தேசிய நெடுஞ்சாலை 4. ஹுண்டாய் கார் பாக்டரிக்கு அருகில் சிகப்பு சிக்னலுக்கு நிற்காமல், அந்த மாருதி ஸ்விப்ட் கார் சென்னையை நோக்கிப் பறந்தது. சாலையோரத்தில் இருந்த ட்ராபிக் போலீஸ்காரர் சைகை காட்டியும், விசிலடித்தும் நிற்காமல் வேகமாகப் பறந்தது. போலீஸ்காரர் அந்த காரின் எண்ணை தன் பாக்கெட் நோட்புக்கில் குறித்துக் கொண்டார்.
அந்தக் காரை ஓட்டிக் கொண்டிருந்த வாலிபன் ஆக்சிலரேடரையும், ஹாரனையும் அழுத்தியபடி முன்னால் செல்லும் வாகனங்களை வேகமாகத் தாண்டிக் கொண்டிருந்தான். அவனால் முந்தப்பட்ட வாகனங்களின் டிரைவர்கள் அவனைத் திட்டினர். அவன் அவர்களை சட்டை செய்யவில்லை. சாலை மீது வைத்த நேர்ப்பார்வையுடன் வேகத்தைக் கூட்டினான்.
மற்ற கார்களும், பைக்குகளும் அவன் கார் இடிக்க வருவதுபோல் ஹாரன் அடித்து பயமுறுத்தியதால், ஒதுங்கி வழிவிட்டு அவனைப் பார்த்து சத்தம் போட்டனர். அவன் வேகத்தைக் குறைக்கவில்லை. ஒரு லாரியை ஓவர்டேக் செய்யும்போது, மயிரிழையில் அவன் கார் தப்பியது. லாரி டிரைவர் சடன் ப்ரேக் போட்டு நிறுத்தி, அவனை அசிங்கமான பாஷையில் வசை பாடினார். அவன் நிறுத்தவில்லை.
திருமழிசை சிக்னல் அருகிலிருந்து ட்ராபிக் அதிகமானது. அவன் குறுகிய இடைவெளிகளில், ஆட்டோரிக்க்ஷாவைப் போல் காரை நுழைத்து வேகமாக முன்னேறினான். சாலையின் டிவைடரில் அவன் காரின் பக்கம் உராய்வதையும் அவன் பொருட்படுத்தவில்லை.
பூந்தமல்லி அருகில் சிக்னலுக்காக பல வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. தலை தெறிக்கும் வேகத்தில் வந்த கார், சடன் ப்ரேக் போட்டதும், வளைந்து நெளிந்து வேகம் குறைந்து அரைச் சுற்று சுற்றியது. ஸ்டியரிங் வீலை வேகமாகச் சுழற்றி, முன்னாலிருந்த ஒரு ஆட்டோவைக் கவனமாகத் தவிர்த்து, அதற்குப் பக்கத்தில் ஹெல்மெட் அணிந்து இரண்டு பேர் அமர்ந்திருந்த மஞ்சள் கலர் பைக்கின் மேல் மோதிக் காரை நிறுத்தினான் அந்த வாலிபன். பைக் சற்றுத்தள்ளி கீழே விழுந்தது. பைக்கிலிருந்த இருவரும் கீழே விழுந்து தரையைத் தேய்த்துக் கொண்டு போய் சாலையின் ஓரத்தில் விழுந்தனர். பக்கத்திலிருந்த வாகனங்கள் ஒதுங்கின. அருகிலிருந்தவர்கள் பைக்கை எடுத்து ஓரமாக நிறுத்தி விட்டுக் கீழே விழுந்தவர்களைத் தூக்கி பிளாட்பாரத்தில் உட்கார வைத்தனர். அடிபட்டவர்கள் இளைஞர்களாக இருந்தார்கள். அவர்களை சிலர் யாரென்று விசாரித்தனர். அவர்கள் இருவரும் இந்தியில் பேசினார்கள். வெளி மாநிலத்தவர்கள். சென்னையில் இன்ஜினியரிங் கல்லூரியில் படிப்பவர்களாம்.
அதற்குள் ஒரு கூட்டம், இடித்த காரை மறித்துக் கொண்டு, கதவைத் திறக்க முயன்றனர். காரில் இருந்த வாலிபன், கார் கண்ணாடிகளை இறக்காமல், காரிலிருந்தும் இறங்காமல், தன் கைப்பேசியை எடுத்து யாருக்கோ போன் செய்தான். கூட்டம் அந்த காரைச் சுற்றிக் குழுமி விட்டது. அடிபட்டவர்கள், ஹெல்மெட்டைக் கூடக் கழட்டாமல் எழுந்து கைகால்களை உதறியபடி பைக்கின் சாவியைத் தேடினார்கள்.
அவர்களைத் தடுத்து, சாலையோரத்தில் கிடந்த சாவியைக் கையிலெடுத்துக் கொண்டு, ‘இருங்க, பைக் ரிப்பேருக்கும், உங்க காயத்துக்கு மருந்துக்கும், இந்த கார்கார சோமாரிகிட்டே பணம் வாங்கித் தரேன்’ என்று ஒரு பேட்டை தாதா குரல் கொடுத்து கோதாவில் இறங்கினான். அவனுடைய கைத்தடிகள் காரின் போனெட்டையும், கதவுகளையும் தட்டி, ‘ஏய், வெளியில வாடா மவனே, இன்னிக்கி நீ தான் போணி, டின்னு கட்றோம் வா’ என்று காருக்குள் இருந்த வாலிபனைப் பார்த்துக் கூச்சலிட்டனர். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களும் சத்தம் போட்டனர். அவன் காருக்குள் இருந்தபடியே யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தான். கூட்டம் பொறுமை இழந்தது. கார் கண்ணாடியை உடைப்பதற்கு கற்களைத் தேடினர். சிலர், ‘வேண்டாம், போலீசைக் கூப்பிடலாம்’ என்றனர். வேறு சிலர், ‘தப்பிச்சு ஓட முடியாதபடி கார் டயரில் காத்தை எறக்கி விட்டுடலாம்’ என்று ஐடியா கொடுத்தனர்.
இதற்கிடையில் அடிபட்ட இளைஞர்கள் பைக்கை விட்டுவிட்டு பயந்தபடி கூட்டத்திலிருந்து விலகி நடக்க முற்ப்பட்டனர். காரிலிருந்த வாலிபன் கூட்டத்தினரைப் பார்த்து, அந்த மாணவர்களைக் காட்டி ஏதோ சொன்னான். ‘ஏய், பைக்கை வுட்டுட்டு நீங்க எங்கடா தம்பி போறீங்க, இருங்க இன்னும் பிக்சர் பாக்கி இருக்கு, உங்கள வச்சித்தானே இவன் கிட்டே பணம் கறக்கணும்’, என்று அவர்களை நிறுத்தி விட்டு, ‘அவங்களை நாங்க பாத்துக்குறோம், நீ எறங்குடா பேமானி’ என்று காரின் மேல் ஓங்கி முட்டியால் தட்டி சொட்டை ஆக்கினான் அந்த தாதா.
அதற்குள் போலீஸ் பெட்ரோல் கார் ஒன்று அங்கு வந்தது. இரண்டு போலீஸ்காரர்கள் இறங்கி, கூட்டத்தை விலக்கி, காரில் இருந்த வாலிபனை வெளியில் இறங்கச் சொன்னார்கள், அவன் கதவைத் திறந்து இறங்கியதும், கூட்டம் அவன் மேல் பாய முற்ப்பட்டது. தாதா அவன் சட்டைக் காலரைப் பிடித்து முகத்தில் அறையக் கை ஓங்கினான். ஒரு போலீஸ்காரர் சத்தம் போட்டு அவனைத் தடுத்து நிறுத்தி, கூட்டத்தை பின்னால் தள்ளி விட்டார். ‘நீங்க தான் போன் செய்தீர்களா? எங்கே அந்த திருட்டு பயல்கள்?’ என்று அந்த வாலிபனிடம் கேட்டார். அந்த வாலிபன் அங்கு ஓரமாக, அந்தக் கைத்தடிகள் பக்கத்தில் உதறலுடன் நின்றிருந்த மாணவர்களைக் கைகாட்டினான். பிறகு கூட்டத்தைப் பார்த்து, ‘ஸ்ரீபெரும்புதூர் சிக்னல் கிட்டே நடு ரோட்லே, ஒரு பொண்ணோட செயினை அறுத்து அவங்களைக் கீழே தள்ளிட்டு, பைக்ல தப்பிச்சு ஓடின ரெண்டு திருட்டுப் பசங்களை சேஸ் பண்ணி புடுச்சிருக்காருய்யா இவரு. நாங்க செய்ய வேண்டிய கார்யத்தை இவரு செஞ்சிருக்காரு. இவரு போன் பண்ணி கண்ட்ரோல் டவர்ல இருந்து எங்களுக்கு செய்தி வந்துச்சி. இவரைப் போயி அடிக்க இருந்தீங்களே’ என்றார். இன்னொரு போலீஸ்காரர், ‘மொள்ளமாரிப் பசங்க’ என்று திட்டியபடி அந்த மாணவர்கள் அருகில் சென்று இருவரையும் செவுளில் அறைந்து கைவிலங்கிட்டு காவல் வண்டியில் ஏற்றினார்.
காரில் வந்த வாலிபனை இப்போது அனைவரும் மரியாதையுடன் பார்த்தார்கள். அவனருகில் வந்த தாதா, ‘சாரி வாத்யரே, தப்பா நெனச்சிக்காதே, அவங்க மூஞ்ச பாத்தாலே தெரியுது கேப்மாரிங்கன்னு. நீ கில்லாடி சார்’ என்றான். போலீசிடம் சென்று, ‘சார் அந்த கேப்மாரிங்களை நான் தான் புட்ச்சி உக்கார வச்சேன், இல்லன்னா பைக்கை வுட்டுட்டு தப்ச்சி போயிருப்பனுங்கோ. இந்தா சார், பைக் சாவி’ என்று சொல்லி சாவியைக் கொடுத்தான்.
சட்டைப் பையிலிருந்த தன் விசிடிங் கார்டை போலீசிடம் கொடுத்து, ‘நீங்க எந்த ஸ்டேஷன் வரணுமோ சொன்னீங்கன்னா, வந்து ரிபோர்ட் தரேன் சார். ரெண்டு சிக்னல்ஸ் வேறே ஸ்கிப் பண்ணிட்டேன் இப்ப நான் அவசரமா போகணும்,’ என்றான் அந்த கார் வாலிபன். ‘தேவைப்பட்டா கூப்பிடறோம் சார். சிக்னல் சிசிடிவி கேமராவில் இவங்க மாட்டி இருப்பாங்க. நாங்க பார்த்துக்கறோம். நீங்க போங்க. ஆனா பார்த்து மெதுவா ஓட்டிட்டு போங்க சார்,’ என்றார் போலீஸ்காரர்.