முடிவல்ல ஆரம்பம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 29, 2015
பார்வையிட்டோர்: 9,010 
 

“கை ரேகை சொல்கிறது” அதை நான் உங்களிடம் சொல்கிறேன் என்றார் ஜோசியக்காரர்.

தனபாலுக்கு அப்படி ஒன்றும் ஜோசியத்தில் நம்பிக்கையில்லை, நண்பன் பாலுவின் வற்புறுத்தலுக்காக வந்துள்ளான். வந்த இடத்தில் பாலுவின் கையை மட்டும் பார்த்துவிட்டு கிளம்பியிருந்தால் பரவாயில்லை! பாலுதான் இவர் கையையும் பார்த்து சொல்லுங்கள் என்று இவன் கையை பிடித்து நீட்டினான்.இவனும் நம்பிக்கையில்லாமல் ஜோசியரிடம் கையை நீட்டினான்.

உங்களுடைய வாழ்க்கை தனிக்கட்டையாகத்தான் இருக்கும் என்று ஜோசியக்காரர் சொன்னவுடன் பார்த்தாயா எவ்வளவு கரெக்டாக சொல்லுகிறார் என்று கண்களாலே ஜாடை காண்பித்தான் பாலு, ஆனால் அதற்கு பின் ஜோசியர் சொன்னது அவனயும் குழப்பி தனபாலையும் குழப்பிவிட்டது. “நீங்கள் உங்கள் மைநதனால் அவமானத்துக்கு உள்ளாவீர்கள்”என்று சொன்னதும் பாலு குழப்பத்துடன் ஜோசியக்காரரை பார்த்து இவன் தனிக்கட்டை என்று சரியாக சொல்லி விட்டு மகனால் அவமானம் என்று சொன்னால் எப்படி? கேட்ட பாலுவுக்கு ஜோசியக்காரர் சொன்ன பதில்தான் “கைரேகை சொல்கிறது” அதை நான் உங்களுக்கு சொல்கிறேன், இதை கேட்ட பின் இருவரும் குழப்பத்துடன் அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டனர்.

தனபால் ஒரு பெரிய மனித தோரணையுடன் உலா வருபவன், வயது ஐம்பது சொச்சம் இருக்கும், தன்னை கட்டை பிரம்மச்சாரி என்று சொல்லிக்கொள்பவன், ஆனால் இளமையில் இவன் ஆடிய ஆட்டங்களால் இவனுக்கு யாரும் பெண் தர முன் வரவில்லை என்பதுதான் உண்மை. பெற்றோர் விட்டுச்சென்ற சொத்தின் காரணமாக இந்த ஏரியாவில் இவன் பெரிய மனிதன் தோரணையில் உலா வருபவன்.இவன் இளமைக்காலங்கள் அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இருந்ததில்லை.இப்பொழுது ஜோசியக்காரர் வேறு இவனை நன்கு குழப்பிவிட்டிருக்கிறார், இப்படியே ஒரு மாதம் இதையே நினைத்து பித்து பிடித்தவன் போல அலைந்து பின் அதை மறந்தும் விட்டான்.

எப்பொழுதும் ஆட்டோ அல்லது கார் என்று செல்பவன் அன்று ஏதேச்சையாக பஸ்ஸில் ஏறிவிட்டான். பஸ்ஸில் அன்று சரியான கூட்டம், இவன் எப்படியோ இடிபாடுகளுக்கிடயே புகுந்து தனக்கென நிற்பதுக்கு ஒரு இடத்தைப்பிடித்து ஸ்..ஸ்.. அப்பாடா என தன் பார்வையை சுழல விட்டான் அவன் நேரம் அவன் எதிரில் நீல கலர் சட்டை அணிந்த ஒருவரின் சட்டைப்பைக்குள் இளைஞன் ஒருவன் தன் கையை விட்டு பணம் எடுக்க முயற்சி செய்துகொண்டிருந்தான்.

இதைப்பார்த்த தனபாலுவுக்கு என்ன செய்வது என புரியவில்லை, இருந்தாலும் சமயோசிதமாக “கண்டக்டர்” என்று சத்தமாக கூப்பிட்டான், கண்டக்டர் திரும்பினாரோ இல்லையோ அந்த நீல சட்டைக்காரர் சடாரென திரும்ப அந்த இளைஞனும் ஏமாற்றத்துடன்
சட்டென கையை எடுத்துவிட்டு தனபாலை முறைக்க ஆரம்பித்தான், இவனும் அந்த இளைஞனின் பார்வையை தவிர்க்க வெளியே பார்ப்பது போல பாவ்லா காட்டினான். அதற்குள் ஏதோ ஸ்டாப்பிங் வர கண்டக்டர் விசில் அடிக்க அதற்க்காகவே காத்திருந்த அந்த இளைஞன் தனபாலின் முகத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்துவிட்டு வண்டி நிறபதற்குள் இறங்கி ஓடிவிட்டான்.

தனபால் பொறி கலங்கிப்போய் நின்றான், உடன் பயணித்தவர்கள் அவனை பரிதாபமாக பார்க்க விவரம் புரிந்த சிலர் சார்..அவன் பிக்பாக்கெட்காரன்,அவன் பிக்பாக்கெட் அடிக்கறதை நீங்க கெடுத்திட்டீங்கன்னு உங்களை அறைஞ்சுட்டு போறான், நல்ல வேளை கையிலே பிளேடு கிளேடு வச்சிருந்தான்னா இந் நேரம் என்ன ஆயிருக்கும்? பயணிகளின் அனுதாபங்கள்.. தனபால் வாழ்நாளில் வாங்கியிராத அடி அது! திடீரென்று ஜோசியக்காரர் சொன்னது வேறு ஞாபகம் வந்து தொலைத்தது,நானும் ஒரு காலத்தில் இந்த மாதிரி இருந்து வந்துவந்தவன்தான்,மனதில் வன்மம் ஏறியது, அவனை பதிலுக்கு ஏதேனும் செய்ய அவன் மனம் துடித்தது, பஸ் ஏறிய ஆட்டோ ஸ்டாண்ட் பக்கம் தொ¢ந்த மறைமுக நண்பர் (வெளியே மிகவும் நல்லவர் உள்ளே சாம பேத தான தண்டங்கள் அனைத்தும் செய்பவர்) மூலம் அந்த இளைஞ்னைப்பற்றி விசாரிக்க செய்தான்.பையன் அந்த ஏரியா பக்கம் உள்ள குடிசையில் உள்ளவன், பிக்பாக்கெட்,வழிப்பறி,அடிதடி என்று அவன் மீது பல கேஸ்கள் உண்டு, விவ்ரம் தொ¢வித்த நண்பர் என்ன சார் பையனை கூப்பிட்டு விசாரிக்கலாமா? என்று கேட்டார், இவன் மனம் குறுகுறுக்க விட்டுப்பிடி என்றது,

இப்ப வேண்டாம், இவன் எப்படி இந்த ஏரியாவுக்கு வந்தான்? இவனுக்கு யாராவது பின்னாடி இருக்கறாங்களா? விசாரிக்க சொன்னான். ஓரிரு நாட்களில் விவரங்கள் தொ¢யவந்தன, இவன் மன நோயாளிப்பெண்ணுக்கு பிறந்தவன் அவள் இந்த குடிசைப்பகுதிக்கு எப்படியோ வந்து இவனை பெற்றெடுத்தவுடன் உயிரை விட்டுவிட்டாள். அந்த குடிசை வாசிகள் இவனை எடுத்து வளர்த்தியுள்ளார்கள், இவன் முதலில் குடிசைப்பகுதிக்கு சென்று விசாரித்தான் அந்த மன நோயாளிப்பெண் எப்படி இருந்தாள்? அவர்கள் சொன்ன அங்க அடையாளங்கள் இவன் செய்த பாவச்செயலை நினைவுபடுத்தின,நல்ல மழையில் குடிபோதையில் வந்தவன் வழியில் படுத்திருந்த இந்த மன நோயாளிப்பெண்ணிடம் செய்த பாவத்தின் விளைவே இந்த இளைஞன் என்பதை முடிவுசெய்தான் இவன் மனதில் அற்ப சந்தோசம் வந்தது, ஜோசியக்காரர் சொன்னது உண்மையாகிவிட்டதா? இந்த இளைஞன் என்னுடைய வாரிசா ! அவன் வாரிசைக்காண அந்த குடிசைப்பகுதிக்கு விரைந்தான்.

(தயவு செய்து கதை முடிந்துவிட்டது என நினைத்துவிடாதீர்கள் இது ஆரம்பம் என்று அடுத்த பத்திக்கு செல்லுங்கள்)

அந்த குடிசைப்பகுதியில் தனபாலை அறைந்துவிட்டு ஓடிச்சென்ற இளைஞன் முனபு நாந்தான் உன் தகப்பன், உன் அம்மாவுக்கு நான் செய்த விளைவின் காரணமாக பிறந்தவன் நீ என்பதை கொஞ்சம் பெருமையுடனும் அதே நேரத்தில் பெரிய மனது தோரணையும் விட்டு விடாமல் இனிமேல் உன்னை நான் பார்த்து கொள்வதாக சொல்லிக்கொண்டிருந்தான் தனபால்.

சற்று நேரம் மவுனமாக இருந்தான் அந்த இளைஞன், குடித்திருப்பான் போல அவன் உடல் தள்ளாடிக்கொண்டிருந்தது. தூ…என தலையை திருப்பி அருகில் இருந்த சாக்கடையில் துப்பினான், எச்சில் சாக்கடையில் விழுந்து சாக்கடை தண்ணீருடன் ஒரு சில துளிகள் தனபால் முகத்தில் தெறித்தன.

நீ எல்லாம் மனுசனாயா? பார்த்தா வெள்ளையும் சொள்ளையுமா இருக்கே? யோவ்.. இரண்டு கல்யாணம் பண்ணவங்கூட இரண்டு பொண்டாட்டிகள் கூட வாழ்றதை கெளரவமா சொல்வான்யா ! அட இல்லீகலா பொண்ணுகளை வச்சுருக்கறவங்கூட அவ கூட வாழ்றதை மத்தவங்களுக்கு பெருமையா சொல்லுவான், ஆனா உன்னை மாதிரி ஆளுகளாலதாய்யா என்னைமாதிரி ஆளுக ரோட்டுல பொறக்குரம்,

இங்க பாத்தியா இந்த மாதிரி சாக்கடைக்குள்ளதான்யா என்னை மாதிரி குழந்தங்க பொறக்குது. நாங்க எல்லாம் கெட்டவங்கதான், ஆனா உன்னை மாதிரி காரியம் பண்ணிட்டு பெரிய மனுசனாட்டம் வெளிய திரியறது கிடையாது.

ஆனா ஒண்ணுயா ! உனக்கு கொள்ளி போடனும்னு நீ ஆசைப்படறியோ இல்லியோ, உன் பேரை இனிமே நாற வைக்கறதுன்னு முடிவு பண்ணிட்டயா ! இனி என்னை போலீஸ் தேடுதோ இல்லீயோ உன் பையன் நானுன்னு போலீஸ்ல இருந்து எல்லாத்துகிட்டேயும் சொல்லிவச்சுடுவேன், நீ இனிமே பெரிய மனுசனா வெளியில ஆக்ட் கொடுக்கமுடியாம பண்றனா பாரு, இது என்னை பெத்துபோட்டுட்டு செத்துப்போனாலே அவ உனக்கு கொடுக்கற தண்டனையா இருக்கட்டும், இனிமேல் உன் வாழ்க்கை என் கையால சீரழிவுதான்யா.

தனபால் தனக்கு தானே அவமானங்களை ஏற்படுத்திக்கொள்ள ஆரம்பித்துக்கொண்டோமோ என கவலையுடன் நின்றான்.

Print Friendly, PDF & Email

யார் முதல்வன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

தவிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)