கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 13, 2023
பார்வையிட்டோர்: 4,317 
 

(1947 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

[பிராஸ்பிரோ – மந்திர சக்தியும் மன்னிக்கும் குணமும் இருந்ததினால் கதை பிறக்கிறது.

மிரான்டா – அவன் மகள் அழகி.

அன்டோனினோ – பிராஸ்பிரோவைவிட தனக்கு ஆளத் திறமையுண்டு என்று நினைத்த சகோதரன்.

அலான்ஸோ – மகன் செத்துப்போனதாக நினைத்து வருந்தும் நேப்பிள்ஸ் அரசன்.

பெர்டினான்ட் – மிரான்டாவுக்காக ராஜ்யத்தை இழந்து விறகுவெட்டியாக இருப்பது பரம பதம் என்று நினைத்த நேப்பிள் ராஜ்யத்து பட்டத்திளவரசன்.

ஸெபாஸ்டியன் – அண்ணனைத் தீர்த்துவிட ஆசைப்பட்டவன்.

கொன்ஸாலோ – கிருத யுகம் ஸ்தாபிக்க விரும்பிய மந்திரி.

ஸ்டிபானோ – குடிமயக்கத்தில் ராஜ பவிஷு பெற்ற பரிசாரகன்.

டிரின்குலோ -அவனுக்கு பிரதான மந்திரி.

கலிபான் – சூனியக்காரி பெற்றுப் போட்டுவிட்டுப் போன மிருக மனுஷன்.

ஏரியல் – யக்ஷணி – குழந்தை.

மற்றும் வன தேவதைகள், மாலுமிகள், கப்பல், கடல், புயல் எல்லாம் உண்டு.]

மந்திரவாதி

நடுக்கடலிலே நாலைந்து கப்பல்கள் தத்த ளித்து தடுமாறுகின்றன. கடலலைகள் சினங் கொண்ட கருநாகங்கள்போல ஆயிரமாயிரமாக படம் விரித்து தலைசுற்றி மோதுகின்றன. உயிரை வாங்கவரும் காலதூதர்களின் கோரச் சிரிப்புப்போல் அலைவிளிம்புகள் நுரைகக்கிச் சுழிக்கின்றன. காற்றோ உன்மத்தம் கொண்ட பேய்க்கூட்டம்போல, குதியாட்டம் போடுகின் றன. வெட்டு மின்னலும் ஹுங்காடி இடியும், வானத்து இருட்டை எல்லாம் கம்பியிட்டுப் பிழிகின்றன.

இயற்கையின் இப்பெருஞ் சீற்றத்துக்கு எதிராக தரையிட்ட மரக்கட்டையும் சீலைப்பாயும் என்ன செய்யமுடியும்?

மாலுமி தீரன்தான்; அனுபவஸ்தன் தான் ; கைத்த மனதுடன் உப்பந்தண்ணீர் கப்பலின் மேல்தட்டில் புரண்டோடி கப்பலையே ஆழத்தில் அமுக்க முயலுவதை பலமுறை கண்டவன் தான். ஆனால் இப்பொழுது தன் சாகசத்துக்கு எல்லை வந்துவிட்டது என்பதை கண்டுகொண்டான்.

“தெய்வத்தின்மேல் பாரத்தைப் போட்டு எல்லோரையும் பிரார்த்தனை செய்யச்சொல்லு என்று கீழ்த்தட்டில் உயிரை மடியில் கட்டிக் கொண்டிருக்கிறவர்களுக்கு சொல்லியனுப்பி விடுகிறான்.

அதே நிமிஷத்தில் கப்பல் பாறையில் மோதுகிறது.

அத்தனை ஜீவன்களும், அவனவன் உயிருக் காக ரௌத்ராகாரமான கடலுடன் மல்லாடுகிறான்.

இப்படியாக ஒரு கோஷ்டி ஜனங்களை ஒரு தீவில் நாடகாசிரியன் எடுத்துச் சிதறுகிறான். அதிலே மனுஷ குண விகர்ப்பங்கள் எத்தனை உண்டோ அத்தனையும் அதில் உண்டு. நேப் பிள்ஸ் தேசத்து மன்னனான அலான்ஸோ; அவ னுடைய சகோதரனான ஸெபாஸ்டியன் ; அண் ணனை விரட்டிவிட்டு ஆட்சியை கைப்பற்றிக் கொண்ட மிலான் நகரத்து ட்யூக்; அவன் பெயர் அன்டோனினோ. நேப்பின்ஸ் அரசனின் மந்திரியான கொன்ஸாலோ; அலான்ஸோவின் மகன், ஆணழகன் பெர்டினான்ட், குடிகார ஸ்டிபானோ, விதூஷகன் டிரின் குலோ, மற்றும் மாலுமிகள் மந்திரிகள், முதலிய அத்தனைபேரும் கரையில் தொத்தி ஏறுகிறார்கள்.

2

“இன்றுதான் என் கிரகங்கள் உச்சத்தில் நிற்கின்றன. காலதாமதம் ஏற்பட்டால் காரியம் கெட்டுப்போகும். ஏவின வேலையை சரிவரச் செய்தாயா?”

அந்த நிர்மானுஷ்யமான தீவிலே முடிசூடாத. மன்னனாக ஆட்சி புரிந்துவரும் மந்திரவாதியான பிராஸ்பிரோ கேட்கிறான். அவன் உடம்பிலே யந்திரமும் சக்கரமும் பொறித்த ஒரு மந்திர அங்கி கிடக்கிறது. கையிலே மாத்திரைக்கோல்.

“ஆமாம் எஜமானே. அத்தனை பேரையும், ஒரு சிறு காயம்கூட இல்லாமல் கரைசேர்த்து விட்டேன். பயங்கரமான புயலை உண்டுபண்ணி னேன். கப்பலை கரை அருகே கொண்டு வந்தேன். இப்பொழுது எல்லாரும் தீவின் நாலாகரைகளி லும் ஏறிவிட்டார்கள். இனி எனக்கு விடுதலை எப்போ” என்று கெஞ்சுகிறது அவன் முன் நின்ற யக்ஷணிக் குழந்தை. அதன் பெயர் ஏரியல். மெல்லிய காற்றைப்போல் அவ்வளவு பசலை.

“உனக்கு அதற்குள் அத்தனை அவசரமா? வேலை எல்லாம் குறைவற முடியட்டும். அந்த சூனியக்காரி ஸிக்கோராக்ஸ் உன்னை மரத்தில் ஆணியடித்து விடவில்லையா. அதை மறந்து விட்டாயா. நான்தானே ஒன்னை மீட்டு வளர்த்தேன். சொன்ன வேலையை செய்; அப்புறம் கேள்” என்கிறான் பிராஸ்பிரோ.

இத்த மந்திரவாதி தனது கையில் சிசுவை யும் மந்திரத்தையும் ஏந்தி இந்த தீவுக்குள் குடி யேறுவதற்கு முன், ஸிக்கோராக்ஸ் என்ற சூனி யக்காரி இதை தனது கொடுமையால் அளந்தாள். அவள் பிறந்தவூர் ஆல்ஜியர்ஸ். அவளது அட்டூழியங்களை சகிக்க முடியாமல் கப்பலேற்றி விடுகிறார்கள். அப்பொழுது அந்த சூனியக்காரி கர்ப்பிணி. இங்கே வந்த பிறகு ஒரு குழந்தை. பிறக்கிறது. அது மனிதனுமல்ல; மிருகமுமல்ல. மனித உருக்கொண்ட மிருகம். பன்னிரண்டு வருஷங்கள் இந்த தீவிலே உள்ள தேவதைகளை யெல்லாம் ஆட்டி வைத்து விட்டு செத்து. மடிகிறாள். மனித மிருகமான அல்லது மிருக- மனிதனான அக்குழந்தை அனாதையாகிறது.

இந்த நிலையில்தான் மந்திரவாதி பிராஸ் பிரோ, கையிலே பெண்குழந்தையும் மந்திர சாஸ் திரமும் தாங்கி இந்தத் தீவில் தஞ்சம் புகுகிறான். பிராஸ்பெரோ பிழைப்புக்காக மந்திரவித்தை கற்றவனல்ல. மிலான் நகரத்து ட்யூக் அவன். நிர்வாகத்திலே கவலை செலுத்தி அரசியல் களறில் காலைவிட்டுக்கொண்டு உழலாமல், சகபாடிகளான மனுஷவர்க்கத்தை சட்டத்தையும் வாளையும் காட்டி வசக்கி நடத்த ஆசைப்படாமல், புஸ்த கத்திலே கவனம் செலுத்தி தேவதைகள் மீது கொண்டது ஆட்சி செலுத்துவதில் மோகம் தான் அவன் குற்றம். இது இவனுடைய சகோ தரனான அன்டோனினோ ‘சமயமிது, சமயமிது என்று ஆட்சியைத் தன் வசப்படுத்திக்கொண் டான். முதுமையும் கருணையும் கொண்ட கொன் ஸோலோவின் உதவியால், பிராஸ்பெரோ காதல் வைத்த மந்திர புஸ்தகங்கள் அவன் வசம் சிக்கி விட்டன. சகோதர வைரியான அன்டோனியோ பிராஸ்பிரோவையும் குழந்தையையும், இனி எக் காலத்திலும் உயிருடனோ அல்லது செத்து மடிந்தோ தனக்கு வைரிகளாகிவிடக் கூடாதபடி ஒரு படகில் ஏற்றி கடலுக்கும் காற்றுக்கும் அர்ப் பணம் செய்துவிடுகிறான். நாகரிக மக்கள் மீது ஆட்சி செலுத்துவதில் லயிப்பற்ற பிராஸ்பிரோ வை அவன் நாட்டங்கொண்ட வனதேவதைகள் மீதே ஆட்சி செலுத்தும்படி இந்தக் கண்ணற்ற தீவில் கொணர்ந்து தள்ளிவிடுகிறது.

கரையேறிய பிராஸ்பிரோ ஏரியலை மீட் கிறான் ; அனாதையாகக் கிடந்த மிருகக் குழந்தை யை மடிந்து போகாமல் காப்பாற்றி காலிபன் என்ற பெயரிட்டு வளர்க்கிறான். பிராஸ்பிரோ வின் நெஞ்சில் பாசம் வரண்டுவிடாதபடி மூன்று குழந்தைகள் வளர்கின்றன. ஒன்று காற்றில் மாயாவியாக அலைந்து அதன் ஏவிய பணியைச் செய்யும் ஏரியல். தாமச குணமும் க்ஷத்திரமும் கொண்ட காலிபன், அடிமையாக வீட்டுக்கு வேண்டிய தேவைப்பொருள்களை தேடிக்கொடுக் கும் வேலை செய்து வருகிறான்; தனக்குத்தான் தீவை ஆள உரிமை உண்டு ; மந்திரவாதி தன்னை ஏமாற்றி அதைப் பிடுங்கிக் கொண்டான் என்ற கோபம் மடியவில்லை. பிராஸ்பிரோவுடன் காற் றையும் கடலையும் தாண்டிவந்த சிசு. அவன் மனசில் வாஞ்சைக் கொழுந்து படர வளர்கிறது. அவளுக்கு மிரான்டா என்று பெயர்.

இப்படியாக பனிரெண்டு வருஷங்கள் கழிந் தன. மிலான் சம்பவம் எப்போதோ நடந்த கதையாகி எல்லோரும் பிராஸ்பிரோவை மறந்து விட்டார்கள்.

நேப்பிள்ஸ் அரசனான அலான்ஸோ தன் மகளை ட்யூனிஸ் ராஜ்யத்து இளவரசனுக்கு கலியாணம் செய்து கொடுத்தான். மணவினைக்காக சென்றிருந்த கோஷ்டிதான் இது; ஏரியலின் சக்தியால் எற்றுண்டு மணி மந்திரத் தீவில் கரையேறியது.

“இப்படிப்பட்ட செழிப்பான தீவு ஒன்றுக்கு நான் அரசனாக இருந்தால்”…, பழுத்து முதிர்ந்த கிழவனான கொன்ஸாலோ ஆரம்பிக்கிறான்.

கடலுக்குத் தப்பிய ஒரு கோஷ்டி ஒன்று உட்கார்ந்திருக்கிறது. பட்டத்து இளவரசனும் தன் பாசத்துக்கு கொழு கொம்புமான பெர்டி னான்ட் மாண்டு மடிந்துவிட்டான் என்று அலான் ஸோ மனம் வேகிறது. ஆழக் கடலுக்குள் மகன் மூழ்கி மூச்சடைந்து மாண்டு போனான்; இனி என்ன வாழ்வு என்று மனங் கைத்துச் சோர்ந்து விட்ட அரசனுக்கு மனசை வேறு திசையில் திருப்ப கிழவன் முயற்சிக்கிறான். அந்தக் கோஷ்டியில் உள்ள மற்றவர்கள் கிழவனின் கனவை நையாண்டி செய்கிறார்கள்.

கொன்ஸாலோ மேலும் விவரிக்கிறான் : இந்த ராஜ்யம் அங்குள்ள யாவருக்கும் பொதுச் சொத்து. அங்கே பேரமும் பித்தலாட்டமும் இருக்காது. நீதி கண்டு சொல்ல ஒருவனும் இருக்கமாட்டான். அதிகாரம் கிடையாது. செல்வமோ வறுமையோ இருக்காது. கொத்தடி மை, சேவகம் கிடையாது. பந்தகம், வாரிசு, எல்லை, வேலி எதுவும் இருக்காது.

வரி இருக்காது; மதுவனம் இருக்காது. நாகரிகத்தின் பலன்களான உலோகம், தான்யம், மது, எண்ணை எதுவும் இருக்காது. அங்குள்ள யாவரும் உழைக்க வேண்டாம். ஆண்கள் சும்மா இருப்பார்கள்; பெண்களும் அப்படித்தான்; களங்க மற்று, குணம் திறையாது இருப்பார்கள். அங்கே ராஜ்யாதிகாரமும் இருக்காது…

‘ஆனால் நீ அதற்கு ராஜா’, என்று சிரிக்கிறான் ஸெபாஸ்டியன்.

‘கிழவனார் பொதுச் சொத்தின் பின்பாதி முன் கதையை மறக்கிறதையா’ என்கிறான் அன்டோனினோ.

கொன்ஸாலோ அதைக் கா காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ‘அங்கே இயற்கை கொடுப்பது யாவருக்கும் பொது: வியர்வையோ உழைப்போ சிந்தவேண்டிய அவசியம் கிடையாது. துரோகம், அயோக்யத்தனம், வாள் வல்லீட்டி, துப்பாக்கி, யந்திரம் எதையும் நான் அனுமதிக்கமாட்டேன். இயற்கை தனக்குள்ள செழிப்பிலே, வளத்திலே, கல்வியிலே கைநிறைய கொடுப்பது எனது மக்களை போஷிக்கும்…

‘பெரியார் பிரஜைகளிடை கலியாணம் கிடையாதோ’ என்று கிண்டல் பண்ணுகிறான் ஸெபாஸ்டியன்.

‘எல்லாம் சும்மா அப்பா; அயோக்யர்களும் அவிசாரிகளுந்தான்’ என்றான் அன்டோனினோ.

கிழவன் இவர்கள் பேச்சை சட்டை செய்யவில்லை.

‘இம்மி பிசகாது என் ஆட்சியில்; அதற்கு திரே கிருதயுகம்கூட ஈடாக நிற்க முடியாது…’

‘மன்னர் நிடூழி வாழ்வாராக.’

‘கொன்ஸாலோ நீடூழி வாழ்வாராக.’

‘நான் சொன்னதைக் கவனித்தீர்களா’ என்று அலான்ஸோவை கேட்கிறான் கொன்ஸாலோ.

‘பேசாமலிரு; அது என் காதில் விழாது. இப்பொழுது’ என்று விடுகிறான் அரசன்.

அந்த நிலையிலே ஏரியல் மாயாவியாக வந்து கண்ணைச் சொருகும் இசை ஒன்றை எழுப்புகிறான்.

புத்திரசோகத்தில் ஆழ்ந்த அலான்ஸோவுக் கும் கண்ணுறக்கம் வந்துவிடுகிறது.

மிஞ்சியவர்கள் அன்டோனினோவும், மன்னனுடைய சகோதரனான ஸெபாஸ்டியனுமே.

இந்திர போகத்திலமர்ந்தாலும் இயற்கை.

ராஜ்யலக்ஷியத்தைப்பற்றிய கொன் ஸாலோ வின் கனவு விழித்து, காவல் நிற்பவர்கள் மனசில் ராஜ்ய மோகத்தை கிளப்புகிறது.

அயோக்கியத்தனத்தால் நல்ல பயனும், அதைச் சாதிக்க வசதியும் கிடைத்தால், யாருக் குத்தான் அயோக்கியனாக விருப்பமிராது.

அண்ணனை விரட்டி ஆட்சியை லகுவில் கைப்பற்றிக்கொண்ட அன்டோனினோ,ஸெபாஸ் டியன் மனசில் ஆசை வித்தை விதைக்கிறான். ஆதி கொலைகாரனான கெய்ன், ஆரம்பித்து வைத்த சகோதரத் துரோகம் மனுஷ உடம்பின் நாடியோடு நாடியாக ஒன்றி சமயம் ஏற்பட்ட போதெல்லாம் உச்சத்தில் ஓடுகிறது என் சொல்லுகிறது விவிலிய வேதம். அலான்ஸோ வைத் தீர்த்துவிட்டால், வாரிசு யார். மகள் ட்யூனிலிருந்து கடலைத் தாண்டிக்கொண்டு உரிமை கொண்டாடி வரப்போகிறார்களா. மணி முடி உடனே ஸெபாஸ்டியன் தலையில் வந்து அமர்வதைத் தவிர அதனால் வேறு என்ன செய்யமுடியும். அன்டோனினோ சக்கரவட்ட மாகச் சுற்றி வளைத்துச் சொல்லி ஸெபாஸ்டியன் மனசைக் கெடுத்துவிடுகிறான். கிழவனை ஒருவனும் மன்னனை ஒருவனும் தீர்த்துவிடுவது என்று சதி போடுகிறார்கள்.

யக்ஷணிக் குஞ்சான ஏரியல், தன் எஜமான் ஏவல்படி இவர்களுடைய உயிருக்கு ஆபத்து வராமல் காத்து நிற்க வேண்டியவன்.

கொன்ஸாலோ காதில், “குரட்டை போடாதே, அருகே கொலைக்கும்பல் கும்மாளம் போடுது பார்” என்று ஓதுகிறான்.

கொன்ஸாலோவும் மன்னனும் திடுக்கிட்டு விழித்துவிடுகிறார்கள். ஏதோ சத்தத்தைக் கேட்டு கத்தியை ஓங்கியதாக சொல்லி சதிகாரர்கள் தப்பித்துக்கொள்ளுகிறார்கள்.

இந்தக் கோஷ்டி பட்டத்து இளவரசன் பெர்டினான்ட் கதியென்ன, என்று தேடிச் சொல்லுகிறது.

குடிகார ராஜா, கோமாளி மந்திரி

ஸ்டிபானோ ஒரு பட்லர். புட்டியிலே சொர்க்கத்தை தரிசித்தவன். கப்பல் போய்விடும் என்று நிச்சயமாகத் தெரிந்தவுடன் கடலில் குதிக்கத் துணிந்துவிட்டான். ஆனால் ஒரு பீப்பாய் சாரா யத்தை உருட்டிக் கொண்டுவந்து ஒரு மிதப்புக் கட்டையாக உபயோகித்து பீப்பாயும் தானுமாக கரை சேருகிறான். கரைக்கு வந்தவுடன் முதல் வேலையாக பீப்பாயை பத்திரமான இடத்தில் பதுக்கி வைத்துவிட்டு, புட்டி நிறைய சாராயத் தை ஊற்றி எடுத்துக்கொண்டு தீவைச் சுற்றிப் பார்க்க புறப்படுகிறான். புட்டிதான் அவனுக்கு பயத்தை தெளிவிக்கிறது. பேச்சுக் கொடுக்கும் தோழனாக, பசி போக்கும் மாமருந்தாக இருக் கிறது. போதை ஜன்னியில் தன் ஞாபகத்துக்கு வந்த பாட்டுகளையெல்லாம் பாடிக்கொண்டு வருகிறான்.

விதூஷகனாக டிரின் குலோ வேறு ஒரு பக்கத்தில் கரையேறி திசைகெட்டு நடந்து வந்து கொண்டிருக்கையில், வேலை செய்வதற்கு மன மில்லாமல் சோம்பி படுத்துக்கிடக்கும் காலிப னைக் கண்டுவிடுகிறான். அவனுடைய ஆராய்ச் சிக்கு காலிபன் ஒரு காட்டு மனுஷனாக தோன்று கிறது; மறுபடியும் இடிச்சத்தம் கேட்டு காலிப் னுடைய அங்கிக்குள் நுழைந்துவிடுகிறான்.

போதையில் தன்னை மறந்து பாடிக்கொண்டு வரும் ஸ்டிபானோவும் அந்த இடத்துக்கு வந்து சேருகிறான். அவன் கண்ணிலும் காலிபன் தென் படுகிறான். அவனை மெதுவாகப் பிடித்துக் கொண்டு ஊருக்கு கொண்டுபோய்விட்டால், பணங்காய்ச்சி மரத்தை கொல்லையில் நட்டு விட்டமாதிரி தோன்றுகிறது.

மிருகத்தினிடம் நெருங்குகிறான். அது மனுஷ பாஷை பேசுகிறது. இன்னும் அந்த மிருகத்துக்கு நாலுகால், ரண்டு குரல், இதென்ன விபரீதம். மிருகம் இரண்டாக பிரிந்து அதிலிருந்து விதூஷகன் பிரசன்னமாகி றான். பிசாசு அல்ல, பழைய நண்பன் டிரின் குலோதான் என்று நிச்சயமானபிறகு, காலிப னிடம் பேச்சுக்கொடுத்துப் பார்க்கிறார்கள். பேச்சுக்கு மசியாத பிசாசு, புட்டிக்கு மசிந்துவிடுகிறது. உள்ளே என்றுமில்லாத சுறுசுறுப்பு தட்டவும், காலிபனுக்கு தன்னைக் கைதூக்கவந்த கடவுளாகவே ஸ்டிபானோ தென்படுகிறான். இவனுக்கு அடிமையாகிவிட்டால், விறகு சுமக்கும் வேலைச் சள்ளை கிடையாது. புட்டி பொரு ளுக்காக தனக்கு சொந்தமாகி இருந்திருக்க வேண்டிய ராஜ்யத்தையே இவன் காலடியில் வைத்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கெஞ்சுகிறான்.

புட்டி கொடுத்த புதிய புத்தித் தெளிவிலே, ஸ்டிபானோவுக்குப் பட்டாபிஷேகம் க்ஷணகாரியமாக நடந்துவிடுகிறது. அவனுடைய பிரதான மந்திரி டிரின் குலோ; பிரதான பிரஜை மிருகப் பிராயம் நீங்காத காலிபன்.

‘இந்தத் தீவு எனக்குத்தான் சொந்தம்; எங்கம்மா கொடுத்தது. இதை பிராஸ்பிரே என்கிற ஒருத்தன் என்னிடமிருந்து ஏமாற்றிப் பிடுங்கிக்கொண்டு என்னை அடிமையாக்கி விட்டான். இந்தத் தீவிலே பசிச்சிருக்க வேண் டாம்; வகைவகையாய்ப் பழங்களுண்டு; கண்ணை மூடிப் படுத்துவிட்டால், அதிலே சுகமான பாட்டு கேட்டுக்கொண்டே இருக்கும்; எழுந் திருக்கவே ஆசை எழாது. அவ்வளவு சுகம். இந்தத் தீவு உனக்கே உனக்கு, உன் அடிமை நான்’ என்று ஸ்டிபானோ காலடியில் வைத்து விட்டான்.

‘அந்த கொடுங்கோலன் மத்தியானத்தில் கொஞ்ச நேரம் தூங்குவான். அவனைக்கொன்று விடு; அப்புறம் நமக்கு கவலையே கிடையாது’ இதுவே காலிபன் முறையீடு.

‘அகோவாராஸ் மதிமந்திரி; புறப்படு புரட்சி செய்வோம்’ என்று பிறக்கிறது சுக்ரீவ ஆக்ஞை.

இந்த நிலையில் ஏரியல் மாயாவியாக வந்து அவர்களை மோகன இசை ஒன்றில் மதிமயங்க வைத்து, குரல் செல்லும் திசையில் கோவேறு கழுதைகள்போல தொடரும்படி கல்லிலும் முள்ளிலுமாக இழுத்துச் செல்லுகிறான்.

எந்த ராஜ்யம் எப்படிப் போனால் என்ன?

பெர்டினான்ட் மடியவில்லை. நீந்திக் கரையேறி ஏரியலின் மோகனப் பாட்டை பின்தொடர்ந்து பிராஸ்பிரோ மகளைக் கண்டுவிடுகிறான். கண்ட வுடன் காதல். காட்டுக்கொடி போலும், வன தேவதை போலும் கண்முன் நின்ற மிராண்டா வுக்காக எந்த ராஜ்யத்தை வேண்டுமானாலும் தியாகயம் செய்யவும் தயாராகிவிட்டான். தகப்பனைத் தவிர மனுஷவர்க்கத்தையே பார்க்காமல் வளர்ந்த மிராண்டாவுக்கு அவன் இந்த உலகத் தவன் அல்லவென்றே படுகிறது. அப்படி இரு வரும் காதல் பித்தேறி விடுகிறார்கள்.

பிராஸ்பிரோவுக்கு இவர்கள் மன நிலை புரிந்துவிடுகிறது. இவர்களது பாசம் நிலைத்தது தானா என்று பரிட்சிக்க பெர்டினான்ட்டை விறகு வெட்டச் சொல்லி பணியாள் நிலைக்கு ஆக்கிவிடு கிறான். மிராண்டா நடமாடும் உலகில் விறகு வெட்டியாக காலங்கழித்தாலும் போதும், அதுவே பரம பதம் என்று கருதுகிறான். பெர்டி னான்ட் – மிராண்டா இருவருடைய காதல் வழி அவ்வளவு கரடுமுரடாக இல்லை. பிராஸ்பிரோ மன்னித்து, மணவீனைக்கு ஆசியளித்து காத்தி ருக்க கட்டளையிடுகிறான். தன்னுடைய திறமை யால் இந்திர ஜாலவித்தை நடத்துகிறான். மாத் திரைக்கோல் சுழற்றியதும், கவியின் உள்ளத்தில் குதித்தெழும் கற்பனைகள்போல வனதேவதை கள் அவர்கள் முன் தோன்றி பாட்டுப்பாடி மகிழ்விக்கிறார்கள்.

காதல் வளம்பாடி நடனம் புரிய நதித் தேவதைகளும் அறுவடைக்காரர்களும் வந்து ஆடுகிறார்கள்.

இந்த நிலையில் குடிகார ராஜாவின் சதிக் கும்பல் தனது இருப்பிடத்தை நோக்கி தேடி வருவது நினைவுக்கு வருகிறது. சட்டென்று வனதேவதைகளை அனுப்பிவிட்டு புறப்பட்டு விடுகிறான்.

பிராஸ்பெரோ மாயவலை

மகனைத் தேடிவரும் மன்னன் கோஷ்டி, நோய் எதிர்பார்க்கும் உள்ளுறை சமயத்தை போன்ற கொலைக் கும்பலுடன் தீவுக்குள் வெகு தூரம் வந்து விட்டது. கிழவன் கொன்ஸாலோ, இனி ஒரு அடி எடுத்துக்கூட வைப்பதற்குச் சக்தியில்லை என்று உட்கார்ந்துவிடுகிறான். மன்ன னுக்கும் தளர்வு தட்டுகிறது. யாவருக்கும் பசி காதை அடைக்கிறது.

இந்தச் சமயத்திலே ஏரியல் அசரீரியாக வந்து மறுபடியும் தனது மோகனப் பாட்டைப் பாடுகிறான்.

யாவரும் பிரமித்து நிற்கையிலே, தேவதை கள் கோஷ்டி ஒன்று அவர்கள் முன்னிலையிலே விருந்து படைக்கிறது. பசி கழுத்தைப் பிடித்து நெட்ட மன்னனும், மற்றோரும் நெருங்குகிறார் கள்; ஆனால் ஏரியல் பயங்கரமானதொரு கூனி யாகத் தோன்றி

தோன்றி உணவுவகைகளை சிறகில் தட்டிக்கொண்டு மறைகிறான். ஆசைக்கும் நுகர்ச்சிக்கும் இடையில் எதிர்பாராத இந்த மதிள் எழுந்துவிட்டது.

ஆயிரம் பேய்களானாலும் சரி; ஒவ்வொன் றாய் வந்து பார்க்கட்டும்’ என்று கர்ஜிக்கிறான் ஸெபாஸ்டியன்.

சோந்த கோஷ்டி பட்டினியுடன் தோழமை கொள்ளுகிறது.

ஐயோ, வேட்டை நாய்

ஸ்டிபானோ புரட்சிக் கும்பல், பாட்டில் சொக்கி, கல்லிலுமுள்ளிலும் இழுபட்டு கடைசி யில், சகதிக்குட்டை ஒன்றில் விழுந்து, புட்டி யையும் பறிகொடுத்து பிராஸ்பிரோ குகையை அணுகிறது. ‘வந்துவிட்டோம்; வீரா உன் வினைத் திறமையை காண்பி’ என்று காலிபன் அவசரப்படுகிறான்.

பட்டங்கட்டினாலும் பழைய வாசனை போக வில்லை.கொடியில் உலர்த்தப்பட்டிருந்த பட்டும். பட்டாடையும் கண்டு அதைத் தட்டிக்கொண்டு போவதுதான், தன்ராஜ காரியத்தில் முதல் கடமை என்

என்று நினைக்கிறான் ஸ்டிபானோ. ராஜாவே இப்படி என்றால் மந்திரியைக் கேட்க வேண்டுமா. ‘எனக்கிது, இது’ என்று கொண்டே துணி மணிகளை மூட்டை கட்டி காலிபன் முதுகில் ஏற்றுகிறார்கள். கதிமோட்சம் நாடிய காலிபன் பொதி கழுதையானான். வீரமெல் லாம் இவ்விருவர் சற்றுமுன் எழுப்பிய நம்பிக்கை போல குட்டையில் விழுந்து சகதியைப் பூசிக் கொண்டன. காலிபன் அங்கலாய்க்கிறான், அவசரப்படுகிறான். முதலில் திருடுவோம்; அப் புறம் புரட்சி என்பது ஸ்டிபானா பத்வா-இந்தச் சமயத்தில் வேட்டைநாய்களின் ஹுங்காரம் கேட்கிறது. பிராஸ்பிரோவும் ஏரியலும் பயங் கரமான நாய்களை ஏவி முயல் வேட்டையாடி வருகிறார்கள்; முயல்வேட்டை மனுஷ வேட்டையாகிறது.

புரட்சிக்கும்பல் பிளிறிக்கொண்டு ஓட்ட மெடுக்கிறது.

‘இவர்களை விரட்டிக்கொண்டு போ; உடம் பெல்லாம் குத்தும் குடைச்சலும் உண்டாக்க குட்டிச் சாத்தான்களை ஏவி விடு’ என் உத்தரவு போட்டுவிட்டு வேறு திசை செல்லு கிறான் பிராஸ்பிரோ.

மந்திரவட்டம்

மன்னன் கோஷ்டி, பிராஸ்பிரோ மந்திரம் ஜபித்து மாயவட்டம் கீறிய பிரதேசத்துக்கும் பிரவேசித்து திகைப்புண்டு மிதித்தவர்கள் போல அடியெடுத்து வைககமுடியாமல் சிக்கிக் கொள்ளுகிறார்கள்.

மந்திரிச்சட்டையணிந்து மாத்திரைக்கோல் ஏந்தி, பிராஸ்பிரோ அவர்கள் முன் தோன்றுகிறான்.

‘எனது மந்திர சக்தியின் வலிமையால், சூரியனை இருட்டாக்கி, புயலை எழுப்பி உங்கள் எல்லோரையும் என் கைக்குள் சிக்க வைத்தேன். நான் மந்திரவாதி, தீவின் அதிபதி, மிலான் ஆட்சி இழந்த பிராஸ்பிரோ. இப்பொழுது சிறுமை மனிதர்கள் செயல்கள்மீதுள்ள என் சினம் அடங்கிவிட்டது. அரசே வருக. குண சம்பன்னனான கொன் ஸாலோவே வருக. சகோதரத் துரோகிகளே, உங்கள் வரவும் நல் வரவா கட்டும். நீங்கள் என் அதிதிகள்’ என்கிறான் பிராஸ்பிரோ.

புத்திரசோகம் தீரவில்லை, அலான்ஸோவுக்கு. ‘நானும் உம்மைப்போல ஒரு மகனை இழந்துவிட்டேன், இதோ பாருங்கள்’ என்று மாத்திரைக்கோலைத் தூக்குகிறான் பிராஸ்பிரோ.

மிராண்டாவும் பெர்டினாண்டும் குகையில் சதுரங்கம் ஆடும் காட்சி தெரிகிறது.

‘உமது மகன் என் மகளை கவர்ந்துவிட்டான்’ என்கிறான் பிராஸ்பிரோ.

ஏரியல் விரட்ட, திருடிய துணிமூட்டை களுடன் ஸ்டிபானோ -காலிபன் கோஷ்டி வருகிறது. வேறு திசையிலிருந்து மாலுமிகளும் மற்றுமுள்ளோரும் வருகிறார்கள்.

‘நேப்பிள்ஸில் கலியாணம் முடிந்தபின் மிலானில் படித்துப் பொழுதுபோக்க இடம் கிடைத்தால் போதும்’. இதுதான் பிராஸ்பெரோ ஆசை.

‘எங்களை க்ஷேமமாக நேப்பில்ஸ் சேர்த்த பின் நீ உன் இஷ்டம்போல காற்றில் ஓடியாடித் திரிந்து மகிழ்’ என்று ஏரியலுக்கு விடை கொடுக்கிறான். யக்ஷணிக் குழந்தையானாலும் பிராஸ்பிரோவுக்கு பிரிய மனமில்லை. அதன் மேல் அவ்வளவு ஆசை படர்ந்து விட்டது. இருந் தாலும் அதன் ஆசை இருக்கிறதே.

தான் வழிபட்ட தெய்வம்; போதை மயக்கம் தெளியாத பரிசாரகன் என்பதில் காலிபனுக்கு மகா வெட்கம்.

காலிபன், காதிலே வன வன தேவதைகளின் இசை நிரம்ப, எழுந்திருக்க மனமில்லாதவனாக, கண்மூடிக் கிடந்து, ஏக சக்கராதிபதியாக ஆளுகிறான்.

தீவும் தனிமை கண்டது.

– உலக அரங்கு (நாடகக் கதைகள்), ஷேக்ஸ்பியர், தமிழில் தருபவர்: புதுமைப்பித்தன், முதற் பதிப்பு: மார்ச் 1947, ஸ்டார் பிரசுரம், திருச்சினாப்பள்ளி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *