வேங்கை வீரன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 4, 2024
பார்வையிட்டோர்: 255 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

“ஒருவன் மலை எலி ; மற்றவன் பாலை ளலி. இருவரும் எம்மாத்திரம்? மாய்த்தே தீர வேண்டும். இன்றேல் நிம்மதி ஏது? ஏகாதிபத்தியமும் எங்ஙனம் ஈடேறும்?” என்றான் ஒளரங்கசீப். 

“ஏலிகளா இருவரும்? எலிகளாயின் பொறியில் சிக்கி யிருக்குமே. இருவரும் புலிகள். வீறான புலிகள்! வெல்ல முடியாத புலிகள்! மாய்த்தல் எங்ஙனம்? மனப்பால் குடிப்பதேன்? என்றான் அலி கான். 

“புலிகளா? நல்லது. மொகலாயச் சிங்கம் சும்மா விடுமோ? இருவரையும் வேரறுக்கும். அவர் வமிசத்தையும் பூண்ட றுக்கும். வெந்நீரும் வார்க்கும். இன்றேல் வல்லரசு என்பது வீண் மயக்கு. வெறும் பேச்சன்று. விளைவில் பார்க்கலாம்” என்று ஒளரங்கன் பல்லைக் கடித்தான். 

“வேந்தர் வேந்தே! வீண் வீறாப்பு வேண்டாம். பாலைப் புலி தான் நம்மிடம் சேவகம் செய்கிறதே. தட்டிக் கொடுத்தால் போதும். உச்சி குளிர்ந்து உள்ளன்புடன் மிளிரும். நம் பொருட்டு உயிரையே வழங்கும். தந்தை ஷாஜஹான் வழியைப் பின்பற்றுங்கள். வர்மம் வேண்டாம். பாலைப்புலி -மாருவார வேந்தன் யசோவந்த சிம்மன் ராஜபுத்திர திலகம்” என்றான் அலி கான் எடுப்பாக. 

நாட்கள் பல பறந்தன. மாதங்களும் கழிந்தன. மாருவார் மன்னவன் யசோவந்தனுக்கு எத்தனையோ ஆபத்து. உணவில் நஞ்சு, சம்மான ஆடையில் திராவக விஷம், பானத்தில் பாங்கான பச்சைநாவி, விருந்தின் நடுவே வாள் வீச்சு, வேட்டை நேரத்தில் வஞ்சனை விளைவு. 

பாண்டவ வீமனை மாய்க்க அன்று துரியோதனன் பெருமுயற்சி புரிந்தான். எல்லாம் மண்ணைக் கவ்வின. காரணம் கண்ணபிரானது கருணை அங்ஙனமே யசோவந்தனை மாய்க்க ஓயாச் சதி, ஒழியா வஞ்சனை, அரிய சூழ்ச்சி,பெரிய பிரயத்தனம். எல்லாம் வீண். காரணம் முகுந்த தாஸனது பேரன்பு, மிகு வீரம், வெகு தீரம். அம்முகுந்தன் யார்? அவன் வரலாறு யாது? 

மாருவார மன்னவனுக்கு அவன் பெருமித்தளவாய். மதிநலம் படைத்த முதல் மந்திரி. பேர் பெற்ற பிரதானி. உயிர்த் தோழன். கும்பவந்தர் குலத்தவன். அக்குலத் தலைவனுமாம். அம்முகுந்தன் போரில் புகுந்தால், பகைவர் வீர சுவர்க்கம் புகவேண்டும். இன்றேல் முறிபட்டு ஓடவேண்டும். போர் வன்மை அத்தகைத்து. 

புயவன்மை எப்படி? கருடப் பார்வை அன்பருக்குப் பரிவு ஊட்டும்; பகைவருக்கோ உதைப்பு உண்டாக்கும். கம்பீரமான தோற்றம். அது பலருக்கும் பிரமிப்பே விளைக்கும். அகன்று பருத்த தோள்கள். அவை குன்றின் முண்டுபோல் துலங்கும். பருத்துக் கொழுத்த பாதங்கள். அவை குட்டிக் குஞ்சரத்தின் கால்களே போல் துலங்கும். அரையிலே ஒரு பக்கம் பட்டாக் கத்தி, ஒரு பக்கம் குத்தீட்டி. உறைக்குள் கிடந்தாலும் ஒளியே வீசும். 

ஒளரங்கசீபும் சரி, மொகலாய வீரரும் சரி, முகுந்தனது தோள்வலி கண்டு, உள்ளூற வியப்புக் கொள்வர்; பிரமிப்பும் எய்துவர். மாருவாரத்தை மண்ணாக்க மொகலாயர் விரும்பி நின்றன ரென்றால், மாருவார மன்னவனும் அவ்வல்லரசை வாட்டி வதைக்க வேளையை நோக்கி நின்றான். யசோவந்தன் எங்கே செல்லினும் சரி,நிழல்போல் உடனிருப்பான் முகுந்த தாஸன். 

அவ்வீர வேந்தன் அந்தப்புரஞ் செல்லுங்கால் பக்கத்து அறையிலே அத்தளவாய் படுத்திருந்து பாதுகாவல் புரிவான். ஒளரங்கசீபின் பிரதான சிற்றரசரில் யசோவந்தன் ஒருவன். ஆதலின், அவன் அடிக்கடி ஆக்ரா நகருக்குச் செல்ல நேரும். உயிர் இருந்தால்தான் உடல் இயங்கும். முகுந்தன் உடன்சென்றா லன்றி, யசோவந்தன் ஆக்ரா நகர் போகான். அடுத்துக் கெடுக்க ஒளரங்கன் முயன்றும் என்ன? 

வஞ்சனை முனையில் தோல்வி கொண்ட மொகலாய் சக்கரவர்த்தி மனம் மறுகினான். மூர்க்கம் மிகுந்தான். வைரமே கொண்டான். முகுந்தனைக் கண்டால் அவனுக்கு எரிச்சல் கிளம்பும்; அது புகைச்சல் கொள்ளும். மனக் கனலோ மண்டி எழும்; வகையின்றி மடங்கியும் விழும். எத்தனை நாளைக்கு இத்தகைய மனநிலை? ஒரு தினம் முன்கோபம் மூண்டுவிட்டது. அடக்க வழியில்லை. ஆற வழி தேடினர் அமைச்சர். 

சுருங்கச் சொல்லின் ஆக்கினை பிறந்து விட்டது முகுந்த னுக்கு. சக்கரவர்த்தியை அவமதித்த குற்றம், புலிக் கூண்டில் போடவேண்டும் என்பதே ஆக்கினை. சூரியோதயம் தடைப்படலாம். ஒளரங்கசீபின் ஆணைக்குத் தடை ஏது? அதுவும் சிற்றரசனது சேவகன் விஷயத்தில். என்ன விளையுமோ? யாது நேருமோ?’ என்று நடுங்காதார் இல்லை. 

பதினாறடி வேங்கை, வங்கத்தின் காட்டில் வசித்தது. வேடரின் வல்லமையால் சிக்குண்டது. மூன்று தினங்களுக்கு முன்புதான் கானகத்தேயிருந்து வந்தது. அம்மூன்று தினங்களாக அது சுத்தப் பட்டினி. அடங்கி ஓடுங்க வேண்டும் என்று ஆகாரமே போடவில்லை. பசியின் கடுமை. வேங்கை தன் வால் கொண்டு கூண்டின் கதவைச் சாடுகிறது. முன்னங்கால் கொண்டு அறைகிறது. கேட்போர் கதிகலங்கக் கர்ஜனை புரிகிறது. 

அத்தகைய வேங்கையின் கூண்டில் முகுந்தனைத் தள்ளப் போகின்றனரென்று நகரெங்கும் செய்தி பறந்தது. கண்டு களிக்க அனைவரும் திரண்டு வந்தனர். யானை மைதானத்திலே ஒரே ஜனத்திரளாக இருந்தது மைதானத்தின் அருகே மாளிகைச் சாளரத்தில் படிதாண்டாப் படுதாப் பத்தினிகள். நடுநாயகமான இடத்திலே சக்கரவர்த்தியின் சிம்மாசனம் அமைக்கப் பெற்றி ருந்தது. சுற்றிலும் பட்டவர்த்தனர், மகுடவர்த்தனர், சிற்றரசர், தளகர்த்தர் முதலியோர் வீற்றிருந்தனர். 

ராஜபுத்திரருக்கு அபினி மருந்தே அரிய சஞ்சீவி. போர்க் கோலம் கொள்ளுவதென்றால், புயவலி காட்டுவ தென்றால், பகைவனைப் பிளந்தெறிவதென்றால், ஆயுதங்கள் தரிக்குமுன்னம் அபினி அருந்துதல் வழக்கம். முகுந்த தாஸனுக்கோ அபினி மருந்தே ஆகாரம் என்னலாம். அபினியை அருந்திவிட்டால், அவன் கண்கள் சிவக்கும்; கனற் பொறி கக்கும். நாசியோ அக்கினி ஜ்வாலை வீசும். நரம்புகளோ முறுக்கேறும். மீசையோ துடிதுடிக்கும். முகத்திலே ருத்திரகளை ஜொலிக்கும். 

அந்த மைதானம் வந்து சேர்ந்தது வேங்கை வரிப்புலி. முகுந்த தாஸனும் மைதானத்தில் இறங்கினான்; குதித் தான் என்றே கூறவேண்டும். யசோவந்தனைப் பார்த்தான்; கை யெடுத்துக் கும்பிட்டான்; இனத்தாரான ராஜபுத்திரரை நோக்கினான்; நோக்கிலேயே வணக்கம் புரிந்தான். சபையோரை ஏறிட்டு. இங்குமங்கும் கண்களைத் திருப்பினான். நீண்டு வளர்ந்த மீசையை முறுக்கினான். வீர கர்ஜனை யொன்றும் காட்டினான். 

முகுந்த தாஸனைப் பார்த்தனர் பலரும். புலியையும் நோக்கினர். “என்ன மமதை இவனுக்கு? மகாராஜனை அவமதித் திருப்பான். ஏற்ற தண்டனைதான். சரீரக்கொழுப்பு வடிந்தாக வேண்டும்” என்றனர் சிலர். 

“என்ன அக்கிரமம்! என்ன தண்டனை! வேங்கையின் கூண்டிலா மானிடனைத் தள்ளுவது? ஆண்டவனுக்குச் சம்மதம் ஆகுமோ? அடுக்குமோ இது? எல்லாம் மொகலாய தர்பார்! ஏன் என்று கேட்பார் யாவருளர்? செங்கோலுக்கு முன்னே சங்கீதம் ஏது?” என்றனர் சிலர் மனத்தூடே. 

“எத்தகைய வேங்கையாயின் என்? சிங்கத்தின் கூண்டிலும் புகுந்து சிங்கநாதஞ் செய்யும் இப் புருஷசிங்கம். நம் அம்மை பவானி அருள் சுரப்பாள் என்றனர் ராஜபுத்திர மாதரில் சிலர். 

“முடிவு என்னாகிறது பார்ப்போம். முகுந்தன் வாகையே சூடுவான். ஒருகால் விபரீதம் விளையின் மைதானத்தை ரணகளமாக்குவோம். நம் மரபையே அவமதிக்கிறான் ஒளரங்கன். உடையில் வாள் உளது. ஒரு கை பார்க்கலாம் என்று உள்ளுற உறுத்துநின்றனர் ராஜபுத்திர ஆடவர். 

“கோரக் காட்சியையா காணவந்தோம்? நரவாசனை கண்டு இம்மிருகம் பதைக்கிறது. முகுந்தன் கதி யாதாகுமோ? ஈசனே காத்தல் வேண்டும்” என்று கைகூப்பித் தொழுதனர் சிலர். 

பலரும் இங்ஙனம் பேசி நின்றனர். முகுந்தனோ சிறிதும் நடுங்கவில்லை. மதோன்மத்தனாக அக் கூண்டை நோக்கி நடந்தான். கால்கொண்டு கதவை உதைத்தான். கைகொண்டு கதவின் தாழைத் திறக்கலானான். சபையோர் நடுங்கும் வண்ணம் வீரகர்ஜனை ஒன்று புரிந்தான். தோள் தட்டினான். 

நரனை அருகே கண்டதுதான் தாமதம், பதினாறடி வேங்கை பயங்கரமாக உறுமியது. முன்கால் நகங்கொண்டு கூண்டைக் கீறியது. வரிகளமைந்த வாலை நேரே உயர்த்தியது. அவ்வீரன் மீது பாயவும் ஆயத்தமாயது. 

முகுந்தன் அக்கூண்டினுள் நுழைந்தான். தன் தோள் இரண் டையும் தட்டினான். மீசையை முறுக்கினான். கண்கள் பிதுங்க நோக்கினான். கர்ஜனையும் செய்தான். பலரும் பதைத்தனர், திகைத்தனர், தேம்பினர். 

இடிமுழக்கம் போன்ற கர்ஜனை, கோவைப்பழம் போன்ற கண்ணொளி, இருப்புலக்கை போன்ற தோள்கள் ; இவை எல்லாம் கண்டது அக்கானகப் புலி. கணநேரம் அசைவற்று நின்றது. கருத்தூடே கலக்கமும் கொண்டது; பின்னர் மெல்ல மெல்லப் பின்வாங்கியது. கூண்டின் ஓரம் சேர்ந்தது. வாலைச் சுருட்டிக் கால்களின் இடையே வைத்துக்கொண்டது. கதிகலங்கிக் குந்திக் கொண்டது. 

பார்த்தான் முகுந்தன்; “மொகலாயப் புலியே! யசோவந்த சிங்கத்தின் முன்னே நிற்கவும் மொய்ம்பில்லை. உன்னை என் செய்வது?” என்று மீண்டும் முழக்கஞ் செய்தான். மூலையில் பதுங்கிக்கொண்ட புலியோ மேலும் ஒடுங்கிக் கூண்டில் சாய்ந்து, குலைந்த கோலமே காட்டியது. 

அவ்வளவில், முகுந்தன் அக் கூண்டை விட்டு வெளியே வந்தான்; தோள் தட்டி ஆர்த்தான் ; ஔரங்கனை நோக்கினான்; “மன்னர் மன்ன, உனது வேங்கை என் எதிரே நிற்கவும் தீரம் கொள்ளவில்லை. பயந்து பதுங்குகிறது; பரிபவமும் அடைகிறது. நிமிர்ந்து நிற்க இயலாமல், ஒடுங்கும் பகையை எதிர்த்தால் எங்கள் மரபுக்கு ஈனம். ஆதலின் உன் புலி உயிர்ப்பிச்சை பெற்றது” என்று கோஷித்தான். 

ஔரங்கன் மூர்க்கம் மிகுந்தவன்; வைராக்கிய புருஷன்; எனினும் மெத்தப் படித்தவன். வீரனுமாம். எனவே முகுந்தனது வீரங் கண்டான்; வியப்புக் கொண்டான்; விழுமிய உவகையும் பூத்தான். ஏனைய மொகலாயரோ, முகுந்தனது மனவலி நோக்கினர்; உடல்வலியும் கண்டனர்; உடனே உள்ளம் ஒடுங்கினர். ஊமைகள்போல் ஆயினர். 

ஒளரங்கசீப் அது கண்டு, “வீரமிகுந்த, வீராதி வீரன் நீ. வங்க வேங்கை உன் தோற்றம் கண்டு சாய்ந்துவிட்டது. உன்னை வேங்கை வேந்தன் என்பதா? வேங்கை வீரன் என்பதா?” வீரத்தின் அவதாரம் நீ. வீர வடிவு நீ. வீர விளக்கும் நீயே!” என்று புகழ்மாலை சூட்டினான். பொன்னாடையும் முத்தாரமும் பரிசளி நான். வீரகண்டையும் வழங்கினான். 

‘முகுந்தனுக்கு மக்கள் உளரோ? ‘ என்றறிய ஆவல் கொண்டான் ஒளரங்க சக்கரவர்த்தி.வேங்கைவீர, உனக்கு மைந்தர் எத்தனை?” என்று வினவினான். “வேந்தே, சதா போர்முனை ; இன்றேல் எங்கள் இறைவனைப் பக்கத்திருந்து பாதுகாக்கும் பொறுப்பு. இந்நிலையில் மனையாளுடன் மகிழ நேரம் ஏது? மக்களை அடையவும் வகை ஏது?’ என்று விடை யளித்தான் அவ்வேங்கை வீரன். 

பின்னர் யசோவந்தன் தன் ஆசனம் விட்டெழுந்தான். வேங்கை வீரனை எதிர்கொண்டு கைலாகு கொடுத்தான். அழைத்து வந்து அருகே அமர்த்திக்கொண்டான். ராஜபுத்திர வீரர் அனைவரும் உடனே அணிவகுத்து நின்று, உடைவாளை உருவி உயரத் தூக்கி,அரசனுக்கும் தளவாய்க்கும் அரிய வணக்கஞ் செய்தனர்; அப்பால் ஆனந்த ஆரவாரமும் புரிந்தனர். 

அந்த ஒளரங்கனுக்கு அன்பான மைந்தன் ஒருவன் இருந் தான்; அவன் பெயர் காமபட்சன். பெயருக்கேற்பக் காமலோ லனே. ராஜபுத்திரரின் வீரங் கண்டு சொக்குபவன். பாராட் டுபவன். வேங்கை வீரனை அவன் விருந்துக்கு அழைத்தான். விதவிதமான பண்டங்கள் அளித்தான். வியன் புகழுரையும் வழங்கினான். 

பின்னர் அவ்விளவலும் வேங்கை வீரனும் தாம்பூலம் தரித்துக் களித்தனர். காமபட்சனுக்கு உச்சி குளிர்ந்தது. “வீர, உன் வல்லமை காண எனக்கும் ஆவல் மிகுதி. பரிமீது நீ நாலு கால் பாய்ச்சலில் பறக்கவேண்டும். அவ்வேளை வழியிலே, தலைக்கு மேல் உள்ள மரக் கிளையில் தொத்திக்கொள்ள வேண்டும். இதனைக் காண, களிக்க, விழைகிறேன்” என்றான். 

அவ்வீர விளையாட்டில் கரணம் தப்பினால் மரணம். பலர் காலொடிந்தும் கைமுறிந்தும் போயுளர். இதனை முகுந்தன் அறிவான். அத்துடன் காமபட்சனது கர்வத்தைக் குலைக்கவும் உணர்ச்சி உண்டு. ஆதலின், இளவரசே! இளம்பிள்ளாய்! என் வல்லமையை வாள் முனையில் காண்பதே மேல். விளையாட்டில் காணுதல் விழுமியதன்று ” என்றான் எடுப்பாக. 

“அங்ஙனமா? நல்லது. சூரதனை என் முன்னே கொணர்ந்து நிறுத்தவேண்டும். அவனைக் கண்டு களிக்கவேண்டும்” என்றான் காமபட்சன். சூரதன் யார்? அவனோ சீரகநாட்டின் அதிபன். அன்னியர் எவருக்கும் வணங்காதவன். அடிமையரசர் முதல் ஒளரங்கன் வரையில் அவனை மடக்கப் பார்த்தனர். ஆயினும் ஆகவில்லை. ஒரு முறை காமபட்சன் அவனிடம் கடுந்தோல்வி அடைந்தான். 

வைரத்தின்மீது வைரம் பாய்வதுபோல் சூரதன் மீது வேங்கை வீரன் பாயவேண்டும். ஒரு நிபந்தனை கூறினான். ஆக்ராவின் எல்லைக்கு அச்சூரதன் வந்ததும் காமபட்சன் கால் நடையாக வந்து எதிர்கொள்ள வேண்டும். பின்னர்ச் சதுரங்க சேனை சகிதம் அவனை அழைத்துச் செல்லவேண்டும் என்பதே நிபந்தனை. சரி என்று சிரக்கம்பம் செய்தான் காமபட்சன். 

சுருங்கச் சொல்லின், முகுந்த தாஸன் சீரகநாடு சேர்ந்தான். அந்நாட்டின் தலைநகரம் அசைலகிரி. அக்கிரியின் சிகரத்தில் சூரதன் மாளிகை. அம்மாளிகைக்கு ஒரேயொரு கொடிப்பாதை. அதுவும் மகா அந்தரங்கமானது ; சூரதனுக்கும் அவன் உயிர்த் தோழனுக்குமே தெரியும். கொடிப் பாதையைக் கண்டுகொள் ளினும், மாளிகையைச் சுற்றிப் பெரிய மதில். 

காமபட்சனுக்குக் கொடுத்த வாக்குறுதி ஒரு புறம். அவனுக்குப் புத்தி புகட்டவேண்டியது ஒரு புறம். சூரதன் கீர்த்திக்குப் பங்கம் நேரக் கூடாதென்பது ஒருபுறம். பாம்பின் கால் பாம்பறியும். அதுபோல் சூரதன் தன்மையும் காவலும் முருந்தனுக்குத் தெரியும். ஒரு தினம் நள்ளிரவு. முகுந்தன் துணைவர் அசைலகிரிக்கு அப்பால் நிற்கின்றனர். 

முகுந்தன் அக்கொடிப் பாதை கண்டு கிரியின் மீது ஏறினான். மதிலைத் தாண்டி உள்ளே குதித்தான். சூரதனோ மஞ்சத்தில் அயர்ந்து தூங்குகிறான். மஞ்சத்துடன் அவனைத் தோளில் கொண்டான். கிரியை விட்டுக் கீழே இறங்கினான். இதற்குள் சூரதன் வீரர் விழித்துக் கொண்டனர். முகுந்தனை வழி மறித்தனர். 

முகுந்தன் மொழிவான் :-“வீரர்காள்! உங்கள் தலைவன் என் நண்பன். அவன் மானம் என் மானம். அவனுக்கு ஒரு தீங்கும் நேராது.முகுந்தன் சொன்ன சொல் தவறான். வீணே நீங்கள் கறுவிக் கிளம்பவேண்டாம். என் உடைவாளின் மீது ஆணை. சூரதனும் சீரகமும் சிறப்பு எய்தலே என் நோக்கம். கடமையுமாம். 

மணி மந்திரங் காணின் நாகம் தன் படமடங்கும். சீரக வீரரும் முகுந்தன் சொற்கேட்டுச் சினம் விடுத்தனர்.சீரகச் சூரதன் வந்தான் என்று கேட்டதும் யசோவந்தன் களிகூர்ந்தான். முகுந்தனை முதலில் மார்புறத் தழுவினான். பின்னர்ச் சூரதனைக் கட்டியணைத்தான். “நண்ப, உனக்கு ஊறொன்றும் நேராது என்று உடைவாளைத் தொட்டுக் கூறினான். 

சூரதன் வருகை காமபட்சனுக்கு எட்டிற்று. அவனும் தன்னந் தனியே விரைந்து வந்தான். சூரதனைப் பார்த்ததும் பிரமித்தான். பரவசமுங் கொண்டான். அப்பரவசத்தில் அவனைக் கையெடுத்தும் கும்பிட்டான். “அன்று போர் தோற்றேன். இன்றோ உன் தோற்றம் கண்டு தோற் ேகு என்று கூறினான். பின்னர்க் காமபட்சன் மாளிகையிலே அனைவ ருக்கும் விருந்து நடந்தது. 

ஒளரங்கசீப் அனைத்தும் அறிந்தான். ஆத்திரம் கொண்டான். விருந்துண்ட அனைவரையும் அத்தாணி மண்டபத்துக்கு அழைத்தான். மொகலாய அரசவைக்குப் புதிதாக வருவோர், அங்குள்ள சிம்மாசனத்தை நோக்கி மண்டியிட்டுச் சலாம் செய்ய வேண்டும். சூரதன் அதற்கு மனமொப்புவனோ? பெரிய வீட்டு மருமகப் பிள்ளையேபோல் கம்பீரமாக அச்சபைக்குள் புகுந்தான். யசோவந்தனது அருகே வீற்றிருக்கலானான். 

பார்த்தான் ஒளரங்கசீப். சூரதனைத் தன்னருகே அழைத் தான். பக்கத்தில் அமர்த்திக்கொண்டான். கோபக்குறி காட்டிப் பேச வாயெடுத்தான். உடனே சூரதன் சொல்லுவான்:- 

“அரசே, கோபமேன்? தாபமேன்? முகுந்தனை நம்பி வந்தேன். யசோவந்தன் வாக்கை மதித்து இவண் போந்தேன். பிற மனிதனை வணங்குவதென்பது என் குலத்தாருக்கு இல்லை, இந்நிலையில் குலத்தலைவன் இச்சபையில் மண்டியிடுவனோ? உனது அவையில் உள்ளேன் என்பதை உணர்வேன். என் உயிருக்கு ஒருவேளை ஆபத்து நிகழலாம். முகுந்தனும் யசோவந்தனும் உளர், அந்த ஆபத்து நேராவண்ணம் பாதுகாக்க. எல்லாவற் றிற்கும் மேலாக என் உடைவாள் உளது. 

அங்ஙனம் கூறிய சூரதன் தன் உடைவாளில் கை வைத்தான். சூரதனது முகப்பொலிவு, முகுந்தன் நிலை, யசோவந்தன் தன்மை இவற்றையெல்லாம் ஒளரங்கசீப் நோக்கினான். உள்ளுற் அறிவழிந்தான். “வீர, உனக்கு யாது வேண்டும்? என்றான். 

”அரசே, பிறனிடம் நான் பெறுவது யாதுளது?” என்று பதிலிறுத்தான் சீரக வேந்தன் சூரதன். “நல்லது, நம் சபைக்கு வந்தனை. வறிதே போதல் அழகன்று” என்று கூறிப் பொன்னாடை வழங்கினான். வீரகண்டையும் பரிசளித்தான். வீரம் வாழ்க!

– கதைக் கோவை (தொகுதி IV), 75 எழுத்தாளர்கள் எழுதிய 75 சிறந்த சிறுகதைகள், முதற் பதிப்பு: 1945. அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *