குன்றென நிமிர்ந்து நில்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 30, 2023
பார்வையிட்டோர்: 2,782 
 

அறைக் கதவின் தாழ் திறக்கப்போன பரசு கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டான்.

பெற்றவர்களின் உரையாடல் காதில் விழ, கூர்ந்தான்.

“பரசுவுக்கு ஒரு இடம் வந்திருக்கு; பார்க்கலாமா..?’ன்னாரு புரோக்கர்…!”

“நீங்க என்ன சொன்னீய..?”

“மொதல்ல நல்ல வேலை அமையட்டும். அப்பறம் கல்யாணம் பேசலாம்னேன்..”

“சரியாச் சொன்னீங்க…! நானுங்கூட கட்டம் பாத்தேன்…! வியாழக்கிழமை குரு பகவானுக்கு கொண்டக் கடலை மாலை கோத்துப் போடுக்க, வரும் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு கூடி வரும்னாரு ஜோசியர்.”

“ம்……………………!.”

“என்ன யோசனை…?”

“உடன் பிறந்த தம்பிக்கு கல்யாணம் முடிஞ்சி அண்ணனுக்கு ஆகல்லையே… ஏன் ? னு கேள்வி வருமே…! பெண்ணைப் பெத்தவங்க யோசிப்பாங்களே?. எப்படி சமாளிக்கறது? ன்னு குழப்பமா இருக்கு….ஒவ்வொரு சமயம் பரசுவுக்குக் கல்யாணம் பண்ணிட்டு சின்னவனுக்குப் பண்ணியிருக்கலாமோ’னு கூடத் தோணுது?.”

“மரை கிரை கழண்டுபோச்சா…?. சின்னவனுக்குக் கல்யாணமாகி மூணுவயசுல மகளும் ஒரு வயசுல மகனும் பெத்து சம்சாரியாயிட்டான். இப்போ போய் இதென்ன பயித்தியக் காரத்தனமான பேச்சு…?”

“அதுவும் சரிதான்..! சின்னவனுக்குதான் எல்லாமே எப்படியெல்லாம் நடந்துச்சு.? வெவ்வேற கம்பெனிலேர்ந்து வேலைக்கு ஆர்டர் வந்ததும், இது வேண்டாம், அது வேண்டாம்னு ஒதுக்கி… செலக்ட் பண்ணித்தானே , இப்ப பார்க்கற வேலைக்குப் போனான்…!”

“ஆமாமாம்…! அவன் யோகக்காரன்தான்… கல்யாணம் மட்டும் எப்படி…? நிறைய வரன்களை இது வேண்டாம் அது சரிவராதுனு ஒதுக்கி தேர்ந்தேடுத்துதானே கட்டினான்.. …!”

“என்ன செய்யறது ; அப்படி ஒண்ணுன்னா இப்படி ஒண்ணு, அஞ்சு விரலும் ஒண்ணா இருக்கறதில்லியே…?”

“பரசு இப்படி அதிர்ஷ்டக் கட்டையா இருக்கானே…! ஆண்டவன் எப்பத்தான் கண் திறக்கப்போறானோ? படிப்புல ஒண்ணும் சோடையில்ல, ஏதோ வரட்டு வேதாந்தம் பேசிக்கிட்டு, கொள்கை, கத்தரிக்கானு….படுத்தறான். பெயர்ச்சிக்கப்பறம் எல்லாம் மாறும்னு சொன்ன வாக்கு பலிக்கணும்…!


பரசுவின் உடன் பிறந்த தம்பிதான் கணேசன். எந்தக் கொள்கையும் கிடையாது அவனுக்கு. ‘சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட்’ பாலிசி. கேஜி முதல் பிஜி படிப்பு வரை எல்லாத் தேர்விலும் அகா சுகா செய்து பாஸ் செய்தவன். அதிராமல் பொய் பேசுவான். உடம்பு முழுக்க பொய், பித்தலாட்டம்.

வைவா ஓசி யில் பேந்தப் பேந்த விழித்தும், தத்து பித்துதென்று பதில் சொல்லியும், சாயம் வெளுத்துவிட்டதால் ‘கேம்பஸ் இன்டர்வியூவில்’ கணேசன் தேர்வாகவில்லை.

இணையத்திலும், செய்தித்தாள்களிலும் வாண்டட் காலம் பார்த்து அப்ளிகேஷன் பூர்த்தி செய்து, தம்பியிடம் கையெழுத்து வாங்கி அப்பாதான் நிறைய கம்பெனிகளுக்கு விண்ணப்பித்தார். தந்தைக்கென கடமைகள் இருக்கிறதே……!

விண்ணப்த்துடன் இணைக்கப்பட்ட அப்பாவின் ஆங்கில கவரிங் லெட்டருக்கும், மதிப்பெண் சான்றிதழில் அச்சடிக்கப்பட்ட மதிப்பெண்களையும் மதித்து பல கம்பெனிகளில் இருந்து அழைப்பு வந்தது. வந்ததில் மூளைக்கு அதிக வேலையில்லாத ஒரு வேலையில் அமர்ந்துவிட்டான்.

முகவெட்டு கூட சுமார்தான் அவனுக்கு. பார்க்கும் வேலையை அனுசரித்தும், கமிஷனுக்கு ஆசைப்பட்டும் கல்யாணத்தரகர்கள் பெண் ஜாதகங்களைக் கொண்டு வந்து குவிக்க, வந்ததில் பசையுள்ள இடமாகப் பாத்துக் கல்யாணம் முடித்த கணக்கன் அவன்.

நாலு வருட திருமண பந்தத்தில், இரண்டு குழந்தைகள் பெற்றாலும் அப்பா அம்மாவை குடும்பத்தோடு நேரில் வந்து இன்று வரை பார்த்தவன் இல்லை. வாரமோ, பத்துநாட்களுக்கு ஒருமுறையோ வீடியோ காலில் பேரன் பேத்திகளைக் காட்டும் சுயநலக்காரன்.


‘தம்பியின் அகடவிகடம் எல்லாம் நன்றாகவேத் தெரிந்தும் அவனைத் தூக்கி வைத்துக் கொண்டாடவேண்டிய அவசியம்தான் என்ன?’ என்கிற ஆதங்கம் ஆத்திரமாக உருக்கொண்டது பரசுவுக்கு.

வழக்கமாக ஓசையில்லாமல் திறக்கும் பரசு, கோபம் உச்சந் ததைக்கு ஏற ‘ட்…ரா..ரா..க்’ என பலத்த ஓசையெழத் தாழ் திறந்தான்.

‘நம்ம பேசினதை காதில் வாங்கியிருப்பானோ?’ பெற்றவர்களின் கண்கள் மாறி மாறிக் கேட்டுக்கொண்டன.


“மிஸ்டர் ரமணன்… இந்தாங்க விசிட்டிங் கார்ட்.

‘யாருடையது…!’ என்ற கேள்வி கண்களில் தெரிய

“என் கிளாஸ்மேட். க்ளோஸ் ஃப்ரெண்ட், தொழிலதிபர். இவர் கம்பெனிய நம்பி 30 குடும்பங்கள் பிழைக்குது.”

“ஓ…!”

“இவருக்கு ஒரே மகள். தோஷ ஜாதகம்… பரசுவோட பிறந்த தேதியைப் போட்டு, கம்ப்யூட்டர் ஜாதகம் கணிச்சி நானே இருந்து பாத்துட்டேன்.. பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு..”

“அதெல்லாம் சரி…! பரசு இன்னும் எந்த வேலையிலும் செட்டில் ஆகலையே சார்…!”

“அந்தக் கவலையை விடும்…! சம்பந்தி அவரோட கம்பெனிலயே உங்க மகனுக்கு நல்ல பதவியும் கொடுத்து, மகளையும் கல்யாணம் பண்ணிக் கொடுக்கச் சம்மதிச்சிட்டார். அவர் மகளுக்கும் சம்மதம்தான். நீங்க உங்க மகன்கிட்டே எடுத்துச் சொல்லி ஒத்துக்க வைக்க வேண்டியது. அதிர்ஷ்டம் கதவைத் தட்டியிருக்கு. மிஸ் பண்ணிடாதீங்க…!”

கையெடுத்துக் கும்பிட்டார் ரமணன். “…சொந்த பந்தங்களே நமக்கேன் வம்புனு போற உலகத்துல, உங்களோடு நடைப்பயிற்சி வருகிற பழக்கத்தை வெச்சி இவ்ளோ பெரிய உதவியை செய்த உங்களுக்கு நான் ரொம்ப கடமைப் பட்டிருக்கேன்…”. என்று வாய் சொல்ல கை அனிச்சையாய்க் கும்பிட்டது.


“குரு பகவானுக்கு ஜோசியர் சொன்னபடி நாலாவது வாரமாக கொண்டைக்கடலை மாலை போட்டபின் சந்நிதியில் ஏகாந்தமாக கண்மூடி அமர்ந்திருந்தாள்.

“லலிதா…,பகவான் கண் திறந்துட்டார்……!”

“என்ன சொல்றீங்க..?”

“காலம் கனிஞ்சிடுச்சு…” என்று தொடங்கி ரமணன் அனைத்தையும் விவரமாகச் சொல்ல லலிதாவுக்கு நிம்மதிப் பெருமூச்சும் ; ‘எல்லாம் நல்லபடியாக முடியவேண்டுமே.!’-என்ற கவலையும் வந்தது..

வேலை, திருமணம் இரண்டும் ஒரே நேரத்தில் அமைந்ததை பேசிப் பேசி மகிழ்ந்தனர் பெற்றவர்கள்.


அப்பா சொன்ன விவரங்களை அமைதியாகக் கேட்டுக்காண்டான் பரசு. “என் கொள்கைகளுக்கு ஒத்து வந்தா பார்ப்போம்…!” என்றான்.

அம்மா நடு நடுவே “உன் தம்பிக்கு…! ” என்று தம்பி புராணம் பாடும்போது உள்ளுக்குள் உடைந்தான். புயலாய் சீறினான்.

“ஏன் அவனை சீண்டிக்கிட்டே இருக்கே..?” வழக்கம்போல அம்மாவைக் கண்டித்தார் அப்பா.

“நாளை மறுநாள் புதன் கிழமை காலை 10 மணிக்கு தொழிலதிபரை சந்திக்கணும்.” என்றார் அப்பா.

“…” பரசுவின் மௌனத்தை சம்மதம் என உறுதிசெய்துகொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.


அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரோடு வரவேற்றார் ஜிஎம்.

‘தாமதமானாலும் தரமான சம்பந்தம் கிடைத்ததில் அப்பாவுக்கு அளவிடமுடியா ஆனந்தம்.

ஆர்டரைப் பிரித்துப் பார்த்ததும் “சார்…!” என்றான் பரசு. அவன் குரலில் பதற்றம் இருந்தது.

அப்பா ஒன்றும் பேசமுடியாமல் தர்மசங்கடத்தில் நெளிந்தார்.

“எடுத்த உடனே ‘எச் ஆர்’ பதவியா…? என்னை மன்னிச்சிடுங்க. ஏகப்பட்ட பொறுப்புகள் இருக்கற அந்தப் பதவிக்கு என் சொந்த உழைப்பு மூலம் நிறைய அனுபவம் பெற்று படிப்படியா உயர்ந்து வர வாய்ப்பு கொடுங்க…! தயவு செஞ்சி, என் படிப்புக்கு ஏற்ற வேலையும், இந்தத் துறைல முதல் படியுமான ‘புரோக்ராமர்’ பதவியே எனக்குப் போதும் ப்ளீஸ்…!”

அங்கே பரசுவின் கேரக்டர் உயர்ந்து நின்றது; ஜி எம் மனதில் மட்டுமல்ல, பெற்ற தகப்பனின் மனதிலும்தான்.

“நீங்க கட்டிக்கப்போற…” என்று தொடங்கிய ‘ஜிஎம்’ஐ மேலே பேசவிடவில்லை பரசு.

“உங்க மகள் யுஎஸ்’ல ‘எம். எஸ்’ முடிச்ச இன்டலெக்சுவல். அவங்க பதவியைப் பத்தித்தானே சொல்ல வறீங்க…?”

“…” அமைதி காத்தார் தொழிலதிபர்.

“படிப்பு, வேலை, திருமணம், குடும்ப வாழ்க்கை எல்லாம் வேற வேற சார். ஒவ்வொண்ணையும் தனித்தனியா பார்க்காம எல்லாத்தையும் ஒண்ணோட ஒண்ணு போட்டு குழப்பறதுனாலதான் குடும்ப உறவுகள், சமூக உறவுகள் எல்லாம் சிக்கலாகி, சமநிலைத் தவறிக் கெடுது…! ங்கறதுதான் என்னுடைய தாழ்மையான அபிப்ராயம்.”

“…!…!…” ஜி எம் ஆச்சரியத்தில் உரைந்தார்.

“உங்க மகள் ஜி எம் க்கு அடுத்த நிலை நிர்வாகப் பொறுப்புல இருக்கறதால எனக்கு எந்த ‘ஈகோ’வும் (தன்முனைப்பும்) கிடையாது.

“…” பேச நா எழவில்லை ஜி எம் க்கு.

“சார்…! அதே போல பெரிய பங்களாவுல சகல வசதிகளோட வாழ்ந்துக்கிட்டு இருக்கிற உங்க மகள், என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு, ஒரு ‘மிடில் க்ளாஸ் ஃப்ளாட்ல’ என் பெற்றோரை அனுசரிச்சிக்கிட்டு இருக்கமுடியுமானு கேட்டுக்கோங்க. சம்மதம்னா மேலே பேசுவோம்…!.”

‘பெற்றோரிடம் இவ்வளவு மதிப்பா…? இவ்வளவு நாள் இவனைப் புரிந்துகொள்ளாமல் இருந்துவிட்டோமே…!’ என்ற கழிவிரக்கம் வந்தது பெற்றவருக்கு.

மாமனார் பணத்தில் மஞ்சள் குளிக்கும் மருமகன்கள் மலிந்த சூழ்நிலையில், இப்படிப்பட்ட உயர்ந்த பண்பாளரான பரசுவை கண்டு பிரமித்து நின்றார் ஜி எம் மட்டுமல்ல லஜ்ஜையுடன் சற்றே மறைவாக நின்று உரையாடல்களை கவனித்துக் கொண்டிருந்த அவரது ஒரே மகளும் பரசுவின் வருங்கால மனைவியுமான மிருணாளியும்தான்.

அனைவர் பார்வையிலும் குன்றென நிமிர்ந்து நின்று, குன்றிலிட்ட விளக்காய் பிரகாசித்தான் பரசு.

– ஆனந்த விகடன் 06.09.2022

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *