நான், போலீஸ் மற்றும் பழ வண்டி எங்களோடு ராஜா சார் !!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 19, 2015
பார்வையிட்டோர்: 7,497 
 

நீல வானம், ஆங்காங்கே வெண்ணைத் தடவினார் போல் வெண் மேகங்கள், 9 மணியை 11 மணியாக மாற்றி தன் வேலையை மிக செம்மையாக செய்த சூரியன், கானல் நீரை தெளிக்க, நான் இரும்புப்பாதையைக் கடந்தேன். இருபுறமும் பார்த்து கடந்து நடைமேடையைச் சேர்ந்தால், இது எதாவது பேரணியா ? இல்லை போராட்டமா ? என என்னும் அளவிற்கு கூட்டம். நானும் அதில் வியர்வை வழிந்து கூட்டத்தில் வழிந்தேன்.

“ச்ச.. 15 நிமிஷம் தூக்கத்த தியாகம் பண்ணி இருந்தா,இந்த கூட்டத்தில இருந்து தப்புச்சி இருக்கலாம் என்றது என் மைண்ட் வாய்ஸ்”

எனதருகே ஒருவர் “சார் !! அர மணிநேரமா ஆச்சு.. இன்னும் ட்ரைன் வரல..என்ன இந்த மாதிரி பண்றானுங்க!!!!”.

அதற்கு இன்னொருவர் “அவனுங்க என்ன பண்ணுவாங்க சார் ! நம்ப தான் சீக்கிரம் வரணும் , நான் மட்டும் 10 நிமிஷம் தூக்கத்த ஒதறி இருந்தா இந்நேரத்துக்கு ஜம்முனு ஆபீஸ் கிட்ட போய் இருக்கலாம்..”.

“சார் ! எல்லாரு மைண்ட் வாய்சும் இது தான் சொல்லும் ” என்று சொல்லி சிரித்தார் முதலில் பேசியவர்.

அதைக் கேட்டு என் மைண்ட் வாய்சை ஊமையாக்கினேன், சட்டென்று மின் தொடரின் ஒலி காதைக் கிழித்து கொண்டு வந்தது. எப்படியாவது இதில் ஏறிவிட வேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்தேன் , தொங்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. ஐந்து நபர்கள் மட்டுமே நிற்கக்கூடிய அந்த மின் தொடர் நுழைவாயிலில் பத்து நபர்கள் தொங்கினோம். அதில் நான் மட்டும் தொங்கவில்லை என் மேலாளர் அலுவலகத்தில் திட்டக்கூடாது என்ற நினைப்பு தொங்கியது; கட்ட வேண்டிய மாதத் தவணைத் தொங்கியது; ஏன் இந்த வேலைக்கு வந்தேன் எனும் கவலைத் தொங்கியது. எல்லாவற்றையும் சற்றே பொறுத்துக்கொண்டு 11 மணியளவில் ஒரு வழியாக அலுவலகம் வந்து சேர்ந்தேன்.

நான் ஒரு எழுத்தாளன் ஆகா வேண்டும் என்ற கனவை என் சுற்றத்தார் தகவல் தொழில்நுட்பத்தின் கட்டத்தில் அடைத்தார்கள்.”அவன் எவளோ சம்பாதிக்கிறான் பாரு.. இவன் எவளோ சம்பாதிக்கிறான் பாரு.. இப்ப இருக்கற பொண்ணுங்க அதிக சம்பளம் வாங்கனவன தான் கல்யாணம் பண்ணுவாளுங்க..” என்ற வசை எதிரொலியாக ஒலிக்க, வேறு வழியில்லாமல் கணினியில் துப்புரவு தொழில் ! அந்த குளிரூட்டியில் கூட மனதில் புழுக்கம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

“பார்த்தி, யு. எஸ் கிளைன்ட் கால் என்ன ஆச்சு ?? ” என்றார் எனது அணி தலைவர் (டி. எல்).

” இன்னைக்கு நைட்டு 9 மணிக்கு ஷெட்யுல் ஆயிருக்கு.. சாம்” என்றேன்.

“எவளோ நேரமானாலும் நீங்களே அட்டண்ட் பண்ணுங்க ” என்று கடித்து கிளம்பினார்.

பலியாகும் ஆடு கூட ஈரமாக தண்ணீர் தெளித்து வெட்டுவார்கள் ஆனால் என்னை… என்று மனப் புலம்பலுடன் அன்றைய நாள் முடிந்தது. அலுவலகத்திலிருந்து தாமதமாக கிளம்பினேன், எந்த வேளையில் இந்த வேலை தேர்ந்தெடுத்தேன் என்பதை மறுபடியும் யோசித்து சந்திர பாபு சார் பாட்டு மனதில் ஒலித்தது “நான் ஒரு முட்டாளுங்க ….” சிரித்துக் கொண்டே எவளோ உண்மை என்று மின் தொடரை நோக்கி நடந்தேன்.

மின் தொடர் பயணம் ஒன்றரை மணி நேரம் நான் இறங்க வேண்டிய இரயில் நிலையம் வந்தது. இரவு 11.30 மணி இருக்கும் என் வீட்டிற்கு 15 நிமிடம் நடை. தெரு விளக்குகள் ஒளிர்ந்து மஞ்சள் போர்த்தினார் போல தார் ரோடும் சிமென்ட் ரோடும்; அத்துடன் கொஞ்சமாக பனி , சில்லென்று நடக்க ஆரம்பிதேன். நான் மட்டும் தான் நடந்து வருகிறேன், திரும்பி பார்த்தால் யாருமே இல்லை, பயமில்லை எனக்கு மகிழ்ச்சி தான் அதிகமாக இருந்தது பனி விழ யாருமில்லாத சாலையில் மஞ்சள் நிற தெரு விளக்குகளுடன் அந்த நொடிகளை இன்னும் ரம்யமாக்க இசைஞானி சார் பாட்டுகேட்டால் சொர்க்கம் என்று யோசித்தேன்.

அந்த பனி விழும் இரவில் சத்தமாக கேக்கலாம் யாரும் தான் இல்லையே என்ற நிலையில் எடுத்தவுடன், “தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ..” பாடலை மொபைலில் ஒலி பெருக்கியாக கேட்டுக்கொண்டு நடந்தேன்,சரி யாரும் தான் இல்லையே என்ற நிலையில் நாமும் பாடலாமே என பாட்டினோடே பாட ஆரம்பிக்கும் முன் நாய் எதாவது உள்ளதா என்று பார்த்து விட்டு ஆரம்பித்தேன். “கதையா விடுகதையா……” என அந்த பாட்டின் அழகை கத்தியின்றி ரத்தமின்றி செய்யும் பைல்ஸ் ஆப்ரேஷன் போல கண்டம் செய்தேன் !!

திடீர் ஒரு குரல் ” டேய் !! தம்பி !!” பீடி வலித்துக்கொண்டு ஒரு 50 வயது ஆசாமி ஒரு தள்ளு வண்டி அதில் வாழைப் பழம், ஒரு காடை விளக்கு, கொஞ்சம் போதையில் இருந்தார். அருகே வந்து ” ராஜா சார் பாட்டு தானே” . ” ஆமா.. ணா ” என்றேன்.

” சரி ! உன் கிட்ட ‘ பொன்மானே சங்கீதம் பாடவா ‘ ன்னு ரஜினி பாட்டு இருக்கா ?? ” என கேட்டார்.

ராஜா சார் எவ்வளவு மக்களின் இதயத்தில் 365 நாட்களும் பனியாக இருக்கிறார் என்பதை நினைத்தேன். ” ணா.. , எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு ணா.. ஒரு நிமிஷம் தேடி எடுக்கிறேன் ” என்றேன்.

பாட்டு கிடைத்தது, ஒலிக்க வைக்க ஆரம்பித்தேன். அந்த பாட்டிற்கு அவர் எனக்கு ஒரு வாழைப் பழம் கொடுத்தார். ” இந்த பாட்டு முடிஞ்ச உடனே போ தம்பி.. ” என்றார்.

நானும் அவரும் பிளாட் பாரம் மீது அமர்ந்தோம் பாட்டுடன் நானும் அவரும் “… பொன் ஊஞ்சல் ஆயிரம் … தேன் மழை நீ ஓய் … என் காதல் வானிலே பெண் மேகம் ஊர்வலம் ..” என கத்தினோம் நானும் அவரும், மகிழ்ச்சியின் உச்சம் அது, மணி 12 தொட சில நேரம் தான் ஒரு போலீஸ் எங்கள் கூச்சலை கேட்டு நெருங்கி வந்தார்.

” என்ன டா சூப்பர் சிங்கர்ஸ்!! செம்ம மப்பா..” என்றார்.

“சார் !! சும்மா ஒரு பாட்டு கேக்கனு ன்னு சொன்னாரு இவரு அதான்.. நான் ஆபீஸ் ல இருந்து வீட்டுக்கு போறேன் சார்!! சரக்கெல்லாம் இல்ல .” என்றேன் நான்.

” உன் முகரைய பாத்தா அப்படி தெரியலயே.. சரி அத விடு இது ‘ராஜா சார் பாட்டு தானே’ ” என்றார் போலீஸ் காரர்.

பழவண்டி காரரின் அதே தொனியில் கேட்டார் போலீஸ், நான் சிரித்துக் கொண்டே ஆமாம் என்றேன். பழவண்டி அண்ணா அவரை மதிக்காமல் “பொன் மானே……” பாடிக்கொண்டிருந்தார்

“உன் கிட்ட குருவாயுரப்ப பாட்டு, பாலசந்தர் சார் படம்…, ராஜா சார் மியூசிக் வெச்சி இருக்கியா ??? ” போலீஸ் கேட்க்க.

அந்த பாடலை ஒலிக்க ஆரம்பித்தேன் , நான் அந்த போலீஸ் மற்றும் பழம் விற்கும் அண்ணா ஒன்றாக ” குருவாயுரப்பாபாபாபாபாபாபா…… நான் கொண்ட காதலுக்கு நீ தானே …..” என்று கத்தினோம்.

அன்று இசை இரவு தான் !! ராஜா சாரின் ஆளுமை நம் வாழ்வின் கடினமான சூழலில் மயில் இறகாக பறக்க விட்டு, நம் துன்பத்தை இலகுவாக்குவார் அவரின் இசையில்..

வெறுப்பாக ஆரம்பித்த நாளை ராஜா சார் விருப்பமாக இரவு 12.30 க்கு முடித்து வைத்தார்!!…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *