தேவேந்திரன் சரயூ நதிக்கரையில் நின்றிருந்தான். அவனது வாகனம் ஐராவதம் வான்வெளியிலிருந்து அவளை இறக்கிவிட்டு அயோத்தியின் புறவெளி வனங்களில் உலவச்சென்றது. அது சிந்திக்கிற உயிரி. சிந்தித்தது.
“தலைவர் தாகம் இந்திராணி இருந்தும் தீரவில்லையே! அன்று ஆகாய கங்கை இறங்கும் அடிவாரத்தில் அகல்யாவுக்காக மனித வடிவில் சென்று சேவலாகக் காவினார். இன்று சரயூவின் கரையில் வந்து நின்றிருக்கிறார்?யாருக்காக?”
மனித வடிவில் நின்ற தேவேந்திரன் கம்பீரமாக ஓடும் சரயூவைப் பார்த்து நின்றான். ‘எவ்வளவு காலமாயிற்று சரயூ நதிக்கரைக்கு வந்து! ராம ஜனனத்தின் போதா? விஸ்வாமித்திரர் ராம லட்சுமணர்களை தவம் காக்க கானகத்திற்கு அழைத்துச் சென்ற போதா?’ சரியாக நினைவு வரவில்லை .
ஓடக்கரையில் ஓர் ஓடக்காரன் நின்றான்.
இந்திரனை ஒரு கரைகடக்க விரும்பும் பயணியாய்ப் பார்த்தான்.
‘எங்கே போகவேண்டும்?” கேட்டான்..
‘அயோத்திக்கு..’
‘அயோத்தி என்றால் அதோ தெரிகிறதே அது தான். அயோத்தியில் எந்த இடம்? எந்தக் கரை?’ஓடக்காரன் வெருட்டிக் கேட்டான்.
‘கௌதம மகரிஷி ஆசிரமம்’
‘அப்படித் தெளிவாகச் சொல்லவேண்டும். சரயூவின் கரை நெடியது. கடத்திக் கூட்டிச் செல்ல இரண்டு பணம் ஆகும்!’
‘என்னிடம் பணம் இல்லை. அதற்குப் பதில்..’ என்று இந்திரன் கண்டுவிரல் மோதிரத்தைக் கழற்றப் போனான். இந்திரனை ஏற இறங்கப்பார்த்த ஓடக்காரன் மனசில் ஒரு மரியாதை தோன்றியது.
‘வேண்டாம். வைத்துக்கொள்ளுங்கள். திரும்பி வரும்போது வாங்கிக்கொள்கிறேன்.’
தேவேந்திரன் ஏறி அமர்ந்தும் படகில் பளு இல்லை. தேவனாகையால் காற்றைப் போல் லேசாக இருந்தான். வெற்றுப்படகு போல துடுப்பு போடுவது லேசாக இருந்தது.
‘ஸ்ரீ ராமச்சந்திரபிரபுவின் பட்டாபிஷேகம் பார்த்திர்களா?’ ஓடக்காரளை இந்திரன் விசாரித்தான்.
‘ஓ! கண்கொள்ளாக் காட்சி. இந்தப் பிறவி செய்த புண்ணியம். இதோ இப்போதுதான் ஸ்ரீ ராமச்சந்திரப் பிரபு எங்கள் தலைவர் குகனை வழியனுப்பப் போய்க்கொண்டிருக்கிறார்.’ நல்லது.
அகல்யாவிடம் பிரம்மதேவர் ஆலோசனைப்படி பாப விமோசனம் கேட்கப்போகும்போது ராமன் இல்லாதிருப்பது மேல்.
ஆசிரமக்கரையோரம் ஓடம் நின்றது.
இந்திரன் ஓடக்காரனுக்கு நன்றி கூறிவிட்டு இறங்கி ஆசிரம எல்லையில் நுழைந்தான்.
இந்திரன் ஆசிரமத்திற்குள் பிரவேசித்தபோது கௌதமர் அங்கு இல்லை. அகல்யா கண்ணில் பட்டாள். மனசில் காமத்தின் விஷம் தலை தூக்கியது. அடங்கியது.
ஒரு விசேஷ அதிசயமாக சீதாப்பிராட்டி நின்றிருந்தாள்.
“நீங்களா?”
முதலில் கேட்ட அகல்யாவின் குரலில் அச்சமில்லை . அதட்டிக் கேட்கும் கம்பீரம்.
இந்திரனின் பார்வை முதலில் அன்று இரவு சுவைத்த அந்த அதரங்களில் ஊர்ந்து, உயிரைக் கவர்ந்து இழுத்த விழிகளுக்குத் தாவியது. மீண்டும் தனக்குள் தீப்பற்றிக்கொள்ளுமோ! அகல்யாவின் எழில் அப்படியே இருந்தது. ஆனால் அச்சமூட்டும் ஒரு தீச்சுடராக ஜொலித்தது, ‘எதற்கு வந்தீர்கள்?’ அகல்யா கேட்டாள் இந்திரன் தலை குனிந்து நின்றான். மிக அருகில் யாரோ வரும் மரக்காலடிகளின் ஓசை கேட்டது. இந்திரன் திரும்பிப்பார்த்தான், கௌதமா.
அவர் தான் சபித்து ஏற்படுத்திய இந்திரனின் ஆயிரம் கண்களின் மெளன துக்கத்தைப் பார்த்துக்கொண்டே போய் அவன் வலப்புறத்தில் வந்து நின்றார்.
யுகயுகங்களுக்கும் இனி தலைநிமிர்வு இல்லை என்று சானிவளைந்த இந்திரனின் முதுகெலும்பு குற்ற ஒப்புதல் சாட்சியம் அளித்தது.
அகல்யா நிமிர்ந்து நூறு அக்கினிப் பிரவேசங்களைக் கடந்து வந்த கற்பின் கனல் சுடர் வீச நின்றாள்.
அவளது கண்கள் இந்திரனின் ருனிந்த தலையை, தொங்கிய தோளை, அவளைத் தீண்டிய அந்தக் கரங்களை, இப்போது துடிக்கும் விரல்களை அவனது உடல் முழுவதும் கௌதம சாபம் வரைந்த ஆயிரம் யோனிக் குறிகளை பச்சாத்தாபத்தோடு பார்த்தன.
தேவராஜனாய் இருந்தும், மண்ணாகப்போகிற மனிதனுக்குரிய பலவீனம் அவனைப் பற்றிய அந்த இழுக்கிற்கு ஆளாக்கிய இரக்கம் அவளில் மிதந்தது. என்ன செய்வது! மனிதனாகப் பிறந்து செய்த புண்ணியங்களின் பதவி தானே அது’ தேவனாகலாம். தேவேந்திரன் ஆகலாம். தனது பேரழகு, காண்கிற எல்லோரையும் அது வசிகரிக்கின்ற காந்தம். இவைதான் காரணம் என்ற விடுபடல் அந்த இரக்கத்தில் வெளிப்பட்டது.
சீதா அகல்யாவின் முகத்தில் நிலவிய தேஜசைப் பார்த்தாள். அவளையே கண்கொட்டாமல் பார்த்தாள். அவை ஏதோ போதிப்பதைப் போல் உணர்ந்தாள்
கௌதமரோ சாபம் இடுமளவு கொதித்த சினம் சாம்பல் மேடாகி, அதை மௌனமாகக் கடந்து வரும் சாம்பசிவம் போன்று உணர்ச்சியற்று நின்றார்.
இச்சை. மோகம். அழகு தருகின்ற லாகிரியின் அவஸ்தை எல்லாம் கடந்து அவற்றைக் காலில் சுற்றிய பாசியை, லேசாய் சூலத்தினால் அகற்றி எறியும் சாந்தம் நிலவியது.
பட்டாபிஷேகக் கொண்டாட்டங்கள், ஆரவாரங்கள் எல்லாம் தீர்ந்து மழை விட்டுவிட்ட நிம்மதி. சீதா வந்திருப்பது அதற்காக! பதிமூன்று வருஷம் கடந்து விட்ட கானக அமைதிக்கு மனம் ஏங்கி வந்திருக்கிற அவளது கோரிக்கையை இந்திரன் கெடுத்துவிடுவானோ!.
அவர் சீதையைப் பார்த்தபோது அவள் சரயூவைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“சரயூ.. எப்படி எல்லாம் குதூகலித்திருக்கிறது! அவளது மகிழ்ச்சியைக் கொண்டாடியிருக்கிறது அவளது மாறாத் துயர்களுக்குப் பொங்கி எழுந்து அடங்கியிருக்கிறது !
இடுப்பின் மேல் கைவைத்தபடி இந்திரனை விசாரிக்கிற அகல்யா. சற்றும் பதறாமல் அருகே நிற்கும் கௌதமர்.
சீதா முதலில் திகைத்தாள். ஏதோ அசம்பாவிதமோ? தான் அங்கே நிற்கவேண்டுமா? காண விரும்பாமல் விலகி நடக்க முயன்றாள்
“நில்லுங்கள் தேவி .’ என்று தடுத்தாள் அகல்யா. சிதா நின்றாள், “இந்திரன் ஏன் வந்தார்?” சீதா அகல்யாவைக் கேட்டாள். பதிதன் ஆயினும் ஆண், தேவேந்திரன், மரியாதையைக் குறைக்கக்கூடாது.
‘அவனையே கேளுங்கள்!’ சொல் இல்லை. முகம் திரும்பி இந்திரனைச் சுட்டும் சைகை.
‘தேவேந்திரா!’ சீதை நீதிபதிபோல் இன்றி கருணை காட்டும் கனிவோடு கேட்டாள்.
சற்றே நிமிர்ந்து சீதையைப் பார்த்த இந்திரன் அதில் நிலவிய தெய்விக ஒளி கண்டு சட்டென்று குனிந்து அவளது பாதங்களைத் தொடப்போனான். நகர்ந்து நின்ற சீதை சொன்னாள்:
“நான் மனுஷி, நீங்கள் தேவேந்திரர்.’
அருகில் நின்ற கௌதமர் மார்பில் கைகட்டி நின்றார்.
தூரம் அகன்றாலும் சீதையின் முன் தரையைத் தொட்டு வணங்கி இந்திரன் சொன்னான்.
‘இல்லை . அன்னையே! தாங்கள் மறந்திருக்கலாம். நான் மறக்கவில்லை . பாற்கடலில் அறிதுயிலில் உள்ள மகாவிஷ்ணுவின் துணைவி. எந்தப் பாத தூசுக்கு விமோசன சக்தி உள்ளதோ அவரது பத்தினி தாங்கள்.’
‘இது ராமாவதாரம்.’
“இங்கே ஏன் மீண்டும் வந்தீர்கள்?”
‘பாப விமோசனம் கேட்க வந்தேன்.’
‘அகல்யாவிடமா?’ ‘ஆம், அன்னையே!’ கௌதமரைக் காட்டி சீதா கேட்டாள். “சாபம் கொடுத்தவர் இவர். இவர் இல்லாத சமயத்தில் இங்கு வந்தால்.. இவ்வளவும் நடந்த பின் மீண்டும் வந்தால் அதற்கு என்ன பொருள்?’ |
‘சாபமிட அகல்யாவை ஆளாக்கிய என் பாவத்திலிருந்து விமோசனம் வேண்ட வந்தேன்’.
‘அகல்யா தேவி என்று சொல்!”
சீதை சொன்ன மரியாதைப் பன்மையை மனத்தில் ஏற்றுக் கொண்டு ‘மன்னியுங்கள்’ என்று வேண்டினான்.
‘என்ன எளிமையாக விமோசனம் கேட்கிறான் இவன்!’
‘எனக்கு ஸ்ரீ ராமன் காலடி பட்டு சாபவிமோசனம் கிடைத்து விட்டது. ஆனால் பாபக்கறை போகவில்லையே, போக விடாத எத்தனை பார்வைகள்! அருவருப்பு. ஏளனம்.. இந்திரனாய்த் தன்னை நினைத்துத் தனக்குள் தோன்றும் சபலம் மறைத்த பரிவுகள்.
“இவள் தான் அகல்யா..’ என்னைச் சுட்டிக் காட்டி அடையாளம் சொல்லும் எத்தனை ஆண்கள் . எத்தனை பெண்கள். பிஷிபத்தினிகள் முதல் இளவரசிகள் வரை. சாபங்களுக்கு அஞ்சி நரிப்பார்வை பார்க்கும் கோழைகள்’ அகல்யா சீற்றம் தணியாத பார்வையோடு இந்திரனைப் பார்த்தாள்.
எதிர்பாராமல் கௌதமர் பேசினார்:
‘சாபம் கொடுத்தது என் பலவீனம்.’ என்றார்.
அவர் குரல் கம்மியிருந்தது.
சீதா அவரை வியப்போடு பார்த்தாள்.
‘என்ன சொல்கிறீர்கள் மகரிஷி?” தியரென்று ஒரு சலசலப்பு கேட்டது. ஒரு சிறுத்தைப் புலியால் விரட்டப் பட்டு வந்த மான் ஒன்று மனிதச் சூழலைக் கண்டு சற்றே மருண்டு ஆசிரம வேலி தாண்டிக் குதித்து திறந்திருந்த குடிசைக் கதவுக்குள் பாய்ந்து நுழைந்தது.
‘ஐயோ பாவம்’ என்று மானைப்பார்த்து அனுதாபத்தை வாய்விட்டுச் சொன்னாள் சிதை.
கொஞ்சம் பொறுங்கள், உள்ளே யாகத்திற்கு உரிய பாலும் தயிரும் வைத்திருக்கிறேன். மான் உருட்டி விடப்போகிறது.’ என்று அனுமதி கேட்டுக்கொண்டு அகல்யா குடிசையை நோக்கிப் போனாள். |
சீதா அவள் போவதைப்பார்த்து விட்டு கௌதமர் பக்கம் பார்வையைத் திருப்பினாள்.
‘அகல்யா இல்லையேல் என் தபஸ் இல்லை.’ அதற்குப் பதில் போல மெதுவாக தாடியை உருவிக்கொண்டு கௌதமர் சொன்னார்.
அந்த இருவர் முன்னால் நிற்கவே தகுதியற்று இன்னும் தான் நீசனாக…….
இந்திரனின் தலை மீண்டும் ஒரு முறை குனிந்தது .
“சீதா!” கௌதமர் அவளை மெல்லிய குரலில் அழைத்தார்.
‘ராமனைப் பார்க்க வந்த குகன் சரயூவின் இக்கரையில் காத்திருக்கிறான். அங்கே ராமனோடும் குகனோடும் அனுமனும் இருக்கிறான். அவனும் உன்னைக் காண வேண்டிக் காத்திருக்கிறான். நாம் போவோமா?’
“உள்ளே போன அகல்யா வந்து விடட்டுமே!
“இல்லை. நாம் போவோம். இந்திரன் அவனிடம் பாப மன்னிப்புக் கேட்க வந்திருக்கிறான். மன்னிப்புக் கேட்பவர், கொடுப்பவர் இருவருக்குமே முன்னால் வேறு சாட்சிகள் இருப்பது தர்மசங்கடம்’
ஒருமுறை இந்திரனையும், கதவுக்கு அப்பாலிருந்த அகல்யாவையும் பார்த்துவிட்டு கௌதமரின் கம்பீரமான பெருந்தன்மைக்குக் கட்டுப்பட்டு சீதா அவரைப் பின்தொடர்ந்தாள்.
அந்த இருவரை ஒன்றாகப் பார்த்ததால் சபித்தவர், இப்போது இருவரையும் தனியே இருக்க அனுமதித்து விட்டு வருகிறார். அந்தக் கண்ணியம் அவள் நெஞ்சில் ஒரு கல்லாக விழுந்து அலைகளாய்ப் பரவியது.
ஆசிரம எல்லையில் ஒரு கனிமரத்தில் இருந்து ஒரு பழம் விழவும், அதைக் கவ்விக்கொண்டு ஓட வந்து இரு கீரிகள் ஒன்றை ஒன்று துரத்தி வரவும், மரத்திலிருந்து பாய்ந்து குதித்தோடி வந்த ஓர் அணில் அதைக் கவ்வி ஓடியதை, வெறித்துப் பார்த்தபடி கீரிகள் நிற்கிற காட்சியைக் கண்டார்.
கௌதமா. அனுதாபத்தோடு உச்சுக் கொட்டினார்.
“இன்று போல் நான் அகல்யாவை அன்று உணர்ந்திருக்கவில்லை. எதையும் பொறுத்துக் கொள்ளும் தபோபலம் அன்று இல்லை. ஒரு பெண் என்னுடைமை என்ற ஆதிக்கம் மறையவில்லை. பரம்பொருள் என்னைத் தொலைவிலேயே அகற்றி வைத்திருந்தது. நான், என்னுடையது என்ற எண்ணம் நீங்கவே வாய்ப்புக் கொடுத்திருந்தது பரம்பொருள்.’
சீதா அவரது கண்களில் நிலவிய சாந்தத்தை மனசிற்குள் வாங்கிக் கொண்டாள்.
‘சபிக்கும் அளவுக்கு அப்போது நான் பலவீனன்.. ஒரு ரிஷிபத்தினி சாபங்களுக்கு அப்பாற்பட்டவள். சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவள் தான்.. என் அறிவீனம் அவள் சபலங்களுக்கும் அப்பாற்பட்டவளாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தது. என்ன அகந்தை! விளைவு பல ஆண்டுகள் அவள் சுமந்தது கல்லின் கடினத்தை. இந்திரனுக்கு இட்ட சாபத்தால் அவனைக் காண்பவர்கள் எல்லாரையும் அகல்யாவின் வீழ்ச்சியை நினைக்கச் செய்து விட்டேன்’ எதிரில் ஒரு பெரிய பாறை தென்பட்டது. ‘அம்மா சிதா! அங்கு போய் சற்று அமர்ந்து பேசுவோமா?’ என்று கேட்டார்.
“ஆகட்டும் மகரிஷி!” இருவரும் ஒருவரை ஒருவர் எதிரெதிரே பார்த்தபடி அமர்ந்தனர்.
“என் மனசில் வளர்ந்திருக்கும் புற்றிலிருந்து நான் வெளிவரவேண்டும் அம்மா சீதா!”
சீதா புன்னகையோடு அவரை ஒரு குழந்தையைப் பார்ப்பது போல் பார்த்தாள்.
‘அகல்யா பிரம்மாவின் மகள். அவரது கற்பனையை எல்லாம் குழைத்து இனி இவளுக்கு மேல் ஓர் அழகு இருக்கக் கூடாது என்ற சங்கல்பத்தோடு உருவாக்கிய பேரழகி. தேவாதி தேவர்களையெல்லாம் ஓட்டப்பந்தயம் ஓடவைத்துப் பார்த்துவிட்டு என்னை அவளது தந்தை பிரம்மா தேர்ந்தெடுத்தார். முனிவனுக்கு மனைவியாக இருப்பது மட்டுமே போதும் என்று இயற்கையை நிர்ப்பந்திக்க முடியாது. அதுவும் தேவர்களுக்கே தலைவனான இந்திரன் தன்னை இச்சிக்கிறான் என்ற கர்வத்திலிருந்து விடுதலையாகி நிற்க எந்தப் பெண்ணால் முடியும்? அப்படி இருக்க அகல்யாவுக்குக் கற்பிக்கப் படவில்லை .
ஆண் பெண் என்ற பாலின பேதம் கடந்த ஞானியாக எதிர்பாராவிதமாக கௌதமர் வெளிப்படுவதைக் கண்டு சீதா அந்த ஞான சாந்நித்தியத்தில் நிற்கிற அனுபவம் பெற்றாள்.
‘சீதா! உன் வைராக்கியம் பூஜிக்கத்தகுந்தது. அகல்யாவின் பலவினம் மன்னிக்கத் தகுந்தது.’
‘மகரிணி .. தாங்கள்..?’ சீதா வாசகத்தை முடிக்காமல் இழுத்தாள்.
“இந்திரன் மன்னிக்கப்படவேண்டியவள். என்ன செய்கிறோம் என்பதன் களம் அறியாமல் ஒரு கணத்தில் தவறிழைத்து விட்டான். பாபம் அவனைச் சாராது.’
‘பின் யாரைச் சாரும்?’
‘அகல்யாவின் வடிவழகை… அந்தச் சிருஷ்டியை. அதை உருவாக்கிய சிருஷ்டிகர்த்தாவை.’
ஒருகணம் கண் மூடி யோசித்து வானத்தைப் பார்த்தார். பிறகு எதிரிலிருந்த சீதையைப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தார்
‘இல்லை, தெளிவாக யோசித்தால் பிரம்மதேவர் கூட இதற்குப் பொறுப்பாகமாட்டார். தான் ஒரு பேரழகியாக இருக்கவேண்டும் என்று ஒரு பேரழகை அகல்யா தனக்குள் இச்சித்தாள். பிரம்மா அனுக்கிரகித்த வடிவம்: அது. வழங்கியது பிரம்மா. நாம் நம்மையே சிருஷ்டித்துக் கொள்கிறோம். அகல்யா அப்படி இச்சித்துப்பெற்ற அனுபவத்தால்தான் தனது அழகின் பிரமையில் இருந்து இப்போது விடுபட்டிருக்கிறாள்.
சீதைக்கு ராவணன் நினைவு வந்தது!
எவ்வளவு மகா சக்திமான்! எப்பேர்ப்பட்ட வீரன்! கைலயங்கிரியைத் தன் கைகளால் அசைத்துப் பார்த்தவன். எட்டுத்திசைகளையும் தன் கட்டில் கொண்டு வந்தவன். எப்படி என் அழகில் மூழ்கி அழியாத அவப்பெயருக்கு ஆளானான்? அவன் பாவங்களை இராமபாணம் துருவித் துளைத்தெடுத்து விட்டது. அவன் மன்னிக்கப்பட்டிருப்பானா? இருக்காது என்ற எண்ணம் தோன்றியது. அவன் சிந்தையைக் குலைத்த அழகிற்குத் தானே காரணம் என்று நினைவு வந்தது. தான் இந்தப் பேரழகை இச்சித்தோமோ? நடந்தது என்ன? விதி எழுதிய ஒரு பெரிய சோக நாடகமா? திரை விழுந்து விட்டது, பின் உணர்ச்சிகளுக்கு வேலையில்லை,
சீதை ராவணனை மன்னித்தாள். அவன் பாவங்களை எல்லாம் மன்னித்தாள். திரும்பி தூரத்தில் தெரிந்த சரயூவைப் பார்த்தாள். வெள்ளை வெளேரென்ற நுரைவெள்ளத்தோடு அது சிரிப்பது தெரிந்தது. பரிபூரணமான சாந்தி அவளுள் பிரவேசித்தது.
இந்த சாந்தியை அகல்யாவும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினாள்.
வேறொன்றும் பேச்சின்றி ‘போவோம் மகரிஷி!’என்றாள்.
இருவரும் சரயூவின் கரை நோக்கி மெதுவாக நடக்கத் தொடங்கினர்.
பாபவிமோசனம் பெற்ற தேவேந்திரன் ஒடக்கரை நோக்கி நடந்து வந்தான். அவன் மீண்டு வருவதைக் கண்டு ஐராவதம் வான்வெளிக்குத் திரும்பும் முன் சரயூ வளர்ந்த வனத்திடமிருந்து விடைபெற்றது.
– ஜனவரி 2020