கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 18, 2021
பார்வையிட்டோர்: 6,228 
 
 

தூங்கா நாயக்கருக்குப் பல யோசனை ஓடியது. கேவலம் ஒரு ‘குண்டி வேட்டிக்கு’ இப்படியொரு ‘தரித்திரியம்’ வந்திருக்க வேண்டாம்.

ரொம்ம்ப வருத்தமாகிவிட்டது மனசுக்குள் அவருக்கு.

இருக்கிறதெல்லாம் இந்த ஒரு வேட்டிதான்.

அன்றைக்கு வேலை இல்லை – அதாவது கிடைக்கலை.

அது நல்ல கோடைக்காலம். உடம்பில் வேர்வை நசநசத்தது. மனப்புழுக்கம் வேறு. அப்படியே கொஞ்சம் லாத்தலாய் கம்மாக்கரைப் பக்கம் போய்க் காத்தாட ஒரு மரத்தடியில் உட்காரலாமே என்று வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நடந்தார். சனியன்போல எதிரே ஒரு புளியம்பழம் கீழே கிடந்தது. எடுப்பதற்காகக் குனிந்தார். அவ்வளவுதான்; வேட்டி ரெண்டாக ஒருச்சான் தளத்துக்குப் பிய்த்து போய்விட்டது. இழித்தாலும் தைத்துக் கொள்ளலாமே; பிய்த்தல்லவா போய்விட்டது.

‘தெரியாமலா நாணப்ப நாயக்கர் அப்படிச் செய்யிறார். அவர் ஒண்ணும் பைத்தார மனுசன் இல்லை; நல்ல வசதியானவர். உக்காரும் போது – அது எந்த இடமானாலுஞ் சரி – கலியாணவிடோ விசேச வீடோ ஊர்ப் பொதுக்கூட்டமோ கம்மாய்க்கரையோ எங்கானாலும் சரி, உடம்பு தரையில் படுமே தவிர உக்காரும் தரைக்கும் உடம்புக்கும் மத்தியில் வேட்டி இருக்காது! வேட்டியை மேலே சுருட்டிக்கிடுவார். தரையில் வேட்டி பட்டால் புழுதியும் அமுக்கும் ஆயிரும்; வேட்டி தைஞ்சும் போகுமாம்’. கஞ்சம்பத்தி, ஈயாப்பத்தி என்று யார் எவர் கேலி செய்தாலும் சரிதான்; “போங்கடா பேப்பய புள்ளைகளா” என்று சொல்லிவிடுவார். அவர் குளியும் போது வெட்கப் படாமல் வேட்டியை – மடித்துக் கட்டியிருந்தால் – மேலே தூக்கி விட்டுக்கொள்வார்!

அவர் செய்ததெல்லாவற்றின் ரகசியமும் தூங்கா நாயக்கருக்கு இப்பொத்தான் விளங்குகிறது.

விளங்கி என்ன செய்ய இப்பொ!

***

தூங்காதாயக்கர் ஒரு அரசியல்வாதி இல்லை. ஆனால் அப்படி ஆவதற்கு அவருக்கு ஒரு சந்தர்ப்பம் இருந்தது.

1942ல் ஆகஸ்டு மாதத்தில் ஜனங்கள் வெள்ளை ஆட்சிக்கு எதிராகப் பொங்கி எழுந்தார்கள். அந்த எழுச்சியை அடக்க வெள்ளை அரசு ஜனங்கள் மேல் கூட்டு அபராதம் போட்டது; தலைகால் புரியாத பேத்தனமான அடக்குமுறை; போராட்டத்தில் ஈடுபட்டுத் தலைமறைவாக இருப்பவர்களுக்குப் புகலிடமோ சாப்பாடோ கொடுக்கக்கூடாது என்ற உத்தரவிட்டிருந்தது.

நாயக்கர் ஒரு தலைமறைவு அரசியல்வாதிக்குத் தன் குடிசையில் அடைக்கலம் கொடுத்தார்; சர்க்காரின் உத்தரவைப்பற்றித் தெரிந்தே தான் கொடுத்தார். காரணம், அவருக்கும் அடிதானிலிருந்தே தேசியப் போராட்டம் சுதந்திரம் முதலியவற்றில் கொஞ்சம் கிறுக்கு உண்டு. பத்திரிகைகளை விடாமல் இன்றும்கூட படித்துக்கொண்டுதான் வருகிறார்.

தலைமறைவாக இருந்த அரசியல்வாதி இவருடைய வீட்டை விட்டுப் போனபிறகுதான் போலீஸுக்கு இதுபற்றித் தகவல் தெரிய வந்தது. அதற்காகத் தூங்கா நாயக்கரைப் பிடித்து அவர்கள் அடித்தார்கள். அடியென்றால், அது உங்கவீட்டு அடி எங்கவீட்டு அடி அல்ல. பழைய பித்தளைப் பாத்திரக்கடைக்காரன் அருமையான பாத்திரங்களையெல்லாம் தெருவிலே போட்டு அடித்து தைப்பானே அந்தமாதிரி அவரைப்போட்டு அடி ‘நச்சி’ எடுத்தார்கள், உட்கார்த்தால் மிதி; எழுத்தால் அடி.

தவளைகளையும் வண்டுகளையும் கல்லால் தைந்து சித்திரவதை செய்யும் பருவம் சிறு குழந்தையாக மனிதன் இருந்தபோது இருந்து பிறகு மறைந்துவிடுகிறது என்று மனக்கூறு வல்லுநர்கள் சொல்வார்கள். ஆனால் இந்த போலீஸ் ‘மனிதர்கள் காக்கிச் சட்டை போட்டதும் அந்தச் சிறுபருவம் திரும்பிவிடுகிறது போலும். வண்டுகளையும் தவளைகளையும் விட்டுவிட்டு சக மனிதனிடமே அந்த விளையாட்டை விளையாடுகிறார்கள்.

அதுகளுடைய கால்களின் கீழே அந்த தேசபக்தன் மிதிபடும்போது அந்தக்காலத்தில் போலீஸுக்கு பூட்ஸ்கள் கிடையாது. ‘இது உஷ்ணமான நாடு; என்னத்துக்கு பூட்ஸ்’ என்று ‘மூளையுள்ள’ வெள்ளைக்காரன் கொடுக்கவில்லை. ஆகவே நாயக்கர் செருப்புக் காலால் உதைபட்டார்.

எவ்வளவு நேரந்தான் ஒரு மனுசனைப் போட்டு கம்மங்கதிரை சமட்டுகிறமாதிரி சமட்டிக்கொண்டிருக்கமுடியும்? கையும் காலும் போலீஸுக்கு வலித்ததால் பிழைத்துப்போ என்று நாயக்கரை எச்சரித்து விட்டுவிட்டார்கள். எனவே அவர் “ஆகஸ்டு தியாகி” ஆகாமல் ஒரு நூல் இழையில் தப்பினார்.

நாயக்கர் கையிலிருந்த புளியங்கொறடாவைப் பார்த்தார். அதன் கீழ் நுனியின் ஓடு ஒரு அங்குலத்துக்கு உடைத்து அதுவழியாகப் பழம் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அவருக்குப் புளியம்பழத்தைப்பற்றிய ஒரு நாடோடிச் சொலவடை ஞாபகத்துக்கு வரவும் சிரித்துக்கொண்டார்!

அந்தேரம் கம்மாயில் ‘கால்’ கழுவ ராமராஜு வந்தார். வந்தவர், ஊர்க்கிணற்றில் பொம்பிளைப் பிள்ளைகள் யாராவது தண்ணீர் இறைக்கிறார்களா என்று ஒரு பார்வை பார்த்துவிட்டு, தண்ணீரில் உட்கார்ந்து ‘கால்’ கழுவிக்கொண்டு எழுந்தார்.

தூங்காநாயக்கர் ராஜுவின் வேட்டியைக் கவனித்தார். தனக்குத் தெரிந்த நாளிலிருந்து அந்த மனுசன் அந்த ஒரே மாதரியான வேட்டியைத்தான் எடுத்து உடுத்திக்கொண்டு வருகிறார். அந்த வேட்டியை விரித்துப் பிடித்தால் நடுமையம் ஒரு ஒண்ணர முழ அகலத் துக்கு நீண்ட வட்ட வடிவில் தூய வெண்மை நிறமாகவும், அது வேட்டியின் கரையை நெருங்க நெருங்க வெண் சிகப்பு அதிகரித்துக்கொண்டே போகும். இந்தமாதரி வேட்டி அவருக்கு என்று எங்கிருந்துதான் கிடைக்கிறதோ தெரியவில்லை.

ராமராஜுவின் வீட்டில் வேலை செய்யும் சின்னக்கனி “அல்வாந் துணி” என்ற செஞ்சிகப்பு “சாய வேட்டி”தான் உடுத்துவான் எப்பவும். “சாயவேட்டியில் எம்புட்டு அழுக்கு ஏறினாலும் தெரியாதாமே!

நாணப்ப நாயக்கரின் பேரன் ராகவலு இந்தக்காலத்துப் பையன். அவன் உடுத்தும் கைலி – வேட்டிகளின் நிறம் பொம்பளைகளின் கலர்ச் சேலையெல்லாம் கெட்டது போ!

மைனர் தாயக்கர் ஒரு வேட்டி உடுத்திக்கொண்டிருக்கார். அசல் முட்டைத்தோடுமாதிரி. கோழிமுட்டையின் ஓட்டுக்கும் கருவுக்கும் மத்தியில் இருக்குமே முட்டைத்தோடு, அது மாதிரி! என்ன மெதுவு; என்ன மெதுவு எப்படித்தான் நெசவு பண்ணினானோ, அடேயப்பா.

முதலாளி நல்லாதாயக்கர் வீட்டுக்கு ஒருநாள் தூங்கா நாயக்கர் ஒரு வேலையாகப் போயிருந்த சமயம் ஏகாலி சலவைத்துணிகள் கொண்டு வந்திருந்தாள். சுமக்கமுடியாத அவ்வளவு பெரிய பொட்டணம். அம்புட்டும் வேட்டிகள்! எத்தனை வகையான வேட்டிகள், மயில்க்கள் வேட்டி, ஜரிகை வேட்டி, பட்டுக்கரை வேட்டி, பட்டுவேட்டி, தாலுமுழ வேட்டி, எட்டு முழ வேட்டி, கரைகளில்தான் எத்தனை வகை! டெரிக்காட்டனில்கூட வேட்டி வத்திருக்காமே. அவர் வைத்திருக்கும் வாயில் வேட்டிகள் ரொம்ப உயர்ந்த தரமானவை, குடிமகன் சொன்ன மாதரி நாக்லிலே பட்டால் நனைத்து போயிரும்!

இந்த நல்லாதாயக்கருடைய அய்யா பெரிய முதலானி இருந்தாரே அவரு ‘குழாய்மல்’ தான் உடுத்துவார். “குழாய்மலங்கிறது லங்காஷியர் மில்லில் – இங்கிலாண்டில் – தெசவானது. ரூல்த்தடி கனமுள்ள நீளமான குழாய்களுக்கு உள்ளே, சுருட்டி அடைத்து வர்ரதினால் அதுக்குக் “குழாய்மல்” என்று பேர்.

***

தூங்கா நாயக்கர் தன்னுடைய வேட்டியை ஏகாலியிடம் போட்டால் சீக்கிரம் கிழிந்து போகும் என்று அவரே கிணற்றில் இறங்கி பதனமாகத் துவைத்து, பூப்போல உதறி, சுமலையின் சிறகுப் பலகையின்மேல் காயப்போடுவார். பிறகு கிணற்றுக்குள் இறங்கி இரண்டு மூன்று வட்டம் கிணற்றின் சுவரை ஒட்டி நீச்சல் அடித்து விட்டு வந்து கிணற்றுப்படிகளில் இடுப்பளவு உயரம் தண்ணீரில் நின்றுகொண்டு தேய்த்துக் குளிப்பார். குனிக்கும் போதே அண்ணாந்து மேலே வேட்டியை ஒரு பார்வை, (காலம் கெட்டுக் கிடக்கிறதல்லவா; எவனும் வேட்டியை ஆத்திக்கொண்டு போய்விட்டால்!)

மெல்ல இடுப்புத்துண்டை அவிழ்த்து (திரும்பவும் மேலே ஒரு பார்வை; இது வேட்டிக்காக அல்ல!) அவிழ்ந்த துண்டை நீளவசத்தில் சுங்குல் பிடித்து தண்ணீரில் வட்டமாகச் சுற்றுவார் வேகமாக. துண்டு முறுக்கேறி பாம்பு போல் சுற்றும். மறுகோடியை அப்படியே பிடித்து முதுகில் போட்டு இழுத்து, இழுத்து துண்டின் இழுப்புக்கு வசதியாக முதுகை நெளித்து நெளித்து அழுக்குத் தேய்ப்பார். தேய்த்துக் கொண்டே கிணற்றுக்குமேலே ஒரு பார்வை வீச்சு!

குளிர்ந்த தண்ணீரில் குளிக்கக் குளிக்கச் சொகம் தான். ஆனாலும் நாம் என்ன சுப்புசெட்டியார்மாதிரி திளைத்துக் குளிக்கமுடியுமா?

குளிப்புக்கு மன்னன் சுப்பு செட்டியார்தான். நாள் முச்சூடும் குனித்துக்கொண்டே இருப்பார். போன ஜென்மத்தில் மனுசன் நீர் யானையாகப் பிறந்திருந்தாரோ என்னவோ! அடை மழை மூடுபனி எந்தக் காலமாய் இருந்தால்தான் அவருக்கென்ன. விதைப்புக்காலத்தில் ஊரே பரபரப்படைத்திருக்கும் நாட்களானாலும் அவருக்கென்ன. ஆனந்தமாய்க் குடைந்து குடைத்து நீராடிவிட்டு தண்ணி போட்டவன் மாதிரி கண்களைச் சிவப்பாக வைத்துக்கொண்டு கையில் ‘துவை வேட்டி”புடன் கிணற்றிலிருந்து தண்ணீரைப் பிரிய மனசில்லாமல் வெளியே வருவார்.

சுத்தம் என்றால் அப்படி ஒரு சுத்தம். அவருடைய வீட்டு வாசல் படியில் பளபளவென்று தேய்த்து மின்னும் ஒரு கொப்பறை நிறையத் தண்ணீரும் ஒரு செம்பும் எப்பவும் இருக்கும். வீட்டுக்குள் யார் வந்தாலும் பாதங்களைக் கழுவிக்கொண்டுதான் உள்ளே வரவேண்டும். இது செட்டியாரின் கராலான உத்தரவு.

செட்டியார் காலில் செருப்புப் போடமாட்டார். தோல்மீது அப்படி ஒரு வெறுப்பு, (மாமிச உணவு தின்பவனே தோல் செருப்பு போட்டுக்கொண்டு அலைய வேண்டும் என்பார் அவர்). மழைக் காலத்தில் மட்டும் சகதி காலில் ஒட்டாமல் இருக்க மஞ்சனத்தி மரக்கட்டையில் செய்யப்பட்ட பாதுகை அணிந்து கொண்டு நடப்பார்.

வாரத்தில் ஒரு நாள், ‘மதியும் புதனும் மயிர் களை’ என்ற முதுமொழிக்கு ஏற்ப திங்கள் அல்லது புதன் கிழமையில் குடிமகனைக் கூப்பிட்டனுப்பி தலை மார்பு முதலிய உடம்பில் ரோமம் முளைத்துள்ள சகல பகுதிகளிலும் மழுங்கச் சிரைத்துத் தள்ளிவிடுவார். உடம்பில் எங்காவது ஒரு சிறிய ரோமம் தட்டுப்பட்டாலும் சகித்துக்கொள்ளமாட்டார். கால் கைகளெல்லாம் மழித்து சுரைக்காய் மாதிரி சுத்தமாய் இருக்கவேண்டும் அவருக்கு.

(ஆனால் எல்லாவற்றிலும் சுத்தம் பார்க்கிற செட்டியார், அந்தக் கிராமத்து ஏழைகள் இவரிடம் கொண்டுவந்து கொடுக்கிற அழுக்கடைந்த ரூபாய் நோட்டுக்களையும் நாணயங்களையும் சந்தோஷமாக வாங்கிக்கொள்வார். அடகுக்காக அவர் எதிரிலேயே வேர்வையும் அமுக்கும் நாற்றமும் கொண்ட நகைகளை அவர்கள் கழற்றிக் கொடுக்கும்போது முகம் சுளிக்காமல் பெற்றுக்கொள்வார்!)

அந்த ஊரிலேயே அவர் ஒருத்தர் தான் ‘துவைவேட்டி’ போடுகிறவர். துவைவேட்டி போடுவதற்கு மூன்று ‘செட்’ ஆடைகள் வேண்டும். ஒரு செட் என்பது அவருக்கு, அரைஞாண் கயிற்றுக்குப் பதிலாக நாடா இணைத்துத் தைக்கப்பட்ட ஒரு கோவணம், கரையில்லாத ஒரு நாலரை முழம் மல பீஸ் பேட்டி, ஒரு வடசேரி ஈரிழை சிட்டித்துண்டு இவை கொண்டது. முதல்தாள் துவைத்துக் கொண்டுவந்த ‘செட்’டை உலைக்காமல் அப்படியே ஈரத்தோடு கொடியில் முறுக்கி வைத்துவிடவேண்டும்.

இரண்டாவது நாள் துவைத்துக்கொண்டு வரும் ‘செட்’டை முதல் நாள் செய்தது போலவே அதையும் ஈரத்தோடு முறுக்கி வைத்துவிட்டு, முதல்தான் முறுக்கி வைத்திருந்த துணிகளை நிழலில் – வெயில் படாமல் – விரித்து ஆறப்போடவேண்டும்.

மூன்றாம்தாள் துவைத்துக் கொண்டுவரும் துணிகளையும் முதல் நாள் செய்தது போலவே முறுக்கி வைத்துவிட்டு இரண்டாம் நாள் முறுக்கி வைத்திருந்தவைகளை நிழலில் விரித்து ஆறப்போட வேண்டும்.

முதல் தாள் துவைத்த துணிகள் இப்போது உலர்ந்து ஆறி இருக்கும்; அதை எடுத்து உடுத்திக்கொள்ளலாம். இந்த மாதிரி சங்கிலித் தொடராக தினமும் மாறி மாறிச் செய்துகொண்டே வரவேண்டும்.

இந்தத் துவை வேட்டி அல்லது தீர்க்காவி யில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் இந்தத் துணிகள் வெயிலிலேயே படக்கூடாது என்பதுதான். வெயில் பட்டால் துணிகள் வெண்மை திறமாகிவிடும். இதை அணிந்துகொள்கிறவறும் நிழலில் உட்கார்ந்து சம்பாதிக்கிறவனாக இருக்கவேண்டும்.

நாட்கள் ஆக ஆக இந்தத் துணிகளின் நிறம் ஒரு அற்புதமான இளம் ரோஜாவின் திறமாகக் கனிந்துவிடும். இந்த நிறத்தைப் பார்த்து பழகிய பிறகு தூய வெண்ணிறமான துணிகளைக் கண்டாலே பிடிக்காது! இந்த ஆடைகளிலிருந்து மணக்கும் ஒருவித புழுக்கமான மனத்தை பழகிக்கொண்டால் அப்புறம் ‘வண்ணான் சலவை’யின் வாடை முகம் சுளிக்க வைக்கும்!!

செட்டியார் எப்பவும் மல் வேட்டிகளைத்தவிர வேறு வேட்டிகளைத் தொடமாட்டார். அவருக்கு என்று அந்த மல் வேட்டிகள் எங்கிருந்துதான் கிடைக்குமோ; அவ்வளவு தைலாகவும் அடாத்தியாவும் நேர்த்தியாவும் இருக்கும். வேட்டியிலிருந்தோ துண்டிலிருந்தோ ‘அவலெச்சணம் போல ஒரு தூல்கட ‘மருந்துக்கு’த் தொங்கக்கூடாது. புதுத்துணிகளை வீட்டுக்குக் கொண்டுவந்ததும் முதல் காரியமாக மேஸ்திரியைக் கூப்பிட்டு அனுப்பி, வேட்டி துண்டுகளின் விளிம்பு களை ஜோராக மடித்துத் தைக்கச் சொல்லிவிடுவார்.

ஆடைகள் விஷயத்தில் சுப்பு செட்டியாரின் நேர்த்தியும் கராலும் பின்பற்றக்கூடியதுதான் என்றாலும் பின்பற்றவும் முடியாததுதான்.

மேலத்தெரு வெங்கடசுப்பையா, வீட்டில் ஒரு ஜவுளிக்கடையே – விற்பதற்கு அல்ல – வைத்துக்கொண்டிருக்கிறார். அடேயப்பா! ஒரு சமயம் பீரோவை அவர் திறக்கும்போது தூங்கா நாயக்கர் பார்த்திருக்கிறார். அம்புட்டும் வேட்டிகள்; பூராவும் வேட்டிகள்.

***

யாருக்கு வேட்டிகள் எத்தனை இருந்து தமக்கென்ன; தம்ம வேட்டி போச்சு! இதுதான் நெசம்.

நாயக்கருக்கு துக்கம் கலத்த சிரிப்பு வந்தது.

அப்படியே ஒரு கல்யில் உட்கார்ந்தார். பின்னால் திரும்பி ஒருதரம் வேட்டியைப் பார்த்துக்கொண்டார். அடடா, வேட்டி போச்சே என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டார்.

வேட்டியை ஒதுக்கிக்கொண்டு நாணப்பநாயக்கர் பாணியில் வெறும்கல்லில் உட்கார்ந்து பார்த்தார். சில்லென்று இருந்தது கல், வேனலுக்கு எதவாக இருந்தது.

‘காலம் இப்பொ ரொம்ப நாகரிகமாகிவிட்டது. முத்திய தலைமுறை ஆட்கள் மாதிரி இருந்தால் வேட்டியே வேண்டியதில்லை! ஒரு அரணாக்கயிறும் ஒரு பழைய துணி கோவணம் மட்டுமே போதும். வெயிலுக்கு ஒரு கந்தய்த் துணியை தலையில் லேஞ்சியாக மட்டும் கட்டி முதுகெலும்புத்தண்டில் வெயிலின் கள்ளாப்புத் தெரியாமல் இருக்க அந்தத் துணியில் ஒரு முழம் சுங்கு விட்டுக்கொண்டால் போதும். தூங்கா நாயக்கருடைய அய்யா அய்யலுசாமி நாயக்கர் மட்டுமென்ன, அந்தக் கிராமத்துப் பாட்டாளிகளே அப்படித்தான் அரணாக்கயிற்றில் கோவணத்தைச் சொருகிக்கொண்டு சந்தோஷமாய் வாழ்ந்தார்கள்.

எட்டு வயசுவரை ஆண் குழந்தைகள் பிறந்தமேனியாகவே அலைவார்கள். காற்றும் வெயிலுமே ஆடைகள், அரையில் அரணாக் கயிறுமட்டுமே இருக்கணும்; அது இல்லையென்றால்த்தான் பார்த்தவர்கள் சிரிப்பார்கள்!

தூங்காதாயக்கரின் மனைவி வேப்பமுத்து பொறுக்கிச் சேர்த்து அதை அளந்து எப்படியாவது தனக்கு ஒரு சேலை எடுத்துக்கொண்டு விடுவாள். ஊரைச் சுற்றிலும் வேப்பமரங்கள். கோடைக்காலத்தில் பறவைகள் வேப்பமரத்தில் பழங்களைத் தின்று கொட்டைகள் போடும். ஜனங்கள் ஓடிஓடிப் பொறுக்குவார்கள், கூலிப் பருத்திக்கும் சென்று அதைச் சேர்த்துவைத்து, தங்கள் ஆடைகளின் சொல்ப்ப தேவையைப் பூர்த்தி செய்துகொண்டு விடுவார்கள். இதனால் குழந்தைகளுக்கு தாக்குக்கு ருசியாக கடைகளில் வாங்கித் திங்கக்கட பருத்தி கொடுத்தறுப்ப முடியாது. அதுகள் புளியங்கொட்டைகளை பொறுக்கிக்கொண்டு வந்து வரையோட்டில்ப் போட்டு வறுத்து, அதை உரலில் போட்டு இடித்து தோலை நீக்கிவிட்டு கொட்டையின் பருப்பை மட்டிலும் உப்புப் போட்ட தண்ணீரில் ஊறவைத்துத் தின்பார்கள். இதுதான் இந்தப் பாவிமக்களுக்குக் கிடைக்கும் பலகாரம், பட்சணம்.

***

சற்றுதூரத்தில் பல மனிதர்களின் சளசளப்புக் குரல்கள் கேட்டு தூங்காநாயக்கர் திரும்பிப் பார்த்தார். அது கிராமத்தின் முக்கியஸ் தர்கள் பெரியவர்களின் கூட்டம். அவர்கள் பாரதநாட்டின் சுதந்திர தின வெள்ளிவிழாவைச் சிறப்பாகக் கொண்டாட ஊருக்குள் பண வகுல் செய்கிறார்கள். நமக்குச் சுதந்திரம் கிடைத்துக் கால் நூற்றாண்டு ஆகிவிட்டதோ!

அந்தக் கூட்டத்தில் முதலாளி நல்லாதாயக்கர், மைனர் நாயக்கர், ராமராஜு, முதலாளி வெங்கிடசுப்பையா, சுப்பு செட்டியார் முதலிய அனைவரும் இருந்தார்கள். ரொம்ப உத்ஸாகமாக நடக்கிறது வகுல்.

25 வருசங்களுக்கு முன்னால். – இந்தக் காசி கன்னியாகுமரி பெருவழிச்சாலை, மங்கம்மா சாலையாக இருந்து, அது பிறகு மதுரை ரோடு ஆகியது. இப்பொழுது ஒரு நிமிஷத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நிமிஷங்களுக்கு மூன்று என்ற விகிதத்தில் எந்திர வாகனங்கள், சாலை மேலுள்ள இந்தக் கிராமத்தைக் கடந்து செல்கிறது. 25 வருசங்களுக்கு முன்போ, எப்பவாவது அபூர்வமாக ஒரு பிளஷர்க் காரைப் பார்க்கலாம். எறும்புச் சாரையைப்போல் விட்டுவிட்டு கண்டு வண்டிகள் செங்கோட்டை இலஞ்சி, தென்காசி முதலிய ஊர்களிலிருத்து மாம்பழங்கள், சம்பை (கருவாடு) முதலிய பாரங்களை ஏற்றிக் கொண்டு கோவில்பட்டிக்கு மெதுவாகப் பாடிக்கொண்டே நகர்ந்து செல்லும், இப்போது கூண்டு வண்டியே கிடையாது. அவ்வளவும் வாரிகள், எங்கே பார்த்தாலும் லாரிகள். எத்தனை வகை லாரிகள்! எல்லாமே இந்தியாவில் செய்தவை.

புழுதிபறக்கும் கப்பிக்கல் ரோடு இப்பொழுது தார் ரோடு ஆதி நாலு லாரிகள் விலகும்படியான அகலமாகிவிட்டது. இதில்ப் போகும் வாகனங்களையே பார்த்துக்கொண்டிருக்கலாம். கார்கள், பஸ்கள், ஜீப்கள், வேன்கள், டாக்ஸிகள், மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் எத்தனை எத்தனை!

கொழுத்த தடியான அழகான பணக்காரப் பெண்ணைப்போல் எப்பவாவது ஒரு வெளிநாட்டுக் கார் போகும்! தம்முடைய இந்திய ஜனாதிபதிகூட ஆறு கதவுகள் கொண்ட பெரிய்ய வெளிநாட்டுக் கார் வாங்கி இருக்காராமே.

பணம் வசூலிக்கும் கூட்டம் இப்பொழுது இவரை நோக்கித்தான் வந்துகொண்டிருக்கிறது. ஏதோ இவர் நிறைய அள்ளிக்கொடுத்து விடுவார் என்று நினைத்து அவர்கள் வரவில்லை. சுதந்திரத்துக்காக இவர் ஜெயிலுக்குப் போகாவிட்டாலும் உதைபட்டவர் அல்லவா, எல்லோரும் இவரை மலர்ந்த முகத்துடன் பார்த்துக்கொண்டே வருகிறார்கள்.

தூங்காநாயக்கருக்கு இன்னது செய்வதென்று தெரியவில்லை, பரபரப்போடு எழுத்து நின்று இடது கையால் வேட்டியின் பிய்ந்த கிழிசலை மறைத்துக்கொளடு அவர்களை வரவேற்கத் தயாரானார்.

– தாமரை ஏப்ரல் 1972

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *