல்ல ஜாதி நாயல்லவா. அது துறுதுறு வென்று இருப்பதைப் பார்த்தும் நல்ல புத்தி சாலித்தனமாக நடப்பதைப் பார்த்தும் கீர்த்திக்கும் அதை ரொம்பப் பிடித்துவிட்டது. . பள்ளியிலிருந்து திரும்பி வந்தவுடன் நகுல் “டைகர் டைகர்” என்று கூப்பிட்டு ஓடி விளையாடுவான் குட்டியாக இருந்தாலும் குரைக்க ஆரம்பித்துவிட்டது ஓரு நாள் பள்ளியிலிருந்து திரும்பி வந்தவுடன் பின் பக்கம் போய்ப் பார்த்தான் நகுல். அந்தக் கருப்புப் பூனை மதில் மேல் உட்கார்ந்திருந்தது. நாய்க்குட்டியை வேகமாக பின்பக்கம் தூக்கிக் கொண்டு போய் பூனையை நோக்கி கையைக் காட்டிக் கொண்டே “டைகர் டைகர் அதை விரட்டி அடி” என்று கத்தினான் நகுல். நாய்க்குட்டியும் “லொள் லொள்” என்று குரைத்துக் கொண்டே குஞ்சுக் கால்களுடன் பூனையைப் பார்த்து ஓடியது. பூனையோ தாவிக் குதித்து நாய் குட்டியை கவ்வ வந்தது. பயந்து போன நகுல் வீட்டிற்குள் ஓடிவர நாய்க்குட்டியும் உயிருக்கு பயந்து குரைத்துக் கொண்டே வேகமாகத் தாவி வீட்டிற்குள் வந்தது.

சித்தார்த் உடம்பு சரியில்லாததால் கல்லூரிக்குப் போகாமல் உள் அறையில் படுத்திருந்தான். திடீரென்று ஏற்பட்ட சத்தங்களைக் கேட்டு வேகமாக வெளியில் வந்தான். நகுலுக்கு அந்தப் பூனை விரட்டியது ரொம்ப அவமானமாகத் தோன்றியது. பூனையின் மேல் ஏற்பட்ட அசாத்தியமான கோபம் அந்த நாய்க்குட்டியின் மேல் திரும்பியது. அவமானத்திற்கு அந்த நாய்க்குட்டிதான் காரணமென்று நினைக்க ஆரம்பித்தான். அப்பாவைப் பார்த்ததும் எனக்கு இந்த நாய்க்குட்டி வேண்டாம் கொண்டு போய் எங்கேயாவது விடு. எனக்கு வேண்டாம். எனக்கு வேண்டாம் என்று அழுது கொண்டே திரும்ப திரும்பச் சொன்னான்.
கீர்த்தியும் சித்தார்த்தும் நகுலை சமாதான ப் படுத்த எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. அவனின் முரண்டு கூடியதே தவிர குறையவில்லை.கீர்த்திக்கும் சித்தார்த்துக்கும் அந்த அழகான நாய்க்குட்டி மேல் ஒரு ஈர்ப்பும், அன்பும் பாசமும் வந்துவிட்டதால் அதைப் பிரிய அவர்களுக்கு மனமில்லை. நாய்க் குட்டி அவர்களைப் பார்த்து வாலை ஆட்டிக் கொண்டே நின்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *