கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 11, 2023
பார்வையிட்டோர்: 2,972 
 

அத்தியாயம் 13 – 14 | அத்தியாயம் 15 – 16 | அத்தியாயம் 17 – 18

அத்தியாயம் – 15

மாதய்யாவின் உடம்பில் உயிர் ஒட்டிக் கொண்டிருப்பதற்கு, மூச்சுக் காற்றில் ஏறி இறங்கும் அவரின் மார்புக்கூடு ஒன்றே சாட்சியாக இருந்தது.

நாளின் பாதி நேரம், சில நாட்களில் முக்கால்வாசி நேரம் மாதய்யா வீட்டிலேயேதான் இருந்தார், டாக்டர் அருணகிரி.

தினம் தினம் விடியற் காலையில் அந்தனூர் வந்துவிடுவார்.

பகல் பத்து மணி அளவில் ஜீவபுரம் புறப்படுவார்.

கலியன் அவரை வண்டியில் அழைத்துச் செல்வான்.

க்னீனிக்கில் அவருடைய வாடிக்கை நோயாளிகளைக் கவனிப்பார்.

மதிய ஆகாரம் முடித்துக்கொண்டு ஒரு மணிக்கு வந்தாரானால் ஆறு மணி வரை மாதய்யா வீட்டில்.

அடுத்த ரவுண்டு ஜீவபுரம் செல்வார்.

பேஷண்டுகளுக்குக், கன்ஸல்டேஷன், சிகிச்சைகள் எல்லாம் முடிந்து இரவு ஒரு விசிட் அந்தனூர் வருவார்.

அபூர்வமானத் தோழனல்லவா மாதய்யா…

நாலாவது ஃபாரம் படிக்கும்போதுத் தமிழ்ப் பண்டிதர் தருமை சிவா அவர்கள், ‘கண்ணன் என் தோழன்’ என்ற பாரதியின் கவிதையை நடத்தினார்.

‘புன்னாக வராளியில், திஸ்ர ஜாதி ஏக தாளம் போட்டபடி இசையுடன் பாட்டுப் பாடி அசத்தினார்.

மாதவனையும் அருணகிரியையும் எழுப்பி நிற்க வைத்தார்.

தோழமைக்கு உதாரணமாகத் தங்கள் இருவரையும் பெருமையுடன் வகுப்பின் சொன்ன அந்த நிகழ்வுக் கண் முன் நின்றது டாக்டருக்கு.

கோபத்தி லேயொரு சொல்லிற் சிரித்துக்
குலுங்கிடச் செய்திடு வான்; – மனஸ்
தாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சி
தளிர்த்திடச் செய்திடுவான்; – பெரும்
ஆபத்தி னில்வந்து பக்கத்தி லேநின்று
அதனை விலக்கிடு வான்; – சுடர்த்
தீபத்தி லேவிடும் பூச்சிகள் போல்வருந்
தீமைகள் கொன்றிடு வான். … 7

உண்மை தவறி நடப்பவர் தம்மை
உதைத்து நசுக்கிடுவான்; – அருள்
வண்மையி னாலவன் மாத்திரம் பொய்கள்
மலைமலை யாவுரைப் பான்; – நல்ல
பெண்மைக் குணமுடை யான்; – சில நேரத்தில்
பித்தர் குணமுடை யான்; – மிகத்
தண்மைக் குணமுடை யான்; சில நேரம்
தழலின் குணமுடை யான். … 8

தன் உயிர்த் தோழனும், பரோபகாரியுமான மாதய்யாவுக்குச் செய்யும் சேவையை, உள்ளன்போடும் மனப்பூர்வமாகவும் செய்தார் டாக்டர் அருணகிரி.

“ஒத்த உள்ளம் கொண்ட இரண்டு உடல்களாய் இருப்பதே நட்பு.’ என்று சொல்வார்கள் அல்லவா…!”

அதற்கு இவர்கள் நட்பே சாட்சி.

“உதவி வரைத்தன்று…”

என்கிற உலகத் திருமறைக்குச் சாட்சியாக இருந்தது, டாக்டர் அருணகிரி மாதய்யாவுக்குச் செய்துக் கொண்டிருக்கும் சிகிச்சையும், பணிவடைகளும்.

‘எப்படியாவது நண்பனின் உயிரைக் காப்பாற்றிவிட வேண்டும்’ என்கிற டாக்டரின் செயல்பாட்டில் வைராக்யம் தெரிந்தது.

மருத்துவ விஞ்ஞானம் சொல்லும் அனைத்து வழி முறைகளையும் துருவி ஆய்கிறார்.

முழு முயற்சி செய்கிறார்.

நண்பர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் எல்லோரும் நிச்சயமாக நண்பர்கள் அல்ல.

99 சதவிகிதம், சந்தர்ப்பவாதிகளே…!

கள்ளக் கரன்ஸிகளே.!

பட்டு அனுபவித்தவர்களுக்கு இதுத் தெரியும்.

கோடிக்கணக்காகப் பெருகிக் கிடக்கும் மக்கள் கூட்டத்தில் கலந்துள்ள ஒரு சில விஞ்ஞானிகளையும், அறிஞர்களையும், ஞானியர்களையும் பிரித்தெடுப்பதற்காகத் தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை பல்லாயிரம் கோடிக் கணக்கில் செலவு செய்கிறதே அரசாங்கம்…

அது போலத்தான்;

மகா கவியின், ‘கண்ணன் என் தோழன்’ போல;

சேவை மனப்பான்னைக் கொண்ட உண்மையான உயிர் நண்பன் அருணகிரிபோல;

கள்ளக் கரன்ஸிக் குவியலில் நல்லக் கரன்ஸியும் வரும் என்கிற நம்பிக்கையில்தானேத் தொடர்ந்து நண்பர்களைச் சேகரித்து வருகிறோம்.

ரேழியிலும், தாழ்வாரத்திலும் நேர்த்தியாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகள்;

அந்த மூட்டைகளின் மேல் அந்துப் பூச்சி வராமல் இருக்கப் பரத்தப் பட்ட காஞ்சான் துளசி, நொச்சி போன்ற இலைச் சருகுகள்;

சட்டமிட்டு மாட்டப்பட்ட ஸ்வாமிப் படங்களுக்கெல்லாம் கோர்த்துப் போட்டப் பவழமல்லி;

நெருக்கத் தொடுத்து, ஹாரமாய்த் தொங்கவிட்டச் சந்தன முல்லை, கொடி மல்லிகை; ஜாதி மல்லி;

‘படம் தொங்குகிற’ ஆணிக்கும் வளையத்துக்கும் இடையேச் சிக்க வைத்த மனோரஞ்சிதம், செம்பருத்தி, நாகலிங்கப் பூ;

நாள் தவறாமல் ராமர் பட்டாபிஷேகப் படத்திற்கு போடப்படும் துளசிமாலை;

ஸ்வாமி மாடத்தில் ஏற்றி வைக்கும் ஊதுபத்தி;

வெள்ளி, செவ்வாய் நாளில் புகையும் சாம்பிராணி;

வழக்கமாய், மேற்சொன்ன எல்லாம் கலந்து தெய்வீக மணம் பரவிப் பரவசப்படுத்தும் அந்தப் பட்டகசாலை;

மாதய்யா படுத்த நாள்முதல், டெட்டாலின் வாடையும், பினாயிலின் வேகமும் பரவத் தொடங்கியது.

இப்போது கூடம் முழுவதும் அதுமட்டுமே ஆக்ரமித்திருந்தன.

மாதய்யாவின் உடம்பு மருந்துகளை ஏற்றுக் கொள்ளவில்லை.

செலைன் மட்டும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது.

வெஜிடபிள் போல நினைவற்றுக் கிடக்கும் மாதய்யாவின் நிலையைத் தனியாளாய் அனுமானித்து எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

குழப்பமாய் இருந்தது அருணகிரிக்கு.

திருச்சியிலிருந்து டாக்டர் ‘கே சி கண்ணனை’ வரவழைத்தார்.

இருவரும் நீண்ட நேரம் கலந்து ஆலோசித்தார்கள்..

“மகன் துரைராமனை வரச் சொல்லிடுங்கோ…!” தீர்மானமாய்ச் சொல்லி விட்டார் டாக்டர்.

‘ஃபாதர் சீரியஸ்’

தந்தி கொடுத்தார்கள்.

தந்தி கிடைத்ததும் புறப்பட்டு வந்து சேர்ந்தான் துரைராமன்.

வந்ததும் பரபரப்போடு வந்து அப்பாவைப் பார்க்கவில்லை.

காமரா உள்ளுக்குச் சென்றான்.

உடை மாற்றிக் கொண்டான்.

டாக்டர் புறப்படத் தயாரானார்.

அதை கவனித்த மோகனா காமராவுள் அருகே நின்று குரல் கொடுத்தாள்.

“ஏந்நா… அவர் போயிடுவார்… சீக்கிரம் வாங்கோ…” அவசரப்படுத்தினாள்.

மோகனா சொன்னது பட்டகசாலையில் மாதய்யாவின் அருகில் ஸ்டூலில் அமர்ந்திருந்த அருணகிரியின் காதில் விழுந்தது.

கவலையோடு கணவர் அருகில் நின்றுகொண்டிருந்த குந்தலாம்பாள் காதிலும் தெளிவாக விழுந்தது.

‘அவர் போயிடுவார்…!’ என்று சொன்னது டாக்டர் புறப்படுவதைத்தான் என்றாலும்,

மோகனாவின் வார்த்தை அச்சானியமாகப் பட்டது குந்தலாம்பாளுக்கு.

எத்தனையோ ஜீரணித்தவள். இதையும் ஜீரணித்துக்கொண்டாள்…

அவள் அறியாமலே முட்டிக்கொண்டு வந்த கண்ணீரைப் புடவைத் தலைப்பால் ஒத்தி உறிஞ்சினாள்.

இயல்பாக இருப்பதாகக் காட்டிக்கொண்டாள்.

சலவைக்குச் சென்று வந்த எட்டு முழம் வண்ணான் மடியைக் எடுத்துக் கட்டிக்கொண்டான் துரை.

தோளில் அங்கவஸ்திரத்தை யோக வேஷ்டியாய்ப் போர்த்திக் கொண்டான்.

நிதானமாக காமரா உள்ளிலிருந்து வெளியே வந்தான்.

தலை தீபாவளியன்று எண்ணை ஸ்நாநம் ஆனபின், மாப்பிள்ளையாகப்பட்டவர், மாமனார் வீட்டுக் காமரா உள்ளுக்குப் போய், புது வஸ்திரம் அணிந்துகொண்டு பளிச் சென்று பட்டகசாலைக்கு வருவாரே, அதைப்போல இருந்தது அவன் வருகை.

பெற்றவரின் நிலை பற்றி கிஞ்சித்தும் கவலை இல்லை அவன் முகத்தில்.

மாதய்யா படுத்துள்ள இடம், காமராவுள் முகப்பிலிருந்து பத்து அடிகள்தான்.

அதைக் கடப்பதற்குள் ஒரு தேர்ந்த நடிகனைப் போல, முகத்தில் சோகத்தைப் போர்த்திக்கொண்டான்.

அமெரிக்க உளவியலாளர் அப்ரஹாம் மாஸ்லோவின் தேவைப்படிக் கோட்பாட்டின் (ULTIMATE) மிக உயர்ந்த படியான Self Actualization என்ற நிலையில் உள்ளொளிப் பெறுகிப் பரிபக்குவமடைந்தவர் மாதய்யா.

அடிக்கடி ஆன்மீக மார்க்கமாய் அவர் உச்சரிக்கும் சில ஸ்லோகங்களை நினைத்துப் பார்த்தாள் குந்தலாம்பாள்.

‘இன்மையிலிருந்து உண்மைக்கு,

இருளிலிருந்து ஒளிக்கு,

மரணத்திலிருந்து அமுதத்திற்கு எம்மை

இட்டுச் செல்க…!’

என்ற உட்பொருளுடைய

‘அஸதோ மா ஸத் கமய

தமஸோ மா ஜ்யோதிர் கமய

ம்ருத்யோர்மா அம்ருதம் கமய

ஓம் ஸாந்தி: ! ஸாந்தி: !! ஸாந்தி: !!! ’

என்ற உபநிஷத் வாக்யமும்

‘ஊனாகி உயிராகி உண்மையுமாய், இன்மையுமாய்…!’ என்றத் திருவாசக தெளிவும்,

‘காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்…!’

என்றத் திருவாய்மொழித் தத்துவமும்

அவர் வாய் எப்போதும் முணுமுணுக்கும் வாசகங்கள்.

அவரின் உச்சரிப்பில் ஆன்மீகம் அலை வீசும். தைத்ரீயம் தவழும்.

மாதய்யாச் சொல்லும் ஸ்லோகங்களைக் குந்தலாம்பாள் இப்போது முணுமுணுத்துச் சொன்னாள்.

அவள் சொன்னது ‘பள்ளி மாணவன் தேர்வுக்குச் செய்யுள் ஒப்பித்துப் பார்ப்பதைப் போல இருந்தது.

துரையைக் கூர்ந்துக் கவனித்தாள் குந்தலாம்பாள்.

தேர்தல் நெருங்கும் சமயத்தில், அடிமட்டத் தொண்டர் எவரேனும் சிகிச்சையில் இருக்கும்போது அரசியல் ஸ்டண்ட் அடிக்க கட்சித் தலைவர் வந்துப் பார்ப்பதைப் போல இருந்தது துரை வந்த விதம்.

“எப்படி இருக்கர்…?”

டாக்டரிடம் கேட்டான் துரை.

கேள்வியில் அப்பா என்ற பாசம் இல்லை.

இருந்திருந்தால், வீட்டுக்குள் நுழைந்தும் நுழையாமல் ஓடிவந்து, ‘அப்பாவுக்கு எப்படி இருக்கு…?’ என்று துடித்துப் போயிருக்கமாட்டானா…?

யாரோ ஒரு மூன்றாம் மனிதரின் உடல் நலம் பற்றிச் சம்பிரதாயத்துக்கு விசாரிப்பார்கள் அல்லவா…! அது போல இயந்திரத் தன்மையே இருந்தது அவன் விசாரிப்பில்.

டாக்டர் அவன் கேள்விக்கு பதில் எதுவும் சொல்லவில்லை.

“…………………………………”

ஒரு முறை துரையைத் தீர்க்கமாய்ப் பார்த்தார்.

தலைக் குனிந்து கொண்டார்.

“ப்ரஸண்ட் ஸ்டேட்டஸ் என்ன டாக்டர்…?

“…………………………………”

அமைதியாக இருந்தார்.

“தேவலையாயிடுமா டாக்டர்…?”

“…………………………………”

மௌனம் காத்தார்.

‘வெளியே ஒழுங்கும் உள்ளே ஓக்காளமுமாக’ இருந்தது துரையின் நடவடிக்கைகள்.

விளையாட்டுப் போல் மாதய்யா ஜடமாய்ப் படுத்து ஆறு நாட்கள் ஓடிவிட்டன.

காலைநேர விசிட் முடிந்து, வழக்கம்போல டாக்டர் அருணகிரி ஜீவபுரம் புறப்பட்டார்.

வழியனுப்ப வாசலுக்கு வந்தாள் குந்தலாம்பாள்.

வைக்கோல் பரப்பி, அதன் மேல் சுருக்கமில்லாமல் ஜமக்காளம் விரித்துச் சிரத்தையாக, கவனமாகத் தயார் செய்தக் கூண்டு வண்டியோடு தயாராய் நின்றிருந்தான் கலியன்.

தெற்குப் பார்த்த வீடு மாதய்யாவுடையது.

வீட்டுக்கு முன் கிழக்கு மேற்காக இருபது அடி நீளத்துக்கு, எதிரும்புதிருமாய், இருபுறமும் பாம்பு படமெடுத்து நிற்கிறார்போல இருக்கும் சாரமணைகளோடுக் கூடிய திண்ணை.

உயிர் சிநேகிதனுக்கு அருகில் பாசத்துடனும் நேசத்துடனும் ஒட்டிக்கொள்ளும் பள்ளி மாணவன் போல, சாரமணைத் திண்ணைக்கு அருகில் ஆர்வத்துடன் வருவார் மாதய்யா.

போர்த்தியிருக்கும் அங்க வஸ்த்திரத்தை வலது கை அனிச்சையாக உருவி எடுக்கும்;

நண்பனின் முதுகில் ‘டப் டப் டப்’ என ஷொட்டு கொடுப்பதைப்போல,

‘ ஃபட்… ஃபடீர்… ஃபட்…. ’ என்று திண்ணையில் புழுதி தட்டுவார்;

இடது கையில் இருக்கும் வெற்றிலைச் செல்லத்தை கால் தட்டாத தூரத்தில் வைப்பார்;

சாரமனையின் மேல் அங்கவஸ்திரத்தைப் போடுவார்;

திண்ணையில் உட்கார்வார்.

கால்களை நீட்டி மடக்கியவாறு திண்ணை விளிம்பில் உள்ளங்காலைப் பதித்துக்காள்வார்.

இரண்டு உள்ளங்கைகளையும் ஊன்றி அழுத்தம் கொடுத்துச் சாரமணையில் சாய்வார்.

கிழக்குப் பக்கச் சாரமனைதான் அவருக்கு ஆகிவந்த இடம்.

அங்கே உட்கார்ந்துப் பார்த்தால் மேலக்கோடிப் பெருமாள் கோவில் வரை நன்றாகத் தெரியும்.

மேலண்டை இரண்டு மனைக்கட்டுகள் மாதய்யாவுடையது.

அதற்கு அடுத்த வீடு முத்துசுப்பராமனுடையது.

கீழண்டை வீடு பில்லட்லா சந்திர மொலியின் பூர்வீகச் சொத்து.

பில்லட்லா, நன்றாக முன்னே இழுத்து வீட்டைக் கட்டிவிட்டதால், எதிர்ச் சாரமனையில் உட்கார்ந்தால் அந்த வீட்டுத் தாய்ச் சுவர்தான் தெரியும். தெருவே கண்ணுக்குத் தெரியாது.

மாதய்யாவுக்கோ வெகு ஜனத் தொடர்பு அதிகம்…

ஆனால் அவர் மகன் துரைராமனோ… ஒரு வட்டத்துக்குள் வளைய வருபவன்.

இவர்கள் இருவரின் போக்குகளை ஒப்பிட்டுப் பார்த்தால்

Greek hero Odysseus போல மாதய்யா Extrovert ஆகவும்; Odysseus ன் மகன் Telemachus போல மாதய்யாவின் மகன் துரை Introvert ஆகவும் இருப்பதை உணர முடியும்.

மாதய்யாச் சாய்ந்துச் சாய்ந்து;

முதுகு உராய்ந்து உராய்ந்து;

களிம்பு ஏறி, வழவழப்பாகிப்போன ஒரு கெட்டிக் கருமை சாரமனையில் படிந்திருக்கும்.

ஊர்ப் பஞ்சாயத்து முழுதும் அந்தச் சாரமனையில் உட்கார்ந்தே தீர்த்து வைத்துவிடுவார்.

காப்புக் கட்டிக்கொண்டு, திருவிழாவின் முழுப் பொறுப்பும் ஏற்றுக்கொண்டதால், ஓய்வு நேரம் என்பதே அவருக்கு மிக மிகக் குறைவாகத்தான் கிடைத்தது.

கிடைத்தச் சில மணி நேரத்தைக் கூட… இந்தச் சாரமனையில் சாய்ந்தபடித்தான் கழித்தார்.

காப்புக் கட்டிய நாள் முதல், விடையாற்றி விழா முடிய…

காலையில் எல்லையம்மன் மண்டகப்படி அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்வது;

தெருக்களின் முக்கியஸ்தர்களை வரவழைப்பது;

சாங்கிய ஏற்பாடுகளைத் துரிதப்படுத்துவது;

அன்றைய புறப்பாட்டுக்கு சுற்றுக் கோவில்களில் கேட்டுத் தன் பொறுப்பில் வாகனத்தைக் கொண்டுவருவது;

வாங்கிய இடத்தில் திரும்பப் தலைப் பொறுப்பாய்க் கொண்டு போய் ஒப்படைப்பது;

ஆர்டர் செய்த புஷ்பம், மாலை வகையறாக்கள் வரத் தாமதமானால் உடனே ஆள் அனுப்பி விரைந்து வர ஏற்பாடு செய்வது;

‘எப்போது வரும்…?’

எதிர்பார்த்துப் பரபரப்பது;

‘சீக்கிரம் வரவேண்டுமே…!’

ஓயாமல் கவலைப்படுவது;

இப்படிப் பம்பரமாகச் சுழன்றுகொண்டே இருந்தார் மாதய்யா.

இந்தச் சாரமனையில் ஒரு சில மணி நேரங்கள், சாய்ந்துக் கண்மூடி இருப்பதைப் பார்த்தால், அன்றையக் காரியங்களைச் சிறப்பாக முடித்துத் தந்த எல்லையம்மனுக்கு நன்றி கூறுவது போலவே இருக்கும்.

“அது வந்துதா…?”

“இது போச்சா…?”

“அப்படிச் செய்யலாமோ…?”

“இப்படிச் செய்யவேண்டாமே…?”

“அவர் வருவரா? வரமாட்டாரா…?”

“இவரை உடனே வரச் சொல்லுன்னேன்…!”

“ஒத்துமையா இருக்கணுமாக்கும். சண்டை சச்சரவு கூடாது ஓய்..”

“நான் சொன்னதாச் சொல்லும், போய்…!”

“அவரை நேரே நீயே போய் அழைச்சிண்டு வரதுதான் முறையாக்கும்….!”

“நீங்களே இப்படி லேட்டா வரலாமான்னேன்…?..”

“வாங்கோ…வாங்கோ… ரொம்ப சந்தோஷம்…”

“பணத்தை எண்ணிப் பாத்துனுட்டேளா…?”

“………………………………………”

ஏக காலத்தில் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு;

தேவையான இடங்களில் பேசிக்கொண்டு;

எல்லாவற்றிலும் கவனம் வைத்துக்கொண்டு;

எப்போதும் கண்கொத்திப் பாம்பாக விழித்துக்கொண்டு;

அஷ்டாவதானியாய்…

சில நேரங்களில் சதாவதானியாய்ச் செயல்படுவார்.

எட்டுக் கண் விட்டெறிவார்…

அப்படிப்பட்ட மாதய்யாவின் சர்வ அங்கங்களுக்கும் இந்தச் சாரமனைதான் சற்றே ஓய்வு கொடுக்கும்.

)______________( ….

இரண்டு பக்கமும் இறக்கை வீசிப் பறப்பதைப் போல இருக்கும் அந்தச் சாரமனைத் திண்ணை.

‘மாதய்யாவை பூரணமாய் குணப்படுத்தி என் மேல் மீண்டும் உட்கார வை…!’

இரு கைகளையும் விரித்தபடி சாரமணை இறைவனைப் பிரார்த்திப்பதைப் போலத் தோன்றியது குந்தலாம்பாளுக்கு.

டாக்டர் புறப்பட்டுச் சென்றபின், வாசல் திண்ணையிலிருந்து உள்ளே திரும்பினாள் குந்தலாம்பாள்.

வாசல் ரேழியில் கால் வைத்தாள்.

மிகவும் பிரசித்தமான ரேழி அது.

அம்பாள் குதிரை வாகனமாகட்டும்…

பெருமாள் பல்லக்காகட்டும்…

சிவன் கோவில் தேராகட்டும்,

அந்தனூர் ஸ்வாமிப் புறப்பாடு என்றால் அது விடிய விடிய நடக்கும்.

‘திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி வெள்ளி ரதம் புஷ்ய மண்டபத்திலிருந்து இரவு பனினோரு மணிக்குப் புறப்படும்;

மகாதானத் தெருவில் ஆங்காங்கே மணிக்கணக்கில் தவில், நாயனம், க்ளாரினெட் என பிரபல வித்வான்களின் கச்சேரிகள் அமர்க்களப்படும்;

மறு நாள் காலை 7 மணிக்கு கோவிலுக்குள்ளே போகுமல்லவா…!’

அது போலத்தான் தடபுடலாக இருக்கும் அந்தனூர் ஸ்வாமிப் புறப்பாடும்.

இரவுப் பத்து மணிக்குமேல்தான் புறப்பாடுத் தொடங்கும்.

ஒவ்வொரு இடத்திலும் மணிக்கணக்கில் நிற்கும்.

வீதி உலா முடிந்து மீண்டும் கோவிலுக்குப் போகும்போது பொலபொலவென விடிந்துவிடும்.

இந்த நாட்களில் அந்த ரேழி பிஸியாக இருக்கும்.

வீதி உலாவோடு கூட்டமாய் வருவார்களல்லவா ஜனங்கள்;

ஏ. கே. சி கிளாரினெட்;

வலங்கைமான் சண்முகசுந்தரம், நீடாமங்கலம் மீனாஷிசுந்தரம் தவில்;

காருக்குறிச்சி அருணாச்சலம், திருவாடுதுறை ராஜரத்தினம், திருவிசநல்லூர் ஜெயராமன்… நாதஸ்வரம்…

இப்படிப்பட்டப் பெரியப் பெரிய மாமேதைகளின் கச்சேரிகள் களைகட்டும்.

இசை மேதைகளின் வாசிப்பைக் கேட்டு மனம் குளிர்வார்கள் ரசிகர்கள்.

ரசிகர்களுக்கு விநியோகிப்பதற்காக, ஏலக்காய், குங்குமப்பூ, பாதாம், பிஸ்தா, கல்கண்டு எல்லாம் தட்டிப் போட்டுக் காய்ச்சிய பசும்பால் தயாராக இருக்கும் இந்த ரேழியில்;

அதுவும் எப்படி? சூடு ஆறாமல் இருக்கக் குமுட்டி அடுப்பின் மேல் வைக்கப்பட்டிருக்கும்.

அந்தப் பாலை அருந்திக்கொண்டே, கச்சேரி கேட்கும்போது சொர்க்கத்தில் மிதப்பது போல உணர்வார்கள் ரசிகர்கள்.

விடிய விடிய எப்போது வந்து குடித்தாலும் பாலின் சூடும், தரமும் சிறிதும் குறையாமல் ஒரே மாதிரி இருக்குமாறு பராமரிப்பார் மாதய்யா.

அது மட்டுமில்லை. பச்சைக் கல்பூரம், விளாமிச்சி வேர் போட்டக் கமகமக்கும் குடிநீரும் பெரிய அடுக்கில் வைத்திருப்பார்.

இது மாதய்யாவின் அப்பா காலத்திலிருந்து வரும் பழக்கம்.

மாதய்யா வீட்டுத் தண்ணீரையும், பாலையும் குடிப்பதற்காகவே பலர் ஸ்வாமியோடு வருவார்கள்.

குந்தலாம்பாள் உள்ளே போக ரேழி கடந்தாள்.

பால் குமுட்டியும், விளாமிச்சை வேர் ஊறும் தண்ணீரும் மணக்கும் ரேழியில், இப்போது துடைத்துப் போட்ட ஈரத் துணிகளின் வேகம் வந்தது.

பினாயில் வாடையும் கலந்து வீசியது.

ரேழித் தாண்டிப் பட்டகசாலைக்கு வந்தாள்.

அந்தனூரில் திருவிழாக்களுக்குக் குறைவே கிடையாது.

வருஷத்துக்குப் பத்துநாள் ராம பஜனை மடத்தில் வசந்த உத்ஸவம் நடைபெறும்;

சீதா கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெறும்;

பத்து நாட்களும் பூப்பந்தல் போட்டு அசத்துவார்கள்;

மூன்று நாட்கள் ராதாகல்யாண வைபமும் பஜனை மடத்தில் விசேஷமாக இருக்கும்;

ராதாகல்யாணத்தன்று பூப்பந்தல் அமர்க்களப்படும்.

வரதராஜப் பெருமாள் கோவிலில் வசந்தோத்ஸவ வைபவம் மிகவும் பிரசித்தம்.

கூடாரவல்லிக்காக பூப்பந்தல் போடுவார்கள்.

அந்தனூரில் போடும் எல்லாப் பூப்பந்தலுக்கும் ஸ்ரீரங்கத்திலிருந்து மல்லிகை அரும்புச் சப்ளைச் செய்வது திருவடித் தெரு கலியமூர்த்திதான்.

கலியமூர்த்தி நாலாவது தலைமுறை புஷ்ப வியாபாரி.

புஷ்ப வியாபாரத்தில் நிபுணர்.

மற்ற சில வியாபாரிகளைப் போலக் காய் அரும்புகளைக் கலந்தோ, காம்புகளைக் கலந்துவிட்டோ, அதிகமாய்த் தண்ணீர்த் தெளித்தோ… அகடவிகடம் செய்து எடைக் கட்டி விற்கும் அற்பத்தனம் இவரிடம் கிடையாது.

ரங்கநாதர்கோவிலுக்கு நான்கு தலைமுறையாக புஷ்பசேவை செய்யும் குடும்பம் இவருடையது.

மார்லோ எழுதிய Doctor Faustus என்ற துன்பியல் நாடகத்தில் வரும் ஒரு காட்சி;

ஜனவரி மாதம் திராட்சைப் பழத்துக்கு Off Session என்றாலும், நிறைமாதக் கர்பிணியான வான்ஹோல்ட் அரசி கேட்டாள் என்பதற்காக, நன்கு கனிந்த சுவையுள்ள திராட்சைகளை டாக்டர் ஃபாஸ்டஸ் வரவழைத்துக் கொடுப்பார்.

At the court of the duke of Vanholt, Faustus asks the duchess, who is with child, if she has a desire for any special dainties. Although it is January, she desires to have a dish of ripe grapes.

நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் மல்லிகைக்கு ஆஃப் சீசன்.

ஆஃப் சீசனிலும் கலியமூர்த்தி கடையில் மல்லிகை மணக்கும்.

‘மொத வேலை முத்து வேலை’

இது மல்லிகைக் சாகுபடி செய்யும் விவசாயிகளின் தாரக மந்திரம்.

அப்படி ஒவ்வொரு நொடியையும் மதித்துப் போற்றுவதால்தான் அரும்புகளை அயல்நாடுகளுக்கும் அதன் தரம் மாறாமல் அனுப்ப முடிகிறது.

ஸ்ரீரங்கத்தில் வெடித்த மல்லி அரும்பை உள்ளூர்வாசிகள் பயன்படுத்தும் அதே தரத்தில் சிங்கப்பூரிலும் பயன்படுத்தும் அளவுக்குத் அவர்களின் தேர்ந்த தொழில் நுட்பம் வியக்கவைக்கும்.

மல்லிகைத் தோட்டத்திலிருந்தே நேரடியாக அரும்பு ஏற்றி அனுப்பவார் கலியமூர்த்தி.

அந்த அளவுக்குச் செல்வாக்கும் உண்டு, செயலும் உண்டு கலியமூர்த்திக்கு.

அக்ரகாரத்தெருவில் இருக்கும் பேதை, பெதும்மை, அறிவை, தெரிவை, மங்கை, மடந்தை, பேரிளம்பெண் என அனைத்து வயதினரும் மல்லி அரும்பின் வருகைக்காக குழுமிவிடுவார்கள்;

மூட்டை அவிழ்த்து தரையில் விரித்துப்போட்டத் துணியில் கொட்டிக் குவித்த அடுத்த கனம்

கூடி வட்டமாக அமர்வார்கள்;

குப்பென்று கிளம்பும் கதகதப்பும், வீசும் வாசனையும் முகத்தில் அடிக்கும்.

அதன் சுகத்தை அனுபவிப்பார்கள்.

அடுத்த இரண்டு மணி நேரம் பேச்சும், சிரிப்பும், நகைப்பும், பக்தியுமாகத் தொடுத்துத் தொடுத்துப் பந்து சுற்றுவார்கள்;

கட்டப்படும் பூப்பந்துக்களை அவ்வப்போது சந்நதிக்குக் கொண்டுபோய் போய்க்கொண்டே இருப்பார்கள்;

பந்தலில்தான் மல்லிகைப் பூக்க வேண்டும் என்று தொடுப்பவர்களும், பூப்பந்தல் போடுபவர்களும் வைராக்யத்தோடு செயல்படுவார்கள்.

கடைசீ ஈடு பூப்பந்துகள் போனதும், பெண்களும் ஒவ்வொருத்தராக விடைபெற்றுச் செல்வார்கள்.

சிறிது நேரம் குந்தலாம்பாள் முற்றத்தில் கால் தொங்கவிட்டுக்கொண்டு உட்கார்வாள்.

கண்ணை மூடிக்கொண்டு மல்லி அரும்புகள் விட்டுச் சென்ற நறுமணத்தை ஆழ்ந்து சுவாசிப்பாள்;

பூத்தொடுக்கும்போது, நைப்பாக இருக்கப் பெண்கள் தண்ணீர் தொட்டுத் தொட்டு நார் நனைப்பார்கள் அல்லவா;

அப்போதுச் சொட்டுச் சொட்டாய்ச் சிதறியத் தண்ணீர் ஆங்கங்கேத் திட்டுத் திட்டாய் நிற்கும்;

அந்தத் திட்டுகளில் பச்சைப் பச்சையாக மூக்குத்திகள் போல் மல்லிகைக் காம்புகள், அமுங்கிக் குளிக்கும் அழகை ரசிப்பாள்;

சொதசொதவென தண்ணீரோடு அந்த மல்லிகைக் காம்புகளின் குவியல்களை வாசனையோடு அள்ளி அப்புறப்படுத்துவாள் குந்தலாம்பாள்.

கால மாற்றம்.

காட்சிகள் மாற்றம்.

அதே பட்டகசாலையில் இப்போது ரப்பர் ஷீட்டோடு போகும் கழிவுகளைச் சுத்தம் செய்து, எடுத்து வெளியேற்றுகிறாள் குந்தலாம்பாள்.

“உடம்புக்கு என்ன பண்ணித்து…?”

“திடீர்னு என்ன சேஞ்சுது…? திடமாத்தேனே இருந்தேர்…?”

“இரும்பாட்டம் இருப்பரே… இப்படி ஆனாரே…!”

“இப்படித்தான் என் பெரிய மச்சினர் சினேகிதனுக்கு கோமா வந்து படுத்த படுக்கையாயிட்டார்…. மெட்ராஸ்ல எல்லா டாக்டரும் கைவிட்டுட்டா…”

“திருக்கடையூர்ல கால சம்ஹார மூர்த்திக்கு காசு முடிஞ்சி வையுங்கோ மாமி…”

“மாமி…! வைத்தீஸ்வரன் சந்நிதீல முடி கயறு வாங்கிண்டு வரச்சொல்லி மாமா கைல கட்டுங்கோ… ரெண்டு நாள்ல டிங்குன்னு எழுந்து உட்கார்ந்துடுவர்…”

மாதய்யா அருகேயே உட்கார்ந்து சேவை செய்துகொண்டிருந்த ‘எம்பிபிஎஸ்’ ஐந்தாண்டுகள் படித்த டாக்டர் அருணகிரிக்கு இவர்கள் பேச்செல்லாம் வேடிக்கையாய் இருக்கும்.

வேறு ஒருத்தர் வருவார்…

“இதுக்கெல்லாம் அலோபதி உதவாது… சித்தா ட்ரை பண்ணுங்கோ…”

ஆலோசனை சொல்வார்.

வெளியே போவார்.

“இது தேராத கேஸ்…” என்று ரகசியமாகக் குசுகுசுப்பார்.

“கோமாவுல படுத்தவங்க முடிவு எப்படீனு சொல்லமுடியாது. ஒரே நாள்ல தீந்தாலும் தீரும்… வருஷக் கணக்குல இழுத்தாலும் இழுக்கும்… பாவம் குந்தலாம்பாளுக்குத்தான் சிரமம்…”

சொல்லிவிட்டுப் போவாள் ஒருத்தி.

“டாக்டர் சார்…! நான் கேக்கறேனேன்னு தப்பா நினைக்காதேள். இவர் பிழைப்பார்னு நீங்க நம்பறேளா…?” கேட்டார் ஒரு அறிவு ஜீவி.

இப்படியாக மாதய்யாவின் வியாதிக் காண்டம் ஏழு நாட்களைக் கடந்துவிட்டன.

பாடசாலை வித்யார்த்தி சுப்ரமணியன் சாயரக்‌ஷை விளக்கு வைக்கும் நேரம் வருவான்;

மாதய்யாவின் தலைமாட்டில் அமர்ந்து ‘விஷ்ணு சகஸ்ரநாமத்தை அரைமணி நேரம் சொல்லுவான்;

அது ஒன்றுதான் ஆறுதலான விஷயமாய் இருந்தது குந்தலாம்பாளுக்கு.

“அம்மா…!”

“ம்…”

“எனக்கு…”

“உனக்கு…?”

“லீவு….இல்லம்மா…”

“ம்…”

“………………”

“ஊருக்குப் போணுமா தொரை…?”

“ம்…”

“நீ மட்டுமா…! இல்ல….?”

“மோகனா இங்க இருக்கட்டும்மா…!”

“சரி… போயிட்டு வா…!”

“நாளைக்குப் புறப்படலாம்னு…!”

“……………………..”

குந்தலாம்பாள் டாக்டரிடம் வந்தாள்.

“துரைக்கு லீவில்லையாம். நாளைக்கு ஊருக்குப் பேறேன்னான்… சரீன்னுட்டேன்…”

“இன்னிக்கு டாக்டர் கே சி கண்ணனை திருச்சீலேந்து வரச் சொல்லியிருக்கேன். ரெண்டு நாள்ல நினைவு திரும்புமோன்னு தோணறது… இருந்துட்டுப் போலாமே…!”

அபிப்ராயம் சொன்னார் டாக்டர் அருணகிரி.

முள்ளின் மீது கிடப்பது போல இருந்தான் துரைராமன்.

டாக்டர் கே சி கண்ணனும், டாக்டர் அருணகிரியுமாக ஆலோசனை செய்தார்கள்.

ஊசிகளும் மருந்துகளுமாக நரம்பின் மூலம் செலுத்திக்கொண்டே இருந்தார்கள்.

இப்போ கொடுத்த ட்ரீட்மெண்ட்டுக்கு சுய நினைவு திரும்பிடணும். அது இல்லேன்னா இல்லேதான்…”

விரல் விரிய கையை அகல விரித்துக் மேலே காட்டியவாறு உறுதியாகச் சொல்லிவிட்டார் அருணகிரி.

இரண்டு டாக்டர்களும் சேர்ந்துக் கொடுத்தச் சிகிச்சையின் சக்தியோ;

வெளிநாட்டிலிருந்து வருவித்துக் கொடுத்த சக்தி வாய்ந்த மருந்து மாத்திரைகளின் பலனோ;

கிரக நிலைகளின் சாதகங்களோ;

குந்தலாம்பாளின் மாங்கல்ய தீர்க்கமோ;

வீட்டில் அவ்வப்போது செய்யும் விசேஷ பூஜைகளின் சக்தியோ…

அணையப் போகும் முன் தீபம் பிரகாசம் கூட்டுவது போலவோ….;

மாதய்யா கண்விழித்துப் பார்த்தார்.

அருணகிரியைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார்.

குந்தலாம்பாளை ஜாடைக் காட்டி அழைத்தார்.

துரைராமனை அருகே வரச்சொன்னார்.

சூழ்ந்திருந்த அனைவரையும் ஒரு முறை தீர்க்கமாகப் பார்த்தார்.

துரைராமனிடம் நேருக்கு நேர்ப் பார்த்துப் பேசுவதை மாதய்யா அறவே நிறுத்திப் பலவருடங்கள் ஆகிவிட்டது.

இன்று நேருக்கு நேர்ப் பார்க்கிறார்…!

பேச முடியவில்லை.

ஏதோ சொல்ல நினைக்கிறார்…

வாய் அசையவில்லை.

‘ஏண்டா துரை, எங்கியோ போய் எவனுக்கோ உழைச்சிக் கொட்டயே. இங்கே இருந்து விவசாயத்தைப் பாரேன்.!’

சொல்ல நினைத்திருக்கலாம்…

‘நான் காலமான பிறகு என்னை கோவில் சம்பா காணிவழியாத்தான் எடுத்துண்டு போகணும்…!’

அறிவிக்க எண்ணியிருக்கலாம்.

‘கலியனை வரச்சொல்லு…;’

என்றிருக்கலாம்.

‘உனக்கு சென்னை திருவல்லிக்கேணில ஒரு வீடு வாங்கி ரிஜிஸ்தர் பண்ணி வெச்சிருக்கேண்டா துரை…;’

ரகசியத்தை உடைத்திருக்கலாம்…

‘அந்தக் கிட்டாவோட ஸ்நேகம் வேண்டாம்டா. அவன் குடி கெடுத்துடுவான்…’

எச்சரித்திருக்கலாம்…

என்ன நினைத்தாரோ… ஏது நினைத்தாரோ… பகவானுக்குத்தான் வெளிச்சம்.

குந்தலாம்பாளை நோக்கிக் கையை நீட்ட, அவள் ஆதரவாய்ப் பிடித்துக்கொண்டாள்.

கண்கள் ஒரு கணம் மின்னல் போல் பிரகாசமாய் ஒளிர்ந்தது.

‘டக்’ கென மூடிக்கொண்டன.

“ஏந்நா….ஏந்நா….!”

மாதய்யாவின் நெஞ்சை உலுக்கினாள் குந்தலாம்பாள்.

டாக்டர் அருணகிரியும் நெஞ்சைப் பிசைந்துவிட்டார்.

அவர் உதடுகள் “மாது… மாது…” என்று பால்ய சினேகிதன் பெயரைப் பாசத்தோடு அரற்றியது.

‘நாடி’ பிடித்துப் பார்த்தார்.

ஸ்டெத் வைத்து எடுத்தார்.

கண்ணின் கீழ் இழுத்து விழியைச் சோதித்தார்.

உதடு பிதுக்கினார்.

பால்ய ஸ்நேகிதன் மாதய்யாவுக்காக கண்ணீர் சிந்தினார் டாக்டர்.

“மாமா…! மாமா….!”

அழுதாள் மோகனா. துரைராமனின் மனைவி.

அம்மாவின் அழுகுரல் கேட்டுத் திண்ணையில் சொப்பு வைத்து விளையாடிக் கொண்டிருந்த ரஞ்சனி உள்ளே வந்து ஆச்சர்யத்தோடும் பயத்தோடும் விழிகளை அகல விரித்து விழித்தாள்.

“அம்மா எதுக்கு அழறாங்க பாட்டி…”

“………………..”

“ஏன் பாட்டி பேச மாட்டேங்கறீங்க…?”

கேட்டுக் கொண்டே அம்மாவின் புடவைத் தலைப்பைப் பிடித்துக்கொண்டாள்..

“அழாதம்மா…!” என்றாள்.

உறவினர்களுக்கு தந்தி கொடுக்கச் சொல்லி கிட்டாவிடம் விலாசமும், பணமும் கொடுத்தான் துரை.

பதினாறு நாட்களுக்கு லீவு கேட்டு ஆபீசுக்கும் தகவல் தரச்சொன்னான்.

கலியன் தேம்பித் தேம்பி அழுதான்.

கனத்த இதயத்துடனும், ஆறாய்ப் பெருகும் கண்ணீருடனும், இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினான் கலியன்.

அவன் கண்களில் கண்ணீர் அடங்கவே இல்லை.

தந்திக் கிடைத்ததும் அவசரமாய்ப் புறப்பட்டு வந்துவிட்டார் சுப்பாமணி.

‘அத்திம்பேர்…!.அத்திம்பேர்…!’ என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறினார்.

“குந்தலா…! முன்னமே எனக்கு சொல்லியிருக்கக் கூடாதா…?”

அழுகைக்கு நடுவில் அக்காவின் கையைப் பற்றியபடி அரற்றினார் சுப்பாமணி.

ஐந்து பத்து நிமிஷங்களுக்கெல்லாம் இயல்பாக வெளியில் நடமாடினார்.

அடுத்தடுத்துக் காரியங்கள் ஆக வேண்டுமே…

புரோகிதர் வந்தாயிற்று.

சட்டி, பானை, மடக்கு, கலயம், எல்லாம் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போனான் குயவன் விருத்தாச்சலம்.

“கதறிக் கதறி அழுதாலும் மாண்டவங்க திரும்பி வரவாப் போறாங்க.. அடுத்து ஆகவேண்டியதைப் பாரு.”

பின்கட்டிலிருந்து அரிவாள் கொண்டு வந்து கலியன் முன் வைத்தார் சுப்பாமணி.

‘கலியா… நான் செத்ததும், என்னை நம்ப சம்பாக்காணி வழியாத்தான் தூக்கிப் போவணும்.’

மாதய்யாவின் ஆசையை, அவரின் கடைசீ விருப்பத்தை யாரிடம் எப்படிச் சொல்லி நிறைவேற்றுவது…?’

மனசு முழுதும் அது ஒன்றுதான் நிறைந்திருந்தது கலியனுக்கு.

அன்னாந்துப் பார்த்தபடி விரக்தியாய் தோட்டத்தில் வந்து நின்றான் கலியன்.

தஞ்சைப் பெரிய கோவில் கோபுரத்தை அண்ணாந்துப் பார்த்து ‘எப்படித்தான் இவ்வளவு பெரிய கோவிலையும் கோபுரங்களையும் திட்டமிட்டுக் கட்டினானோ! ராஜராஜ சோழன்…!’

ஆயாசத்தோடும் ஆச்சரியத்தோடும் பார்க்கும் சுற்றுலாப் பயணியைப் போலவும்…

தோட்டத்தை இன்றுதான் புதிதாகப் பார்ப்பவன் போல ஒரு பார்வைப் பார்த்தான் கலியன்.

கொத்துதலும், முள் அறுப்பதும்… காலம் தவறாது செய்வதால், வாளிப்பாய் உயர்ந்து, ஓங்குதாங்காய் நல்லப் பராமறிப்பில் நிற்கும் மூங்கில் குத்துக்கள்;

புளி, மா, பலா, கொய்யா, தென்னை இப்படிப் பெரு மர வகைகள் ;

கொளஞ்சி நார்தங்காய், கிடாரங்காய், பப்பாளி, அகத்தி, முருங்கை, கறிவேப்பிலையெனச் சிறு மர வகைகள் ;

பூவன், பேயன், மொந்தன், ரஸ்தாளி, நேந்திரங்காய் … வகைவகையாய் வாழை ரகங்கள் ;

சுண்டை, வெண்டை, கொத்தவரை, கத்தரி, செடியா அவரை, பச்சை மிளகாய் – காய்கறிகள் ;

புதினா, மல்லி, புளிச்சக்கீரை, சிறுகீரை, தண்டுக்கீரை, பசலைக்கீரை எனக் கீரை வகைகள் ;

பல வண்ணச் செம்பருத்தி , பன்னீர் ரோஜா, பவளமல்லி, பாரிஜாதம், இட்லிப்பூ, இருவாட்சி, கல்கண்டு ரோஜா போன்ற பூ மரங்கள் ;

அவரை, பட்டாணி, பூசணி, பறங்கி, பீர்க்கை, புடல் , பாகல் போன்ற கொடிகள் ;

பல்வேறு வண்ணங்களில் பூக்கும் காசித்தும்பைச் செடிகள் ;

மல்லிகை, முல்லை, ஜாதி மல்லி, சங்கு புஷ்பம் போன்றக் கொடி வகைகள் ;

நொச்சி, மருள், கத்தாழை, சித்தரத்தை, கிழாநெல்லி குப்பைமேனி போன்ற மருந்துச் செடிகள் ;

புதுடெல்லி குடியரசு தின அணிவகுப்பின்போது பல்வேறு படைக் குழுக்களையும், சாதனைக் காட்சிகளையும் வரிசையாகவும் நேர்த்தியாகவும் பிரித்துப் பிரித்துப் பாங்காய் வடிவமைத்து வைத்திருப்பார்களே அது போல…

நூலக அறிவியல் படித்தவர் நூல்களைத் தரம்பிரிந்து அடுக்கி வைத்த சிறந்த நூலகத்தைப் போல…

பல்வேறு தாவர இனங்களையும், ஒன்றுக்கு ஒன்று முரண்படாமல், சிறிது கூட ஒழுங்கு குறையாமல் தேர்ந்த தோட்டக்காரனாய் பராமரித்து வந்த மாதையா இப்போது இல்லை என்பதை நினைத்தபோது கலியன் கண்களில் கண்ணீர் அருவியாய்க் கொட்டியது.

(Multiple personality disorder ) பல்வகை ஆளுமை நோய் என்கிற மனநோயில் பாதிக்கப்பட்டவனைப் போல கலியன் மனம் பாழ்ப்பட்டு நின்றது .

மனம் தடுமாறியது.

பேரிழப்பைச் சந்திக்கும்போதும், மனம் தடுமாறும் பொழுதும், ஏற்படும் பிடிப்பற்ற ஒரு நிலையில் தோன்றும் வெற்றிடத்தை நிரப்ப, மனிதன் தன் உள்ளே நோக்குகிறான்.

துக்கம் உள்ளொளியை உருவாக்குகிறது.

பல்கிப் பெருகுகிறது.

மாதய்யாவோடு அவன் உறவின் வலிமையை ஸ்திதப் பிரக்ஞ தரிசனம் செய்கிறான்.

அந்தத் தோட்டத்தில் மாதையாவோடு அவனுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் கண் முன் நிழலாடின.

இறந்த காலம் என்னும் பெரும் குழியில் தன் தலையைப் புதைத்துக் கொள்வது மட்டுமே அவனுக்கு ஆறுதலைத் தந்தது.

மூங்கில் கொத்தருகே சென்றான்.

அரிவாள் அலக்கால் முள்ளைக் கழித்துப் பாங்காய் அடுக்கினான்.

மூங்கிலை வெட்டிச் சாய்த்தான்.

கணுவடித்துத் துண்டு போட்டான்.

பிளாச்சுப் பிளந்தான்.

தொப்புளடித்துச் சீவிசி சிலாம்புகள் அகற்றினான்.

அங்கங்கள் மட்டுமே அசைந்து, அலைந்து அனிச்சையாய் வேலை செய்தது…

‘மனசு மட்டும் மாதய்யாவின் கடைசீ ஆசையை எப்படிப் பூர்த்தி செய்யலாம்…’ என்பதைப் பற்றியேச் சுற்றிச் சுழன்றது.

‘மாதய்யாவின் விருப்பம் நிறைவேறுமா…?’

கேள்வி வந்தது.

‘யாரிடமாவது சொல்லப்போய், எடுத்த எடுப்பிலேயே மறுத்துவிட்டால்…?’

அச்சம் வந்தது.

போகிற வழிப் படுக்கைக்கு பச்சை மட்டை வெட்டவும்;

போகிற வழி தாகத்துக்கு செவ்விளநீர் பறிக்கவும்;

தென்னை மரத்தடியில் வந்து நின்ற கலியனுக்கு அடக்க முடியாமல் அழுகைப் பீரிட்டுக்கொண்டு வந்தது.

காலக் காற்றில் கரைந்து போன பல்வேறு நறுமணங்களாய் முன்னே வந்து நின்றன பழைய நினைவுகள்.

செவ்விளநீர் மரத்தையே வெறித்தபடி, பிரமை பிடித்தாற்போல் நின்றான்.

காப்புக் கட்டுக்கு முதல் நாள், இதே மரத்துக்கு முன்னால், மாதையாவுக்கும் அவனுக்கும் இடையே நடந்த உரையாடல் இப்போதுப் போலச் செவியில் ஒலித்தன.

“மரத்துல ஆறு குலை இருக்குதா கலியா…?”

“ஆமாங்கய்யா…!”

“இன்னைக்கு ஒரு கொலை இறக்கு ;

“ம்…”

“எளனிக் கொலைய கிணத்துல போட்டு வெச்சி, தினமும் ரெண்டா அபிசேகத்துக்கு அனுப்பணும்னேன். எல்லையம்மன் மனசு குளிரணும்னேன்.”

“செரிங்கய்யா…”

ஒரு குலை, அஞ்சு நாளைக்கு எல்லையம்மன் அபிஷேகத்துக்கு வரும்;

“வர்ற வாரம் இன்னொரு கொலை எறக்கிக்கலாம்.”

“எறக்கிக்கலாங்கய்யா..”

“கலியா… இப்ப சொல்றேன் கேட்டுக்க;

“என் தலை விழுந்தா 16 நாள் காரியத்திற்கும் இந்த செவ்விளநீர் தான் வெட்டி கொடுக்கணும்!”

‘அன்றுப் பேசியப் பேச்சுப் பின்னால் வரப்போகும் அமங்கலத்துக்கு முன்னறிவிப்போ …!’

இப்போதுத் தோன்றியது அவனுக்கு

கலியனுக்குப் பத்து வயது இருக்கும்.

“கலியா இதை உன் கையால வெய்யி…” தென்னம்பிள்ளையைக் கையில் கொடுத்தார் மாதய்யா.

தன் கையால் வைக்கப்பட்டத் தென்னை அது.

“கலியா… மேலக்கோவில்ல அபிஷேகத்துக்கு ஒரு குலை எளநீ அறுடா…”

அய்யாச் சொல்லி அறுத்திருக்கிறான்.

“சாம்பிராணித்தைலம் தடவி, காராம் பசுப் பால் ஊற்றி, செவ்விளநீர் வார்த்து ஆண்டவனுக்கு அபிஷேகம் பண்ணினா, சொர்க்கம் நிச்சயம்டா…!” என்பார் மாதய்யா அடிக்கடி.

யார் வீட்டில் தலை விழுந்தாலும் இந்த மரத்துச் செவ்விளநீரைத்தான் அனுப்புவார் மாதய்யா.

‘சுற்றுப்பத்துக் கோவில்களுக்கெல்லாம் அபிஷேகத்துக்கு ஏகமாய் இளநீர் தந்த அய்யாவுக்கு நிச்சயமாய் சொர்க்கம்தான்…!’

மாதய்யாவின் இறுதியாத்திரைக்காக இளநீர் வெட்டுவதை நினைத்தபோது, மரம் ஏறவே ஆயாசமாக இருந்தது கலியனுக்கு.

மனத்தைத் திடப்படுத்திக்கொண்டுத் தலையில் கட்டியிருந்த முண்டாசை அவிழ்த்து, மரம் ஏறத் தலைக்கயிறாக முறுக்கிக் கட்டினான்.

மரம் ஏறி வாகாய் மட்டைச் சந்தில் அமர்ந்தான் கலியன்.

நூல்கயிற்றை இடுப்பிலிருந்து விடுவித்தான்.

ஒரு காம்பு இளநீர் குலையைக் கட்டினான்.

கருக்கான அரிவாளால் ‘சரக்’ என அடிக்காம்பை அறுத்துவிட்டான்.

மட்டை இடுக்கின் வழியாக லாகவமாய்க் கயிற்றை விட்டுக் குலை இறக்கினான்.

இளநீர்க்குலைத் தரையைத் தொட்டதும் கயிற்றைத் தளர்த்தினான்.

மட்டைகளின் நடுக்காலில் வீசி நின்ற, அகலமும், வாளிப்புமான ஒரு மட்டையை வெட்டிச் சாய்த்தான்.

‘எலே கலியா…! இந்த மரம் நல்லா ஓங்கு தாங்கா வளந்துப் பலன் தரும்போது நானும் உன் அப்பனும் இருப்பமோ, மாட்டமோ…! இந்த மரத்துல நெத்து சாத்தி இந்த வம்சத்தை விருத்தி பண்ணணும்டா கலியா…!’

கலியனது பத்தாவது வயதில் மாதய்யா சொன்னது இப்போது போலக் காதில் ஒலித்தது.

‘அடுத்த காம்பை நெற்றுக்கு நிறுத்த வேண்டும்’

தீர்மானித்துக் கொண்டான் கலியன்.

“உயர்ந்த மர மேறிச், சிவந்த குலை யிரக்கி,

பரந்து விரிந்த ஒத்தைப், பச்சை மட்டை வெட்டி,

தேங்காய் நார் கயிராலேக், கடைசீ படுக்கைக் கட்டி

அய்யாவை அனுப்ப… ஆயத்தம் ஆவுறேனே…!.

மனசு அழ அழப் பச்சை மட்டையின் இரண்டு பாகத்தையும் தனித்தனியாகக் கிழித்துப் போட்டான்.

பச்சைப் படுக்கை முடைய வாகாய் ஒரு செங்கல்லைப் போட்டுக்கொண்டுக் குந்தி உட்கார்ந்தான் கலியன்.

இரும்பு ஆணியும், விரளிமஞ்சளும் புடவைத்தலைப்பில் முடிந்துக் கொண்டு பெண்கள் துக்கம் கேட்கத் திரண்டுவிட்டனர்.

புடவைத் தலைப்பால் வாய் பொத்தியும், கன்னத்தில் கை நட்டும், தலை குனிந்தும், குந்தியும், ஒரு சாய்த்தும் அமர்ந்திருந்தனர் பெண்கள்.

அவ்வப்போது ஒப்பாரி ஓசை எழுப்பிச் சூழ்நிலையை இறுக்கமாக்கினர்.

புதிதாக வருவோர்கும் துக்கமூட்டினர்.

“சொல்லிக்கப் படாது..!”

சொல்லித் திரும்பினர் சிலர்.

உள்ளே, வெளியே, திண்ணை, சாரமனை, வராண்டா, நடு வீதி, என எங்கெங்கும் ‘எப்போது எடுப்பார்கள்’ என்ற எதிர்பார்ப்பில் நின்றுகொண்டும் உட்கார்ந்துகொண்டும் இருந்தது உறவுகளும் நட்பும்.

நிமிர்த்திய கட்டை விரலை நெற்றிக்கு நேரே இடதும் வலதுமலாய் நகர்த்தி, ‘தலையெழுத்து..” என சமிக்ஞை செய்தார் ஒரு தாத்தா.

ஆகாசத்தைக் காட்டி ‘இறைவன் கட்டளை’ என்று ஆறுதல் சொன்னார் மற்றொருவர்.

“சாஸ்திரிகளே எவ்ளோ சாவாசம் ஆகும்ன்னா…?” கேட்டார் சாம்பசிவம். புகையிலையைக் கிள்ளிக்கொண்டே.

“ இன்னும் அரை மணி நேரத்துல தயாராயிருமா…?” சும்மா கேட்டு வைத்தார் கோதண்டம், வாகனம் தயார் செய்யும் கலியனிடம்

“தருப்பைப் புல் போதாது நிறைய வை கலியா… ” தர்ப்பைக் கட்டை நான்கு விரலால் அழுத்தியபடி சொன்னார் சவண்டி சாமாளி.

“இவ்வளவு மெல்லீசா இருக்கே கயறு.. அந்தக் காலத்துல…” பழைய புராணம் பாடினார் ‘நானோஜெனேரியன்’ நாகராஜன்.

பிச்சை அதை வழி மொழித்தார்.

“ஏகப்பட்ட ட்ராஃபிக் லேட்டாயிடுத்து!” யாரும் கேட்காமல் தாமாகவே சொன்னார் கோவிந்து.

அழுகை, புலம்பல், ஒப்பாரி, எல்லாம் வெவ்வேறு டெசிபல்களில் வருவதும் அடங்குவதுமாக இருந்தது.

புண்யாக கும்பத்தில் ‘கூர்ச்சம், மாவிலை, தேங்காயெல்லாம் வைத்தார் சாஸ்திரிகள்..

துரை,“பவித்ரம் அணிந்து, தர்ப்பையை இடுக்கியபின் “சுக்லாம் பரதரம்….” வாங்கிச் சொன்னான்

‘வருண பகவானை’ கும்பத்தில் ஆவாஹனித்தார் சாஸ்திரி.

“அசேஷே.. ஹே பரிஷத்…”

“…ஸர்வேஷாம் பாபானாம்.. ஸர்வப் ப்ராயச்சித்தம் கரிஷ்யே.”

துரை அப்பாவின் வாயில் கங்கை சொம்பு நீரைச் சாய்த்தான்.

“கர்ண மந்த்ர படனகாலே ‘கோ’, ‘தில’, ‘தீப’, ‘உதகும்ப’ தஸ’ தானங்களும் கிரமமாக முடிந்தன.

ப்ராயச்சித்தம் ஆயாச்சு… என்கிறார் சாஸ்திரி.

ஒரு முறை பெண்டுகளின் ஊளைச் சத்தம் உச்சம் தொட்டு அடங்கியது.

“அழப்படாது..! ஆன்மா சாந்தி அடைய எல்லாரும் பகவான் நாமம் சொல்லணும்..” என்றார் சாஸ்திரி

பந்துக்கள் வீதியில் தெற்கு முகமாக நமஸ்காரம் ஆயிற்று.

“ஸரீர சுத்தார்த்தம், ஸமஸ்த பாப க்ஷயார்த்தம் அகண்ட காவேரீ ஸ்நாநம் கர்த்தும்”

‘பின்கட்டு’க் குளியலறையில் தலைமுழுகி , ஈரவஸ்திரத்துடன், வந்த மோகனா குடத்து நீரை மாமனார்மீது ஊற்றினாள்.

புரோகிதர் நீட்டிய ‘மடக்கிலிருந்து’ விபூதியைக் கிள்ளிக் குழைத்து மாதய்யா நெற்றியில் பூசினான் துரை.

விரட்டி, சிராத்தூள் , உமி, மண்பாண்டங்கள், சோம்பு, இளநீர், மட்டைத் தேங்காய், கிராத்தூள், தொன்னைகள், காடாத்துணி, தீக்‌ஷா வஸ்த்ரம், நக்ன வஸ்த்ரம்.. எல்லாம் தயாராக இருந்தது.

துரை புது வஸ்திரம் கட்டிக்கொண்டான்.

‘ஷண்நிமித்த ப்ராயச்சித்தம்’ முடிந்தான்.

‘ப்ரேத ஔபாஸன அக்னி ஸந்தானம்’ ஆயிற்று.

இடது கை அத்தி சமித்தை வலது கைக்கு மாற்றி அக்னியில் வைத்துப் புனிதமாக்கி ‘அக்னி கரணம்’ செய்தான்.

தொடர்ந்து.. ‘அயாச்ய ஹோமம்’, ‘உத்தபனாக்ந சந்தான ஹோம’மும் முடிந்தது

‘மரண சாந்தி ஹோமம்’ முடித்து சவத்தின்மேல் தண்ணீர் தெளித்துவிட்டு (‘அப்பிரதஷிண)’இடமாகச் சுற்றி வந்தான்.

‘பிரேத அன்வாரப்தம்’ தொடங்கிற்று.

பிரேதத்தின் கையில் நீளமான கயிற்றின் ஒரு நுனியைக் பாவனையாகக் கட்டி, ஹோமம் நடக்கும் இடத்தில் கர்த்தாவின் தொடைவரை நீட்டினார்கள்.

“கயிறை தாண்டப்படாது. தோஷம் வரும். குறுக்கே நெடுக்கே போயிட வாண்டாம்!”

யோகவேஷ்யணிந்த தொப்பை பிச்சுமணி கத்தினார்.”

‘இனியும் தாமதம் செய்யக்கூடாது. என்றது கலியனின் உள்ளுணர்வு.

யாரிடமாவது அய்யாவின் கடைசீ ஆசையைச் சொல்லிவிடவேண்டும்..’

துடித்தான் கலியன்.

“அய்யா உங்க கிட்டே அவசரமா ஒண்ணு சொல்லணும்.

“சொல்லு…” என்றார் சுப்பாமணி.

உங்க கிட்ட சொன்னாத்தான் நடக்கும்…” என்ற பூர்வ பீடிகையுடன் சுருக்கமாக விஷயத்தைச் சொன்னான் கலியன்.

“மொதல்லயே சொல்ல வேண்டாமா கலியா…! சரி சரி.. முயற்சி பண்ணிப் பாக்கறேன்…”என்றார்.

புரோகிதர் அருகில் வந்தார் சுப்பாமணி.

அதே நேரம், “சாஸ்திரிகளே… பிரேதம் பக்கத்து ஊர் வழியாத்தோனே போகணும்…?”

பலமாய்க் கேட்டார் கிட்டாவய்யா.

சுப்பாமணிக் கேட்க நினைத்ததை அவர் கேட்டுவிட்டதால் சுப்பாமணி அமைதியாக இருந்துவிட்டார்.

“ஏன்…கிட்டா… அதுதானே நடமுறை… புதுசா கேக்கறேள்…?” என்றார் குப்புராமன்.

“கடைசீயா நம்ம ஊர்ல காலமான குருக்களாத்து ராமுவை தூக்கிண்டு போக விடாம மறிச்சாளே முத்தனூர்காரா… அதனால கேட்டேன்…”

கிட்டாவய்யாவின் இந்தக் கேள்வி, உறவினர்கள் முதல், பாடை தூக்கிகள் உட்பட எல்லோரையும் அதிர வைத்தது.

ரேழியில் ஒரு மூலையில் உட்கார்ந்தபடி, மாதய்யாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த குந்தலாம்பாள் காதில் வாசலில் நடந்த உரையாடல் விழுந்தது.

ரௌத்ரமானாள்.

ஒரு முடிவுடன் எழுந்தாள்.

வாசல்படி தாண்டி வாசலுக்கு வந்தாள்.

குந்தலாம்பாளைத் தொடர்ந்து அவள் வயதொத்த பெண்கள் அவளைத் தொடர்ந்து வந்தனர்.

தெருவில் கோலம் போடும் இடத்தில் அமர்ந்து காரியம் செய்து கொண்டிருந்த இடத்துக்கு வந்தாள்.

மகன் துரைராமன் பின்னால் வந்து நின்றாள்.

“சாஸ்திரிகளே…!”

பலமாக அழைத்தாள் குந்தலாம்பாள்.

“என்ன பேச்சு நடக்கறது இங்கே…ம்…!” சிங்கம் போல் கர்ஜித்தாள்.

குந்தலாம்பாளிடம் இப்படி ஒரு கர்ஜனையை எதிர்பார்க்காத அனைவரும் ஸ்தம்பித்து நின்றார்கள்.

கிட்டாவய்யா இடத்தை விட்டு நழுவினார்.

சூழ்நிலை மேலும் இறுக்கமானது.

அத்தியாயம் – 16

“சாஸ்திரிகளே… சாஸ்த்திரம் படிச்ச நீர், பேச்சு மாறலாமா…?”

இந்தச் சூழ்நிலையில் குந்தலாம்பாளிடம் இப்படி ஒரு ரௌத்ரத்தை எதிர் பார்க்காத ஊரார் அதிர்ந்தார்கள்.

‘என்னச் சேதி…?’

‘என்னப் பிரச்சனை…?’

‘என்ன நடக்குது இங்கே…?’

பரபரப்பும், கேள்வியும், அச்சமும், ஆர்வமும் எல்லார் முகத்திலும், அப்பியிருந்தது…

“முத்தனூர் வழியா வாகனம் போகப் போறதாப் பேச்சு அடிப்பட்டுதே…?”

‘தலைக்கு மேலேப் போனபிறகுச் சாண் என்ன…? முழம் என்ன…?’

என்ற ரீதியில் கனமாய் வந்தது குந்தலாம்பாளின் குரல்.

“ஆமாம் மாமி…! அதுதானே நம்ம ஊர் வழக்கம்…!”

“ம்ஹூம் கூடாது…! பக்கத்து ஊர்ப் பாதைக் கூடவேக் கூடாது…

“………………………………”

அதிர்ச்சியோடுப் பார்த்தார் சாஸ்திரிகள்.

“நீங்க வந்ததுமே, நான் உம்மகிட்டே உறுதியாச் சொல்லிட்டேன். சொன்னப்போச் சரி…! சரி…!! ன்னுத் தலையைத் தலையைத் தலையை ஆட்டினேள். இப்போ பேச்சு மாத்திப் பேசறேளே. இது உங்களுக்கேச் சரினு தோண்றதா…?

“………………………………”

உண்மைச் சுட்டது சாஸ்திரிக்கு.

‘சுட்டச் சட்டியை எப்படிக் கைவிட வேண்டும்…’

யுக்தி பின்னியது அவர் மனசு.

“நம்ம சம்பாக்காணி வழிதான் என் ஆத்துக்கார் போகணும்.”

‘முழுக்க நனைந்தபின் முக்காடுதான் எதுக்கு…?’

என்ற முடிவோடு; சந்நதம் வந்தததைப் போல் உரத்துத், தீர்மானமாகப் பேசினாள்…

குந்தலாம்பாளின் பார்வையையும், பேச்சில் உறுதியையும் கண்ட, கிட்டாவய்யாத் தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள எட்டி ஓடிவிட்டார்.

“………………………………”

ஒரு கனம் கனத்த மௌனம் நிலவியது.

குந்தலாம்பாவே மௌனம் கலைத்தாள்..

“காப்புக் கட்டு நேரத்துல ஜனங்க அதிகமாப் புழங்கிப் புழங்கி வயல்ல பாதை நன்னாப் படிஞ்சிருக்கு. அது வழியாவேத் தூக்கிண்டு போங்கோ.”

உத்தரவு போட்டாள்.

“………………………………”

அது அவரோட கடைசீ ஆசை. அதை நிறைவேத்தவேண்டியது என் கடமை..”

கடமைக்குக் குறுக்கே யார் வந்தாலும் அப்புறப்படுத்திவிடும் உறுதி அதில் இருந்தது.

“குந்தலா…! நீ ஆத்துக்காரர் போன துக்கத்துல எதேதோ பேசறே…! அதெல்லாம் புருஷாள் பாத்துப்பா…! நீ உள்ளே வா…!”

வயதான அம்புஜம் மாமி அவளை ஆதரவாகப் பிடித்து உள்ளே இழுத்தாள்.

இந்தச் சமயத்தைப் பயன்படுத்திக்கொண்டார் சாஸ்திரிகள்.

“மாமி…! ஊர் வழக்கம்னு ஒண்ணு இருக்கு… அதையெல்லாம் மாத்தப்படாது… ன்னும் எடுத்துச் சொல்லுங்கோ!”

சந்தில் சிந்து பாடினார் சாஸ்திரி.

திடீரென்று கிச்சாமியின் குரல் பின்னாலிருந்து ஓங்கி ஒலித்தது.

“திரும்பத் திரும்பச் சொன்னதையேச் சொல்லிண்டு இருக்காம வாய மூடிண்டு சும்மா இரும்மா… நாங்க புருஷாள் இருக்கோம். பக்கத்து ஊர்ல ஏதாவது பிரச்சனைன்னா சமாளிச்சிக்கறோம்…”

கிச்சாமியின் பேச்சை காதிலேயே போட்டுக்காள்ளாமல் அலட்சியப்படுத்தினாள் குந்தலா.

வாழ்வின் ஓட்டம்தான் எவ்வளவு துல்லியமாக அளக்கப்படுகிறது…! தன் அந்தஸ்திலிருந்து சற்றே வழுவினாலும் இந்தச் சமூகம் எப்படியெல்லாம் அலட்சியப்படுத்துகிறது…?

ஊரிலேயே அதிக வயதுள்ளவர்தான் கிச்சாமி என்றாலும், அவரை சிறிதும் மதிக்காமல் தாண்டிப் பேசிய குந்தலாம்பாளை அனைவருமே கவனித்தார்கள்.

‘மனிதன், தானேதான் தன் மதிப்பை இழக்காமல் காத்துக்கொள்ள வேண்டும். இழந்த மதிப்பீடுகளை மீட்டுக் கொணர்தல் என்பது அவ்வளவு எளிதானதல்ல.’

இந்த சித்தாந்தத்தை ஊருக்கே அறிவித்தது அந்தக் காட்சி.

“கடைசீ சம்ப்ரதாயம் ஆகப்போறது. கயறுகூட நீட்டியாச்சு. இந்த நேரத்துல நீங்க வந்து இப்படிப் பேசறது கொஞ்சமும் நல்லால்லே… புத்தி… கித்தி… கெட்டு… ”

இழுத்தாற்போல் பேசினார் சாஸ்திரிகள்.

“ சாஸ்திரிகளே, நான் புத்தி ஸ்வாதீனம் இல்லாமப் பேசலை. சுய நினைவோடத்தான் பேசறேன்.. அவரோட கடைசீ ஆசை, அந்த வயல் வழியாத் தன் வாகனம் போகணும்னு. அதை நிறைவேத்தி வைக்கறதுல உங்களுக்கு என்ன கஷ்டம்…”

“அது… வந்து…!”

“அது வந்து இதுப் போயின்னு என்ன இழுவை. காணி அவரோடது. அது வழியே அவரைக் கொண்டுப் போறதுல உங்களுக்கு என்ன நஷ்டம்ங்கறேன்.”

“அம்மா…! என்னம்மாப் பேசறே நீ…?”

தொடங்கிய துரைராமனைப் பேச விடாமல் கையமர்த்தினாள்.

“ஊர் வழக்கம்னு சொல்றார் சாஸ்திரிகள். திரும்பத் திரும்ப சொன்னதையே செல்றே நீ…”

குரல் உயர்த்தினான் துரைராமன்..

அக்னிக்கு முன் தெற்குப் பார்த்து அமர்ந்திருந்த துரை எழப்போனான்.

“தொரை, எழுந்திருக்கப்படாது… பேசாம ஒக்காரு… நாங்கப் பேசிக்கறோம் அம்மாகிட்டே…”

துரைராமனை அடக்கிவிட்டுக் கர்மாவைத் தொடரப் போனார் சாஸ்திரிகள்.

“வயல் வழியாத்தானேப் போப்போறது…? அதை தீர்மானமாச் சொல்லிட்டுக் கர்மாவைத் தொடருங்கோ…” விடவில்லைக் குந்தலாம்பாள்.

சாஸ்திரிகளுக்குக் கோபம் தலைக்கேறிவிட்டது.

“இதென்ன வரட்டிழுப்பாப் போச்சு… பிரேதம் எந்த வழியாப் போனா என்ன…? பாத்துண்டா இருக்கப் போறது…? கடைசீ ஆசையாம்… மண்ணாங்கட்டி..!”

கத்தினார் எரிச்சலுடன்.

“நீங்க ஏழு வருஷ காலம் பாடசாலைல அத்யயனம் பண்ணி சாஸ்த்ரம், சம்ப்ரதாயம், தர்ம சாஸ்த்திரம்னு எல்லாம் முறைப்படி படிச்ச சாஸ்திரிகள். நீங்க இப்படிப் பேசப்படாது.”

“அப்படித்தான் பேசுவேன்… என்ன பண்ணுவேள்…?”

நான் பதிலுக்குப் பேசவேண்டியிருக்கும். உங்களுக்குத் தாங்காது…”

“நானாப் பேசலை… நீங்கதான் பேச வைக்கறேள்…! ‘வீட்டுக் கொல்லைல அடக்கம் பண்ணணும்னு மாமா ஆசைப்பட்டிருருந்தா அப்படிச் செய்வேளா…? சொல்லுங்கோ…!”

‘குந்தலாம்பாளை மடக்கிவிட்டோம்…’

ஆணாதிக்க அஹங்காரம் அவர் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது.

“அதுதான் அவர் விருப்பம்னா அப்படித்தான் செய்தாகணும்…!”

சுவற்றிலடித்த பந்தாய் வந்தது பதில்.

“.!?!?!………………………………”

சாஸ்திரிகள் உட்பட மொத்த ஜனங்களும் வாயடைத்து நிற்க, குந்தலாம்பாளேத் தொடர்ந்தாள்.

“எலத்தூர் இளங்கோ வாத்யார் ஆசைப்பட்டார்னு, அவரை, அவாத்துக் கொல்லைல அடக்கம் பண்ணி பிருந்தாவனம் கட்டினாரே அவர் மகன் முத்துக்குமார்…. தெரியுமோன்னோ…?”

“……………………………….”

சாஸ்திரியிடம் இதற்கு பதில் இல்லை.

“அதுதான் போனவாளுக்குச் செய்யற உண்மையான மரியாதை.”

“………………………………”

“அப்பாவை மதிக்கற மகனுக்கு அருமைத் தெரியும்.”

ஜாடையாய் துரைராமனை தாக்கினாள்.

“எலத்தூர்ல, ஊர் உறவு சொந்தம் பந்தம்… எல்லாம் வீட்டுக் கொல்லைல அடக்கம் பண்ண வேண்டாம்னு குறுக்க விழுந்து மறிக்கத்தான் செஞ்சுது…”

“எதுக்கும் அசரல்லையே முத்துக்குமார்…”

“………………………………”

“என் அப்பா என்னண்ட இப்படித்தான் சொல்லியிருக்கார். அப்பா செய்தா அதுல ஞாயம் இருக்கும். யார் குறுக்க நின்னாலும் செய்தே தீருவேன்’னு சொல்லி, உறுதியா நின்னுச் செஞ்சி காட்டினாரே அந்த முத்துக்குமார்… மனிசனா, இல்லே…?”

அடுத்த தாக்கு துரைராமன் மேல் எகிறியது.

துரைராமன் எதுவும் பேசவில்லை.

கிராமத்துத் தந்திரங்கள் ஏதும் துரைராமனுக்குத் தெரியாது.

“………………………………”

என்ன பேசவேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்று எதுவும் தெரியாமல் அமைதியாக இருந்தான்.

“மாமி, இப்படி வல்லடி வழக்கு பண்றதுக்கும், விதண்டாவாதம் பேசறதுக்கும் இது நேரமில்லே. பிரேதம் நம்மை எந்த ஊரு வழியா தூக்கிண்டு போறானு பாத்துண்டிருக்காது. பொம்மனாட்டியா லட்சணமா இருங்கோ…”

சாஸ்திரிகள் சற்றே அதிக உரிமை எடுத்துக் கொண்டுப் பேசிவிட்டார்.

சொற்குற்றம் வந்துவிட்டது.

“அப்படியா…! இப்போ அக்னிக்கு முன்னால கர்த்தாவை ஒக்கார வெச்சிக் கர்ண மந்த்ரம், ப்ராயச்சித்தம், அயாச்ய ஹோமம் அது இதுன்னு னு செய்யறேளே, ப்ரேதம் இதையெல்லாம் கண்ணை முழிச்சிப் பாத்துண்டு, காதை தீட்டிண்டு கேக்கறதோ…?”

“………………………………”

“போற வழியைப் பார்க்காத பிரேதம் இதுகளை மட்டும் பார்க்கறதோ…?

“சாங்கியம், சடங்கு, சம்ப்ரதாயம் எல்லாத்தையும் கொச்சைப்படுத்தாதேள்…”

“மந்த்ரம், சடங்கு, சம்ப்ரதாயம் எல்லாம் அரூபமாய் இருக்கற ஆன்மாவைப் போய் சேரும்னு நீங்க சொன்னா… அவரோட கடைசீ ஆசையை நிறைவேத்தறதும் அது மாதிரிதானே?”

“புருஷன் இருந்த வரைக்கும் வாய்த் திறந்து பேசாமப் பொட்டிப் பாப்பா அடங்கிக் கிடந்தவ, அவரை அடக்கம் பண்றதுக்குள்ளே இப்படி வாயாடறாளே…!”

“ஊமை ஊரைக் கெடுக்கும்…னு சொல்றதுச் சரியாத்தான் இருக்கு…!”

“ஒண்ணும் தெரியாத பாப்பா…இழுத்து போட்டுக்கிட்டாளாம் தாப்பா…!”

“ஏண்டீ…! ஊர்க்காராளை இப்படி எதிர்த்துப் பேசறாளே… அவா சப்போர்ட் இல்லாம இருந்துட முடியுமாங்கறேன்…!”

“ஆனாலும் ஒரு பொம்மனாட்டிக்கு இவ்வளவு வாய்க் கொழுப்பு ஆகாதுடீ…”

“இவ புருஷனாவது இவ கிட்டச் சொல்றதாவது. சும்மா அடிச்சி விடறா இவ. பொய்ச் சொல்றதுக்கும் அளவு வேண்டாமோ…?”

“எதையோ மனசுல வெச்சிண்டு, ‘அவலை நினைச்சு உரலை இடிச்சாப்ல’ ஹம்பக் பண்றாளே… எதுலப் போய் முடியப்போறதோ…?”

“பெத்தப் புள்ளைக்கே இவள் போக்குப் பிடிக்கலை பாரேன்…”

பிரேதம் ரேழீல கிடக்க, ஒரு பொம்மனாட்டி இப்படி வாய் வீசறாளே…! இதெல்லாம் நல்லதுக்கில்ல?”

“விநாச காலே விபரீத புத்தி…”

வாய்க்கு வந்தபடி முணுமுணுத்துக்கொண்டிருந்தது ஊர்.

“முடிவா என்னதான் சொல்றே…? சொல்லிடு…” என்றார் சாஸ்திரி குந்தலாம்பாளைப் பார்த்து.

குரலில் புரோகிதர்களுக்கே உரிய பவித்ர அகங்காரம் இருந்தது.

“நம்ம காணி வழியாத்தான் போகணும்…!”

உறுதியாகச் சொல்லிவிட்டு உள்ளே வந்துத் தன் இடத்தில் நின்றாள்.

“எக்கேடும் கெட்டுப் போங்கோ. என்னை ஆளை விடுங்கோ.”

பொதுவாய்க் கத்தினார் சாஸ்திரிகள்.

“மாமா…”

துரை ஏதோ சொல்ல வந்தான்.

“துரை, அபர காரியத்தை ஆரம்பிச்சுட்டேன். பாதீல விட்டுட்டுப் போறது தர்மமில்லே. இன்னிக்கு, இங்கே பண்ண வேண்டிய பிரயோகங்களை செஞ்சி பிரேத்த்தைக் கரையேத்திடறேன்…”

சற்றே நிறுத்தினார்.

“நான் முத்தனூர்ப் பாதைலதான் மயானத்துக்கு வருவேன்.

இன்னிக் காரியத்தோட என்னை விட்டுடு.

நாளைலேர்ந்து பதினாறு நாள் காரியத்துக்கும் வேற யாரையாவது பாத்துக்கோ…!”

சொல்லிவிட்டு அக்னியைப் பித்தளைச் சாமணத்தால் எடுத்தார்.

உரிபோல் கட்டப்பட்டுக் கூண்டில் இருந்த, உமியும் விராட்டித் துண்டுகளும் முறையாய்ப் போடப்பட்டப் புது பானையில் வைத்தார்.

மந்திரங்களை உச்சரித்தார்.

நேரம் அறிந்தச் சாமாளி உள்ளேச் சென்று கயிற்றை இழுத்துக்கொண்டான்.

வாகனம் உள்ளே சென்றது.

அழுகைச்சத்தம் முழு வீச்சில் எகிறியது.

நடு வாசலில் வைத்தார்கள்.

மயானத்திற்கு வராதவர்கள் எல்லாரும் அங்கேயே வைத்து வாக்கரிசிப் போட்டார்கள்.

இறுதியாத்திரைத் தொடங்கும்நேரம் சாஸ்திரிகள் பெரிய குரலில் சொன்னார்.

“எல்லாரும் கேட்டுக்கோங்கோ…!”

அழுகுரல்களின் பின்னணியில் பலமாகச் சொன்னார் சாஸ்திரி.

“பிரேதம் மரிச்சதுக்கு, ஏற்கெனவே முத்தனூர்காரா மன்னிப்புக் கேட்டுட்டா. இந்த விஷயம் உங்க எல்லாருக்கும் தெரியுமோன்னோ? .”

“………………………………”

அவா எந்த எதிர்ப்பும் சொல்லாதப்போ, இன்னிக்கு இந்தப் பிரேதம், அந்த வயல் வழியாப் போனா, எதிர்காலத்துல, அந்தனூர்ப் பொணம் போற பொதுப் பாதையா ஆயிடும் அந்த வயல் .. சொல்லிட்டேன்…”

முதலில் பொதுவாய்ச் சொன்னார்.

“அப்பறம் உன் இஷ்டம் துரை…”

குறிப்பாகச் சொல்லி முடித்தார்.

எந்த இடத்தில் எதை எப்படிக் கலைக்க வேண்டும் என்று தெரிந்துத் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட சாணக்கியம் இது.

கிராமத்துச் சாணக்கியம்.

“அந்த வயலை பொதுப்பாதையா ஆகணும்கறதுதான் என் ஆத்துக்காரரோட திட்டம்…!”

குந்தலாம்பாள் பலமாகத்தான் சொன்னாள்.

அவள் சொன்னது பக்கத்தில் உள்ளக் காதுகளுக்குக் கூடக் கேட்கவில்லை.

பெண்களின் அழுகை குவியலுக்கு அடியில் அமிழ்ந்துபோனது.

“காலங்காலமா இருக்கற ஊர் வழக்கப்படி, என் பின்னால முத்தனூர் பாதை வழியா வாங்கோ…!”

அசட்டுக்கு ஆங்காரம் வந்தாற்போல, உரக்கச் சொன்னான் துரைராமன்.

‘கூ… என்று பலமாய்க் கூவிவிட்டுப் புகையைக் கக்கிக்கொண்டு செல்லும் ஸ்டீம் எஞ்சின் போல…

அக்னி குண்டம், அடர்ந்த புகையைக் கக்க நடந்தான் துரைராமன்.

ஆஸ்தான பிணம் தூக்கிகளான சாமாளி, வைத்தா, கோபாலன், பிச்சை நால்வரும் துரையைத் தொடர்ந்தனர்.

இப்படி ஒரு திடீர்த் திருப்பத்தை சிறிதும் எதிர்பார்க்காத குந்தலாம்பாள் அதிர்ச்சியில் உறைந்தாள்.

‘கலியா… என் கடைசீ ஆசையை மதிக்காம, பிடிவாதமா, முத்தனூர் வழியாத் தூக்கிட்டுப் போனா அதுக்காக கவலைப்படாதே. மாத்து வழி ஒண்ணு இருக்கு… நான் சொல்றேன். அதை நீ செஞ்சிடு. என் ஆன்மா சாந்தியாயிடும்…’

குத்தகைப் பத்திரத்தைக் கையில் கொடுத்தபோது மாதய்யாச் சொன்னார் கலியனிடம்…

“அந்தப் பேச்செல்லாம் இப்ப எதுக்குய்யா…? என்று ஒத்திப் போட்டுவிட்டான் கலியன்.

‘அய்யாவின் வாயால அந்த மாத்து வளியைக் கேட்டுக்காமப் போயிட்டமே…!’

கழிவிரக்கத்தில் கலங்கினான் கலியன்.

‘முத்தனூர்ப் பாதை வளியா, மயானத்துக்குப் போய்ச் சேர ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகும். அதுக்குள்ற அயிலாண்டக் கிழவியாண்ட. அந்த மாத்து வளி கேட்டுச் செஞ்சிரலாம்…!’

யோசனைத் தோன்றியது கலியனுக்கு.

கக்குடிக் கள்ளுக்கடைச் சந்து வழியாகக் குறுக்கு வழியில், ஓட்டமும் நடையுமாய்ச் சென்றான்.

கிழவியின் குடிசையை அடைந்தான்.

“கலியா, நம்ம சாங்கியம் வேறெல. அவங்களுக்கு நம்ம சாங்கியம் சரிவராதுல…”

“கெளவி …! என்னண்ட, “ நீ செய்யிடா கலியா! ” னுதான் அய்யாச் சொன்னாரு.

“அடியாத்தீ… உன்னியச் செய்யச் சொன்னாரா…?” வியந்தாள் கிழவி.

“மொரைய மட்டும் சொல்லு தாயி” நான் செஞ்சிடுதேன்.”

முறையை முறையாகச் சொன்னாள் அயிலாண்டக் கிழவி.

வாகனம் வருவதற்கு முன் மயானத்தை அடைந்துவிட்டான் கலியன்.

வெட்டியான் ராகுவிடம் செய்தியைச் சொன்னான்.

“இந்த ஊருக்கும் நமக்கும் எவ்வளவோ நல்லது செஞ்சவரு நம்ம அய்யா. அவுரு ஆசையைப் பூர்த்தி செய்ய என்ன வேணாலும் செய்யலாம் கலியா….”

ராகுவின் முழு ஒத்துழைப்பும் கிடைத்துவிட்டது கலியனுக்கு.

பெண்கள் மயானம் வரைச் செல்லும் வழக்கம் அந்தனூரில் கிடையாது.

வழக்கம்போல மயானக் காண்டம் முடிந்து புகை மூட்டம் வரும்வரை, காவிரிக் கரையில்தான் உட்கார்ந்திருந்தார்கள்.

எப்போதும்போல மயானத்தில் புகைமூட்டம் கண்டவுடன், தலை முழுகினார்கள்.

வீடு திரும்பினார்கள்.

பங்கஜம் மாமி குந்தலாம்பாளைப் பாவனையாகப் பிடித்துக்கொண்டாள்.

குந்தலாம்பாளுக்கு இந்த மரபெல்லாம் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

“துக்கம் மனசுல இருக்கணும். ஊருக்கு அழுதுக் காட்டினாத்தான் துக்கம்கறது இல்லே. என்னைப் பிடிச்சிண்டெல்லாம் வர வேண்டாம். என்னை விட்டுடுங்கோ. நானே வந்துடுவேன்…” என்றாள்.

“மொரட்டு ஆம்பளைக் குதிரை…”

“அழுத்தக்காரி…”

“ஆங்காரம் பிடிச்சவொ…”

“கொழுப்பெடுத்தவ…”

“……………………………………..”

இதுபோல, கண் மறைவில், ஊர்ப் பெண்கள் எப்படியெல்லாம் தன்னைப் பற்றி விமரித்துப் பேசினார்கள், பேசுகிறார்கள், பேசுவார்கள் என்பது நன்றாகவேத் தெரியும் குந்தலாம்பாளுக்கு.

அவள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.

வாசல் திண்ணையில் பக்கெட்டில் தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது.

அருகில் வைக்கப்பட்டிருநத பித்தளைச் சொம்பால் மொண்டுக் கால் அலம்பினாள்.

உள்ளே சென்றாள்.

ரேழியில் உலக்கைக் கிடத்தப்பட்டிருந்தது. உலக்கையைத் தாண்டினாள்.

பித்தளைத் தாம்பாளத்தைப் பார்த்தாள்.

மரக்காலில் வைக்கப்பட்ட நெல்லையும் பார்த்தாள்.

சாங்கியம் முடிந்துவிட்டது.

உள்ளே சென்றாள்.

மாதய்யா கிடத்தப்பட்டிருந்த இடத்தில் காமாட்சி விளக்கு எறிந்துகொண்டிருந்தது.

சமையல் அம்புஜம் மாமி நாற்பது பேருக்குச் சமைத்துக் கொண்டுவந்து தாழ்வாரத்தில் வாழையிலைப் போட்டு மூடி வைத்திருந்தாள்.

பரிமாறுவதற்காக சரோஜா மாமியும், கண்ணப்பன் மாமாவும் வந்திருந்தனர்.

சிதைக்கு நெருப்பு வைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டனர் வந்தவர்கள்.

அவர்கள் எல்லோரும் படித்துறைக்கு தலைமுழுகச் செல்லும் வரைக் காத்திருந்தனர் ராகுவும் கலியும்.

மயானப் படித்துறையில் இறங்கித் தலைமுழுகிவிட்டு ஈரத்துணியோடு சுத்தபத்தமாக வந்தனர் இருவரும்.

நெருப்பு அவியாமல், சிதையைத் திறந்தனர்.

கலியன் கண்ணீர் விட்டுக் கதறினான்.

“என்னை மன்னிச்சிடுங்கய்யா…!”

கத்திரிக்கோலுடன் சிதையின் அருகில் செல்லக் கை கூசியது.

‘அய்யாச் சொன்னதைத்தானேச் செய்கிறோம்…’

தன்னைத்தானேச் சமாதானம் செய்துக் கொண்டான்.

மாதய்யாவின் தலைமுடியைக் கொஞ்சம் கத்தறித்து எடுத்துக் கொண்டான்.

அவர் இடுப்பில் கட்டியிருந்த அரணாக்கொடியை அறுத்து எடுத்தான்.

அவரின் கை நகம் சிறிது கிள்ளி எடுத்துக் கொண்டான்.

புகைந்து கொண்டிருந்த சிதையை எரியூட்டினார்கள்.

ராகுவோடு சேர்ந்து, பக்குவமாகக் களிமண் பூசி மெழுகினாள் கலியன்.

கனத்த இதயத்துடன் காவிரியில் மீண்டும் முழுகினான்.

நேரே மாதய்யா வீட்டுக்குச் சென்றான்.

தகனம் முடிந்ததும் நாவிதன் திருமலையிடம் முகம் மழித்துக் கொண்டான் துரைராமன்.

முழுகினான்.

மற்றத் தர்ப்பணக் காரியங்களைக் காவிரியின் கருமாதிப் படித்துறையில் செய்து முடித்தான்.

மீண்டும் முழுகி எழுந்தான்.

வயிறு பசித்தது.

ஓட்டமும் நடையுமாய் வீடு வந்து சேர்ந்தான்….

சிலர் சாப்பிட்டார்கள்

சிலர் உண்டார்கள்

சிலர் தின்றார்கள்

சிலர் பசியாறினார்கள்.

சுப்பாணியைத் தவிர, குந்தலாம்பாள் வழி உறவினர்கள் அனைவரும் சொல்லிக்கொள்ளாமல் போய்விட்டார்கள்.

“குந்தலா… ஒரே ஒரு வா சாப்பிடேன்…”

நுற்றிப்பதினெட்டாவது முறையாகக் கேட்டார் சுப்பாமணி.

“வேண்டாண்டா சுப்பா…”

அந்த நேரம் பார்த்து மோகனா அங்கு வந்தாள்.

“கொல்லைக்கட்டுல கலியன் வந்து நிக்கறான்…” என்று அறிவித்தாள்.

பற்ற வைத்தவுடன் ‘விருட்’ டென்று மேலே போகும் ராக்கெட் வானத்தைப் போல ‘விருட்’ என எழுந்தாள் குந்தலாம்பாள்.

காணாமல் போனக் குழந்தையைக் கண்ணெதிரில் கண்ட தாயைப் போல ‘ஓ…!’ வெனப் பெரிதாகக் கதறி அழுதாள்.

கலியனும் கதறினான்.

“அம்மா…!”

“சொல்லு கலியா…!”

“கொள்ளி வெச்சபிறகு, மீண்டும் சிதையைக் கலைச்சி அய்யாவை நான் தொட்டுட்டேன்மா…! என்னை மன்னிச்சிடுங்கம்மா…!”

அரற்றினான் கலியன்.

“தாயா புள்ளையா பழகற நீ தொட்டாத்தான் என்னடா…? மலட்டுக் கொடலா இருந்திருந்தா, அய்யாவுக்கு உன்னைத்தாண்டா கொள்ளிபோடச் சொல்லியிருப்பேன். நீ தொட்டதால அய்யாவுக்கு சொர்க்கம் நிச்சயம்டா…”

உணர்ச்சி வசப்பட்டாள் குந்தலாம்பாள்.

“அய்யா ஆசைப்பட்ட மாதிரி, நம்ம வய வழியா அய்யாவைக் கொண்டுபோக முடியாமப் போயிருச்சேன்னு, மனசு விட்ராதீங்கம்மா…”

“……………………………………..”

கலியன் சொல்ல வருவதை அமைதியாகக் காது கொடுத்துக் கேட்டாள் குந்தலாம்பாள்.

“அய்யாவோட கடைசீ ஆசையைத் தீர்த்து வைக்கறதுக்காகத்தான் நான் அய்யாவைத் தொட்டேன்ம்மா…”

“என்னடா சொல்ற கலியா..?”

அய்யா தன்னிடம், மாற்று ஏற்பாடு செய்யச் சொன்னதையும், அயிலாண்டக் கிழவி சொன்ன சாங்கியத்தையும் சொன்னான்.

அதற்குத் தேவையான மாதய்யாவின் முடி, நகம், அரணாக்கொடி ஆகியவற்றை சிதை பிரித்து எடுத்து வந்ததைப், பையில் வைத்திருந்த பித்தளைச் சம்புடத்தை எடுத்துத் திறந்துக் காட்டினான் கலியன்.

“அம்மா, இதையெல்லாம் பத்திரமா வெச்சிருந்து, இதுதான் பாதைனு சம்பாக் காணியைக் காட்டற காலம் வந்ததும், ஒரு பானைல இதுங்களை வெச்சி அந்தப் பாதை வழியே கொண்டு போயி மயானத்துல வெச்சி எரிச்சிட்டோமுன்னா அய்யா ஆசை தீந்துடும்மா…”

“கலியா……………………………………………………..

என்பதற்கு மேல் குரல் எழவில்லை. அந்த மௌனத்தில் ஏகமாய்ப் பேசினாள் குந்தலாம்பாள்.

இந்த ஊரில், இந்த மயானத்தில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள், வேறு ஊரில், வேறு நாட்டில் அடக்கம் ஆக நேர்ந்துவிட்டால், அடக்கம் ஆவதற்கு முன் அந்த உடலிலிருந்து தலைமுடி, நகம், அரணாக்கொடி என எதையாவது ஒன்றை எடுத்து வந்து அதை பானையில் வைத்து விரும்பிய இடத்தில் அடக்கம் செய்தால் ஆன்மா சாந்தி ஆகும் என்பது நம்பிக்கை.

வாழ்க்கை முழுதுமே நம்பிக்கையில்தானே இருக்கிறது.

பரிகாரம் செய்யும் வழிமுறைகளை அயிலாண்டக் கிழவியிடம் தெரிந்துக் கொண்டு, உள்ளூரிலேயே அடக்கம் செய்யப்பட்டாலும், மாதய்யாவின் ஞாயமான ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில், சிதைப் பிரித்து எடுத்து வந்தவைகளைப் பார்த்தபோது, கண்ணீர் பெருகியது.

கலியனை கட்டித் தழுவி ‘மகனே…’ என்று உச்சி மோந்து ஆராதிக்க வேண்டும் போல் இருந்தது.

“ஒரு நிமிஷம்…” என்றாள் குந்தலாம்பாள்.

‘சரட்’டென உள்ளே போனாள்.

இரண்டு தட்டுக்களில் சாப்பாடு எடுத்து வந்தாள்.

“கலியா சாப்பிடு. நானும் இப்போ உன்னோடு சேந்துதான் சாப்பிடப் போறேன்.”

‘அக்கா ஏன் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறாள்…?’ என்று குழப்பமாக இருந்தது சுப்பாமணிக்கு.

‘எப்படியோ அக்காள் சாப்பிட்டால் சரிதான்…!’

தன்னைச் சமாதானம் செய்துகொண்டான் சுப்பாமணி.

எசமானியம்மாளோடு சேர்ந்து சமதையாக சாப்பிட்டதில்லை என்பதால் கலியன் மிகவும் கூச்சப்பட்டான்.

“பெத்த தாய்க்கு முன்னே இப்படித்தான் கூச்சப்படுவியா கலியா…?”

குந்தலாம்பாளின் கேள்வியில் நெகிழ்ந்த கலியனும் பசியாறினான்.

அதற்குப் பின் மூன்று நாட்கள் சுப்பாமணி அந்தனூரில்தான் இருந்தார்.

நான்காம் நாள் காலை முற்றத்தில் உள்ள துளசி மாடத்து அருகில் ஜப மாலையுடன் உட்கார்ந்திருந்தாள் குந்தலாம்பாள்.

“ஆபீஸ்ல ஆடிட் வர்றதுக்கா. நான் புறப்படறேன். பத்தாம் நாள் காரியத்துக்கு வந்துடறேன். சொல்லிண்டு போகக் கூடாது…” என்றுச் சொல்லிவிட்டுக் கிளம்பினார் சுப்பாமணி.

சுப்பாமணிக்குக் கட்டைக் குட்டையானச் சரீரம். அவர் நடந்து செல்லும்போது பார்த்தால் நீளவாக்கில் இருக்கிற பப்பாளிப் பழத்துக்கு கையும் காலும் முளைத்து பேண்ட் சட்டைப் போட்டு நடப்பது போல இருக்கும்.

மெட்ராஸ் மாநகராட்சியில் சப் கலக்டருக்குப் (நேர்முக உதவியாளராக) ‘பி ஏ’ வாக இருக்கிறார்.

தமிழ்நாட்டில் எல்லா ஜில்லாக்களிலும் அவர் வேலை பார்த்திருக்கிறார்.

அவருடைய ஆங்கில உச்சரிப்பு ஆங்கிலேயர்களையெல்லாம் மிஞ்சியதாக இருக்கும்.

அவர் எழுதும் ஆங்கிலக் கடிதங்கள் அவ்வளவு வலிமையாக கட்டமைக்கப்பட்டிருக்கும்.

சுப்பாமணி நைஷ்டிக பிரம்மச்சாரி.

அவருடைய பணி, (குறிப்பாக அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங்), எந்த ஜில்லாவுக்குத் தேவையோ அங்கே டெபுடேஷனில் அவரைத்தான் அனுப்புவார்கள்.

எந்த ஜில்லாவுக்கு எப்போது அனுப்பினாலும் கல்யாணம் செய்துகொள்ளாத நைஷ்டிக பிரம்மச்சாரியான சுப்பாமணி சந்தோஷமாகப் போவார்.

இப்படி ஜில்லா ஜில்லாவாகச் சுற்றியதால் அவருக்கு எல்லா ஜில்லாக் கலெக்டர்களும் அறிமுகமானவர்களாகத்தான் இருந்தார்கள்.

ஜில்லா கலெக்டர் நெருக்கம் என்பதால் எந்த விதமான அனுகூலங்களையும் பெற்றவரில்லை அவர்.

யாருக்காகவும் , எதற்காகவும் சிபாரிசு என்று நின்றவரில்லை.

தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பதாலோ என்னவோ, எல்லா ஜில்லா கலெக்டர்களுக்கும் சுப்பாணியின்மேல் ஒரு பிரியம் உண்டு.

மூன்று நாட்களும், ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளாமல், ஒரு இறுக்கமான அமைதியில் இருந்தது வீடு.

துரைராமன் ஓரிரு முறை அம்மாவோடு பேச முயற்சித்தப் போதும் குந்தலாம்பாள் முகம் கொடுத்துப் பேசவில்லை.

‘இன்னும் இரண்டு நாட்கள் போனால் சரியாகிவிடும்’ என்று அதற்குப்பின் பேச முயற்சிக்கவே இல்லை துரை.

காலை ஏழுமணிக்கும் சாஸ்திரிகள் வருவார்.

நித்யவிதிச் சாங்கியங்களைச் செய்து வைப்பார்.

அதெல்லாம் முடிந்தவுடன் சாப்பிடுவான் துரை.

கிட்டாவய்யா வீட்டுக்குச் சென்றுவிடுவான்.

“அம்மா… தபால்…”

“மாதய்யாவின் மறைவிற்குப் பின் வரும் முதல் தபால் இது.”

குந்தல்லாம்பாளே வாசலுக்கு வந்தாள்.

வழக்கமாக “அய்யா… தபால்…” என்று சொல்லித் தபால் தரும் சபாபதி சூழ்நிலைக்குத் தக்கவாறு “அம்மா தபால்…” என்று முதல் முதலாய் விளித்தான்..

அம்மா தபால் வாங்க வந்ததைப் பார்த்ததும் அழுகை வந்துவிட்டது சபாபதிக்கு.

விவேகானந்த கேந்திரத்திலிருந்து அவ்வப்போது இப்படி எதாவது தபால் வரும் மாதய்யாவுக்கு.

புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டுக் கீழண்டை உள்ள குட்டிச் சாரமனைத்திண்ணையில் உட்கார்வார் மாதய்யா.

மாணவர்கள் தேர்வுக்கு ஒரு மணி நேரம் முன் உட்கார்ந்து, மிகக் கவனமாக ரிவைஸ் செய்வார்களே அப்படி இருக்கும் அவர் படிப்பது.

ஒரே மூச்சில் புத்தகம் முழுவதும் படித்துவிட்டுத்தான் எழுவார்.

மாதய்யா இல்லாத திண்ணை மேலும் சபாபதிக்கு வருத்தத்தைக் கொடுத்தது.

தபாலை டெலிவரி செய்துவிட்டு, போஸ்ட்மேன் சபாபதி கனத்த இதயத்துடன் கிளம்பிப் போனார்.

விவேகானந்தரின் சிந்தனைகள் என்ற அந்த சின்னஞ்சிறு வெளியீட்டைப் பிதித்து வைத்தபடி முதல் முறையாக மாதய்யா போல அந்தத்திண்ணையிலேயே அமர்ந்தாள்.

கவனமாகப் படித்தாள் குந்தலாம்பாள்.

மாதய்யா, ராணுவத்தில் இருந்தபோது, ரமணன் என்ற கெர்னல் நெருக்கமானார்.

மாதவனின் புரட்சிகரமான கருத்துக்களையும் எண்ணங்களையும் கண்டு வியந்தார் அந்தக் கெர்னல்.

விவேகானந்த கேந்திரத்தை மாதவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அவர் நூல்களைக் கொடுத்துப் படிக்கச் செய்தார்.

மெட்ராஸில் கேம்ப் வந்தது

விவேகானந்தர் இல்லத்திற்கு மாதவனை அழைத்துச் சென்றார், கெர்னல் ரமணன்.

விவேகானந்தரின் புரட்சிகரமான எழுச்சிமிக்கக் கருத்துகளில் தன்னை இழந்தார் மாதவன்.

பப்ளிகேஷன்ஸ் டிவிஷனில் ஆயுள் சந்தா கட்டினார்.

கேந்திரத்தில் எது அச்சிடப்பட்டாலும் அது மாதய்யாவின் அந்தனூர் விலாசத்துக்கு வந்துவிடும்.

அவர் படித்த அந்தப் புத்தகங்களை வரிசையாக அடுக்கிப் பராமரிப்பார் மாதய்யா.

திருப்பளாத்துறை ராமகிருஷ்ண மடத்தோடும் நல்லத் தொடர்பு உண்டு மாதய்யாவுக்கு.

அவ்வப்போது அங்கு போவதும், அங்குள்ள மாணவர்களுடன் ஒரு நாள் முழுதும் மகிழ்ச்சியாக இருந்துவிட்டும் வருவார்.

இதுவும் அவரின் உன்னதமான காரியங்களில் ஒன்று.

திருப்பளாத்துரையிலும் அவ்வப்போது துண்டுப்பிரசுரங்கள், சஞ்சிகைகள் தருவார்கள். அதையும் வாங்கி வருவார்.

படிப்பார்.

பாதுகாப்பாக பீரோவில் அடுக்கியும் வைத்திருக்கிறார் மாதய்யா.

‘மனைக்கு விளக்கம் மடவார்’

என்கிறார் விளம்பி நாகளார் தன் நான்மணிக்கடிகை 105 வது செய்யுளில்.

மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்றான் பாரதி.

ஒரு பெண்ணுக்குத் தரும் கல்வி அந்தக் குடும்பத்துக்கே தருவதாகும் என்கிறார் கர்ம வீரர் காமராஜர்.

இந்தக் கருத்துக்களையெல்லாம் முழுமையாகத் தன் வாழ்நாளில் கடைபிடித்தவர் மாதையா…

பெண் கல்வியின் முக்கியத்துவம் அறிந்த மாதையா குந்தலாம்பாளுக்கு விவேகானந்த கேந்திரத்தில் இருந்து வரும் புத்தகங்களையெல்லாம் அவளிடம் கொடுத்துப் படிக்கச் சொல்வார்.

மாதய்யாவின் உள்ளார்ந்த ஊக்குவிப்பின் விளைவு…

மாமியாரின் கடுமையானச் சட்டதிட்டங்களுக்கும், கொடுமைகளுக்கும் மத்தியில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் விவேகானந்தர் இல்லத்திலிருந்து வந்திருக்கும் கையேடுகளையோ, நோட்டீஸ்களையோ, புத்தகங்களையோ எடுத்துப் படிப்பது குந்தலாம்பாளுக்கு வழக்கமாகிப் போனது.

விவேகானந்தரின் வீர வரிகளை நிறையப் படித்ததன் தாக்கமாய், பெண்களின் முன்னேற்றத்துக்கு இடையூராக வரும் எந்தக் கருத்துத் திணிப்புகளையும், சாங்கியங்களையும், சாஸ்திரங்களையும் எதிர்த்துப் போராடத் தூண்டியது.

காசியாத்திரை சென்றிருந்த குந்தலாம்பாளின் தங்கை புஷ்பா செய்தி அறிந்து மூன்றாம் நாள்தான் வந்து சேர்ந்தாள்.

அவளைப் பார்த்து துக்கம் விசாரிக்கவும் பெண்டுகள் வருவதும் போவதுமாக இருந்தது.

நான்காம்நாள் திருப்பணிப்பேட்டை பரிபூரணியம்மா, துக்கம் விசாரிக்க வந்தாள்.

சாரதா கொடுத்த காப்பியைப் பருகினாள்.

பின் கட்டுக் கிணற்றடிக்குச் சென்றாள்.

அம்பாரமாய்க் குவிந்து கிடந்த பாத்திரைங்களின் மேல் இரண்டு பக்கெட் தண்ணீரை கிணற்றிலிருந்து இறைத்துக் கொட்டினாள்.

மனைப் பலகையைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து எல்லாப் பத்துப் பாத்திரங்களை ஒரு ஈடு தேய்த்துப் போட்டாள்.

பரிபூரணி அப்படித்தான். எங்கே போனாலும் ஒரு வாய்த் தண்ணீர்க் குடித்தாலும் அதற்கு ஈடாக ஏதாவது வீட்டு வேலை செய்துவிட்டுத்தான் திரும்புவாள்.

“உழைக்காமச் சாப்பிடக்கூடாது” என்பாள் அவள்.

தொரை… என்ற அழைத்துக்கொண்டே அடுத்தாற்போல் வந்தாள் லலிதா மாமி.

“……………………………………..”

“தொரை… இந்தப் பத்து நாளுக்குள்ள உங்க அம்மாவை மெட்ராஸ்ல உன் ஜாகைக்கு அழைச்சிண்டு போகணுமேடா…!” என்றாள் நீட்டி முழக்கியபடி

“எதுக்கு மாமி…?” வெள்ளந்தியாகக் கேட்டான் துரை.

“ போடாப் பைத்தியம்… ஆளுதான் வளர்ந்திருக்கயேத் தவிர, எதுவும் தெரியலை நோக்கு.”

“என்ன சொல்றேள் மாமி…?”

“சொரைக்காவுக்கு உப்பு இல்லேன்னு சொல்றேன்…” என்று தொடங்கினாள்.

“தொரை, மெட்ராஸ் ஜாகைல உனக்கு எதாவது நல்லதுகெட்டதுன்னா உங்கம்மாதானே வரணும் அங்கே…?”

“ஆமாம்.”

“இந்தப் பத்து நாளுக்குள்ளே அவ எந்தெந்த வீட்டுக்குள்ளே காலடி பதிக்கறாளோ, அந்த வீட்டுக்குள்ளதான் அப்பாவோட வருஷ திவசம் முடியறவரைக்கும் நுழையலாம்.”

“மத்தவாளாத்துக் குத்துக்கல் மிதிக்கப்படாது. சாஸ்த்ரம் சொல்றது.”

“……………………………………..”

“நான் யாராத்துக்கும் போறதா இல்லை.” குந்தலாம்பாள் உறுதியாக மறுத்தாள்.

பட்டக சாலையில், ஒன்பது வயதில் கண்யாணம் ஆகி, பத்து வயதில் கணவனை இழந்து, மொட்டை அடிக்கப்பட்டு நார்மடிச் சேலையை முட்டாக்குப் போட்டுக் கொண்டு கூன் முதுகுடன், உட்கார்ந்திருந்த, புஷ்பாவையும், அவள் பட்ட, படுகின்ற பாட்டையும் குந்தலாம்பாள் நினைத்து நினைத்து உருகினாள்.

நாம் என்ன மனிதர்கள்தானா…?’ விவேகானந்தரின் கேள்வியோடு தொடங்கியது அந்தக் கையேடு.

பெண்களுக்கு பதினொரு வயது ஆனதும் திருமணம் செய்து கொடுக்கவில்லை என்றால் அவர்கள் கெட்டுப் போவார்கள் என்று சொல்பவர்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்தானா?.

மனு என்ன சொல்கிறார்?

’கன்யாப்யேவம் பாலனீயா சிக்ஷணீயாதியத்னத\

[-பெண்களையும் மிகுந்த முயற்சியுடன் வளர்க்க வேண்டும், சிறந்த முறையில் கல்வியளிக்க வேண்டும்.]

என்றல்லவா சொல்கிறார் மனு.

மனுதர்மம் மனுதர்மம் என்று மூச்சுக்கு மூச்சு சொல்பவர்களுக்கு இந்தக் கருத்து மட்டும் தெரியாமல் போனது எப்படி?

ஆண்கள் எப்படி முப்பது வயது வரையில் பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கிறார்களோ, கல்வி பெறுகிறார்களோ, அதேபோல் பெண்களுக்கும் செய்விக்க வேண்டும்.

உங்கள் பெண்களின் நிலையை உயர்த்துங்கள் இல்லாவிட்டால் மிருக நிலையில்தான் இருப்பீர்கள்.

…பெண்களுக்கு 9 வயதிலேயே திருமணம் செய்கின்ற வெட்கக்கேட்டை நிறுத்த வேண்டும். எல்லா பாவங்களுக்கும் இதுதான் ஆணிவேர்.

நண்பரே, இது ஒரு மாபெரும் பாவம். சிறுவயதுத் திருமணத்தை நிறுத்துவதற்கு அரசாங்கம் ஒரு சட்டம்போட முனைந்தவுடன் நமது உதவாக்கரை மக்கள் போடுகிறக் கூச்சலை நினைத்துப் பாருங்கள், என்ன கேவலம்! நாமாக அதை நிறுத்தாவிட்டால் அரசாங்கம் தலையிடவேச் செய்யும், அதைத்தான் அரசாங்கம் விரும்பவும் செய்கிறது…

10 வயதுப் பெண்ணிற்கு, தொப்பைப் பெருத்த, வயதான ஒரு கணவனைப் பார்த்துப், பெற்றோரே அவனது கையில் பிடித்துக் கொடுத்து விடுகிறார்கள். என்ன பயங்கரம்!..

…எட்டு வயதுச் சிறுமி முப்பது வயதான ஒருவனுக்கு மணம் செய்விக்கப்படுகிறாள்;

சிறுமியின் தாய்தந்தையர் ஆனந்தத்தில் மூழ்குகின்றனர். இதை எதிர்த்து யாராவது வாய் திறந்தால் போதும், ’ஆ, நமது மதம் போய்விட்டது’ என்று கூக்குரலிடுகின்றனர்.

8 வயது சிறுமியைத் தாயாக்கி, அதற்கு விஞ்ஞான விளக்கமும் கூற முற்படுவோரிடம் என்ன மனிதத்தை எதிர்பார்க்க முடியும்?

இளமை மணம் என்ற இந்தக் காட்டுமிராண்டித் தனத்தை என் வலிமை கொண்டமட்டில் நான் நசுக்கி ஒழிப்பேன்…

குழந்தைகளுக்குக் கணவனைத் தேடித் தருவதாகிய இத்தகைய செயல்களில் நான் எவ்வித பங்கும் கொள்ள முடியாது, நிச்சயமாக முடியாது. இறையருளால், நான் அதைச் செய்ததுமில்லை, செய்யப் போவதும் இல்லை…குழந்தைக்குக் கணவனைத் தேடித் தருகின்ற ஒருவனை நான் கொல்லவும் செய்வேன்.

இதையெல்லாம் படித்தபின் தன் தமக்கையின் குழந்தை விவாகமும், வைதவ்யமும் நினைவில் வந்து உறுத்தியது குந்தலாம்பாளுக்கு.

சிறு வயதில் இதெல்லாம் தெரிந்து, தமக்கைக்கு நடந்தக் கொடுமையைத் தட்டிக் கேட்கக் கையாலாகாமல் போனதே என்ற கழிவிரக்கத்தில் கலங்கினாள் .

தற்போது துக்கம் கேட்க வந்தவள், தன் தமக்கை புஷ்பாவின் துக்கத்தையும் கிளறி விட்டுவிட்டாள். நெருப்புத் தணலுக்கு உள்ளே அடைந்துகிடக்கிறாற்போல உஷ்ணம் தகித்தது

எறும்புப் புற்றைக் கிளறி விட்டாற்போல நினைவுகள் வரிசையாய் குந்தலாம்பாள் முன் அணிவகுத்துச் சென்றன.

வெள்ளித்திரையில் சினிமாக் காட்சிகள் விரிவது போல

குந்தலாம்பாளின் மனத்திரையில் தன் தமக்கையின் பால்ய விவாகக் காட்சிகளும், வைதவ்யக் காட்சிகளும் விரிந்தன.

– தொடரும்…

விகடன் மின் இதழான மை விகடன் இதழில், 02.05.2022 அன்று கலியன் மதவு என்ற சமூக நாவல் தொடங்கித் தொடர்ந்து 28.01.2023 ல் அதை நிறைவு செய்யும் வரை, அதைச் சிறப்பாக வெளியிட்டு ஊக்குவித்த ஆனந்த விகடன் ஆசிரியர், மற்றும் ஆசிரியர் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் – ஜூனியர் தேஜ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *