கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 1, 2023
பார்வையிட்டோர்: 3,091 
 

(1976 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரிகளின் பெயர்கள், ‘மெரிட்’படி வரிசைக் கிரமமாக டைப்பாகி, டைரக்டரும் கையெழுத்துப் போட்டுவிட்டார். நியமன உத்தரவுகளை, ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக அனுப்பியாக வேண்டும்.

‘டெம்பரரி டைப்பிஸ்ட் மோகனுக்கு, அன்றைக்கு வேறு வேலை அதிகமாக இல்லை. பட்டதாரிகள், கேள்விகளுக்கு எப்படிப் பதிலளித்திருக்கிறார்கள் என்று அறிய, அவனது எஸ்.எஸ்.எல்.சி. மூளை குறுகுறுத்தது. தேர்வுப் பேப்பர்களை, ரேக்கிலிருந்து எடுத்து, புரட்டிக் கொண்டே வந்தான்.

தானே, அவர்களைவிட நன்றாகப் பதிலளித்திருக்க முடியும் என்ற எண்ணத்திற்கு வந்த அவன் கண்கள், திடீரென்று, ஒரு பரீட்சைப் பேப்பரில் நிலை குத்தி நின்றன. சமதர்மம் வருவதற்கு முன்னால், சமதர்ம மனோபாவம் வரவேண்டும்; ஏழைகளைப் பாராட்டுவதன் மூலம், ஏழ்மையைப் பாராட்டலாகாது என்பன போன்ற வாசகங்கள், அவன் கருத்தைத் தாக்கின. எழுதியவரின் பெயரைப் பார்த்தான்.

யாரோ ஒரு பெண்.பிரபாவதியாம்.73 மார்க் எடுத்திருந்தாள். அதுதான் டாப் மார்க் திடீரென்று மோகனுக்கு ஒரு சந்தேகம். செலக்ஷன் லிஸ்ட்டில், அவன், பிரபாவதி பெயரை ‘டைப் அடித்ததாக நினைவில்லையே? அவசர அவசரமாக, தெரிந்தெடுக்கப்ப பட்டிருப்பவர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தான்.

பிரபாவதியின் பெயரைக் காணுேம். கேண்டிடேட்டுகளின் மார்க்குகள் பட்டியலைப் பார்த்தான். அதில் பிரபாவதிக்கு, ‘ரிட்டன் டெஸ்ட்டில் 73 என்று இருக்க வேண்டிய மார்க் 37 என்று டைப் அடிக்கப்பட்டிருந்தது தவறாக டைப் செய்யப்பட்டு விட்டதால், நேர்முகப்பேட்டியில் 52 மார்க் எடுத்திருந்தபோதிலும், அந்தப் பெண் தேர்வு பெற முடியவில்லை.

அவன் செய்த தவறுக்காக ஒரு பெண் அனாவசியமாய் வேலை வாய்ப்பை இழக்க வேண்டுமா? தவறை மேலிடத்தில் ஒத்துக் கொண்டால், முதலில் பயங்கரமாக திட்டுவார்கள். பிறகு, அவன் நேர்மையை புரிந்து கொண்டு, இந்தப் பிரபாவதிக்கும் ஆர்டர் அனுப்புவார்கள்.

மார்க்பட்டியலை எடுத்துக்கொண்டு,நேராக அளவிஸ்டெண்ட் டைரக்டரிடம் சென்றான். “ஸார்! ஒரு தப்பு நடந்து போச்சு. பிரபாவதி என்கிற கேண்டிடேட்டுக்கு கிடைத்த 73 மார்க் 37 என பதிவாயிட்டுது.” என்று தம் பிடித்துச் சொன்னான்.

டெலிபோனில் பேசிச்கொண்டே அவனைக் கையமர்த்திய அளவிஸ்டெண்ட் டைரக்டர், சாவகாசமாக டெலிபோனை வைத்துவிட்டு, அவனை இன்னொரு முறை சொல்லச் சொன்னார்.

அவன் சொன்ன விஷயத்தில், அவர் அதிர்ந்து போவார்என்று மோகன் நினைத்தான். கடைசியில், அவன்தான் அதிர்ந்து போனான்.

“நடந்தது நடந்துபோச்சு இனிமேல் குட்டையைக் குழப்பாதே”

அவன் கெஞ்சினான்.

“சார். இதுல.ஒரு பெண்ணின் எதிர்காலமே அடங்கியிருக்கு”

அளவிஸ்டெண்ட் டைரக்டருக்கு, அவனோடு பேசப் பிடிக்கவில்லை. இந்த கிளார்க் அதுவும் டெம்பரரிப் பயல், தன்னுடன் வாதாடுவது அவருக்குப் பிடிக்கவில்லை. ஒருவிதமாக முறைத்துக்கொண்டே, “லீவ் இட் டு மி. டோண்ட் ரேக் அப். இனிமேல் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசக்கூடாது” என்று சொல்லிவிட்டு, இருக்கையை விட்டு எழுந்தார். ஏன் செக்கப் செய்யவில்லை என்று அவரும் தாளிக்கப்படுவாரே.

மோகனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவனுடைய டைப்பிங் தவறு, ஒரு பிரகாசமான பெண்ணிண் வனப்பான வாழ்வுக்கு இடையூறாக இருக்கலாகாது. அவளுக்கு எத்தனை தங்கைகளோ.. எத்தனை ஊதாரி அண்ணன்களோ.

அவனுக்கு ஒன்று தெரியும்.

ஆபீஸர்களில் பெரும்பாலோர் வார்த்தைகளால் ‘குலைப்பவர்கள். எழுத்தால் கடிக்கத் தெரியாதவர்கள். முடியாதவர்கள்; ஆகவே, இவர்கள் விட்டுவிடச் சொல்கிறார்களே என்பதற்காக விட்டுவிடாமல், திரும்பத் திரும்ப மன்றாடினால் நிச்சயமாய்ப் பலன் கிடைக்கும் என்று அவன் நம்பினான்.

நேராக டெபுடி டைரக்டரிடம் போனான். அப்போது அவர், அழகான ஸ்டேனோ ஒருத்தியிடம் ‘டிக்டேட்’ செய்து கொண்டிருந்தார். அவனைச் சைகையிலேயே வெளியே நிற்கும்படி கூறினார். இறுதியில், ஸ்டெனோசிரித்துக்கொண்டே வெளியே வந்தாள். மோகன் உள்ளே போனான்.

டெபுடி டைரக்டரிடம் நடந்ததைச் சொன்னான். உடனே அவர், இப்படி சொன்னார் –

“நடந்ததை சொல்லிட்டே… நடக்கப்போறதை நாங்கள் பார்த்துக்குவோம். டோன்ட் ஒர்ரி. உன் கடமை சொன்னதோடு சரி. லீவ் இட்.”

அந்த வார்த்தையை அப்படியே எடுத்துக்கொள்ள மோகனுக்கு மனம் ஒப்பவில்லை. நடந்ததை மாற்ற இவருக்கு அதிகாரம் கிடையாது. இவர் பேச்சின் தோரணையைப் பார்த்தால், இவர், மேல் அதிகாரியிடம் சொல்லபோவதும் இல்லை.

மோகன், சர்வ அதிகாரம் கொண்ட இயக்குநர் திரிசங்குவிடம், அவரது ‘பி.ஏ.’ இல்லாத சமயத்தில், அறைக்குள் நுழைந்து, விவரம் சொன்னான். அவர், துடித்து போனார்.

டெபுடி, அவிஸ்டெண்ட் டைரக்டர்களைக் கூப்பிட்டு திரிசங்கு அதட்டினார். அவர்கள் மீது ஏன் ‘கிரேவ் மிஸ் டேக்’ செய்ததுக்காக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு, எழுத்து மூலம் ‘மெமோ’ கொடுத்தார்.

டெபுடியும், அவிஸ்டெண்டும், ஒரு பிரில்லியண்ட் கெர்லின் பிரகாசமான எதிர்காலம் இருட்டாகப் போவதற்கு வாய்ப்பு ஏற்பட்டதற்காக வருந்தி, பிறகு அப்பாயின்மெண்ட் லிஸ்ட்டை திருத்தி விட்டதாகவும், பிரபாவதிக்கு நியமன உத்தரவு போய்விட்டதாகவும் எழுதிக் கொடுத்தார்கள். அதோடு அவர்கள், “வருத்தத்தை’ முடிக்கவில்லை.

இதற்கெல்லாம் காரணமான மோகனை’ சஸ்யெண்ட்’ செய்ய வேண்டும் என்றும் எழுதினார்கள். மோகன், வேறொரு கேண்டிடேட்டிடம் ‘கமிட்’ செய்திருக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட கேண்டிடேட்டிடம் பணம் வாங்கிக்கொண்டே, பிரபாவதியின் பெயரை வேண்டுமென்றே ‘ஒமிட்’ செய்திருக்க வேண்டும் என்றும், லிஸ்ட்டில் தன் பெயர் இருப்பதை அறிந்த, சம்பந்தப்பட்ட கேண்டிடேட், மோகனுக்கு பேசிய தொகையைக் கொடுக்காமல் இருந்திருக்கலாம் என்றும், அப்படிக் கொடுக்காமல் இருப்பது சகஜமென்றும், இதனால் ஆத்திரம் அடைந்த மோகன், அந்தக் கேண்டிடேட்டைப் பழிவாங்க நினைத்து, பிரபாவதி என்கிற பெண்ணுக்கு உதவி செய்வதாய் நடிப்பதாகவும், இதை தங்களின் தலா இருபது, பதினைந்து ஆண்டு கால அனுபவங்கள் உணர்த்துவதாகவும் அறிக்கை சமர்ப்பித்தார்கள்.

விளைவு?

டைரக்டர், மோகனை சஸ்பெண்ட் செய்தார்.

இடிந்துபோன மோகன், அவர்கள் ‘டிஸ்மிஸ்’ செய்யுமுன்னாலே, ராஜினாமாக் கடிதத்தைக் கொடுத்துவிட்டான்.

ஒரிரு மாதங்கள், அவனுக்கு ஒன்றும் ஒடவில்லை.

ஒருநாள், மோகனின் நண்பன் சந்திரன், அவனை அதட்டினான். பொறியியல் பட்டதாரியானாலும், பழைய எஸ்.எஸ்.எல்.சி. கிளாஸ்மேட்டிடம் பண்போடும் பரிவோடும் பழகுபவன் அவன்.

“ஏண்டா கழுதை..நேத்து உன் அம்மா சொன்னாங்க. பரூக் அண்ட் புருக் கம்பெனியில் அளவிஸ்டெண்ட் வேலைக்கு இன்டர்வியூக்குப் போனாயாமே? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லக்கூடாது?”

“சொன்னால் என்ன செய்திருப்பே.?”

“அந்தக் கம்பெனி பெர்ஸனல் ஆபீஸர் என்னுடைய கேர்ல் பிரண்ட். இவனுக்கு வேலை கொடு… இல்லன்னா நான் உன்னைக் கட்டிக்க மாட்டேன். என்று சொன்னால் போதும், ஒப்புக்கொள்வாள். அந்த அளவுக்கு என் மேல் மயக்கம்.”

“ஆளை விடுப்பா. நீ வேற ஏதாவது ஏடாகோடமாய்ப் பண்ணி வம்பில மாட்ட வச்சிடாதே. அதோட உன் காதல நீ இப்படி கொச்சப்படுத்தாதே.”

“சும்மா தமாஷனக்குச் சொன்னேண்டா. நாளைக் காலையில் நாம் ரெண்டு பேரும் அவளைச் சந்திக்கப் போறோம். ஏதோ உன் லக்.”

மோகன் வேண்டா வெறுப்பாக, நண்பனோடு போனான். சிபாரிசால் வேலையில் சேருவோருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படும் என்பதும், அது தர்மம் இல்லை என்பதும் அவன் கருத்து. என்றாலும், வயதுக்கு வந்த தங்கைகளையும், வயது முதிர்ந்த தந்தையையும் தாங்கவேண்டிய வறுமையின் அடி, அவனின் உறுதியையும் நகர்த்தியது.

“மீட் மிஸ் பிரபாவதி.” என்று சந்திரன் அந்தப் பெண்ணை அறிமுகம் செய்து வைத்தான்.

அந்தப் பெயரைக் கேட்டுத் திடுக்கிட்டு, மோகன், அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தான். நாணத்தால், ஏதோ ஒரு சாக்கில் டெலிபோனை விரலால் தட்டிக்கொண்டே, பிரபாவதி மூச்சு விடாமல் பேசினாள்.

“அன்னிக்கு நீங்க பீச்சில. சாரி. அன்னிக்கு நீங்க மோகனைப் பற்றிச் சொன்னதும், இன்னைக்குப் பைலைப் பார்த்தேன். இவர் தகுதிகள் பிரில்லியண்ட் தான். ஆனால், இவர் வேலை பார்த்த நிறுவனத்துக்கு இவருடைய கேரக்டர் பற்றி எழுதிக் கேட்டிருந்தோம். லஞ்சக் குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் ஆகியிருந்தார்னு எழுதியிருக்காங்க. அதனால..தான்.”

“பிரபா… நீ அப்படிச் சொல்லக்கூடாது. அந்த நிறுவனத்திலே ஒரு பெண்ணுக்கு நியாயமாய் வேலை கிடைக்கிறதுக்காகச் சண்டை போட்டவன் இவன். ஒரு பெண் வாழ்றதுக்காக, தன்னையே அழிக்கக்கிட்டவன் இவன்.”

“அந்த நிறுவனம் எவ்வளவு மோசமானதுன்னு எனக்குத் தெரியும். அதனாலதான். எனக்கு அங்கே அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்தாலும் சேராமல், இந்த கம்பெனியில சேர்ந்தேன். உங்க நண்பரோட ரிக்கார்ட் இப்படி இருக்கையில்”.

“அப்படிச்சொல்லக்கூடாது. இவன்தான் நம்ம மாப்பிள்ளைத் தோழன்”

பிரபாவதி, சீரியஸ் மூடில் இருந்ததால் நாணவில்லை; சிரிக்கவில்லை.

சிறிது நேரம், பேனாவை எடுத்து வாயில் வைத்துக் கடித்துக் கொண்டிருந்தாள். அதன் பிறகு, “ஆல்ரைட். இவரைப் பற்றி வந்திருக்கிற லெட்டரை எடுத்துடறேன். அந்த நிறுவனத்தின் இப்போதைய டைரக்டரை. ஒரு லோஷியல் கேதரிங்ல பார்த்திருக்கேன். அவர்கிட்ட பேசி. நான் அவங்களுக்கு எழுதிய லெட்டரையும் கிழிச்சுப் போட்டுடச் சொல்றேன்.”

பிரபாவதி, சொன்னாளே தவிர சீரியஸாகவே இருந்தாள். “ஏன் ஒரு மாதிரி இருக்கிறே..” என்றான் சந்திரன்.

“ஒன்றுமில்லை. இந்த மாதிரி ரிக்கார்டை ‘டேம்பர்’ பண்ற வேலை எனக்குப் புதுக. நான் எழுதின ரிக்காட்டை, நானே அழிக்கணும். ஒரு வேளை, விசயம் வெளிப்பட்டால், இவரை மாதிரிதான் நானும் ஆகணும்.”

மோகன்,பிரபாவதியைப் பார்த்தான்.இந்தப்பெண்ணுக்காகச் சண்டை போட்டபோதே, அவளிடம் ஒருவித மானசீகமான அன்பையோ காதலையோ கொண்டிருந்தான். அதே பிரபாவதி, தனக்காக நியாயத்திற்குப் புறம்பான வழியைக் கையாளலமா? கூடாது. ஆபீஸ் நியாயம், உலக தர்மம் ஆகாதுதான். ஆனால், மாற்று உபாயம் கிடைக்கும் வரை, நடைமுறை நியாயம் இருந்தாகவேண்டும்!

“மேடம் இவன் நச்சரிப்புத் தாங்க முடியாமல்தான் இங்கே வந்தேன். உண்மையில் எனக்கு எங்கேயும் வேலை செய்ய பிடிக்கல. இவன் அப்பாகிட்ட சொல்லி. நான் உங்கள் மேரேஜை அரேஞ் பண்ணணுமுன்னா, நீங்க எனக்கு வேலை கொடுக்கக் கூடாது. நான் வர்ரேன்.”

சிரித்துக்கொண்டே பேசியதாக நினைத்துக்கொண்டு, வெளியே வந்தமோகன், நினைவுச்சுமையை ஏற்றிக்கொண்டான்; தொட்டிலாட்டிய தந்தையின் கை இப்போது அவன் கையை எதிர்பார்த்து நிற்கும் கட்டாய நிலையையும், வயது வந்தும் வாய்ப்பில்லாமல் நிற்கும் தங்கைகளின் எதிர்காலமும், அவனை முள்போல் குத்தின.

அவர்கள் இருவரையும் அந்த அரையில் தனியாகவிட்டுவிட்டு மோகன் வெளியேறி, முள் மேல் நடப்பதுபோல் நடந்தான்.

– குமுதம் 19.2.76 – தலைப்பாகை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர், 2001, திருவரசு புத்தக நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *