கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 7,440 
 

வெற்றி நாயகன் தேவா என்றால் தமிழ் நாட்டில் எல்லோருக்கும் தெரியும். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு ஹீரோ. அவர் இது வரை 70 திரைப்படங்களில் நடித்துள்ளார். அவற்றில் 50 படங்களுக்கு மேல் சூப்பர் ஹிட். இவர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், அந்த படத்தின் துவக்க விழாவுக்கே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருவார்கள். அவ்வளவு பிரபலம்.

ஒரு படத்தில் சிறைக்கைதி வேடம் அவருக்கு. அந்தப் படம் வெளிவந்த போது, படம் வெளியான ஒவ்வொரு திரையரங்கத்திலும் சிறைக்கைதி உடையில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இவர்களைப் பார்த்து, உண்மையான கைதிகள்தான் தப்பித்து இங்கு வந்துவிட்டார்களோ என்று காவல்துறைக்கு சந்தேகமே வந்துவிட்டது. அப்படியொரு கூட்டம்.

இதே போல், ஒரு படத்தில் கான்ஸ்டபிள் வேடம் அவருக்கு. அவரது ரசிகர்கள் கான்ஸ்டபிள் உடையணிந்து திரையரங்கத்தில் நின்றுக்கொண்டிருந்ததைப் பார்த்து காவல்துறை அதிகாரிகள் அதிர்ந்து விட்டனர்.

அந்த காவல்துறை உயர் அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இனி எந்த ஒரு படத்திலும் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடாது என்று முடிவு எடுத்தார். அன்றிலிருந்து இன்று வரை அப்படி ஒரு கதாபாத்திரத்தில் அவரைப் பார்க்கவே முடியாது.

என்னதான் மிகப்பெரிய ஹீரோவாக இருந்தாலும், அவரிடம் கொஞ்சம் கூட திமிர், ஆணவம் கிடையாது. திரைத்துறையில் நடிக்க வந்தபோது எப்படி இருந்தாரோ, அப்படித்தான் இன்று வரை இருக்கிறார். எல்லோரிடமும் மரியாதையோடு பேசுவார். குரல் உயரவே உயராது. பண்பானவர், எளிமையானவர். முடிந்த வரை எல்லோருக்கும் உதவ வேண்டும் என்று எண்ணி, தனக்குத் தெரிந்த வகையில் உதவி செய்வார்.

எப்போது வேண்டுமானாலும் அவரது ரசிகர்கள் அவரைப் பார்க்கலாம். வீட்டுக்கு ரசிகர்கள் வந்தால் அவர்களுக்கு சாப்பாடு போட்டுவிட்டுதான் மறு வேலை. தலைவாழை விருந்தே இருக்கும். ரசிகர்களுடன் சமமாக உட்கார்ந்து அவரும் சாப்பிடுவார்.

இப்படி தேவாவின் தீவிர ரசிகர்களில் ஒருவன் முருகன். திருச்சி மாம்பழச்சாலையில் உள்ள ஒரு மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருகிறான். 19 வயது தான் ஆகிறது. படிப்பில் ஆர்வம் இருந்தாலும், தன் குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்காமல் வேலை பார்த்து வருகிறான்.

இவன் தாய் வீட்டு வேலை செய்பவர். தந்தை ஒரு கூலித் தொழிலாளி. 8 வருடங்களுக்கு முன் குடிபோதையில் சாலையைக் கடக்க முயற்சித்தபோது விபத்து ஏற்பட்டு இறந்தார். இரண்டு தங்கைகள் வேறு முருகனுக்கு. அன்றிலிருந்து படிப்பை நிறுத்திவிட்டு, ஏதாவது ஒரு வேலை செய்து, தன்னால் முடிந்த அளவுக்கு குடும்ப சுமையைத் தன் சிறிய தோள்களில் தாங்கிக்கொண்டு இருக்கிறான்.

வேலை நேரத்தில் மிகவும் கடினமாக உழைப்பான் முருகன். டீ, காபி குடிக்கும் நேரத்திலும், தான் வேலை பார்க்கும் கடைக்கு வந்திருக்கும் வண்டிகளைப் பற்றியே பேசிக்கொண்டு இருப்பான். இதனாலேயே கடையின் முதலாளி வேலுவுக்கு முருகனை ரொம்பப் பிடிக்கும்.

எப்படியாவது தொழில் கற்றுக்கொண்டு தானும் ஒரு மெக்கானிக் கடை திறக்க வேண்டும் என்பது அவனுடைய ஆசைகளில் ஒன்று. ஆனால் அவனுடைய கனவு எல்லாம் ஒன்றே ஒன்று தான். எப்படியாவது தேவாவுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த கனவு.

அன்று காலை 10 மணி. வழக்கம்போல் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தான் முருகன். அப்போது கடைக்கு வந்த வேலு முருகனிடம், “டேய் முருகா, இங்க வாடா” என்று முருகனைக் கூப்பிட்டான்.

“ஒரு ரெண்டு நிமிஷம் முதலாளி. இந்த டி.வி.எஸ் 50 ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது. என்னன்னு பாத்துட்டு வந்துடறேன்” என்றான் முருகன்.

“பரவாயில்ல முருகா, ஒரு நிமிஷம் அந்த வண்டிய விட்டுட்டு இங்க வா. உனக்கு ஒரு முக்கியமான, சந்தோஷமான விஷயம் சொல்லணும்”

வண்டியை கடையின் ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு வேலுவிடம் சென்றான்.

“சொல்லுங்க முதலாளி. ஏதோ முக்கியமான விஷயம்னு சொன்னீங்களே?”

“சந்தோஷமான விஷயம்னு சொன்னேன்ல. என்ன விஷயம் சொல்லு பார்ப்போம்?”

சிறிது நேர யோசனைக்குப்பிறகு முருகன். “தெரியல முதலாளி. நீங்களே சொல்லிடுங்களேன்” என்றான்.

“சொன்னா கடையை விட்டுட்டு ஓடிட மாட்டியே? உன்னை நம்பி சொல்லலாமா?”

“என்ன முதலாளி இப்படி சொல்லிட்டீங்க? உங்களை விட்டுட்டு நான் எங்க போக முடியும்? எனக்கு தொழில் கத்து கொடுத்தவர் நீங்க தானே. அப்படியெல்லாம் செய்வேனா?”

“சரி உன்னை நம்பி சொல்றேன். தேவா வந்திருக்கார் நம்ம ஊருக்கு. தலைவா ஹோட்டல்ல தான் தங்கியிருக்கார். தெரியுமா?”

“எந்த தேவா பத்தி சொல்றீங்க முதலாளி? நம்ம கடையில ஏதாவது வண்டியை ரிப்பேருக்கு கொடுத்துட்டு போனவரா அவரு?”

“டேய் முட்டாப்பயலே, சினிமா ஹீரோ தேவா டா. உனக்குக்கூட ரொம்பப் பிடிக்குமே. அந்த தேவா”

இதைக் கேட்டவுடன் ஒரு இனம்புரியா சந்தோஷம் முருகனுக்கு. முகம் மலர்ந்தது.

“அட, என்ன முதலாளி சொல்றீங்க? தேவா சார் இங்க வந்திருக்காரா? நம்மூருல ஷூட்டிங்கா? சூப்பர் முதலாளி நீங்க” குரலில் ஒரு ஆச்சரியம் கலந்த உற்சாகம்.

“ஆமாம் டா. நம்ம ஏரியாவுல தான் ஷூட்டிங்காம். ஆனா நாளைக்கு கிளம்பறாராம். எனக்குத் தெரிஞ்ச போலீஸ்கார் ஒருத்தர் சொன்னார்”

“ஐய்யய்யோ, அப்போ நாளைக்கே நம்ம ஊர விட்டு போயிடுவாரா? அவரை நான் எப்படியாவது பாக்கணும்னு இருந்தேனே”. குரலில் ஒரு சோகம்.

“கவலைப்படாதே முருகா. இன்னிக்கு போய் பாத்துட்டு வா. கடையை நான் பாத்துக்கறேன்”

முருகன் கண்ணில் ஆனந்தம். “ரொம்ப நன்றி முதலாளி. தேவா சார் படம் போட்ட சட்டை ஒன்னு என் கிட்ட இருக்கு. அதை எடுத்து போட்டுக்கிட்டு, அப்படியே அவரை பாத்துட்டு வந்துடறேன் முதலாளி” என்றான்.

“இந்தா என்னோட வண்டி சாவி. அதுல போயிட்டு வா. மெதுவா ஓட்டு, ஜாக்கிரதை. சீக்கிரமா வந்துடு” என்று தன் யமஹா வண்டியின் சாவியை அவனிடம் கொடுத்தான் வேலு.

வண்டியைக் கிளப்பி நேராக அவன் வீட்டுக்குச் சென்றான் முருகன். தேவா படம் போட்ட மஞ்சள் நிற சட்டையைத் தேடி கண்டுபிடித்து எடுத்து, அதை உடுத்திக்கொண்டு வண்டியில் ஏறி உட்கார்ந்தான்.

தேவாவைப் பார்க்கப் போகிறோமே என்ற சந்தோஷத்தில் வண்டியில் சாவியை போடாமல் உதைத்துக் கொண்டிருந்தான். சில நொடிகள் கழித்து தான் விளங்கியது அவனுக்கு. தன் பின்தலையில் லேசாக தட்டிவிட்டு, சாவியை வண்டியில் போட்டு அங்கிருந்து கிளம்பினான்.

வழியெல்லாம் தேவாவிடம் என்ன பேசுவது என்பது குறித்து யோசித்தவண்ணம் இருந்தான். தலைவா ஹோட்டல் ஒரு மிகப்பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டல். தன்னை உள்ளே அனுமதிப்பார்களா என்ற கேள்வி அவனுக்குள் இருந்தது. என்ன ஆனாலும் சரி, எப்படியாவது உள்ளே சென்று தேவாவை சந்தித்துவிட வேண்டும் என்று நினைத்தான்.

தலைவா ஹோட்டலை நெருங்கினான். ஹோட்டலில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தேவா வெளியே வருவதைப் பார்த்தான். எங்கே அவரை சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்று பயந்து, வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும்போதே இருக்கையில் இருந்து எழுந்து, “தலைவா, தலைவா” என்று கத்தினான்.

யாரோ தன்னை கூப்பிடுகிறார்கள் என்று தெரிந்து தேவா முருகன் வரும் திசையைப் பார்த்தார். தன்னை சந்திக்கத்தான் இப்படி வருகிறான் என்பது புரிந்து முருகன் வரும் திசையை நோக்கி கையசைத்தார்.

ஆனால் அதற்குள் அந்த வண்டியை ஒரு லாரி மோதியது. வண்டியில் இருந்து தூக்கி எறியப்பட்டான் முருகன். தலையில் பலத்த அடி, ஏகப்பட்ட ரத்தம் போயிருந்தது.

அங்கிருந்தவர்கள் உடனே அவனை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தேவா அவர்களைப் பின்தொடர்ந்து அந்த மருத்துவமனைக்கு வந்தான். நிறைய ரத்தம் போயிருப்பதால், உடனடியாக ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னவுடன், அதற்கான செலவுகளை தான் பார்த்துக்கொள்வதாக சொன்னான் தேவா.

உடனடியாக ஆப்பரேஷன் நடந்தது. அந்த நாள் முழுவதும் மயக்கமாகவே இருந்தான் முருகன். வேலுவும், முருகனின் குடும்பத்தினரும் மருத்துவமனையில் இருந்து அவனைப் பார்த்துக்கொண்டனர்.

அடுத்த நாள் முருகனுடைய நிலைமை சற்று முன்னேறியிருந்தது. வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தான். ஆனால் தேவாவை சந்திக்க முடியவில்லையே என்ற சோகத்தினால் யாரிடமும் சரியாக பேசவில்லை அவன்.

அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்தார் தேவா. தன்னை நோக்கி தேவா நடந்து வருவதைப் பார்த்த முருகனின் கண்கள் ஈரமானது. தேவா இன்று ஊரை விட்டு கிளம்பியிருக்க வேண்டும், ஆனாலும் தன்னைப் பார்க்க வருகிறார் என்றால், அது எவ்வளவு பெரிய விஷயம். இதனால் தான் முருகன் கண்கள் ஈரமானது.

தேவா தன்னருகில் வந்தவுடன், மெத்தையில் இருந்து எழுந்து நிற்க முயற்சித்தான் முருகன். அவனை படுத்துக்கொண்டே இரு என்று சொல்வது போல் சைகை காட்டினார் தேவா. மெத்தையில் படுத்தபடியே, கைகளைக் கூப்பி, தேவாவுக்கு வணக்கம் சொன்னான் முருகன். ஆனால், சந்தோஷத்தில் பேச்சு வரவில்லை அவனுக்கு.

“என்ன முருகா, எப்படி இருக்கீங்க? இப்போ உடம்பு எப்படி இருக்கு?” நலம் விசாரித்தார் தேவா.

“தலைவா, என்னால நம்பவே முடியல. நீங்களா இங்க வந்து என்னோட பேசறது? நான் எவ்ளோ கொடுத்து வெச்சிருக்கணும்?” கண்ணீர் வழிய சொன்னான் முருகன்.

சிறு புன்னகையுடன், “நானே தான். இப்போ எப்படி இருக்கீங்க? வலி எல்லாம் போயிடுச்சா?” என்றார் தேவா.

“உங்கள பாத்து, உங்ககிட்ட பேசிட்டேன்ல. இப்போ எல்லாம் சரி ஆகிடுச்சு தலைவா. உங்கள பாத்த சந்தோஷத்துல எப்படி பேசறது, என்ன பேசறதுன்னே தெரியல தலைவா”

“சரி, நீங்க வண்டியில வரும்போது ஏன் எழுந்து நின்னு கத்திட்டே வந்தீங்க?”

“தயவுசெஞ்சு வாங்க, போங்கன்னு பேசாதீங்க. நான் தான் உங்கள அப்படி கூப்பிடணும்”

“சரி, அப்படியே கூப்பிடறேன் இனிமேல். சந்தோஷமா?”

“நன்றி தலைவா. உங்களுக்கு ஒன்னு தெரியுமா? உங்களோட ‘நாளை உனது’ படத்துல நீங்க சொல்லுவீங்களே, சிகரெட், சாராயம் எல்லாம் விட்டுடுன்னு. அந்த படத்தைப் பார்த்ததுல இருந்து நான் சிகரெட் பிடிக்கறதையே விட்டுட்டேன்”

“வெரி குட். சரி, நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லலியே? வண்டியில வரும்போது ஏன் எழுந்து நின்னு கத்திட்டே வந்தே? ஏன் ஹெல்மெட் போடலை”

“உங்களோட ‘நாளை உனது’ படத்துல, நீங்க ஹீரோயினப் பாத்துட்டு அப்படித்தான் வருவீங்க. அது அப்படியே மனசுல பதிஞ்சிடுச்சு தலைவா. அதான் அப்படியே வந்திடுச்சு”

முருகனின் இந்த வாக்கியத்தைக் கேட்டவுடன் உள்ளூர உறுத்தியது தேவாவுக்கு. தான் செய்வதை மக்கள், குறிப்பாக இளைஞர்கள் செய்கிறார்கள் என்பது புரிந்தது. என்ன செய்யலாம் என்று யோசிக்கத் தொடங்கினார் தேவா.

முருகனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் தேவா. அடுத்த நாள் சென்னையில் ஷூட்டிங்க். அடுத்து படமாக்கப்படவேண்டிய காட்சியை விவரித்துக்கொண்டிருந்தார் படத்தின் இயக்குனர்.

அப்போது ஒரு காட்சியை அவர் விவரிக்கும்போது, தேவா அதற்கு மறுப்பு தெரிவிப்பது போல் தலையை ஆட்டி, “இல்ல சார், நான் பைக்குல் ஹெல்மெட் போட்டுக்கிட்டு வர்றதுதான் கரெக்ட்டா இருக்கும். நாம செய்யறத பாத்து, பல பசங்க அதை அப்படியே செய்யறாங்க. அதனால எதையுமே இனிமே ஒழுங்கா, கரெக்ட்டா செய்யணும்னு நினைக்கிறேன். என்னால யாருக்கும் எந்த கெட்ட பழக்கமும், பாதிப்பும் வரக்கூடாது சார்” என்றார். இயக்குனரும் அதை ஆமோதிக்க, அடுத்த சில நிமிடங்களில், ஹெல்மெட் அணிந்து தேவா வண்டி ஓட்டிக்கொண்டு வரும் காட்சி அன்று படமாகியது. தேவாவின் இந்த படத்தை ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் என்று சொல்லவா வேண்டும்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *