தாயின் பிரார்த்தனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: January 3, 2023
பார்வையிட்டோர்: 4,494 
 

(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இல்லற வாழ்க்கையில் ஈடுபட்ட அவன் மனித இயல்புடையவன் தானே ? மனிதர்களுக்குள்ள குறை பாடுகளும் அவனுக்கு உண்டு. கட்டிளங்காளை ; செல்வத்தாலும் பிற பொருள்களாலும் குறைவற்றவன். எல்லாவற்றுக்கும் மேலாக் அவனுக்கு அன்பே உருவாகிய காதலி கிடைத்திருக்கிறாள். வேறு என்ன வேண்டும்?

இவ்வளவு வளம் இருந்தும், நித்தம் பாலுணவை உண்பவன் ஒருவன் இடையிலே சிறிது காடியை விரும்பினது போலாயிற்று அச்செயல். அவனுக்கு ஒரு கூட்டாளி வேறு சேர்ந்துகொண்டான். பாட்டினாலே அவனை மயக்கிய பாணன் மெல்ல மெல்ல அவனுடைய உள்ளத்தைக் கவர்ந்தான். “வீணையின் இன்னிசையிலே உருகி நிற்கும் உங்கள் சுவையுணர் திறனை நான் போற்றுகிறேன். உயிரில்லாத இந்த யாழின் இசையே இவ்வளவு இனிமையாயின், இன்னும் உயிர்பெற்ற யாழின் இசை எப்படி இருக்கவேண்டும்!” என்று பாணன் ஒரு புதிய செய்தியை எடுத்து விட்டான்.

“அது என்ன? உயிருள்ள யாழா? அப்படியும் ஒன்று உண்டா?”

“ஆம்; உண்டு. கடவுள் படைத்த அந்த யாழ் கண்ணைக் கவரும்; காதைக் கவரும்; கருத்தையும் கவரும். அதன் பேரழகைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும். அதன் இசையைக் கேட்கத் தொடங்கினால் பிறகு அதனினின்றும் மீள்வதென்பது தேவர்க்கும் அரிய செயல். இசையோடு போகுமா? அது பாடும்; ஆடும், ஐம்புலன்களுக்கும் இன்பம் தரும்.”

பாணனுடைய வருணனை இல்லத் தலைவனுடைய ஆர்வத் தீயை விறகிட்டும் நெய்யிட்டும் மூட்டியது. மெல்ல மெல்லப் பாணன் தலைவனைப் பரத்தையர் சேரிக்கு அழைத்துச் சென்ருன். முதலில் இசை நயம் காமுற்றுத்தான் சென்றான் அவ்வாடவன்; ஒரு பரத்தையின் இசையிலே ஈடுபட்டான். அப்பால் அவளுடைய ஆடல் அவனை ஆட்கொண்டது. இறுதியில் அவளுடைய அழகைக் கண்டு மயங்கினான். படிப்படியாகத் தலைவன் தன் மனவலியை இழந்தான். அவன் தன் வீட்டிலே இருந்தால் தன் நிறையை இழந்திருக்க மாட்டான். விரகெலாம் அறிந்த பாணன் இசை ஆவலை அவன்பால் எழுப்பிப் பரத்தையர் சேரிக்கே அவனை அழைத்துச் சென்றுவிட்டான். அதற்குமேல் அவனுடைய சாமர்த்தியம் பலிக்கத் தொடங்கியது. இசையும் கூத்தும் அழகும் பேச்சும் மனவலி படைத்த தலைவனைக் காமச் சுழலுக்குள் இழுத்துச் சென்று ஆழ்த்திவிட்டன.

2

இங்கே மனைத்தலைவி எப்போதும்போல் இல்லற ஒழுக்கங்களை முறைப்படி செய்துவந்தாள். கணவன் பரத்தையர் வலையிலே சிக்கினனென்பது அவளுக்குத் தெரியும். கற்புக்கு அருங்கலமாகிய அவள் அதனால் சிறிதும் மன வேறுபாடு அடையவில்லை. அவனிடத்தில் வைத்த காதல் தளரவில்லை; அது பின்னும் இறுகியது. நமக்கெனவே வாய்த்தவளுகிய அவன் எங்கே சென்ருலும் இங்கே வருவான் என்ற மனத் துணிவோடு அவள் இருந்தாள். அந்தத் துணிவு இல்லாவிட்டால் அவள் ஒரு கணம் அமைதியாக வீட்டுக் கடமைகளைச் செய்ய முடியுமா? கணவனும் மனைவியும் ஒன்றுபட்டு நடத்தும் இல்லற வாழ்க்கையில் புறத்தே சென்று வேளாண்மையோ, கைத்தொழிலோ, வியாபாரமோ ஏதாயினும் செய்து பொருள் கொணர வேண்டியவன் கணவன். அறவழியில் அவன் ஈட்டிக் கொணர்ந்த அதனைப் பாதுகாத்து அளவறிந்து, தகுதி யறிந்து, வாழ்க்கை நிலையறிந்து செலவிட்டு அறத்தையும் இன்பத்தையும் வளர்ப்பவள் மனைவி. அவள் மனையரசி, அரசிக்கு ஏவலனாக இருப்பவன் கணவன். அவள் உள்ளம் திறம்பினால் மனையில் இருள் படரும். இல்லறம் சீர்குலையும்.

தமிழ் மகளாகிய தலைவி இந்தப் பண்புகளிலே தலைசிறந்தவள். தன் கணவன் நெறி பிறழ்ந்து ஒழுகுவதை உணர்ந்தும் அவள் பின்னும் ஊக்கத்தோடு இல்லற வாழ்விலே ஈடுபட்டாள். விருந்தினர்களுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்தும், இரவலர்களுக்கு ஈந்தும் வழக்கம்போல் இல்லறச் செயல்களை நடத்தி வந்தாள். பொருள் ஈட்டும்பொருட்டு வீட்டுத் தலைவன் வெளியூருக்குச் சென்று சில மாதங்கள் தங்கினால் அப்போது இல்லறம் தடைபடாது நடத்துவது அவள் கடமை அல்லவா? அதே நிலையில் இப்பொழுதும் நடத்தி வந்தாள். அவன் வீட்டில் இல்லை என்ற குறையை வருவார் அறியாதபடி அறம் வளர்த்தாள்.

ஆலுைம் அவள் பெண்தானே? தன் உள்ளக் கோயிலில் வைத்துப் பூசிக்கும் தெய்வத்துக்கு அருகிருந்து தொண்டு புரியும் ஆசை எழாதா? ஊரார் அறியாமல் அவர்கள் இருவரும் பழகிவந்த காலம் அவளுக்கு நினைவுக்கு வந்தது. அப்போது களவொழுக்கத்திலே அளவளாவிய அவர்களுக்கு இடையிடையே ஒரு நாள் இரண்டு நாள் பிரிந்து வாழ்வது துன்பமாக இருந்தது. அதனால் என்றும் பிரிவின்றி வாழவேண்டுமென்று எண்ணி உலகறிய மணம் புரிந்துகொண்டனர். அவர்கள் விருப்பம் நிறைவேறியது. நகமும் சதையும்போல ஒன்றி மனையறம் காத்து வந்தனர்.

இப்பொழுது அதற்கு இடையூறு வந்துவிட்டது. ஒன்றி வாழவேண்டிய நிலையில் பிரிவு வந்திருக்கிறது. பகலெல்லாம் அறத்தைச் செய்து பொழுதுபோயிற்று. இரவு வந்துவிட்டால் அவள் தானும் தனிமையுமாக இருந்தாள். அப்பொழுது அவனைப் பற்றிய நினைவு மிகுதியாயிற்று. உள்ளம் நெகிழ்ந்தது. காலையில் எழுந்தால் அவள் முகம் வாடியிருக்கும். அவளுடைய தோழியரும் பிறரும் அதைப் பார்த்துத் துணுக்குறுவார்கள். அவர்களுக்கு அதன் காரணம் நன்ருகத் தெரிந்ததுதானே? ஆகவே அவர்களும் மனம் உளைவார்கள். தலைவன் தவறு செய்வதை நினைத்து வருந்துவார்கள். எல்லா வகையிலும் உத்தமியாகிய அந்தப் பெருமாட்டியின் மலரனைய உள்ளம் மறுகுவதை அவர்களால் பொறுக்க முடியவில்லை. ஆகவே அந்த வருத்தந்தான் அவர்களுக்கு மேலோங்கி நின்றது.

எழுந்தபொழுது வாடியிருந்த மனைத் தலைவியின் முகம் அடுத்த கணத்தில் மலர்ந்துவிடும். வழக்கம் போல் இல்லறச் செயல்களில் ஈடுபட்டு விடுவாள். இரவெல்லாம் பெண்மையின் குழைவும் பகலெல்லாம் கற்பின் திண்மையும் அவளிடத்திலே ஒளி வீசின. “என்ன ஆச்சரியம்! அவனுடைய பிழையை நினையாதவள் போலவே இருக்கிறாளே. இவளுடைய பொறுமை யாருக்கு வரும்? தயையே இந்த உருவம். இவள் உலகத்துப் பெண்களில் ஒருத்தி அல்ல; பொறுமையின் உருவாகும் தெய்வம்; அடித்தாலும் அணைத்தாலும் அன்பு செய்யும் தாய். இவளை நாங்கள் உடன் பயிலும் தோழியாக நினைப்பது தவறு. எவ்வளவு அறிவு பெற்றாலும் இத்தகைய பொறுமையும் மன வலிமையும் வருவது அரிது. இவள் பிராயத்தால் சிறியவளேனும் அறிவினால் முதியவள்; பெரியவள்; எமக்குத் தாய்; இல்லறத்தின் சிறப்பை உணர நிற்பார்க்கெல்லாம் தாய்!” என்று தோழிமாரும் பிறரும் பேசிக்கொண்டனர்.

இற்பிறப்பு என்பது ஒன்றும், இரும்பொறை என்பது ஒன்றும், கற்பெனும் பெயரது ஒன்றும் அவள் பால் களிநடம் புரியக் கண்ட அவர்கள், அவ்வாறு எண்ணியது வியப்பன்று. தன்னையும் மறந்து, தன் தலைவன் பிழையைப் பிறர் அறியாதவாறு காத்து, அறப்பெருஞ் செல்வியாக விளங்கினாள் அவள்.

3

தோழிமார் உளளம் வெந்து உருகியது. மனைத்தலைவி தன் துயரைப் புறத்தார் அறியாதபடி மறைத்தாள். தோழியருடன் கலகலப்பாகப் பேசுவதும், புன்னகை பூப்பதும், நல்லுரை கூறுவதுமாகவே இருந்தாள். மறந்தும் தலைவனைப் பற்றிப் பேசுவதில்லை. அவனை அவள் முன்னிலையிலே குறைகூற அவர்களுக்குத் தோன்றவில்லை. “இவள் உள்ளத்தில் எரிமலை குமுறிக்கொண்டிருக்கிறது. ஆனால், முகத்தில் அதன் சுவடுகூடத் தெரியவில்லை. என்ன காரணம்?” என்று தம்மைத் தாமே கேட்டுக் கொண்டனர். உண்மை அது அன்று. தலைவி தலைவனுடைய பிழைக்காகச் சினம் கொள்ளவில்லை; அதைப் பெரிதாக எண்ணவும் இல்லை. தன் தனிமைக்காகத்தான் அவள் வருந்தினாள்; உலகமெல்லாம் துயிலில் ஆழ்ந்திருக்கும்பொழுது அவள் வருந்தினாள்.

“கடவுளே, இதற்கு ஒரு பரிகாரம் இல்லையா!” என்று ஏங்கினர் தோழிமார். அந்தப் பெண்தெய்வத்தோடு சார்ந்த சார்பினால் அவர்கள் உள்ளத்திலே கூடக் கோபம் மறைந்து விட்டது. தலைவனுடைய செயலைக் குறித்து அவர்களுக்கு வெறுப்பும் சினமும் முதலில் உண்டாயின. இப்போது அவை மாறித் தலைவியின் இயல்பைக் கண்டு தோன்றிய வியப்பே இடங்கொண்டது.

“இந்த ஊர்த் தலைவனாகிய அவன் இத்தகைய செயலில் இறங்கிளுனே! ஆழந்தெரியாத மடுவைப் போல இருக்கிறது அவன் உள்ளம்” என்றாள் ஒரு தோழி.

“ஆம், நல்ல உவமை. அவனே அந்த மடுவைப் போன்றவன்தான்; ஆழம் அளவிட முடியாத மடு. அதில் முதலே வாழ்கிறது. பலம் பொருந்திய ஆண் முதலை, முதலைப் போத்து, வாழ்கிறது. எவ்வளவு ஆழமாக இருக்கும்!”.

“முதலை வாழ்கிறது என்றவுடன் எனக்கு நினைவு வருகிறது. அந்த முதலை குழுகுவாரைப் பிடித்து அழுத்திவிடும் என்கிறார்கள். யானையானாலும் அதன் வாய்க்குள் போக வேண்டியதுதான் என்று சொல்லுகிறார்களே! உண்மையா?”

“ஆம், உண்மைதான். யானையும் மனிதர்களும் வந்தால் இழுப்பது கிடக்கட்டும். அதைப் பெரிய கொடுமை என்று சொல்லமாட்டேன். அது தன்னுடன் ஒருங்கு வாழும் பெரிய மீன்களையெல்லாம் விழுங்கி விடும்.”

கேட்டவள், “அப்படியா! இந்த ஊர்த் தலைவன் இயல்புக்குச் சமமான இயல்பு அதற்கு இருக்கிறது போலும்! முதலைப் போத்து முழுமீன் ஆரும் தண்துறை ஊரன் இவன். அந்த முதலையைப்போல இவனும் தன்னுடன் பழகியவர்களுடைய உயிர் தேய ஒழுகுகிறான்” என்று சற்று வேகமாகச் சொன்னாள்.

மற்ருெருத்தி உடனே பேச்சை நிறுத்தினாள். தலைவியின் இயல்புக்கு மாறாக அந்தப் பேச்சு ஓடிவிட்டதை அவள் உணர்ந்தாள். மேலே அந்தத் தோரணையில் பேச்சை வளர்க்க விரும்பவில்லை: “கடவுளை நாம் வேண்டிக்கொள்ள வேண்டும்; நம் தலைவிக்கு இன்பம் உண்டாகும்படி வாழ்த்தவேண்டும்” என்று தொடர்ந்து பேசினாள்.

“அவளுக்கு இன்பம் உண்டாகவேண்டுமானல் பழையபடி தலைவனும் தலைவியும் சேர்ந்து முறையாக அறம் புரிய வேண்டும். அவனே அங்கு இருக்கிருன். இவளோ இங்கிருக்கிறாள்”.

“இருந்தால் என்ன? இங்கிருந்து போனவன் அவன்தான். அவன் போன தேரும் அங்கு இருக்கிறது. அந்தத் தேர் முன்பெல்லாம் பகலில் எங்கே போனாலும் மாலையில் வீட்டு வாசலில் வந்து நிற்கும். மறுபடியும் அந்தக் காட்சியைக் கண்டு நம் கண் குளிர வேண்டும். கண்போமா?” அவள் தொண்டை கரகரத்தது. கண்ணில் நீர் ததும்பியது.

இருவரும் சேர்ந்து தொழுதார்கள்; வாழ்த்தினர்கள். “கடவுளே, தண்துறை ஊரன் தேர் எம் முன் கடை (வாசல்) நிற்க அருள் புரியவேண்டும்” என்று பிரார்த்தனை செய்தார்கள்.

4

மாலைக் காலம். இல்லத் தலைவியாகிய மட மங்கை விளக்கேற்றி வைத்தாள் ; தெய்வத்தை வணங்கித் தொழுதாள் ; வாழ்த்தினாள். தோழிமார் இருவரும் தூரத்தில் இருந்தபடியே அவளைக் கவனித்தார்கள். நாம் கடவுளே வேண்டினோம். இவளும் வேண்டுகிறாள். இருசாராருடைய வேண்டுகோளும் கடவுள் காதில் ஏறாமற் போகுமா?” என்று சொல்லிக் கொண்டே கவனித்தார்கள்.

அவள் வேண்டுகோள் என்ன? அவர்கள் கூர்ந்து கேட்டார்கள். ‘கடவுளே, என் தலைவன் மீண்டும் இங்கே வந்து விடவேண்டும் என்றுதான் அவள் வேண்டுவாளென்பது அவர்கள் எண்ணம். ஆளுல் அவள் வேண்டுகோள் வேறு விதமாக இருந்தது. தன்னலத்தின் நிழல் ஓர் அணுக்கூட அதில் இல்லை.

அவள் வேண்டுகோள் அவர்கள் காதிலே இப்போது தெளிவாக விழுந்தது.

“கடவுளே, நம்முடைய அரசனாகிய, ஆதன் வாழ்க! அவினி வாழ்க! உலகத்தில் பசி இல்லை யாகுக! நோய்கள் யாவும் ஒழியவேண்டும்!” என்று அவள் செய்துகொள்ளும் வேண்டுகோள் அவர்கள் காதில் இன்னிசைபோல வந்து ஒலித்தது.

அவர்கள் வியப்பு மயமாகவே ஆகிவிட்டனர். “இவள் நமக்குத் தாய் என்று இருந்தோம். நம் அரசனுக்குத் தாய் இவள்; நாட்டுக்குத் தாய்; உலகுயிர்க் கெல்லாமே தாய். அரசன் வாழ்ந்தால் நாட்டிலே பகையும் பிற இடையூறுகளும் வாராவென்று அவனை வாழ்த்துகிறாள். இயற்கை வளம் குன்றினால் பசி மிகுந்து உயிர்கள் வாடுமென்று எண்ணிப் பசி இல்லையாக வேண்டுமென்று வாழ்த்துகிறாள். நோய் ஒழிக வென்று வாழ்த்துகிறாள். குழந்தையின் பசியும் நோயும் மற்றவர்களைக் காட்டிலும் தாய்க்குத்தானே வருத்தத்தை அளிக்கும்? மகன் வயிறு வாடக் காணுத உள்ளம் படைத்தவள் தாய். குழந்தையின் நோயைப் போக்கும் பொருட்டுத் தான் மருந்து அருந்தும் தயை படைத்தவள் தாய். இவள் ஒரு குழந்தைக்காகக் கவல வில்லை. உயிர்கள் அனைத்தும் பகையின்றிப் பசியின்றிப் பிணியின்றி வாழவேண்டு மென்றல்லவோ வாழ்த்துகிறாள்? லோக மாதா இவள்” என்று எண்ணி எண்ணி விம்மிதம் அடைந்தார்கள். “இவளை விட்டு வாழவும் அவன் மனம் துணிந்ததே!” என்று இரங்கினர்.

அவர்களுடைய வேண்டுகோள் பலித்தது. தலைவன் பரத்தையர் சூழலினின்றும் விடுபட்டான். தண்டுறையூரன் தேர் அவர்கள் வீட்டுக்கு முன்னே வந்து நின்றது. அறம் பழுத்த மனத்தினளாகிய அந்தப் பெண்தெய்வத்தின் தவம் பழுத்தது. வந்த தலைவனைச் சிறு முனகலும் இன்றி வரவேற்று உபசரித்தாள். முன்னையினும் பன்மடங்கு அன்பு செய்து இன்பம் ஊட்டினாள்.

அவன் இப்போது, கடந்த நாட்களிலே தன் நெஞ்சை ஒட்டினன், “இவ்வளவு அன்புடன் உள்ள இவளை நீத்து வாழ்ந்தோமே! என்ன மதியினம்! எப்படி மறுகினாளோ!” என்று மிக மிக வருந்தினான்.

ஒரு நாள் ஒரு தோழியைத் தனியே கண்டு, “நான் பிரிந்திருந்த காலத்தில் நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைத்தீர்கள்? என்ன பேசினரீர்கள்?” என்று கேட்டான்.

அவள் சிறிது யோசித்தாள். பிறகு சுருக்கமாக விடை சொன்னாள். அந்த விடை சுருக்கமாக இருந்தாலும் பொருளாழம் நிரம்பி, அவர்களுடைய நிலையையும் இயல்பையும் நன்றாக வெளியிட்டது. அந்த விடை இதுதான்:

‘வாழி ஆதன்! வாழி அவினி
பசிஇல் லாகுக! பிணிசேண் நீங்குக!’
எனவேட் டோளே யாயே, யாமே,
‘முதலைப் போத்து முழுமீன் ஆரும்
தண் துறை ஊரன் தேர்எம்
முன்கடை நிற்க!’ எனவேட் டேமே.
-ஐங்குறுநூறு, 5.

[ஆதன் அவினி என்பவன் சேர வம்சத்தில் வந்த மன்னன். இல் ஆகுக-இல்லை ஆகட்டும். சேண் நீங்குக-தூரத்தில் சென்று ஒழிபட்டும். வேட்டோள்-பிரார்த்தித்தாள். யாய்-எங்கள் தாய். ஆரும்-உண்ணும். முன்கடை-வாசலுக்குமுன்]

– எல்லாம் தமிழ், அமுத நிலயம் பிரைவேட் லிமிடெட், சென்னை-18, எட்டாம் பகிப்பு : ஜூன், 1959

இலக்கிய ஆதாரங்கள்

இந்த வரலாற்றுக்கு மூலமாகிய ஐங்குறுநூறு 5-ஆம் பாடல், ‘புறத்தொழுக்கிலே நெடுநாள் ஒழுகி, “இது தகாது” எனத் தெளிந்த மனத்தனய் மீண்டு தலைவி யோடு கூடி ஒழுகா நின்ற தலைமகன் தோழியோடு சொல்லாடி, “யான் அவ்வாறு ஒழுக நீயிர் நினைத்த திறம் யாது?” என்றாற்கு அவள் சொல்லியது’ என்ற குறிப்போடு உள்ளது.

முதலைப் போத்தைப் பற்றிய செய்தியை உள்ளுறை உவமமாக்கி, ‘என்றது ஒருங்கு வாழ்வாரைப் பழமை நோக்காது உயிர் கவர்வான் என்பதாம்’ என்று விளக்குவார் பழைய உரைகாரர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *