மலையூர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 10,084 
 
 

கதை ஆசிரியர்: சா.கந்தசாமி.

வீடுகள் குன்றின் மேலும் குன்றிலும் அதன் சரிவிலும் இருந்தன. மேலே மேலே என்று உயர்ந்துகொண்டே போகும் சாலைகளில் ஏறித்தான் வீடுகளை அடைய வேண்டும். அவனுக்கு அப்படி ஏறுவது பழக்கமின்மையால் சிரமமாக இருந்தது. வாயால் மூச்சு விட்டுக் கொண்டான்.

அவன் பிறந்து வளர்ந்து வேலையும் பார்த்த ஊரில் கடலோ மலையோ கிடையாது. எங்கும் வயல். நடவு காலத்தில் பசுமையாக இருக்கும். அப்புறம் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே நிறம் மாறும். வயல் வரப்புக்களில் எட்ட எட்ட ஒற்றை ஒற்றையாகப் பனை மரங்கள். கருவேல மரங்கள். காற்றில் அவை உதிர்க்கும் சின்னஞ்சிறிய மஞ்சள் பூக்கள். அதைத் தவிர வேறெதையும் அவன் ஊரில் காண முடியாது.

கடலைக் காண வேண்டுமானால் பதினோரு மைல் போக வேண்டும். காலையில் அவன் ஊர் வழியாக ஒரு ரெயில் போகிறது, மாலையில் திரும்பி வருகிறது.

ராஜாராமன் பதினோராவது வயதில் ரயில் ஏறிச்சென்று முதன் முதலாகக் கடலைப் பார்த்தான். அதற்கு அவன் பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்துக் கொண்டு போனார்கள் அவன் கமலம் டாச்சர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு போனான்.

ரயில் நிலையத்தில் இருந்து இரண்டு தெருக்களைக் கடந்து போனதும், திடாரென்று கடல் தென்பட்டது. அவனுக்கு உடலே புல்லரித்தது. கடலைப் பார்த்துக் கொண்டே திரும்பிக் கமலம் டாச்சரையும் பார்த்தான். இப்பொழுதுதான் ராஜாராமன் கடலை பார்க்கிறான் என்று டாச்சருக்குத் தெரிந்தது போலும்.

‘இப்பத்தான் கடலைப் பார்க்கிறீயா ? ‘

ராஜாராமன் தலையசைத்து மென்மையாகப் புன்னகை பூத்தான்.

‘அப்படியா ? ரொம்ப ஆச்சரியமாக இருக்கே. ‘

‘அவன் எங்கேயும் போக மாட்டான் டாச்சர் ‘ ‘ என்று கூட இருந்த மாணவர்கள் கூறினார்கள்.

கமலம் டாச்சர் தலையசைத்து அதைக் கேட்டுக் கொண்டாள். பக்கத்தில் இருந்து கடலையே பார்க்காது வளர்ந்து வரும் ராஜாராமன் மீது முன்னிலும் ஈடுபாடு கூடியது. அவனை மாலையில் சந்திரோதயம் பார்ப்பதற்காக அழைத்துக் கொண்டு கடற்கரைக்குப் போனாள்.

நிலவு கீழே இருந்து மேலே கிளம்பிக் கொண்டிருந்தது. ஒன்றாகக் கை கோர்த்துக் கொண்டு காலில் தண்ணீர் வந்து வந்து மோதிப் பின்னடைவதை வெகு நேரம் சலிப்பே இல்லாமல் அனுபவித்துக் கொண்டு இருந்தார்கள். அவனுக்குத் திரும்பி வரவே மனமில்லை. கமலந்தான் நேரமாகி விட்டது என ராஜாராமனை அழைத்துக் கொண்டு வந்தாள். திரும்பி வந்த பிறகுங்கூட அவனுக்குக் காலில் அலம்பிக் கொண்டு போகும் நீரும் —- கடலும் வந்து வந்து போய்க் கொண்டிருந்தது. அடிக்கடி பின்னால் கூட அவன் அதையே நினைத்துக் கொள்ளுவான். கடல் கூட நினைவில் இருந்து மறைய, கமலம் டாச்சர் சிரித்துக் கொண்டு, கையைப் பிடித்துக் கொண்டிருப்பதுதான் நினைவில் படிந்திருந்தது.

கமலம் டாச்சர் அந்த ஆண்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிக் கூடத்திற்கு வரவில்லை. எட்டு மைல்களுக்கு அப்பாலுள்ள ஊர் ஒன்றுக்கு மாற்றிவிட்டதாகக் கேள்விபட்டான்.

ராஜாராமன் அதற்குப் பிறகு எங்கும் பயணம் போகவில்லை. இரண்டு முறை அவன் பள்ளிக்கூடத்திலிருந்து நீண்ட பயணம், கடல், மலை, காடு, நதி என்றெல்லாம் சொல்லிக் கொண்டு சென்றார்கள். ஆனால் அவன் அதில் எல்லாம் கலந்து கொள்ளவில்லை. என்னவோ தான் அதற்கெல்லாம் அப்பாற் பட்டவன் போல நடந்து கொண்டான். ஆனால் நன்றாகப் படித்தான். நல்ல மார்க்குகளோடு தேர்வு பெற்றான்.

முதல் மாணவனாக தேர்வு பெற்ற ராஜாராமனுக்கு இரண்டாண்டுகளிலேயே பக்கத்து ஊரில் வேலை கிடைத்தது. யாருக்கும் கிடைக்காத வேலை அவனுக்குக் கிடைத்திருக்கிறது. பெரிய அதிர்ஷ்டசாலி அவன் என்றெல்லாம் சொல்லிக் கொண்டார்கள். அதனால் அவன் மீது மற்றவர்களுக்கு ஒருவித ஈடுபாடு ஏற்பட்டது.

சின்ன வயதில�
�� நல்ல வேலையை அடைந்திருக்கும் அவனோ, அதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. பள்ளிக்கூடம் போவது போல அலுவலகத்திற்குப் போனான். அங்கே தன்னுடைய வேலை என்றுதான் இல்லாமல், இருந்த வேலை எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டு செய்தான். அதனால் கீழே உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, மேலதிகாரிகளுக்குக்கூட ராஜாராமனைப் பிடித்து விட்டது.

‘ராஜாராமன் போன்ற திறமைசாலிகள், வேலைக்காரர்கள் நாலுபேர் இருந்தால் போதும்; நமக்குக் கவலையே இல்லை. !ஃபைலில் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்துப் போடலாம் ‘ ‘ என்று தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள். அது அவர்கள் அறையைக் கடந்து ராஜாராமன் காதில் வந்து விழுந்தது கூட உண்டு ஆரம்ப காலத்தில் தலையை உயர்த்திக் கேட்டு கொள்ளுவான். ஆனால், நாட்கள் போகப் போக அதைக் கேட்பதில் பிரியம் குறைந்துவிட்டது. தன்னைப் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம் கூட, அவன் வேலையே முக்கியம் என்பது போல, அதிலேயே மூழ்கி இருப்பான்.

அப்படி ராஜாராமன் ஆனதற்குக் காரணம் அவன் மனைவி சரஸ்வதிதான் என்பது பொதுவான் அபிப்பிராயம். அவன் வேலையில் சேர்ந்து ஒன்பதாவது மாதம் கல்யாணம் நடந்தது.

ஊரில் இருந்து மூன்று கல் தொலைவில் இருந்த ஒரு ரைஸ் மில் முதலாளி பெண்ணைத்தான் அவன் கைப்பிடித்தான். பட்டணத்தில் படித்துத் தேறிய பெண், பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசெல்லாம் வாங்கி இருக்கிறாள் என்று சொல்லிக் கொண்டார்கள். வேலை கிடைத்தது போலவே, சரஸ்வதி கிடைத்ததும் அவன் அதிர்ஷ்டம் என்று சொன்னார்கள்.

ஆனால் கல்யாணத்திற்காக ஏழு மைல் தூரத்தில் இருந்து வந்திருந்த கமலம் டாச்சர் மட்டும், ‘உன்னைக் கட்டிக்கிறவதான் ரொம்ப கொடுத்து வச்சவ ‘ ‘ என்றாள்.

ராஜாராமன் அதற்குப் பதிலொன்றும் சொல்லவில்லை. புன்னகை பூத்தான். சின்ன வயதில் கடற்கரைப் பட்டணத்திற்குப் போனதும், கால்களை நீர் அலம்ப டாச்சருடன் நின்று கொண்டு, நிலவைப் பார்த்துக் கொண்டு இருந்ததும் நினைவுக்கு வந்தது.

கல்யாணத்திற்குப் பிறகு….ராஜாராமன் ரொம்ப சந்தோஷமாக இருந்தான். தலையைப் படியப் படிய வாரிக் கொண்டான். கலர் கலராகச் சட்டை, பேண்ட் எல்லாம் சரஸ்வதிதான் தேர்ந்தெடுத்துக் கொடுத்தாள். அவளுக்குத் தான் ரொம்பக் கட்டுப்பட்டு இருப்பது போல ஓரோர் சமயம் அவனுக்குத் தோன்றும். இப்படியாக ஒரு ஒன்றரை ஆண்டுகள் கழிந்தன.

ஒரு நாள், ராஜாராமன் வழக்கம் போலத் தாமதமாகவே வீட்டிற்கு வந்தான். வீட்டுக் கதவு பூட்டி இருந்தது. இப்போதெல்லாம் அடிக்கடி சரஸ்வதி வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியே போவதுண்டு. எனவே, அவனே கதவைத் திறந்து கொண்டு சென்றான். லைட்டைப் போட்டான். வெளிச்சத்தில் பூட்டை வைக்கும்போது மேசை மீது இருந்த கடிதம் கண்ணில் பட்டது. அவன் கண்ணில் பட வேண்டும் என்பதற்காகவே, அப்படி வைத்து விட்டுப் போயிருக்கிறாள் போலும்.

‘நான் வருகிறேன்; என்னைத் தேடவேண்டாம் ‘ ‘ கீழே கையெழுத்து இல்லை. ஆனால் அது சரஸ்வதி எழுத்துதான். அவன் மறுபடியும் மறுபடியும் அதையே படித்தான். அதற்கெல்லாம் என்ன அர்த்தம் ? புகலிடம் அவளுக்கு எங்கே கிடைத்து இருக்கும். ?

நான்கு மைல்களுக்கு அப்பாலுள்ள ஊரில் இருந்து சரஸ்வதி சொந்தக்காரன் என்றொருவன் வருவான். கருப்புக் காரில் வந்து நெடுநேரம் பொழுது போவதே தெரியாமல் பேசிக் கொண்டு இருப்பான். அவனுடன் இருக்கும் போதெல்லாம் சரஸ்வதி தலையை அசைத்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருப்பாள். அவனுக்கு வேலையொன்றும் இல்லை. ஹாக்கி ஆட்டக்காரன். இரண்டு முறை சர்வ தேசப் போட்டிக்கு இந்த நாட்டின் சார்பாக ஆடியிருக்கிறான்.

சரஸ்வதி சொல்லித்தான் அதெல்லாம் ராஜாராமனுக்கு தெரிய வந்தது. அதோடு அவள் இன்னொன்றும் சொன்னாள். அவளை அவனுக்கு��
�் கொடுப்பது என்றுதான் தீர்மானமாகி இருந்ததாம். ஆனால், அவன் அக்கா ஒருத்தி கல்யாணமாகி, ஒரு குழந்தைக்குத் தாயாக இருந்தவள், கணவனை விட்டு விட்டு இன்னொருத்தனுடன் போய்விட்டாள் என்று தெரிந்ததும், கடைசியில் கல்யாணத்தை நிறுத்திவிட்டார் அப்பா என்றும் சொன்னாள். அதைச் சொல்லும்போதே குரலில் தொனி மாறியது. அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டு பயந்து கொண்டே சொல்வது மாதிரிச் சொன்னாள். இடையிடையே அதன் கடுமையைக் குறைப்பதற்காகச் சிரித்துக் கொண்டாள்.

‘அப்படியா ? ‘ என்று ஒரு கேள்வியைப் போட்டுவிட்டு, ராஜாராமன் ஆபீசில் இருந்து கொண்டு வந்திருந்த ஃபைலைப் புரட்ட ஆரம்பித்தான். பதினொரு மணிக்கு அமைச்சர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய கேள்வி ஒன்றுக்குப் பதில் தயாரித்துத் தந்தியில் பதில் அனுப்ப வேண்டும். அது அவனுக்கு முக்கியமாக இருந்தது.

சரஸ்வதி கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்து இருந்தாள். பிறகு, எழுந்து உள்ளே போய் அவனுக்காக டா போட்டுக் கொண்டு வந்து வைத்தாள்.

ராஜாராமன் தன்னுடைய மனைவியின் சின்னக் கடிதத்தை பையில் போட்டுக் கொண்டு வாசலுக்கு வந்தான். எதிர்ப்பக்கமாகப் போய் நின்றான். சற்று நேரத்திற்கெல்லாம் பஸ் வந்தது. அதில் ஏறி நின்று கொண்டே அவன் தன் மனைவியைத் தேடிக் கொண்டு சென்றான். அந்த வீட்டில் அவள் இல்லை; அவளுடைய நண்பனும் இல்லை. காலையிலேயே அவன் காரில் போய்விட்டதாகத் தகவல் கிடைத்தது.

அவன் கூட ஒரு பெண் சென்றாளா ?

ராஜாராமன் யாரையும் கேட்கவில்லை. ஆனால், அவன் கூடவே சரஸ்வதி சென்றிருக்கிறாள் என்பது மட்டும் உறுதியாகி விட்டது. மனத்தில் இருந்த பாரம் இறங்கியது போல இருந்தது. மறுபடியும் காத்திருந்து பஸ் பிடித்துத் தலைக்கு மேலே நிலவு ஏறிய நேரத்தில் வீடு வந்து சேர்ந்தான்.

அவன் வாழ்க்கை சிக்கல் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. காலையில் எழுந்து குளித்து விட்டுத் தானே சமைப்பான். அவன் சாப்பாட்டை அவனைத் தவிர வேறு யாரும் சாப்பிட முடியாது. அதை அவன் சாப்பிட்டு விட்டு-வெகு நேரத்திற்கு முன்னாலேயே ஆபீஸ்உக்குப் போய்விடுவான். அவன் நன்றாக வேலை செய்தான் என்பதை விட கச்சிதமாகவும் சுருக்கமாகவும் பதில் எழுதுவான். எனவே அவனை ச-பிரிவில் இருந்து மாற்றுவது இல்லை. எல்லோருக்கும் அவனைப் பற்றி தெரிந்திருந்தது போலவே-அவன் யாரைப் பற்றியும் தெரியாதவனாக இருந்தான்.

ஒன்பதே கால் மணிக்கு ஆபீஸ்உக்கு முதலில் சென்று ஃபைலை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தால், பன்னிரண்டு மணிக்கு எழுந்து போய் ஒரு காபி குடித்து விட்டு–ஒருமுறை காலாற நடந்து விட்டு–மறுபடியும் தன் இருக்கையில் வந்து அமர்ந்து—மறுபடியும் வேலையில் அமிழ்ந்து போவான்.

ஏழாண்டுகளாக ராஜாராமன் மாறுதல் இன்றி ஒரே இடத்தில் இருப்பது புதிதாக வந்த ஆணையாளர் பார்வையில் பட்டது. உடனே அவர் கீழ் அதிகாரியைக் கூப்பிட்டு அனுப்பி, ‘அவனை ஏன் மாற்றாமல் இருக்கிறீர்கள் ? எதாவது அரசியல் சிபாரிசு இருக்கிறதா ? ‘ என்று மெதுவாகக் கேட்டார்.

கீழ் அதிகாரிக்குப் பயம் வந்து விட்டது. ‘அப்படி ஒன்றும் அவனுக்கு இல்லை. எப்படியோ அவன் பெயர் விடுபட்டுப் போய்விட்டது, ‘ என்றார்.

‘அது தப்பு. சர்க்கார் உத்தியோகத்தில் ஆளுக்கு ஆள் பாரபட்சம் காட்டக் கூடாது. சர்க்கார் என்பது எல்லோருக்கும் பொதுவானது. எனவே, நாம் குறைகளுக்கு ஆளாகக் கூடாது. அவனை வெகு தொலைவில் உள்ள ஓர் ஊருக்கு மாற்றி உத்தரவு போடுங்கள். ‘

‘சரி, சார். ‘

‘ஃபைல் எனது பார்வைக்கு இன்றைக்கே வர வேண்டும். ‘

‘எஸ், சார். ‘

கவனிப்பார் இன்றிப் புழுதியும் தூசும் படிந்து கிடந்த ராஜாராமன் பர்சனல் ஃபைல் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டது. எழுதப்படாமல் இருந்த அத்தி
யாயங்கள் புதிதாக எழுதப்பட்டன. சற்று தூரத்தில் இரண்டு ஊர்களில் இடம் இருந்தது. ஆனால் ஆணையாளர் சொல்லி விட்டார். தொலை தூரத்தில் அவனைப் போட வேண்டும் என்று. எங்கே அவனைப் போடலாம் ? இரண்டு மணிக்குப் போடவேண்டிய ஊர் தீர்மானம் ஆகியது. அது சந்தோஷமாக யாரும் போகக்கூடிய ஊர் இல்லை. ஆனால் யார் என்ன செய்ய முடியும் ?

சர்வ வல்லமையும் படைத்த ஆணையாளர் உத்தரவு. மூன்று மணிக்கு விமான நிலையத்திற்குப் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்த அவர் முன்னே கொண்டு ஆர்டரை வைத்த கீழ் அதிகாரி, ‘இது வரையில் அவனுக்கு மாறுதல் போடாததற்கு எல்லாம் சேர்த்து அவனை மலையூருக்குப் போட்டிருக்கிறது ‘ ‘ என்றார்.

‘அது பனிஷ்மெண்ட் இடம் அல்லவா ? ‘

‘அவன்தான் இதுவரையில் எங்கும் போனது இல்லையே. ‘

‘அதற்குப் பனிஷ்மெண்ட் ரொம்ப சரி ‘ ஆணையாளர் கருப்பு மையால் ஒரு கோடு கிழித்துக் கையெழுத்து இட்டார்.

நாலு மணிக்கு ராஜாராமனுக்கு மாறுதல் உத்தரவு கொடுக்கப்பட்டது. அதோடு அவனும் ரிலீவ் செய்யப்பட்டான். நாளையிலிருந்து அவன் இந்த அலுவலகத்திற்கு வர வேண்டியது இல்லை. அதையெல்லாம், வேறு யாருடையதோ போல் அவன் வாங்கிப் பார்த்துப் பைக்குள் வைத்துக் கொண்டான். தன் நாற்காலியில் உட்கார்ந்து மீதி இருந்த ஃபைல்களை எல்லாம் ஆறரை மணி வரையில் பார்த்தான். பிறகு எழுந்து நேராக ரயிலடிக்குப் போய், மலையூருக்கு ஒரு டிக்கெட் ரிசர்வ் செய்தான்.

ராஜாராமன் சந்தோஷமோ வருத்தமோ இன்றி மலையூருக்கு வந்து சேர்ந்தான். அவனை இங்கேயும் ச–பிரிவில் தான் போட்டார்கள். அதே ஃபைல்கள், அதே பெயர்கள், அதே வார்த்தைகள். எனவே இடமாற்றம் கூட அவனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அவன் ஊர் போலவே மலையூரும் விரைவிலேயே ஆகிவிட்டது. இரண்டு மணிக்கு மேல், மலைகளில் மேகம். ஊரே இருண்டு போகும். அதுதான் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் நாட்கள் ஆக ஆக அதுவும் சரியாகி விட்டது. அவனும் பழைய ஆளாகி விட்டான்.

அன்றைக்கு மூன்று மணிக்கு மலைகளுக்கு மேல் மேகம் சூழ்ந்து ஊரே இருள ஆரம்பித்த போது அலுவலகத்திற்கு விடுமுறை என்று மூடினார்கள். மலையூரில் சமூகப் பிரமுகர் காலமாகி விட்டாராம்.

ராஜாராமன் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தான். காற்று குளிர்வது போல வீசியது. கைகளை வீசிக் கொண்டு சாலை வழியே நடந்தான். இரண்டு தெருக்கள் கடந்ததும் சாலை கடலில் போய் விழுந்தது. மணலில் நடந்து தண்ணீரில் போய் நின்றான். நேரம் ஆக ஆகக் கமலம் டாச்சரின் முகம் மனத்தில் தோன்றியது. அவன் சிரித்துக் கொண்டான்.

கடலில் பெரிய அலையொன்று தோன்றி வேகமாகப் புரண்டு புரண்டு வந்தது. அவன் அலையையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *