விவசாயி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 11, 2023
பார்வையிட்டோர்: 2,450 
 
 

தொங்கல், பகலில் அந்த சாக்கு கட்டிலில் செம தூக்கம் போட்டிருந்தான். காடு வெட்டி விவசாயம் செய்கிறவர்கள் பயன்படுத்துற மடிக்கிற மரக்கட்டில் அதிசயமாக அவன் வீட்டிலும் ஐயாவால் பயன்பாட்டில் இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் சுகமான தூக்கம் வருகிற…இதை யார் பயன்படுத்துகிறார்?. அவரை சுத்தத் தமிழர் என சமயத்தில் நினைப்பான். ஐயாவிடம் அவன் விடுத்து விடுத்து கேள்விகள் கேட்க முடியாது. ஒருநாள் ரகுவிடம் கேள்விகளை எழுதிக் கொடுத்து அவன் மூலமாக பேட்டி எடுக்க வேண்டும். தனக்குள் சிரித்துக் கொண்டு நெட்டி முறித்தான். அம்மா காதலித்து ஐயாவை முடித்தேன் என்று சொல்வார். அதுவும் நினைப்பில் வந்தது. அம்மாட வலது கை சின்ன மாமா தான். அவருக்கும் தம்பிக்கும் இடையில் வயசு வித்தியாசம் நாலு, ஐந்து இருக்கும். அது தான்… அக்கா சொன்னால் கேட்பவராக இருந்தார். அடுத்த ஆண்டில் பிறந்திருந்தால் வில்லனாக அல்லவா இருந்திருப்பார். ஆனால், அந்த காலம் இலக்கியக்காதலாக இருந்தது. இன்று இருப்பது போல இல்லை. அட அவனுக்கும் காதலுக்கும் வெகு தூரம் விடுங்கள். ஐயாவை, அம்மா முதலில் விரும்பவில்லை. அம்மம்மா தான், அயலுக்குள் இருந்த அவரை” “எடியே, இவன் பிரயாசைக்காரனாக இருக்கிறான், கட்டுவாயா?” எனக் கேட்டார். அம்மா “என்னாலே கறுப்பனைக் கட்ட முடியாது” என்று விட்டுப் போய் விட்டார்.

பிறகு, அம்மா ஏன் கேட்டார்? என்ற சிந்தனைகள் வரத் தொடங்கின. கவனிக்கத் தொடங்கினார். ஐயா ஒரு விருத்தக் கட்டை. அம்மாவை விரும்பிப் பார்க்கக் கூடியவரில்லை. இப்பத்தை இளைஞரைப் போல…படிக்கிறேன்…என கற்பதிலே காலத்தை விரயமாக்கவில்லை. சுமாராகத் தான் படித்தார். ஒருமுறை (ஒ.லெவல்) பரீட்சை எழுதினார். அப்புறம் கடை ஒன்றை வைத்தார். கொஞ்சம் பணம் சேர கடையை நண்பரிடம் கொடுத்து விட்டு காணி ஒன்றை வாங்கிக் கொண்டு…விவசாயத்தில் காலை பதித்து விட்டார். அவர்களுக்கு வீடு வளவு இருந்தது. வளவிலே தோட்டமும் செய்யத் தொடங்கி விட்டார். அவருடைய தங்கச்சிக்கு சீதனமாக வீடும் வளவும் போனது.” அண்ணர் வளவிலே தோட்டம் செய்வார்” ஒப்புக் கொண்டால் தான் கட்டுவேன் என்றிருக்கிறார். பாசமலர் அத்தை. அவரும் நல்லவர். சிரித்துக் கொண்டு சம்மதித்தார். இப்படி ஒரு கூட்டுக் குடும்பம்.

அம்மாவுக்கு இந்த பிணைப்பு தான் பிடித்தது. இன்று வரையில் அம்மாவும் அத்தையும் நல்ல சினேகிதியாகத் தான் இருக்கிக்கிறார்கள். இந்த மரத்தை துரத்தி பிடித்து தான் காதலிக்க வேண்டி இருந்தது என்று கூறி சிரிப்பார். அத்தை சப்போர்ட். தனிய போய் கடையிலே கதைக்க…வெட்கம். மாமாவை இழுத்துக் கொண்டு போய்” அது…நல்லா இல்லை, இது நல்லா இல்லை..”என்று களேபரப்படுத்தி…மினக்கெடுத்தி… கடுப்பாக்கி…வாங்கி வருவாராம். ஐயாவுக்கு விளங்கவில்லை. அத்தை தான்” அண்ணே, உன்னை விரும்புறாளடி..”என்று தெரியப்படுத்த…..வேற என்ன, சுபம்! தானே. அம்மா,” பிருந்தாவனமும் நந்தகுமாரனும்….” என்ற பாட்டு எல்லாம் நல்லா பாடுவார். ஐயா ரசிக்கிற ஜென்மமில்லை. ரசிப்பது போல நடிப்பார். பிள்ளைகள் ரசிக்கினமே போதாதா, என்ன.
ஐயா இரண்டு போகம் அறுவடை செய்த பிறகு சணலை போட்டு விடுவார். இதுவும் எள்ளு போல வளரும். பெரியளவு நீரிறைப்பு வேண்டியதில்லை. சணலை அறுவடை செய்வதில்லை. அப்படியே நிலத்திற்கு உழுது விடுவார். இயற்கைப் பசளை. இவனுக்கு சணலை அறுவடை செய்து…நூல் செய்ய வேண்டும் என்று சிந்தனை இருக்கிறது. தென்னம்பொச்சிலிருந்து கயிறு திரிப்பது போல சணலும் திரிப்பதும்…ஒரு தொழில்!. திட்டங்கள் இருக்கிறது. ஐயா வீட்டிலே மாட்டுக் கொட்டில் கட்டியது போல பின் வளவிலே இளைப்பாறும் கொட்டிலும் அமைத்திருக்கிறார். சாக்குக் கட்டிலில் அங்கே என்ன சுகமான தூக்கம் வருகிறது. பகல் தூக்கத்திற்கு சிறப்பான இடம். பாளை, விறகுகளும் மழையில் நனையாமல் சேகரித்து வைக்கிறது அங்கே தான். இவனுக்கு பாம்பும் வந்து சுருண்டு கிடக்கும் என்ற பயமும் இருக்கிறது. ஐயா எத்தனை பாம்பை வயலிலே கண்டிருப்பார். அவருக்கு பாம்பும் ஒரு நண்பன்.

இரண்டு கட்டில்கள் அங்கே இருக்கின்றன. நண்பர் ஆரும் வந்தால் அங்கே இருந்து தான் கதைத்துக் கொண்டிருப்பார்கள். பெண்டு பிள்ளைகள் தான் வீட்டிற்குள்ளே…இருந்து கதைப்பவர்கள். அதிலே ஒரு சுதந்திரமும் நிலவுகிறது. வயல் தொழிலாளி. எவருக்குமே மணமான பிறகு, நட்பு வட்டம் குழம்பி விடுகிறது. சுளிபுரம் ஒரு கிராமம். எல்லாரும் தெரிந்தவர்கள். குழப்பாது….நீளவே காணப்படுகிறது. இளைப்பாறும் கொட்டில். அந்த அமைப்பு முறை அவனுக்கு நிறையவே பிடித்திருக்கிறது. ஐயாவோட… வயலுக்கு,தோட்டத்திற்கு…என இழுபடுறவன். தோட்டப் பாத்தியில் தக்காளி,கத்திரி, வெண்டி,பூசணியும், வளவில்…, வாழை, கீரை, மரவள்ளி என எல்லாமே வைத்திருக்கிறார்கள். அத்தைக்கு ஐந்து பிள்ளைகள், இவர்கள் வீட்டிலே ஒண்ணே ஒண்ணு,கண்ணே கண்ணு…என அவனும், தங்கச்சி சாந்தாவும். பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பது வீட்டாரின் கனவு. அவர்கள் மட்டுமில்லை அயலவர்களும் இந்த இனப்பிரச்சனை காலத்திலும் பசி இல்லாமல் வாழ்கிறார்கள். இரத்த ஜூலை ஏற்பட்டது. இனப்படுகொலை ஒன்று நிறைவேறியது. அது சுண்டி விட்ட நாதம்…அடங்கவே இல்லை. சிங்கள கலவரம் பலி வாங்கிறது போல” வேலை, வேலை..”என கொழும்பிற்கு சென்றவர்களில் அரைவாசிப் பேருக்கு மேலே பலி எடுத்து விட்டது. ‘ கலவரம் என்பது ‘ சரியான வார்த்தையல்ல. அது, ஒரு பகுதியின் மிலேச்சத் தனமான, ரண்டமான தாக்குதல்!. பெடியளுக்கே தெரியாத சூத்திரமாக விடுதலைப் போராட்டம் கவிந்து விட்டிருக்கிறது. ரகு, திடுமென” டேய், தாமரையிலே சேர்ந்து போராட வேண்டுமடா!, நீயும் வாராயா?” என்று கேட்டான். ஒன்றாக திரிகிறவர்கள். எப்படி அவனுள் அந்த எண்ணம் ஏற்பட்டது.அவனுக்கு மூளை வேலை செய்யவில்லை.” அவன் சென்றால் ஐயாவோட வலது கை ஒடிந்து விடும்” என்ற சிந்தனை நெஞ்சிலே தடையாக எழவே செய்தது.

ஒரு நாள், அவனுடைய சைக்கிளில் தொற்றி, கரைக்கு வந்தவன் வள்ளத்தில் ஏறப் போறதைப் பற்றி ஒரு சொல் கூறியிருக்கவில்லை. பாவி, வள்ளத்தில் ஏறுற போது” நீயும் வரப் போறாயா?” கேட்டான். கோபி, அங்கே நின்ற அயலுக்க இருக்கிற குமாரிடம் சைக்கிளைக் கொடுத்து” ஐயாட்ட கொடுத்து விடு. நான் இயக்கதிற்கு போறேன் ‘ என்று சொல்லி விடு” என்று ஏறி விட்டான்.

ரகுவும், கோபியும் ஒரு வருசம் கழித்தே ஒன்றாய் திரும்ப தளத்திற்கு வந்து…இறங்கினார்கள். ஐயா கறுத்துப் போயிருந்தார். ஐயா பெரிதும் தனித்துப் போனார். உடம்பிலே உயிர் இருக்கும் மட்டும் ஓடும் என்றாலும் கோபி இருக்கிற போதே துடிப்புடன் ஓடக் கூடியது. வீட்டிலே, அவன் இல்லாத சோகம் குமைந்து கொண்டிருந்தது. ரகுவின் அம்மாவும், அவன் தங்கை விஜயாவும் அடிக்கடி வந்து அங்கேயும் உயிர் வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.” உவன் அழைத்துப் போவான்…என்று தெரியாது அக்கா…”என்று கூறி தேற்றி வந்தார்.ரகுவிற்கு இரண்டு அண்ணைமார் இருந்தனர். எனவே அவன் வீட்டிலே இடி விழுந்த நிலை நிலவவில்லை. ஒரு வருசம் என்பது நீண்ட காலம். ஆறு மாசத்தில் பயிற்சி முடிந்து விடுறது இருந்தது.இவர்கள் இருவரும் முகாமில் வேலை செய்வதும், உப பயிற்சியாளர்களாகவும்…என நீண்டு விட்டது.

ஐயா, அவனை கட்டிக் கொண்டு அழவில்லை. அவர்க்கு கண்ணீர் காய்ந்து விட்டது.அம்மாவும், சாந்தாவுமே “அண்ணே, அண்ணே…” என்று கண்ணீர் விட்டனர்.ரகுவும், விஜயாவும் கூட வந்திருந்தார்கள்.”ஐயா, என்னிலே தான் தவறு. கடைசி நேரம் இவனை அழைத்திருக்கக் கூடாது.ம்!, முதலே சொல்லி இருந்தால் வந்திருக்க மாட்டான். என்ர வாய்…பழக்க தோசத்தில் கேட்டு விட்டது. நான் கேட்டு, ‘ இல்லை’ என்று சொல்ல இவனுக்கு மனம் வரவில்லை. யோசியாமல் வந்து விட்டான்” என்றான். அவர் இருவரையும் பார்த்தார். ‘ இங்கே இருந்திருந்தால் இந்த பொலிவுடன் இருக்க மாட்டார்கள் ‘ என்ற எண்ணம் அவருள் ஓடியது. தோளிற்கு மேலே வளர்ந்து விட்ட பிள்ளைகள். தவிர, இனப்படுகொலை நின்று விடவா… போகிறது?, இரண்டு, மூன்று…என தொடர்ந்தும் நடைப் பெறப் போகிற அரசியல். பெருமூச்சு தான் அவரால் விட முடிந்தது.

இயக்கத்திலும் அரசியல் பிரிவுக்கும், இராணுவப் பிரிவிற்குமிடையில் பிரச்சனைகள் நிலவின. இரு துருவம் போல விலகல் அதிகரிப்பது போலவும் பயமுறுத்தியது. அரசியல் பிரிவு தான் பெரும் முடிவுகளை தீர்மானிப்பவை. இவர்கள் இருவரும் இராணுவப் பிரிவினர். அரசியல் பிரிவிலும் நண்பர்களைக் கொண்டவர்கள்.” என்னடா, இப்படி இருக்கிறதே” என்று கோபி கமலியுடன் கவலைப் பட்டான்.” டேய், நாங்கள் ( ரகுவும் ) குத்தகைக்கு காணி எடுத்து தோட்டம் செய்யலாமா? அனுமதிப்பீர்களா?” என்று கேட்டான்.” தாராளமாக செய்யலாம்” என்று யதார்த்த நிலமைப் பார்த்து கூறினான். வீட்டு தோட்டத்தில் ஐயாவுக்கு உதவி செயிறதோடு, இவர்களுக்கும் ஒரு வேலை போல குத்தகைக்கு சிறு நிலம் எடுத்தார்கள். பயிற்சி உடலை நல்லாவே பலப்படுத்தி திடப்படுத்தி இருந்தது. இருவருக்குமே வீட்டு வழியால் விவசாய அறிவு இருந்தது. கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்த ஆறுமுகம் ஆசிரியரின் வழிகாட்டலில் முழுதாகவே இயற்கை முறையில், முதலில் மரவள்ளியையே பெருமளவில் வைத்தார்கள். தோட்டப் பயிர்களையும் வைத்தார்கள். வீட்டிலே கலவை முறை. ஐயாவுக்கு மறுபடியும் தோழனானான். ஆனால், இராணுவம் தேடல் போட்டால்…ஓட வேண்டியிருக்கும். இயல்பு நிலை குழம்பி விட்டது. சில மனித மிருகங்களால் அனைவரின் நிம்மதியும் குலைந்து விட்டது. கோபியின் ஊரை, கிழக்கு மாகாணத்தை எல்லாம் அரசாங்கம் ஆள முடியாது. ஐயாவிற்கும் விளங்கிறது தான். ஆனால், என்ன செய்வது?.

இளைப்பாறும் கொட்டிலிலிருந்து ஐயா இரவிரவாக அவனிடம் விளக்கம் கேட்டது அவனுக்கு அழுகையையே ஏற்படுத்தியது.மாணாக்கனிடம் ஆசிரியர் வகுப்பு எடுக்கிறார்..அவருடைய அனுபவம் எங்கே?” ஐயா, எங்களுடைய முதன்மையான பலவீனம் பயம் தான். பல்வேறுபட்ட எண்ணங்களில் பயம் பல உருவங்களில் வெளிப்படுகிறது. ஒரு பய விதையைக் கூட ஊன்றி வளர விட்டால் விருட்சமாகி விடும்.நாம் வளர மாட்டோம். வளர்ச்சிகள் ( முன்னேற்றங்கள் ) தடைப்பட்டு விடுகிறது. இப்ப, இந்த அரசாங்கம் தமிழ் பெடியள்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கக் கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறதே. இன சனத் தொகை பிரகாரம் எமக்குரிய வீத அரச ( அமைச்சு வழி ) வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெற வேண்டும். அதோடு எமது சுய பொருளாதாரமும் ( தனியாக) கட்டப்பட்டிருந்தாலே முன்னேற்றகரமாக வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். இரண்டுமே இல்லை. காலம் விரயமாகி வீணாகவே போகிறது. பதிலுக்கு நாம் துணிவை கையில் எடுத்தால் அச்சங்கள் ஒவ்வொன்ராக விலகி விடும். அதுக்கு தான் போராடுகிறோம். ஐயா, நாம், எம் சிறு புகைப்படம் கூட உறவினர்க்கு கொடுக்க யோசிக்க வேண்டியிருக்கிறது. அந்த நிலை மாற வேண்டும்” என்றான். ஐயா உயிர்ப்பில்லாமல் சிரித்தார். எமக்கு எதிரி இந்த அரசா?, காலனி அரசா ( பிரிட்டன் வகையிறாக்கள் )…என்றே தெரியவில்லை. பிரிட்டனாக இருந்தால்… போராட்டம் வெல்லப் போவதில்லை. அமெரிக்கா, கனடாவுக்கு ரஸ்ய வெறுப்பு அதிகம். ஒவ்வொரு நாடுகளுமே ஒவ்வொன்றை மோசமாக வெறுக்கிறது. மூன்றாம் போரிற்கு துடித்துக் கொண்டிருப்பவை. இந்த இலட்சணத்தில் சிறிய நாடு…கணக்கிலே எடுக்கப்பட மாட்டாது. இலங்கை இரண்டு நாடாக பிரியவில்லை. தவிர, அனைத்துமே அறம் கொண்ட நாடுகளும் இல்லை, போலியானவை. அவர் எதையும் சொல்லி அவனின் உற்சாகத்தைக் கெடுக்க விரும்பவில்லை. இந்தியா, இன்னும் வல்லரசாக வரவேண்டும். உருப்பெற்றால் தான்… முரண்பாடுகள் வளர்ந்து, வளரும், ரஸ்ய வெறுப்பு என்பதும் முரண்பாடு தான், இந்த நாடுகளின் வேர்கள் இலங்கைக்கு நீள்வதை வெட்டி விடும். தனிமைப் படுத்தப் பட்டால்… செத்த பாம்பு. பிறகு, அது இனப்படுகொலை பற்றியே…நினைத்துப் பார்க்க முடியாது. ஐயா, உயிர்ப்பில்லாமல் சிரித்தார்.

இங்கே வெறும் பயமூட்டுவதாக மட்டும் இல்லை. அபாயகரமாக இருக்கிறது.நல்லவர்கள் இருந்தால் ஊர் வாழும்.கெட்டவர்களே பெருகிக் கொண்டிருந்தால்…அமிழும். எப்படி பார்த்தாலும் முதல் பலவீனம் ‘ பயம் ‘ தான் என்று கோபிக்கு புரிகிறது. நம்பிக்கையூட்ட வார்த்தைகள் தான் இல்லை..ஐயா, நாம் விவசாயத்தைப் பார்ப்போம். உலகமே அமிழ்ந்தாலும் உணவு தான் வாழ வைக்கும். உணவை எந்த பயங்கரவாதத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. வவசாய அறிவியல் நம்மிடமும் இருக்கிறது. உந்த உலகத்தின் வேர்களை வெட்டிக் கொண்டு நம் வழியில் செல்வோம். உந்த இலங்கை எங்களிடமும் பிச்சை கேட்கட்டும். உவங்களை விட நாம் தாம் சுதந்திர மனிதர்கள். அவனுடைய கோபம் அவருக்கு புரியாததில்லை. தமிழ்ச் சினிமா மாதிரி தனிக் குழு இராணுவமாக சண்டித்தனம் புரியும் படையினரை அடித்து துவசம் பண்ணலாம் என்று சிறு பிள்ளைத்தனமாக நினைக்கிறார்கள். அவருக்கும் எப்படி எதிர் கொள்வதென்று புரியவில்லை. பிரெஞ்சுப் புரட்சி போல… பிரான்சிலே ஏற்படுத்தினால் தான்….ஆகா!, அங்கிருக்கும் இலக்கியவாதிகளுடன் தொடர்புகள் கொண்டு…, அங்கே இருந்து தொடங்க வேண்டுமோ?. ஆனால், அது மீளவும் காலனிய வேற்கள் விட்டும், இங்கே இருக்கிற மாதிரி ஜனாதிபதியைத் தலைவராகவும் கொண்ட முட்டாள் தனத்திலும் வீழ்ந்திருக்கிறதே. பிரான்ஸ் தூரமாக இருக்கிறது மட்டுமில்லை, போர்வெறி பிடித்த நாடாகவும் தற்போது இருக்கிறது. ரஸ்யப் புரட்சிக்கு களமாக இருந்த நாடு. அந்த கள நிலை இப்பவும் இருக்கவே செய்யும். ஐயா உலகப்புரட்சியாளராக சிந்திக்கிறார். அவருக்குப் பிறந்தவனில்லையா,அது தான் கோபியையும் குழப்புறது போல. வாய் விட்டுச் சிரிக்க வேண்டும் போல இருந்தது. மண்ணைக் கொத்துற போது சுற்றிவர யாரும் இல்லாத போது…அட்டகாசமாக சிரிக்க வேண்டும். முடிவெடுத்துக் கொண்டார்.

கோபியும், ரகுவும் பின்னேரங்களில் வலக்கம்பரைக்குப் போகிறார்கள். ரகு தான் இந்த குத்தகை ஐடியாவை வெளியிட்டவன்.” நமக்குத் தான் வேலை இல்லை. குத்தகையிலே வைக்கிறது… தான் நம்வேலை. இந்த தொழினுட்பக் கல்லூரியில் படிக்கிறவர்களுக்கும் ஒரு விசயம் புரியிறதில்லை பார்” . அங்கே பழைய நண்பரான சேகரையும் சந்திக்கிறவர்கள். அவன் தொ. கல்லூரியில் அப்ப படம் வரைஞர் கோர்ஸ் படித்துக் கொண்டிருந்தான்.” படித்தும், இங்கே வேலை… எடுக்க முடியாது போல இருக்கிறதடா?” மூக்கால் அழுது கொண்டுமிருப்பான். அப்ப, அவர்களுக்கு புரியவில்லை. இப்ப, புரிகிறது.” அவன் ஒரு முட்டாள் என்று. அவன் மட்டுமில்லை நிறைய பேர் அப்படி தான் இருக்கிறார்கள். அவன் அந்த வகுப்பிற்குப் போற போதே வேலை எடுத்து விட்டான்…என்பதை தெரியாதவனாக இருக்கிறான். வேலை என்பது வெற்று காகிததிற்காக செய்யப்படுவதில்லை. கமலியிடம் சொல்லி இருந்தால் அவனுக்குத் தேவையான கருவிகளை தோழர்களைக் கொண்டே செய்து கொடுத்திருப்பான். நிலவளவைப் பாடத்திற்கு கொக்குவில் வீதீயில் மட்ட அளவை செய்தார்கள். அதே சமயம் இந்த சுளிபுரத்து வீதிகளையும் வாசிகசாலைக் குழுவை கையில் போட்டுக் கொண்டு, சுளிபுரத்து வீதிகளை அளவை செய்து நிலவுயர வரைபை தயாரித்திருக்க வேண்டும். குளம், குட்டை,வாய்க்கால் எல்லாம் இருக்கின்றன. பரந்த வேலையாகச் செய்திருக்கலாம். விவசாயத்தைப் போல இவையும் மக்களிற்கு உபயோகமாக இருந்திருக்கும். அடுத்த கட்டமாக சிரமதானப் படலம் நடந்திருக்கும். விவசாயமும் மற்ற இடங்களை விட…ஒருபடி முடுக்கி நடை போட்டுக் கொண்டிருக்குமடா” .அவர்கள் பேசுவது…கிட்டதட்ட சரி தான். பார்வை எப்பவும் விரிந்ததாக இருக்க வேண்டும். கிராமப்புறங்களில் சிலர் அந்த வழியில் நடை போடுபவர்களாகவே இருக்கிறார்கள். அராலியில் பாரதி வாசிகசாலை கிளியண்ணர், அவ்விடத்தில் ஒரு எளிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அவ்விடத்துப் பெடியள்களை படித்தவர்களாகவும் விளையாட்டு, மற்றும் வேலைகளில் புத்திசாலியினராகவும் விளங்க அவர் தான் காரணம். அங்கே உள்ள குலனையில் மழைச் சகதியாக இருந்த ஒழுங்கைப் பாதையை…அவ்விடத்துப் பெடியளைக் கொண்டே திருத்தி அமைத்தது கலையரசி வாசிகசாலைக்குப் புதிதாய் வந்த பெடியள்ககள் தான்.இப்படி வட்டுக்கோட்டை, வடமராட்சி எல்லாம் கணிசமான பேர்கள் இருக்கிறார்கள். சுடுகாடாய் யாழ்ப்பாணம் போனாலும் மீள எழவே செய்யும். கட்டி எழுப்புறவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். சமூகமும் படிக்க வேண்டிய பாடம்.

ஒவ்வொரு தமிழ்ப்பிரதேசத்தின் படங்களையும் சேகர் போன்றவர்களால்…வரைய முடியும். கிராம, பட்டின, நகரப் என ஊர்ப்படங்களை விரும்பாதவர்கள் யார் இருக்கிறார்கள். துல்லியமாகவும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளையும் அதில் குறிப்பிட முடியும். வெளிநாட்டவர் ஏப்பம் விட்ட பகுதிகளையும் சுட்டிக் காட்ட முடியும். சுதந்திர உணர்வு நிலைத்து இருக்கிற போது ஒரு காலத்தில் கீயூபாவைப் போல நம்நிலத்தையும் நம்மால் மீட்டெடுக்க முடியும். போர்க்லாண்ட் தீவை பிரிட்டன் வைத்திருக்கிறது. அணிசேரா நாடுகளின் கொள்கை, ‘ காலனி கையகப்படுத்தி இருக்கிற பகுதிகள் விடுவிக்கப்பட வேண்டும் ‘ என்பது!.ஆர்ஜன்டீனா நினைத்தால்…ஒருகாலத்தில் அதனை பெற்று விடவே முடியும். கனடா, அமெரிக்கா,. அவுஸ்ரேலியா…கூட பெரிதாகவிருந்தாலும் கூட அவை காலனிய நாடுகள் தாம். அவற்றில் இருக்கிற சுதேச மக்களும் அதிக உரிமைமைகளை பெறவே முடியும்.

“என்ன அப்பிராணியாய் இருக்கிறே. அணுகுண்டை…கண்டுபிடித்து வைதிருக்கினம். போட்டு நாட்டை அழித்துக் கொள்வினம் தவிர உரிமைகளைக் கொடுக்க மாட்டார்கள்” என்ற வாதம் இருக்கிறது தான். ஏலியனுக்கும் பயப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எல்லாம் மாறும். யப்பானின் மேல்…போட்டார்கள் தானே. அழிந்தா விட்டது. கேவலமுகம் தானே வெளிப்பட்டது. காலனிய நாடுகள் எல்லா சமாதான வரைபுகளையும் செயலிழக்க வைப்பதிலே குறியாய் இருக்கின்றன. (இலங்கையில் இனப்படுகொலையை நிகழ்த்தியது. இலங்கை,இந்திய ஒப்பந்தத்தை தடைபடுதுறது இந்தியாவல்ல, இவர்கள் என்பது புரி ய கனகாலம் எடுக்காது).

ஒருநாள் பலத்த விமர்சனத்திற்கு வரும். கனடாவில் பழங்குடியினரைச் சேர்ந்த…ஒரு தலைவர்” பார்ளிமெண்ட்” நச்சு வாதங்களை ஏற்படுத்துற இடம்” என்று பகிரங்கமாக கூறி இருக்கிறாரே. நேர்மையானவர்களின் வாரிசுகளிலிருந்தும் நச்சுகளும் பிறக்கின்றனவே…என்பதைக் காண்கிறோம். வெளிப்படுத்தப்படுகிறார்களில்லையா?. காலம் மாறும். கம்யூன் போல ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி செயலில் இறங்க வேண்டும். காலனி ஆட்சியிலிருந்து விலகினாலும் அவர் நாகரீக அடிமைகளாகவே நாம் தொடர்ந்தும் இருக்கிறோம். அதிலிருந்தும் வெளியில் வரவேண்டும். தமிழில் தமிழ்த் தாவரவியல் பெயர்களைக் கொண்ட ஒரு பாட நூலை தயாரித்து விட்டாலே…நம்மால் தமிழ் தாவரவியல் பாடத்தை நடத்த முடியும். ஒரு அலகை…ஏற்படுத்தவா முடியாது. முடியும். நாகரீக அடிமைகளின் கட்டுப்பாட்டில் கிடக்கிறோம். விடுபட வேண்டும். போராட்டம் தோற்றாலும், போராட்ட அனுபவம் வேண்டும் தான் என்று ஐயாவிற்கு புரிகிறது. அதனால் தான் அவர் கோபியை கண்டிக்கவில்லை.

சேகரைப் போல இருக்கக் கூடாது என்று நினைத்திருக்கிறார்கள். போற போது சில்லாலையைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் ‘ ஈழப்பொருளாதாரம் ‘ பற்றிய கட்டுரைகளை எழுதி மனிதன் என்ற பத்திரிகையை வெளியிட்டு வந்ததை அறிந்திருந்தார்கள். அரசடி வாசிகசாலைத் தலைவர் அதில் குறிப்பிட்ட இயற்கை எரிவாயு தயாரிப்புக் கிடங்கை ஏற்படுத்தி வீட்டு சமையலுக்கு பயன்படுத்தி வந்தார். அவரைப் போய் இருவரும் சந்தித்தார்கள். சேகரையும் கையோடு கூட்டிச் சென்றிருந்தார்கள். அவன் செயிற வேலையாய் இருக்கலாம். ஏற்கனெவே சில காணித்துண்டுகளை அளந்து ஊர்ஜிதப்படுத்த மீள அளந்திருக்கிறான். ஒரிருவருக்கு வீட்டுப் பிளான் கீறி…அனுமதி பெற்று கட்ட குடுத்திருக்கிறான். எப்பன் அளவு வேலை செய்து தானிருக்கிறான். சேவா வேலையில் அதை விரித்திருக்க…அறிவியல் காணப்படவில்லை தான். சமூகமும் வேலைகள் பற்றி அறியவே வேண்டியிருக்கிறது. அவன் அளவுகளுடன் ஸ்கெட்ஜை வரந்து கொண்டான்.”எரிவாயு வர ஒரு மாதம் கூட எடுக்கும். பொறுமையாக கையாள வேண்டும்.” என்று கூறியதை நினைவில் வைத்துக் கொண்டார்கள். ஊரில் பொறியியல் படித்த இன்ஜினியர் குணபாலுவை சந்தித்து தொடர்பில் வைத்துக் கொண்டார்கள். முதலில் ரகு வீட்டிலே கிடங்கை சீமேந்து கற்களால் சிறிய அளவில் எழுப்பினார்கள். அரசடி தலைவரும் வந்து பார்த்து திருப்தி தெரிவித்த போதே சந்தோசமாக இருந்தது.

ஐயா, இப்ப தளர்ந்து போயிருந்தார். கோபியை நினைத்து பெருமைபடவும் செய்தார். பொறுப்பான பையன். தங்கச்சி மேல் பாசத்தை வைத்திருக்கிறான். ஒரு துளி பெரு வெள்ளமாகும். ஒரு அலகு பிறகு கட்டிடமாகிறது. வலக்கம்பறை தேர்முட்டி தான் அனைவரின் கூடுமிடமாக இருந்தது. இரணூவப்பிரிவிற்கு ( பயிற்சி பெற்றவர்களிற்கு ) பொறுப்பாக குகன் இருந்தான். இருந்தாலும் அரசியல் பிரிவு கமலி தான் அவன் குரு ; ஆசிரியர்…எல்லாம்.செயல்படுறது குகனின் கீழ் தான்.விடுதலை பெரிய கனவு. கால் வைப்புக்கள். இருளுமா, வெளிக்குமா என்பதெல்லாம் தெரியாது. எதிர் பாராத செலவுக்கென கட்டடக்கலைஞர் வீடு கட்டுற போது முழுத்தொகையில் இரண்டு வீதம் ஒதுக்கி வைப்பார். மதிப்பீடுற போது அதையும் சேர்த்து தான் செலவு கூறப்படும். அதே போல கமலி” எமக்கும் தெரியாத புதிய பிரச்சனைகள் இயக்கத்தில் எழலாம்.அதற்கும் தயாராக இருக்க வேண்டும்” என்பான். அங்கிருக்கிற எழுத்தாளர் பாலன் விடுதலைப் பற்றிய கதைகளை எழுதி வந்தார். அரசடி வாசிகசாலையில் கிடைக்கும் கையெழுத்துப் பிரதியில் வாசித்து வந்தான். ரகு இவனைப் போல வாசிப்பவனில்லை.இவன்” நல்லா எழுதி இருக்கிறாரடா” என்று சொல்லுறதை வாசிப்பான். அவர் எழுதிய” கொலை” என்ற சிறுகதை கோபியை திகைக்க வைத்திருந்தது.” தயவு செய்து யாருமே அயலில் கண்ணில் படக் கூடிய இடத்தில் கொலைக்கருவிகள் எதையும் வைத்திராதீர்கள்….”என்ற தொடக்கத்துடன் தொடங்கிறது. மனித மனம் இருக்கிறதே அது இருண்ட மனம். சிங்களவருக்கு படைகள், அதிகாரங்கள்…இவை எல்லாம் கொலை ஆயுதங்கள் அயலிலே இருக்கின்றன. இவர் அதிலே அழுத்திக் குறிப்பிட்டது விவசாயத்தில் பூச்சிக்கு அடிக்கும் மருந்துகளை. மனிதன், நல்லதை யோசித்து நல்லவனாக வாழ முயற்சிக்கிற ஒரு குதிரையையும்,இருண் குணங்களை உடைய ஆழ்மனக் குதிரையும் கொண்டு இழுக்கப்படுற ஒரு வண்டி. அதுவே அவனுக்குரிய நடத்தையை தீர்மானிக்கிறது. அதனாலே ஒரு நிலையில் கடவுளாகவும், ஒரு நிலையில் மிருகமாகவும் முகத்தை வெளிப்படுத்துகிறான்.அலெக்சாண்டர் குடிமயக்கத்தில் பேச்சு தடித்தபோது பக்கத்திலிருந்த ஈட்டியுடன் அவன் உயிரையே போர்க்களத்தில் காப்பாற்றிய நண்பன் மேல் பாய்ந்து விட்டான். அவன் ஈட்டியால் குத்தப்பட்டு இறந்தான். இவனுக்குப் பக்கத்திலே ஈட்டி இருந்திரா விட்டால் அன்று அவன் இறந்திருக்க மாட்டான். அசோகனுக்கு கெட்ட எண்ணங்கள் ஆயுதங்கள். பல சகோதரர்களைக் கொன்றான்.எம். ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்டுக் கொல்ல முயன்றார். இப்படியே தொடர்கிறது….

கடைசியில், கொலைக்கருவிக்கு நண்பர், உறவினர் எல்லாம் தெரியாது….என்று முடிகிறது.

இவன் முதல் வேலையாக இளைப்பாறும் கொட்டிலில் கூரான கத்தி…என சந்தேகப்படும் எல்லாப் பொருட்களையும் அகற்றினான். ரகு, அடிக்கடி அதிலேயே வந்து சந்திப்பவன். கோபிக்கு தன் மேலே சந்தேகம் வந்து விட்டது. அவன் இயக்கத்தில் பெருமளவில் சுடுகருவிகள் புழக்கம் இருக்கவில்லை.”சமூகப் பிரச்சனைக்களுக்கு மரத்தால் வடிவமைக்கப்பட்ட பொம்மைத்துவக்குகளையே சாக்கால் சுத்திக் கொண்டு போறோம்”என்று கமலி தெரிவித்திருந்தான்.

மரவள்ளி நல்லாய் வந்தது. இயற்கைப் பசளையால் தள,தளவென இருந்தது.” தம்பி…”என்று அழைத்து வந்த இருவருக்கு இரண்டு செடிகளை இழுத்து கிழங்குகளைக் கொடுத்து விட்டு ஒரு செடியை ரகுவிற்கும்,அவன் வீட்டிற்கும் இழுத்து கிழங்குகளை எடுத்துக் கொள்ள, ரகு” டேய், நீ போ. வீட்டிலே எனக்கு ஒரு வேலை இருக்கு” என்று கழன்று விட்டான்.
அன்று அவன் மட்டுமே வலக்கம்பறைக்குச் சென்றான்.” கமலி, எனக்கு கலையிலே ஒரு கனவு வந்தது. படபடப்பு இன்னமும் அடங்குதில்லை” என்றான்.” சொல்லு” என்றான்.” எனக்கு முன்னால் ஒரு ஸ்டூல் கிடக்கிறது. அதிலே ஒரு கைத்துப்பாக்கி கிடக்கிறது. தோழர் ஒருவர் எனககு முன்னால் என்னவோ பேசிக் கொண்டிருக்கிறார்.நான் தீடீரென எடுத்து அவனை டுப், டுப் ‘ என சுட்டு விடுகிறேன். எனக்கு அந்த எண்ணமே இருக்கவில்லை. கை துறு, துறுத்து சுட்டு விடுகிறது. என்னடா இதற்கு அர்த்தம்” என்று கேட்கிறான்.” தொடர்ந்தும் ஏதாவது கண்டாயா?…”கேட்கிறார்.” ரகு, கூறுகிறான். துவக்கை எடுத்து பார்க்கிற போது தவறுதலாக தட்டுபட்டது.. என்று சொல் ‘ என்கிறான். நான் தானே சுட்டேன்” பரிதாபகரமாக முகத்தை வைத்திருக்கிறான்.

“நம்மவர்களிடம் ஆயுத வறு கிடக்கிறது. துவக்கு வாங்க முடியாத நிலை.வாய்ப்பில்லை.கற்பனையை நிஜம் என எடுக்க வேண்டியதில்லை.சுடுறது பெரில்லை.சுட்டவன் அந்த மனவுளைச்சலிலிருந்து வெளிய வாரது தான் பெரிய விசயம். உனக்கு இரண்டுமே இல்லை.மனதைப் போட்டு வீணாக குழப்பிக் கொண்டிராதே. எம். ஜி…, ரஜனி படத்தில் வந்த ஒரு காட்சி போல நினைத்துக் கொள். இன்றைய சினிமா, சிறுகதைகள்…இப்படித் தான் நடக்க வேண்டும் என்கின்றன விட்டுத் தள்ளு.”என்றான். நல்ல காலம் ரகுவுடன் பகிரவில்லை.கனவில் அவன் சுட்டது ரகுவைத் தான் அது தான் அவனுள் முள்ளாய் குத்திக் கொண்டது. கமலியே, ஆற்றுப்படுத்துறான். அவனால் அப்படியே சொல்லவும் முடியவில்லை. வீட்ட வந்தவன் தடி, பொல்லு,கல்லு ( செங்கல் ) எல்லாம் எடுத்து கொட்டிலிலிருந்து எடுத்து தூரமாக போய் வேலியோடு போட்டான். வேண்டாமய்யா. மனித மனம் இல்லை, விலங்கு மனம். புத்தர், எப்படியய்யா புத்தரானார்?. அவனுக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது.

‘ அரசியல் பிரிவிற்கு, இராணுவப்பிரிவு முக்கியமான நிகழ்வுகளை தெரிவித்து விட்டே இறங்க வேண்டும் ‘ என்ற விவாதம் விலாவாரியாக நடந்து கொண்டிருந்தது. இவர்களுடைய வள்ளத்தில், பயிற்சிக்கு அனுப்ப தோழர்களை வைத்திருக்கிற போது, இராணுவப் பிரிவுத் தலைவர் ஒருவர்,தாம் தெரிவு செய்த தோழர்கள் சிலரை ஏற்றி அனுப்பி விட்டிருந்தார். இது உள் பிரச்சனை. வெளிப் பிரச்சனை ஒன்றும் கிடந்தது. அவ்விடத்தில், இராணுவம், அரசியல் பிரிவு தோழர் சேர்ந்து இயங்கி வார ரஞ்சிதம் குழு என்றொரு பிரிவும் இயங்கி வருகிறது. உண்மையில் அது ஒரு பிறிம்பான பிரிவே கிடையாது. இந்த இரு அமைப்பிலும் கட்டப்பட்டிருந்த ஒரு மத்திய பிரிவு. தாக்கம் விளைவிக்கக் கூடியசமூகப் பிரச்சனைகளை கையாண்டு வருகிறது. தாமரை இயக்கமும் வடக்கு, கிழக்கு மாகாணம் எல்லாம் பரந்து கட்டப்பட்ட விரிந்த குழு. ஒவ்வொரு பிரதேசமும் அதற்கென தனித்துவ தன்மைகளைக் கொண்டிருந்தன. திருமலை, மட்டகளப்பு, போல, முல்லைத்தீவு, வவுனியா இல்லை. கிளிநொச்சி போல யாழ்ப்பாணம் இல்லை. இந்த நிலமைகளில் அனுபவமில்லாத பல்கலைக்கழக மாணவர்கள் கட்டமைப்பு வடிவத்தை விலகி நடப்பதாக விமர்சினங்களை வைத்து வந்தன.

தெரியப்படுத்தல், அனுமதிப் பெறுதல், ரிப்போர்ட் சமர்பித்தல்…எல்லாம் கட்டாயப்படுத்தப் பட்டன. தாமரையிலும் லெனின் கட்சியையைப் போல செம்,வெண் பிரிவுகள் கருத்துப் போக்கில் எழுந்து கொண்டிருந்தன. தோழர்கள் அதை புரிந்து கொள்ளவில்லை.வவுனியா, முல்லைத்தீவு,கிளிநொச்சியில்” சண்டியர்”என்ற குழுவினர் இருக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு பிரதேசக் கூறுகளிலுமே இயக்கங்களை விட கூடுதலாகவே இருந்தன. வன்முறைக் கும்பல்கள். கூத்தில், கொட்டைக்காட்டு அரிச்சந்திர மகாராசன் வேடமிட்டவன் அடங்காச்சண்டியனாகி விட்டான். பன்னாகத்தில் அலவாங்கு. சங்கானையில் சிலர். சுன்னாகத்தில் ஒன்று. யாழ்ப்பாணத்தில் போயா, பொன்ராசு தொட்டு வேறும் பல தீவிரமான குழுக்கள். அசிட், கத்தி, துவக்கு எல்லாம் மறைவாக வைத்திருந்தவர்கள். இவையை விட சமூகப் பிரிவிலும் கடலுடன் சம்பந்தப்பட்டவர்கள்…மீன்முள்ளு, திருக்கைவால்…வைத்திருந்தன. மலரவன்,இளங்கதிர்…போன்ற தோழர்கள், ‘ ரஞ்சிதம் குழு ‘.சமூகப்பிரச்சனைகளில் தாந்தோன்றித் தனமாக தலை போடுகிறது. மரண தண்டனைகளை நிறைவேற்றுகிறது என்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்கள்.” படிநிலை தலைவர்களிற்கு கட்டாயம் கீழ் படிந்தே ஆக வேண்டும்” வலியுறுத்தப்பட்டது. பிரச்சனைகளைப் பேசுகிற எவருக்குமே ஈகோக்களும் முளைத்து விடுகின்றன. தோழமை காணாமல் போய் விடுகிறது.

ரஞ்சிதம் ஒன்றும் முட்டாள் தனமாக இயங்கவில்லை. படித்தவர்களிற்கு சண்டியர் பற்றி அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை. சமூகப் பிரச்சனைகளில் அவர்களின் பிரசன்னம் அதிகமாகவே இருந்தன. தமிழ்ச் சினிமாவின் ரவூடீஸிசம் தான். சினிமாவில் கதாநாயகனே…புரிகிறான். கத்தரிக்காயை வெட்டுறது போல கொலைகள். நாமும் ரசிக்கிறோம். மென்மை சிறிதளவும் பலனளிக்காது போகும் சந்தர்ப்பங்கள். தோழர்களோ சிறுபிள்ளைகளாக இருந்தார்கள். பயிற்சி பெற்ற தோழர்கள் தோற்றத்தில் சிறிது மாறி வந்தார்கள். பயமின்றி வழி நடத்த…. சில தலைவர்கள் தேவைப்பட்டார்கள். ரஞ்சிதம் அங்கே சென்றது. அதையே நிறைவேற்றியது. மல்லிகைக் கிராமத்தில் யாழ்ப்பாணச்சண்டியர் ஒருவரின் மகனின் கொட்டத்தை ( அது சிறிதோ,பெரிதோ சலசலப்பை ஏற்படுத்தி வந்தது )அடக்கியது. வேறே என்ன, ஓரிரவு கிராமத்திற்குள் நுழைந்து வீட்டை தனிமைப்படுத்தி விட்டு, இருட்டடி கொடுத்தது. கிராமத்துக்கு ஏக சந்தோசம் தந்தையின் தீவீர குணநலம் மகனிடம் காணப்படவில்லை. எனவே எதிர்வினை ஆற்றவில்லை. தவிர, சாதாரண குடிமகனாக மாறி மக்களில் ஒருத்தனாகியும் விட்டான். கிராமத்து தோழரைக் காண்கிற போது பகிடியாக சலூட் அடிப்பான். வன்மத்தை அவன் வைத்திருக்கவில்லை. சிலர் உடம்பு முழுதும் விசமானவர்கள். இலங்கைப் படைகளைப் போல…காத்திருந்து பழி வாங்குபவர்கள். அச்சமயம், கெட்ட அமைப்புகள் எல்லாம் பைகோர்த்து விடுபன. யாழில் செல்வாக்கான சண்டியனை சரித்த போது ( இதையும் தாமரையே செய்தது ), எம்டன் சினிமாவில் வாரது போல, சோழ மகாராசனின்.. போல செத்த வீடு கோலாகலமாக நடைபெற்றது. இன்றைய காலத்தில் யாழ்ப்பகுதியை வாள்வெட்டுக்கள், போதைப் பொருட்கள், மதுவகைகள்…மூழ்கடித்துக் கொண்டிருக்கவில்லையா?. எல்லாம் எங்கிருந்து வருகின்றன?. படைமுகாம்களிலிருந்தே வழங்கப் படுகின்றன. வெளிப்படையான எதிரிகளுடன் எப்பவும் வாழ்ந்து விட முடியும். வஞ்சகர்களுடன் வாழவே முடியாது.

இன்று, எம்மவர்களிலும் சில, ஜே.வி.பி..இன் இந்திய எதிர்ப்புக் கொள்கையை எடுத்து விட்டிருக்கின்றன. ஜே. வி.பி..ற்காகவே பிரேமதாஸா கொல்லப்படுகிறார். மற்றவை…தெரிந்தவை தானே!. சமாதான வரைபான மாகாணவரசு தீர்வை விட…உச்ச தீர்வு கிடையாது. தாந்தோன்றித்தனமான இலங்கையரசின் செயற்பாடுகளிற்கு இந்தியாவைக் குற்றம் சாட்டி சிதறிக் கிடக்கும் முட்டாள் தனம் எமக்கு வேண்டாமே!. மனநோயாளியான ஐரோப்பிய மண்டலம் எந்த சமாதான வரைபையும் நிறைவேற விடுபவையல்ல. அபகரிப்பு என்ற சொற்றொடரை விட சமாதானவரைபுகள் பெறுமதி மிக்கவை. எல்லாம் தெரிந்திருந்தும் அவையே வந்து தீர்க்கும், தீர்த்து வைக்கும் என்று நம்புற நம்மவர்கள்…, இலங்கைக்கு கை விலங்கிட்டு வைத்திருப்பவை, எமக்கும் விலங்கிட முயல்வதை அறியாதவர்களாக இருக்கிறார்கள். இனப்படுகொலையை நிகழ்த்திய ஆயுதங்கள் அனைத்துமே பெரியவர்வாள் வழங்கியவை தாமே. இரட்டைக் கோபுரம் எங்கே சரிந்தால் எமக்கென்ன! சரிகிற போதெல்லாம் வேற நாட்டியங்கள் கற்றுக் கொள்ள வேண்டுமா?. பச்சோந்திகளை நம்பி உள்ளதையும் இழக்கவும் வேண்டுமா?. இன்றைய எரிபொருள் விலையேற்றமும் கூட பெரியவர்வாளின் கருணையால் ஏற்படுத்தப்படுபவை அன்றோ!.

கொட்டைக்காட்டில், அரிச்சந்திரனை பிடிக்க முடியவில்லை.அவனுடைய மச்சானைத் தான் பிடிக்க முடிந்தது. மற்ற சகாக்கள் மாறி விட்டார்கள். பதுங்கி விட்டார்கள் என்பதே உண்மை. ஊரும் சப்போர்ட். அவர்களுக்கு இவர்கள் எம். ஜி.ஆராகவும் இருக்கிறார்கள். சமூகக் குறைபாடு. இவற்றிற்கு தண்டனை அளிப்பதால்…எல்லாமே சரியாகி விடாது. புனர்வாழ்வளித்தல், அரசியல் நீரோட்டதிற்கு கொண்டு வாரல்…எல்லாமே வேண்டியிருக்கின்றது. எந்த புற்றில் என்னென்ன பாம்புகள் இருக்கிறதோ?. ரஞ்சிதம், அவனை புல்தரையில் ட்ராக்டரில் கட்டி சிறிது தூரம் இழுத்தது. பிறகு,…விடுவித்து விட்டு, புத்திமதிகள் கூறி, அவர்களின் உறவினர் ஒருவரை விழிப்புக்குழுவிற்கு தலைவராக நியமித்து விட்டு வெளியேறியது. வடிவேலுச் செயல் போல இல்லையா?. இவனை” முகாமிற்கு வந்து முகத்தை காட்ட வேண்டும் என்றில்லை, நாம் இவனை கவனித்துக் கொண்டிருப்போம்” என்று கூறப்பட்டது. வறிய பகுதியான அவ்விடத்தில் தாமரை அபிமானிகளும் இருந்தார்கள். மக்களுக்குத் தெரிந்தவர்கள்.” கட்டாயமாக உனது பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும்” என்று ஆசிரியர்களான அவர்கள் சொல்கிறபோது ஒரு அழுத்தமும் விழுந்து விடுகிறது. மறைவாக இருக்கிற அரிச்சந்திரனே படிக்க வைத்து விடுவான். பிடிபடாத சண்டியர்களால் வன்முறையும் ஒருபுறம் தொடர்ந்தபடியே இருந்தது. சாவேற்சேரியில் இவனுடைய சகா ஒருத்தன் ஒரு ஆசிரியரை கத்தியால் குத்தி கொன்று விட்டான். அவனையும் அவ்விடத்து அமைப்பால் பிடிக்க முடியவில்லை. பிடிபட்டிருந்தால்….மரண தண்டனையே நிறைவேற்றப்பட்டிருக்கும். தாமரைக்குழுவில் மரணதண்டனை பிரச்சனை.” நாம் யார் தண்டனை கொடுப்பதற்கு” என்ற வாதம். சண்டியர் கொட்டம் அங்கங்கே காணப்பட்டுக் கொண்டே இருந்தது. பலர் உறங்கு நிலைக்கு போய் விட்டார்கள் என்பதே ஒரு வெளிப்பு. சண்டயர்களிடம் செல்கிற சமூகப்பிரச்சனைகள் இவர்களிடம் வர விழிப்புக் குழுவூடாக தீர்த்த ( நெறி ) முறை… நல்ல அபிப்பிராயத்தையும் ஏற்படுத்தின. தூற்றுவார் தூற்றட்டும்…எல்லாத் தூற்றல்களும் கண்ணபெருமானுக்கே..என இவர்களும் நடை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

கோபியும் ரகுவும் அரசியல் குழுவோடு சேர்ந்து விழிப்புக்குழுக்களைக் கட்ட சென்று கொண்டிருந்தார்கள். பிறகு கூடுற கூட்டதிற்கு அவ்விடத்தைச் சேர்ந்த இரு தோழர்கள் பிரதிநிதியாகச் சென்றால் போதுமானது. அவனுடைய அயலில் அவர்களும் சென்றிருக்கிறார்கள். இரவு நேரம் நீளமாகியே விடுகிறது. சாமம் கழிய திரும்பி வார போது காணிக்குச் செல்ல முடிவதில்லை. மாசத்தில், இந்நிகழ்வுகள் ஓரிரு நாள்களே ஏற்பட்டன. ஒரு வருசமாக இவன் இல்லாது சமாளித்தவரால் சமாளிக்கவே முடிந்தது. ஐயா அவன் வரவில்லை என்பதைப் பற்றி ஒரு சொல் சொல்லுவதில்லை. கண்டிப்பதில்லை. ஐயாக் குறித்து ‘ பாவம் ‘ என்று பரிதாபப்படுவான்.

ரகுவீட்டார் விஜயாவிற்கு மணம் பேசிக் கொண்டிருந்தார்கள். ரகு கோபி வீட்டிற்கு ஓடி வந்தான்.” என்ன, தம்பி, என்ன விசயம்?” அம்மா அவன் பதற்றத்தைப் பார்த்து கேட்டார்.

“அம்மா” என்று அழ ஆரம்பித்து விட்டான். கோபிக்கும் ஒன்றும் புரியவில்லை.”என்னடா சொல்லன்ரா” என்று உலுக்கி கேட்டான்.” விஜயா பூச்சி மருந்தை குடித்து விட்டாளடா” என்று சொன்னான்.”டேய் அப்பவே சொன்னேனடா.இயற்கை வழியை பயன்படுத்தடா. இதெல்லாம் கொலைக் கருவிகளாடா.கையில் எட்டக் கூடிய இடத்தில் வைக்காதே. நீ கேட்கவில்லை” கத்தினான்.” தம்பி கோபப்படாதே. ரகு நீ ஏன் இங்கே ஓடி வந்தாய். விஜயா எப்படி இருக்கிறாள்” . கெட்டச் செய்தி வரக்கூடாது என்று கோபி வேண்டாத தெய்வம் இல்லை.. ஏன் குடித்தாள்? பரீட்சையில் தோல்வியா, சண்டையா புரியவில்லை. சாந்தாவைக் கண்கள் பார்த்து, இவள் செய்திருந்தால்…ஐயோ தாங்க முடியாதே.” வாடா நீ வீட்டிலே இருக்க வேண்டும். நானும் வாரேன்.” என்றான் கோபி.” அம்மா, அவள் கோபியைத் தான் கட்டுவேன் ‘ என்கிறாள்.எங்களுக்கே தெரியாது. ஒரு சொல் சொல்லி இருக்கலாம். மருத்துவர் ஒருவர் அயலுக்க இருந்ததால்,உடனடியாக ஏதோ மருந்து கொடுத்து தாக்கத்தைக் குறைத்து விட்டாராம். தற்கொலை நினைப்பு நல்லதில்லை.. மறுபடியும் செய்ய முயலலாம். அப்ப காப்பாற்ற முடியாது போய் விடும்” ‘ என்கிறார்” .

“டேய் கோபி,உங்களுக்கிடையில்…”அம்மா முதல் தடவையாய் அவனை சந்தேகத்துடன் பார்த்து கேட்டாள்.” ஐயோ அம்மா எங்களை யாருமே கட்ட மாட்டார்களம்மா. நாம் கட்டலாமா என்றது கூட எங்களுக்கே தெரியாதம்மா. கமலியைத் தான் கேட்கணும். டேய், என்னடா இதெல்லாம்” ரகுவை உழுக்கினான்.” “மச்சான் எனக்கும் தெரியாது. அலுப்பு பிடிச்சவள் என்னிடமாவது சொல்லி இருக்கலாம். இப்படி செய்து போட்டாளே” என்று கரைந்தான்.” அம்மா, ஏலுமான வரையில் தேற்றப் பார்க்கிறேன். வாடா போவோம்” என்று அவனுடைய சைக்கிளில் பறந்தான். சாந்தாவும் தன் சினேகிதிகளுடன் விரைந்தாள். அம்மாவிற்கு, உவளும் ரகுவை மனதில் வைத்திருக்கிறாளோ? என்ற கேள்வி உள்ளே எழுந்தது. கோபி” மருந்து வாங்காதே ஐயா” என்று இயற்கை…ஆசிரியர் கூறியது மாதிரியே மருந்துகளை தயாரித்துப் பயன்படுத்தப் பார்க்கிறான். அந்த துவக்கு கற்பனைக்குப் பிறகே தீவிரமாக இருக்கிறான். இரு வீடுகளுமே நல்ல மாதிரி பிழங்கிறவர்கள். எல்லோருமே ரகு வீட்டிற்குச் சென்று விட்டார்கள். சோர்வாக கட்டிலில் விஜயா படுத்திருந்தாள். கோபி அவளுக்கருகில் சென்று கையைப் பிடித்து தூக்கி கையில் வைத்துக் கொண்டு” ஏண்டி, இப்படி செய்தாய்?, உனக்கு என்னால் ஒன்றை மட்டுமே சொல்ல முடியும். முடிக்கிறது என்று ஒன்று இருந்தால் நீ தான்! கமலியோடு கதைத்துப் போட்டு உன்னட்ட தீர்மானமாக சொல்கிறேன். எடியே எங்களை எல்லாம் யார் விரும்பப் போறார், கட்டுவார் என்று நாம் உள்ளூர மாயிறது உனக்குத் தெரியுமா? சாந்தாவைப் போல நீயும் ஒருத்தி எனக்குத் தெரியாதா?, ரகு என் தோழன், நண்பன். நான் உங்க வீட்டுப் பிரச்சனை என்றால் முன் வர மாட்டேனா?, எல்லாரையும் காப்பாற்ற தானே நாமே விடுதலைக்கு போறோம். இப்படி செய்யலாமா?” என்று கண்ணீர் வடிய கேட்டான்.

ரகு வீட்டாரும் சூழ நின்று பார்த்தார்கள்.”உவள் மணம் பேசுறது பிடிக்கவில்லை என்று ஒரு வசனம் சொல்லி இருக்கலாம். பேச்சி, இப்படி செய்து போட்டாளே. உவள் போட்டாள் என்றால் நானும் போயிருப்பேன்” என்றார்.” அம்மா” என்று விஜயா அணுங்கினாள்.” தைரியமாக இரடி. இனி இப்படி செய்யாதே. கடவுளை வேண்டு.அவர் நல்லதே செய்வார். நம்பு” என்று மகளின் தலையை வருடினார்.

“அம்மா, எங்களுக்கும் எங்க நிலமை தெரியாது. கமலியைக் கேட்டால் தான் தெரியும்” என்றான். விஜயா அவன் கையை பிடித்திருப்பது தெரிந்தது. ஒரு கையால் அவள் தலையை வருடினான்.”உனக்கு யாரும் எதிரி இல்லையடி. நல்லதே நடக்கும் என்று நாமும் நம்புவோம்” என்றான். அவள் கண்களிலும் கண்ணீர். அடுத்த நாள் ரகுவும் கூட வந்திருந்தான். கமலி கூறினான்.”கல்யாணம் கட்டுறதுக்கு தடை இல்லை. முந்திய இயக்கம் அப்படி தீவிரமான விதிகளை வைத்திருந்ததாலே அதிலிருந்து பிரிந்து நம் இயக்கம் உருவானது. கழுகைப் போன்றதல்ல நம் இயக்கம். நம்மில் பலர் கட்டிய தோழர்களாக இருக்கிறார்கள். இப்ப கூட நீ விரும்பினால் கட்டலாம். தோழராக இருக்கிற வரையில் போராட அழைப்பு வருகிற போது….வர வேண்டும்” .” அரசியல் தீர்வற்ற நிலையிலே இருப்பதால், நாம் எந்நேரமும் மனக்குழப்பத்திலேயே இருக்கிறோம். விஜயாவிற்கு உடம்பு கொஞ்சம் தேறின பிறகு கட்டுறேன். ‘ நான் அடிக்கடி வாரது நல்லாயிருக்காது. வீட்டிலேயும் அனுமதி கேட்கிறேன். நாளை வா” என்று பிரிந்தார்கள்.

இந்த குழப்பத்தால் தோட்டப் பக்கம் போக முடியவில்லை. மரவள்ளியையையும் போய் பார்க்க வேண்டும். என்று நினைத்துக் கொண்டான். அரசாங்கங்கள் எப்படியும் இருந்து விட்டு போகட்டும்.விவசாயத்திலே காலூன்றுற உழைப்பை, பிழைப்பை யாராலேயும் தடுத்து நிறுத்த முடியாது. அரசியல், விவசாயிகளை அணுகக் கூட முடியாது. வெப்ப மூச்சுகள் வெளி வந்தன. ஊத்தைவாளிகள்…தவறுகளை விட்டுக்கொண்டே போகிறார்கள். அரச, தனியார் வேலைகளின் இருப்பவர்களின் வருவாய் அப்படியே கிடக்கிறது. இவர்கள் போடும் கூத்தால் பணவீக்கம்…வாழ்க்கைச் செலவின் வரைபு கீழ்நோக்கி இறங்கிக் கொண்டே போகிறது. பசியும், பஞ்சமும், எரிபொருளும்…., கூடுதலாக கேவலமான நிலவரியும் (சோலை வரி – பிரச்சனையற்ற நாடுகளில் உள்ள உள்ளூராட்சி அரசாங்கங்கள் அந்த கேடு கெட்ட வரியை வருஸா வருஸம் ஏற்றிக் கொண்டே போகின்றன ) ஏறி கால்பந்தாடுகின்றது. காலனி ஆட்சியாளர் ஏற்படுத்தியது தான் இந்த நில வரி. அரசியல்வாதியில்…காலனி குணவம்சம் காணப்படுகிறது. சுதந்திர நாடுகளிலும் கூட அவன் இந்த வரியை கையகப்படுத்திக் கொண்டு விட்டிருக்கிறான்.

ஒரு விவசாயியை இவை எல்லாம் அசைக்கவே முடியாது. அவன் காலநிலைத் தவறுகளால் மட்டுமே பந்தாடப் படுகிறவன்.”உனக்கேன் வரி?” கட்டப்பொம்மன் வசனமும் வேண்டி இருக்கிறது.

பாரிஸில் இயற்கை கேடுகளுக் கெதிராக பதற்றமான கூட்டங்கள்… நடை பெறுகின்றன. போர் விமானங்கள் உமிழும் புகையைப் பற்றி கணக்கிலே எடுக்கவேயில்லை. குற்றவாளிகளே போடும் கூத்துகள் பெரும் தலைவலி. பெரிய தலைவர்கள் என்று கெளரவமளித்து வரவேற்பு உபசாரம் செய்வது, வேறு விரயச் செலவு, நாடுகள் பிச்சைக்கார புத்தியைக் காட்டுகின்றன. எங்கட அரசு எனக் கூறவே வெட்கமாக இருக்கிறது. இது பரந்த வலை அமைப்பு. இதையெல்லாம் அறுத்தெறிய வேண்டும். நாம் அனைவருக்குமாகவே போராடுகிறோம். படையினர் நண்பர் என்று கூறுகிறார்கள்.யாருக்கு நண்பர்? இந்த நிலமைகளில் எல்லாம் அகப்படாது தன்னிறைவாக வாழ்ந்தவர்கள் நாம். எல்லாம் வேற்றுக் கிரகவாசிகள் ( ஐரோப்பியர் ) வந்த பிறகே ஏற்பட்டவை.

புத்தசமயிகளுக்கு நில ஆசையையை ஏற்றி விட்டு கழன்று விட்டார்கள். அகன்று விட்டார்களா? இல்லை தொடர்ந்தும் வெளியில் தெரியவே கட்டியே வைத்திருக்கிறார்கள். அதற்குப் பேர் கூட்டணி. கூட்டணிகள், சிங்கள, தமிழ் மக்கள் ஏற்படுத்துற சமாதான ஒப்பந்தங்களை நிறைவேற விடுவதில்லை. இவர்களாவது தாமாக ஏற்படுத்தி அதற்கு விசுவாசமாக இருக்கிறார்கள் என்றால் அதுவும் இல்லை. அரசியலாம். வெளிநாட்டில் நிகழும் தவறுகளுக்கு வரிகளை கட்டி விட்டால் போதும்…என்கிற மாதிரியான நழுவல் சட்டங்கள். கனடாவில் ( பழங்குடியைச் சேர்ந்தவர் ) ஒரு அமைச்சர் இதற்கெதிராக குரல் எழுப்பினார்.” பாராளமன்றம் நச்சுக்களை உருவாக்கிற தொழிற்சாலை. இனிமேல் தேர்த்தலில் நிற்க மாட்டேன்” என்று கூறுகிறார். கடந்த காலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய விவகாரம் இது. இந்தியாவில் கூட அந்த கம்பெனி ஊழலில் புகுந்து விளையாடி இருக்கிறது. நெறியற்ற படிப்பு….எல்லா குற்றங்களையும் செய்யும்.

காந்தி, படிப்பை விட்டு விட்டு விடுதலைப் போராட்டத்திற்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்தது அதனால் தான். கல்வியையை நெறிப் படுத்த வேண்டும்.” இந்தியாவின் ஜீவன் கிராமங்களிலே வாழ்கிறது” என்றார். நம்மவர்களும் சாதி,அது, இது என்று அடித்து செத்துக் கொண்டிருந்த போதிலும் ராஜாஜி,…குலக்கல்வி முறைச் சட்டத்தை அமுலாக்க வேண்டும் என்று ஏற்படுத்த…முயன்றார். மனித மனங்களில் செயற்கையாக நிறைய தவறுகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. அமுலாகாத போது தனது முதலமைச்சர் பதவியையே துறந்தார். கல்கி, தனது பத்திரிகையில் அவரது கொள்கைகளை விளங்கப்படுத்தி முன்னெடுத்துச் சென்ற சிஸ்யர். இவர்கள் எல்லாரும் நேர் கொண்ட பார்வையுடயவர்கள். நச்சு பாராள மன்றங்களாலே இலங்கையில் படுகொலை நிகழ்த்தப்பட்டது. எல்லா நாடுகளிலுமே நிகழ்த்தப்பட்டுக் கொண்டு வருகின்றன. அவர்கள் தமக்கு சூடிய பெயர்கள் பனியணியினர். தமிழில் பனி…என்றால் பையித்தியகாரர். சரியானப் பெயரைத்தான் சூடி இருக்கிறார்கள். உக்ரேனிலும் ஒரு சமாதான ஒப்பந்தம் எழுதப்பட்டிருக்கிறது. இலங்கையைப் போல அந்த கோப்பு தூசி அறையில் போடப்பட்டு விட்டது.

இந்தியாவும் ஐ. நா அவையில் ஒரு (பெரிய ) வல்லரசானால் தான்தான் இலங்கையில் ஓடி இருக்கிற மற்றைய நாடுகளின் வேர்களை வெட்டி எறிய முடியும். நம்மவர்களும் மட்ட ரகமான கிரிக்கெட் ரசிகர்களாகவே இருக்கிறார்கள். இந்த அரசியல் ஐயாவிற்கு சிறிது விளங்கிறது. கோபியிற்கும் சடைமாடையாக தெரிகிற மாதிரி இருக்கிறது.

இடப்பெயர்வுகள் நிகழ்ந்து விடியல் கதிர்கள் அங்கே எட்டி பார்கா விட்டாலும் கூட கோபி, மீள, மீள மாட்டு வண்டி கட்டி காய்கறிகளை, மரவள்ளியை,நெல்லை விளைவித்து சந்தைக்கு கொண்டு செல்வான். அவர்களது குடியிருக்கிற வளவில் மாட்டுக் கொட்டைகள் நிரந்தரமாகவே இருக்கும். மாடுகள் ஒன்றும் தற்போதைய எரிபொருளின் மேடு,பள்ளங்களால் பாதிக்கப்படாது.” சல், சல்” என ஓடிக் கொண்டே இருக்கும். அடிமையாக ஒருபோதும் வாழ மாட்டான். அதற்கெதிராகவும் செயல் பட்டுக் கொண்டே இருப்பான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *