மீண்டும் தொடங்கும் மிடுக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 25, 2015
பார்வையிட்டோர்: 8,367 
 
 

கீதாவுக்கு அழுகை அழுகையாக வந்தது.அடக்க முயன்றால்.முடியவில்லை.கலங்கிய
கண்களுடன்,வேலை செய்வதை விட்டு,எழும்பி நின்று பயிர்களைப் பார்த்தாள்.பச்சை
விரித்தாற் போல்,பரந்து கிடந்தது.பூக்கிறதுக்கு காலம் இருக்கிறது.மற்ற
தோழிகளிற்கு,பெரிய விவசாய அறிவில்லாவிட்டாலும்,பயிரின் கீழேயுள்ள மண்ணை சிறிது
கொத்தி தூர்த்தும்,ஏதாவது விருந்தாளியான களைப் பூண்டின் பகுதி தெரிந்தால்
வேருடன் பிடுங்கி,இடுப்பில் செருகியுள்ள சொப்பிங் பையில் போட்டுக்
கொண்டுமிருந்தார்கள்.அவள் இடுப்பிலும் ஒரு பை தொங்கிறது .
அவளைப் போன்ற சோகம் அவர்களுக்கில்லை.இருந்தாலும்,அவளுடன்
அனுதாபத்துடனே பழகிறார்கள்.அவளால் தான் ‘தனித்த’ நிலையிலிருந்து விடுபட
முடியவிலை. வீடும்,அவளைப் போலவே கிடக்கிறது.’உற்சாகமாகவிருக்க
வேண்டும்,நம்பிக்கைகளுடன் இருக்க வேண்டும்,இன்று புதிதாய் பிறந்தோம் என்ற
பாரதிக்கவிதை வரியை எடுத்து அலம்பிற அப்பாவிற்குக் கூட நாடி விழுந்து விட்டது.
அம்மா,படிப்பில் சுட்டியாகவில்லா விட்டாலும்,அந்த காலத்தில் படித்து
ஆசிரியையானவர். “உசாரானப் பெண்”என பாட்டி பாராட்டுறவர்,பள்ளிக்கூடத்தில்
அனைவராலுமே மதிக்கப் படுறவர், “ஏதும் வாழ்க்கைப்பிரச்சனையை டீச்சரோட
கதைத்தால்,சரியாகி விடும்”என்று சொல்லுவார்கள். ‘வயதில் மூத்தவர் என்பதால்
அல்ல! அனுபவமுள்ளவர்’என்பதால், அவரே ஒரு மாசம் ‘வெறித்த பார்வை,சேது மாதிரி..’
ஆடிப் போய் விட்டார்.

“அவன்,சொல்வழி கேளான்,கண்டிச்சு வையுங்கோ”இடைக்கிடை இப்படி
புலம்புவராக…வீடு, செத்த வீடு கொண்டாடியது.மனநல வையித்தியர் கந்தசாமியால்
ஓரளவு தேறியிருக்கிறார்.

அக்காவிற்கு,சோகம் இருந்தாலும் அத்தனை பாராட்டவில்லை.அவள் வீட்டு
விஞ்ஞான(சமையல்) ஆசிரியையாக …வேலை பார்ப்பவள், அவள் ஒருத்தி மட்டும் தான்
நேராக இருக்கிறாள்.அக்காவை விட தம்பி 5 வருசம் தள்ளி பிறந்ததால் இருக்கலாம்.

இதுவரையில் வெளியில், அரசபடைகளால் நிகழ்த்தப்படுற ‘சாக்ககளை
பார்த்திருக்கிறார்கள்,பொருட்படுத்தியதுமில்லை, அது வீட்டிலே நடக்கும் என
எதிர்பார்க்க இல்லை. ‘வாழ்க்கை’ என்பதே எதிர்பாராதது நடப்பதொன்று தான்!

எல்லாமே,நம்ப முடியாமல் நடக்கிறது.

தமிழ், சிங்களப் பிரச்சனையே தெரியாத தம்பி,இயக்கத்திற்குப் போறான். விதி, காந்திய
தலைவர் உருவில் வந்தது.

“காந்தியத் தலைவர் ஒருவர் ,யாழ்ப்பாணம் வந்து, காந்தியச் சேவைக்கு,
மாணவர்கள், பள்ளி விடுதலை நாட்களில் வவுனியா வந்து உங்களுடைய சரீர உழைப்பை
தாருங்கள் என்று கேட்டு விளக்க.. கூட்டங்களை பரவலாக வைக்கிறார். ரமேஸோடு
டெக்கிலே நடந்த ஒரு கூட்டத்திற்குப் போனேன்.கலவரம்,மலையகம் …என்னவோ
பேசுகிறார். புரியவில்லை” என்றான். நானும் தம்பியும் ஒரு வயசு வித்தியாசம்
என்பதால்,நான் வகுப்பில் நடந்ததை எல்லாம் வந்து அவனிடம்
அலம்புவேன்.அவனும் …வந்து அலம்புவான்.சின்னனிலே அப்பர் கதை சொல்வதைப்
பார்த்து,நானும் பெரிய மனுசி போல அவனுக்கு கதை சொன்னதின் தொடர்ச்சியாய்
இருக்கலாம். எனக்கு வந்து சொல்றதை ஒரு கடமை போல வைத்திருந்தான்.ஒருநாள்,
“(நகரப்) பள்ளிக்கூடத்தில் என்னோட படிக்கிற ரமேஸ்”என்று அவனை வீட்டிற்கு
கூட்டி வந்தான். வாரபாடாக …உபசரித்து சாப்பிட வைத்தார்கள்.தம்பியைப் போன்ற
துருதுருப்பு. அவர்களுக்கும் பிடித்திருந்தது.

அங்கே, பொதுவாக படிக்கிறவர்களுக்கு சகமாணவனின் பின்புலங்கள் தெரிவதில்லை
என்பது எனக்குத் தெரியும். வகுப்புகள் நடைபெறும் வரையில் தான் சந்திப்பு.
வடமராட்சி,தென்மராட்சி…என பல்வேறுபட்ட இடங்களிலிருந்து வருபவர்கள் வெளியில்
வேலை மினக்கெட்டுப் பழகிறதுக்கு என்ன உறவினரா?

பஸ் பயணமே நீண்ட நேரத்தை எடுக்கிறது.பள்ளிக்கூடம் விட்டால் வீட்ட
வருதலிலே கவனம் இருந்தது.

அவன் பல கூட்டங்களுக்கு சென்று என்னிடம் வந்து, வந்து அலம்பினான்.
அப்பவும் தம்பிக்கு அந்த ‘அரசியல்’ அவ்வளவாகபுரியவில்லை .வீட்ட வந்து
சந்தேகங்களை அப்பாவிடம் கேட்டான். அப்பருக்கு தமிழரசுக்கட்சியையே அவ்வளவாக
பிடிக்காது.”தமிழ் வெறியை முதன்மையாக தூக்கிப் பிடிக்கிறதால் மற்றப் பிரச்சனைகளை
அமுக்கி விடுகின்றன”என்று சொல்லுறவர்.எனவே அவருடைய பதில்கள் வேற
கோணத்தில் இருந்தன.

காந்தியமும், சிங்கள பகுதியில் இருக்கிற ‘சர்வோதய’ அமைப்பு போல தமிழ்ப்
பகுதியில் இருந்த சேவை அமைப்பு. அதை, அப்பர் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை.
அக்காவிடம் “காந்தியம் என்றது என்ன?”என்று கேட்டிருக்கிறார். அக்காவுக்கு என்ன
தெரியும்.

“அம்மாவிடம் கேளுங்கப்பா “என்று கழன்று விட்டாள்.

அம்மாவிடம் கேட்க அப்பாட கெளரவம் இடம் கொடுத்திருக்காது, கேட்டிருக்க
மாட்டார் எனப் படுகிறது எம்முடைய வானொலியிலேயே, ‘தமிழுக்கும் அமுதென்ற
பேர்..’என்ற சாதாரண தமிழ்ப்பாட்டையே ஒலிக்க விடாது தடுத்த சூரர்கள் சிங்கள
நாஜிகள்(தலைவர்கள்). வானொலியில் சர்வோதயம் பற்றிய சேவைகளை சிங்கள பட்டி
தொட்டிகளுக்கு எடுத்துச் சென்றளவுக்கு ‘காந்திய அமைப்பை’ப் (வெறுக்கிற
அமைப்பு)பற்றி தெரியப்படுத்த விரும்பியிருக்க மாட்டார்கள்.

வடக்குக் கிழக்கு தமிழர்களிற்கும் காந்தியத்தைப் பற்றி பெரிதாக
தெரிந்திருக்கவில்லை.எனவே தான். மாணவர்கள் மூலமாக தெரியப்படுத்தவே, அதன் இயக்குனரில் ஒருவரே நேரிலே வந்து …’விளக்கக்’கூட்டங்களை’வைத்துக் கொண்டிருக்கிறார்.

77ஆண்டுக் கலவரத்தில், கூடுதலாகப் பாதிக்கப்பட்ட மலையகத்தவர்கள்
கிளிநொச்சியிற்கு அகதியாய் வந்த போது தமிழ் அரசியல்வாதிகள் கூட அவர்களை
பொறுப்பெடுக்கத் தயங்கினார்கள்.கிளிநொச்சியில் பிறப்பெடுத்த இந்த காந்திய
அமைப்பு தான் அவர்களுக்கு அப்ப உதவ முன் வந்தது.போதிய நிதிவளம் இல்லாத
போதிலும் அந்த பெரும் பொறுப்பை தன் தோள்களில் சுமந்து கொண்டு அவர்களை
வன்னிப் பகுதிகளில் காடுகளை அழித்து குடியேற்ற பெரும் பாடு பட்டது. அதன்
இயக்குனர்களான தற்போது யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கிற டாக்டர்
இராஜசுந்தரமும்,பிரபல கட்டிடக் கலைஞரான டேவிட் ஐயாவும் வெளிநாடுகளில் உள்ள
தொண்டு நிறுவனங்களிடம் எல்லாம் தொடர்புகளை ஏற்படுத்தி நிதிகளை பெற்று
தள்ளாட்டமாகவே நடத்தி வந்தார்கள்.

சிங்கள அரசு இன்று தமிழர்களை நட்டாற்றில் விட்டிருப்பது போல தான் அன்று
மலையகத்தவர்களையும் (கொலை செய்வது அவர்களது கலாச்சாரம்)கொலையும்
செய்து, அடித்துத் துரத்தி.. எந்த உதவிகளும் செய்யாது விட்டேந்தியாய் விட்டிருந்தது.

அச்சமயம், தமிழ்விடுதலைக் கூட்டணியில் இருந்த தமிழிளைஞர் பேரவையைச்
சேர்ந்த பல இளைஞர்கள் இவ்வமைப்பிற்கு தோள் கொடுக்க முன் சென்றார்கள்.

இந்த விசயங்கள் எல்லாம் இப்ப தெரியிறளவிற்கு அப்ப எவருக்குமே பெரிதாக
தெரியாது.அப்பருக்கு தெரியாதது ஆச்சரியமில்லை.எனக்கும் ..தெரியாது
தான்.’ஈழநாடு’பத்திரிகையில் பணியாற்றியவரின் மகளான என்னுடைய சினேகிதி
கமலா,சொல்லியும், ஈழநாடை வாசித்துமே பிறகு நான் இந்த விசயங்களை
சேகரித்தேன்.இப்ப கூட எத்தனை பேருக்கு ‘காந்தியம்’பற்றி தெரியும்?

அவனுடைய கேள்விகளிற்கு பதில் தெரியாததால் நானும், அக்காவும் எதிர்க்
கேள்விகளைப் போட்டு அவனை குழப்பி விடுவோம்.”போங்கடி அங்கால”என்று
கத்துவான். இருந்தாலும், அந்த கேள்விகளுக்கு விடைகளை தேடிக் கொண்டு
தானிருப்போம்.

“நீயா புத்தகங்களை,பேப்பரை தேடி எடுத்துப் படிப்பதை விட்டு அப்பாட்ட என்ன
தொந்தரவு “என்று அக்கா என கத்தி விட்டு போய் விடுவாள் .அக்காவிற்கு வாய்
காட்ட மாட்டான்.எல்லாம் என்னோடு தான். அப்பா, சமாளிக்கத்தான் செய்தார்.
அவனுக்கு திருப்தி ஏற்படவில்லை. அப்பாவை அவனுக்கு நல்லாவே பிடிக்கும். அது
தான் பிரச்சனையாய் இருந்தது . அவரைப் போல இருந்ததாலே எளிமையாக இருந்த காந்திய
ஆளையும் பிடித்திருக்கிறது.

அவர் குரல் கூட அப்பாவைப் போல இருக்காம் என்று நொடிக்கொரு தரம்
சொல்லி ஆவல் படுத்திக் கொண்டிருந்தான் . தம்பியிற்கு, அவரோடு வவுனியாவிற்கு
போக விருப்பம். அம்மா தூர இடங்களுக்கு போக விட மாட்டார். தெரிந்தும், அம்மாவிடம்
கேட்ட போது மறுத்து விட்டார். அவனும் அதை பொருட்டாக எடுத்துக்
கொள்ளவில்லை. என்ன, அவனுடைய தோழர்களை(குரங்குகளை)பார்க்க கொடுத்து
வைக்கவில்லை,அவ்வளவு தான்!

தொண்டாற்றிய தமிழர் இளைஞர் பேரவையைச் சேர்ந்த அவ்விளைஞர்களில் பலர்
பிறகு,இயக்கங்களுக்குச் சென்றதைக் காரணம் காட்டி சிங்கள அரசு காந்தியத்தை
பயங்கரவாத அமைப்பாகக் கூறி தடை செய்தது.அது மட்டுமில்லாது சிறையில் வைத்து
(காந்திய) இயக்குனர்களையும் தீர்த்துக் கட்ட வஞ்சகமாக திட்டம் தீட்டி நடத்தியது.

அப்படி நிறைவேற்றப்பட்டதே இருண்ட யூலை!

அரசு , அந்த ஜூலை 25,27 இல், ,அந்த காந்திய ஆளின் கதையை பல
இளைஞர்களோடு சேர்த்து ‘சிறை இல் வைத்து குத்திக் கொல்லாமல் இருந்திருந்தால்,
தம்பியும், இந்தளவுக்கு குழப்பப் பட்டிருக்க மாட்டான், நாமும் அவனை இழந்திருக்க
மாட்டோம்.அவளுக்கு அழுகை அழுகையாய்யே வருகிறது.

அந்த சம்பவம் அவனை அதிகமாக பாதித்து விட்டது. அதன் பிறகு அவன்
வெளிய,எங்கையோ அடிக்கடி போய் வரத் தொடங்கினான்.எதுவும் பேச மாட்டான்.
கேள்விகள் இல்லை. அந்த மாற்றம் அவளை பயமுறுத்தியது.

“அவர்,எத்தனை எளிமையானவர் , அவரைப் போய்க் கொன்றிருக்கிறார்களே”.
அடிக்கடி விரக்தியாய் சொல்லுவான்.

‘இனி, நாம் போராடித்தான் வாழ்வை பெற வேண்டும்!’என்ற தூண்டுதலினால்,
எங்களுக்கு அதிர்ச்சி அளிக்க , பயிற்சிக்காக இயக்கப் பெடியள்களுடன் வள்ளத்தில்
ஏறி விட்டான்.

அதற்குப் பிறகு… நடந்தது எல்லாம் கனவா, நனவா? என் பது போல கிடக்கிறது.
‘அவன் இல்லை’ என்றதை நம்ப முடியாமல் இருக்கிறது.

இயல்பான சுனாமி போல அவன் சாவு நிகழ்ந்திருக்கக் கூடாதா? அவர்களை தினம்
தினம் கொல்கிறதே. அவளை என்னவோ..செய்கிறது,அழுகை வெடிக்கிறது. அழுகிறாள்.

அவள் அழுவதைக் கவனித்த மாலதி, “என்னடி செய்யுது?”என்று வாஞ்ஸையாக
கேட்கிறாள்.

“உடம்பும்,வயிறும் நோகுது”என்று அவள் மழுப்பினாள்.

பொம்பிள்ளைச் சமாச்சாரம்! வீட்டுவளவுக்குப் பக்கத்திலே மேற்கே பார்த்தக்
அந்த காணியில், வேலியோடிருந்த கிளுவை,பூவரசுப் பக்க வரம்பு நிழலாகவிருந்தது. .

“நீ போய் நிழலிலே இரு.கொஞ்ச நேரத்திலே வாரோம்”என்று அனுப்பினாள்.

அக்கிராமத்தில் மட்டுமில்லை,யாழ் பூராவும் காணியில் ஒரு தடவைக்கு மேல்
நெல் விதைப்பதில்லை.போதிய நீர் இல்லாதது தான் காரணம்.மழையை நம்பித் தான்
அந்த தடவையே நடக்கிறது. மழை பொய்த்து விட்டால் மொத்தப் பயிருமே கருகி
விடுகிறது.

இயக்க அமைப்பு மூலமாக மகளிர் அமைப்பு ‘அவரை’ விதைக்க அக்காணியைக்
கேட்ட போது “இது முட்டாள்தனம்”என்று சொல்லியே (அவர்களுக்கும்
பெடியள்களுக்கும் தொடர்பு இருந்ததால்…) தந்தார்கள்.

நிழலில் போய் தனிய இருந்த அவளுக்கு உண்மையிலே உடம்பு உளைந்தது.
விரக்தியும் அடைந்தாள்.

. அவளுக்கு, தமிழ்ச் சினிமாப் பாதிப்பால் ஒரு அன்பான ராஜகுமாரன் வந்து தாங்க
மாட்டானா?என்றிருந்தது.அவன் தோளில் சாய்ந்து கொண்டு… சாதாரண வாழ்க்கையை
தானே கனவு காண்கிறாள்.

, தம்பிட விதி , அப்படி முடிந்ததிற்காக அவள், இயக்கங்கள் எழுந்ததை எல்லாம்
பிழை ..என்று வாதாட வர மாட்டாள்.

காந்தி, கூட வெள்ளையரின் நிற அவமதிப்பினால் ஏற்பட்ட கோபத்திலேயே போராட
வந்தவர்.

ஓரியக்கமாக இருந்து,2ஆக பிளவுபட்டு புதுப் பெயரில் இருந்த ஒன்றிலே போய்
தம்பி சேர்ந்து விட்டிருந்தான்.

ஆனால், வள்ளுவர்,

“ஒன்றாமை ஒன்றியள் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது!”
என்கிறாரே!

‘ஒன்றிலிருந்த நிலையில் உட்பகை தோன்றி விடுமானால், அதில் தோன்றும் பலி
வாங்கும் போக்கை தடுப்பது எந்த காலத்திலும் முடியாது’என்கிறாரே. ஒன்றை ஒன்று
சாகும் வரை விரட்டப் போகிறதோ?.

8 மாசம் கழித்து, தம்பி திரும்பி வந்த போது, அவர்களுக்கு சந்தோசப்படுவதா,
இல்லையா?என்று தெரியவில்லை.

இலங்கை ராணுவம் ஒவ்வொரு ஊர் ஊராக நுழைந்து தேடுதலை தீவிரமாக நடத்திக்
கொண்டிருந்தது. ஒவ்வொரு தடவையும் நுழைந்தால், சந்தேகத்தின் பேரில் குறைந்தது
100 பெடியகளையாவது ‘பூசா’வதை முகாமிற்கு அள்ளிக் கொண்டு
சென்றார்கள்.அவர்கள் பகுதிக்கும் ஒரு நாள் நிச்சியம் குறித்திருப்பார்கள்.

அப்படி எங்குமே, எந்நேரமும் வரலாம் என்ற பயம் கவிந்திருந்தது.

அப்பிரதேசத்தில், அவ்வியக்கம், நிறைய கட்டமைப்புக்களைக் கட்டி
வைத்திருந்தது.கிட்டத்தட்ட ‘நிழல் அரசாங்கம்’ போன்ற அமைப்புக்கள்.ஜி.எ, எ.ஜி.எ,
ஜி.எஸ்…அதே பெயரிலே பொறுப்பாளர்கள்,உபவமைப்புகள்.பொலிஸுக்குப் பதிலாக
ராணுவப் பிரிவு.ஆனால்,அவ்வமைப்புகள் அரச ராணுவம் அடிக்கடி
ஊர்மனைகளுக்குள் வந்து தேடுதல் நடத்துவதால் செயல்பட முடியாமலும் இருந்தது.

இயக்கத்திலே, பயிற்சி எடுத்தவர்கள் ராணுவப் பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்களை மக்கள் அமைப்புடன் சேர்ந்தியங்க விட்டிருந்தார்கள். தம்பி கிராமத்து அமைப்புகளுடன் சென்று அலைந்திருக்கிறான்.

தம்பி, இந்த கிராமத்திலும் அலைந்து திரிந்து பழகி இருக்கிறான் . கிராமப்
பெடியள்களுக்கு வேறு ரோல் மாடலாக விளங்கிறான். எல்லோரும் மரியாதையுடன்
தம்பியிட சாயலில் இருக்கிற அவளை, பொம்பிள்ளை ராமுவாகவே பார்க்கிறார்கள்.

அவன் வந்து கொஞ்ச மாசமாக தேடுதல் இடம் பெறவேயில்லை.

ராணுவம் வராதது நிம்மதியாகவிருந்தது.

அதை, குலைக்கிற மாதிரி திடீரென ஒரு நாள் வந்தார்கள். ஒரு கிழமைக்கு மேல்
கடுமையான ஊரடங்கை அமுல் படுத்தி விட்டு, தேடுதலை ஆரம்பிக்க, பல(4,5
)இயக்கத்தைச் சேர்ந்த பெடியள்களும் அவ்விடத்திலே இருந்தார்கள்,தம்பிட ஆட்கள்
தான் அதிகம்.எல்லோரும் சிதறி ஓடினார்கள். இருந்தாலும், மக்கள் ஊரடங்கு
நேரத்திலும் வேலி பொட்டுக்குள்ளாக ரகசியமாக போய் வந்து செய்திகளை பறிமாறிக்
கொண்டிருந்தார்கள்.அவர்களுடைய வேலியிலும், ஒராள் போகக் கூடிய, திறந்து மூடக்
கூடிய பெரிய ‘பொட்டு’ இருக்கிறது .’வீதி,ஒழுங்கையில் யாரும் தென்பட்டால் சுடப்
படுவார்கள்’என்ற எச்சரிக்கை வேறு அடிக்கடி ஒலிபரப்பப் பட்டுக் கொண்டிருந்தது.

‘சூடுபட்டு ஓடிய 2 பெடியள்கள் இறந்தார்கள்’ என்ற செய்தி கிடைத்தது. சில
பெடியள் தங்களை நோக்கி சில வேட்டுகள் தீர்த்ததால், ராணுவமும் சிறிது
துணுக்குற்றிருந்தது.

தம்பியும் வயல்வெளிகளில் இருட்டில் ஓடித் திரிந்தான் என்றும் கேள்விப்
பட்டாள்.

ஒருநாள், “பெடியள்களை கோவில் மைதானத்திற்கு வா” என்று ஸ்பீக்கரில்
ஒலிபரப்பி, அப்பாவி இளைஞர் என்று தெரிந்தும் பலரை அள்ளியது.

ராணுவம் அகன்ற பிறகு, ஊர், சுனாமிக்குப் பிறகானது போல காட்சியளித்தது.

தம்பியைக் காணவில்லையாம்! “பஸ் நிலையத்தில் 2 பேரைப் போட்டு
எரித்திருக்கிறார்கள், யார் ஆட்கள்? எனத் தெரியவில்லை?” என்ற ஒரு வதந்தியும்
உலவியது.

முருகா!அதிலே தம்பி இருக்கக் கூடாது,என வேண்டாத தெய்வம் இல்லை.
பெடியள்களும் பதை பதைத்து தேடினார்கள்.அதில் எரித்திருப்பார்களோ…?

ஆனால், குவியலில்,சாம்பலும்,டயர்க் கம்பியும் மட்டுமே இருந்தன. எலும்புத்
துண்டோ,மீதியோ இராதது ஆச்சரியமாக இருந்தது.சிங்கள நாஜி ராணுவம்
அவற்றையும் அள்ளி களவாக அப்புறப்படுத்தி விடுகிறதா? அல்லது பெற்றலை ஊத்தி
எரித்தால் அவையும் சாம்பலாகி விடுகிறதா? ஒருத்தருக்கும் தெரியவில்லை.

இன்னொரு இடத்திலும் பல இளைஞர்களைப் போட்டு இப்படி மிச்சம் மீதி
இல்லாமல் எரித்திருக்கிறார்கள்.பிறகு, புதைகுழியாய் வெளிபடுறதோடு சேர்த்து
புதைத்து விடுகிறார்களோ?

ராமுவோடு கடைசியாக ஓடிய பரமு, “எனக்குப் பக்கத்தாலே ஆமி சுட்ட
புல்லட்டுகள் விண்கூவிக் கொண்டு பறந்து சென்றது, ராமுவைக் கவனிக்கவில்லை
திரும்பிப் பாராமல் ஓடி விட்டேன் “என்றான்.’ராமுவுக்கு சிலவேளை சூடு
விழுந்திருக்கலாம்’என்ற ஐயம் ஏற்பட்டது.மழையும் பெய்திருந்ததால் அவ்விடத்தில்
ரத்தக் கறையையும் காண வாய்ப்பில்லை.

பஸ்நிலையத்திலிருந்த தேத்தண்ணிக் கடைப் பெடியன் தென்னை மரத்தில் ஏறி
ஒளிந்திருக்கிறான். “2 பேரை தூக்கிப் போட்டு எரித்ததை என்ர கண்ணாலே
பார்த்தேன்”என்று சத்தியம் செய்தான்.

அவர்களில் ஒருத்தன், சற்றுத் தள்ளியிருந்த பகுதியிலிருந்து கிழிந்த சேர்ட்டின்
துண்டை கண்டெடுத்து வந்தான். ஆமி தூக்கி வார போது கிழிந்திருக்கலாம்.ராமு
போட்டிருந்த சேர்ட்டின் பொக்கற் துண்டுப் பகுதி.காம்பில் பெடியள் அடிச்சுப்
பிடிச்சு அணியிற சிறிது உக்கிப் போயிருந்த டேர்னிம் சேர்ட்டின் துண்டில் அந்த’கே’
என்ற ஆங்கில எழுத்து கிடந்து அழுதது.

ராமு,அக்குவியலில் பஸ்மமாகப் போய் விட்டிருக்க வேண்டும் என
ஊர்ஜிதம்செய்தார்கள் .

இடிவிழுந்தது போன்ற அந்த செய்தியைக் வீட்ட வந்து அறிவித்தார்கள்.

அம்மா, அறிந்தவுடனேயே குழம்பிப் போனார். ஒரு மாசத்திற்குப் பிறகே
வைத்தியரும், பள்ளிக்கூட ஆட்களுமே (ஆசிரியர்களும்,மாணவர்களுமே) இப்ப
அம்மாவை பழைய நிலைக்கு மாத்தி நடமாட வைத்திருக்கிறார்கள். சிலவேளைகளில் பழைய
நிலைக்கும் போய் விடுகிறார் .

“ரீச்சர்,வேலையை மட்டும் விடாதீர்கள்”என்ற அதிபரின் வற்புறுத்தலால்
பள்ளியில் தொத்திக் கிடக்கிறார்.இனி,தாய்(மார்க்சிம் கோர்க்கி எழுதிய தாய் நாவலில்
வாரவர்)பாத்திரமாக கூட மாறலாம்.

கீதாவின் முகத்திலிருந்து சந்தோசமும் கழன்று விட்டிருந்தது.வயசுப்
பெண்கள் சந்தோசத்துடன் இருந்தால் தான் அழகாய்யிருப்பார்கள்.அழுது வடிந்ததால்
ஊரே அழகை இழந்து விட்டிருந்தது.எல்லா வித பெடியள்களை பிடித்துக் கொண்டு
போனதால் அவர்கள் குடும்பங்களும் சோகத்தில் இருந்தன. இயக்கங்களும்
ஆத்திரத்தில் இருந்தன.

அவை ஒன்று மாறி ஒன்று என.. ராணுவமுகாமிற்கு அருகில் போய், தம்மிடமிருந்த
‘சிறிய மோட்டர்’களில் செல்லுகளை தள்ளி, விசர் பிடித்தது போல உள்ளே
கண்டமாட்டுக்கு விழ …அடிக்க ஆரம்பித்தன.ஒன்று, ஓய ஒன்று என 4,5
இயக்கங்களும் தொடர்ந்து வாணவேடிக்கை காட்டிக் கொண்டேயிருந்தன.
எங்களுக்கும் சந்தோசமாக இருந்தன. செல்லுகள் நிறைய தேவைப்பட்டதால்
அங்காங்கே தயாரிக்கும் முயற்சியிலும் ..இறங்கினார்கள். அதில்,சில விபத்துக்கள்
இடம் பெற்று உயிரிழப்புகளும் காயப்படுதலும் கூட நேர்வதைக் கேள்விப் பட்டோம்.

ராணுவம் வெளியே வர எத்தனித்த போது,ஓரியக்கம் குறி பார்த்துச் ‘சினைப்பர்
சூடு’ம் சுட்டது.அதற்குப் பிறகு, ராணுவம் வெளியே வராமல் உள்ளே போய்
இருந்து,மழை போல செல்லுகளை நாலாபுறமும் அடித்தார்கள்.கடலில் மீன் பிடித்துக்
கொண்டிருந்தவர்கள் பக்கம் கூட விழுந்தன.அவர்கள் அடிக்கிற போது,பெடியள் அணி
ஓய்ந்தது போல அமைதி கொண்டது.திரும்ப எட்டிப் பார்க்க சினைப்பர் சூடுகள்
பறந்தன.முகாமிற்குள் ராணுவத்தை மடக்கியாயிற்று.பெடியள்களுக்குச் சந்தோசம்.

ஆமிக்காம்களை சுற்றிவர இருந்த பொதுமக்களில் கணிசமான அழிவு
தான்.ஆனால்,ஆமிமுகாமைச் சூழ ஒவ்வொரு எல்லையில் இயக்கங்கள்,நிரந்தர காவல்

நிலைகளை நிறுவி,கண்ணிவெடிகளை தாழ்ட்டும்,கிளைமொர் வெடிகளை பொறுத்தியும்
விட்டன.பரீட்சார்த்தகரமாக ஒரு காம்பில் ஏற்பட்ட வெற்றியைத்
தொடர்ந்து,வடபகுதியில் இருந்த எல்லா ஆமிக்காம்களையும் சுற்றிவர
காவல்நிலைகளை நிறுவிக் கொண்டார்கள்.

ஆமியை எதிர்த்து வெல்ல முடியாது.தெரியும்!எனவே அவர்கள் நடமாட ஒரு பகுதியை
மாத்திரம் விட்டு விட்டு இறுக்கமான காவல் நிலைகளைப் போட்டு இயக்கங்கள் காவல்
இருந்தன.இயக்கங்கள் மத்தியில் இணைப்புகள் இல்லை.எதேச்சையாக தற்காலிக
இணைப்பு இப்படியாக ஏற்பட்டு விட்டது.ராணுவம் அடிக்கடி 4 பக்கமும்
செல்லுகளை அடித்து தீர்க்கும்.அவை நகரத்தின் குறிப்பிட்ட கி.மீ வரைதான்
செல்லும்.கிராமப்புறங்களை எட்டியும் பார்க்காது.

ராணுவம் சிறிது பயந்து போன அதிசயம் வடபகுதியில் மட்டும் தான்
நிகழ்ந்தது.அம்முறை,மற்றைய மாகாணங்களிற்குச் சரி
வரவில்லை.சிங்களகிராமமும்,தமிழ்க்கிராமங்களும் அருகருகே இருந்தது காரணமாக
இருக்கலாம்.ராணுவம், அந்த அவமானத்தையும் சாதகமாக பயன்படுத்திக்
கொண்டது.இயக்கங்கள் மத்தியில், “எல்லா ஆயுதங்களையும் வடக்கிற்கே கொண்டு
போய் விடுகிறார்கள்”என்று பிரதேச வேறுபாடுகளை அங்காங்கே கிளறியது.அதனால் சில
சலசலப்புகளும் ஏற்பட்டன.

வடபகுதி வெற்றி, இயக்கத்தின் முதல்படி வெற்றி என்பதை உணர்வதை அது
குழப்பித் தான் விட்டது.

ஆனாலும், வடபகுதியினர்,தம் உயிரைக் கொடுத்தும்,பரீட்சார்த்த முறைகளில்
ஈடுபட்டும் வெடிகளை உள்ளே விழ அடித்துக்
கொண்டேயிருந்தன.ராணுவம்,உள்ளேயும் பதுங்கு குழிகளில் இருக்க
வேண்டியதாயிற்று.அதன்,வெளிய பவனி வாரது,தேடுதலை நடத்துவது எல்லாம்
அதற்குப் பிறகு நின்று போயிற்று.

இந்த அதிசய அமைதியில், வெளியில் இருந்த இயக்கங்களின் அரசியல்
அமைப்புக்கள் எல்லாம் உயிர் பெற்று இயங்க ஆரம்பித்து விட்டன.தம்பிட இயக்கத்தின்
தொழிற்சங்க அமைப்பு தோட்டப்பயிர்ச் செய்கையை கிராமப்புறங்களில் ஊக்குவிக்க
விரும்பியது.எல்லா இடங்களிலும் நெற்செய்கை ஒரு போகமே செய்யப்
படுகின்றன.மிச்சக் காலங்களில் வீணே விடப்படுகின்றன.அயலிலுள்ள
குளங்களையும்,வாய்க்கால்களையும் செப்பனிட்டுச் விட்டால் செய்யிறது..சாத்தியப்
படக்கூடியது.அப்போது நிழல் அரசாங்கமும் நல்லபடி இயங்கும்.

கிராமங்களில் உள்ள பெரிசுகளைக் கூட்டி கதைத்த போது,அவர்கள் நம்பிக்கைக்
கொள்ளவில்லை.தவிர, “பெடியளிட நிழல் அரசாங்கம் சாத்தியப்படாது”என்றார்கள்.

சில பேர்கள், “நீங்கள் செய்யிறதென்றால் செய்யுங்கள்.காணியைத்
தாரோம்.ஆனால்,நெல்லு செய்யிற போது கண்டிப்பாக விட்டு விட
வேண்டும்”என்றார்கள்.

அப்படி தரப்பட்ட காணி ஒன்றிலே மகளிர் அமைப்பு, வெற்றி பெறுவார்கள் என்ற
நம்பிக்கையில் அவரைச் செய்கையில் இறங்கி இருக்கிறது.

கடமையைச் செய்கிறார்கள்.நாளை,ஆமி வெளிய வந்து முயற்சி தடைப்பட்டு விடலாம்.
தெரியாது…, மீண்டும் சாதகமான சூழல் வரலாம்.பயணப்படாமல் எவருமே இலக்கை
அடைய முடியாது. இன்றைய நாகரீக உலகில்,அடக்குமுறைகளோடு வாழ்றதும்
முடியாத காரியம்.

காலனியாட்சியிலிருந்து நாடு விடுதலை பெற்றபோது, தமிழ் பேசுறவர்கள் 40
வீதமாக இருந்தார்கள். சிங்களவர்கள் ,இஸ்ரேலியரின் சியோனிச முறைகளிலே சட்ட
விரோதமாக தமிழர்களின் வீதத்தைக் குறைத்தும், தமிழர் நிலங்களை அபகரித்தும்
கொண்டிருக்கிறார்கள்.

உலகலாவிய அடக்குமுறைகளுடனே அவர்களது வெற்றி சம்பந்தப்
பட்டிருக்கிறது.அதர்மத்தின் வெற்றி எப்பவும் தற்காலிகமானதே. வரலாறு ஒரு நாள்
மண்ணைக் கவ்வ வைத்து விடும் .நாளை, தமிழீழ வெற்றியும் கிடைக்கலாம்.

அவளுக்கு குழப்பமாக இருக்கிறது.

அரசு ,அமைதியாக வாழ எமக்கு உதவியிருக்கவேண்டும்.அரசியல் செய்ய
சுதந்திரமும் அளித்திருக்க வேண்டும்.இரண்டையும் தராததால் எங்களுக்கு வாழ்வு
இல்லை. சிறிலங்காவில் இருக்கிறது போலி ஜனநாயகம்! அது செத்து விட்டது. அதனால்
தம்பிட வழியிற்கு வந்திருக்கிறாள். ஒருநாள், இந்தப் பெண்களின் மெல்லிய கைகள்
‘பலம்’ பெறும்.

அவர்களால் மகிந்தாவைப் போல கொடூரமாக எல்லாம் நடக்க முடியும் எனப்
படவில்லை. ஆனால், அவரும், இதற்கு காரணமான மற்றவர்களும் தண்டிக்கப்பட்டு
சிறைக்குப் போக வேண்டும்.அதுவரையில் அவளுக்கு அமைதி கிடைக்காது
போலவும் படுகிறது.

தோழிகள் ,வேலையை முடித்து விட்டு அவளிடம் வந்தார்கள்.அவ்வீட்டுக்காரர்,
அவர்களிற்கு இளைய மகள் மூலம் தேனீரை கொடுத்து அனுப்பி இருந்தார்.

வெய்யிலில் கஞ்சல்கள் பறக்க வெப்பக்காற்று வீசலிலும், குடிக்க நல்லாய்
தானிருந்தது!

மாலதி,” கீதா,நீ வீணா மனதைப் போட்டு அலட்டிக் கொள்ளாதே
நாமிருக்கிறோம்”என்றவள்,”நாம வாழ்றதே கடவுளின் ஆசிர்வாதம்! விதியைப்
பார்த்தாயா?”என்றாள்.

” இந்தக் கதையை விட்டு பயிரைப் பாருங்கடி .அவரை நிச்சியம் காய்த்துக்
கொட்டும். விவசாய மாஸ்ரர் சொன்ன மாதிரி முறையாய் கவனிக்கணுமடி .
நல்லவர்.இடையிடை அவரையும் கூட்டி வந்து காட்டவும் வேண்டும்”என்றாள்
வசந்தி.

“காம்பிலே போய் சாப்பாட்டை முடித்து விட்டு, பின்னேரம் ,அடுத்த
கிராமத்திற்கும் போக வேண்டும். கிளம்புங்கடி “மாலதி துரிதப்
படுத்தினாள்.மாலதி,தன்னுடைய கரியரில் கீதாவை ஏற்றிக் கொண்டு, கீதாவின்
சைக்கிளை வசந்தியை ஓடிவரும்படி கொடுத்து விட்டு,உழக்கினாள்.
பிற்சேர்க்கை:

(இதிலுள்ள (கதா)பாத்திரங்கள் அறியாத செய்தி:திம்பு நகரத்தில் நடைப்பெற்ற பேச்சு
வார்த்தைகளின் போது “தமிழர் பகுதியில், இலங்கை ராணுவத்தை முகாமை விட்டு
வெளிய நடமாட வேண்டாம்” என இந்தியா சொல்லி கேட்டுக் கொண்டதிற்கமையவே
முகாம்களில் முடங்கியது தாம். கிழக்குப் பகுதிகளில் அவர்கள் அவ்வாறு
செய்யவில்லை.

வடபகுதிப் பெடியள், தாம், “சென்றிகளைப் போட்டு வெளியேறாது தடுத்து
விட்டோம்”என்ற புளுகத்தில் இருந்தார்கள். ஆனால், உள்ளேயிருந்து செல்
அடிக்கிறதைப் பற்றி இந்தியா எதுவும் சொல்லாததால் சிங்கள ராணுவம் உள்ளே
இருந்து மழை போல வெளியே அதிகமாக கொட்டினார்கள். அப்ப, தான் நகரத்தில் ஒரே
தடவையில் 30,40..பேர்கள் என தொகையாய் சாகிறது எல்லாம் நிகழ்ந்தன. இருந்தாலும்,
பெடியளின் அடியாலும் .. ராணுவம் சிறிது தொல்லை உள்ளாகியதும் உண்மை.)

– ஏப்ரல் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *