வானம்பாடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 30, 2012
பார்வையிட்டோர்: 21,128 
 
 

எதிரே நின்றான் அந்த முஸல்மான் பக்கிரி. தலையில் பச்சை கிர்க்கி முண்டாசு. உடலில் கறுப்பு அங்கி. இடுப்பில் கைலி. இடது கையில் ஒரு யாழ்ப்பாணத்து கப்பறை. வலது கையில் ஒரு துணி மூடிய கூண்டு. அதன்மீது அநேக கண்ணாடி மணிகள் போடப்பட்டிருந்தன. பக்கிரியின் மை தீட்டிய அழகிய கண்கள் அவன் தோற்றத்திற்கு அமைதியையும் அஞ்சா உறுதியையும் தந்துகொண்டிருந்தன.

ஜமீந்தார் சோபாவில் உட்கார்ந்ததும் மீசையைத் திருக ஆரம்பித்துவிட்டார். வேலையாட்கள் விசிறியைப் பிடித்தனர்.

”அல்லா ஹூ அக்பர்” என்று வணங்கினான் பக்கிரி.

”என்ன வேண்டும்?”

”என் இஸ்ராபேலின் பாட்டை கொஞ்சம் கேட்டருள வேண்டும்.”

”எங்கே?”

பக்கிரி, ”இஸ்ராபேல்!” என்றொருமுறை அழைத்தான். அவ்வளவுதான். ஒருகணம் ஆற்றங்கரையோரத்தில், நக்ஷத்திரமும் நள்ளிரவும் சூழ்ந்த நேரத்தில், ஆகாயத்தை முத்தமிடும் மணிக்கூட்டினின்று சிதாருடன் இரண்டறக் கலந்து உருகும் கோஷா ஸ்திரீயின் கனிந்த குரல் காதல் தீ மூளப் பாடுவதுபோல் இஸ்ராபேலின் இன்னிசை எழுந்தது. மறுகணம் அம்மணிக்கூண்டினடியில், பெண்ணின் குரலோசைகொண்டு கற்பனைத் தூரியத்தால் பெண்ணையே ஊகித்து உருவாக்கும் பித்தர்களின் கட்சிப் பிரதிகட்சி ஒலித்தது, ஒரு கணம் வெண்ணிலவில், பாசி சேர்ந்து பாழடைந்த பழம் மண்டபங்களினின்று கிளம்பும் நரிகளின் ஊளை போன்று, ஆசை மண்ணான கதை பாட்டில் மிதந்தது. மறுகணம், கண்கள் தீப்பறக்க, கத்தியும் கேடயமும் மோத, குளிர் நிலாக் கதிர் கத்தியின்மீது விழுந்து துண்டாக, காதலிக்காக போர்புரியும் வீரர்களின் முழக்கம் பொங்கிற்று.

”இஸ்ராபேல்!” என்று குறுக்கிட்டான் பக்கிரி. ஒரு நிமிஷம் நிசப்தம். மறு நிமிஷம் இசைக் சித்திரம் மாறிவிட்டது. கருக்கலின் கனக ஒளியில், மோனக் கடல் மீது இன்னிசைத் தோணி ஒன்று மனிதரை நோக்கி மிதந்துவந்து, மக்கி மண்ணாகும் யாத்ரீகனைத் தட்டில் ஏற்றி அமரனாக்கும் பரிவும் போதமும் பூர்ணமாய் தொனித்தது.

”இஸ்ராபேல்! என் குருவே!” என்றான் பக்கிரி. இன்னிசையின் தெய்வ உலகு மறைந்துவிட்டது. ஜமீன்தாருக்கு தன் நினைவுவர இரண்டு வினாடி சென்றது.

”பக்கிரி! இன்னும் கொஞ்சம்” என்றுவிட்டு, தன் வேலையாளியிடம் எதோ சொல்லி உள்ளே அனுப்பினார் ஜமீன்தார்.

”நல்லது… இஸ்ராபேல்!” என்றான் பக்கிரி.

சுருதி மாறிவிட்டது. இருபுறமும் செழித்தோங்கி வளரும் மரங்கள் நிறைந்த ரஸ்தாவில், செக்கச் செவேலென்ற உடலும், கலங்கிய கண்களும், கபந்தனைப் போல் விரிந்த கைகளும் கொண்ட ஒருவன் உட்கார்ந்து, எல்லாப் பொருள்களையும் எனதாக்குவேன் என்று பேரவாக்கொண்டு கொட்டாவிவிட்டு ஏங்கும் சப்தம் தொனித்தது.

”பக்கிரி! சபாஷ்! என் ஜன்மத்திலேயே இந்த மாதிரி அனுபவம் கிட்டியதில்லை.”

ஆண்டவன் அருள்… இஸ்ராபேல்! என்குருவே என்று வணங்கினான் பக்கிரி. ”பக்கிரி! இந்த வானம்பாடி ஏது?”

”இதை குஞ்சு முதல் வளர்த்துவருகிறேன். ரொம்ப தொல்லைப்பட்டேன் இதைப்பிடிக்க.”

”எனக்கு வேண்டுமே இது.”

”அதற்கென்ன மஹராஜ்? ஆனால் வானம்பாடிகள் இங்கே கிடைப்பதில்லை. வடக்கே இருந்து இந்தப்புறமாக சிற்சில காலங்களில்தான் வரும்.”

ஐந்து வருஷத்திற்கு முந்தி வைகாசி மாதம். அறுவடை முடிந்துவிட்டது. வயல்களில் அவுரியும், பயறும் தழைத்திருந்தன. எங்கும் வசந்தத்தின் இனிமை.

ஒரு நாள் அதிகாலையில் எங்கள் கிராமத்து மசூதியில் உட்கார்ந்து தொழுதுகொண்டிருந்தேன். வானவெளியென்னும் மசூதியிலிருந்து தெய்வக்குரல்கொண்ட வானம்பாடிகள் மெளல்விகளைப் போல் பாடிக்கொண்டிருந்தன. என் காலைத் தொழுகையை சற்று விரைவுபடுத்தி முடித்தேன். வானம்பாடிப் பைத்தியம் தலைக்கேறியது. தினம் அதுகள் பாடும். ஆனால் அவைகள் வசிக்கும் இடம் மட்டும் தெரியவில்லை. ஒரு மாதத்திற்குப் பிறகு அவைகள் இருப்பிடம் தெரிந்தது. அவைகள் குஞ்சு பொரித்திருந்ததும் தெரிந்தது.

என் சந்தோஷத்தைக் கேட்பானேன்? நானும் பின்னொரு பக்கிரியுமாக அந்த மாந்தோப்புக்கு ஒரு நாள் சென்றோம். அரை மணி வரையில் எங்கள் ஜபமாலையை உருட்டிக் கொண்டிருந்தோம். ஏனெனில் போனவுடன் எங்கள் கண்ணில் அவைகள் படவில்லை. பின்பு ஒரு ஜோடி தென்பட்டபொழுது, அவைகள் நகர்ந்தும், பறந்தும் வெட்டுக் கிளிகளைப் பிடித்துக்கொண்டிருந்தன. எவ்வளவு சிறிய உருவத்திற்குள் எவ்வளவு பெரிய தெய்வக்குரல் ஒளிந்திருக்கிறது! ஒரு வானம்பாடி மட்டும் அடிக்கடி எழுந்து அவுரிப் பயிர் நடுவில் இறங்கி, இரண்டொரு நிமிஷமிருந்துவிட்டு, திரும்பியும் வெட்டுக்கிளி பிடிக்கவருவதே வேலையாயிருந்தது. எனவே அவுரிப்பயிர் நடுவில்தான் எங்கேயோ குஞ்சுகளிருக்கின்றன என்று ஊகித்தேன். இப்படியிருக்கும்பொழுதே வானம்பாடிகள் எங்களைப் பார்த்துவிட்டன போலும்! உடனே ஒரு குருவி எங்கோ பறந்துவிட்டது. மற்றொன்றுமட்டும் பறந்துபோகவும் இல்லை, அவுரி நடுவில் வந்து இறங்கவுமில்லை. ஆனால் சில நிமிஷங்கள் கண்ணில் படும். பிறகு மாயாவித்தனமாய் மறைந்துபோகும்.

இப்படியே கொஞ்சநேரம் கழிந்த பிறகுதான், அதனுடைய தந்திரம் எங்களுக்குத் தெரியவந்தது. மிருகங்களும், பக்ஷிகளும் குஞ்சு குழந்தைகளைக் காப்பதுபோல், நாம் காப்பதில்லை. அவைகளுக்குத்தான் எவ்வளவு அற்புதமான தந்திரமும், முன்னுணர்ச்சியும் ஆண்டவன் அமைத்திருக்கிறான்! முன்போல அவுரிப்பயிர் மேலே வந்து இறங்கினால், அக்குஞ்சுகளிருக்கும் இடம் எங்களுக்குத் தெரிந்துவிடுமாம். நுழைந்து, குஞ்சுகளுக்கு தத்துக்கிளியைக் கொடுத்துவிட்டு, வந்த வழியாகவே திரும்பிப்போனால் நாங்கள் அறியமாட்டோமாம்! என்ன அறிவு!

அப்பால் அவுரிப் பயிர்களை விலக்கிக் கொண்டு, வயலில் நுழைந்து கொஞ்சம் தேடிய பிறகு, நெருங்கி வளர்ந்திருந்த அவுரித் தண்டுகளுக்கிடையில் ஒரு வட்டில் ஐந்தாறு குஞ்சுகள் இருந்தன. அதில் ஒன்றை எடுத்துவந்தேன். அதுதான் இஸ்ராபேல்.

”வானம்பாடியை எப்படி வளர்ப்பது?” என்றார் ஜமீன்தார்.

”கொஞ்சம் சிரமப்பட்டால்தான் வளரும். காலையும் மாலையும் வானம்பாடியைக் கூண்டுடன், நஞ்சை அல்லது நந்தவனமுள்ள இடத்திற்கு எடுத்துச் சென்று நல்ல காற்று குருவியின் மீது படச் செய்யவேண்டும். அங்கேயே கூண்டை சுத்தம் செய்துவிட வேண்டும். பிறகு வீட்டிற்குத் திரும்பி ஒரு குடுவையில் கம்பும், ஒரு குடுவையில் கொஞ்சம் தத்துக் கிளியும், ஒரு கிண்ணியில் ஜலமும் வைத்துவிட்டு, கூட்டைச் சுற்றி துணியால் மூடிக் கட்டிவிட வேண்டியதுதான். நடுவில் நடுவில் மேலே சொன்ன ஆகாரம் கொஞ்சம் வைக்கலாம், குருவிகளை வளர்ப்பதில் ரொம்ப கவனம் செலுத்தவேண்டும், இல்லாவிட்டால் பிரயோஜனப்படாது.”

”ஆமாம் பக்கிரி, எனக்கு இது வேண்டுமே.”

”கூட்டைத் துணியால் மூடிய கொஞ்ச நேரத்திற்குப் பிறகு, குருவிகள் மஜா கிளம்பிவிடும். அதற்கப்புறம் உங்கள் நாரதர் பாட்டுக்கூட இதற்கெதிரில் நில்லாது. வானம்பாடி அல்லாவின் அதிசய சிருஷ்டி! மகாப் பிரபு!… நான் உயிர் வாழ்வது சாப்பாட்டினாலல்ல, தூக்கத்தினாலல்ல. வாக்கில் ஆண்டவன் திருநாமமும், காதில வானம்பாடியின் தேன்மடை திறந்த பாட்டும், என் உணவும் உறக்கமுமாகிவிட்டன…”

”பக்கிரி! நான் கேட்டது காதில் விழவில்லையா?”

”வானம்பாடிகளுக்கு பதினெட்டு பாஷை தெரியும். எனக்கு இன்னும் ஒரு ஆசை இருக்கிறது.”

பக்கிரிமீது இந்த மாதிரி சமயத்தில் யாருக்கும் கோபம் வரத்தான் செய்யும். தன் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் அவன் தன் போக்கிலேயே பேசுவதின் நோக்கமாவது, பொருத்தமாவது ஜமீன்தாருக்கு மட்டும் எப்படித்தெரியும்?

”பக்கிரி” என்று வெறுப்புடன் அழைத்தார் ஜமீன்தார்.

”மஹாராஜ், அதற்குத்தான் ஜவாப் சொல்லிவருகிறேன். இன்னும் ஒரு ஆசை பாக்கி, அதாவது இஸ்ராபேல் இப்படிப் பாடுவது எனக்கு போதாது. வானம்பாடிக் கூண்டின்மீது வருஷத்திற்கு ஒரு திரை வீதம், ஏழு மெழுகு சீலைத் திரைவரை அதிகப்படுத்தி, கூண்டினடியில் கல்லைக்கட்டி, கிணற்று ஜலத்தடியில் இறக்கிவிட்டு நாம் குரல் கொடுக்கவேண்டும். அப்பொழுது அது பாடுவதைக் கேட்கவேண்டும்மென்று ஒரு பேராசை. அந்த எல்லையளவுக்கு நான் இன்னும் இதை பழக்கவில்லை.

”ரொம்பப் பெரிய யோசனையாயிருக்கிறதே.”

”நீங்கள் இந்த ஜாதி குருவியைப்பற்றி அதிகம் கேள்விப்பட்டதில்லை போலிருக்கிறது. என் ஜோடிதாரி ஒரு வானம்பாடி வளர்த்தான். தெக்கால் உத்ஸவங்களுக்கும், கந்தூரிக்கும் நாங்கள் போவதுண்டல்லவா? அப்பொழுது அவனுடைய வானம்பாடி தவுல், மேளம் இதுகளைக் கேட்டவுடனேயே தலைக்கு பித்தேறி பாட ஆரம்பித்துவிடும். கேட்டவுடனேயே தலைக்கு பித்தேறி பாட ஆரம்பித்துவிடும். அடாடா! கட்டிலடங்காத சுகத்தை ஆண்டவன் எப்படித்தான் ஒரு எலுமிச்சங்காய் அளவு குருவிக்குள் அடைத்தாரோ? இப்பொழுதுகூட நாகூர் கந்தூரிக் கூட்டமும், சந்தனக்கூடும், மேளக்கச்சேரியும், எல்லாவற்றிற்கும் மேல் அந்தக் குருவியின் பாட்டும் என் மனத்தில் தோணுது. வானம்பாடிகள் அல்லாவின் அருள்!”

அப்பொழுதுதான் உள்ளே இருந்து திரும்பிவந்த சேவகன், ஜமீன்தாரண்டை ஒரு சிறிய பெட்டியை வைத்தான். ஜமீன்தார் பெட்டியைத் திறந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை பக்கிரியிடம் நீட்டினார்.

”ஆண்டவன் சுகமளிப்பார்” என்று அதை வாங்கிக் கொண்டு வாழ்த்திவிட்டுத் திரும்பினான் பக்கிரி.

ஜமீன்தார் திகைப்படைந்தார். ”ஏன் பக்கிரி! பணத்தையும் கூட்டையும் சேர்த்து எடுத்துக்கொண்டு போனால்?”

இஸ்ராபேலின் பாட்டுக்காக சன்மானம் கொடுக்கப்பட்டதென்று நினைத்த பக்கிரியின் மனம் திடுக்கிட்டது. பக்கிரி திரும்பினான்.

”என்ன, இனாம் என்ற எண்ணமோ?” என்று நையாண்டி செய்தார் ஜமீன்தார்.

பக்கிரியின் உள்ளம் நடுநிலைமை அடைந்தது. மறுவார்த்தை சொல்லாமல் நோட்டை சோபாவின்மீது வைத்தான்.

”ரொம்ப முடுக்காய் இருக்கிறீரே பக்கிரி, இந்தக் குருவி எனக்கு வேண்டும்.”

”இதை விற்பதில்லை, வேண்டுமென்றால் வேறு கொண்டுவந்து தருகிறேன்.”

”எனக்கு இதுதான் தேவை. இந்தா…” என்று ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டினார்.

”எனக்கு பணம் தேவையில்லை. இதைக் கொடுக்கும் எண்ணமும் இல்லை.”

”விலை குறைவு என்ற தயக்கம்போல் இருக்கிறது.”

”ரூபாய் நூறு என்றாலும் சரி, மஹாராஜா! என் இஸ்ராபேல் வராது.”

பணத்திற்கும், முரட்டுத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும் பணிபவர்களோடேயே ஜமீன்தார் பழகியவரல்லவா? ஐந்து பச்சை நோட்டை எடுத்து வைத்துப் பார்த்தார்.

”ஐந்நூறு ரூபாய்”

”மஹாராஜா” அல்லாவின் அடிமைக்கு யாழ்ப்பாணத்து கப்பரையும், இஸ்ராபேலும், ஆண்டவன் நாமமுமே போதும்” என்று வெகு அடக்கமாய் சொன்னது ஜமீன்தாரின் கோபத்திற்கு அங்குசமாயிற்று.

”ஆயிரம்ரூபாய்”

”அல்லா ஹூ அக்பர்” என்றான் பக்கிரி.

ஜமீன்தார் வெறிகொண்டு ஸேபாவிலிருந்து பாய்ந்தார். பக்கிரியின் கூட்டைப் பிடுங்கி வீசி எறிந்தார். பக்கிரி விழி திருப்பவில்லை. மூச்சுவிடவில்லை. நொறுங்கிய கூட்டை வெறித்துப் பார்த்தான். நல்லவேளை! இஸ்ராபேலுக்கு யாதொரு ஆபத்துமில்லை. பாழடைந்த வீட்டின் நடுவே முளைத்து, வெளியே தலைநீட்டப் பார்க்கும் செடிபோல், குருவி பாழ்பட்ட கூட்டிலிருந்து திருதிருவென விழித்துக்கொண்டிருந்தது.

பக்கிரியின் முகத்தில் ஓர் அமைதி தவழ்ந்தது. ”இஸ்ராபேல்! ஆண்டவனே அரசன். கிஸ்மத்தே செங்கோல்” என்று வானைப் பார்த்து வாழ்த்திக்கொண்டிருந்தபோதே, ‘சிவ்’வென்று இஸ்ராபேல் இறகு விரித்தது.

தெளிவாய்க்கேட்டது அதன் பாட்டு. இருபுறமும் செழித்தோங்கி வளரும் மரங்கள் நிறைந்த ரஸ்தாவில் செக்கச்செவேலென்ற உடலும் கலங்கிய கண்களும், கபந்தனைப்போல் விரித்த கைகளும் கொண்ட ஒருவன் உட்கார்ந்து எல்லாப் பொருள்களையும் எனதாக்குவேன் என்று பேரவாக்கொண்டு கொட்டாவிவிட்டு, ஏங்கும் சப்தம் தொனித்தது. முதலில் ஆட்டிடையர்கள் சோலைகளில் பாடுவதைப்போல் கணீரென்று தொடர்ச்சியாயும், போகப் போக மலர்களின் வாடைபோல் விட்டுவிட்டும், தேய்ந்தும் கடைசியாய் நீரில் பாயும் ஈட்டிபோல் குமிழியற்றும், சுவடற்றும் மாய்ந்தது அப்பாட்டு. எங்கும் அமைதி, அமைதி, அமைதி.

பக்கிரிக்கு தன் நினைப்பு வந்தது. ”இஸ்ராபேல்! என் உயிர்க்கூட்டின் இனிமைக் குருவியே!” என்று ஏங்கித் திரும்பினான் ஜமீன்தார் பக்கம்.

”இஸ்ராபேலை இழந்தேன். இதை நானே தருகிறேன்” என்று அவன் பிதற்றிக்கொண்டிருந்தபொழுதே விர்ரென்று யாழ்ப்பாணத்து கப்பறை வந்து ஜமீன்தார் முகத்தில் விழுந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *