குடிசை வீட்டு மருமகள்

4
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 28, 2023
பார்வையிட்டோர்: 10,435 
 

நிறைய பரிசுப் பொருட்களுடன் கிராமத்திற்கு வந்து சேர்ந்தான் குமணன். கிராமத்திற்கு வரும் போது ராணுவ வேலையை ராஜினாமா செய்து விட்டு விட்டு தான் வந்தான். பணியில் சேர்ந்து பத்து வருடங்கள் ஆகி விட்டது. கிராஜுட்டி, மற்ற சில சலுகைகள் கிடைக்கும் என்றார்கள். மேலும் எக்ஸ் சர்வீஸ் மேன் என்பதை உபயோகப் படுத்தி வேறு வேலை வாங்கி விடலாம் என்றார்கள். அவனுக்கு நம்பிக்கை இருந்தது. வேறு வேலை கிடைத்து விடும் என்று.

ஆனால் அம்மாவிடமும், மற்றவர்களிடமும் வேலையை விட்டு விட்டதை சொல்லாமல், நீண்ட விடுப்பில் வந்திருப்பதாகச் சொல்லி வைத்தான். வேறு வேலை வாங்கிய பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று திட்டம் போட்டான்.

ஆனால் பிரச்சினை அவன் எதிர்பார்க்காத இடத்தில் இருந்து ஆரம்பித்தது. அவனைப் பொறுத்த வரை வேறு வேலை வாங்கிய பிறகு தான் கல்யாணப் பேச்சு என்று நினைத்து இருந்தான். ஆனால், ஏற்கனவே ஒவ்வொரு முறை விடுப்பில் அவன் வரும் போதும் அவனுடைய கல்யாணத்தை முடித்து விட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த அம்மா, இந்த முறை அவனுடைய விடுப்பு முடிவதற்குள் கண்டிப்பாக கல்யாணம் நடத்தி விட வேண்டும் என்று அதற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டாள்.

பெண் யார் என்றால், அம்மாவின் அண்ணன் மகள் அம்பிகா தான். அம்மாவைப் கேட்டால், அம்பிகா எனது மருமகள் என்பது அம்பிகா பிறந்தவுடன் நிச்சயம் ஆகி விட்ட விஷயம் என்பாள்.

இப்படி அம்மா மும்முரமாய் அவனுடைய கல்யாண வேலையை ஆரம்பிப்பாள் என்பதை குமணன் எதிர்ப்பார்க்க வில்லை.

குமணனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. வேலையை விட்டு விட்டதை வேறு யாருக்கும் சொல்லவில்லை என்றாலும் கூட, மாமாவுக்கு தெரியப் படுத்தி விட வேண்டும். இல்லையென்றால் வேலையை விட்டு விட்டதை மறைத்து தன் பெண்ணைக் கல்யாணம் செய்து ஏமாற்றி விட்டதாக அவர் ஆத்திரம் அடைந்து விடுவார்.

முதலில் அம்மாவிடம் சொல்லி விடலாமா. இல்லை. நேரிடையாக மாமாவிடமே சொல்லி விடலாம்.

மாமா வீடு உள்ளூர் தான். அம்மாவுக்கு தெரியாமல் போய் எல்லா விஷயத்தையும் மாமாவிடம் சொல்லிவிட்டு வந்து விடலாம். வேலையில் இல்லை என்பது தெரிந்த பிறகும் அவர் தன் பெண்ணை தருகிறேன் என்று சொல்கிறாரா என்று பார்க்கலாம்.

சட்டையை போட்டுக் கொண்டு கிளம்பினான்.

அப்போது, “ அம்மா.. இருக்காங்களா..” என்று கேட்டுக் கொண்டு உள்ளே வந்தாள் எதிர் வீட்டில் இருக்கும் தெய்வானை. அவளுடைய வீட்டை, வீடு என்று சொல்ல முடியாது. ஓலைக்குடிசை தான் அது.

அவளுடைய அம்மா சின்ன வயதிலேயே போய்விட தன் குடிகார அப்பாவுடன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறாள். களை பிடுங்க, நாற்று நட என்று வயல் வேலைக்கு கூலிக்கு போகிறாள் அவள்.

தான் சீக்காக படுக்கும் பொதெல்லாம் தெய்வானையை வீட்டு வேலைக்கு வைத்துக் கொள்வாள் அம்மா. அவன் ஜம்முவில் இருக்கும் போது, அம்மாவுக்கு கடுமையான காய்ச்சல் என்று போன் வந்தது. நான் வர வேண்டுமா என்று அவன் கேட்ட போது, தேவை இல்லை எதிர் வீட்டு

தெய்வானை நன்றாக கவனித்துக் கொள்கிறாள். வயல் வேலைக்கு கூட போகாமல் இருபத்து நான்கு மணி நேரமும் கூடவே இருந்து பார்த்து கொள்கிறாள் என்று அம்மா சொன்னாள்.

அப்படி கவனித்து அம்மாவை குணமாக்கினாள் தெய்வானை. உடம்பு சரியானவுடன், அவளுக்கு கொடுக்கும் கூலிப் பணத்தை மிச்சம் பிடிக்க வேண்டும் என்று அவளை வேலைக்கு வரவேண்டாம் என்று சொல்லி விட்டாள் அம்மா. அதையெல்லாம் தெய்வானை பொருட்படுத்த மாட்டாள். அம்மாவுக்கு அடிக்கடி வந்து ஏதாவது உதவி செய்வாள். கூலி என்று எதையும் எதிர்பார்க்க மாட்டாள். அம்மா பழைய சாதம் கொடுத்தால் கூட அதில் திருப்தி அடைவாள்.

“அம்மா.. உள்ளே தான் இருக்காங்க.. நீ உள்ளே போ.. நான் வெளியே போய் விட்டு வர்றதா அம்மாகிட்டே சொல்லிடு..”

தெய்வானையிடம் சொல்லி விட்டு தெருவில் இறங்கி நடந்தான் குமணன்.

மாமாவின் வீடு ஊரின் வடக்கு எல்லையில்.

மாமா வீட்டை நெருங்கும் போது, அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. மாமா வீட்டிற்கு போய் மாமாவிடம் நேரிடையாக ஏன் விஷயத்தைச் சொல்ல வேண்டும். மேலும் வீட்டில் அம்பிகா இருப்பாள். இந்த சமயத்தில் அங்கே போவது சரியா.. எல்லோருக்கும் ஏன் தர்ம சங்கடத்தை கொடுக்க வேண்டும். சின்ன மாமா பக்கத்தில் தான் இருக்கிறார். அவரிடம் விஷயத்தை சொல்லி விட்டு வந்து விடலாமே.. சின்ன மாமா, பெரிய மாமாவிடம் சொல்லிக் கொள்ளட்டும்.

சின்ன மாமாவிடம் விஷயத்தை சொல்லி விட்டு வீடு திரும்பினான் குமணன்.

அன்று இரவு பூகம்பம் வெடித்தது.

மாமா விட்டிலிருக்கும் வேலைக்காரன் ஓடி வந்து அம்மாவிடம்,

“உங்க அண்ணன் கையோட உங்களை கூட்டிக் கிட்டு வரச் சொன்னாங்க..” என்றான்.

அம்மா கிளம்பினாள்.

விஷயம் என்னவாக இருக்கும் என்று அவனால் ஊகிக்க முடிந்தது.

அம்மா வீட்டிற்கு திரும்பும் போது மணி பத்து இருக்கும்.

அழுது கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள்.

அவனுடைய முகத்தை பார்க்காமல் உள்ளே சென்றாள்.

விடிந்தது.

எழுந்தவுடன் “ அந்த தெய்வானை தாண்டா என் மருமகள்..” என்றாள் அம்மா.

“கொஞ்சம் பொறும்மா.. வேற வேலை கெடைக்கட்டும். நம்ம ஊரு பேங்க்ல செக்யூரிட்டி வேலைக்கு மனு போட்டு இருக்கேன்.. வரட்டும்.. அப்புறம் கல்யாணத்தை வைச்சுக்கலாம்.” என்றான்.

“சரிடா..” என்றாள் அம்மா.

அடுத்த வாரமே அந்த பேங்க் வேலை கிடைத்தது அவனுக்கு.

”இப்ப என்னம்மா சொல்றே..” என்றான் குமணன்..

“என்னோட மருமகள் தெய்வானை தான்.. அதுல எந்த மாற்றமும் இல்லை..” என்றாள் அம்மா.

குமணனுக்கும் அது மகிழ்ச்சி தான்.

-கல்கி 2021

Print Friendly, PDF & Email

4 thoughts on “குடிசை வீட்டு மருமகள்

    1. நன்றி ராகுல் கார்த்திகேயன் – தாரமங்கலம் வளவன்(8129567895)

    1. நன்றி எம் எஸ் கார்த்திக்- தாரமங்கலம் வளவன்(8129567895)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *