மீன்காரியும் சாப்பாட்டு ராமனும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 11, 2023
பார்வையிட்டோர்: 2,267 
 
 

பொன்னாத்தூர் என்ற ஊரில் ஒரு மீன்காரி இருந்தாள். அவள் தினமும் காலையில் தெருத் தெருவாக சென்று மீன் விற்பாள். விற்றதுப் போக மீதமிருக்கும் மீன்களையெல்லாம் ஒன்றாக சேர்த்து கலவை மீன் குழம்பு வைத்து சாயங்காலம் நேரச்சாப்பாட்டுக் கடை நடத்தி வந்தாள். மீன்காரி வைக்கும் மீன் குழம்பு ஊரெல்லாம் மணக்கும் அந்திசாயந்தாள் போதும் பொனர்த்தூர் ஊர் மக்கள் எல்லோரும் மீன்காரியின் கலவைமீன் குழம்பிற்கு அடிமையாகிவிடுவார்கள். பக்கத்து ஊர்காரர்களின் நாக்கும் கூட எப்போது அந்திசாயும் என்று ஆவலோக் காத்துக்கொண்டிருப்பார்கள்.

அன்றொரு நாள் மீன்காரியின் கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. எல்லோரும் மெய் மறந்துப் போய் கலவை மீன் குழம்பை ஒருப்பிடி பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ராமனும் அங்கு சாப்பிட வந்தான். அவன் சரியான சாப்பாட்டு ராமன். அவனுக்கென்று சொல்லிக் கொள்ள சொந்தம் என்று யாரும் கிடையாது. தினமும் விடிந்ததும் யாருடையத் தோட்டத்திலாவது வேலை செய்வான். அதில் வரும் சொற்ப காசையும் அன்றே வயிறுமுட்டச் சாப்பிட்டு காலி செய்துவிடுவான். ராமனிடம் சேமிப்பு என்ற பழக்கமே கிடையாது.

ஒரு வழியாக சாப்பிடுவதற்கு உட்கார ராமனுக்கு இடம் கிடைத்தது. மீன்காரி வந்து ராமன் முன் வாழை இலையை விரித்து சோற்றை மலைப் போல் குவித்தாள். அந்த சோற்றில் ராமன் பள்ளம் தோண்ட மீன்காரி கலவை மீன்குழம்பை ஊற்றினாள். ஆவன் தன்னையே மறந்துப் போய் சாப்பாட்டில் மூழ்கிப் போனான். கலவை மீன் குழம்பின் ருசி ராமனின் நாக்கை சுண்டியிருந்தது. கணக்கில்லாமல் சாப்பிட்டுக் கொண்டே இருந்தான். வயிறுமுட்டிப் போய் மூச்சுவிட சிரமமப்பட்டப் போதுதான் அவன் சாப்பிடுவதையே நிறுத்தினான்.

ராமன் சாப்பிட்டு முடித்ததும் மீன்காரி சாப்பாட்டிற்கான பணத்தை கேட்டாள். அவனே தன்னிடம் இருந்த சொற்ப சில்லரையை எடுத்து அவள் முன் நீட்டினான். ‘ஏய் என்ன வெறும் சில்லரை காசை குடுக்குறா? நீ சாப்பிட்ட சாப்பாட்டோட விலை எவ்வளவுன்னு தெரியுமா! எழுபத்தி ஐந்து ரூபாய். ஒழுங்கா பணத்தை குடுத்துட்டு இங்கிருந்து நடையைக்கட்டு’ என மீன்காரி ராமனிடம் மல்லுக்கட்டினாள். ‘என்னது எழுபத்தி ஐந்து ரூபாயா! ஐயயோ என்னிடம் இந்த சில்லரைக் காசு மட்டும்தானே இருக்கு’ என்று ராமன் தலையைச் சொறிந்தான்.

‘ஐயோ இன்னைக்கு வேற கடையில கூட்டம் அதிகமாகிகிட்டே இருக்கே. நீ ஒருத்தன் நேரம் காலம் புரியாம என் கழுத்தை அறுக்கிறியே, இப்போ நான் என்ன செய்ய’ என்று மீன்காரி தலையில் அடித்துக் கொண்டாள். கடையின் சூழ்நிலையை புரிந்துக் கொண்ட ராமன் பம்பரமாக சூழன்று வாடிக்கையாளர்களின் வயிறோடு சேர்த்து மனதையும் நிரப்பினான். நேரம் ஆக ஆக சாப்பிட வருபவர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டேயிருந்ததே தவிர குறைந்தப்பாடில்லை. ஆனால் அடுத்து வந்தவர்களுக்கெல்லாம் சாப்பிட கொடுப்பதற்கு கடையில் சோறும் கலவை மீன்குழம்பும் இல்லாமல் தீர்ந்துப் போனது. பாவம் இன்று சிலரின் நாக்கு கலவை மீன்குழம்பை ருசிப்பார்க்க நினைத்து ஏமாந்துப் போனது. ‘சரி சரி நீ சாப்பிட்டதுக்கும் இப்போ வேலைப் பார்த்ததுக்கும் கணக்கு சரியாப் போச்சு ம்ம்… இங்கிருந்து கௌம்பு’ என மீன்காரி ராமனை கடையிலிருந்து வெளியேற்றிவிட்டு சாப்பாட்டுக் கடையை இழுத்து மூடினாள்.

மறுநாள் காலையில் வழக்கம் போல் மீன்விற்பனைக்காக ஒவ்வொரு மீன்களையும் ரசம் பிரித்து கூடையில் மீன்காரி அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள். தற்செயலாக அவளின் செய்கையைப் பார்த்த ராமனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. தனது யோசனை மீன்காரியிடம் போய் அவன் சொன்னான். ‘நீ தினமும் விற்றதுப போக மீதிமிருக்கும் மீன்களையெல்லாம் ஒன்றாக சேர்த்து கலவை மீன் குழம்பு வைப்பதற்கு பதிலாக, மீந்துப் போன மீன்களை ரகம்வாரியாக தரம் பிரித்து தனித்தனியாக மீன்குழம்பு வைக்கலாமே? அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு மீன் குழம்பிற்கும் ஒரு விலை வைத்து விற்றால் உனக்கு இன்னும் நிறைய லாபம் கிடைக்குமே’யென அவன் சொன்னான்.

ராமன் சொல்லும் யோசனை சரியென்றெ மீன்காரிக்குத் தோன்றியது. உடனே அந்த யோசனையை அவள் செயல்படுத்தினாள். தன் சாப்பாட்டுக் கடைக்கு முன் ஒரு அறிவிப்பு பலகையை வைத்தவள் அதில்.

நெத்திலி மீன்குழம்பு சாப்பாடு ரூபாய் – 5.00
வாளை மீன்குழம்பு சாப்பாடு ரூபாய் – 6.00
கெண்டை மீன்குழம்பு சாப்பாடு ரூபாய் – 7.00

என ஒவ்வொரு ரூபாய் வீதம் கூடுதலாக விலை வைத்து பட்டியல் கொடுத்திருந்தாள்.

மீன் குழம்பின் விலை ஏற்றத்திற்கு பிறகும் கூட சாப்பாட்டுக் கடையில் கூட்டம் அதிகரிக்கவே செய்தது. அவள் கலவையாக வைத்த மீன் குழம்பைவிட ரகம்வாரியாக வைத்திருந்த மீன் குழம்பு கூடுதல் ருசியாக இருந்தது. வழக்கத்தைவவிட மூன்று மடங்கு லாபம் மீன்காரிக்கு கிடைத்தது.

பொழுது விடிந்ததும் மீன்காரி ராமனை தேடிப்போய் நன்றி சொன்னாள். அதோடு சேர்த்து இன்னொரு விசயத்தையும் சொன்னாள். மீன் விற்பனையை நிறுத்திவிட்டு, சாயங்காலம் சாப்பாட்டுக்கடையை இனி முழு நேர சாப்பாட்டுக் கடையாக மாற்றப போவதாக மீன்காரி சொன்னாள். ‘ஆஹா இதுவும் நல்ல யோசனை தான்’ அதுமட்டுமில்லை இனிமே அந்த சாப்பாட்டுக் கடையை நாம் இரண்டு பேரும் சேர்ந்துதான் நடத்த போகிறோம் என்று சொல்லி சாப்பாட்டு ராமனுக்கு மீன்காரி இன்பதிர்ச்சிக் கொடுத்தாள்.

இருவரின் முயற்சியிலும் கடின உழைப்பிலும் மீன்குழம்பு சாப்பாட்டுக் கடை பல கிளைகளாக விரிந்தது. பிறகு மீன்காரியும் சாப்பாட்டு ராமனும் திருமணம் செய்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *