மூலத்தீ

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 17, 2022
பார்வையிட்டோர்: 3,731 
 
 

விகாரத்தின் வடதிசையில் நூற்றாண்டுகளைக் கடந்து கிளை பரப்பி கம்பீரமாக நிற்கும் போதிமரத்தின் கீழ் பத்மாசன நிலையில் புத்தபிரான் கண்மூடித் தியானத்திக்கொண்டிருந்தார்..பறவைகளுக்கு புத்தரின் தியானத்தைப்பற்றிய சிரத்தையில்லை. தாதுகோபத்துக்கும் மரத்துக்குமாய் பறந்து சந்தோசித்துக் திரிகின்ற அவற்றின் ஒலிச் சங்கமத்துடன் விகாரத்தில் இருந்து பிரித்தோதும் ஓசையும் இணைந்து காற்றில் கலந்து சூழலை ரம்மியமாக்கிக் கொண்டிருந்ததன.

அந்த புனித மரத்தை சுற்றியிருந்த கல்லாசனத்தில் ஆனந்த தேரரரும் அவரது காலடியில் இருந்த பெரிய கல்லொன்றின் மேல் தர்மபாலாவும் அமர்ந்திருந்தனர்.. அவர்கள் மனதை அந்த ரம்மியமான சூழல் ஈர்த்ததாகத் தெரியவில்லை. ஏதோ ஒரு கவலை அவர்கள் உள்ளதைக் கவ்விக்கொண்டிருந்தது என்பதை அவர்களின் முகங்கள் பிரதிபலித்துக் கொண்டிருந்தன.

தேரரது கைகளில் 1959 செப்டெம்பர் 26என திகதியிட்ட பத்திரிகை காற்றில் படபடத்துக்கொண்டிருந்தது.

அந்த பத்திரிகையில் கொட்டை எழுத்துக்களில் பிரசுரிக்கப்பட்டிருந்த செய்தியில் அவர் கண்கள் நிலைகுத்தி இருந்தன.

நாட்டின் பிரதமர் பண்டார நாயக்க, சோமராம தேரர் என்ற பௌத்த பிக்குவினால் துப்பாக்கியினால் சுடப்பட்டு, சிகிச்சைகள் பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரைச் சுட்டவுடன் தேரர்

”நான் இதனை நாட்டுக்காகவும், இனத்துக்காகவும், மதத்துக்காகவும் செய்தேன்” எனக் கத்திச் சொன்னார்.

இச்செய்தி இலங்கையின் எதிர்காலத்தைப்பற்றி பெரும் பயத்தை ஏற்படுத்துவதாய் இருந்தது. அது ஆனந்ததேரரின் மனதின் அமைதியை முற்றாக அழித்து மனம் பெரும் குழப்பத்தில் திண்டாடிக்கொண்டிருந்தது.

அந்தப் பத்திரிகையைக் கொண்டு வந்த தர்மபால, ஆனந்த தேரரின் மனதைப் படிப்பவனைப் போல அவரையே உற்றுப் பாத்துக்கொண்டிருந்தான்.

சாது! உங்கள் சஞ்சலத்தின் காரணம் பண்டார நாயக்காவின் மரணமா? அல்லது தேரர் இந்தக் கொலையைச் செய்தார் என்பதா? சன்னமான குரலில் தர்மபால கூறியவற்றை தேரர் உள்வாங்கினாரா என்பதை தர்மபாலாவல் உறுதிசெய்ய முடியவில்லை.

ஆனந்த தேரர் தனது முகத்தை அழுத்தித் துடைப்பதனூடாக தமது கண்களில் கோடிட்ட கண்ணீரையும் துடைத்துக் கொள்கிறார். மனவெப்பியாரம் பெருமூச்சாக வெளிவருகிறது.

“இந்த இரண்டோடு மூன்றாவதான ஒரு காரணமும் இருக்கிறது. அது இந்தத் தேசத்தின் அழிவு பற்றியது.” மனதில் எண்ணியதை வார்த்தையில் வடிக்காது தர்மபாலாவின் கேள்விக்கு மௌனத்தையே பதிலாக்குகிறார்.

தர்மபாலா ஆனந்த தேரரில் மிகுந்த மரியாதை வைத்திருப்பவன். தேரரது வாழ்க்கையை நன்கு அறிந்தவன். அதனால் அவரது மௌனத்தைக்கூட அவனால் மொழிபெயர்த்துவிட முடியும்.

எல்லா காமந்துருக்களும் ஆனந்த தேரர் ஆகிவிட முடியுமா..?

ஆனந்த தேரர் அன்பு, கருணை என்பவற்றால் புத்தபிரானின் வழித்தடம் பிசகாது நடப்பவர் .கல்வி அறிவில் சிறந்து விளங்குபவர். அவருக்கு சிங்களம், பாலி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகியவற்றில் மட்டுமன்றி தமிழிலும் நன்கு பரிச்சயமுண்டு. உண்மையில் அவர் அரைத்தமிழராகவும் அரைச் சிங்களவராகவும் இருந்தார். அவருடைய தாய் தமிழச்சி.தாய் மீனாட்சியின் தந்தை குமாரசாமி காலியில் புகையிலை வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு உதவியாளராக வேலை செய்த ரோகன விஜய வீரவை மீனாட்சி காதலித்துக் கலியாணம் செய்து கொண்டார். ஆனால் ஆனந்த ரோகனவைப் பிரவசித்தபோது ஏற்பட்ட உதிரப் பெருக்கால் மீனாட்சி இறந்து போனார். இந்த இழப்பு ரோகன விஜய வீரவை விட குமாரசாமியையும் அவரது மனைவியான வள்ளியம்மையையும் பெரிதும் பாதித்து விட்டது. அதனால் காலியில் வாழப் பிடிக்காமல் ஆனந்தரை எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணத்துக்கு வந்து விட்டார்கள்.விஜய வீர மறுமணம் செய்ததனால் ஆனந்தர் தன் தாத்தா பாட்டியுடன் யாழ்ப்பாணத்தில் பத்து வருடங்கள் வாழ்ந்தார்.கல்வியையும் தமிழில் கற்றார்.அவரது பாடசாலை ஆசிரியர் பண்டிதர் கந்தையா தமிழ் இலக்கியங்களை ஆனந்தருக்கு மிகவும் இரசனையுடன் கற்றுக்கொடுத்தார்.இதனால் அவர் கற்பித்தவை பசுமரத்தாணிபோல ஆனந்தரது மனதில் நன்கு பதிந்தன. வள்ளுவனும் இளங்கோவும் கம்பனும் பாரதியும் கூட ஆனந்தருக்கு அறிமுகமாகியது இப்படித்தான். ஆனால் அவரது தாத்தாவும் பாட்டியும் ஒருவரைத்தொடர்ந்து ஒருவர் மறைந்துபோக ஆனந்தர் தந்தையிடம் திரும்ப வேண்டியதாயிற்று. காலிக்கு வந்த ஆனந்தர் சிங்கள மொழியில் கற்கத்தொடங்கினார்.ஆங்கிலக் கல்வியையும் அவர்கற்ற கல்லூரியில் சிறப்பாகக் கற்க முடிந்தது.

சிறிய தாய் ஜீவனி கொடுமை எதுவும் செய்ய வில்லைத்தான்.ஆனால் தன் பிள்ளைகளிடம் காட்டும் பாசத்தை ஆனந்தருக்குத் தரவில்லை.புகையிலை வியாபாரத்தில் பரபரப்பாக இருந்த தகப்பனும் ஆனந்தருடன் அதிக நேரத்தைச் செலவிடவில்லை. இந்த நேரத்தில் விகாரைகளுக்கு செல்லுவதே ஆனந்தருக்கு ஒரே ஆறுதலாக இருந்தது . மடாலயத்திலிருந்த சிறிய நூலகத்தில் புத்தபிரானின் போதனைகள் அடங்கிய நூல்கள் பலவற்றை எடுத்துப் படிப்பது அவருக்கு இன்பந்தருவதாய் அமைந்தது. அப்பொழுதுதான் துறவியாக வேண்டும் என்ற ஆசை அவர் மனதில் தோன்றி மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கத்தொடங்கியது. அவர் தமது பதினாறாவது வயதில் துறவியாகச் சங்கத்தில் இணைந்துகொண்டார். தமது ஒழுக்கம், கல்வி, அனுபவம், எல்லோரிடமும் அன்புசெலுத்துவது என்பவற்றால் தலைமைப் பிக்குவாக ஆகிவிட்டார்.

தேரரிடம் காணப்படும் இந்தப் பேரன்பே தர்மபாலா போன்ற பலரை அவர் நிழலில் வாழவைத்திருக்கிறது..

தேரரின் கடைக்கண் மட்டும் தர்மபாலா மேல் படாவிட்டால் யாருமற்ற அனாதையான அவன் இன்று எங்கேயோ ஒரு இடத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கக் கூடும் . அல்லது யாரவது ரவுடியின் கையாளாக மாறியிருக்கக் கூடும்.

பத்து வருடங்களுக்கு முன்பு அவனுக்கு ஆறோ ஏழோ வயதுதானிருக்கும். நுவரெலியாவில் பெய்த பலத்த மழையினால் ஏற்பட்ட மண்சரிவினால் தர்மபாலாவின் சிறு குடிசையில் இருந்த அவன் தாயும் தந்தையும் இறந்தபோது அதிஸ்ட வசமாகத் தப்பியவன்தான் தர்மபால. அந்த அனர்த்தத்தை பார்வையிட கம்பளை இலங்காதிலக விகாரையில் இருந்து வந்த ஆனந்த தேரர் திக்குத் திசை தெரியாது தவித்தவனுக்கு ஒளிவிளக்கானார். அவனைத்தன்னுடன் அழைத்து இன்றுவரை அபயம் அளித்து கல்விதந்து ஆதரித்துவருகிறார்.

“தர்மா ஏதோ கேட்டாயே “

“உங்கள் கவலைக்காண காரணம் என்னவென்று கேட்டேன்” என மீண்டும் தர்மபால கேட்கிறான்.

தேரரிடம் பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டுக் காற்றைச் சூடாக்குகிறது.

“பண்டார தனது செயலால் தனக்கே அழிவைத் தேடிக்கொண்டார்.”

முணுமுணுத்தார் தேரர், இலங்கையின் சுதந்திரத்தில் இருந்து இன்று வரையிலான சம்பவங்கள் அவரது மனக் கண் முன் விரிகின்றன.

இலங்கை சுதந்திரமடைந்தவுடனேயே இலங்கைக் குடியரசுச் சட்டம் மூலம் இந்த நாட்டின் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகித்த இந்திய வம்சாவழியினரில் பலர் நாடற்றவராக்கப்பட்டனர். இதில் இனவாத சிந்தனை மறை முகமாக புலப்படாமல் இல்லை. ஆனால் பண்டார நாயக்காவின் -தனிச் சிங்களம் மட்டும்- என்ற கொள்கை இனவாதத்திற்கான பிள்ளையார் சுழியை மிக அழுத்தமாக இட்டுவிட்டது.

இதனை எதிர்த்து தமிழர் அகிம்சைவழியில் போராட அதைச் சிங்கள இனவாத சக்திகள் வன்முறையால் ஒடுக்க முயன்றன.அந்த முயற்சி ஒரு இனக் கலவரத்தைத் தூண்டிவிட்டது.

பண்டார நாயக்கா, சுதந்தர இலங்கையில் ஆங்கில மொழிக்குப் பதிலாக தேசிய மொழிகளை உத்தியோக பூர்வ மொழிகளாக மாற்ற விரும்பியதில் எந்தப் பிழையும் இல்லைத் தான், ஆனால் இந்தத்தேசத்தின் மொழிகளான சிங்களம் , தமிழ் ஆகிய இருமொழிகளையும் உத்தியோக பூர்வ மொழியாக ஆக்கியிருந்தால் எந்தப் பிரச்சினையும்வருவதற்கு வாய்ப்பில்லை, எண்ணிக்கையில் பெரும்பான்மையினர் என்பதற்காக சிறுபான்மைமையினரின் அடிப்படை உரிமைகளை மீற முடியாது என்பதை பண்டார சிந்தித்திருக்க வேண்டும். தேசத்தின் மீது உண்மையான காதலும் அதன் வளர்ச்சியில் பற்றும் கொண்டிருப்பாரானால் நாட்டின் ஒவ்வொரு பிரஜையையும் தனது பிரைஜையாகக் கொண்டு செயற்பட்டிருப்பார். பிரிவினையாலும் இனவாதத்தாலும் ஏற்படக்கூடிய பின் விளைவுகளை முன்னே கருத்தில் கொண்டிருப்பார்.

பௌத்த பிக்குகளின் உள்ளார்ந்த நோக்கமான சிங்கள பௌத்த தேசம் என்ற கருத்தியலுக்கு வலுச்சேர்ப்பதன் மூலமாக, பண்டார தனது சுயநல அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்ளவே முனைந்தார் . இலங்கை என்ற அழகிய தேசத்தினை அழிப்பதற்கான முலத் தீப்பொறி தனிச் சிங்களம் மட்டும் என்ற சட்டவாக்கத்தின் உள்ளே கனன்றுகொண்டிருந்தது என்பதை அறிந்திருந்தும் அச்சட்டத்தை அவர் முன் மொழிந்தார்.

இந்தச் செயல் தமிழரிடையே, சிங்களத் தலைவர்கள் பற்றிய அவ நம்பிக்கையைத் தோற்றுவித்தது. தமிழருக்கான தனித் தேசமே தம்மைப் பாதுகாக்கும் என உறுதியாக நினைக்கும் நிலைக்கு தமிழரைத் தள்ளிவிட்டது..

அதனைத்தொடர்ந்து வந்த அரசியல் நகர்வுகளில் தமிழர்களின் அழுத்தம் காரணமாக செல்வா பண்டா ஒப்பத்தம் உருவானது. அது தமிழரின் மிகச் சொற்பமான அபிலாசைகளையே நிறைவேற்றக்கூடியதாக இருந்தது . ஆனாலும் அதனைக்கூட பௌத்த மதவாதிகள் ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை. இதனால் பண்டார அந்த ஒப்பத்தந்தத்தை கிழித்து எறிந்தார்.அனாலும் பண்டாரவின் கொலை பௌத்த பிக்குவனால் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

“ஸோமராம தேரர் நாட்டுக்காகவும் இனத்துக்காகவும் தாம் இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறுகிறாரே இதை நீங்கள் சரி என்பீர்களா சாது?. “தர்மபாலாவின் கேள்வியில் சற்றுக்கோபமும் இருப்பதை அவதானிக்கிறார் ஆனந்த தேரர்.

“நிச்சயமாக இல்லை. புத்தபிரானின் கொள்கைய பின்பற்றும் பிக்கு எல்லா உயிர்களையும் ஒரேமாதிரியாகப் பார்க்க வேண்டும். அவ்வாறிருக்க மனிதர்களை தமிழர், சிங்களவர் எனப் பிரிப்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? பிக்குகள் இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாக மட்டுமே கருதுகிறார்கள். நாகர்களாக ஒருகாலத்தில் பௌத்த மதத்தைக்கூடப் பின்பற்றிய பூர்வக்குடிகளான தமிழரை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை. இந்த நாடு ஐரோப்பியர் வருகைக்கு முன்பு தனிஒரு நாடாக இல்லாது மூன்று நாடுகளாக பிரிந்திருந்ததையும் இவர்கள் கருத்தில் கொள்வதில்லை.” மிக நிதானமாகத் தன் மாணவனான தர்மபாலாவுக்கு வரலாற்றுப்பாடம் நடத்துகிறார் ஆனந்த தேரர்.

“சாது என்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது.” குறுக்கிடுகிறான் தர்மா.

“கேள் தர்மா”

“இந்த நாடு பூர்விகக் குடிகளுக்கு மட்டும் தான் உரிமையானதா? ஒரு தாய்க்கு இரண்டாவதாகப் பிறந்ததால் தாய் இரண்டாவது பிள்ளைக்கு உரிமையில்லாதவள் ஆகிவிடுவாளா? தமிழர்களும் தமிழ் பேசும் முஸ்லிங்களும் பலநூற்றாண்டுகள் இந்த நிலத்தில் வாழ்கிறார்கள்.அவர்கள் ஒரு பகுதியிலும் நாம் ஒருபகுதியிலுமாக வாழ்வதில் பிக்குகளுக்கு என்ன வந்தது?”

“கிறிஸ்தவம், இஸ்லாம், பௌத்தம், சனாதனம் என மதங்கள் அரசுகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தமையை உலகவரலாறு எமக்கு உணர்த்துகின்றது. இலங்கையிலும் இந்தநிலைதான்..ஜனநாயக உலகம் விரிந்த போதும் இலங்கையில் சிங்கள பௌத்தம் தனது பிடியை விடுவதாய் இல்லை. இதுவே இந்த நாட்டின் சாபமாக அமைந்திருக்கிறது.”

“ஆமாம் சாது.லெஸ்லி குணவர்த்தன, கலாநிதி என்.எம்.பெரேரா போன்ற ஒரு சில அரசியல் வாதிகள் “ஒரு மொழி கொண்ட இருநாடா அல்லது இருமொழிகள் கொண்ட ஒரு நாடா வேண்டும் என அரசியல்வாதிகள் தீர்மானிக்க வேண்டும் “ எனக் கேள்வி எழுப்பி நியாயத்தின் பக்கம் நிற்கிறார்கள். ஏனைய எல்லா சிங்கள அரசியல் வாதிகளும் இனவாதத்தையே தமது கொள்கையாக கொள்ள விழைகிறார்கள். இதனால் நாடு கலவரபூமியாகுவதுடன் மக்களின் ஆற்றலும் பொருளும் வீணடிக்கப் படப்போகிறது.”

“ஆம் தர்ம பால..அரசியல் வாதிகள் மக்களின் போருளாதார, கல்வி, சமூக வளர்ச்சியை மட்டுமே சிந்திக்க வேண்டும். அதற்காக உழைப்பதில் எந்த கட்சி சிறந்தது என்பதிலேயே போட்டி போட வேண்டும். இலங்கை எல்லாவளங்களும் கொண்ட அழகிய நாடு. வள்ளுவர் என்ற சிறந்த தமிழ் புலவர் இருக்கிறார் தர்மபால. அவர் நாட்டுக்கு பொருளாதாரம் எவ்வளவு அவசியம் என்பதை அரசுக்கும் மக்களுக்கும் இரண்டாயிரம் ஆண்டுகௌக்கு முன்னமே சொல்லிச் சென்றுள்ளார்.அந்த உண்மையை உணர்ந்தவை போல, இரண்டாம் உலகப் போரில் பெரும் அழிவைச் சந்தித்தாலும் கூட ஜப்பான், ஜேர்மனி போன்ற நாடுகள் இன்று முன்னேறிவருகின்றன.”

“உண்மைதான் சாது..பொருளாதாரத்தில் வளம் பெற பலமணிகள் உழைக்கும் மக்களைக் கொண்ட ஜப்பானுக்கு இன்று சிறந்த தேசம் என்ற மதிப்பும் படிப்படியாக ஏற்பட்டுவருகிறது. ஜப்பானியப் பொருட்களுக்கு உலக சந்தையில் பெரும் மதிப்பு இருக்கிறது. மேலைத்தேசங்கள் கூட ஜப்பானை ஆசிய நாடுகளில்முதன்மை நாடாகக் கருதத்தொடங்கிவிட்டதன.”

“தர்மா நீ சொல்வது உண்மைதான் ஜப்பான் போன்ற ஒரு நாடாக இலங்கை வரவேண்டும் என்பதே எனது கனவாக இருக்கிறது.”

“இன்று சில அரசியல் வாதிகள் அரச கஜானாவை கொள்ளையடிப்பதிலேயே குறியாக உள்ளார்கள். அவர்களுக்கு தமது பதவிகளைத் தக்கவைத்துக்கொள்ள இன மதவாதப் போர்வைகள் அவசியமாக இருக்கிறது, இந்த நிலையில் உங்கள் கனவு பகல் கனவுதான்.”

“பத்தினி தெய்யோவின் கதை உனக்குத் தெரியும் தானே…அதில் கண்ணகியின் கணவன் கோவலனைக் கொன்ற அரசனுக்கு அவனது தவறே அறமாகி கூற்றாக அமைந்தது என்று சிலம்பு கூறும். அதேபோல, தான் கொளுத்திய தீப்பொறி ஒன்றாலேயே பண்டாரா அழிந்து விட்டார்.”

“சாது..பத்தினி கதையில் எனக்கு ஒரு விடயம் மட்டும் ஒப்புவதாய் இல்லை. அரசன் செய்த ஒரு பிழைக்காக் பத்தினி தெய்யோ மதுரையை எரித்தது சரியா?”

“ஒரு நாட்டின் அரசன் தனது குடும்பத்துக்கு மட்டும் முடிவெடுப்பவனல்லன். அவன் தனது நாட்டுக்குமாக முடிவெடுக்கிறான். அவன் முடிவு நாட்டையும் பாதிக்கும் என்பதையே இளங்கோ மதுரை எரிப்புக்கூடாக காட்டுகிறார், பண்டார நாயக்கா செய்த தவறு ஐம்பத்தெட்டுக் கலவரத்தில் முடிந்து தமிழர் பலரையும் அழித்து விட்டது. இதோடு நின்று விடப் போவதில்லை.அரசியல் வாதிகளும் மதவாதிகளும் இனவாத நஞ்சு விதையைச் சாதாரண மக்களிடமும் தூவத் தொடங்கிவிட்டார்கள். இதனால் இந்தத் தேசம் இன்னும் எந்த அழிவுகளைச் சந்திக்க போகிறதோ..?.”

“சாது இந்த உண்மைகளை நீங்கள் ஏன் மற்றைய தேரர்களுக்குச் சொல்லி அவர்களை வழிநடத்தக்கூடாது?”

“நான் இதுபற்றி மகாநாயக்கர்களிடையே பலதடவை விவாதித்திருக்கிறேன்.ஆனால் அவர்கள் என்னை பௌத்த மத துரோகியாகச் சித்தரிக்கிறார்கள் .தமிழ் இரத்தம் என்னுள் ஓடுவதனாலேயே நான் இவ்வாறு பேசுவதாகவச் சாடுகிறார்கள்.”

சிங்கள பௌத்தவாதம் என்னும் மூலத்தீ தன்நாக்குகளைப் பரப்பி, இலங்கை மக்களின் உயிர்கள், நாட்டின் இறையாமை, செல்வம் ஆகியவற்றைச் சிறிது சிறிதாக கவலீகரம் செய்யப் புறப்பட்டுவிட்டதும் அந்த நெருப்பில் சிலர் சுகமாகக் குளிர்காய்ந்துகொண்டிருப்பதும் ஆனந்ததேரரின் அகக் கண்களுக்கு நன்கு புலப்படுகிறது. அதனைத் தடுக்கும் திராணியற்றவராக கருணையே வடிவான புத்தரைப் பார்த்தபடி மௌனமாகிறார் ஆனந்ததேரர்.

அவரது இயலாமைக்காக மட்டுமன்றி தனது இயலாமைக்காகவும் நொந்தவனாய் தர்மபால அவ்விடத்தைவிட்டு நகருகிறான்.

வாசுகி நடேசன் யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டில் கலாநிதி க சொக்கலிங்கம், தெய்வானை ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை சொக்கன் என்ற புனைபெயரில் எல்லோராலும் அறியப்படும் சிறந்த தமிழறிஞர், எழுத்தாளர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. வாசுகி யாழ் இந்துக்கல்லூரியில்த மது உயர்கல்வியைக் கற்றார். பின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்து கலைமாணி பட்டதை பெற்றோர். பேராசிரியர் கா.சிவத்தம்பி, பேராசிரியர் ஆ.சண்முகதாஸ் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் "சங்க இலக்கியங்களில் மருதத்திணையின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *