ஏமாற்றங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 9,305 
 

“அம்மா, அம்மா” எனப் பல தடவை மகள் கூப்பிடுவதைக் கேட்டும் கேட்காதது போல் தனது வேலையில் வெகு மும்முரமாக நின்றாள் கலா. “என்ன, மது கூப்பிடுறது கேட்கேல்லையே? பிறந்தநாளும் அதுமா அவனை அழவிடாமல் போய்ப் பாரன்” என்று பத்திரிகைக்குள் தலையையும் வாய்க்குள் சாப்பாட்டையும் வைத்துக் கொண்டு சொன்னான் மனோ.

“நீங்கள் இருந்த இடத்திலை இருந்து கொண்டு சும்மா கதையுங்கோ. நான் விடிய எழும்பின நேரத்திலையிருந்து சமையலோடை அவதிப்படுறது தெரியேல்லையே, ஏன் நீங்கள் போய்ப் பாக்கக் கூடாதே?” பட்டாசுபோல் வெடித்தாள் கலா.

கடைசியில் மது எழும்பி அழுதுகொண்டு அம்மாவைத் தேடி குசினிக்கு வந்தான். “அம்மா, ஐ கோல்ட் யூ தவுசன் ரைம்ஸ்.”

“மதுக் குட்டி, ஹப்பி பேர்த்டே. நல்ல பிள்ளை மாதிரி ஒரு இடத்திலை இருந்து ரீவியைப் பார் அப்பு. அம்மா பிள்ளையின்ரை பார்ட்டிக்கு சமைக்கிறன்.” ஆனால் மது விடாமல் அவளின் சட்டையைப் பிடித்து இழுத்தபடி சிணுங்கிக்கொண்டு நின்றான்.

“நீங்கள் ஒருக்கா எழும்புங் கோவன், உந்த ரீவியை ஒருக்காப் போட்டிட்டு இவனை அதிலை கொண்டு போய் விடுங்கோ பாப்பம்.”

மனோ அவன் கத்தக் கத்த கட்டிப் பிடித்துத் தூக்கிக்கொண்டு போய் ரீவிக்கு முன்னாலை இருத்தினான். பிறகு “சத்தம் போடாமல் இருந்தியெண்டால் நீ கேட்ட மாதிரி நான் உனக்கு பவர் றெஞ்சர் ரோய் வாங்கித் தருவன்” என ஒரு புரோப்போசலை மதுவுக்குச் சொன்னான்.

முடிவில் ரீவியில் பவர் றெஞ்சர்கள் ஒன்றுக்குப் பின்னால் ஒன்று துவக்குடன் ஓடிப் போனதைப் பார்த்த திறிலில் ரீவியுடன் ஐக்கியமானான் மது.

“சரி நான் குளிச்சிட்டு வாறன். என்னென்ன சாமான் வாங்க வேணும் எண்டு ஒரு லிஸ்ற் போட்டு வை” என்றபடி குளிக்கப் போனான் மனோ.

கலாவுக்கு மூன்று அடுப்பிலுமிருக்கும் கறிகளைப் பார்ப்பதா அல்லது தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் சொல்வதா என ஒரே குழப்பமாக இருந்தது. பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு வரச் சொல்லி அவள் அழைப்புக் கொடுத்திருந்தவர்கள் தம்மால் வர முடியாது என அறிவிக்க, பிள்ளையை வாழ்த்த, எப்படி அவள் வீட்டுக்கு வருவதெனக் கேட்க எனப் பல காரணங்களுக்காக அவளை அழைத்துக்கொண்டே இருந்தனர்.

மது மீண்டும் அழத் தொடங்கினான். “இப்ப என்னத்துக்குக் கத்துகிறாய்?” கோபமாகக் கேட்டாள் அவள். “ஐ ஆம் கங்கிறி” என அவன் சொன்னபோதுதான், மணி பதினொன்று ஆகிவிட்டது. மது இன்னும் சாப்பிடவில்லை என்பது தெரிந்தது. “பசிச்சால் கேட்கிறதுதானே. அதுக்கு ஏன் அழுவான்? சரி, எழும்பி வா, முகம் கழுவிப் போட்டுச் சாப்பிடலாம்” என்று அவள் அவசரப்படுத்துவதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அழுதுகொண்டிருந்த மதுவைத் தானே இழுத்துக்கொண்டு போய் முகத்தைக் கழுவிப் போட்டுக் கூட்டிக்கொண்டு வந்து சாப்பாட்டு மேசையில் இருத்தினாள்.

“ஐ வான்ற் ஹணி நட் சீரியல், நொட் திஸ்” என அவள் கொடுத்த பாணைத் தள்ளினான் மது. ”மது, உன்ரை சீரியல் முடிஞ்சுது எண்டு தெரியுமெல்லே. நான் இன்னும் அதை வாங்கேல்லை. எனக்கு இப்ப கன வேலை இருக்குது. சும்மா கரைச்சல் தராமல் இண்டைக்கு மட்டும் இதைச் சாப்பிடு.”

“யூ செட் யூ வில் கெற் இற்ருடே” என மீண்டும் சத்தமாக அழுதான் அவன். “பசிச்சால் என்னெண்டாலும் சாப்பிடலாம். வேணாம் எண்டால் விடு. ஆனால் சும்மா அழுதால் அம்மாவுக்குக் கோவம் வரும். பிறகு அடிதான் விழும்” என்று அகப்பையைக் காட்டினாள். அதற்குப் பயந்து அழுகையை விட்ட மது பிறகு பாணில் விளையாடத் தொடங்கினான். “என்ன எண்டாலும் செய். உன்னோடை மினக்கெட இப்ப எனக்கு நேரமில்லை” என்று சொல்லிவிட்டு மீண்டும் குசினிக்குள் சென்றாள் அவள்.

கடையால் வந்த மனோ சாமான்களை அவளிடம் கொடுத்துவிட்டு வீட்டை அலங்கரிக்கத் தொடங்கினான். திடீரென மனோ சொன்ன பவர் றெஞ்சர் நினைப்பு வந்தவுடன் “வெயர் ஸ் மை பவர் றெஞ்சர் ரோய்?” என்று கேட்டு மீண்டும் அழத் தொடங்கினான் மது. “நான் இப்ப தமிழ் கடைக்குத்தான் போனனான். பிறகு வாங்கித் தாறன். ஆனால் இப்படி நீ நெடுக அழுதி எண்டால் ஒண்டும் வாங்கித் தர மாட்டன். முதலிலை அழுகிறதை நிப்பாட்டு. பலூன் ஊதிக்கட்டுவம். வா” எனக் கதையை மாற்றினான் மனோ. பலூன்களால் மனோ வீட்டை அலங்கரிப்பதைப் பார்ப்பதில் மதுவுக்கும் உற்சாகம் வர பலூனுடன் விளையாடத் தொடங்கினான் மது.

”மது தன்ரை சீரியல் இல்லை எண்டு காலைமை சாப்பிடேல்லை. அடுத்த தரம் அவன் பல்லவி பாடுறதுக்கு முன்னம் ஒருக்கா மக்டோனால்ஸ்க்குப் போய் அவன் சாப்பிட ஏதாவது வாங்கிக் கொடுங்கோ.”

”இந்தக் குளிருக்கை எத்தனை தரமப்பா நான் வெளியிலை போறது? வெளியிலை நிக்கேக்கை சொல்லியிருக்கலாமே. இப்ப சமைச்சதிலை ஏதாவது ஒண்டைக் குடன்”, “எனக்கு உவனோடை மல்லுக்கட்ட இப்ப நேரமில்லை. போய் வாங்கிக் குடுக்கப் பஞ்சி எண்டால் அவன்ரை சாப்பாடு அலுவலை நீங்களே பாத்துக்கொள்ளுங்கோ அல்லது பிறகு கோயிலுக்குப் போட்டு வரக்கே ஆவது வாங்கிக் குடுத்திடுங்கோ ” என்று அவள் சொல்ல ”சரி பொறு. ஒரு அரை மணித்தியாலத்திலை போறன்” என்று ஒத்துக்கொண்டான் அவன்.

ஐந்து மணியானதும் அவர்களின் வீடு மிகப் பரபரப்பானது, கலா தான் சமைத்த ஆட்டுக்கறி வறுவல், சுறா வறை, றால் பொரியல், தண்டூரிக் கோழிக்கால், நூடில்ஸ், வெஜிரெபில் புரியாணி என்று எல்லாவற்றையும் சாப்பாட்டு மேசையில் அழகாக ஒழுங்குபடுத்தினாள். பிறகு இன்னொரு வட்ட மேசையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பெரிய பவர் றெஞ்சர் கேக்குக்குப் பக்கத்தில் வடை, லட்டு, ரோல்ஸ் என்று வைக்க, மனோ தன் சிருஷ்டிப்புத் திறனைக் காட்ட அன்னாசிபழத்தில் ஒரு பறவை மாதிரிச் செய்து அதை மற்றப் பழங்களால் அழகுபடுத்தினான். அப்படிச் செய்யும்போது வாங்கி அடுக்கிய பியர் போத்தல்களில் ஒன்றையும் எடுத்து அடிக்கடி குடித்துக்கொண்டான்.

“சரி ஆறு மணியாகுது. நான் வெளிக்கிடப்போறன். மதுவுக்கு உடுப்பைப் போட்டுப் போட்டு நீங்களும் ரெடி பண்ணுங்கோ” என அவள் போக “மது வா, உடுப்பு போட” எனக் கூப்பிட்டான் மனோ.

மது அந்த உடுப்பு வேண்டாம் எனப் பிடிவாதம் பிடித்தான். மனோவுக்கு வேலைக் களைப்புடன் நேரமும் போகிறது என்ற அவசரத்தில் சரியான கோபம் வந்தது. மதுவுக்கு இரண்டு அடி போட்டுவிட்டு அவன் அழ அழத் தனது பலம் எல்லாம் சேர்த்து அவனைக் கட்டிப் பிடித்து உடுப்பைப் போட்டு முடித்தான் மனோ. மது மீண்டும் அந்தக் குருத்தாவைக் கழற்றுவதாகப் பிசகு செய்தான்.

அவள் சீலையை உடுத்த குறையிலை வெளியில் வந்து ”ஏ, மது உன்ரை பேர்த்டே பார்ட்டி எல்லே! ஆட்கள் எல்லாம் பிரசன்ற்ஸ் எல்லாம் கொண்டு வரப்போயினம். நல்ல பிள்ளையாயிரு பாப்பம்” என்றாள்.

“ஐ டோன்ற் வான்ற் திஸ் பார்ட்டி, ஐ கேற் தீஸ் குளோத்ஸ், ஐ வான்ற் ரு கோ ரு வூடி வூட் சங் அண்ட் பிளே தெயர்” எனப் பலம் கொண்ட மட்டும் கத்தினான் மது.

“உந்த உடுப்பு என்ன விலை தெரியுமே? சும்மா குழப்படி செய்து இன்னொரு அடி வாங்கப் போறீயோ” என எச்சரித்தாள் அவள்.

கடைசியில் அழுத முகத்துடனும் கசங்கிப்போன குருத்தாவுடனும் நின்ற மதுவைப் பார்த்தவர்கள் “என்ன பிள்ளைக்கு ஏதாவது வருத்தமோ?” என்றனர்.

“கணக்காக ஐஞ்சாவது பிறந்த நாள் சனிக்கிழமையிலை வருது, வடிவா ஆறுதலாக் கொண்டாடலாம் எண்டால் —இந்தக் காலத்துப் பிள்ளையள் சரியான—-” வசனத்தை எப்படி முடிப்பது என்று தெரியாமல் பெருமூச்சு விட்டுக்கொண்டாள் அவள்.

முடிவில் வீட்டின் ஒரு கரையிலை குவிக்கப்பட்ட பரிசுப்பொருள்களும் வீடு நிறைந்த ஆட்களுமாய் வீடு அமளிப்பட அழுது களைத்த மது தனது அறையின் ஒரு ஓரத்தில் நித்திரையாய்ப் போயிருந்தான். கேக் வெட்டுவதற்காக மது எங்கே எனத் தேடி வந்த கலாவுக்கு மதுவைப் பார்த்ததும் வந்தது துக்கமா அல்லது ஏமாற்றமா எனப் புரியவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *