மீசை தத்துவம் – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 7,156 
 

அதிகாலை பால் வாங்கிக்கொண்டு திரும்பும்போது தெருமுனையில் அவரைப் பார்த்தேன். நேற்றுகூட பார்த்ததாக நினைவு. யாரென அடையாளம் காண முடியாத நிலை…

ஆனால், இதற்கு முன் எங்கோ பார்த்திருக்கிறோம் பழகியிருக்கிறோம் என்பதால் நினைவுகளில் சற்று குடைந்தார்.

வீட்டுக்கு வந்து பால் கவரை கொடுத்துவிட்டு வாக்கிங் போகும் எண்ணத்துடன் தெருவுக்கு வந்தபோது மீண்டும் அவர்.

யார் என்று கேட்டு விடலாமா?

யோசித்துக்கொண்டிருக்கும்போதே அவருக்கும் அந்த எண்ணம் தோன்றியிருக்க வேண்டும். நின்றார்.

நான் அவரை நெருங்க… ‘‘என்ன சார், அடையாளம் தெரியலையா?’’ என்றார்.

நான் மையமாக சிரித்து வைத்தேன்.

‘‘மீன்கடை பாண்டி சார்…’’

இப்போது பளிச்சென அடையாளம் புரிந்தது. முகவாயில் கெடாமீசையை ஒட்ட வைத்துப் பார்த்தேன்.

‘‘மீசைய எடுத்துட்டேன்ல… அதான் தடுமாறிட்டீங்க!’’

சிரித்தேன். மீன்கடை பாண்டி நான் விருகம்பாக்கம் வந்த இந்த பத்து வருடத்தில் ஒன்பது வருடங்கள் பழக்கமான ஒரு கேரக்டர். வாரத்திற்கு இரண்டு நாள் மீன் வாங்குவதற்காக சாலிகிராமம் மார்க்கெட் செல்லும் எனக்கு பாண்டி ரொம்பவே பரிச்சயம். அதைவிட மிரட்டும் அந்த மீசை.

கடந்த சில மாதங்களாக நான் அசைவத்தைத் தவிர்க்க…பாண்டியுடனான சந்திப்புக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

‘‘ஏன் பாண்டி மீசைய எடுத்துட்டே?’’

‘‘எனக்கு சின்ன மீசைதான் சார் பிடிக்கும். ஆனா, மீன் வியாபாரம் பண்ற இடத்துல பொம்பளைங்க ரொம்ப டார்ச்சர் கொடுப்பாங்க. பத்து ரூவா மீனை வெறும் ரெண்டு ரூபாய்க்கு கேட்பாங்க… அதமாதிரி ஆளுங்கள மிரட்டத்தான் மீசை வச்சிருந்தேன்.

இப்ப ரெண்டு மாசமா காலைலங்காட்டியும் காசிமேடு போய் மீன் வாங்க உடம்பு ஒத்துழைக்கல… அதனால வியாபாரத்த நிறுத்திட்டேன். மீசையையும் ட்ரிம் பண்ணிக்கிட்டேன்…’’

‘‘மீசைல என்ன பாண்டி இருக்கு? தொழில விட்டா என்ன…அத அப்படியே மெயின்டெயின் பண்ண வேண்டியதுதானே? பாரு எனக்கே உன்னை அடையாளம் தெரியல…’’

‘‘அப்படி இல்ல சார். இப்ப ஆட்டோ ஓட்டுறேன். கெடா மீசை வச்சுக்கிட்டு ஆட்டோ ஓட்டினா யாரும் ஏற பயப்படுவாங்க சார்… ஸ்கூல் புள்ளைங்கள நம்ம ஆட்டோல
அனுப்பமாட்டாங்க.. அதான் மீசைய சுத்தமா எடுத்திட்டேன்…’’ என்றபடி நகர்ந்தான்.

பாண்டி உதிர்த்த அந்த மீசை தத்துவத்தில் நான் வியந்து போனேன்!

– செப்டம்பர் 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *