கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 29, 2024
பார்வையிட்டோர்: 651 
 
 

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘ஒன்பது சதக்காரன்!’

இப்படிச் சொல்லிவிட்டால் இந்தப் பேர்வழி செல்லையா பிள்ளை தான் என்பது பளிச்செனத் தெரிந்துவிடும். இப்பட்டத்தை இம்மனிதன் அடைந்துவிட்டதன் கதையை அடியிலிருந்து கேட்டால் சிரிப்புதான் வரும்.

யாழ்ப்பாணப் பட்டிணத்துக்கு நடுவே, இப்போது டாக்சிகள் விடப்பட்டிருக்கும் வெளிப்பிரதேசம் மிகவும் பெருமளவில் ‘பஸ்’ ஸ்டாண்டாக இருந்த காலம் அது. அப்போதெல்லாம் யாழ்ப்பாணத்தின் போக்குவரத்து நாடியை இரண்டோ மூன்றோ பஸ் கம்பெனிகள் போட்டிப் போட்டு ஏகபோகமாக்கிக்கொள்ள முயன்ற காலம்.

யாராவது ஒரு மனிதன் ‘பஸ்’ சாலை ஓரம் போய்விட்டால், அவன் படும் அவஸ்தையை அப்போது வர்ணிக்கவே முடியாது. அனுபவித்துத் தான் பார்க்க வேண்டும். பஸ் சாலைப் பக்கத்தால் ஒருவர் போக வேண்டியதுதான் தாமதம். உடனே ஒருவன் வந்து அந்த மனிதனின் குடையைப் பறித்துச் சென்று தன் பஸ்ஸில் வைத்து விடுவான். அந்த அப்பாவி மனிதனின் கையில் ஏதாவது பாரமாக இருந்துவிட்டால், இன்னொருவன் அதைத் தட்டிக்கொண்டு தன் பஸ்ஸுக்குப் போய் விடுவான். இந்த இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பஸ்காரர் களிடம் சிக்குப்பட்டு மீண்டு விடுவதாயின் அது ஒரு பெரும் சாதனை யாகவே கருதவேண்டும். ஆனால் ஒன்பது சதக்காரன் செல்லையா பிள்ளை மட்டும் இந்தப் போட்டி பஸ்காரர்களை வெற்றிகரமாகத் தோற்கடித்துத் தமது காரியத்தை முடித்துவிடுவார்.

கடந்து போன இந்தக் காலத்தைப் படம்பிடித்துக் காட்டுவதான சரித்திரச் சான்றுகள் இன்று எதுவுமே இல்லை. எனக்குத் தெரிந்த வகையில் இரண்டே இரண்டு மனிதர்தாம் இருந்தனர். என்னைத் தவிர்த்துவிட்டால் இந்த இரண்டாவது மனிதன் ஒன்பது சதக்காரன் செல்லையாதான்…

சுன்னாகச் சந்தை என்றால் ‘பிரசித்திபெற்ற ஒரு சந்தை’ என்று துணிந்து கூறிவிடலாம். யாழ்ப்பாணப் பட்டிணத்திலிருந்து ஐந்து மைல் தூரத்தில் இந்தச் சந்தை இருக்கிறது. வாரத்தில் ஒரு தடவை – ஒரேயொரு தடவைதான் இந்தச் சந்தை கூடுகிறது. இந்த ஒருநாளில் யாழ்ப்பாணத்தின் பாதிச் சனத்தொகையை அங்கே பார்த்துவிடலாம்.

யாழ்ப்பாணப்பட்டினத்துக்கும், சுன்னாகச் சந்தைக்கும் மையம் அமைத்தாற்போல் இருப்பதுதான் குளப்பிட்டிச்சந்திப்பு. சரித்திர பூர்வமாக இந்தச் சந்திப்புக் காடையர்களுக்குப் பேர் போன இடம். காடையர் என்பதிற்குப் பதில் ‘சண்டியர்’களுக்கு என்று வைத்துக் கொண்டால்தான் நமக்கெல்லாம் பெருமையாக இருக்கும். இப்படி ஒரு பண்பை நீண்ட காலமாக இழைத்துக்கொண்டு வாழ்பவர்கள் தான் துரதிர்ஷ்டவசமாகத் தமிழ் மொழியைப் பேசுபவர்களாக இருக்கிறோம்.

இந்தச் சந்திப்புக்குப் பக்கத்தில்தான் சமீபத்தில் எட்டோ பத்தோ சண்டியர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டும், சுட்டுக்கொண்டும் செத்துப் போனார்கள். அந்தக் காலத்தில் சந்திப்பின் வலக்கோடியில் சீதேவி என்றொருத்தி மீன் வியாபாரம் நடத்தியதும், எல்லிப் போலை என்ற ஒரு நொண்டி இடக்கோடியில் கள்ளச் சாராயக் கடைவைத்துக் கொண்டதும் என் கண்களுக்குள்ளேயே நிற்கின்றன.

பொல பொலவென்று விடிவதற்கு முன் சந்திப்பில் ஒரு சந்தையே கூடிக் கலைந்துவிடும். பாதசாரிகளும், திருக்கல் வண்டிக்காரர்களும், நடைபாரத்தில் களைத்து வருபவர்களும், பஸ்ஸுக்காகக் கூடி நிற்பவர் களும் கூடிவிட்டபொழுது, செல்லையர் அங்கே வந்து விடுவார். காய்கறிகளுக்காக இவர் தொடங்கும் பேரம், சிறிது சிறிதாக வளர்ந்து, சிறு சந்தையாகவே பரிணமித்துவிடும். அப்புறம் தரகு துறையில் அகப்பட்டதை மடியில் போட்டுக்கொண்டு செல்லையர் பஸ் ஏறி விடுவார். நேரே சுன்னாகம் போகினும் பட்டினம் வரினும் சதம் பத்துத்தான் பஸ் கட்டணமாகும்.

பஸ் கண்டக்டர் பணத்துக்கு கை நீட்டும் போது வேட்டியின் முடிச்சவிழ்த்து, உள்ளங்கையில் நசித்து எண்ணிப் பார்ப்பார் செல்லையர். ஒவ்வொரு சதமாக எத்தனை தரம் எண்ணினாலும் தேறுவது ஒன்பது சதம் தான். ‘இந்தாடா தம்பி ஓம்போ சதந்தான் கிடக்கு’ என்று அனாயாசமாகக் கூறிக்கொண்டே, இலாவகமாகப் பணத்தைக் கொடுத்துவிடுவார். இது ஒரு நாளா? இரண்டு நாளா? எப்போதுமே இப்படித்தான். இந்தக் காரணத்தினால் செல்லையரை பலாத்காரமாக யாரும் பஸ்ஸில் ஏற்ற முற்படுவதில்லை . பதிலுக்கு ஒன்பது சதக்காரன்’ என்ற பட்டத்தையே வைத்துக்கொண்டார்கள்.

இதுதான் செல்லையர் ஒன்பது சதக்காரனாகிய கதை.

‘எப்பிடியோ கசவஞ்சித்தனம் பண்ணியெண்டாலும் பிள்ளைகளைப் படிப்பிக்க வைச்சிட்டார் செல்லையர்’ என்று ஊர் பேசுமளவுக்குச்

செல்லையர் சாதித்துவிட்டார்.

மூத்தமகன்,டாக்டராக அரசாங்கப் பணத்தில் மேல் நாட்டிற்குப் போய்விட்டான்.

மகள் மேற்படிப்புக்காகக் கொழும்பு சர்வகலா சாலைக்குள் நுழைந்துவிட்டாள்.

கடைக்குட்டி, உற்சாகமாகப் படித்துக் கொண்டிருக்கிறாள். குளப்பிட்டியை அடுத்த தாவடிச் சுடலைக்கு அப்பால் நீண்ட பரந்த வயல் வெளிக்கு நடுவே சுமார் பத்து ஏக்கர் விஸ்தீரணத்தில் தென்னஞ் சோலை ஒன்று இருக்கிறது. கடலுக்கு நடுவே கொலுவீற்றிருக்கும் தீவைப்போல் அந்தத் தென்னந்தோப்பு மிக எழிலுடன் இருப்பது கண்களுக்கு ரம்மியமான காட்சி.

மூத்தமகன் பரராசசேகரனுக்கு ஒரு வயதாக இருந்து பொழுது அந்தத் தோப்புக்கு நடுவே, ஏலத்தில் விற்பனையான ஒரு துண்டை வாங்கிக்கொண்டு செல்லையா பிள்ளை அங்கே குடியேறிவிட்டார். அந்தக் குடியேற்றம் நடைபெற்றபோது, செல்லையா பிள்ளையின் உறவினர்கள் கேலிதான் செய்தார்கள்.

ஏழை எளியதுகள் அடைபட்டுக் கிடக்கும் பூமிக்கு நடுவே, ஆழமான பரம்பரையில் வந்த செல்லையர் குடியேறினால், உறவினர்கள் கேலி செய்யாமல் வேறு என்ன செய்வர்? ஆனால் பிற்காலத்தில் செல்லையரின் புத்திசாலித்தனத்தை மெச்சிக் கொள்ள யாரும் தவறவில்லை.

தலையில் பாதி வட்டம் வரை மழுங்கச் சிரைத்து, பின்புறம் வைத்துள்ள குடுமியைத் தட்டி முடிந்து, காதுகளில் மிருதங்கம் போன்ற கோளைக் கடுக்கனை ஆடவிட்டுக்கொண்டு செல்லையர் வாய் திறந்துவிட்டாரென்றால், வெளியே வருவதெல்லாம் பொன்போன்ற வார்த்தைகள்தான்.

அச்சுவேலி ஊரைச் சார்ந்த விசாலாட்சி ஒரே ஒருத்தியாகப் பல மலட்டுச் சொத்துக்களின் ராணியாக இருந்து, செல்லையருக்கு மனைவியாக வந்து வாய்த்ததைப் பார்த்து எல்லோருமே வாயூறினர். விசாலாட்சிக்கு அழகிருந்தது. ஆனாலும், அவளுக்குச் செல்லையர் என்ற வால்குடுமிதான் கணவனாகக் கிடைத்த தென்றால் அது ஆராய்ச்சிக்குரிய விஷயந்தான். ஆனால், செல்லையருக்கு இதை ஆராய நேரமேது; நினைப்பேது? ‘சேர வேண்டிய பொருளென்றால் முகட்டைப் பிய்த்துக் கொண்டு வந்துவிடும்’ என்ற மனோபாவந்தான் அவருக்கு. |

செல்லையர் புதிதாகக் குடியேறிய பத்தேக்கர் தென்னந்தோப்பு கிட்டத்தட்ட ஒரு கிராமம் போலத்தான். அங்கு குடியிருப்பவர் களெல்லாம் ஒரே ஒரு தொழிலைச் செய்து உயிரைப் பிடித்து வைத்திருப் பவர்கள். தனித்தனியே கணவன், மனைவி என்ற அடிப்படையில் பார்த்தால் சுமார் இருபத்தைந்து குடும்பங்கள்.

நட்டுக்கு நடுவே செல்லையர் குடியேறிவிட்டதும், அத்தனை பேரும் அவருக்கு ராச மரியாதை செய்தார்கள். சொல்லப்பட்ட சாதியைச் சேர்ந்த செல்லையர், துணிச்சலுடன் தங்களுக்கிடையே குடிவந்திருப்பது பேரதிர்ஷ்டந்தான் என்பது அவர்கள் நினைப்பு. அதனால் அவர் குடும்பத்துக்குத் தொண்டு செய்வதைப் பெருமை யெனக் கருதினர்.

பகலெல்லாம் மாதியோ, கந்தியோ , வள்ளியோ வந்து அவர் வீட்டுக்கு வேண்டியவற்றைக் கவனித்துப் போவார்கள். இரவாகி விட்டால் கந்தனும், சுப்பனும் மாதனும் உட்பட பலர் வந்து, முற்றத்தில் வளைய இருந்து பால்மாடுகளுக்காக அங்கு வெட்டி வைத்திருக்கும் பனையோலைகளைத் தும்பாக்கி, பேசிப் புழுகி விட்டுப் போவார்கள். இராச மரியாதையெண்டால் இதைவிட என்ன வேண்டும்!

என்னதான் ஊரவர்கள் பெருமை தந்தும், செல்வச் சீமாட்டி சீதேவி யாக மனைவி கிடைத்தும், குளப்பிட்டிச் சந்தியில் பஸ் ஏறும் போதெல்லாம் செல்லையரின் முடிச்சில் இருப்பது சில்லறையான ஒன்பது சதந்தான்.

குழந்தை குட்டிகள் வந்துவிட்டன.அத்துடன் தென்னந்தோப்பும், பாதி மேலும் வந்து விட்டது. கடைசிப் பொடியன் பிறக்கும்போது பத்தேக்கர் நிலமும் வந்து சேர்ந்துவிட்டது. இது சொல்லிவைத்தாற் போல நடந்ததுதான். இதற்குப்பின் விசாலாட்சிக்குப் பிள்ளைப்பேறு கிடைக்கவே இல்லை.

செல்லையர் இல்லாத நன்மை, தீமைகள் எப்படி இல்லையோ, அதேபோல் செல்லையரிடம் கடன்படாதவர் அவ்விடத்தில் இல்லவே யில்லை. சகலத்துக்கும் ஈடுகொடுப்பது செல்லையர் என்ற இந்தக் கட்டைதான்.

எப்போதும் வால்குடுமிக்குள் செருகப்பட்டிருக்கும் ‘பிசாண்’ பிடித்த பென்சில், மடிக்குள் சுருண்டு கிடக்கும் அழுக்கேறிய கொப்பி, இவை யிரண்டும் செயல்படாத கணங்களே கிடையாது. கையிருப்பிலிருந்து வெளியேறுபவையெல்லாம் சில்லறையென்றால், அவைகள் கோட்டுக் களென்று ஏட்டிலேறிக் கடைசியில் பூமித் தாயாகப் பரிணமித்துச் செல்லையரின் காலில் தஞ்சமடைந்துவிடும்.

செல்லையர் என்ற ஒன்பது சதக்காரன் நிலப்பிரபுவாக உயர்வு பெற்ற கதை இது.

***

மூத்தமகன் பரராசசேகரன் சீமையிலிருந்தபோது செல்லையருக்கு இங்கு ஏகப்பட்ட கிராக்கி.

பெரிய இடத்து மனிதர்கள் பலர் பரராசசேகரனை மருமகனாகப் பிடித்துவிட வேண்டுமென்ற ஆசையில் செல்லையரை சுற்றிச் சுற்றி வலம் வந்தார்கள். வால் குடுமிச் செல்லையரை மடக்கிவிடலாமென்ற துணிச்சலுடன். செல்லையர் லேசுப்பட்டவரா என்ன?

சொல்லப்பட்ட சாதியைச் சேர்ந்த கறுத்தார் வந்தார். கோட்டை வாசல் பரம்பரையைச் சேர்ந்த, தம்பையர் வந்து போனார்.

இலங்கையில் முதன் முதலில் சிங்கப்பூர் பென்ஷன் வாங்கிய பெருமைக்குரிய சின்னத்தம்பி முதலி குடும்பத்தின் வாரிசான அருணா சலம், குடும்பத்துடன் வந்து போய் உறவு கொண்டாடினார்.

இத்தனை பேர்களினதும் அணிவகுப்பைப் பார்த்தபோது செல்லையர் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணினார். ஆமான சீதனத்தோடு மகனைக் கொடுத்து, தாவடிக்கு மட்டுமென்ன, யாழ்ப்பாணப் பிரதேசத் துக்கே மன்னனாக்கிவிட நினைப்பு. விசாலாட்சிக்கு இதுபற்றி அவர் சொன்ன நாட்களோ மிகப்பல.

பரராசசேகரன் படிப்பை முடித்துக்கொண்டு வர இன்னும் மூன்றே மாதங்கள் தானிருந்தன. எப்படியும் சிங்கப்பூர் குடும்பக்காரனின் குடும்பத்துள் போய்விட வேண்டுமென்பதுதான் செல்லையரின் ஆசை. பெண்ணும் மகள் பிரபாவதியோடு கொழும்பில் படித்து வருகிறாள், மகள் சாரதாவை எழுதிக் கேட்டதில், அவளைப்பற்றி மகள் வாய் நிறையத்தான் எழுதியிருந்தாள். எனவேதான் ‘தேசியம்’ ‘சர்வதேசியம் எல்லாவற்றையும் உத்தேசித்து செல்லையர் வாக்குறுதியும் கொடுத்துவிட்டார்.

கொழும்புத் துறைமுகத்துக்கே சென்று மகனை வரவேற்பதென்று பெண் வீட்டாருடன் முடிவு செய்து, மகளுக்கும், மகளுக்கு ஊடாக மருமகளுக்கும் கடிதம் எழுதிப் போட்டு விட்டு அப்போதுதான் செல்லையர் வீட்டிற்கு வந்திருந்தார். நெஞ்சு அதிர்ந்து போகும் விதத்தில் தோப்புச் சனங்கள் கூடியிருந்தார்கள். விசாலாட்சி கண்ணீரும் கம்பலையுமாகக் கிடந்தாள்.

‘நான் கிளாறாவை மணமுடித்துக் கொண்டேன். உங்களிடம் சொல்லிக்கொள்ள நேரமில்லை. உங்கள் மருமகளும் ஒரு டாக்டர் தான். இங்கிருந்து குறிப்பிட்ட காலத்துக்குள் புறப்பட்டு இரண்டொரு நாடுகள் சுற்றுப் பிரயாணம் செய்துவிட்டுத்தான் ஊருக்கு வருவோம். வரும்போது அறிவிப்பேன்.

பரராசசேகரனிடமிருந்து இப்படிக் கடிதம் வந்திருந்ததாம். செல்லையாபிள்ளை மார்பை இறுகப் பிடித்துக்கொண்டு குப்புறப் படுத்துவிட்டார்.

முதன் முதலில் அவரின் வாழ்க்கையில் விழுந்தபேரிடி இது. யாராலும் எதிர்பார்க்கக் கூடாத ஒன்று.

***

பிரபாவதி, விடுதலைக்கு வந்திருந்தாள் அவள் மெலிந்து வெளுத்துப் போயிருந்தாள். இதற்குமுன் எப்போதும் அவள் இப்படி வந்ததில்லை.

அண்ணணைப் பற்றிய கவலையால் அவள் பீடிக்கப்பட்டுவிட்டாள், மகளைப் பார்த்தபோது செல்லையருக்குக் கவலை அதிகரிக்கத்தான் செய்தது. ஆனாலும் என்ன செய்வது? இப்படியே தொடர்ந்து இருந்து விட முடியுமா? ஒரு விதமாகச் சமாளித்துச் சம்பிரதாயப்பூர்வமாக மகளையும் சமாளித்துக்கொண்டு நிமிர்ந்துவிட்டார். மகன் செய்து கொண்ட நம்பிக்கைத் துரோகத்துக்காக நொந்து கொள்வதற்கு வேறு யாரைத் தேடிப் பிடிப்பது?

சில நாட்கள் கழித்து ஒருநாள் அவர் குளப்பிட்டிச் சந்திக்குப் பஸ் ஏறுவதற்காக வந்தார். இப்போதும் அவரின் முடிச்சில் இருந்தது. சில்லறையான ஒன்பது சதந்தான்.

பிரபாவதியின் நிலை, விசாலாட்சியின் ஈரல்குலையைப் பிடித்து இழுத்துப் பிடுங்கியது.

இயற்கையின் புறப்பாடுகளை வெறும் உடைகளினால் இழுத்து மூடி மறைத்துவிட முயன்று, பிரபாவதி தோற்றுப் போனாள். நான் ‘பட்ட காலிலேப்படும்’ என்பார்கள். ஒருநாள் பிரபாவதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாள்.

அடுத்தடுத்து அதிர்ச்சிகளைத் தாங்க முடியாது விசாலாட்சியின் மார்புத்துடிப்பும் நின்றுபோய்விட்டது.

உண்மையிலேயே செல்லையர் செல்லையர்தான், இரண்டாவது, மூன்றாவதென்று ஏற்பட்ட பேரிடிகளையும் அவரின் இதயம் வெற்றி கரமாகச் சமாளித்துக் கொண்டது.

தொடர்ச்சியான பேரிடிகளையெல்லாம் சமாளித்துக்கொண்டு செல்லையர் தலை நிமிர்ந்து நின்ற கதை இது.

***

‘காலாதி காலமெல்லாம் கடுந்தவமிருந்த யோகிகளில் பலர் கண நேர உணர்வுகளுக்காளாகி, நிலைக்களனை இழந்து நெறிகெட்டுப் போனார்கள்’ என்று பல கதைகளுண்டு. செல்லையர் அவர்கள் பலமுனைத் தாக்குதல்களுக்கு ஆளான போதிலும், ஒன்பது சதம் ஒன்பது சதந்தான். பஞ்சேந்திரியங்களையும் உணவாக்கிக்கொண்டு சர்வலோக சமஷ்திக நிஷ்டையில் இருப்பவன் எப்படி ஒன்றைத் தன் மையமாகக் கொண்டு நிலைத்து விடுகிறானோ, அந்த நிலைக்கே செல்லையாபிள்ளையும் தள்ளப்பட்டுவிட்டாரா?

கடைக்குட்டி சந்திரசேகரந்தான் செல்லையா பிள்ளைக்கு எல்லாமாக இருந்தான்.

மகள் பிரபாவதியும், மனைவி விசாலாட்சியும் செத்துப்போன போது, பரராசசேகரன் தன் வெள்ளைக்கார மனைவியோடு தேன்மதியைக் கழித்து வந்தான். ஒரு மாதம் கழித்து ஒருநாள், எங்கோ ஒரு தேசத்தி லிருந்து அவனின் முகவரி கிடைக்கவே, ‘உன் தாய்க்கும், தங்கைக்கும் கருமாதி செய்யும்போது, உனக்குமாகச் சேர்த்துச் செய்துவிட்டேன்’ என்று செல்லையர் எழுதிவிட்டார். இதற்குப்பின் பரராசசேசுரனைப் பற்றிய நினைப்புச் செல்லையருக்கு இருக்கவே இல்லை. பரராச சேகரனுக்குக் கூட தந்தையென்ற நினைப்பு இருந்ததாக இல்லை.

‘செல்லையற்ற மூத்த மோனும் பெண்சாதியும் சீமையில் ஒரு ஆஸ்பத்திரி கட்டிப் போட்டினமாம்.’

இப்ப ஊரவர்கள் பேசிக்கொண்டனர். இவ்வளவு தான். கடைக்குட்டி சந்திரசேகரனிடமிருந்து இழந்துவிட்ட சகல இன்பங் களையும் அடைந்து விடலாமென்ற நினைப்பு செல்லையருக்குத் துளியளவுமில்லை. ‘இவனும் எந்தப் பெண்ணோடு போனானோ’ என்று வாய் ஒயாது செல்லையர் சொல்லிக் கொள்வார். ஆனாலும், முன்னெச்சரிக்கையாக, ஊரில் இருந்து கூடாத கூட்டமெல்லாம் கூடி அவன் கெட்டுப் போகாமலிருக்கப் பத்துமைலுக்கப்பாலுள்ள பாடசாலை விடுதியில் அவனைச் சேர்த்துவிட்டார்!

நீண்டு பரந்த தென்னஞ்சோலை, மாளிகைபோல வீடு! இந்த வீட்டுக்கு நடுவே செல்லையர் தனிக்கட்டை தான். ஆனாலும் தனிமை என்று சொல்லமுடியாத அளவுக்கு அவர் வாழ்வு கழிந்தது.

பகலெல்லாம் மாதியோ, கந்தியோ, வள்ளியோ வந்து வேண்டி யதைக் கவனித்துப் போகிறார்கள்.

இரவெல்லாம் கந்தனும், மாதனும், சிப்பனும் வந்து வளைய மிட்டிருந்து, ஓலை கிழித்துப் பேசிப் புழுகிப் போகிறார்கள்!

இதை விடவும் அதிகமாக அவருக்குப் பேச்சுத் துணைக்கு எப்போதுமே ஆட்கள் இருந்தே தீருவர்.

***

குளப்பிட்டிச் சந்தியில் ஒருநாள் காலை கூட்டமொன்று கூடிநின்றது. அன்றுகாலை வானொலி மூலம் கிடைத்த அரசாங்கத் தகவலை வைத்துக்கொண்டு கூட்டத்தில் பெரும் சர்ச்சை நடந்தது.

கூட்டத்தில் நட்டுக்கு நடுவே செல்லையர் நின்றார். அவரின் சொண்டுகள் கருகி, கடைவாயில் பொருக்குத் தெரிந்தது. இந்த அறிகுறி மிகவும் பொல்லாதது. அவர் மனதால் களைத்துவிட்டார் என்பதற்கு இலக்கணம் அது தான்.

சொந்தத்தில் நிலமற்ற குடியிருப்பாளருக்குக் குடியிருக்கும் நிலத்தையே சொந்தமாக்கச் சட்டம் வருகிறதாம்.

செல்லையரின் கால்கள் நிலத்திலில்லை. எங்கோ ஒரு அந்தர உலகத்தின் நடுவே அனாயாசமாகச் சுழன்று கொண்டிருந்தார். அச்சுழற்சித் தொலைவில் தெரியும் குன்றை நோக்கி சரிந்து போவது போலவும் பிரமைகள் தட்டின.

‘தம்பியவை இது எந்தமட்டிலை வருமெண்டு நினைக்கிறியள்?’ – விஷயத்தை நிதானிக்கும் நிலைக்கு வருவதற்காகச் செல்லையர் நிதானத்தோடு கேட்டார்.

‘கிட்டடியில் வரும்போலை இருக்குச் செல்லையாண்ணை!’ நடுவயதான ஒருவன் மற்றவர்களைப் பார்த்துக் கண்சிமிட்டிய வண்ணம் இப்படிப் பதில் சொன்னான்.

அன்று செல்லையரின் முடிச்சு அவிழ்க்கப்படவேயில்லை. பட்டணம் போக வந்தவர் நடையை மறுபக்கமாகத் திருப்பிவிட்டார். அதன் பின்பு அடுத்த ஒழுங்கையில் இருக்கும் வழக்கறிஞர் வீட்டிலிருந்து அவர் புறப்பட மதியம் திரும்பிவிட்டது.

***

திடீரென இக்கோட்டறிவித்தல் வருமென்று அத்தனை பேர்களும் எதிர்பார்த்தார்களா? எல்லோருமே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஒவ்வொருவரும், தனக்குத் தனக்குத் தானென்று முதலில் நினைத்தார்கள். பின்பு இருபத்தைந்து குடும்பத்துக்கும் அவ்வறிவித்தல் வந்ததை அறிந்தபோதுதான் இது ஊருக்கே வந்த கொள்ளை என்ற முடிவுக்கு வந்தார்கள். செல்லையரின் குடியிருப்பு நிலங்களைவிட்டு எழுந்துவிட வேண்டுமாம்!

இரவு நல்ல நிலவு. செல்லையர் வீட்டு முற்றத்தில் ஒரு பெருங்கூட்டம். வாயில்படிக்கு நேரே சாய்மனைக் கட்டிலை இழுத்துப் போட்டுக் கொண்டு செல்லையர் மகாராசாவாகக் காட்சி தந்தார்.

பலரும் பலவிதமாகப் பேசினார்கள். கடைசியில் செல்லையர் பேசியது ஒன்றே ஒன்றுதான்.

‘ஏன் பொடியள்கன கதையை! நான் ஓராளுக்கு ஒரு மாதிரி, மற்றாளுக்கு ஒருமாதிரி வஞ்சகமாய் நடக்கமாட்டன். இஞ்சேர் பொடியள்! மூத்த மோனின்ரை பேரிலை எல்லாத்தையும் எழுதிப் போட்டன். அவன் இப்ப எழுதியிருக்கிறான் இஞ்சை ஆசுப்பத்திரி ஒண்டு தைமாதத்திலை கட்டவேணுமெண்டு. ஆசுப்பத்திரி வந்தா ஊருக்கும் நல்லதுதானை பொடியள்? எனக்கு இனி வயது பின்னிட்டுப் போச்சு. அவனோடை கோவிச்சுக்கொண்டு எத்தனை நாளுக்கிருக் கிறது? ஏன் பொடியள் சொல்லுங்க பாப்பம்? அவன் பக்கத்திலை இருந்தா என்ரை கடைசி வேளையிலை அவன்ரை இரத்தம் துடிக்காதை? அவள் பாவி இருந்தா எனக்குக் கயிட்டம் வராது. அவள் செத்தும் தெய்வமாய்ப் போயிட்டாள். ம்… அவரவருக்குக் குடுத்து வைச்சபடி நடக்குந்தானே! நானென்ன செய்யப் பொடியள். பொடிச்சியை யும் கூட்டிக்கொண்டு அவன் தைப்புறக்க வந்திடுவான். அவள் வெள்ளைக்காரப் பொடிச்சிக்கு ஏத்தாப்போலை வீட்டையும் திருப்பி வைக்க வேணும். என்னவோ மார்கழிக் கடைசிக்குள்ளை உங்கடை உங்கடை சுகத்தைப் பார்த்துக் கொள்ளுங்கோ! இம்மட்டும் தான் நான் சொல்லுவன். நானென்ட மட்டிலை ஈவு சோவு தாறன். வேறை உங்கினைக்கை இருக்கிற கமக்காரரவையெண்டால் சட்டுப்புட்டெண்டு விதானையையும், பொலிசையும் கொண்டுவந்து எல்லாத்தையும் முடிச்சுப்போடுவினம். நீங்கள் என்ரை குடியான பிள்ளையள். எனக்குக் கட்டை குட்டித் தறிச்சு, மேலாப்புப் புடிச்சு, என்னைச் சுமந்து கொண்டுபோய்ச் சுடுறனீங்கள். என்ன மோனை சொல்லுங்கோ பாப்பம்?’

செல்லையரின் கேள்விக்கு எவராலுமே பதில் சொல்ல முடிய வில்லை. மூச்சைப் பிடித்துக்கொண்டு இலகுவில் பதில் சொல்லக் கூடிய விதத்திலா அவர் பேசினார்; கேட்டார்? சகலரதும் பெரு மூச்சுக்கள் தான் எழுந்து குமைந்து மோதின.

போர்வைக்குள் கையை வைத்து நெஞ்சைக் கசக்கிக் கொண்டே செல்லையர் உள்ளே போய்விட்டார்.

இதற்குப்பின்னும் பகல் பணிவிடைக்காக மாதியும், கந்தியும், வள்ளியும் இராப் பணிவிடைக்கும் பேச்சுத் துணைக்குமாகக் கந்தனும், சுப்பனும், மாதனும் வந்துதான் போனார்கள். குடியெழுப்பும் விஷயமாகச் செல்லையரிடமிருந்து ஒரு வார்த்தை!

*** |

தாவடிச் சுடலைக்கு மேற்காகச் சற்றுத் தொலைவில் பரந்த வெளிக் கப்பால் ஒரு பனங்கந்துப் பிரதேசமிருக்கிறது. பல காலமாக இது ஊருக்கெல்லாம் பொதுவாக இருந்து வருகிறது. பரம்பரை பரம்பரை யாக இது ஊர்ச் சொத்தாகத்தான் இருந்து வந்திருக்கிறதாம். ஆனால், இப்போது மட்டும் அது முடிக்குரிய நிலமென்று கண்டு பிடிக்கப்பட்டு, சுற்று வட்டாரத்திலுள்ள நிலமில்லாதவர்களுக்காகப் பகிர்ந்து கொடுக்கப் பட்ட ஏற்பாடாகியிருந்தது.

இந்நிலம் இப்படி ஆகிவிட்டதால் செல்லையருக்குக் கவலைதான். ‘எட, முந்தி நினைச்சிருந்தா ஒரு அப்புக் காத்தைப் புடிச்சு ஒருமாதிரி உறுதிபோட்டு ஆளுக்குப் பாதியாக எடுத்திருக்கலாமே!’ என்று செல்லையர் அங்க வாய்த்தார். பின்பு தன் நிலத்திலிருந்து இவர்களை எழுப்பிவிட வசதியாய் விட்டது என்பதனால் திருப்தியும் அடைந்தார்.

திடீரென ஒருநாள். நன்றாக விடியவில்லை. தென்னந்தோப்பெங்கும் ஒரே பரபரப்பு,

எல்லோருமே தங்கள் குடிசைகளை இரவோடிரவாகப் பனங் கந்தைகளை நோக்கி நகர்த்திச் சென்றுவிட்டார்கள்.

செல்லையருக்கு அந்த இரவுதான் நிம்மதியான இரவு. அதனால் அவர் விடிந்தும் நீண்ட நேரம் வரை தூங்கிவிட்டார். கண்விழித்த போது மணி பத்துக்கு மேலாகி விட்டது.

என்றுமில்லாதபடி உடலும் அசதியாக இருந்தது. போர்வையை உதறித் தோளில் போட்டுக்கொண்டு செல்லையர் முற்றத்துக்கு வந்தார். மணி பத்துத்தான். ஆயினும் வெயில் நெருப்புக்கொள்ளியாகச் சுள்ளென்று சுட்டது.

ஏறெடுத்த கண்களை ஓயவிடாது சுழற்றி வீசினார். அவ்வீச்சு இறுதியில் விம்மிப்புடைத்த மார்புக் கோழைவரை வந்து நின்றது.

‘நெஞ்சு ஏன் இப்படிப் பொருமுகிறது; துடிக்கிறது? இப்படிக் கேட்க அவருக்கு நேரமேது; நினைப்பேது?

தோப்பு வெளியெங்கும் காகங்கள் கரைந்து கரைந்து சுற்றிச் சுழன்றன.

செல்லையரின் ‘வீமன்’ நாய், தோப்பு வெளியின் நடுவே நின்று ஊளையிட்டுச் சோர்ந்து போகின்றது. அது தன் இனத்தவர்களை நோக்கியா குரல் வைக்கிறது.

எதற்காகவோ மார்பைப் பிடித்துக்கொண்டு செல்லையர் விறாந்தைக்கு வந்தார். மனைவி விசாலாட்சி விறாந்தையில் தொங்கிய கண்ணாடிக் கூட்டுக்குள் இருந்து இளமைத் துடிப்புடன் அழைப்பது போன்றது உணர்வா, பிரமையா?

நெஞ்சு தொடர்ந்து விம்மிக்கொண்டேயிருந்தது. மண்டைக்குள் உலகத்து ஓசைகள் பரிணமித்துக் கேட்கிறது. நாக்கு வரண்டு வந்தது.

முகத்தில் அரும்பிய வியர்வையைப் போர்வையால் துடைத்துக் கொண்டு செல்லையர் மறுபடியும் முற்றத்துக்கு வந்தார். பார்வையை விசாலமாக வீசினார்.

கண்ணுக் கெட்டிய தூரம்வரை மனிதராவது, மாஞ் சாதியாவது! அவருக்கு என்ன வந்துவிட்டது? தவிப்பா ? ஒருதடவை வீட்டைச் சுற்றி வந்தார். தோப்புக்கு நடுவாகச் சனசஞ்சாரமற்ற சூனியத்தைத் துழாவி நடந்தார்.

உடம்பு நடுக்கமெடுத்தது. தலையை இரு கைகளாலும் பொத்திக்கொண்டு விறாந்தையில் சாய்மனைக் கட்டிலுக்கு அவர் வந்துவிட்டார்.

பொழுது விடிந்தது.

செல்லையர் முற்றத்துக்கு வந்தார்.

வலக்கையை கண்களுக்கு நிழலாக்கிக்கொண்டு பார்வையை விசாலமாக வீசினார்.

கண்களுக்கெட்டிய தூரம்வரை மனிதராவது, மாஞ்சாதியாவது!

அவர் மனதுக்கு என்ன வந்து விட்டது? தவிப்பா ?

ஒரு தடவை வீட்டைச் சுற்றி வந்தார். தோப்புக்கு நடுவே சனசஞ்சாரமற்றச் சூனியத்தைத் துழாவித் துழாவி நடந்தார்.

உடம்பு நடுங்கியது. விறாந்தையில் சாய்மனைக் கட்டிலுக்கு வந்துவிட்டார்.

மறுபடியும் விடிந்தது.

பஞ்சடைந்த கண்களோடு செல்லையர் முற்றத்துக்கு வந்தார். உடல் வெடவெடத்தது. வலக் கையைக் கண்களுக்குக் நிழலாக்கிக்கொண்டு பார்வையை விசாலமாக வீசினார்.

கண்ணுக்கெட்டிய தூரம்வரை மனிதராவது; மாஞ்சாதியாவது! வீட்டைச்சுற்றி வலம்வர முயன்றார்; முடியவில்லை. தோப்புக்கு நடுவாகச் சனசஞ்சாரமற்ற சூனியத்தைத் துழாவி நடந்தார்.

பின்னே வந்த வீமன் நாய் தலையை உயர்த்தி பிலாக்கணம் வைத்தது.

செல்லையர் ‘அடீ’ என்று விரட்டினார். அது மனிதக் குரல்தான்! ஆனால் அது எதிரொலிக்கத்தானும் அங்கு இயற்கை வசதியில்லை! வீமன் மறுபடியும் பிலாக்கணம் வைத்தது. தொலைவில் எங்கோ ஊளைச் சத்தம் கேட்டது! வீமன் வாலை ஆட்டிக் குழைந்தது. தன் இனத்தின் குரல் கேட்டதா?

செல்லையர் மேலும் மேலும் துழாவி நடக்கிறார். நிமிர்ந்து வெளிப் பிரதேசத்தை நோக்குகிறார். வலக்கரம் கண்களுக்கு நிழலாக நின்றது.

அவர் காண விரும்பியதெல்லாம் மனிதர்களை!

செல்லையர் தலையை அங்குமிங்கும் அசைத்தார். அவர் கேட்க விரும்பிதெல்லாம் மனிதர்களை!

காகங்கள் சுற்றிச் சுழன்று கரைந்தன. நாய்களின் ஊளைச் சத்தம் தொலைவில் குமைந்தெழுந்தது. வீமனின் பிலாக்கணத்தொடர் செல்லையருக்குக் கேட்டதோ என்னவோ?

மத்தியானத்துக்கு முன் செல்லையர் செத்துப் போயிருக்க வேணும்! ஏனெனில் மாலைப்பொழுதில் சனங்கள் தோப்புக்கு நடுவே அந்த மனிதனைக் கண்டெடுத்தபோது ‘அது’ தடியாக விறைத்திருந்தது.

டாக்டர் ஒருவர் அந்த மனிதக் கட்டையைக் கீறிக் கிழித்துப் பார்த்தார்.குடியெழுந்து சென்றோரைச் சந்தேகித்துப் பழி தீர்த்துக் கொள்ளக்கூடியதாக ஒன்றுமில்லை.

செல்லையரின் வேட்டித் தலைப்பில் முடிச்சொன்று தெரிந்தது. துப்பு ஒன்று கிடைத்ததாக பொலிஸ் நினைத்தான். முடிச்சு அவிழ்க்கப்பட்டபோது அதில் கிடந்தது சில்லறையாக ஒன்பது சதந்தான்!

ஒன்பது சதக்காரன் என்ற செல்லையர் – செத்துப் போன – சாகடிக்கப்பட்ட – கதை இதுதான்.

– கே.டானியல் படைப்புகள் – சிறுகதைகளும் குறுநாவல்களும் (தொகுதி இரண்டு), முதற் பதிப்பு: 2016, அடையாளம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *